Thithikkum theechudare – 11

Thithikkum theechudare – 11
தித்திக்கும் தீச்சுடரே – 11
முகிலனின் குழு அவர்கள் படப்பிடிப்பு நடக்கும் தீவை அடைந்திருந்தது. அனைவருக்கும் தனித்தனி அறை கொடுக்கப்பட்டிருந்தது. மீரா, குளித்துவிட்டு தன் முழங்கால் கால் வரை வானத்தை ஒத்த நீல நிற கார்கோ ஷார்ட்ஸ், வெள்ளை நிற பட்டன் வைத்த சட்டை அணிந்திருந்தாள். படம் வேலை ஆரம்பிக்க நேரம் ஆகும் என்று அவளுக்கு தோன்றியது. ‘இடத்தை சுற்றி பார்க்கலாம்.’ என்ற எண்ணத்தோடு அவள் அறையிலிருந்து வெளியே வந்தாள்.
அவள் அறை பங்களாவிற்குள் இருந்தது. ‘எல்லாருக்கும் இங்க இடம் கொடுத்திருக்காங்களா?’ அவள் சிந்தனை ஓட, தன் கண்களை சுழலவிட்டாள். அந்த பங்களாவிற்குள் அவ்வளவாக மனித நடமாட்டம் இல்லை. பலர் இங்கு தங்கவில்லை என்று அவளால் கணிக்க முடிந்தது.
குருஸிலிருந்து இறங்கியதும் அவளை நேராக இங்கு அழைத்து வந்து விட்டார்கள். எல்லாரும் எங்கு சென்றார்கள் என்று அவளுக்கு தெரியவில்லை. அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் பெண் அருகே சென்றாள். “எல்லாரும் எங்க இருக்காங்க?” அவள் கேட்க, “எல்லாரும் வெளிய இருக்கிற காட்டேஜில் இருக்காங்க” அவர் கூற, ‘எல்லாருமுன்னா? அப்ப ஹீரோ?’ அவளுள் கேள்வி எழுந்தது. இருந்தாலும், மேலும் அந்த பெண்ணிடம் பேச்சை வளர்க்க விரும்பாமல், வெளியே செல்ல எத்தனித்தாள்.
அப்பொழுது ஒருவர் குறுக்கே வந்து, “வெளிய கிளம்பிடீங்களா?” அவர் கேட்க, “ம்…” என்று தலையசைத்தாள்.
“ரொம்ப தூரம் போக வேண்டாம். எல்லா இடமும் உங்களுக்கு தெரியாது” அவர் குரலில் வேண்டுதல் இருக்க, மறுப்பின்றி தலையசைத்து சென்றாள்.
பளிச்சென்ற பழுப்பு நிறத்தில் மண். கண்ணுக்கெட்டிய தூரத்தில் அலையலையாய் கடல். அவள் அதை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் தனியாக நடந்தாலும், அவளை யாரோ பார்ப்பது போல் இருந்தது.
அவள் செல்லும் வழியில் காட்டேஜ் இருக்க, அவள் அவர்களை பார்த்தாள். “எல்லாரும் இங்க தான் இருக்காங்க” அவள் இதழ்கள் முணுமுணுத்துக் கொண்டன. ‘அப்ப அந்த பங்களாவில், முகிலன் மட்டும் தான் இருக்கனும். அப்புறம் அந்த பங்களாவில் வேலைப்பார்ப்பவர்கள். எனக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் கவனிப்பு’ அவள் தனக்குள் கேட்டுக் கொண்டே நடக்க, “மீரா…” என்ற அழைப்பில் அவள் திரும்பி பார்க்க, முகிலன் நின்று கொண்டிருந்தான்.
வேகமான சில எட்டுகளோடு, அவன் அவளை நெருங்கிவிட்டான். “என்ன வந்ததும் வெளிய கிளம்பியாச்சா?” அவன் கேட்க, “சும்மா கடல் பக்கம் வரை போலாமுன்னு” அவள் இழுக்க, அவன் கண்கள் சுருங்கியது.
“நீங்க எங்க கிளம்பிடீங்க?” அவள் கேட்க, “ஷூட்டிங்க்கு செட் எல்லாம் எப்படி போயிட்டு இருக்குனு பார்க்கத்தான். உங்களை பார்த்ததும் இங்க வந்துட்டேன்” அவன் கூற, அவள் சிரித்துக்கொண்டாள். அவன் அவ்வப்பொழுது ஒருமையிலும், சில நேரங்களில் பன்மையிலும் அழைப்பதையும் அவள் குறித்துக் கொண்டாள்.
