மெல்லினம்…மேலினம்…06

eiOK3PH501

மெல்லினம்…மேலினம்…06

மெல்லினமல்ல மேலினம்

மெல்லினம் 06

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் நேற்று இரவு தாமதமாக உறங்கியதாலும் காலை எட்டு மணி போல் சோம்பல் முறித்தப்படி கண் விழித்தான் சிம்மன்.

அவன் கண்கள் அப்போதும் சரியான தூக்கமின்மையாய் எரிய தொடங்கியது.

கண்களை கசக்கிய படி, அறையிலிருந்து வெளியே வந்தவனை, எதிர்நோக்கி காத்திருந்தாள் ரோஜா‌.

அவளை கண்டவன் சிறிய புன்னகையை உதிர்த்து,” குட் மார்னிங் ரோஜா”என்றான்.

“குட் மார்னிங்…”என்றாள் வராத குரலில்.

அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக அவன் முகத்தை பார்த்தப் படி இருக்க, சிம்மனோ பல்துலக்கி முகம் கழுவி விட்டு வந்தவன், அவளுக்கு எதிர் புறம் இருந்த சோஃபாவில் அமர்ந்து செய்தித்தாள் வாசிக்க ஆரம்பித்தான்.

ரோஜா சென்னை வந்து இன்றோடு பத்து நாட்கள் ஆகிவிட்டது. இந்த பத்து நாட்களில் பெரிதாய் எதுவும் அவள் பேசியதில்லை. சிம்மனுமே கல்லூரியில் இன்டர்னெல்ஸ் என்பதால் அதில் பிசியாகி விட்டான்.

அவளுக்கு துணையாக வேணி வந்து இருந்துவிட்டு செல்வார்.

சிம்மனும் ஆனந்தும் சேர்ந்து தான் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். இந்த வீடு கல்லூரிக்கு பக்கத்திலே இருப்பதனால் இதையே வாடகைக்கு எடுத்திருந்தனர்.

இதில் திருமணத்தை நிறுத்தவென சென்று எதிர்பாரா விதமாய் சிம்மனே ரோஜாவை திருமணம் செய்து சென்னை அழைத்து வந்திருக்க, அடுத்து என்ன என்பது போல் யோசிக்கையிலே,

“மச்சான்! நான் வேற வீடு பாக்குறேன் டா” என்றதற்கு,

“அது சரிப்பட்டு வராது மச்சான்‌. நீ இங்கேயே இரு நான் பக்கத்திலயே ஒரு மேன்ஷன் பார்த்து போய்கிறேன்”சொல்ல, நண்பனை அணைத்து கொண்டு நன்றி தெரிவித்திருந்தான்‌ சிம்மன்.

அவன் சொன்னது போலவே பக்கத்திலிருந்த மேன்ஷனிற்கு தன் ஜாகையை மாற்றினான் ஆனந்த்.

செய்தித்தாளை வாசித்து முடித்தவன் முகத்தை நிமிர்த்த, அதுவரை அவன் முகத்தையே பார்த்திருந்த ரோஜா திடிரென சிம்மன் தன்னை காணவும் பேந்த பேந்த முழித்தாள்.

“என்ன ஏதும் பேசணுமா?”என்க, ஆமாம் என தலையாட்டினாள்.

“அப்போ சொல்லு?”

“இல்ல, என்னால தானே அண்ணா வேற எங்கேயோ போய் தங்க வேண்டியதா போச்சி. அதனால அண்ணாவ இன்னைக்கு மதிய சாப்பாட்டுக்கு கூப்பிடலாமா?” பல தயக்கங்களுக்கு பிறகே இதனை கேட்டாள். இதனை கேட்பதற்குள் மனதில் ஆயிரம் முறையாவது சொல்லி பார்த்திருப்பாள்.

“கூப்பிடலாமே. இரு” சொன்னவன், ஆனந்திற்கு அழைத்து பேசி மதிய உணவிற்கு வர சொல்லி இருந்தான். அவனுடன் சரவணனையும் அழைத்திருந்தான்.

