💙இருளை ஈர்க்கும் ஒளி💙

💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு 1
“பயம், பதட்டம் என்னும் இருளை, ‘தன்னம்பிக்கை’ என்னும் ஒளி கொண்டு விரட்டலாம்”.
சூரிய ஒளியின் சுடர் பட்டு தூங்கிக் கொண்டிருந்த அனைத்து ஜீவராசிகளும் துயில் கலைந்து தங்கள் கடைமைகளில் ஈடுபட…
சென்னை திருவான்மியூர் பகுதியில், பாரதிதாசன் நகரில் உள்ள ஒரு வீட்டில், பரபரப்பாய் கிளம்பிக் கொண்டிந்தவளின் குரல் அந்த வீடெங்கும் நிறந்திருந்தது.
“அம்மா…… என் பர்ஸ் எங்கே….?அம்மா…… என் போன் எங்கே….?அம்மா…. என்னமா பண்றீங்க எவளோ நேரமாய் கத்திட்டே இருக்கேன்” , எனத் திரும்பியவள் தன்னையே பார்த்த படி நின்றிருந்த அன்னையைக் கண்டு மேலும் கோபமானாள்.
“ஏம்மா நான் ஒருத்தி இங்க டென்ஷனாய் கத்திட்டு இருக்கேன் நீங்க என்னடானா சினிமா பார்க்குறா மாதிரி என்னையே பார்த்துட்டு நிக்குறீங்க….”
“பின்ன என்னடி காலேஜ் அப்ளிகேஷன் பார்ம் கொடுக்க போற, ஆல்ரெடி அத நிரப்பியாச்சு. போய் குடுத்துட்டு வரணும் அதுக்கா இப்படி அலப்பறைய கூட்ற என்னமோ போருக்கு போற மாதிரி”.
இப்படி தான் எங்கே கிளம்பினாலும் அவள் தாய் லட்சுமியை ஒரு வழி பண்ணிவிட்டு தான் செல்வாள் தியா…அந்த வீட்டின் இளவரசி ஒரே செல்ல மகள்.
லக்ஷ்மியும் அவளைப் பற்றி அறிந்ததால் அவளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்வார்.
அதே போல் இப்போதும் அவள் கேட்ட அனைத்தையும் எடுத்துத் தந்து ஒரு தாயாய் அவள் பதட்டத்தை குறைக்க அவள் கைகளை பிடித்து “நல்ல மார்க் வாங்கி இருக்கீங்க அப்படி இதுக்கும் போது என்ன பயம் கண்டிப்பா உனக்கும் மித்துக்கும் அங்க இடம் கிடைக்கும்”, என்றவரை கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சி, எடுத்து வைத்த டிபனை சாப்பிட சென்றாள் தியா.
அதுவரை அவர்கள் உரையாடலில் கலந்து கொள்ளாமல் ரசித்திருந்த ராமச்சந்திரன் தன் மனைவியை பார்த்து, “லட்சு…என் செல்ல குட்டி…இன்னும் எனக்கு காபி கொடுக்கலையே?” என்றபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த மகளின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
ராமச்சந்திரன் பிரபல வங்கியில் மேலாளராக வேலை பார்க்கிறார். பணியில் மிகவும் நேர்மையானவர் கூடவே கண்டிப்பும் உண்டு. ஆனால் வீட்டில் கலகலப்பானவர்.
“ஆரம்பிச்சிட்டீங்களா என்னடா பொண்ணு மட்டும் நம்மளை ஏலம் போட்டுட்டு இருக்காலே அப்பாவை காணும்மேனு பார்த்தேன்…”
“என்ன லட்சு… நான் போய் உன்னை ஏலம் போடுவேனா? நீ எப்பவும் எனக்கு மட்டும் தான் சொந்தம்”, எனக் காதல் பார்வை வீசினார் சந்திரன்.
“ச்சீ! போங்க உங்களுக்கு வேற வேலையே இல்ல இப்பதான் ஐயா டீன் ஏஜ் பையன் மாதிரி…”, என்ற அவர் வாக்கியத்தை முடிப்பதற்குள்,
தியா முந்திக்கொண்டு, “வழியிறிங்கனு சொல்கிறாங்க அப்பா”, என தந்தையை வாரினாள்.
“தியாமா நீ சொன்னாலும் சொல்லலனாலும் என் லட்சு செல்லத்துகிட்ட வழியிறது எனக்கு பெருமை தான்”, என தன் சட்டை காலரை தூக்கிவிட்டார்.
“உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்ல அப்பா பொண்ணு மாதிரியா பேசுறீங்க”, என இருவரையும் திட்டிவிட்டு, கணவன் கேட்ட காபியை போட சமையலறைக்குள் சென்றார் லட்சுமி
“என்ன தியாம்மா, இப்படி தான் அம்மாவிடம் திட்டுவாங்காதா சோ பேட்”.
“அப்பா, அம்மா உங்களையும் தான் சொன்னாங்க”.
“சீச்சீ, உனக்கு அம்மாவ பத்தி தெரியலடா”
“என்ன தெரியலை உங்கள பாத்து முறைச்சிட்டு போறதா”.
“அது முறைப்பு இல்லடா நான் சொன்னதில் வந்த வெட்கம்”.
அவர் சொன்னது உண்மையே, லட்சுமி வெக்கத்தில் சிவத்த தன் முகத்தை மறைப்பதற்குத் தான் இவர்களைத் திட்டிவிட்டு சமையலறைக்குச் சென்று, வெட்கச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தார்.
என்னடா பொண்ணு காலேஜ் போற வயசுலையும் இப்படி காதலிச்சிட்டு இருக்காங்களே, அப்போ கண்டிப்பா காதல் கல்யாணம்னு நினைக்காதீங்க.
இது முழுக்க முழுக்க பெரியவங்க பார்த்து வச்சு கல்யாணம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் இவ்வளவு லவ்ஸ்.
இப்படி தியா வீட்டின் காதல் கதை ஓடிக்கொண்டிருக்க தியா கிளம்பிட்டியா என ஏழு சரத்தில் கத்திக் கொண்டு வந்தாள் மித்து என்கிற மித்ரா தியாவின் உயிர் தோழி.
தியாவும் மித்துவும் சிறு வயது தோழிகள் அடுத்தடுத்து தெருவில் வசித்து வருகின்றனர். ஒரே பள்ளியில் படித்தவர்கள் இப்பொழுது ஒரு கல்லூரியில் விண்ணப்பிக்க செல்கின்றனர்.
உள்ளே வந்தவள் ராமச்சந்திரனை பார்த்து, “என்ன அங்கிள் உங்க லவ் ஸ்டோரி இன்னும் ஆரம்பிக்கலையா?” என கேட்க,
“வாம்மா மித்து, எங்க உங்க ஆன்ட்டி ஒத்துழைச்சா தானே”, என சலித்துக் கொள்ள.
அதற்குள் மித்துவின் குரல் கேட்டு இரண்டு டம்ளர் காபியுடன் வந்த லட்சுமி ஒன்றை தன் கணவரிடம் கொடுத்து மற்றொன்றை மித்துவிடம் நீட்டினார்.
பின் கணவனை பார்த்து, “இன்னும் முடியலையா உங்க காதல் கதை” என செல்லமாய் கணவனை முறைத்தார்.
“ச்சீ இன்னிக்கு எபிசோட் மிஸ் பண்ணிட்டனேடி”, என்னை ஏகத்திற்கு வருத்தப்பட,
“நீ ரொம்ப லேட்டி இப்போ தான் மணிரத்னம் சார் லவ் சீன்லாம் முடிச்சது”, என்று தன் தோழியை நோக்கி வந்தாள் தியா.
“மித்து சாப்டியா மா. இரு இட்லி எடுத்துட்டு வரேன். உனக்கு பிடிச்ச கார சட்னி தான் இன்னைக்கு நம்ம வீட்டுல”
இதுதான் லட்சுமி, தியாவை எப்படி நடத்துகிறாரோ அதேபோல் தான் மித்துவையும் நடத்துவார்.
“இருக்கட்டும் ஆன்ட்டி இப்பதான் சாப்பிட்டு வரேன். பட் பரவாயில்ல உங்க ஆசைக்காக ஒன்னு குடுங்க.“
“ஐயோ! ரொம்ப தாண்டி பெருந்தன்மை உனக்கு சரியான சாப்பாடு ராமி”, தியா அவளை கிண்டலடிக்க அதை காதில் வாங்காமல் மூன்றாவது இட்லியை உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தாள்.
பின் இருவரும் சந்திரன், லட்சுமியிடம் சொல்லிக்கொண்டு, தியாவின் ஸ்கூட்டியில் காலேஜ் நோக்கி புறப்பட்டார்கள்.
கல்லூரியில் நுழைந்தவர்களை நீண்ட வரிசை வரவேற்றது. அவர்களும் அதில் சென்று ஐக்கியமானார்கள்.
