ராகம் 12

ராகம் 12

ராகம் 12

இதுவரை அங்கு நிரம்பியிருந்த ஆரவாரம் குறைந்திருந்தது. வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் விடை பெற்று சென்றிருந்தனர். எரிந்து கொண்டிருந்த விளக்குகள் பாதி அணைந்திருந்தது. இப்போது அங்கு எஞ்சி இருந்தது குடும்ப நபர்கள் மட்டுமே. இதோ அவர்களும் விழா நல்லபடி முடிந்ததை நினைத்து மகிழ்ச்சியோடு, தங்கள் இல்லம் கிளம்பி கொண்டிருக்கிறார்கள்.

அனைவரும் மகிழ்ச்சியோடு கிளம்ப, நண்பர்களின் உள்ளம் மட்டும் முதல் பிரிவை நினைத்து வேதனையில் துவண்டது.

என்னது முதல் பிரிவா?

ஆம்! ரிஷிவர்மா, அம்முவை சந்தித்த பிறகு வரும் முதல் பிரிவு‌. அவளது வெற்றி, தோல்வி அனைத்திலும் அவளுடன் துணை இருந்தவன்; அவள் வேதனையில் துவளும் போது ஆதரவாக தோள் கொடுத்தவன்; அவளுக்கு ஆபத்து வரும்போது, காவலனாக அவளை பாதுகாத்தவன்; வெளியூர் படப்பிடிப்பின் போதும், அவளை தன்னுடன் அழைத்துச் சென்றவன்; திருமணம் முடிந்த பிறகும், கடந்த நான்கு நாட்களாக அவள் அருகே இருந்தவன்; இப்போது முதல்முறை பிரிய போகிறான். 

காலை எழுந்தவுடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த பிறகுதான், அந்த நாள் அவர்களுக்கு தொடங்கும். ஆனால் இனி அப்படி இல்லை. அவரவர் தங்கள் வாழ்க்கை பயணத்தை நோக்கி செல்ல வேண்டும். அதை நினைக்கும் போதே மனம் மிகவும் வலித்தது.

பிரிவு இத்தனை வலியை தருமா? இரு உள்ளமும் துவண்டு போனது. எப்போதும் போல் புன்னகை எனும் பொய் முகமூடியை அணிந்து, தங்களது வேதனையை யாருக்கும் தெரியாமல் மறைத்து கொண்டார்கள்.

என்னதான் அவள் வேதனையை புன்னகையின் பின் மறைக்க முயன்றாலும், அவள் மனதில் உள்ள தவிப்பை புரியாதவனா அவளது மனம் கவர்ந்த கள்வன்? மர்மமாக புன்னகைத்துக் கொண்டான்.

பிந்து, ருத்ராவிடம் சென்றவள், “மாமா, அம்மு எப்பவும் ஏதாவது சேட்டை செஞ்சிக்கிட்டே இருப்பா. அவ ஒரு குழந்தை மாதிரி. அவளை தப்பா நினைச்சு, திட்டிடாதீங்க.” என்றவளின், கண்களில் நீரின் பளபளப்பு.

கைக்கட்டி அவளையே பார்த்தானே ஒழிய வாயை திறக்கவில்லை. ‘என்ன எதுவும் சொல்ல மாட்டீங்கராங்க?’ என நினைத்த, அந்த பூவையின் பூமனம் வாடியது, அதன் பிரதிபலிப்பு முகத்திலும். 

அடுத்து ரிஷி, ருத்ராவின் கரத்தை பற்றி கொண்டவன், “மிரு அவள் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. இனி நீ தான் அவளை கண்கலங்காம பார்த்துக்கணும். உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, இருந்தாலும் மனசு கேட்காமல் சொல்றேன்.” என்றவனின் கண்களும் நீரில் நிறைந்தது.