“சொல்லிட்டேன்.கூடவே சரவணனையும் வர சொல்லிருக்கேன்” சொல்ல தலையசைத்தாள்.

“எதுனாலும் தயங்காம கேளு. புரியுதா?” என்கவும் மண்டையை நாலாபுறமும் ஆட்டிவைத்து உள்ளே சென்று விட்டாள்.

போகும் அவளை பார்த்தவன், இவளை எப்படி மாற்றுவது என சிந்திக்கலானான்.

சமையலறைக்குள் வந்தவள், எது எது இருக்கு இல்லையென அனைத்து டப்பாவையும் திறந்து பார்த்தவளுக்கு, அங்கு பெரிதாய் ஒன்றுமில்லை.

பேருக்கும் தான் வீடு என்று ஒன்றில் வசித்திருக்கிறார்கள். உள்ளே ஒன்றுமில்லை.

தோசை கல்லு, சட்டுவம், மூன்று தட்டுகள், குவளைகள் என எண்ண கூடிய பொருட்கள் மட்டுமே இருக்க, தண்ணீர் குடிக்கவென சமையல்கட்டுக்கு வந்த சிம்மன், ரோஜா சமையலறையை சுத்தி சுத்தி பார்ப்பதை கண்டு,” என்னாச்சு?” என கேட்டான்.

ரோஜா, திடிரென தனக்கு பின்னாள் கேட்ட அவனின் குரலில் திடுக்கிட்டு போனாள்.

அதில் அவள் உடல் நடுங்க செய்ய, அதை உணர்ந்தவன், “ரிலாக்ஸ்… ஜஸ்ட் ரிலாக்ஸ்”என ரோஜாவை ஆசுவாச படுத்த முயன்றான்.

அவனின் முயற்சி சிறிது வேலை செய்ய,” சரி இப்போ சொல்லு, என்னாச்சுன்னு?” கேட்க,

அவளோ,”என்னாச்சுன்னா?” கேட்டு அவள் முழிக்கவும், அவனே அவளுக்கு விளக்கவும் செய்தான்.

“கிட்சனை சுத்தி சுத்தி பார்த்திட்டு இருந்தியே, அதான் என்னாச்சுன்னு கேட்டேன்” சொல்லவும் தான் பெண்ணிற்கு புரிந்தது.

“இல்ல, இங்க சமைக்க பெருசா எந்த பொருளும் இல்லை. கடைக்கு போய் சாமான் வாங்கிட்டு வந்தா தான் சமைக்க வசதியா இருக்கும்”

“அப்போ சரி நீ கிளம்பி இரு. நாம போய் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிட்டு வந்திடலாம்”என்க, மண்டையை ஆட்டி வைத்தாள்.

ஐந்து நிமிடத்தில் கிளம்பி வந்தவன், ரோஜாவை அழைத்து கொண்டு ரிலையன்ஸ் வந்து சேர்ந்தான்.

அவளோ அந்த கடையை விழி விரிக்க பார்த்தவள்,” எங்க ஊருல தமாதுண்டு கடை தான் இருக்கும். இங்க என்ன இம்புட்டு பெருசா இருக்கு” மனதிற்குள் சொல்லுகிறேன் பேர்வழி பெண் சத்தமாக சொல்லி விட, சிரிப்பை கட்டுப்படுத்த பெறும் பாடுபட்டான்.

“இங்க இதெல்லாம் சாதாரணம். இனி இங்க தானே இருக்க போற, பொறுமையா இதெல்லாம் பார்க்கலாம். இப்போ தேவையானதை வாங்கலாம் வா” சிம்மன் அவளை கையோடு அழைத்து சென்றான்.

இல்லையென்றால் இப்படியே கடையை பார்த்து கொண்டே நிற்பாள். இதை போன முறை அவளுக்கு உடை வாங்க சென்றபோது கண்டு கொண்டது.

“என்ன வேணுமோ வாங்கிக்க…”

“ம்ம்ம்…”ஒவ்வொன்றாய் வாங்க துவங்கினாள்.