“ஹீரோ, நானும் உங்களோட வரட்டுமா?” அவள் அனுமதி கேட்டு அவன் முகம் பார்க்க, அவன் சிரித்தபடி சம்மதித்தான். இருவரும், அங்கு செல்ல, அவர்கள் வந்த குருஸ் முன்னே படப்பிடிப்பு குழு இருந்தது.
எண்ணிலடங்கா தொழிலாளிகள். மீராவுக்கு சினிமா துறை பற்றி ஓரளவுக்கு தெரியும். இருந்தாலும், இத்தனை மனிதர்கள், அவர்கள் உழைப்பு என்பதை அருகில் நின்று பார்த்ததும், அவளுள் ஒரு சிலிர்ப்பு.
“சார்…” அவன் அருகே ஒரு பெண் ஓடி வந்தாள். கல்லூரி படிக்கும் வயது இருக்கும். “எப்படி படிக்குற மைதிலி?” அவன் கேட்க, “சார் ரொம்ப நல்லா படிக்கிறேன். ரொம்ப நன்றி சார்” என்றாள் கை எடுத்து கும்பிட்டபடி.
“என்னை பார்க்குற நேரமெல்லாம் நன்றி சொல்லுவியா?”முகிலன் கேள்வியாக வினவ, “அப்படி சொன்னாலும், அது போதாதே” மைதிலி வெகுளியாக சிரிக்க, மீரா இவர்களை பார்த்தபடி நின்றாள்.
“இவங்க தான் இந்த படத்தில் ஹீரோயினா சார்?” மைதிலி, மீராவை பார்த்து வினவ, “அய்யய்யயோ” பதறினாள் மீரா. முகிலன் சிரித்து கொண்டே, மீராவை பார்த்து கண்களை உயர்த்தினான்.
‘இந்த பாவனை முகிலனிடம் புதிது’ அவள் சற்று நேரம் தன்னை மறந்து அவனைப் பார்த்தாள். “நீ சொன்னால், இவங்களை ஹீரோயின் ஆக்கிடுவோம்” முகிலன் கேலி போல் கூற, “ரொம்ப அழகா மாடெர்னா இருக்காங்க ஹீரோயின் மாதிரி” மைதிலி கூற, “நான் ஹீரோயின்க்கு செட் ஆக மாட்டேன். ஏதாவது வில்லி ரோல் இருந்தா குடுங்க. சரியா இருக்கும். ஹீரோயின்னா லவ் பண்ணனும், டான்ஸ் ஆடணும், அழணும். அதெல்லாம் எனக்கு செட் ஆகாது. வில்லின்னா எல்லாரையும் போட்டு தள்ளிட்டு போய்கிட்டே இருக்கலாம்” மீரா புன்னகைக்க, இப்பொழுது மற்றவர்கள் இருவரும் சிரித்தனர்.
“ஓகே சார், அம்மா தேடுவாங்க. நன்றி சார்” மைதிலி செல்ல எத்தனிக்க, “ஃபீஸ் எதுக்கும் பணம் வேணுமின்னா, நீயே எனக்கு மெயில் அனுப்பு” முகிலன் கூற, “சார், அதெல்லாம் வேண்டாம். நீங்க கட்டிடீங்க. அப்புறம் அது தான் அப்பாவுக்கு ஷூட்டிங்கில் வேலையும் இருக்கே. அதனால், கவலையே இல்லை.” மைதிலி சிட்டாக பறந்துவிட்டாள்.
முகிலன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷூட்டிங் வேலைகளை மட்டுமில்லை, பல மனிதர்களையும் சந்தித்து கொண்டிருந்தான். மைதிலி மட்டுமில்லை, பலரும் அவனுக்கு நன்றி தெரிவித்து கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது ஒருவன் அவர்கள் முன்னே வந்து நின்றான். “சார்” அவன் அழைக்க, “வாங்க… வாங்க… நான் தான் உங்களை வர சொன்னேன். நானும் மீராவும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கிற மாதிரி ஒரு ஃபோட்டோ” அவன் கூற, ‘இது எதற்கு?’ என்ற கேள்வி எழுந்தாலும், மீரா எதுவும் கேட்கவில்லை. தனியே கேட்டுக்கொள்ளலாம் என்று மெளனமாக நின்று கொண்டாள்.
