ராகம் 13-17

ராகம் 13-17

ராகம் 13

பிந்துவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. இருக்காதா பின்னே?

கருவிலிருந்து தன்னுடன் துணையாக இருந்த, தன் சகோதரியை பிரிவதில் அவளுக்கும் மன வருத்தம் இருந்தது. இது அனைத்து பெண்களுக்கும் உண்டான சாபக்கேடு, என தெரிந்தே வளர்ந்தவள் மனதை தேற்றி கொண்டிருந்தாள். ஆனால் இப்போது அந்த மன வருத்தத்திற்கு அவசியமில்லாமல் போனது.

சந்தர்ப்ப வசத்தால், இடையில் சில காலம் பிரிந்திருந்தவர்களை, விதி ருத்ராவின் மூலம் மீண்டும் இணைத்துள்ளது. பிருந்தா மனதினுள் ருத்ரேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்தாள். 

அதே விதி, அதே ருத்ராவின் மூலம், ராட்சசன் இருக்கும் இடத்தில் தேவதையை குடி வைத்ததை, விதியின் சதி அன்றி வேறு என்னவென்று நான் சொல்ல? 

தோழிகள் இருவரும் ஓடி ஆடி அந்த இடத்தை சந்தோஷத்தால் நிரப்பினர். அவர்களை ரசித்திருந்த பிருந்தாவையும் விட்டு வைக்காமல், அவர்களது விளையாட்டில் இணைத்து கொண்டனர். இதை தன் அறையின் ஜன்னல் வழியே பார்த்திருந்தது அந்த கொடூர உள்ளம்.

நியாயமாக பார்த்தால், தன் மனம் கவர்ந்தவளின் மகிழ்ச்சியை கண்டு, தன் உள்ளம் மகிழ்ந்திருக்க வேண்டிய அந்த உருவம், அவளது மகிழ்ச்சி இன்னொருவருக்கு சொந்தமானது என்பதை நினைத்து கோபம் கொண்டது. அவளை எப்படி தன்னுடையவளாக்கிக் கொள்ளலாம் என சிந்திக்க தொடங்கியது.

‘பிறர் மனை நோக்கா!’ என்பதை மறந்து போனதா? அல்லது மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனம் அதிகம் என நினைத்து முன்னேறியதா?

எது எப்படியோ அந்த மல்லிகையை பறித்து, கசக்கி, முகரத் துடித்தது அந்த ராட்சச இதயம். 

பெரியவர்களும் சிறியவர்களின் மகிழ்ச்சியில் மகிழ்ந்தனர். அங்கு அந்த நிமிடம் நிரம்பி இருந்தது மகிழ்ச்சி மட்டுமே.

அவர்களது அந்த மகிழ்ச்சியை கண்டு, ஒருவன் கொலை வெறியுடன் இருக்கிறான் என்பதையும், அவர்களது முகத்திலிருக்கும் அந்த புன்னகையை, மிச்சமின்றி துடைத்தெடுக்க அவன் திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் தெரியாமல், அவர்கள் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

ஒருவழியாக அவர்களது விளையாட்டை முடித்துக்கொண்டு, ருத்ராவிடமிருந்து சாவியை வாங்கி கதவை திறந்தாள் அம்மு. இந்த முறை ரேகா அவளுக்கு ஆரத்தி எடுத்தாள்.

“நான் சொன்ன சொல்லை காப்பாத்திட்டேன் அம்மு.” தன் சட்டை காலரை தூக்கிக்கொண்டு, பெருமை அடித்தான் கார்த்திக்.

‘என்ன சொன்னான்? எப்ப சொன்னான்?’ அவனை சந்தேகமாக பார்த்தாள் அம்மு.

முதலில் அவன் சொல்வது புரியாமல் பார்த்த இளையவர்களின் மனதில் திடீரென ஒரு பலிச்சிடல். சில மாதங்களுக்கு முன் மனநல மருத்துவமனையில் இருந்து, பிருந்தாவை அழைத்து வந்த போது, விளையாட்டாக அம்முவுக்கும் கார்த்திக்கும் இடையில் நடந்த உரையாடலை நினைவு கூர்ந்தனர். 

“பாரு மாமா! உன் பொண்டாட்டிய, எனக்கு அடி குடுத்து வரவேற்றாள். பிந்துவுக்கு மட்டும் ஆரத்தி எடுக்குறா?” என, கண்ணீர் வராத கண்ணை கசக்கி கொண்டே, அன்று கார்த்திக்கிடம் புகார் வாசித்தாள் அம்மு.

“நீ கல்யாணம் முடிஞ்சு வந்தா என் பொண்டாட்டி ஆரத்தி எடுத்து வரவேற்பா, எப்போ வச்சுக்கலாம் கல்யாணத்தை? ரிஷிக்கும் இதில் பரிபூரண சம்மதம்.” என அதற்கு கார்த்திக் சொன்ன பதிலும்.

‘உன் திருமணத்தில் ரிஷிக்கு சம்மதம். எப்போ உனக்கும், உன் மனம் கவர்ந்தவனுக்கும் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்?’ என்பதே அந்த உரையாடலின் சாராம்சம், ஆனால் அதை ருத்ரா புரிந்து கொண்டது, ‘ரிஷிக்கு உன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம்.’ என்பதாகும்.

அதை நினைத்த ருத்ராவின் முகம் அன்று போல் இன்றும் இறுகியது. அவனது முக மாற்றத்தை கவனித்த ரிஷி, “முடிஞ்சு போனதை பத்தி, இப்ப எதுக்கு தேவையில்லாம பேசுற கார்த்தி?” என கடுமையாக சொன்னவனின் கண்கள், ருத்ராவை காட்டி எச்சரித்தது.

ருத்ராவின் இறுகிய முகத்தை கண்ட கார்த்திக் அரண்டு போனான். ‘ஆத்தி! நானே வாயை கொடுத்து, வம்பை விலைக்கு வாங்கிட்டேனா? உனக்கு இது தேவைதான் கார்த்திக் தேவைதான். உன்னோட நாக்குல சனி பகவான் டபுள் காட் போட்டு படுத்திருக்கார் போல. அதுதான் சும்மா இருக்க சிங்கத்தை சொறிஞ்சு விட்டுட்டு இருக்க. இனி நீ வாயை திறந்த அது உன் மேல பாய்ஞ்சிடும். அதுனால வாயை மூடிக்கிட்டு கேர்ஃபுல்லா இருந்துக்கோ.’ என தன்னைத்தானே திட்டிக் கொண்டு அமைதியானான்.

ருத்ராவின் முக இறுக்கத்தை காணாத அம்மு, ‘ம்க்கும், ரொம்பத்தான்’ என கார்த்திகிடம் நொடித்தவள், தன்னவனின் கரத்துடன் தன் கரம் கோர்த்தாள். அதில் இறுகிப் போயிருந்த காளையின் உள்ளம் இலகியது. லேசாக தலை திருப்பி தன் அருகில் நின்ற தன்னவளின் முகம் கண்டான். அவளது பளிங்கு முகம் மகிழ்ச்சியில் பூரித்திருந்தது. அந்த பூரிப்பில் ஆண் அவனின் உள்ளம் தெளிந்தது, மகிழ்ச்சியும் ஏற்பட்டது.

‘ரிஷிக்கும் அம்முவுக்கும் அந்த மாதிரி நினைப்பு இருந்ததில்லை. அவங்க ஒன்லி பிரண்ட்ஸ். அம்முவோட காதல் எனக்கு மட்டுமே சொந்தம்.‌ அதில் துளிகூட மாற்றுக் கருத்தில்லை.’ என தன் மனதிடம், கர்வமாக சொல்லிக் கொண்டவனின் முகத்திலும் புன்னகை உண்டானது.

இந்த தெளிவும் உறுதியும் கடைசிவரை நிலைக்குமா? அந்த நம்பிக்கையை ஆட்டம் காண வைக்க போகும் அதிர்ச்சியான சில நிகழ்வுகள் நிகழ போகிறது. அதில் சந்தேகம் கொண்டு தன் காதலை துறப்பானா? அல்லது சந்தேகத்தை வென்று காதலை வளர்ப்பானா? விடை விதியின் கைகளில்.

ஆனால் ஈவு இரக்கமில்லாத விதி அரக்கன், அவர்களது வாழ்க்கையை சூறாவளியாக சுழற்றி அடிக்க போகிறான். அந்த சூறாவளியில் மாட்டிக்கொண்டு தத்தளிக்க போகிறது நால்வரின் வாழ்க்கை.

★★★

அந்த இரு வீட்டின் தோற்றத்தை போலவே அங்கிருந்த பொருட்களும் ஒரே மாதிரி இருந்தது. அனைவருக்கும் இரு வீட்டையும் பிடித்திருந்தது. ஆடம்பரத்தை விட அதிலிருந்த ஒற்றுமையை மிகவும் ரசித்தனர்.

“இனி நாம இங்கு தான் இருக்க போறோம்.” என ருத்ரா உறுதியாக கூறி விட, ஈஸ்வரமூர்த்திக்குள் தடுமாற்றம். இத்தனை வருடம் வாழ்ந்த அவர்கள் வீட்டை விட்டு வருவதில் சிறு தயக்கம்.

இந்த முறையும் அவர்களது தயக்கத்திற்கு விடை கூறினான் கார்த்திக். “நானும் ரேகாவும் அந்த வீட்டில் இருந்துக்கறோம். ருத்ராவும் அம்முவும் இங்க இருக்கட்டும். சித்தி, சித்தப்பா அவங்க இஷ்டம் போல, இங்கேயும் அங்கேயும் மாறி மாறி இருக்கட்டும்.”

அவன் சொன்ன ஆலோசனை, அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருந்தது. அதனால் அதற்கு சம்மதித்து தலையசைத்தனர்.

ஆனால் பாட்டியின் மனதில், ‘இது சரியாக வருமா? ருத்ரா! அம்மு, ரிஷியின் நட்பை முழு மனதாக ஏற்றுக் கொண்டானா?’ என்ற கேள்வி வண்டாக குடைந்தது. அதை தெளிவு படுத்திக்கொள்ள முடிவு செய்து, மறைமுகமாக கேட்டும் விட்டார். “ரெண்டு பேத்துக்கும் பக்கத்துல வீடு வாங்கணும்னு உனக்கு எப்படி தோணுச்சு தம்பி?”