இப்படியே சில மணித்துளிகள் இருவருமாய் சேர்ந்து வீட்டிற்கு தேவையானவற்றை வாங்க, அப்போது அவனுடன் கல்லூரியில் வேலை பார்க்கும் ஒருவர் வரவும் அவருடன் பேசத் தொடங்கினான்.

அதற்குள் ரோஜா அப்படியே சுற்றி பார்த்தபடி நடந்து சென்றவள், ஓரிடத்தில் நிலையாய் நின்றுவிட்டாள்.

அவரிடம் பேசிவிட்டு ரோஜாவிடம் வந்தவன் அவள் சிலையென நிற்பதை பார்த்து அவள் தோளில் கைவைத்து அழைத்தான்.

“ரோஜா!” அழைக்க,

“ஹான்” என்று முழித்தாள்.

“எல்லாம் வாங்கியாச்சா? கிளம்பலாமா?”

“ஹான் வாங்கியாச்சு. சிக்கனும் மட்டனும் மட்டும் வாங்கினா போதும்” சொல்ல, சரியென்று பில் போடும் இடத்திற்கு அவளுடன் நடந்தவன், திரும்பி ஒரு பார்வை பார்த்தபின்பே சென்றான்.

வீட்டிற்கு செல்லும் வழியில் சிக்கனும் மட்டனும் வாங்கியவர்கள், வீடு திரும்பினர்.

வீட்டிற்கு வந்ததும் வேக வேகமாய் வேலைகள் தொடங்கப்பட்டது. முதலில் சிக்கனையும் மட்டனையும் கழுவி தனியாக எடுத்து வைத்தவள், வாங்கிய மளிகை பொருட்களை எல்லாம் எடுத்து ஒவ்வொரு டப்பாவிலும் கொட்டி வைத்தாள்.

இந்த பத்து நாட்களில் வேணியே சமைத்து கொண்டு வந்து கொடுத்ததால், ரோஜாவிற்கு எந்த வேலையும் அவ்வீட்டில் இல்லை.

அவளது துணியை மட்டும் துவைத்து கொண்டாள். மற்றப்படி அங்கே அவளுக்கு எந்த விதமான வேலையும் இல்லை.

இன்றைக்கு சமையல் செய்யவென கிட்சனிற்குள் நுழைந்திருக்க, பம்பரமாய் சுற்றினாள்.

இவளின் இந்த சுறுசுறுப்பில் சிம்மனிற்கு ஆச்சரியம் தான்.

“ஏங்க எனக்கு கொஞ்சம் உதவி செய்றீங்களா?” அவள் முதன் முதலாய் தானாய் வந்து அவனிடம் பேசவும் கேட்கவும், சந்தோஷமாகவே செய்கிறேன் என்றிருந்தான்.

பின்னர், கண்களில் வழிந்த கண்ணீரை ஒருபுறம் துடைத்தவாறே வெங்காயத்தை பொடிசாய் நறுக்கினான்.

ரோஜாவா இது என்று கேட்குமளவிற்கு அவள் பம்பரமாய் வேலைகளை செய்தாள்.

இங்கிருந்த பத்து நாட்களுமே மந்தம் போல் தான் இருந்தாள். யாரும் ஏதேனும் சொன்னால் செய்வாள். மற்றப்படி அனைத்திலும் ஒரு ஒதுக்கம் இருக்கும்.

இன்னுமே இதனை தன் வீடாக அவளால் நினைக்க முடியவில்லை. யாரோ ஒருவர் வீட்டில் விருந்தாளியாக தங்கியிருக்கோம் என்றே தான் நினைத்தாள்.

அப்படியிருக்கையில் எப்படி தானாக பொறுப்பெடுத்து செய்ய, அதிலும் இங்கே அனைத்தும் வித்தியாசமாய் இருக்க, தொடவே பயந்தாள்.