அவர்கள் இருவரையும் ஆழ்ந்து பார்த்த ருத்ரா, பதிலேதும் சொல்லாமல் திரும்பி தன் பி ஏ மனோகரனை பார்த்தான். அவன் கட்டை விரலை காட்டி தம்ஸ் அப் செய்தான். தேவையான தகவல் கிடைத்து விட்டது. திருப்தியாக புன்னகைத்தவனின் பார்வை, தவிப்புடன் நின்ற தன்னவளிடம் சென்றது. 

சரியாக அந்த நேரம், அவர்கள் அருகில் வந்து நின்றது அவர்கள் வீட்டு கார். அதிலிருந்து இறங்கிய டிரைவரிடம் சாவியை கேட்டு கையை நீட்டினான் ருத்ரேஸ்வரன். கேள்வியாக பார்த்தவரிடம், “நான் ஓட்டுறேன்.”

அதைக் கேட்டு திகைத்துப் போன டிரைவர், ‘இவனிடம் எப்படி மறுப்பது?’ என புரியாமல் ஈஸ்வரமூர்த்தியை காண, அவரும் அதே தயக்கத்துடன் நின்றார்.

அவர்களது தயக்கத்தை உணர்ந்த தாத்தா, “இன்னைக்கு ஒரு நாள் டிரைவர் காரை ஓட்டட்டும் தம்பி.” என ஈஸ்வரமூர்த்தியும் டிரைவரும் சொல்லத் தயங்கிய மறுப்பை கூறினார். அவர் சொல்வதை காதிலேயே வாங்கிக் கொள்ளாத ருத்ரா, டிரைவரை ஒரு பார்வை பார்த்தான். அதில் பயந்து போனவர், பதில் ஏதும் பேசாமல், கைகள் நடுங்க சாவியை அவன் கரத்தில் ஒப்படைத்தார்.

மிதப்பான பார்வையுடன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான் ருத்ரேஸ்வரன். இனி அவனது முடிவை யாராலும் மாற்ற முடியாது, என தெரிந்தவர்கள் சலிப்பாக தலையசைத்து, அடுத்த காருக்கு சென்றார்கள்.

ஓட்டுனர் இருக்கையிலிருந்த ருத்ரா, “உங்களை நானே டிராப் பண்ணுறேன். ரெண்டு பேரும் ஏறுங்க.” என்றான் ரிஷி, பிந்துவை பார்த்து.

“இல்லை ருத்ரா ரொம்ப லேட்டாயிடுச்சு. நாங்க எங்க கார்ல கிளம்புறோம்.” மறுப்பு வந்தது ரிஷியிடம்.

“பரவால்ல ரிஷி இன்னைக்கு நான் கூட்டிட்டு போறேன்.” என்றான் தீர்க்கமாக.

சரி என தலையசைத்த ரிஷி, முன்னிருக்கையில் ஏற வர, அவனை தடுத்த ருத்ரா, “என் அம்மு இருக்கும்போது, அவளுக்கு மட்டுமே என்னருகில் உட்கார அனுமதி உண்டு.” என கராராக கூறினான்.

ரிஷிவர்மாவும் மிகுந்த மகிழ்ச்சியோடு, அம்முவை அவனருகில் அமர்த்தி விட்டு, பிருந்தாவுடன் பின் இருக்கையில் ஏறினான்.

சிடி பிளேயரில் கசிந்த, இளையராஜாவின் மனதை மயக்கும் மெல்லிசையுடன் அவர்களின் பயணம் தொடங்கியது. இசையின் இனிமையிலும், காரின் தாலாட்டிலும், உடல் அசதியிலும், ரிஷியும் பிந்துவும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து துயில் கொண்டனர்.

