NSK– 20 3

NSK– 20 3

“அவளுக்குள் செலுத்தப்பட்ட உயிர் வேற யாரோடதும் இல்லை. ‌அது பாரியோடதுதான். வசீகரன் பாரிக்கு பிறந்த பையன்தான்.

நான் செஞ்சது எதுவுமே மன்னிக்க முடியாத செயல்தான். ஆனா அப்போ ஏதோ ஒரு ஆதங்கம், கோபம், வெறுப்பு. அதான் அறிவில்லாம அப்படி பண்ணிட்டேன். நீங்க ரெண்டு பேருமே என்னைய மன்னிச்சிடுங்க. நான்  இதோ இந்தியா வர வரைக்கும் கூட நான் செஞ்சது தப்புன்னு உணரவே இல்ல. எப்போ எனக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சுதோ அப்போ நான் இத்தனை வருஷமா வாழ்ந்த வாழ்க்கை எல்லாம் சூனியம் போல ஆகிடுச்சி. செத்து பொய்டலாமா கூட யோசிச்சி இருக்கேன். ஆனா என்ன நம்பி மூனு பேர் இருக்காங்கன்னுதான் இப்போவரைக்கும் உயிரோடவே இருக்கேன்.

உண்மைய சொல்லலாம்னு யோசிக்கும் போது எல்லாம் உங்க மூனுபேரோட முகமும் என் கண்ணுக்கு முன்னாடி வந்து என்னைய கொல்லும். இதோ இத்தனை வருஷமா இந்த ரெண்டு பசங்களுக்கும் நான்தான்  ரோல் மாடல். ஆனா இப்போ அவங்க கண்ணு முன்னாடி நான் ஒரு கேவலமானவனாதான்  தெரிவேன். ஏன்னா நான் செய்த காரியம் அப்படி. என்னையே என்னால மன்னிக்க முடியல. அப்படி இருக்க உங்ககிட்ட மன்னிப்பு கேட்க கூட தகுதி இல்லதான். ஆனாலும் ரெண்டு பேருமே என்னைய மன்னிச்சிடுங்க” என எல்லாரின் முன்பு மன்னிப்பு வேண்டினார்.

வசீகரனுக்கு கண்களில் நீர் தளும்பியது. அவனுக்கு அவனின் நிலையைச் சொல்ல வார்த்தையில்லை. அத்தனை மகிழ்ச்சி அவனிடம் இருந்தது.

அவன் ஒருபோதும் தன் தந்தை பாரியாகவே இருந்திருக்க கூடாதா என்றோ? தன் தந்தை யாரென அறிந்து கொள்ளவும் அவன் ஒருபோதும் முயற்சித்தது இல்லை.

ஓடிச்சென்று பரணியை இறுக்க அணைத்து கொண்டு அவரின் கன்னத்தில் முத்தமிட்டு, “ரொம்பவே தேங்க்ஸ் பெரியப்பா. என்னால என்னோட சந்தோஷத்தை வார்த்தையால சொல்ல முடியல” என்றான் ஆனந்தமாய்.

பரணியோ அவனை பார்த்து கூனி குறுகி போனார். இந்த பையனின் வாழ்வை தானே கேள்விகுறியாக்கினோம் என எண்ணவே தானாக தலை கவிழ்ந்தது.

“தலைய நிமிர்த்தி நில்லுங்க அத்தான். நீங்க செஞ்சது தப்புன்னு சொல்றதை விட குற்றம்தான் அதற்கு சரியான வார்த்தை. ஆனா இன்னைக்கு நானும் என்னோட குடும்பமும் எவ்வளவோ கஷ்டத்தை தாண்டி சந்தோஷமா இருக்கோம்னா அதுக்கு காரணம் நீங்கதான்.

நீங்க மட்டும் இப்படி ஒரு வேலையை செய்யாம இருந்திருந்தா, இதோ இப்படி ஒரு அழகான கணவனும் அன்பான மகனும் கிடைச்சிருக்க மாட்டாங்க அத்தான். அதுக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். உங்களோட தப்பை எங்களால மன்னிக்க முடியாதுதான் . ஆனா அதை எங்க மூனு பேராலையும் மறக்க முடியும் அத்தான். இத்தோட இந்த விடயத்தை விட்டுடுங்க” என்று முடித்தார்.

பாரி தன் மனையாளை பெருமிதமாக பார்த்து புன்னகை புரிந்தார்.

அதன்பின் அவர் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தனித்து இருந்து கொண்டார். அது தெரிந்தும் யாரும் எதுவும் செய்யவில்லை.

சதாசிவமும் சீதாலட்சுமியும் ஊரில் உள்ள வேலையை பார்க்க சென்றுவிட்டனர். அதேப்போல் பரணியின் குடும்பமும் லண்டன் நோக்கி சென்றது.

வசீகரன் – ஆதினி, விபுனன் – மிளனி என இரு ஜோடிகளின் காதலையும் மொத்த குடும்பமும் ஏற்றுக்கொள்ள, காதல் பறவைகளாக இருக்கும் இடத்திலிருந்தே பயணித்தனர்.