அடுத்த ஒருமணி நேரத்தில் அனைத்தையும் சமைத்து முடித்த ரோஜா, இறுதியில் ரசத்தையும் இறக்கி வைத்தாள்.

பின், சமையல் கட்டை சுத்தம் செய்தவள் மடமடவென பாத்திரங்களை கழுவிப் போட்டு, ஒருமுறை வீட்டை கூட்டி சுத்தம் செய்தவள் முகத்தில் துளிர்த்திருந்த வேர்வை துளிகளை சுடிதார் ஷாலில் மெல்ல துடைத்தாள்.

அப்போது தான் குளித்து முடித்து வெளியே வந்தவன், ரோஜா நிற்பதை கண்டு “நீயும் போய் குளிச்சிட்டு வா. அதுக்குள்ள அவங்க ரெண்டு பேரும் எங்க வந்திருக்காங்கன்னு கேட்டு வைக்கிறேன் ” கூறி அவளை அறைக்குள் அனுப்பி வைத்தான் சிம்மன்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அறையிலிருந்து வெளி வந்தவளை இமைக்க மறந்து பார்த்தான்.

மஞ்சள் நிற சுடிதாரில் ஆங்காங்கே நீல வண்ணத்தில் பூக்கள் வைத்திருக்க, எந்தவித ஒப்பனையும் இல்லாமலே சிறு பெண் அழகாய் மிளிர்ந்தாள்.

ஆம், சிம்மன் ரோஜாவை சிறுப்பெண்ணாக தான் பார்க்கிறான்.

அவளுக்கென்று ஒரு நல்வாழ்வை அமைத்து தர வேண்டுமென்பதே அவனின் அவா. சங்கரனின் இடத்திலிருந்து அவளுக்கு தேவையான ஒவ்வொன்றையும் செய்ய நினைத்தான். அதை செய்து கொண்டும் வருகிறான்.

ரோஜாவின் வாழ்க்கையை சிறப்புற அமைத்து தருவதே அவனின் இப்போதைய கனவு.

அடுத்த சில மணிநேரத்தில் ஒருவர் பின் ஒருவராக வீட்டிற்கு வந்தனர். இருவரையும் இன்முகத்துடன் வரவேற்றவள், அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தாள்.

ஆனந்த் ரோஜாவுடன் சகஜமாக பேசி பழக முயற்சிக்க, சரவணனோ ரோஜாவிடம் ஒரு ஒதுக்கத்தை வெளிப்படையாவே காட்டினான்.

“பத்து நாள்ல வீடு வீடு மாதிரி ஆகிடுச்சு?” அதிசயத்தது போல் ஆனந்த் வினவ,

“எல்லாமே அப்படியே தான் இருக்கு டா. என்ன கொஞ்சம் சுத்தமா இருக்கு அவ்வளோ தான்” என்றான் சிம்மன்.

“அதுக்கு தான் மச்சான் வீட்ல ஒரு பொண்ணு இருக்கணும்னு சொல்றது. பாரு ரோஜா வந்ததும் எப்படி ஆகிடுச்சின்னு”

“நாம வீட்ட சுத்தப்படுத்தமா ஓப்பியடிச்சதுக்கு, அவங்க இல்லைன்னா வீடு சுத்தமா இருக்காதுன்னு சொல்றியே டா எரும…”என கடிய, முகம் சுருக்கி கோபமாய் இருப்பது போல் காட்டினான் ஆனந்த்.

இவர்கள் செய்யும் கலாட்டாவில் ரோஜாவின் இதழில் சிறிதாய் ஒரு மென்னகை உதிர்த்தது அவ்வளவு தான்.

பின், மூவருக்கும் ரோஜாவின் கையால் சாப்பாடு பரிமாற பட, அமைதியாய் சரவணன் உண்ண ஆனந்த் பாராட்டு பத்திரம் வாசித்தான்.

“என்ன டேஸ்ட்… என்ன டேஸ்ட்… இதுவரைக்கும் இப்படியொரு கைப்பக்குவத்தில் நான் சாப்பிட்டதே இல்லை. ரோஜா வேற லெவல் மா உன் சமையல்” என இலையில் வைத்த அனைத்து பதார்த்தங்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டான்.