★★★

கார், ரிஷியின் வீடு இருக்கும் வழியில் செல்லாமல், தங்கள் வீடு இருக்கும் வழியிலும் செல்லாமல், வேறு பாதையில் பயணிப்பதை கவனித்த அம்மு, அவனிடம் எப்படி கேட்பது என தயங்கி, (கிளம்பும்போது நடந்த நிகழ்வை வைத்து அவன் கோபமாக இருக்கிறான் என நினைத்து) அவன் முகத்தை பார்ப்பதும், பிறகு ரோட்டை பார்ப்பதுமாக அல்லாடி கொண்டிருந்தாள். அவளது தவிப்பை உணர்ந்தவன், அடுத்த முறை அவள் தன் முகம் காணும் போது, ‘என்ன?’ என புருவம் உயர்த்தினான்.

அவன் தன்னை பார்த்ததை கண்டு மனம் திடுக்கிட்டவள், ஒன்றுமில்லை என வேகமாக தலையசைத்து முகத்தை திருப்பிக் கொண்டாள். கள்ளப் புன்னகையுடன் பயணத்தை தொடர்ந்தான் அவளது கள்வன். 

மீண்டும் அவள் பார்வை அவனைத் தொட, “என்ன கேட்கணுமோ கேட்டுடு. இந்த தலைக்குள்ள அப்படி என்ன வண்டு குடையுது?” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில். பின்னால் இருப்பவர்களின் தூக்கம் கலைய கூடாது என்ற நல்ல எண்ணத்தில்.

இனி பேசாமல் இருக்க முடியாது என்பதை உணர்ந்து, “இல்ல… அது.. வந்து.. இல்ல..” என திணறியவள், “ச்ச, நம்ம இப்ப எங்க போறோம்?” என ஒரு வழியாக கேட்டு முடித்தாள். ஆரம்பிக்கும் போது இருந்த தயக்கம், முடிக்கும் போது காணாமல் போயிருந்தது.

“அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போற?” சீண்டினான்.

“ப்ச்! என்னமோ பண்றேன். உனக்கு என்ன? இப்ப நம்ம எங்க போறோம்? அதை சொல்லு.” பயம் முற்றிலுமாக விலகி வார்த்தை சரளமாக வந்தது.

அவள் பேச்சை ரசித்தவன், “ஏன் மகாராணி அதை சொன்னா தான் என் கூட வருவீங்களோ?” எடக்காக கேட்டான்.

“உன்கிட்ட போய் கேட்டேன் பார். என்னை சொல்லணும்.” என அவன் காதில் விழுமாறு திட்டியவள், ஜன்னல் புறமாக திரும்பி, “சரியான திமிர் புடிச்ச கட்டவண்டி.” என முணுமுணுத்தாள்.

அவள் முணுமுணுத்தது நன்றாகவே கேட்டது. ஆனால் அது கேட்காதது போல், “ஏதாவது சொன்னையா நீலாம்பரி? எனக்கு சரியா கேட்கல.” என காதை குடைந்தான்.

‘திமிர்! உடம்பு முழுக்க திமிர்.’ என வாய்க்குள் முனங்கியவள், ஈஈஈ என பல்லை காட்டி, “நான் ஒன்னுமே சொல்லல கட்டவண்டி. நீ வாயை மூடிட்டு, ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டு.” 

“ஆர் யூ சுயர்? நம்ம இப்ப எங்க போறோம்ன்னு உனக்கு தெரிய வேண்டாமா?” என்றான் நமட்டு சிரிப்புடன்.

அதை தெரிந்து கொள்ளும் ஆசை கண்களில் மின்னியது. தன் ஆசையை மறைத்துக் கொண்டு, கெத்தாக, “நீ ஒன்னும் எனக்கு சொல்லத் தேவையில்லை. போ.” என முகம் திருப்பிக் கொண்டாள்.

“வேண்டாம்னா போ. எனக்கு என்ன?” அவனும் கண்டுகொள்ளாத மாதிரி விட்டு விட்டான். அவன் அலட்சியத்தை கண்டு பெண்ணின் முகம் கடுகடுத்தது. திரும்பி அவனை முறைத்தவள், வெடுக்கென முகத்தை திருப்பி, மீண்டும் சாலையை வெறித்தாள்.