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து ஒருவருடத்தைக் கடந்தது…

பாரி, நங்கையின் முதல் வருட திருமண நாளை சிறப்புற கொண்டாட எண்ணி, குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தான்.

மொத்த குடும்பமும் சென்னை வந்து இறங்கி விட, அனைவரையும் சந்தித்ததில் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது அனைவருக்கும்.

குடும்பத்தின் ஒற்றுமையையும் சந்தோஷத்தையும் கண்டு பாரி மற்றும் நங்கைக்கு அந்த ஷணம் அத்தனை அழகை கொடுத்திருந்தது.

அன்று காலையே அனைவரையும் கோயிலுக்குச் செல்ல தயாராக சொல்லி அவர்களுக்காக வாசலிலே காத்திருந்தான் வசீகரன்.

“கண்ணம்மா சீக்கிரமா கிளம்புடா. கீழ வசி நமக்காக காத்திருக்கான்”

“இதோங்க கிளம்பிட்டேன். இந்த நெக்லஸ் போட்டா வேலை முடிஞ்சது” என அதனை போட கடினப்பட,

“இரு நான் போட்டு விடுறேன்” என்றவர் அவரின் கையினை விலக்கிவிட்டு அதனை போட்டார்.

“இன்னைக்கு நான் எப்படி இருக்கேன்?” என்று மனைவி ஆசையாய் கேட்க,

“உனக்கு என்ன கண்ணம்மா இந்த அரக்கு வண்ண பட்டு புடவையில் அப்படியே இந்த அடியேனை இழுக்குறீங்க போங்க” என்று அவரின் நெற்றியில் இதழ் பதித்தவர் நங்கையின் வகிட்டில் குங்குமத்தை வைத்து விட்டார்.

இது எப்போதும் நடக்குற விடயம்தான். அவரின் கையால் குங்குமத்தை வைத்தால் ஒழிய அந்த நாளே உயிர்ப்பாக இருக்காது நங்கைக்கு.

காலையிலும் இரவிலும் இருவருக்கும் அந்த நெற்றி முத்தம் ஒரு தெம்பை கொடுத்து சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர்.

இருவரும் தம்பதிகளாய் கீழ் அறையிலிருந்து வருவதை பார்த்த வசிக்கு அத்தனை மகிழ்ச்சி. அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க குனியும் வேலையில், “நானும் நானும்” என ஆதினியும் ஓடி வந்து அவர்களின் காலில் விழுந்தாள். இருவருமே தம்பதியினராய் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.

வசீயோ அவளை முறைத்தவாறே எழுந்து முன்னே நடந்தான்.

அவனின் செய்கையை கண்டு, “போறான் பாரு விருமாண்டி மாதிரி” என உள்ளாற முணுமுணுத்தாள்.

அதன்பின் குடும்பமாய் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர்.

சிறியோர்கள் யாவும் கோயிலைச் சுற்றி வலம் வர, ஆதினியோ வசீகரனை சீண்டியவாறே வந்தாள்.

“மிஸ்டர் விரு கொஞ்சம் வேகத்தைதான் குறைக்கிறது. தாவணி கட்டி நடக்க முடியல விரு. இந்த குழந்தைய பார்க்க பாவமா இல்லையா?” என முகத்தை குழந்தை போல் வைத்து சொல்ல,

அவளை திரும்பி மேலும் கீழும் பார்த்தவன், “எப்படி பார்த்தாலும் நீ அப்படி தெரியல” என்று நடக்க தொடங்கினான்.

அவனை முறைத்தபடி வேகநடையிட்டு அவனுக்கு நிகராக வந்தவள், “இங்க பாரு விரு. நான்தான் தெரியாம வச்சிட்டு வந்துட்டேன்னு சொல்றேன்ல. யாராவது வேணும்னே வச்சிட்டு வருவாங்களா சொல்லு. உன்னைய பார்க்க போற ஆர்வத்துலதான் நீ வாங்கி கொடுத்த புடவையை வச்சிட்டு வந்துட்டேன்” எனச் சமாதான வார்த்தையை காதலாய் சொல்ல, முதலில் முறுக்கிய அந்த ஆறடி ஆண்மகன் அவளின் காதலில் இறுதியில் அவளிடமே சரணடைந்தான்.

“இப்படி பேசியே என்னை கவுத்திடு டி” என்றவன், “என்னைக்குதான்  உன்னோட பனிஷ்மெண்டை செய்ய போற சொல்லு” என்றதும்தான்  தாமதம், “யாரோ கூப்பிடுறாங்க நான் போறேன் பா” என சிட்டாக பறந்து விட்டாள்.

விபுனனும் மிளனியும் அமைதியாகவே காதல் செய்தனர். இந்த அதிரடி எல்லாம் அவர்களுக்கு செட்டாகவில்லை.

அதன்பின் அனைவரையும் ஒரு இடத்திற்கு கூட்டி சென்றான்.

காரில் இருந்து இறங்கிய நொடியே நங்கையின் கண்களை மூடினான் வசீகரன்.