முடிந்திருந்தால் அந்த இலையையும் சாப்பிட்டு இருப்பான். சரவணன் தான் அவனின் முதுகில் தட்டி இலையை மூட வைக்க வேண்டியதாய் போனது.

“ஏன் டா…?”

“விட்டா நீ அந்த இலையையும் சேர்த்து சாப்பிட்டு இருப்ப மச்சான். உன்னைய மனிசனா இருக்கும்போதே சமாளிக்க முடியல. இதுல நீ மிருகம் பாதி மனிதன் பாதின்னு ஆகிட்டா சமாளிக்கிறது ரொம்பவே கஷ்டம் டா மச்சி” சாவகாசமாய் சரவணன் பேச, ஆனந்த் நண்பனை தீயாய் முறைத்தான்.

மூவரும் சாப்பிட்ட பிறகு சிம்மன் ரோஜாவிற்கு பரிமாற, அவளும் உண்டு முடித்தாள்.

அதன் பிறகு நண்பர்கள் மூவரும் கொட்டமடிக்கவும், அமைதியாய் அமர்ந்திருந்தாள் ரோஜா.

இதனை பார்த்த ஆனந்த்,” ஏன் தங்கச்சி நீங்க பேசவே மாட்டீங்களா? வந்ததுல இருந்து அமைதியாவே இருக்கீங்க?” கேட்க, அவளோ திருதிருத்தாள்.

அதனை பார்த்த சிம்மன்,” இன்னும் யார்க்கிட்டயும் பழகல இல்ல அதான். போக போக பேசிடுவா” அவளுக்காக அவன் பேசவும், மென்மையாய் புன்னகைத்தாள்.

இருவரையும் பார்த்த சரவணன் அமைதியாய் மொபைலை நோண்டினான்.

“இதெல்லாம் ஆகாது மச்சான். இங்க இருக்கிற மூணு பேருமே வாயை வச்சி தான் பொழப்ப நடத்திட்டு இருக்கோம். எங்க கூட இருந்துட்டு மௌனமா இருந்தா, அது நல்லதுக்கே இல்ல” சொல்ல, அவனை கேள்வியாய் நோக்கினாள் ரோஜா.

“அது நாங்க மூணு பேருமே வக்கீலுக்கு படிச்சவங்க மா. இதோ இந்த சரவண பையன் மட்டும் தான் வக்கீலா டிஸ்ட்ரிக் கோர்ட்ல குற்றவியல் பிரிவுல இருக்கான். நாங்க ரெண்டு பேரும் இவனை மாதிரி எருமைகளை உருவாக்குறோம்” என அவன் பாட்டிற்கு பேச, சரவணன் முறைக்க ரோஜா ஆச்சரியமாய் பார்வையிட்டாள்.

“அப்போ நீங்க ரெண்டு பேரும் கூட வக்கீலா?” ஒருவித வியப்புடனே அவள் கேட்க,

“அப்படியும் சொல்லலாம். இதுலயும் சிம்மனோட தாத்தா இருக்காரே, அவர் ஒரு பேச்சாளர். பேசி பேசியே நம்ம காதுல இரத்தம் வந்து அது உறைந்தே போற அளவுக்கு பேசுவாரு” என அவனின் தாத்தாவை பற்றி பேசும்போதே சிம்மனின் மொபைல் சிணுங்கியது.

அதை எடுத்து பார்த்த சிம்மன், அதனை கையில் வைத்து பார்த்தப் படி இருக்க, முகம் சிறிது சோகத்தை தத்தெடுத்தது.

“தாத்தாவா மச்சான்…?” கேட்டது இத்தனை நேரம் அமைதியை தத்தெடுத்திருந்த சரவணனே தான்.

அவனின் கேள்வியிலே தெரிந்தது இந்த அழைப்பிற்கு காரணம் அவன் தான் என்று.