வந்தவரும் சில படங்களை எடுத்தார். இவர்கள் மிக நெருக்கமாகவும் இல்லை. அதே நேரத்தில், இவர்கள் இணைந்து பணி புரிபவர்கள் போல் சில புகைப்படங்கள். “சார் இது ஓகேவா? இதுல எதை அனுப்ப சொல்றீங்களோ அதை அனுப்பிடறேன். இல்லை வேற எடுக்கணுமினாலும் எடுக்கறேன்” அவர் புகைப்படங்களை நீட்ட, அவன் அதை ஒரு நொடி பார்வையிட்டான்.
“எனக்கு எல்லாம் ஓகேதான். மேடம் கிட்ட கேட்டுக்கோங்க.” அவன் மீராவிடம் திரும்பினான். “மீரா, நாளைக்கு நியூஸ்ல வரும். உனக்கு எதை கொடுத்தா ஓகேன்னு பார்த்து அனுப்பு” அவன் கூற, அவள் அந்த புகைப்படங்களை பார்வையிட்டாள்.
பெரிதாக அவள் தன் அழகின் மீது அக்கறை கொண்டதில்லை. இருந்தாலும், அவன் அருகே நிற்கும் பொழுது தன் உடையின் தேர்வு சற்று குறைவோ என்ற எண்ணம் அவளிடம் தோன்றியது. ‘அவன் ஜீன்ஸ் மற்றும் கேஷுவல் ஷர்ட் தான் அணித்திருக்கிறான்.’ அவள் பார்வை அவனை அந்த புகைப்படத்தில் தொட்டு மீண்டது. அவள் கண்களில் கொஞ்சம் ரசனை எட்டி பார்த்ததோ.
“மீரா, வேற எடுக்கணுமா?” நிமிடங்கள் நீள அவன் அவள் அருகே வந்து நின்றான். “இல்லை… இல்லை… வேண்டாம்” அவள் வேகமாக மறுப்பு தெரிவித்து, ஒரு புகைப்படத்தை தேர்வு செய்தாள்.
அதன் பின் அவன் அங்கு நடந்து கொண்டிருந்த வேலைகளைப் பார்வையிட்டான். அவளுக்கு அனைத்தையும் விளக்கியபடி, இதற்கிடையில் அந்த தீவில் தொடர்ந்து தங்கி இருப்பவர்கள் அவனுக்கு பல காரணங்களுக்கு நன்றி கூற, அவள் கணக்கீட்டில் அவன் மதிப்பு எங்கோ ஏறிக் கொண்டிருந்தது.
இதற்கிடையில் முகிலன் எங்கோ செல்ல, “ஹீரோ…” என்று அவள் அப்பொழுது அழைத்து செல்ல, அவனுடைய மேலாளர் அவளை நிறுத்தினார். “ஹீரோன்னு கூப்பிட்டா சாருக்கு பிடிக்காது” அவர் தோரணையாக கூறினார்.
“எனக்கு ஹீரோன்னு கூப்பிடத்தான் பிடிச்சிருக்கு” அவள் அவரிடம் உறுதியாக கூறிவிட்டு சென்றாள். அவள் செல்லும் திசையை அவர் பார்த்துக் கொண்டு நின்றார். ‘இது எங்க போய், முடியப்போகுதோ?’ என்று அவர் தோள்களை குலுக்கி கொண்டார்.
இடையே அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. முகிலன் அனைவருக்கும் உணவு கிடைத்துவிட்டதா என்று பார்த்துக் கொண்டிருந்தான். அனைவரும், உணவை முடித்துக்கொண்டு அவர்கள் வேலையில் ஈடுபட, மீரா அவன் வருகைக்காக காத்திருந்தாள்.
அவள் சாப்பிடாமல் காத்திருப்பதை கண்டு, அவன் அவள் அருகே சென்று “சாப்பிடலாமா?” என்று வினவினான். அவள் உணவை எடுத்துக்கொண்டு வந்து அமர, தன் கவனத்தை உணவில் வைத்தபடி, “என்னால், உன்னை தினமும் கவனிக்க முடியாது. நீ எனக்காக காத்திருக்க வேண்டாம்.” என்று சிடுசிடுத்தான். அவள் இப்பொழுது சிரித்தாள்.