அவளது சிறுபிள்ளை கோபத்தை ஆசையாக ரசித்தான், அவளை கட்டி மேய்க்க போகும் நீலாம்பரியின் கட்டவண்டி.

கார் வழி மாறி செல்வதை  கவனித்தாலும், அந்த சிம்ம சொப்பனத்திடம் யார் கேட்பது என்ற பயத்தில், பெரியவர்கள், கார்த்திக் அனைவரும் பயணம் செய்த கார், அவர்களை பின் தொடர்ந்தது. உறக்கத்திலிருந்த ரிஷிக்கு அது தெரியவில்லை. பிந்துவுக்கு இந்த இடம் புதிது என்பதால், முழித்திருந்தாலும் அவளுக்கு எதுவும் தெரியப் போவதில்லை.

★★★

ருத்ராவின் கார் ஒரு கடற்கரையோர வீட்டின் முன்பு நின்றது. அதை வீடு என்று சொல்வதை விட, ஒரு குட்டி பங்களா என்று சொல்லலாம். பெரிதும் அல்லாத சிறிதும் அல்லாத, அளவான அழகான பங்களா. மனம் மயக்கும் தோட்டத்துடன் கடற்கரையோரமாக இருந்தது.

அவர்களது கார் நிற்கவும், ரிஷியும் பிந்துவும் உறக்கம் கலைந்து இறங்கினர். புது இடத்தை கண்ட ரிஷி, ஒன்றும் புரியாமல் கேள்வியாக மிருவின் முகம் பார்த்தான். அவள் தனக்கு ஒன்றும் தெரியாது என தலையாட்டி கணவனை கண்காட்டினாள்.

ரிஷி, ருத்ராவை கேட்கும் முன், அங்கு காத்திருந்த கிரிதரன் அவர்களை நோக்கி வந்தான். அவனைக் கண்டதும் ரிஷி, அம்முவின் கண்கள் கேள்வியுடன் அவனில் பதிந்தது. ஆனால் அவன் நேரே ருத்ராவிடம் சென்று அவன் கரத்தில் எதையோ திணித்தான்.

சிறு சிரிப்புடன் அதை வாங்கிக் கொண்ட ருத்ரா, அந்த சாவியை அம்முவிடம் நீட்டினான். கேள்வியாக பார்த்தவளின் கரத்தில் அதை வைத்து, “உன்னோட ப்ரெண்ட் அண்ட் உன்னோட சிஸ்டருக்கு நம்ம கொடுக்கிற திருமண பரிசு.” என அந்த பங்களாவை காட்டினான். 

அதைக் கேட்டு முகம் மலர்ந்தவளுக்கு, தன்னவன் மேலிருந்த பொய் கோபம், சுத்தமாக காணாமல் போனது. ரிஷி, பிந்துவிடம் திரும்பி, ருத்ராவுடன் இணைந்து அந்த சாவியை கொடுத்தாள். அதை வாங்க தயங்கிய ரிஷி, “இது எதுக்கு ருத்ரா வேண்டாம்.” என மறுத்தான்.

“எத்தனை பேர் கிஃப்ட் கொடுத்தாங்க. நீ வேண்டாம்ன்னு சொன்னியா? என்கிட்ட மட்டும் ஏன் வேண்டாம்குற?” அவன் சாதாரணமாக சொன்னதே கோபமாக சொன்னது போல் இருந்தது.

அதைக் கேட்டு ரிஷியின் உள்ளம் பதறினாலும், “அதெல்லாம் சின்ன சின்ன கிஃப்ட். ஆனால் இது அப்படி இல்லை.” திடமாக மறுத்தான்.

“நீ என் அம்முவை, எனக்கு பத்திரமா திருப்பிக் கொடுத்திருக்க. எனக்கும், அவளுக்கும் நீ செஞ்சதுக்கு முன், இது எல்லாம் ஒன்னுமே இல்லை.”