வில்லங்கத்தை கூடவே வைத்திருப்பது மட்டுமல்லாது, அவனிற்கு கறி விருந்து வேறு.

நண்பனை தீயாய் முறைத்த சிம்மன், அதனை எடுத்து அவரிடம் எப்படி பேசுவது என சிந்திக்கலானான்.

அதற்குள் “தாத்தாவா மச்சான்… இங்க கொடு” என அவனிடம் பிடுங்கிய ஆனந்த்,

“இப்போ உனக்கே புரியும் பாரு நான் சொன்னது சரின்னு” என, அதனை ஆன் செய்து விட்டான்.

“டேய்..!!!” பதறியவன் உடனே நண்பனிடமிருந்து பறித்து விட்டான் சிம்மன்.

காதில் வைக்கும் போதே அவரின் கத்தல்கள் காதை கிழித்தன.

“தாத்தா…”

“உனக்கு தாத்தான்னு ஒருத்தன் இருக்கிறது ஞாபகம் இருக்கா?” தாத்தா வேதநாயகம் கொதிப்புடனே அவனிடம் பேச, அதற்குள் ஃபோனை வெடுக்கென பிடுங்கிய அமுதவல்லி கணவரின் மீது கோப பார்வை வீசினார்.

“ராசா, அந்த சரவண பைய சொல்றது நெசமா பா? நீ அந்த பொண்ணை கல்யாணம் கட்டிக்கிட்டியா?” தவிப்போடு கேட்டார் அந்த பாசமிகு பாட்டி.

பாட்டியின் தவிப்பு தாத்தாவின் கோபம் எல்லாம் பேரனை பேச விடாது அமைதி காக்க வைத்தது. அவர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்ததை நினைத்து வருந்தினான்.

ஊருக்கு சென்றாலே அவனின் கல்யாணம் பற்றிய கனவுகளை எல்லாம் எப்போதும் அவனிடம் சொல்வதுண்டு. அதை தவிடு புடியாக்கி கல்யாணம் செய்ததை எண்ணி கூனி குறுகி நின்றான்.

பேரனிடமிருந்து எந்த எதிர் பேச்சும் இல்லாது போக, “ராசா, லைன்ல இருக்கியா?” என்றார் அமுதவல்லி.

“ஏங்க‌ அவன் எதுவும் பேசமாட்டேங்கிறான். லைன்ல தான் இருக்கானான்னு பார்த்து சொல்லுங்க ” என அவரின் முன்பு நீட்டினார்.

அதனை பார்த்தவர்,” துறையால பேசமுடியாதோ, பேசுடா” என்று ஒரு அதட்டல் விட்டார்.

“ராசா…”

“பாட்டி…” என்றான் வராத குரலில்.

இங்கு அவன் பேசும் முறையிலே ரோஜாவின் முகம் சுருங்கியது. தன்னால் தான் அவர் தாத்தாவிடம் திட்டுவாங்குகிறாரோ என அவனையே பார்த்திருந்தாள். அதற்கு தூபம் போடுவது போல் தான் ஆனந்தின் பேச்சுக்கள் இருந்தன.

மீண்டும்,” அந்த பொண்ணை கல்யாணம் கட்டிருக்கியா ராசா?” கேட்டார்.

ரோஜாவின் முகம் மாறுதலை கண்டு சற்று தள்ளி வந்தவன்,” ஆமா பாட்டி. நான் உங்களுக்கு நேரவே வந்து…” சொல்லி முடிப்பதற்குள் அவர் சந்தோஷத்தில் குதுகலித்தார்.

அவரின் சந்தோசத்தில் குழம்பி போய் நின்றான் சிம்மன்.

“ரெண்டு பேரும் நாளைக்கு இங்க இருக்கனும். இங்க வா அப்பறம் இருக்கு உனக்கு” சொல்லி வைத்துவிட்டனர் அந்த பாசமிகு தம்பதியினர்.

அவர்களிடம் பேசி முடித்தவனுக்கு சற்று குழப்பமான நிலை தான்.