பாட்டி மிகவும் பயந்து போயிருந்தார். அவரது பயம் இன்று வந்ததல்ல, எப்போது ருத்ரா அம்முவின் திருமணத்தை பற்றி பேச ஆரம்பித்தார்களோ அப்போது ஆரம்பித்தது.

‘ரிஷி, அம்முவின் நட்பை ருத்ரா சரியாக புரிந்து கொள்வானா? அவர்களை பற்றிய கிசுகிசுக்களை சினிமா துணுக்குகளில் அதிகம் காணலாம். அதை ருத்ரா தவறாக புரிந்து கொண்டால் அவர்களது வாழ்க்கை நரகமாகும்.’ என்ற கலக்கம், பாட்டியின் மனதை தவிக்க வைத்தது. 

ரிஷி, அம்முவின் உறவை பற்றி தெரிந்தவர்களுக்கு அவர்களின் மேல் துளி கூட சந்தேகம் வராது. சொல்லப்போனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்குமே என நினைக்கத் தோன்றும். 

திருமணத்திற்கு தேவையான ஒன்று புரிதல். அந்த புரிதல் அவர்கள் இருவருக்கும் நடுவில் அதிகமாக உள்ளது. அதை அடித்தளமாக வைத்து அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தால், அந்த திருமணம் வெற்றி பெறும் என அடிக்கடி அவரே நினைத்ததுண்டு.

ஆனால் ரிஷி அம்முவிற்கு அதில் விருப்பமில்லை. அவர்களைப் பொறுத்தவரை திருமணத்திற்கு அடிப்படை தேவை காதல். அந்தக் காதல் அவர்களுக்கு நடுவில் இல்லை. 

காதல் மலர்ந்திருக்கலாம்! ஒருவேளை அவர்களது பந்தம் திருமணத்தில் முடிந்திருந்தால்.

திருமணமும் நடந்திருக்கலாம்! அதற்கு தடையாக ருத்ரேஸ்வரன் வராமல் இருந்திருந்தால். 

ஆனால் ருத்ரேஸ்வரன் வந்து விட்டான், அவர்களது வாழ்க்கையை மாற்றி அமைக்க. இனி அதை யோசித்து ஒன்றுமாகப் போவதில்லை. அதனால் அதை மறந்து விடலாம்.

அம்முவின் சொல்லாத காதல் ருத்ராவுக்கு மட்டுமே சொந்தம் என புரிந்த ரிஷி, கார்த்திக்குடன் இணைந்து ருத்ராவின் பொறாமையை தூண்டி அம்முவுடன் இணைய வைத்தான். சில விஷயங்களை அம்முவுக்கு தெரியாமல் இருவரும் செய்துள்ளனர். (உதாரணத்துக்கு: Part 1: திருமணத்திற்கு முன் நடந்த ஒரு பிரஸ் மீட்டில், ரிஷியும் மித்ராவும் தங்களது திருமண அறிவிப்பை வெளியிடப் போவதாக, கார்த்திக் ருத்ராவிடம் சொன்னது இவர்களின் கூட்டுத்திட்டம். அதேபோல் மித்ராவுக்கு சிறந்த துணை ரிஷி மட்டுமே, என திரும்பத் திரும்ப சொல்லிய கார்த்திக், ருத்ராவின் பொறாமையை தூண்டினான்.)

அம்முவின் நட்பிற்காக, ரிஷி எதையும் இழக்க தயங்காதவன். அதேபோல் ரிஷியின் சந்தோஷத்திற்காக, அம்மு தன் உயிரையும் பணயம் வைக்கக் கூடியவள். ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தே அவர்களுக்கு தேவையானதை செய்து முடிப்பார்கள். ஒரு கட்டத்துக்குள் அடங்காத அவர்களது பந்தத்தை, சரியாக புரிந்து கொள்ளும் வாழ்க்கை துணையால் மட்டுமே அவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ முடியும். 

அதில் பிருந்தாவை பற்றி கவலையில்லை. பொறுமையான, பொறுப்பான பெண். தன் சகோதரியின் நட்பை புரிந்து கொள்வாள். ஆனால் பிடிவாத குணம் கொண்ட ருத்ராவால் அவர்களின் நட்பை சரியான கோணத்தில் புரிந்து கொள்ள முடியுமா? தனக்கு எதுவும் தேவையென்றால் ரிஷியை தேடும் அம்முவை புரிந்து கொள்வானா ருத்ரேஸ்வரன்? அப்படி புரிந்து கொள்ள முடியாமல் போனால், ஒன்று நட்பு உடையும் அல்லது திருமணம் முறியும். இதில் எது நடந்தாலும் பாதிக்கப்பட போவது மூவர்.

அதனால்தான் பாட்டி அந்த கேள்வியை கேட்டார். ருத்ரா அவர்களது நட்பை சரியான கோணத்தில் எடுத்துக் கொண்டானா? அம்முவின் மனம் அறிந்து இதை செய்தானா? என அவருக்கு தெரிய வேண்டியதிருந்தது. ஒருவேளை அவன் புரிந்து கொள்ளாமல் இருந்தால், அடுத்தடுத்த வீட்டில் இருக்கும்போது சந்தேகம் எழுவதற்கான வாய்ப்புகள் அதிகம், அதனால் சண்டைகள் வரலாம், அதில் இருந்து பிரிவும் வரக்கூடும். அது அனைவருக்கும் இடையில் தேவையில்லாத மனக்கசப்புகளையும், விரிசல்களையும் உண்டாக்கும். அந்த பயம் பாட்டியின் மனதில் இருந்தது.

ஆனால் அவர் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டால், அவன் ருத்ரேஸ்வரன் அல்லவே!!! ஒரு சில நொடிகள் பாட்டியை பார்த்தவனின் கண்கள் அம்முவின் பூரித்த முகத்தில் நிலைத்தது. அதிலிருந்து அவன் என்ன நினைக்கிறான் என பாட்டிக்கு புரியவில்லை. அவர் முகம் சுருங்கி போனது.

அவரது நிலையை உணர்ந்த ரேகா, அவர் மனதை மாற்றும் பொருட்டு, “ஏய் கிழவி, உனக்கு இந்த அசிங்கம் தேவையா? ருத்ரா மாமா கிட்ட இருந்து பதில் வருமா? வராது. அது தெரிஞ்சும் தேவையில்லாமல் கேள்வி கேட்டு, ஏன் உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ற?” என ரகசியமாக சீண்டினாள்.

“அட நீ வேற ஏண்டி என் உயிரை வாங்குற? இவன் எப்ப என்ன பண்ணுவான்னு தெரியாம, நானே வயித்துல புளியை கரைச்சுக்கிட்டு இருக்கேன்.” என்றார் நொந்து போன குரலில்.

“வயித்துல புளியை கரைச்சு, என்ன குழம்பு வைக்கப் போற கிழவி? எனக்கு பூண்டு குழம்பு வச்சு தரியா?” நாக்கை சப்பு கொட்டினாள்.

பேத்தியை முறைத்தார் பாட்டி.

“பூண்டு குழம்பு வைக்க தெரியாதுனா, தெரியாதுன்னு சொல்ல வேண்டியது தானே, அதுக்கு எதுக்கு முறைக்கிற?” இவளும் முறைத்தாள்.

கோபம் கொண்ட பாட்டி அவளின் தலையில் நறுக்கென ஒரு கொட்டு வைத்தார்.

வலித்த தலையை தடவிக் கொண்டே, “ஓகே! கூல் டவுன் கூல் டவுன், உனக்கு என்ன பயம் அதை சொல்லு.”

“இவன், ரிஷி அம்முவோட நட்பை சரியா புரிஞ்சுக்குவானான்னு பயமா இருக்கு.”

“ருத்ரா மாமாவுக்கு அம்முவை ரொம்ப பிடிக்கும். அம்முவுக்காக எது வேணாலும் செய்வாங்க. அப்படிப்பட்டவங்க அவளோட ஃப்ரெண்ட்ஷிப்பை புரிஞ்சுக்க மாட்டாங்களா?”

“அம்முவை அவனுக்கு பிடிக்கும்ங்கறது அஞ்சு வருஷம் காத்திருந்து கல்யாணம் பண்ணதிலேயே தெரியுது. அந்த பிடித்தம் தான் இப்போ பிரச்சனையே.”

“???” பாட்டி சொல்வது பேத்திக்கு புரியவில்லை.

“எல்லா ஆம்பளையும் தன் பொண்டாட்டி தனக்கு மட்டுமே சொந்தம்னு நினைப்பாங்க. ருத்ரா மட்டும் இதுக்கு விதி விலக்கில்லை. அவன், அம்மு மேல எவ்ளோ ஆசை வச்சிருக்காங்கறது நமக்குத் தெரியும். அதே மாதிரி அம்மு ஒவ்வொன்னுக்கும் ரிஷியை தேடுவாங்கிறதும் தெரியும். அந்த மாதிரி சூழ்நிலையில் ருத்ராவுக்கு ரிஷி மேல பொறாமை வந்துச்சுன்னா அவங்க வாழ்க்கை நரகமாக்கிடாதா?”

‘அப்படி ஒன்னு இருக்குதோ?’ என சிந்தித்த ரேகாவிற்கு பாட்டியின் கவலை புரிவது போலிருந்தது, “சரி விடு அப்பத்தா, பிந்து மாதிரியே ருத்ரா மாமாவும் அவங்களை புரிஞ்சுக்குவாங்க. நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.” என பாட்டிக்கு ஆறுதல் கூறினாள் ரேகா.

நல்லது மட்டுமே நடக்குமென்றால், நான் எதற்காக இருக்கிறேன் என விதி அரக்கன் இவர்களை பார்த்து நக்கலாக சிரித்தது. 

★★★

அம்முவை தங்கள் அறைக்கு கூட்டி சென்ற ருத்ரா, நேராக அவளைக் கொண்டு நிறுத்தியது அங்கிருந்த ஜன்னலின் அருகில். கேள்வியாக பார்த்தவளின் முகத்தை திருப்பி ஜன்னலின் வெளியே காட்டினான்.

கேள்விக்கான விடையை தெரிந்து கொண்டவளின் கண்கள் விரிந்தது. இமை சிமிட்டாத அவளது பார்வை அங்கேயே நிலைத்து நின்றது.