இப்போது ரிஷி வெளிப்படையாக பதறினான். “அய்யய்யோ! அதெல்லாம் நான் எதுவும் எதிர்பார்த்து செய்யல. சொல்லப்போனால் வெறுமையா இருந்த என் லைஃபை கலர்ஃபுல்லா மாத்துனது மிருதான். அவளே எனக்கு கடவுள் கொடுத்த பெரிய கிஃப்ட். நான் தான் அவளுக்கு கிஃப்ட் கொடுக்கணும். அவ இல்ல, அதாவது நீங்க இல்ல.” 

“நீ ரொம்ப தப்பு கணக்கு போட்டுட்ட ரிஷி. இது ஒன்னும் உனக்கான கிஃப்ட் இல்லை. இது என் அம்முவுக்கானது. அதைவிட கரெக்டா சொல்லனும்னா எனக்கானது.” என அம்முவின் தோளில் கையிட்டு அணைத்துக் கொண்டான்.

‘ரிஷி, பிந்துவோட திருமண பரிசுன்னு சொன்னான். அடுத்து அம்முவுக்கானதுன்னு சொன்னான். இப்ப தனக்கானதுன்னு சொல்றான். உண்மையில் எது கரெக்ட்?’ என புரியாமல் அனைவரும் குழம்பினர்.

“இன்னும் கொஞ்ச நேரத்தில் புரியும்.” என அனைவருக்கும் பூடகமாக சொன்னவன், பிந்துவிடம் திரும்பி, “நீ சாவியை வாங்கிட்டு போய் கதவை திற மா.” கட்டளையிட்டானோ?

சாவியை வாங்க தயங்கியவள் ரிஷிவர்மாவின் முகம் கண்டாள். அவனும் தயங்கினான். ஆனால் அம்முவின் முகத்திலிருந்த ஆர்வம் அவனது தயக்கத்தை உடைத்து எறிந்தது. பிந்துவிடம் சம்மதமாக தலையசைத்தான்.

அம்முவை கட்டியணைத்த பிந்து, நன்றி சொல்லி சாவியை பெற்று கதவை திறந்தாள். உள்ளே செல்லும் முன் அவர்களை தடுத்து, கிரிதரன் வாங்கி வைத்திருந்த பொருட்களில் ஆரத்தி கரைத்து, திருஷ்டி கழித்து உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

பெரிதாக லேமினிட் செய்யப்பட்டு, வரவேற்பு அறையில் மாட்டியிருந்த, பிந்து ரிஷியின்  திருமண புகைப்படம் அவர்களை வரவேற்றது. வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கச்சிதமாக இருந்தது.

ருத்ராவிடம் இதை எதிர்பார்க்காத அனைவரும் ஆனந்த அதிர்ச்சியடைந்தனர். இதில் அவனது சுயநலமும் அடங்கி இருப்பது பாவம் யாருக்கும் தெரியவில்லை.

பிந்துவை பால் காய்ச்ச சொல்லிவிட்டு, அம்முவை இழுத்துக் கொண்டு ஒரு அறைக்குள் நுழைந்தான் ருத்ரேஸ்வரன். அந்த அறை அம்முவின் புகைப்படங்களால் நிறைந்திருந்தது. 

“இது உன்னோட ரூம் நீலாம்பரி. பிடிச்சிருக்கா?” என்றான் ஆர்வமாக.

“ரொம்ப அழகா இருக்கு கட்டவண்டி.” என பட்டும்படாமலும் அவனை அணைத்துக் கொண்டவள், “தேங்க்ஸ்.” என்றாள்.

“இதுக்கே தேங்க்ஸ் சொன்னா எப்படி? இன்னும் இருக்கு.” என  மீண்டும் பூடகமாக பேசி அவளை குழப்பினான்.