இரண்டு நிமிடங்கள் கூட பேசியிருக்க மாட்டார்கள். ஆனால் அந்த இரண்டு நிமிடத்திற்குள்ளேயே ஒரு வித மகிழ்வு, சோகம், கோபம் என அவர்கள் காட்டிய பேதத்தை அவனால் உணர முடிந்தது.

அவன் இப்படியான தீவிர சிந்தனையில் உழன்று கொண்டிருக்க, அவனிடம் வந்தாள் ரோஜா.

அவன் பின் நின்றவள், அவனை எப்படி அழைப்பது என்று தெரியாமல் தவிக்க,

மெல்ல,” ஏங்க…” என்று அழைத்துவிட்டிருந்தாள்.

ரோஜாவின் குரலில் திரும்பி பார்த்தவன்,” என்ன மா…?” என்றான் கனிவோடு.

“உங்க தாத்தா ஏதும் பேசினாரா? அவரு கோபக்காரராமே ஆனந்த் அண்ணா சொன்னாங்க. என்னை கூட்டிட்டு வந்ததுனால உங்களை ஏதும் திட்டிட்டாங்களா?” அக்கறையுடன் அவனிடம் விசாரித்தாள்.

ரோஜாவின் அக்கறை கலந்த பேச்சில் மீசை மறைத்திருந்த இதழ்கள் மெலிதாக நெளிய முயன்றது.

இப்படியான அக்கறை எல்லாம் அவன் அன்னைக்கு பிறகு இப்போது தான் கிடைக்கிறது.

“ஒன்னுமில்லை. சும்மா தான் பேசிட்டு இருந்தோம். உன்னை பார்க்கணும்னு சொன்னாங்க” என்றதும், பெண் அச்சத்துடன் அவனை ஏறிட்டாள்.

“என்னையா…? எதுக்கு…?”

“அவங்களுக்கு அவங்களோட பேத்தியை பார்க்கணுமாம்” சிரிப்புடனே சொல்ல, அப்படியே முடங்கி போய் நின்றாள்.

“அடிக்கடி இப்டி பிரீஸ் ஆகாத மா. என் தாத்தா பாட்டி ரொம்ப அன்பானவங்க” மொழிந்தாலும், அவளால் நம்ப முடியவில்லை.

“இல்ல. ஆனந்த் அண்ணா…” உள்ளே இருக்கும் ஆனந்தை கைகாட்டி அவள் ஏதோ சொல்ல வர, அவளை தடுத்திருந்தான் சிம்மன்.

“அவன் கிடக்கிறான். நீ அவனை நம்பாத” சொல்லி அவளுடன் உள்ளே வந்தான்.

நண்பர்களிடம் தாத்தா பாட்டி அங்கே வர சொன்னதை சொல்லவும், இருவரும் கேட்டுக்கொண்டனர்.

“போயிட்டு வா மச்சான்…” சரவணன் சொல்ல, அவனை முறைதான் சிம்மன்.

அதன்பின் இருவரும் கிளம்பி விட, அடுத்தநாள் சித்தாலப்பாக்கத்தை நோக்கி இருவரும் சென்றனர்.

இரண்டு நாட்கள் வேலைக்கு விடுப்பு எடுத்தவன், மனைவியோடு ஊருக்கு சென்றான்.

இங்கிருந்து இரண்டு மணிநேர பயணத்தில் இருந்தது அவர்களது ஊர்.

ரோஜா செல்லும் பாதைகளில் இருக்கும் பெரிய பெரிய கட்டிடங்களை கண்டு வியந்தாள். அவளின் ஊரில் இவ்வாறான பெரிய கட்டிடங்களாம் இல்லை. பெரிது என்று சொன்னாலே அது கனகவேலின் வீடு தான். இப்படியே பார்வையிட்டு வந்தவளுக்கு கண்கள் சொருக, அப்படியே உறங்கி போனாள்.

சரியாக ஊர் எல்லைக்குள் நுழையும்போது அவளை எழுப்பி விட்டான்.