அவளை பின் இருந்து மென்மையாக கட்டிக் கொண்டவன், அவள் தோள் வளைவில் நாடி பதித்து, “நான் எப்பவும் உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் நீலாம்பரி. அதுக்கு தான் இந்த ஏற்பாடு.” என்றான் ஆசையாக.

“நான் உன் கூட தானே இருக்கேன் கட்டவண்டி.” பெண்ணின் குரல் நெகிழ்ந்து வந்தது.

“என் கூட சண்டை போட்டுட்டு பொறந்த வீட்டுக்கு போறேன்னு நீ கிளம்பிட்டா, அப்ப நான் உன்னை எப்படி பார்க்கிறது? அதுக்கு தான்.” 

அவனது கரங்களுக்குள் சுழன்று திரும்பியவள், அவன் முகம் பார்த்து, “நான் பிறந்த வீட்டுக்கு போயிட்டா, என்னை சமாதானம் பண்ண நீ பின்னாடியே வரமாட்டியா கட்டவண்டி?” என்றாள் அப்பாவியாக.

“அதான! அப்ப நான் உன் கூட சண்டை போட்டு உன்னை அனுப்பிட்டா?” என்றவன் அவள் கன்னத்தில் நச்சென்று ஒரு இச்சு வைத்தான்.

“சண்டை போட்டு பிரியற மூஞ்சியை பார்.” என அவன் தலையில் ஒரு கொட்டு வைத்தாள்.

“அதுவும் சரிதான் எதுக்கு சண்டை போட்டுட்டு பிரியனும்? வேணும்னா இப்படி வச்சுக்கலாமா?” விஷமம் கொட்டி கிடந்தது அவனது குரலில்.

“எப்படி?” சந்தேகமாக புருவம் உயர்த்தினாள்.

“இந்த அழகான வயித்துல நம்ம பேபி வரும்ல, அதோட டெலிவரிக்கு நீ பொறந்த வீட்டுக்கு போயிட்டா உன்னை பார்க்கிறதுக்கு. எப்படி என் ஐடியா?” என்றவனின் கை, ஆடை மறைக்காத அவள் வயிற்றில் ஊர்ந்தது.

அம்முவின் முகம் கவலையை ஏந்தி, “அப்படி ஒன்னு நடக்கும…?” சொல்லி முடிக்கும் முன் கண்கள் கலங்கியது.

“ஐயோ பொம்முக்குட்டி நான் இருக்கும் போது நீ எதுக்கு கவலைப்படுற? உனக்கு ஒரு வேலையும் வைக்காம அதை ஐயா பார்த்துக்கிறேன். யூ டோண்டோறி.” என விளையாட்டாக அவள் கவனத்தை திசை திருப்பினான்.

“என்ன வேலை பார்க்க போற ருத்ரா?” கலங்கிய குரல் மாறி சிரிப்பு எட்டிப் பார்த்தது.

“ம்! உன்னை அம்மா ஆக்குற வேலை.” என்றவனின் கரங்கள் அவளை அள்ளிக்கொண்டு தன் படுக்கையை நெருங்கியது. பெண்ணின் முகம் நாணத்தில் சிவக்க, அவளது பார்வையோ ஜன்னலில் தெரிந்த தன் பிம்பத்தில் நிலைத்து நின்றது. அதுவும் மகிழ்ச்சியாக இவளைப் பார்த்து அழகாக சிரித்தது.

ஆம்! அங்கு தெரிந்தது அம்முவின் நிழல் பிம்பம். சற்று நேரத்திற்கு முன் ரிஷிவர்மா வீட்டில், அம்முவின் அறை ஜன்னலை திறந்து வைத்தான் அல்லவா, அந்த ஜன்னல் இப்போது நேர் எதிரே.

படுக்கையில் அவளை கிடத்தியவன், அவள் அருகில் படுத்து, அவளை தன் மார்புடன் அணைத்துக்கொண்டு உறங்கத் தொடங்கினான். உறக்கம் வராத அம்முவின் பார்வை, தன் பிம்பத்தை தொட்டு அவன் முகத்தில் பதிந்தது. 

‘உனக்கு, எப்பவும் என்னை பாத்துக்கிட்டே இருக்கணுமா! என்னை உனக்கு அவ்வளவு பிடிக்குமா! யூ ஆர் சோ ஸ்வீட் மை டியர் முரட்டு புருஷா.’ என மனதினுள், செல்லமாக அவனை கொஞ்சி மகிழ்ந்தாள்.

ஆனால் அவர்களுக்குத் தெரியாது, அவன் விளையாட்டாக சொன்ன வார்த்தைகள் அனைத்தும் நிஜமாகப் போகிறது என்று; தவிர்க்க முடியாத காரணங்களால் அம்மு அவனை பிரிந்து செல்வாள் என்று; இந்த ஜன்னலில் அவள் முகம் பார்த்து அவனது இரவுகள் கழிய போகிறது என்று; ஒருவர் முகத்தை மற்றவர் இந்த ஜன்னலில் கண்டு குடும்பம் நடத்தப் போகிறார்கள் என்று:

இது எதுவும் தெரியாத ஜோடி கிளிகள் உறக்கத்தின் பிடியில். இது அனைத்தையும் தெரிந்த விதியோ மகிழ்ச்சியின் பிடியில்.

ராகம் 14

தன் வெப்ப கதிர்களை பூமியில் செலுத்தி, குளிர்ந்த பூமியை சூடாக்கிய கதிரவன், தனது ஆதிக்கத்தை தொடங்கிய காலை நேரம். 

வெளியிலிருக்கும் வெப்பத்தை தன்னுள் அனுமதிக்காத குளிரூட்டப்பட்ட குளுகுளு அறை. 

மேஜை மேலிருந்த எண்ணற்ற கோப்புகளுக்கு மத்தியில், எனக்கு நிகர் நான் மட்டுமே என தனித்துவமாக இருந்த கணினியின் முன், கம்பீரமாக அமர்ந்திருந்த அந்தப் பெண்மணி, “வா மூர்த்தி. எப்படி இருக்க?” அவரது தோற்றத்துக்கு சற்றும் குறைவில்லாத அதே கம்பீரத்துடன் தெளிவாக வந்தது வார்த்தைகள். 

“நல்லா இருக்கேன் பிரபா. நீ எப்படி இருக்க? உன் ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரும் எப்படி இருக்காங்க?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க மூர்த்தி. என் பொண்ணு ஆஸ்திரேலியால அவ குடும்பத்தோட இருக்கா. ஒரு நாள் என் வீட்டுக்கு வாயேன் என் ஹஸ்பண்டை இன்ட்ரோ பண்றேன். உன்னோட பேமிலி எப்படி இருக்காங்க?” நீண்ட நாள் கழித்து சந்தித்த நண்பருடன் இயல்பாக உரையாடியவரின் கம்பீரம் குறைந்திருந்தது.

“நல்லா இருக்காங்க பிரபா. கண்டிப்பா ஒரு நாள் உங்க வீட்டுக்கு வரேன். நம்ம பிரெண்ட்ஸ் யார் கூடயாவது காண்டாக்ட் இருக்கா? எல்லாரையும் பார்த்து பல வருஷம் ஆச்சு.” என்றார் ஆர்வமாக.

“ஒன்னு ரெண்டு பிரண்ட்ஸை தவிர மத்தவங்க காண்டாக்ட்ல இல்லை. பேஸ்புக்ல தேடலாம்னா டைம் எங்க இருக்கு?” என்றார் பெருமூச்சுடன்.

“அதுவும் சரி. எல்லாருக்கும் அவங்கவங்க லைஃபை பாக்குறதுக்கு நேரம் சரியா இருக்கு. இதில் எங்க போய் ஃப்ரெண்ட்ஸ்சை தேடுறது?” என சலிப்புடன் சொன்னவர், “சரி அதை விடு பிரபா, இப்ப உன்கிட்ட ஒரு உதவி கேட்டு வந்திருக்கேன்.”

“சொல்லு மூர்த்தி, என்னால் முடிஞ்சா கண்டிப்பா செய்றேன்.”

“உன்னால் மட்டுமே முடியும். ஒரு நிமிஷம்…” என்றவர் வெளியே சென்று காத்திருந்த மகனையும் மருமகளையும் அழைத்து வந்தார்.

“இவன் என்னோட பையன் ருத்ரேஸ்வரன். இது அவனோட வைஃப் மித்ரா.” என அந்த பெண்மணிக்கும், “இவங்க பிரபாவதி. என்னோட காலேஜ் மெட். இந்த இன்ஸ்டியூட்டோட பிரின்ஸ்பல்.” என இருவருக்கும் முறையாக அறிமுகப்படுத்தினார் ஈஸ்வரமூர்த்தி.

“குட் மார்னிங் மேம்”

“குட் மார்னிங் டியர்ஸ், வாங்க வந்து உட்காருங்க.” என்றவர் அவர்கள் அமர்ந்ததும், “உங்களுக்கு ரீசண்டா மேரேஜ் ஆனதை பேப்பர்ல படிச்சேன். ரெண்டு பேத்துக்கும் வாழ்த்துக்கள்.”

“தேங்க்யூ மேம்.” என்றனர் பூரிப்புடன்.

“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்ச படம் எக்ஸலன்ட்டா இருந்துச்சு. படம் பார்த்த மாதிரி இல்லாம அதுல ரியலா வாழ்ந்த மாதிரி இருந்துச்சு.” மனம் திறந்து பாராட்டினார்.

“தேங்க்யூ மேம். ஆனா அந்த கிரெடிட் டைரக்டருக்கு போகணும். சச் எ ஒன்டர்புல் டைரக்ஷன். அவர் சொன்னதை நாங்க செஞ்சோம். அவ்வளவுதான்.” என தான் ஒன்றுமே செய்யாதது போல், பாராட்டை டைரக்டருக்கு அளித்துவிட்டான் ருத்ரேஸ்வரன்.

டைரக்டரின் பங்களிப்பிற்கு சற்றும் குறைவில்லாத பங்களிப்பை, இவர்களும் வழங்கியுள்ளதை பிரபாவதியால் உணர முடிந்தது. உயிரோட்ட கதைக்கலமும், அதில் இவர்கள் நடிக்காமல் வாழ்ந்ததுமே படத்தின் வெற்றிக்கான ரகசியம் என்று, ஒரே பீல்டில் இருப்பவர் உணர்ந்து கொள்ளாமல் போனால் தான் அதிசயம்.