அவள் விழிகள் கேள்வியாக அவன் கண்களை சந்தித்தது. மர்மமாக சிரித்தவன், அந்த அறையின் ஜன்னலை திறந்து வைத்துவிட்டு அறையிலிருந்து வெளியேறினான். குழம்பியிருந்த பெண்ணும் அவனைத் தொடர்ந்தாள். 

வெளியே வந்தவர்களின் கைகளில் பிந்து பாலை கொடுக்க, அதைக் குடித்து முடித்தவுடன், “ஓகே எல்லாரும் என் கூட வாங்க.” என்றவன்,  அவர்கள் வருகிறார்களா என கண்டு கொள்ளாமல், அம்முவை இழுத்துக் கொண்டு வெளியேறினான்.

காரில் ஏறாமல் காம்பௌண்ட் கேட்டை நோக்கி அவன் செல்லவும், அனைவரிடமும் ஆர்வம் தொற்றி கொண்டது. அந்த ஆர்வம் சிறிதும் குறையாமல் அவர்களை பின் தொடர்ந்தார்கள்.

அவன் சென்று நின்றது பக்கத்து பங்களாவின் வாசலில். கிட்டத்தட்ட இரண்டு பங்களாவும் ஒரே போல் இருந்தது. “என் நீலாம்பரிக்கு, இந்தக் கட்டவண்டியின் திருமண பரிசு.” என்றவன் ஒரு சாவியை அம்முவின் முன் நீட்டினான். பாவை அவள் திகைத்துப் போய் அவனை கண்டாள்.

ஒரு சின்ன சிரிப்புடன், “நீயும், உன் சிஸ்டரும் இத்தனை வருஷம் பிரிஞ்சு இருந்தது போதும். இனி எப்பவும் உன் பிரண்டு கூடவும், சிஸ்டர் கூடவும் இருக்கலாம். அது உன்னோட பிறந்த வீடு. இது புகுந்த வீடு.” 

அவன் சொன்னதை கேட்டு, பெண் சிலையாக சமைந்து போனாள். ‘இங்கு என்ன நடக்கிறது?’ என புரியாமல் தவித்தது அந்த பேதை உள்ளம். நடப்பது அனைத்தும் கனவா? நிஜமா? என சந்தேகம் தோன்றியது. கனவாக இருந்தால் கனவு கலைய கூடாது என்றும், நிஜமாக இருந்தால் இது காலம் முழுவதும் தொடர வேண்டும் என இறைவனிடம் அவசர வேண்டுதல் வைத்தது.

★★★

இரவு நேர இருளை போக்க அந்தத் தோட்டத்தில் உள்ள சோலார் விளக்குகள் அழகாக ஒளிர்ந்தது. (பகலில் உள்ள சூரிய கதிர்களை தன்னுள் நிரப்பி, ஒளி கதிர்களாக மாற்றி, சூரியன் மறையவும் விளக்கொளியாக இருளை போக்குவதே சோலார் விளக்குகள்.) தோட்ட மலர்களின் நறுமணம் நாசியை நிறைத்தது. கடல் அலைகளின் ஓசை செவியை நிறைத்தது. கடல் காற்று உடல் தீண்டி உள்ளம் சிலிர்த்தது. அங்கிருந்தவர்களின் கண்கள் கண்ணீரில் நிறைந்தது, மனம் சந்தோஷத்தில் தத்தளித்தது.

அம்மு, நடப்பது அனைத்தும் புரிந்தும், புரியாமலும் திகைத்து நின்றாள். அவளின் கண்களில் நீர் கோர்க்க, இதழ்களில் புன்னகை சேர்ந்தது. வார்த்தைகள் அற்ற மௌனம் அங்கு குடியேறியது.

கண்கள் மௌன மொழி பேசும் போது, வார்த்தைகளுக்கு அங்கு இடம் ஏது??? இல்லை வார்த்தைகள் அவசியம் தானா???