எழுதவள் கண்ணை கசக்க சுற்றிலும் பார்வையை திருப்பினாள்.

“வந்துட்டோமாங்க…?” முடியை ஒதுக்கி வேகமாய் சரி செய்ய, அவளை தான் பார்த்திருந்தான்.

“பயப்பட வேணாம். அவங்க உன்னைய ஒன்னும் சொல்ல மாட்டாங்க” என்று மனைவிக்கு ஆறுதல் சொன்னவனுக்குமே மனதில் ஒரு ஓரத்தில் பயமிருந்தது. அதனை ரோஜாவிடம் காட்ட விரும்பவில்லை.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஒரு பெரிய வீட்டின் முன் நின்றது.

அந்த வீட்டின் அமைப்பை பார்த்தவளின் விழிகள் பிரமித்ததில் பெரிதாய் விரிந்து கொண்டது.

“இறங்கலாம்.வா” முதலில் அவன் இறங்கி அவளையும் இறங்க வைத்தான். பெண்ணின் காலடி அந்த மண்ணில் படவுமே வெடி சத்தம் காதை கிழித்தது.

‘அச்சோ…’ காதை இறுக மூடிக்கொண்டாள்.

அதற்குள் மகாலக்ஷ்மியை போல் உள்ளே இருந்து ஆரத்தி தட்டுடன் வெளி வந்தார் அமுதவல்லி. அவருடன் நான்கைந்து பெண்கள்.

பேரனை மெல்ல முறைத்தவர், பேத்தியை இன்முகத்துடனே வரவேற்றார்.

“வலது கால் வச்சி உள்ள வா மா”என்க, அவளும் அவர் சொன்னது போல் சிம்மனுடன் உள்ளே நுழைந்தாள்.

சாமி அறைக்கு அழைத்து வந்து விளக்கேற்ற வைத்தவர், பேத்தியை விடவில்லை அவர்.

வேதநாயகம் அவனை பார்த்து முறைப்பதும் முகம் திருப்புவதுமாகவே செய்தார். பார்வையாலே அவரை நோட்டம் விட்டவனுக்கு புன்னகை தானாய் அரும்பியது.

வேதநாயகம்- அமுதவல்லி இருவரும் அன்னபூரணியின் பெற்றோர்கள். அன்னபூரணி திருமண வாழ்வை முறித்து கொண்டு வந்ததிலிருந்து இவர்கள் தான் மகளையும் பேரனையும் கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்வது. அந்தவகையில் இவர்கள் இருவரும் அவனுக்கு தாய் தந்தை போன்றோர்கள்.

முதலிலே ரோஜாவின் குடும்பத்தை பற்றி மேலோட்டமாய் சொல்லி இருக்கிறான். அப்போதெல்லாம் இவனுடன் சேர்ந்து பெரியவர்களும் வருந்தியதுண்டு.

இப்போது அவர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்ததை நினைத்து வருந்தினானே தவிர, தவறு செய்ததாய் நினையவில்லை.

அடுத்து வந்த நேரங்களும் இருவருக்கும் இனிமையாய் கடந்தது. அமுதவல்லி பேத்தியை பாசமாய் பார்த்துக்கொண்டார். இவர்களின் பாசத்தில் நெஞ்சம் நெகிழ்ந்து கண்கள் கலங்கின. அவளை ஆதுரமாய் அணைத்து கொண்டார் அமுதவல்லி.

அன்றிரவே, இருவரிடனும் தங்கள் திருமணம் எப்படி நடந்தது என்று சொல்லிவிட்டான். முதலிலே இதனை பற்றி சரவணன் மேலோட்டமாக சொல்லி இருந்தாலும் இவன் விலாவரியாக சொல்லவும் பெரியோர்களும் புரிந்து கொண்டனர். ரோஜா பட்ட கஷ்டங்களை எண்ணி கலங்கவும் செய்தனர்.

அடுத்த இரண்டு நாளை அங்கேயே செலவழித்து விட்டு வீடு திரும்பினர். 

error: Content is protected !!