ஆனால் பாராட்டை டைரக்டருக்கு அளித்த அவனின் பெருந்தன்மையை, “நைஸ்!” என மெச்சியவர் பெண்ணிடம் திரும்பி, “எனக்கு உன்னோட நடிப்பு ரொம்ப பிடிக்கும் மித்ரா. ரியலிஸ்டிக்கா இருக்கும்.” முகத்திற்கு நேர் பாராட்டவும் கூச்சத்துடன், “தேங்க்யூ மேம்.” என்றவளின் முகம் சிவந்தது.

“வாவ் பென்டாஸ்டிக்! மேக்கப் போடாமலே உன் முகம் அழகாக சிவக்குது. நேச்சர் பியூட்டி.” தன் கம்பீரத்தை முற்றிலும் விடுத்து, கல்லூரி மாணவியை போல் மித்ராவிடம் வம்பு வளர்த்தார்.

“போங்க மேம் கிண்டல் பண்ணாதீங்க.” சிணுங்கினால் பெண்.

“நோ மித்ரா நோ, ஐயம் சீரியஸ்லி சேயிங், இட்ஸ் வெரி பியூட்டிஃபுல்.” பொறாமையின்றி ரசித்துக் கூறினார். ஏனோ அவருக்கு அவளை அவ்வளவு பிடித்திருந்தது.

“பொய் சொல்லாதீங்க மேம்.”

“நிஜமா மித்ரா, நீ ரொம்ப அழகா இருக்க. டவுட் இருந்தா உன் ஹஸ்பண்ட் கிட்டயே கேளு. என்ன மிஸ்டர் ருத்ரா நான் சொல்றது சரிதானே.” ருத்ரேஸ்வரன் சிறு சிரிப்புடன் தலையசைத்தான்.

“பாத்தியா மித்ரா உன்னோட ஹஸ்பண்டும் சொல்லிட்டாங்க, நீ தான் உலகத்திலேயே அழகுன்னு.” 

தலைக்கு மேல் கைகூப்பி, “மேம் போதும். நான் தாங்க மாட்டேன்.” என்றால் மித்ரா பாவமாக. 

அதைப் பார்த்த ருத்ரா சத்தமாக சிரித்து விட்டான். அவனை அறிய வகை ஜந்துவை பார்ப்பது போல் பார்த்து வைத்தார் ஈஸ்வரமூர்த்தி. ஏனென்றால் அவன் சிரிப்பை மறந்து பல வருடங்களாகி இருந்தது. அவனது சிரிப்பு, சந்தோஷம், கேலி, கிண்டல் ஏன் கண்ணீர் கூட அம்முவுடன் தனித்திருக்கும் போது மட்டுமே வெளிப்படும். அப்படிப்பட்டவன் இன்று மற்றவர்கள் முன் இப்படி சிரித்து வைத்தால், அவர் வினோதமாக பார்க்காமல் என்ன செய்வார்?

இந்த விளையாட்டு பிரபாவதிக்கு மிகவும் பிடித்துப் போனது, அதனால் அதன்பிறகு அம்முவை எப்போது கண்டாலும், அவளை ஏதாவது சொல்லி கிண்டலடித்து, அவளை கையெடுத்து கும்பிட வைப்பதே அவரது வேலையாகி போனது.

கலகல சிரிப்புடன், “சரி பொழச்சிப்போ. ரொம்ப கெஞ்சி கேட்கிற அதனால விடுறேன்.” என்ற பிரபாவதி, ஈஸ்வர மூர்த்தியிடம் திரும்பி முதல்வரின் கம்பீரத்துடன், “சொல்லு மூர்த்தி நான் என்ன செய்யணும்.”

“ஈஸ்வர் ப்ரொடக்ஷனை மித்ராவின் பொறுப்பில் விடலாம்ன்னு இருக்கேன்.”

“குட் டெசிஷன் மூர்த்தி! இதுல நான் என்ன பண்ணனும்?” எனக் கேட்டவருக்கு ஏதோ புரியுவது போலிருந்தது.

“தேங்க்யூ பிரபா. மித்ராவோட நிஜ பேர் அமிர்தா. அவ பிளஸ் டூ வரை படிச்சிருக்கா. ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்த பொண்ணு. தவிர்க்க முடியாத காரணத்தால் நாலஞ்சு வருஷமா அவ படிப்பு தடைப்பட்டுடுச்சு. இப்ப ஈஸ்வர் புரொடக்ஷனை நடத்துறது சம்பந்தமான படிப்பு படிக்க வைக்கணும். மித்ராவுக்கு எந்த கோர்ஸ் சூட்டாகும். உன் இன்ஸ்டியூட்டில் மித்ராவை சேர்த்துக்க முடியுமா?”

“ஒய் நாட்! இந்த காலத்தில் பெண்களுக்கு படிப்பும், சொந்தக் காலில் நிற்கும் தன்னம்பிக்கையும் அவசியம் தேவை. கல்யாணம் முடிஞ்சதும் பேரன் பேத்தியை பாக்கணும்னு நினைக்காமல், மருமகளுக்கு நல்ல கேரியர் அமைச்சு தரணும்னு நினைக்கிற உன் நல்ல மனசுக்கு பாராட்டுக்கள். கண்டிப்பா இன்டர்வியூ பண்ணிட்டு மித்ராவை சேர்த்துக்கறேன்.” என்றார். 

மித்ராவிடம் திரும்பி, “நடிக்கிறது வேற தயாரிப்பு வேற. ஃபிலிம் புரொடக்ஷன் அவ்வளவு சுலபமான பீல்டு கிடையாது. ஆனால் பெண்களால் செய்ய முடியாதது எதுவுமில்லை. பெண்கள் தானே என அலட்சியப்படுத்துபவர்கள் நிறைய பேர் உண்டு. ஏமாற்ற முயல்பவர்கள் ஏராளம். பெண்களின் வெற்றியை காலில் போட்டு மிதிக்க காத்திருப்போர் அதிகம். அதை தைரியமா எதிர்த்து போராடனும். உன்னோட மன தைரியத்தை வளர்த்துக்கனும்.” என்ற அறிவுரையுடன், சில கேள்விகளை கேட்டு, அவளது சான்றிதழ்களை சரி பார்த்து, அவளை அந்த ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்த்துக் கொண்டார் பிரபாவதி. 

ஆம்! அம்முவை சினிமா தயாரிப்பு சம்பந்தமான பாடப்பிரிவில் சேர்க்கவே, இப்போது ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் இருக்கிறார்கள். அவளது மனம் மாறுவதற்குள் அவளை சேர்த்து விட வேண்டும் என்ற முடிவோடு, உடனடியாக தன்னுடன் பயின்ற தோழியின் மூலம் அவளை சேர்த்துவிட்டார் ஈஸ்வரமூர்த்தி.

★★★

அதே நேரம் படிப்பில் பெரிதாக ஆர்வமில்லாமல் இருந்த பிருந்தாவை, அவளுக்கு விருப்பமான கைத்தொழில், சமையல், வீட்டு அலங்காரங்கள் போன்றவற்றை சொல்லித் தரும் இன்ஸ்டியூட்டில் ஒரு வருட கோர்ஸில் சேர்த்து விட்டான் ரிஷிவர்மா.

“அவசியம் போகணுமா ரிஷி?” என சிணுங்கிய பிருந்தாவை, 

“பெண்கள் தன்னம்பிக்கையோடு இருக்கனும். வெளியிடங்களுக்கு போயிட்டு வரும்போது தன்னம்பிக்கை வரும். நீ படிக்க போகும்போது பலவகை மனிதர்களை சந்திப்ப. வெளியுலக அனுபவம் கிடைக்கும். உன்னோட பயம், கூச்ச சுபாவத்திலிருந்து வெளிவர அவசியம் இந்த படிப்பு உனக்கு தேவை.” என எடுத்துச் சொல்லி, அவளது மனதை ஒரு நிலைப்படுத்தி வைத்திருந்தான் ரிஷி வர்மா. ஆனாலும் அவ்வப்போது வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடும். 

அம்முவை கூட்டிக்கொண்டு ருத்ராவும் ஈஸ்வரமூர்த்தியும் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் சென்றுவிட, பிருந்தாவை சேர்த்துவிட ரிஷியும் ரேகாவும் கிளம்பினார்கள்.

மனமே இல்லாமல் கிளம்பிய பிருந்தா திடீரென, “ரேகா நீயும் உன் படிப்பை தொடராமல் ட்வெல்த்தோட நிறுத்திட்ட. அதனால் நீயும் என் கூட சேர்.” என ரேகாவை தனக்கு துணையாக அழைத்து, அவளை அதிர வைத்தாள்.

குழந்தையை தூக்கிக் கொண்டு நடந்த ரேகாவின் செவியை இவ்வாக்கியம் அடைய, ஷாக் அடித்தது போல் அவளது கால்கள் பிரேக் அடித்து நின்றது. கேட்கக் கூடாத வார்த்தையை கேட்டது போல் பெண் அதிர்ந்து போனாள். அவளது நிலையை கண்ட ரிஷிக்கு சிரிப்பு வந்தது. கஷ்டப்பட்டு அதை கட்டுப்படுத்திக் கொண்டு பெண்களை வேடிக்கை பார்த்தான். அம்பிகா தேவியின் நிலையும் இதுவே.

“நீ புரிஞ்சுதான் பேசுறியா பிந்து! குட்டிய வச்சுட்டு நான் எப்படி கிளாசுக்கு வர முடியும்?” என படப் படத்தால் ரேகா.

“தம்பியை, தேவி அத்தை கிட்ட விட்டுட்டு போகலாம்.” என கூலாக கூறினாள் பிருந்தா.

“தம்பிக்கு எட்டு மாசம் தான் ஆகுது. அவனுக்கு மதர் பீட் பண்ணிட்டு இருக்கேன் அப்புறம் எப்படி அவனை விட்டுட்டு போக முடியும்?” படிப்பதிலிருந்து எப்படி நழுவலாம் என யோசித்து மறுப்பு சொன்னாள் ரேகா.