“என்ன சிரிப்பு? நீயும் எல்லாரும் மாதிரி தான். எல்லாரும் சாப்பிடுறாங்களானு நான் பார்வையிடுவேன். ஏன்னா, இது என் ப்ரொடக்ஷன். என் படம். அதுக்காக ஒவ்வொருத்தரையும் வெத்தலை பாக்கு வச்சி அழைக்க முடியாது.” அவன் அழுத்தமாக கூற, “எல்லாரையும் கூப்பிட முடியாது. என்னையுமா?” அவள் தலை சரித்து கேட்க, அவன் ஒரு நொடி தடுமாறித்தான் போனான்.
“என்ன சொல்ற?” அவன் புருவங்கள் சுருங்க, “நான் உங்களுக்கு ஸ்பெஷல்ன்னு சொல்றேன்” அவள் உறுதியாக கூற, ‘தனக்கே தெரியாத ஒன்றை இவள் என்ன சொல்கிறாள்? அதுவும் இத்தனை அழுத்தமாக’ அவனுள் சினம் கனன்றது. “என்ன உளறுற?” அவன் கோபமாக கேட்க, “எல்லாருக்கும் காட்டேஜ். எனக்கு மட்டும் எதுக்கு உங்க பங்களாவில் இடம்?” அவள் கேட்க, அவன் இப்பொழுது ஆசுவாசமாக சிரித்தான்.
“என்ன சிரிச்சி மழுப்பறீங்க?” அவள் கேட்க, “என் வேலை காலையிலையே ஆரம்பிச்சுரும். என் காலை வேலை விவரம் உனக்கு வேணுமா வேண்டாமா?” அவன் புருவம் உயர்த்த, “இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?” அவளும் புருவம் உயர்த்தினாள்.
“நம்பினால் தான் சாப்பாடு” அவன் கேலி போல கூற, “அப்ப கண்டிப்பா நம்புறேன் ஹீரோ” அவளும் கேலி போலவே கூறினாள்.’அவள் குழப்பம் தீரவில்லை’ என்று அவனுக்கும் தெரியாமல் இல்லை.
“எதுக்கு போட்டோ?” அவள் அடுத்த கேள்வியை தொடுக்க, “நம்மளை போட்டோ எடுத்து போட்டு தேவை இல்லாமல், ஏதாவது நியூஸ் போடுவாங்க. அதுக்கு நாமளே ஒரு போட்டோ போட்டுட்டா யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது.” அவன் கூற, அவன் முன் யோசனையை மனதில் மெச்சிக்கொண்டு, அவள் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
“நிறைய பேருக்கு உதவி பண்ணுவீங்க போல?” அவள் கேட்க, அவன் சிரித்துக்கொண்டான். பதில் எதுவும் பேசவில்லை. “ஆனால், எல்லாம் நியூஸில் வாறதில்லையே?” அவள் கேட்க, “எல்லாம் வெளிய சொல்றதில்லை.” அவன் மறுப்பாக தலையசைத்தான்.
“நான் செய்றதெல்லாம் ரொம்ப கொஞ்சம். ஏதோ என்னால் முடிந்தளவு” அவன் கூற, “உங்களால முடிந்த அளவா இருக்கலாம். ஆனால், கொஞ்சமுன்னு சொல்ல முடியாது. நான் உங்களை பத்தி இதெல்லாம் நியூஸில் எழுதட்டுமா ஹீரோ?” அவள் கண்களில் ஆர்வம் மின்ன கேட்க, “வேண்டாம் மீரா. என் படத்திற்கான விளம்பரம் வரலாம். ஆனால், என்னை பத்தி வேண்டாம். நான் இதெல்லாம் என் மனதிருப்திக்கு பண்றேன்.” அவன் அழுத்தமாக கூற, “விளம்பரத்தில் இரு வகையா?” கேள்வி கேட்டுக்கொண்டே அவள் தலையசைத்தாள்.
அதன் பின் அவன் சிலரோடு சேர்ந்து வேலை பார்க்க, அவள் அங்கிருப்பவர்களை பார்க்க ஆரம்பித்தாள். எங்கு பார்த்தாலும், அவனே நிறைந்து நின்றான். அவன் கம்பீரம். ‘ஹன்சம்’ அவள் மனம் அவனை மெச்சி கொண்டது.