“என்ன பண்ற வசி?” என நங்கை கேட்க,

“உங்களுக்கான சர்ப்ரைஸை காட்ட கூட்டிட்டு போறேன் மா” என்று அனைவரையும் அழைத்து கொண்டு அங்கு வந்தான்.

“இது நான் உங்களுக்கு கொடுக்கிற பரிசு மா. நீங்க எப்பவும் யாரையும் சார்ந்து இருக்க கூடாது. அது மட்டுமின்றி உங்களோட திறமை வெளிப்படணும் மா. அதுக்காகதான் ” என்று அவரின் கண்கட்டை திறந்தான்.

தனக்கு முன்பு இருந்த சிறிய வகையான மெஸ்ஸை கண்டு ஆனந்த அதிர்ச்சியடைந்தார் நங்கை.

அவர் கண்கள் பளபளக்க செய்ய, “என்னோட அம்மா அழுக கூடாது” என்று கண்ணீர் துடைத்து விட்டான் வசீகரன்.

“என்னடா கல்யாண நாளுக்கு எனக்கு ஏதும் பரிசில்லையா, எல்லாம் உங்க அம்மாவுக்கா இருக்கு” என சிரிப்போடே கேட்க,

“எங்க அம்மாவோட அடியேன் தானே நீங்க, உங்களுக்கு கொடுத்தா என்ன அம்மாவுக்கு கொடுத்தா என்ன எல்லாம் ஒன்னுதான்” என்று முடித்தான்.

இதனை மொத்த குடும்பமும் புன்னகையோடே பார்த்திருந்தனர்.

இத்தனை அன்பையும் பாசத்தையும் கிடைக்க நங்கை வரம் பெற்றிருக்கிறார் என்றுதான் அனைவருக்கும் தோன்றியது.

யார் கண்ணும் பட்டுவிட கூடாது என நாச்சியார் சுற்றி எடுத்தார்.

“ம்மா நீங்களும் அப்பாவும் சேர்ந்து  நங்கை உணவகத்தை  திறக்கணும்” என அன்பு கட்டளையிட, இருவரும் தம்பதிகளாய் நின்று அதனை திறந்து வைத்தனர்.

குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட அமர, முதலில் நங்கை தன் மகனுக்கு பரிமாறினார். அதன் பின்பே அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

மாலைப்போல் விழா நடக்கும் இடத்திற்கு சென்றனர். வசீகரனும் விபுனனும் முன்பே அவ்விடத்திற்கு சென்று விட்டனர்.

வாசிலிலே அனைவரையும் வரவேற்ற வசீகரனுக்கு பனிசாரலாய் ஆதினியின் வருகை அது அவன் வாங்கி தந்த புடவையில் தேவதையென மின்னினாள்.

‘எப்படி இருக்கு’ கண்களால் கேட்க, சுற்றி முற்றி பார்வையிட்டவன், அவளை இழுத்துக் கொண்டு தனியே வந்தான்.

“என்ன ஆது குட்டி இப்படி மச்சானை மயக்குற மாதிரி வந்து நிக்கிற. நான் எடுத்து கொடுத்த புடவை உனக்கு சூப்பரா இருக்குடி செல்லம்” என அவள் காதுமடலை தீண்டினான்.

அவனின் தீண்டலில் நாணம் கொண்டவள், “விடுங்க கரண் யாராவது பாத்துற போறாங்க” என பெண்ணவள் சிணுங்க,

“இந்த மச்சானை ஏமாத்தினதுக்கு ஒன்னே ஒன்னு குடுத்திட்டு போ” என சண்டித்தனம் செய்ய, அவனின் ஆசைக்கு இணங்க அவனின் கன்னத்தைக் கடித்து விட்டு ஓடினாள் ஆதினி.

அபியும் பூங்குழலியும் தம்பதியினராய் முன்னின்று பார்த்துக் கொண்டனர்.

பரணிதரன் இப்போதும் அனைவரிடத்தும் ஒதுங்கியேதான் இருந்தார். அவரை இழுத்து பிடிக்கவும் யாருக்கும் தோன்றவில்லை.

அனைத்து விருந்தினர்களும் வருகை தந்ததும் கேக் வெட்டப்பட்டது.

பின் உறவினர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள், பிஸ்னஸ் வட்டாரங்கள் என அனைவரும் கிஃப்ட் கொடுத்து உணவுண்ண சென்றனர்.

அனைத்தையும் முடித்து விட்டு வீடு வரவே இரவு பத்தை தாண்டிருந்தது.

வீட்டிற்கு வந்ததும் வராததுமாக உள்ளே சென்ற வசீகரன் கையில் சிறிதளவு உப்பும் மிளகாயும் எடுத்து வந்து நங்கைக்கும் பாரிக்கும் சுற்றி போட்டான்.

இவனின் அன்பை நொடிக்கொரு முறை கண்டு மொத்த குடும்பமே வியந்துதான் போனது. ஆதினிக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது தன்னைவனைக் கண்டு.

error: Content is protected !!