அதை கண்டுகொண்ட பிருந்தா மர்ம சிரிப்புடன், “அதுதான் எட்டு மாசம் முடிஞ்சு, திட ஆகாரம் கொடுக்க ஆரம்பிச்சாச்சுல. இனி அத்தை பாத்துக்குவாங்க, அத்தை நீங்க தம்பிய பார்த்துக்க மாட்டீங்களா?” ரேகாவிடம் ஆரம்பித்து ருத்ரேஸ்வரனின் அன்னை அம்பிகா தேவியிடம் முடித்தாள்.

“இந்த குட்டி தங்கத்தை பாத்துக்க கசக்குமா என்ன! எனக்கு டபுள் ஓகே. நான் பாத்துக்குறேன். நீங்க ரெண்டு பேரும் எத்தனை வருஷம் வேணும்னாலும் படிங்க.” என அவரும் பிருந்தாவின் பக்கம் சாய்ந்து, ரேகாவின் தலையில் பாறாங்களை போட்டார். 

“அதுதான் அத்தையே சொல்லிட்டாங்கல்ல, அப்புறம் என்ன?” புருவமேற்றி கேலியாக வினவினாள்.

அடுத்து யாரை துணைக்கு அழைக்கலாம் என ரேகாவின் கண்கள் அலைபாய்ந்தது. அங்கு இருந்தது ரிஷி மட்டுமே. அவனிடம் உதவி கேட்டாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. பெண் கல்வியை பற்றி பக்கம் பக்கமாக பேசி காதில் ரத்தத்தை வர வைத்து விடுவான். அம்முவை அவன் படிக்க வைக்க முயன்ற போதே நிறைய அறிவுரைகள் சொல்லி இருக்கிறான். அதனால் தன் கையே தனக்கு உதவி என, “பச்ச குழந்தையை விட்டுட்டு நான் எப்படி வர முடியும்?” மீண்டும் சென்டிமென்டலில் இறங்கினாள்.

“ப்ச்… ஒரு மூணு மணி நேர கிளாசுக்கு, என்னமோ வருஷக்கணக்கா பிரியுற மாதிரி சீன் போடுற. தம்பியை அத்தை பாத்துக்குவாங்க, நீ என் கூட கிளாஸ்க்கு சேருற வழிய பார்.” என்றால் கராராக.

‘என்ன சொன்னாலும் அதுக்கும் ஒரு ஆப்பை ரெடியா வச்சிருக்காலே! இப்ப எப்படி தப்பிக்கிறது?’ என தீவிரமாக சிந்தித்தவளின் மனதில், ஒரு முக்கிய காரணம் கிடைத்தது. அந்த குதூகலத்துடன், “என்னோட சர்டிபிகேட் ஊர்ல இருக்கு. சர்டிபிகேட் இல்லாமல் எப்படி சேர முடியும்?” என்றாள் ஒன்றும் தெரியாதா அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு.

“ஸ்ப்பா… உன்னோட மல்லுக்கட்ட என்னால்  முடியல… இப்போ என்ன சர்டிபிகேட் வேணும். அவ்வளவுதானே… இப்ப உங்க அம்மாகிட்ட சொல்லி, போட்டோ எடுத்து வாட்ஸ் அப்ல அனுப்ப சொல்லலாம். அப்புறம் ஒரிஜினலை கொரியர்ல அனுப்படும்.” என ரேகா சொன்ன அனைத்து தடைகளையும் தகர்த்து வெற்றி கண்டால் பிருந்தா.

வேறு வழி இல்லாமல், “சரி! நானும் படிக்கிறேன்.” என நொந்து போன குரலில் சம்மதித்தால் ரேகா.

இந்த நல்ல செய்தியை கார்த்திக்கிடம் பகிர்ந்த ரிஷி, இருவரின் மனம் மாறும் முன் அவர்களை அழைத்துச் சென்று, ஓராண்டு படிப்பில் சேர்த்த பிறகே வீடு திரும்பினான். 

அவர்களை வரவேற்றது அம்முவிற்கு ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் இடம் கிடைத்த நற்செய்தி. வாங்கி வந்த இனிப்பை அவள் வாயில் திணித்த ரிஷி, அவளிடம் கை நீட்டினான். அவளும் அவன் கைப்பற்றி குழுக்க அவன் முறைத்தான். ஒன்றும் புரியாமல் முழித்த அம்முவிடம், “பீஸ் எவ்வளவு? பிரவுசர் எங்க?”

“நான் மறப்பேனா! என் படிப்பு செலவு மொத்தமும் உன்னது தான்.” என்றவள், எவ்வளவு கட்ட வேண்டும் என்ற வவுச்சரை அவன் கரத்தில் திணித்தாள். 

அதில் மகிழ்ந்தவன் மீண்டும் ஒரு இனிப்பை அவள் வாயில் திணித்தான். அவர்களது நெருக்கத்தை பார்த்த ஒரு உள்ளம் பற்றி எரிந்தது.

★★★

நம் நட்சத்திரங்களின் திருமணம் முடிந்து ஒன்பது மாதங்களை கடந்திருந்தது. சிற்சில மாற்றங்களுடன் அவர்களது வாழ்க்கை தெளிந்த நீரோடையாக சென்றது. 

ருத்ரா அம்முவின் தாம்பத்திய வாழ்க்கை, எந்த முன்னேற்றமுமின்றி அப்படியே இருந்தது. அம்முவின் குற்ற உணர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் இவர்களை எப்படி பிரிக்கலாம்? தன் மனம் கவர்ந்தவளை எப்படி அடையலாம்? என கொக்கு போல் காத்திருந்தது அந்த எதிர்வீட்டு ஜன்னல். பலமுறை அவளை தூக்கிச் செல்ல முயன்று, தோல்வியுற்று, மேலும் மேலும் அவர்கள் மேல் வன்மத்தை வளர்த்துக் கொண்டிருந்தது. நேரடியாக களத்தில் இறங்கலாமா என சிந்தித்துக் கொண்டிருந்தது.

அம்முவின் முதல் வருட படிப்பு முடிய இன்னும் ஓரிரு மாதங்களே இருந்தது. அதேபோல் பிருந்தாவும் ரேகாவும் அவர்களது ஒரு வருட படிப்பை வெற்றிகரமாக முடிக்க உள்ளனர். இதில் பல நாள் அவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் மட்டமடித்தது தனி கதை.

அம்மு எப்போதும் இன்ஸ்டியூட்டில் இருந்து வீட்டுக்கு சென்று, சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு ஈஸ்வர் ப்ரொடக்ஷனுக்கு சென்று விடுவாள். ஈஸ்வரமூர்த்தி, கார்த்திக்கு ஓரளவு அனைத்தையும் கற்றுக் கொடுத்து விட்டார். அம்முவின் படிப்பு முடியும் வரை, அவளுக்கு அதிக பளு கொடுக்காமல் பார்த்து கொண்டார்கள் ஈஸ்வரமூர்த்தியும் கார்த்திக்கும். 

அன்றும் பாட நேரம் முடிந்து பெண் வீட்டிற்கு கிளம்பி கொண்டிருந்தாள். ‘தன் கார் எங்கே இருக்கிறது?’ என தேடியவாறு, வாகன தறிப்பிடத்தில் நடந்து கொண்டிருந்த பெண்ணின் கரத்தை, திடீரென ஒரு வலிமையான ஆணின் கரம் பிடித்திழுத்தது. அதை சற்றும் எதிர்பாராத பெண் ஆடவனை மோதி நின்றாள்.

திடகாத்திரமான அவனது ஸ்பரிசத்தில் விதிர்விதிர்த்துப் போனவள் அவனின் முகம் கண்டாள். அவனது கூர்மையான கண்கள், பெண்ணின் கண்களை நேர்கொண்டு சந்தித்தது. முகம் எப்போதும் இல்லாதளவு கற்பறையாக இறுகிப் போயிருந்தது.

அவனது இறுகிய முகத்தை கண்டதும், பெண்ணின் படபடப்பு அதிகரித்தது. அவளது பயத்தை, அவளது முகத்தில் கண்டவன், தன் கண்களை இறுக மூடி, தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து, தன் முகத்தை இயல்பாக்கி, “ஏய் ஏஞ்சல்! வாட் எ சர்ப்ரைஸ்! நீ இங்க என்ன பண்ற!” என, கடினப்பட்டு வரவைத்த துள்ளலுடன் கேட்டான்.

முதற்கட்ட அதிர்ச்சி விலகிய அம்மு, “நான் இங்க மூணு வருஷ கோர்ஸ் ஜாயின் பண்ணியிருக்கேன் சார். ஒரு வருஷம் முடியப்போது.” என வாய், அந்த ஆடவனுக்கு பதிலளித்தாலும், ‘இவர் இங்க என்ன பண்றார்?’ என்ற கேள்வி மனதில் தோன்றிய அதே நேரம், ‘மறுபடியும் நம்ம கிட்ட வம்பு பண்ணுவாரோ?’ என்ற பயமும் தோன்றியது. 

அவளது பயத்தை கண்டு, கோபம் கொண்ட அந்த ஆடவன், “நான் என்ன சிங்கமா? புலியா? என்னை பார்த்து இந்த பயம் பயப்படுற…” 

‘அதுங்களை பார்த்து பயப்படுறதை விட உன்னை பார்த்து தான் அதிகமா பயப்படனும். ஏன்னா நீ அதை விட கொடிய இரண்டு கால் ஜந்து.’ என மனதில் நினைத்து, “அப்படியெல்லாம் இல்லை சார். சடனா கையைப் பிடிக்கவும் பயந்துட்டேன். அந்த படபடப்பு இன்னும் இருக்கு.” என்றவள் நெஞ்சை பிடித்துக் கொண்டாள்.

அவன் கையைப் பிடித்ததற்கான உண்மையான காரணத்தை சொல்லாமல், “இட்ஸ் ஓகே! இனி என்னை பார்த்து பயப்படாம பேசு.”

“சரி சார், டைம் ஆச்சு. நான் கிளம்புறேன்.” என பேச்சை தொடராமல் நழுவு முயன்றாள்.

“என்ன அவசரம்? கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம்.” தனியாக சிக்கிய பெண்ணை விடுவதற்கு மனதில்லை.

“இல்லை சார், வேலை இருக்கு. நான் சீக்கிரம் போகணும்.” 