“கதாநாயகன் அல்லவா?” அவள் இதழ்கள் முணுமுணுத்தது. அவன் அங்குள்ளவர்கள் மேல் கட்டிய அக்கறை; அவன் நடந்து கொண்ட விதம்; “ஹீரோ… ஹீரோ தான்” அவள் இதழ்கள் முணுமுணுத்து கொண்டது. அவளின் தொடர் பார்வை அவனை தாக்கியதோ என்னவோ, அவன் அவள் பக்கம் திரும்பினான். அவள் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் புருவங்கள் கேள்வியாக ஏறி இறங்கியது. அவள் மறுப்பாக தலையசைத்தாள். ‘இது என்ன சங்கேத மொழி?’ அவள் மனம் கேள்வி எழுப்ப, அவள் முகத்தில் புன்னகை வந்தமர்ந்து. அவளுக்கு அதை என்னவென்று சொல்வது என்று காரணம் தெரியவில்லை.
‘வந்த வேலையை பார்ப்போம். நான் என்ன காலேஜ் பொண்ணா சைட் அடிக்க’ தலையில் தட்டிக் கொண்டு புன்னகையோடு வேறுபக்கம் அவள் திரும்பி கொள்ள, முகிலன் அவளை பார்த்துக் கொண்டே நின்றான். அவனால், அவளை கணிக்க முடியவில்லை. படபடவென்று வரும் மீரா, நட்பை கூட யோசிக்கும் மீரா இவள் இல்லை. அவன் சிந்தை ஓடினாலும், அவன் மனம் மூளையும் ஒரு சேர அவனை நிதானிக்க சொல்ல அவன் தன் சிந்தனையின் ஓட்டத்தை சட்டென்று நிறுத்தினான். அவள் அவனைப் பற்றி யோசிக்க, அவன் அவளைப் பற்றி சிந்திக்க, “டமால்…” என்று சத்தம்.
அனைவரும் அங்கு ஓட, “அப்பா….” என்று கதறிக் கொண்டு ஓடினாள் மைதிலி. சட்டென்று மைதிலியின் தந்தையை தூக்கி கொண்டு ஓடினார்கள். விரைவாக ஆம்புலன்ஸ் வர, கூட்டமே மருத்துவமனை முன் கூடியது.
அவருக்கு சிகிச்சை நடக்க, முகிலன் மருத்துவமனை வாசலில் பதட்டமாக நின்றான். “சார்” அவன் மேலாளர் அருகே வந்து அழைத்தார்.
“எல்லாமே தப்பா இருக்கு. ஆரம்பமே தடங்கல். இப்படி நம்ம செட்டில் ஒருதடவை கூட நடந்ததில்லை. விசாரித்ததில், எல்லாமே சரியா இருந்த இடத்தில், எப்படி தொங்கிட்டு இருந்த கயிறு அறுந்து விழுமுன்னு யாருக்கும் புரியலை” அவர் கூற, “ம்…” இறுகி நின்றான் முகிலன்.
மீரா ஒன்றும் புரியாமல் மருத்துவமனையில் நின்று கொண்டிருந்தாள். ‘படம் பார்க்குறோம். அதில் இவ்வளவு கஷ்டமா?’ கண்ணீரோடு அங்கு நின்று கொண்டிருந்தவர்களை பரிதவிப்போடு பார்த்தாள்.
முகிலனைப் பார்த்தாள். அவன் மிகவும் பதட்டமாக நின்று கொண்டிருந்தான். அவசர பிரிவில் அனுமதிக்க பட்டிருந்தவருக்கு இருபத்தி நான்கு மணிநேரம் கெடு விதிக்க பட்டிருந்தது. ‘ஏதாவது ஒன்று அசம்பாவிதமாக நடந்து விடுமோ?’ என்பதை அவனால் மனிதாபிமான அடிப்படையிலும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அதே நேரம், தொழில் ரீதியாகவும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அவன் உடைந்திருந்தான். ‘போலீஸ் கேஸ்ன்னு…’ அவன் சிந்தனை ஓட, அவன் சிந்தனையை கலைத்தது, அந்த அலைபேசி ஒலி.