பெண்ணுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியில் பேச்சு வர மறுத்தது. இருக்கும் இடம் மறந்து, தன்னவனை இறுகத் தழுவி கொண்டவள், எண்ணற்ற முத்தங்களை அவனுக்கு பரிசாக வாரி வழங்கினாள். 

அவர்களின் நிலை உணர்ந்த பெரியவர்கள், சிறு சிரிப்புடன் தோட்டத்திற்குள் நுழைந்து விட்டனர். அப்படி கௌரவமாக ஒதுங்கி விட்டால் நம் இளம் ஜோடிகளுக்கு மதிப்பேது?

“ம்க்கும்” தொண்டையை செருமினாள் ரேகா. அது அம்முவின் செவியை தீண்டவில்லை. அவர்கள் நிலை மாறவில்லை.

அதில் கடுப்பான ரேகா, “போதும் போதும் உங்க ரொமான்ஸை முடிச்சுக்கோங்க. நாங்களும் இங்க இருக்கோம்.”

அதில் சுயநினைவடைந்த அம்முவின் முகம் வெட்கத்தில் சிவப்பு ரோஜாவாக சிவந்தது. சிவந்த முகத்தை ருத்ராவின் மார்பில் புதைத்து மறைத்தால். 

“அட பாரு ரேகா, நம்ம அம்முவுக்கு வெட்கமெல்லாம் வருது?” என ரேகாவுடன் இணைந்து, கிண்டலில் இறங்கினாள் பிந்து.

ரேகா தன் முழங்கையை பிந்துவின் தோளில் வைத்துக்கொண்டு, “அதான பிந்து, புள்ளைக்கு வெட்கத்தை பார். இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்தா. இது பீரே அடிக்கும் போல.”

“ச்ச ச்ச நம்ம அம்மு அப்படியெல்லாம் இல்ல. ரொம்ப நல்ல பொண்ணு.” என பிந்து அம்முவுக்கு பரிந்து பேசினாலா?

அதை ரேகா தனக்கு சாதகமாக மாற்றி, “ஆமா, ஆமா அவ ரொம்ப நல்ல பொண்ணு. பீரெல்லாம் குடிக்க மாட்டா, டைரக்டா சரக்கு தான் அடிப்பா.”

அவர்களை காண நாணம் தடுக்க, அம்மு மேலும் தன்னவனின் மார்பில் புதைந்தாள். தன்னுள் புதைந்த தன்னவளை விலக்கும் எண்ணம் சிறிதுமின்றி, ருத்ராவும் அவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டான். பெண்களின் கலாட்டாவை கண்ட ஆண்கள் சிரித்து நின்றனர்.

“ஏன் ரேகா அப்படி சொல்ற?”

“பின்ன நம்ம எவ்வளவு கிண்டல் பண்றோம், அவ மாமாவை விட்டு நகல்ராலா பார்.”

“அய்யய்யோ.” என விலகப் பார்த்த அம்முவை, இழுத்து அனைத்த ருத்ரா, “என் பொண்டாட்டி என்னை கட்டிப்பிடிக்கிறா‌. அதுல உங்களுக்கு என்ன வந்துச்சு? நீங்களும் வேணும்னா உங்க புருஷனை கட்டிக்கோங்க. அவங்களும் இங்க தானே இருக்காங்க.” எனத் திருப்பிக் கொடுத்தான். 

பெண்கள் இருவரையும் வெட்கம் பிடுங்கி தின்றது. பிந்து, ரிஷியை காண, ‘எனக்கு டபுள் ஓகே’ என வாயசைத்து கண்சிமிட்டினான். வெட்கம் அதிகரிக்க அவன் பின் ஒழிந்தால்.