“வேலை எப்பவும் இருக்கும். இன்னைக்கு என் கூட கொஞ்ச நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணு.” என்றான் பிடிவாதமாக.

அதில் மிரண்டு விழித்தவள், “சார்…” 

“சார் சார்ன்னு சொல்லி, இரிடேட் பண்ணாத. கால் மீ கண்ணா.” என்றான் அஜய் கண்ணா.

ஆம்! அங்கு இருந்தது அஜய் கண்ணா. மித்ராலினி நடித்த இரண்டாவது மற்றும் நான்காவது படத்தில் வில்லனாக நடித்த, ஃபேமஸ் வில்லன் நடிகர் அஜய் கண்ணா. வரவேற்பு மேடையில் வைத்து ரிஷியை சீண்டிய அதே அஜய் கண்ணா. மித்ராவை அடைய ஆசைப்பட்ட அதே அஜய் கண்ணா.

‘என்னது பேர் சொல்லி கூப்பிடனுமா?’ என மனம் அதிர்ந்தாலும், சரி என தலையை மட்டும் உருட்டினாள். அதை கண்டவனின் முகம் அதன் இறுக்கத்தை தொலைத்து மென்னகை பூசிக் கொண்டது.

“ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ணியிருக்கோம். ஒரு கப் காபி குடிச்சிட்டு பேசலாமா!” என்றான் மென்மையாக.

சந்தேகமாக பார்த்தவளிடம், “ஹேய் ஏஞ்சல்! வெளிய போக வேண்டாம், இங்க நம்ம கேன்டின்ல சாப்பிடலாம்.” என வாய் அவளிடம் பேசினாலும், அவனது கண்கள் தங்களை சுற்றி உள்ளவர்களை கவனமாக உள்வாங்கிக் கொண்டிருந்தது.

அவனிடம் மறுக்க நினைத்தவளின் மூளையில், அன்று பிரபாவதி கூறிய தைரியமாக எதிர்த்து போராடனும் என்பது ஞாபகத்தில் வர, சரி என தலையசைத்தாள். ‘தான் வர தாமதமாகும்’ என காரோட்டிக்கு குறுஞ்செய்தி அனுப்பியவள், ருத்ராவுக்கும் ரிஷிகும், அஜய் கண்ணாவை சந்தித்ததை குறுஞ்செய்தியாக அனுப்பினாள்.

அவளது செய்கையை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு எரிச்சல் வந்தது. “ருத்ரா ஓகே. ரிஷிகிட்டயும் அவசியம் சொல்லனுமா?” என்ற கேள்வியோடு அவனது கால்கள் கேண்டினை நோக்கி திரும்பியது.

“வருவுக்குத் தெரியாமல் நான் எதுவும் செய்ய மாட்டேன். அதுவுமில்லாமல் நான் சொல்லாமலே இந்நேரம் அவங்களுக்கு விஷயம் போயிருக்கும்.” என்றவள் அவனை பின் தொடர்ந்தாள். 

அவள் சொன்னதை கேட்டு அஜய்யின் எரிச்சல் அதிகரித்தது. ரிஷிவர்மாவால் தான் மித்ராவை மிஸ் பண்ணியதாக அஜய் கண்ணா நம்பினான். அதனால் அவனுக்கு ரிஷியின் மேல் கோபம் இருந்தது.

“உன்னை சுத்தி நாலு பாடிகாட் அங்கங்க இருக்கிறத பார்த்தாலே தெரியுது.” குரலில் நக்கல் இருந்ததோ? அதை பெண் கண்டு கொள்ளவில்லை.

கேண்டீன் சென்றவர்கள் எதிரெதிர் இருக்கையில் அமர்ந்தார்கள். “நீங்க எப்படி இங்க?” என்ற பெண்ணின் கேள்விக்கு, “இந்த இன்ஸ்டியூட் எனக்கு சொந்தமானது. அம்மா பேர்ல நடத்துறோம்.”

“ஓஓஓ” என்றவளின் கைப்பேசி, சினேகிதனே, ரகசிய சினேகிதனே பாடலை இசைத்து ருத்ராவின் அழைப்பு வந்ததை தெரிவித்தது.

முகமலர்ச்சியுடன் அந்த அழைப்பை ஏற்று பேசியவளின் கைப்பேசி, அஜய் கண்ணாவிடம் வந்தது.

அவளிடமிருந்து தள்ளிச் சென்றவன், ருத்ராவிடம், சிறிது நேரம் முக இறுக்கத்துடன் பேசிவிட்டு திரும்பினான்.

★★★

அதே நேரம் பிருந்தாவை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக ரிஷிவர்மாவுக்கு தகவல் வந்தது, அவன் அடித்து பிடித்து அங்கு ஓடினான்.

அன்றைய இரவு 

அந்த எதிர் வீட்டு ஜன்னல், “ஹா ஹா ஹா.” எனப் பெருங்குரலில் சிரித்தது. “நான் உன்னை நெருங்கிட்டேன். உன்னை எப்படி என் வழிக்கு கொண்டு வரதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். இனி உங்கள் எல்லாரோட வாழ்வும் என் கையில். உங்களை நல்லா ஆட்டி வைக்கப் போறேன். உனக்காக என்னை அடிச்சவனுக்கு சரியான பாடம் கத்து கொடுக்கப் போறேன். அது இன்னும் கொஞ்ச நாள்ல நடக்கும். அதுக்கப்புறம் உனக்கான இடம் இது.” என அவனது படுக்கையை காட்டி, அவளின் ஆள் உயர நிழல் உருவிடம் பேசினான்.

ஸ்ருதி சேருமா? 

ராகம் 15

“வாட்! கம் அகைன்!” 

மித்ராவின் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்திருந்த ஆடவனிடமிருந்து, ஒருவர் அவளிடம் பேசுவதாக அலைபேசியில் வந்த தகவலை கேட்டு அதிர்ந்தான் ரிஷிவர்மா.

“???” உறுதி செய்யப்பட்ட தகவலால் கோபம் உண்டானது.

“மிரு கூட பேசிக்கிட்டு இருக்குறது யார்?” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

“???”

“ஒரு நிமிஷம் லைன்ல வெயிட் பண்ணுங்க. நான் பார்த்துட்டு வரேன்.” என்றவன் அந்தக் அழைப்பை துண்டிக்காமல் அவசர அவசரமாக வாட்ஸ் அப்பிற்கு சென்று வந்திருந்த புகைப்படத்தை பார்த்தான். அதில் அஜய் கண்ணாவின் புகைப்படம் இருக்கவும் ரிஷிவர்மாவின் கண்களில் சீற்றம் எழுந்தது.

“அது யாருன்னு உங்களுக்கு தெரியாது! நான் கேட்கும் போது பதில் சொல்லாம போட்டோவை பார்க்க சொல்லி மழுப்புறீங்க? வாயை திறந்து பதில் சொல்றதுக்கு என்ன?” என தன் சீற்றத்தை மறைக்காமல் அவரிடம் காட்டினான்.

“???”

கிடைத்த பதில் எரிச்சலை உண்டாக்கியது. “அவன் பேமஸ் ஆக்டர் தான், அதுக்காக அவனை மிரு பக்கத்துல விட்டுடுவீங்களா?”  

“???”

கண்களை இறுக மூடி தன் எரிச்சலை குறைக்க முயன்றவன், “ஓகே! கொஞ்சம் தள்ளி நின்னு அவங்கள கவனமா பார்த்துக்கோங்க. மிருவோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம்.” என கட்டளையிட்டு தொடர்பை துண்டிக்க, அம்முவிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. 

அதைப் படித்து முடித்தவன் இது நல்லதுக்கா? கெட்டதுக்கா? என குழம்பி, ஆனது ஆகட்டும் நேர்ல போய் பார்த்துக்கலாம் என முடிவு செய்து தன் வாகனத்தை நோக்கி சென்றான்.

அவன் காரில் ஏறவும், அதற்காகவே காத்திருந்தது போல் மீண்டும் அவனது கைப்பேசி ஒலித்தது. இப்போது அழைப்பு வந்தது பிருந்தாவின் எண்ணிலிருந்து.

“சொல்லு பிந்துமா, திங்ஸ் எல்லாம் வாங்கியாச்சா?” என்ற குரலில் கடுமை மறைந்திருந்தது.

ஆனால் பிருந்தாவின் கைப்பேசியில் வேறொரு பெண்ணின் குரல் கேட்டது. ரிஷிவர்மாவின் புருவங்கள் முடிச்சிட்டது. அவர் சொன்னதை கேட்டவனுக்கு தலையில் இறங்கியதோ பேரிடி.

“எந்த ஹாஸ்பிடல்?”

“இதோ உடனே வரேன்.” நொடியும் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு விரைந்தது அவனது வாகனம்.

மிருவை மறந்து, அஜய் கண்ணாவை மறந்து அடித்துப் பிடித்து ஓடுமளவு அப்படி என்ன செய்தி வந்தது?

இந்த மொபைல் போனை வைத்திருந்த பெண்ணுக்கு சிறு விபத்து. பெண் மயக்கமாகிவிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கிறார் என தகவல் வந்தது.

★★★

பிருந்தாவை ரிஷிவர்மா வெளியே கூட்டி செல்ல மாட்டான். அப்படி சென்றால் ஊடகங்களின் பார்வை பிருந்தாவின் மேல் விழும். அவளது புகைப்படம் பத்திரிகைகளில் வர ஆரம்பிக்கும். அதன் பிறகு அவளது சுதந்திரம் பறி போய்விடும், என்பதால் அதை முற்றிலும் தவிர்த்து விடுவான்.

திருமணத்தன்று, செய்தித்தாளில், முழு அலங்காரத்தில் புகைப்படமாக பார்த்த பெண்ணை, இப்போது நேரில் பார்த்தால் யாருக்கும் அடையாளம் தெரியாது. அதனால் பொதுமக்கள், செய்தியாளர்களின் பார்வை அவள் மீது விழாது. அதனால் அவளால் சுகந்திரமாக நடமாட முடியும்.

அப்படிப்பட்ட சுதந்திரம் ரிஷிவர்மாவுக்கும் மித்ராளினிக்கும் கிடையாது. அவர்களைப் பார்த்தாலே ஒரு பெரிய கூட்டம் கூடிவிடும். அதனால் தகுந்த பாதுகாப்போடு அல்லது தங்களை மறைத்துக் கொண்டு செல்வார்கள். 