“என்ன முகிலன் ரொம்ப பதட்டம் இருக்கியா?” பெருங்குரலில் சிரித்தார் ஜெயசாரதி. “முகிலன், நீ வேற அறியாப்பிள்ளையா விபத்துனு நினைச்சிற கூடாது பாரு. அதுக்கு தான் ஃபோன் பண்ணேன். நான் தான் காரணும்முன்னு சொல்ல.” முகிலன் எதுவும் பேசவில்லை. “போலீஸ் கேஸ்ன்னு யோசிச்சிட்டு அதிர்ச்சில இருக்கியா? தம்பி நீ நடிகன் படத்துல மட்டும் தான். நானெல்லாம், தினம் தினம் பல கதை திரைக்கதை எழுதறவன். இனி உன் செட்டில் அடிக்கடி விபத்து நடக்கும்” அவர் கூற, அவனிடம் மௌனம் மட்டுமே.
“வச்சிடட்டுமா?” அவர் கேட்க, அவன் அலைபேசி பேச்சைத் துண்டித்தான்.
அவர் மீண்டும் அழைத்தார். “அவசரம்… அவசரம்… இளம் இரத்தம் துடிக்குது. இவ்வளவு வேகம் கூடாது தம்பி. நல்லதில்லை. இப்ப போன உசுரு போனாதாவே இருக்கட்டும்.” அவர் கூற, அவன் பற்களை நறநறத்தான். “உயிர் போயிடுச்சா? இழுத்துக்கிட்டு கிடக்குதா” அவர் கேட்க, அவன் கைமுஷ்டி இறுகியது. “சரி, அதை விடு. அதைப்பத்தி நமக்கென. இப்ப உன் கேஸை நான் சரி பண்றேன். இனி பிரச்சனை வராது. எல்லாம் நான் பார்த்துக்கறேன். ஆனால், ஒரு கண்டிஷன்” அவர் நிறுத்த,
“என்ன?” என்று கேட்டான் அவன். “இன்னைக்கு நீ என் பொண்ணோட எடுத்த போட்டோ நாளைக்கு வரக்கூடாது. அதுக்கு பதிலா, என் பொண்ணு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வரணும்.” அவர் கூற, முகிலனின் முகம் சுருங்கியது.
“மீரா அவளை ஒரு சிங்ககுட்டின்னு நினைச்சுகிட்டு இருக்கா. அவ ஒரு பிள்ளைபூச்சி. என்ன அவ அம்மாவை தேடி வந்திருக்காளா? முட்டாள்” ஜெயசாரதி பற்களை நறநறத்தார். “அந்த முட்டாளுக்கு புரியலை. அவ என் சிறையில் இருக்கானு. அந்த முட்டாளுக்கு சப்போர்ட் பண்ற எவனா இருந்தாலும் அழிஞ்சி போயிடுவான். முகிலன், நான் உன் வழியில் குறுக்க வர விரும்பலை. நீ என் வழியில் குறுக்க வராத.” அவர் பேச அவன் கண்கள் மீராவின் மீது கரிசனத்தோடு படிந்தது. அவளின், ‘அம்மா…’ என்ற அழைப்பும்!
“மீரா இந்த கவர் ஸ்டோரி பண்ண கூடாது. அவ அங்க இருக்க கூடாது. இதை நான் பல வழியில் சொன்னேன். மரமண்டை உங்க இரண்டு பேருக்கும் புரியலை. என் வழியில் சொன்னால் தான் உனக்கு புரியும். காத்திருந்தேன், உன்னை அடிக்க. உன் இடத்தில், உன் தொழிலில் உன்னை அடிக்க. மீராவை அனுப்பிட்டு நீ வேலையைப்பாரு. இல்லைனா, இனி உனக்கு தொடர்ந்து மரண அடி தான்.” இப்பொழுது அவர் அலைபேசி பேச்சை துண்டித்தார்.
‘மீராவுக்கு தான் பிரச்சனை வருமுன்னு அவளை என் பாதுகாப்பில் வச்சேன். இப்படி நான் யோசிக்காதது எத்தனை முட்டாள்தனம். இப்ப என்ன செய்யறது?’ முகிலனின் மூளையை,’அடுத்து என்ன?’ என்ற கேள்வியே குடைந்தது.
தித்திப்புகள் தொடரும்…