அது ஒரு பழமையான யுனிவர்சிட்டி. ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், ப்ரொபஷனல் கோர்சஸ், ரிசர்ச் சென்டர், லேப் என பல கட்டிடங்களை தன் உள்ளடக்கிருந்தது அது.
இவ்வளவு பெரிய யுனிவர்சிட்டியில் தங்களுக்கு இடம் கிடைக்குமா என்பதுதான் தியா மித்துக்கு கவலையாய் இருந்தது இருவரும் நல்ல மதிப்பெண்கள் தான் எடுத்து இருந்தார்கள். இருந்தாலும் அங்கே அனைவருக்கும் இடம் கிடைத்து விடாது.
குறிப்பிட்ட சீட்டுகள் தான் இருக்கும். இங்கு வேறு கூட்டமாக இருக்கவே சிறிது பயமாய் இருந்தது.
அவர்கள் வரிசையில் நிற்கும் நேரம் நாம் தியாவை பற்றி பார்ப்போம் பெண்களின் சற்று உயரம், சிறிது பூசினாற்போன்ற உடல்வாகு, அளவான நெற்றி அதில் மின்னும் சிறு கல் பொட்டு, இயற்கையாய் வளைந்த புருவங்கள், சற்று பெரிதான நயனங்கள் அதில் மைதீட்டி அதன் அழகை எடுத்துக் காட்டி இருந்தாள், சிவந்த அதிரங்கள், மாம்பழக் கண்ணம்.
இடைக்கும் கீழ் சிறிது நீண்ட கூந்தலை கிளிப்பில் அடக்கியிருந்தாள். அவள் ரோஜா நிறத்திற்கு பொருத்தமான ஆழ்ந்த நீலநிற சுடிதார் அவளை தழுவி இருந்தது, அழகிய செவியில் சிறு கல் பதித்த தங்க தோடு அணிந்து, அழகிற்கு இலக்கணம் எழுத பிறந்தவள் போல் இருந்தாள் அவள்.
அவள் அருகில் நின்ற தோழி மித்துவும் அழகில் குறைந்தவள் இல்லை. தியா என்னதான் “சாப்பாடுராமி” எனச் சீண்டினாலும் அவள் ஓல்லிக்குச்சி உடம்புகாரி தான் தேன் வண்ண கலையான முகம் அவளுடையது.
“இந்த யூனிவர்சிட்டில நமக்கு சீட்கிடைச்சிடும்ல தியா”, எனச் சிறு பயத்துடன் வினவினாள் மித்து.
“கண்டிப்பாடி இரண்டு பேருமே நல்ல பெர்ஸன்ட் வைத்து இருக்கோம் அப்புறம் என்ன”, எனத் தோழியை தேற்றினாள்.
இப்படி இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு அருண் அவர்களை திரும்பிப் பார்த்தான்.
அவன் கண்கள் பெரிதாகின ‘இவ எங்க இங்க இவளும் இதே காலேஜா?’ என அருகேயிருந்த ஆண்கள் வரிசையில் நின்றபடி யோசனைகள் ஆழ்ந்தான் அருண்.
அருணின் அருகிலிருந்த அவன் நண்பன் ஷ்யாம் பேசிய எதையும் அவன் காதுகள் கேட்கவில்லை.
நண்பன் பதில் பேசாமல் இருக்கவும் அவன் தோள் தொட, ”அங்! என்னடா“ என்றவனின் பார்வை அந்த பெண்களின் மேலேயே இருந்தது.
“அப்போ சாயந்தரம் நீ வரத்தானே” என்ற நண்பனின் கேள்வியில் திருதிருத்தான்.
“எங்கடா”
“அடப்பாவி! நான் சொன்னதா கேட்கவேயில்லை”.
அவன் பார்வை எங்கே போகிறது என்று பார்த்தவன் அங்கிருந்த பெண்களைக் கவனிக்கவும், “என்னடா சைட்டா” எனக் கேட்க,
“ச்சே! இல்லடா தெரிஞ்சவங்கடா”
“அப்படியா! எவளோ தெரிந்தவங்க”, எனக் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, அந்த பெண்களில் ஒருத்தி அவர்கள் புறம் திரும்பி கையாடினாள்.
“பாத்தியா, என்னை பாத்து கையாடும் அளவுக்கு தெரிந்தவங்க”, என நண்பனுக்குப் பதில் உரைத்து அவளைப் பார்த்து பதிலுக்கு கையாட்டினான்.
பின் அவள் தோழியிடம் சொல்லிக்கொண்டு அருணை நோக்கி சென்றாள்.
தன்னை நோக்கி வரும் அவளையே கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அருண்.