ருத்ரேஸ்வரன் தனது வேலை பளுவால் அவ்வளவாக வெளியில் செல்ல மாட்டான். அவன் செல்ல மாட்டான் என்பதை விட அவனுக்கு நேரம் கிடைக்காது என்பது சரியாக இருக்கும். அவனது அயராத உழைப்பால் கடந்த ஏழு ஆண்டுகளில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளான். பல முக்கிய நகரங்களில் அவனது சாப்ட்வேர் நிறுவனம் கிளை பரப்பி உள்ளது, அதில் வெளிநாடும் அடக்கம்.

காலையில் அவனது நிறுவனத்துக்கு செல்பவன், இருள் சூழ்ந்த பிறகே வீடு திரும்புவான். சிறிது நேரம் மனைவியுடன் பேசிவிட்டு, அவளை அணைத்துக்கொண்டு தூங்குபவனின் பொழுது காலையில் விடியும். இது அவனது அன்றாட வாடிக்கையானது.

எப்போதாவது அம்முவை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் செல்வான். அவர்களை அடையாளம் கண்டுகொண்டு யாரும் பேச முயன்றால், ஒற்றைப் பார்வையில் அவர்களை பத்தடி தள்ளி நிறுத்துவான். 

ஒரு நாள் பொறுக்க மாட்டாமல் அம்மு கேட்டே விட்டாள், “மிஞ்சி மிஞ்சி போனா ஒரு ஆட்டோகிராப் கேட்பாங்க, இல்லை நம்ம கூட ஒரு போட்டோ எடுப்பாங்க, அதுக்கு எதுக்கு அவங்களை இப்படி முறைக்கிற? பாவம் எவ்வளவு பயந்துட்டு போறாங்க.” 

“ஐ டோன்ட் லைக் இட்!” என பேச்சை கத்தரித்தான் ருத்ரேஸ்வரன்.

“வர வர உனக்கு ரொம்ப கோபம் வருது கட்டவண்டி.” என அழுத்து கொண்டாள் பெண்.

“நான் கோபப்படாமல் பேசுற ஒரே ஆள் நீ தான் நீலாம்பரி.” என தோளை குளுக்கினான் ருத்ரேஷ்வரன்.

“நம்ப முடியலையே…” ராகம் இழுத்தாள். 

“நீ நம்பினாலும் நம்பளைனாலும் அதுதான் நிஜம்.”

“ஏன்?”

“ஏன்னா! என்ன சொல்றது, எனக்கு உன் மேல் கோபமே வராது.”

“பொய் சொல்லாத ருத்ரா! எத்தன தடவ என் மேல கோபப்பட்டிருக்க?” என நொடித்தாள்.

“அது எல்லாம், எங்க உன்னை மிஸ் பண்ணிடுவேனோன்னு பயத்துல வந்தது. நல்லா யோசிச்சு பார். நம்ம கல்யாணம் முடிவானதுக்கு அப்புறம் நான் உன்கிட்ட கோபப்பட்டிருக்கேனா?” என்ற அவனின் கேள்விக்கு பெண்ணின் கண்கள் ஆச்சரியமாக விரிந்தது.

ஆம்! அது மறுக்க முடியாத உண்மை. அவள் திருமணத்திற்கு சம்மதித்த பிறகு ருத்ரா, அவளிடம் கோபம் கொண்டதில்லை. தன் சுயநலத்துக்காக அவள் திருமணத்தை தள்ளி வைத்த போதும் அவளிடம் கோபம் கொண்டதில்லை. அவள் மூளையில் ஆழப் பதிந்திருந்த அந்த கொடூர நாளின் நினைவுகளின் தாக்கத்தால், தன்னை ஆசையுடன் நெருங்கியவனை விலக்கி நிறுத்திய போதும் கூட ருத்ரா அவளிடம் கோபம் கொண்டதில்லை. தனது படிப்பு செலவு ரிஷிவர்மாவுடையது என அவள் சொன்னபோதும் அவளிடம் கோபம் கொண்டதில்லை. தனது பாதி நேரம் ரிஷிவர்மாவுடன் கழிந்த போதும் அவளிடம் கோபம் கொண்டதில்லை. 

பெண்ணின் முகம் மலர்ந்து விகாசித்தது. அவளது மலர் முகத்தை ரசித்தவனின் விரல்கள், அவளது மூக்கை நிமிண்டி, “என்ன! என் மகாராணிக்கு நான் சொன்னது உண்மைன்னு புரிஞ்சதா?”

‘ம்ம்ம்’ என தலையை உருட்டியவள், அதன் பிறகு அவனுடன் வெளியே செல்வதை மிகவும் குறைத்துக் கொண்டாள். ஏன் தன் ஆசைக்காக மற்றவர்கள் பாதிக்கப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணம் தான். அதனால் ருத்ராவுடன் வெளியே செல்லும் ஆசையை மூட்டை கட்டி வைத்த அம்மு, ரிஷியுடன் வெளியே செல்வது அதிகமானது. இது ஊடகங்களின் கண்களை உறுத்த, மீண்டும் திரை ஜோடிகள் கிசுகிசுக்கப்பட்டனர். இது அவர்களுக்கு பழகிப்போன ஒன்று என்றதால் அதைக் கண்டுகொள்ளாமல் கடந்து விடுவார்கள். கண்டுகொண்டாலும் அதை ஒன்றும் செய்ய முடியாது என்பது வேறு விஷயம்.

இதை வைத்து ரியல் ஜோடிகளுக்கு பிளவு ஏற்படப்போவது தெரியாமல் போனது யாரின் தவறு???

பிருந்தா ரேகாவிற்கு அவர்களது படிப்பு சம்பந்தமாக நிறைய பொருட்கள் தேவைப்படும். அதை வாங்க எப்போதும் இருவரும் சேர்ந்தே போவார்கள்.

அவர்களை யாருக்கும் அடையாளம் தெரியாது என்பதால் பாதுகாப்பு தேவையில்லை. ரிஷி, அவர்களுக்கென்றே ஒரு காரை டிரைவருடன் கொடுத்திருப்பதால் பயமில்லை. அதனால் சுதந்திரமாக சென்று வருவார்கள். முதல் சில நாட்கள் கார்த்திக் அவர்களுடன் சென்று, இடங்களை பழக்கப்படுத்தி விட்டான். இப்போது தனியாகவே சென்று வருவார்கள்.

அன்றும் அப்படித்தான் தங்கள் பயிற்சிக்கு தேவையான பொருட்களை வாங்க பிருந்தா மாலிற்கு சென்றிருந்தாள். ரேகாவின் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் அவள் மட்டும் தனியே செல்லும் படியானது. 

அது ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். ஏறி இறங்கி தேவையான பொருட்களை வாங்கி முடித்தவள், பொருட்களை கொண்டு வந்து காரில் வைத்துவிட்டு கிளம்ப தயாரான போது, ஒரு பொருளை வாங்க மறந்தது உரைக்க, கார் ஓட்டுநரிடம் காத்திருக்க சொல்லிவிட்டு மீண்டும் காம்ப்ளக்ஸினுள் ஓடினாள்.

அந்த பொருளை வாங்கிவிட்டு திரும்பி வரும்போது ஒரு வாகனம் அவளை இடிப்பது போல் வந்தது. உடல் சோர்வுடன் நடந்து வந்த பிந்து, அந்த வாகனத்தை கவனிக்காமல் நடக்க, மென்மையான ஒரு பெண்ணின் கரம் அவளைப் பிடித்திழுத்து காப்பாற்றியது. அப்போதே தன்னுணர்வு பெற்ற பிருந்தா திரும்பினாள். மெதுவாக வந்த வாகனமும் பிரேக் அடித்து நின்றது.

அது வாகன தரிப்பிடம் செல்லும் பாதை என்பதாலும், அந்த வாகனமும் குறைந்த வேகத்திலேயே வந்ததாலும் உடனே நிறுத்த முடிந்தது. ஆனால் இந்த எதிர்பாராத அதிர்ச்சியில் பிந்து மயக்கமானால்.

பிந்துவை காப்பாற்றிய அந்தப் பெண், காரிலிருந்து இறங்கிய டிரைவரின் உதவியுடன், அவளை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, பிருந்தாவின் கைப்பேசியில் ரிஷிக்கு தகவலை தெரிவித்தாள்.

★★★

மகிழ்ச்சியில் முகம் எல்லாம் ஜொலிக்க, பிருந்தாவின் கரம் பற்றி பேசிக்கொண்டிருந்த ரிஷிவர்மா, கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்ப, அங்கு நின்றவர்களை கண்டு அவனது மகிழ்ச்சி மேலும் பெருகியது.

தனக்கான ஜீவனை காணவும் மூளை வேலை நிறுத்தம் செய்ய, எதைப் பற்றியும் சிந்திக்காமல், சுற்றம் மறந்து அம்முவை கட்டிக்கொண்டு, “மிரு பேபி!” என மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தான் ரிஷிவர்மா.

ஆம்! வந்தது ருத்ராவும் அம்முவும். பிருந்தாவை மருத்துவமனையில் அனுமதித்திருந்த தகவலை கேட்டு கிளம்பிய ரிஷி, சிறிது நேரத்தில் சுயம் பெற்று ருத்ராவை அழைத்து தகவலை தெரிவித்தவன், அம்முவை அழைத்து வரச் சொல்லியிருந்தான். உடனே ருத்ரா அம்முவை அழைத்து, விஷயத்தை சொல்லாமல் பேசியவன், அஜய் கண்ணாவிடமும் பேசி, தான் வரும் வரை அவளுக்கு துணையாக, அவனை இருக்கச் சொல்லி கேட்டுக் கொண்டவன், நேரே சென்று அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனை வந்தான். 

அங்கு வரும் வரை அம்முவிற்கு விஷயம் தெரியாது. மருத்துவமனையில் இறங்கவும் யாருக்கு என்ன ஆனது என பதைபதைத்து வந்தவளை வரவேற்றது ரிஷியின் மலர்ந்த முகமும், அவன் கைப்பற்றி இருந்த பிருந்தாவின் நாண முகமும். 