ரேகா ஓடி சென்று கார்த்திக்கிடம் ஒன்றும் தெரியாத அப்பாவி போல் நின்றாள். “என்ன ரேகா ஓடி வந்த ஸ்பீடுக்கு, கட்டிப்பிடிச்சு நச்சுன்னு ஒரு இச்சு கொடுப்பேன்னு பார்த்தா, ஒன்னும் தெரியாத பொண்ணு மாதிரி நிக்குற.” என அவளை ரகசியமாக சீண்டினான்.

“போ அத்தான்.” தன் கரம் கொண்டு முகத்தை மறைத்தாள். அவளை ரசித்த கார்த்திக்கின் பார்வை ருத்ராவிடம் திரும்பியது.

பார்வை தமையனிடம் இருந்தாலும் பேச்சு ரிஷியிடம், “அங்க வச்சு அம்முக்கான கிஃப்ட்ன்னு ருத்ரா சொல்லும் போதே நான் யோசிச்சிருக்கணும் ரிஷி” வராத கண்ணீரை துடைத்தான்.

“எதை யோசிச்சிருக்கணும் கார்த்தி.” புரியாமல் கேட்டான் ரிஷிவர்மா.

“அவன் எதுக்கு அது அம்முக்கான கிஃப்ட்ன்னு சொன்னான்னு?”

“அதுக்கு இப்ப பதில் கிடைச்சதா?”

“ஓ கிடைச்சதே. அதை வச்சு அவன் பெரிய பிளானே போட்டிருக்கான். அந்த ரகசியமும் இப்ப புரிஞ்சது.”

“அது என்ன?” ஏதோ கிண்டலாக சொல்லப் போகிறான் என தெரிந்தே கேட்கப்பட்ட கேள்வி.

“உங்க ரெண்டு பேத்துக்கும் ஒரே மாதிரி கிஃப்ட் கொடுத்து, அம்முவை எமோஷனலாக்கி, அப்புறம் அதை சமாதான படுத்துற சாக்குல தொட்டு பேசி, அது கொஞ்சம் அப்படி இப்படியாகி, ஒரு பெரிய ரொமான்ஸ் சீன்னை,  இந்த மாதிரி பப்ளிக்ல நடத்துற மாஸ்டர் ப்ளன்.” என அவர்களை கைக்கட்டினான்.

கார்த்திக் முடிக்கவும், அம்மு சந்தேகமாக தன்னவனின் முகம் கண்டாள். அவன் இல்லை என கள்ளத்தனமாக தலையசைத்தான். அவனது கள்ளத்தனத்தை புரியாத அந்த அப்பாவி பெண், அவனிடமிருந்து விலகி கார்த்திக்கை முறைத்தாள்.

“எதுக்குடி என்னோட அத்தானே முறைக்கிற?” என வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு நின்றாள் ரேகா.

“உன்னைய தாண்டி முதல்ல சாத்தனும்.” என அம்மு, ரேகாவை அடிக்க விரட்டினாள்.

அங்கு சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்திருந்தது.

★★★

எதிரில் இருந்த சொகுசு பங்களாவிலிருந்த ஒரு உருவம், அவர்களின் மகிழ்ச்சியை குழைக்கும் நோக்குடன் அவர்களை வெறித்திருந்தது. குறிப்பாக அதன் பார்வை தன் இலக்காண அவள் மீதே அதிகம் படிந்தது.

அவன் இருந்த அந்த படுக்கை அறையில், மாட்டியிருந்த அவளது ஆள் உயர புகைப்படத்தின் முன் நின்று, “நீ எனக்கு மட்டும் தான் சொந்தம். உன்னை யாருக்கும் விட்டு குடுக்க மாட்டேன். உன்னை என்கிட்டே இருந்து பிரிச்ச அவனை நான் சும்மா விட மாட்டேன்.  சிரிக்கிறயா டா நல்லா சிரி. இன்னும் கொஞ்ச நாள்ல உங்க எல்லாரோட சிரிப்பையும் அழிக்குறேன்.” என வன்மமாக சூளுரைத்தது. 

ராகம் இசைக்கும்

error: Content is protected !!