ஒன்றும் புரியாமல் முழித்த அம்முவிடம், “நான் அப்பா ஆகிட்டேன் பேபி. நீ சித்தி ஆகிட்ட.” என மகிழ்ச்சியான செய்தியை, மகிழ்ச்சியாக சொன்னான்.

அந்த செய்தி தந்த தித்திப்பு அவர்களையும் தொத்திக் கொள்ள இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். சகோதரிகள் இருவரும் ஆராத்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிறிது நேரத்திற்கு பிறகே அங்கு தங்களுக்கு அறிமுகமில்லாத ஒரு பெண் அமர்ந்திருப்பதை கண்ட அம்மு கேள்வியாக அவளை பார்த்தாள். 

“பிந்து அவங்க யாரு?” கேள்வி தமக்கையிடம் இருந்தாலும் பார்வை அந்தப் பெண்ணின் மேல் நிலைத்தது.

“அவங்க பேர் எலிசா. நான் கார்ல அடிபட தெரிஞ்சப்ப, என்னை காப்பாத்தி இங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணவங்க.”

அம்முவும் அந்த பெண்ணுக்கு நன்றி தெரிவிக்க சங்கடத்துடன் அதை ஏற்றுக் கொண்டாள் எலிசா. அவளைப் பற்றிய விவரம் கேட்க. அவளது பெற்றோர்கள் கிராமத்தில் வசிப்பதாகவும், கடந்த ஆறு மாதமாக அவள் சென்னையில் வேலை தேடி கொண்டிருப்பதாகவும் தெரிவித்தாள்.

“நீங்க பிந்து கூட இருந்து அவளை பார்த்துக்கோங்க. உங்களுக்கான சம்பளத்தை நான் தர்றேன்.” என ரிஷி எலிசாவை பிருந்தாவுக்கு துணையாக வேலைக்கு அமர்த்தினான். 

“ஆமா, நீங்க பிந்துவுக்கு துணையா இருந்தால் நாங்க நிம்மதியா எங்க வேலையை பார்ப்போம்.” என அம்முவும் அதற்கு வழி மொழிந்தாள்.

பிருந்தாவை காப்பாற்றிய நன்றி கடனுக்காகவே ரிஷிவர்மா இதை செய்தான். தாய்மை அடைந்திருக்கும் பெண்ணுக்கு, ஒரு பெண்ணின் உதவி தேவை என புரிந்த அம்முவும் அதற்கு சம்மதித்தாள். ஆனால் ருத்ரேஷ்வரனுக்கு அந்தப் பெண்ணை ஏனோ பிடிக்கவில்லை.

அவளது ஆர்வப் பார்வை ரிஷிவர்மாவையும், ருத்ரேஸ்வரனையும் தொடர்ந்ததே அதற்கு காரணம். இது அவர்கள் இருக்கும் துறையில் சாதாரணமான ஒன்று என்றாலும், பெண்களை எட்ட நிறுத்தும் ருத்ராவிற்கு அந்தப் பார்வை பிடிக்காமல் போனது.

அஜய் கண்ணாவை ரிஷிவர்மாவுக்கு பிடிக்காது, ருத்ரேஸ்வரனுக்கு?

எலிசாவை ருத்ரேஸ்வரனுக்கு பிடிக்கவில்லை, ரிஷிவர்மாவுக்கு?

★★★

“வரு முகத்தில் எவ்வளவு சந்தோஷம்! தான் ஒரு அனாதைன்னு அவன் எவ்வளவு வேதனை பட்டு இருக்கான்னு தெரியுமா… இப்போ அவனுக்கே அவனுக்கான ஒரு உயிர் வரப்போகுது கட்டவண்டி. எந்த ஒரு சொந்தமும் இல்லாத, என்னையவே அவ்வளவு கேர் எடுத்து பார்த்துக்கிட்டான். இப்ப அவனோட குழந்தையை உள்ளங்கையில் வச்சு தாங்குவான்.” என ருத்ராவின் மார்பில் தலை வைத்து படுத்திருந்த அம்மு, அவளுக்கிருந்த மகிழ்ச்சியில் எங்கு பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம், எதை பேசுகிறோம் என சிந்திக்காது தன் இஷ்டப்படி பேசி, அவனை கடுப்பேற்றிக் கொண்டிருந்தாள். 

அவள் தலையை கோதிக்கொண்டிருந்த அவனது கைகள், அதன் வேலையை நிறுத்தி இருந்ததை அவள் உணரவே இல்லை. அவளது பேச்சு நிற்காமல் தொடர்ந்தது. 

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத ருத்ரா, “போதும் நீலாம்பரி. அந்த ரிஷி புராணத்தை நிறுத்து. என்னை பார்த்தால் உனக்கு பாவமா தெரியலையா? என் காதில் ரத்தத்தை வரவச்சிடுவ போல!”

செல்லமாக அவன் மார்பில் குத்தி, “போ ருத்ரா, நான் எவ்வளவு சந்தோஷமா பேசிக்கிட்டு இருக்கேன். நீ என்னடானா விளையாடிக்கிட்டு இருக்க.” என குறைபட்டவள் அவனை விட்டு விலகிப் படுக்க முயன்றாள். அவளை தடுத்து மீண்டும் தன்மேல் போட்டுக் கொண்டவன். “அம்மா! தாயே! நான் எதுவும் சொல்லல, எது பேசுறதா இருந்தாலும் இப்படியே பேசு.” என தனக்குள் அவளை இறுக்கிக் கொண்டான்.

“என்னை விடுடா முரட்டு பயலே! இவ்வளவு டைட்டா புடிச்சா எனக்கு மூச்சு முட்டாதா…”

“அதெல்லாம் உனக்கு முட்டாது. உன்னோட வரு புராணத்தை கேட்டு எனக்கு தான் மூச்சு முட்டுது. அதை தொடர்ந்து கேட்க எனக்கு எனர்ஜி வேண்டாம். அது தான் எனர்ஜியை ஏத்திக்கிட்டு இருக்கேன்.”

“என்னது, எனர்ஜி ஏத்துறையா! நான் என்ன உனக்கு எனர்ஜி ட்ரிங்கா!” என கேட்டு, அவளது தளிர்க்கரங்களால் அவன் மார்பில் அடித்தாள்.

அவளது அடிகள் அனைத்தும் அவனது திடகாத்திரமான உடலில், எறும்பு கடித்தது போலிருந்தது. “விடுடி ராட்சசி! வலிக்குது!” என பொய்யாக அலறினான்.

“அப்படி தான் அடிப்பேன். நல்லா வலிக்கட்டும். உனக்கு, என்னை பார்த்தா எனர்ஜி ட்ரிங்க் மாதிரியா இருக்கு…” மீண்டும் அதையே கேட்டு வைத்தாள்.

“அஃப்கோர்ஸ் டார்லிங்! எங்க இல்லன்னு சொல்லு பாக்கலாம்.” என்றான் மந்தகாச புன்னகையுடன்.

“ம்கும்” என நொடித்தவள் மீண்டும், “வரு என்னை படிக்க சொல்லி அவ்வளவு கெஞ்சி இருக்கான், படிக்கவே மாட்டேன்னு நானும் பிடிவாதமா இருந்தேன். என்ன என்னமோ சொல்லி பார்த்தான், நான் கேட்கவே இல்லை. நீ படிக்க சொல்லவும் நான் தலையாட்டிடேனா, வருவுக்கு அவ்வளவு சந்தோஷம். ஆனா எனக்கு வரு சொன்னப்ப கேட்காம, நீ சொல்லி கேட்கவும் ரொம்ப கில்டியா ஃபீல் ஆச்சு. வருவை மூன்றாம் மனுஷனா நினைச்சு, அவன் காசுல நான் படிக்காம இருந்தேன்னு வரு நினைச்சிட கூடாதுல, அதனாலதான் வருவை ஃபிஸ் கட்ட சொன்னேன். அதுல உன்னையும் ஹர்ட் பண்ணிட்டேன்ல்ல ருத்ரா?” என ஏற்கனவே பல நூறு தடவை சொன்னதையே மீண்டும் சொன்னாள். ருத்ராவிற்கு இதை கேட்டு அழுத்தே விட்டது.

‘குரங்கு குட்டி! எங்க இருந்து எங்க தாவுறா! உன்னை வச்சுக்கிட்டு என்னதான் பண்றதோ…’ என செல்லமாக அவளை மனதில் கடிந்த ருத்ரா, அவள் பேச்சை நிறுத்த அவள் இதழை சிறை செய்தான்.

திடீரென ஏற்பட்ட இதழ் தீண்டலில் பெண் திகைத்து விழித்தாள். ஓரிரு வினாடிகளே நீடித்தது அவளது திகைப்பு. அவனது முத்தத்தின் தித்திப்பில் மயங்கிய பெண்ணின் விழிகள் மயக்கத்துடன் மூடியது. நட்சத்திர பெண்ணின் மயக்கம் முரட்டு ஆண்னையும் மயக்கியது.

மயங்கிய ஜோடி கிளிகளின், இதழ்கள் மௌனமாக பேசிக்கொண்டது. மௌன வார்த்தைகள் அழகான கவிதையானது. பெண்ணின் இசைவு ஆண் அவனை முன்னேற தூண்டியது. உடலில் உள்ள ஹார்மோன்கள் எல்லாம் ஹார்மோனியம் வாசித்தது. 

அழகான இசையின் நடுவில் அபஸ்வரமாக அவளது கடந்த காலம்??? 

தன்னை மறந்தவன், அவள் நிலையையும் மறந்தான். எப்போதும் போல் அந்தப் பெண்மையின் வெப்பத்தில் தொலைய, முத்த ஊர்வலம் முகம் தாண்டி, கழுத்தில் பயணித்து கீழே இறங்கியது. அதுவரை மெழுகாக உருகிய பெண்ணின் உடல் எக்தாக இறுகியது.

நொடியில் அவளது நிலையை உணர்ந்து கொண்டவனின் உடல் விரைத்தது. சட்டென்று மோகம் மறைந்து தாய்மை குடியேறியது. 

ஒன்றுமே நடவாதது போல், மீண்டும் அவளை தன் மீது போட்டு அணைத்துக் கொண்டு அவளது தலைகோதினான். அதில் பெண்ணின் பயம் விலகி உறங்கத் தொடங்கினாள். அவளது நிலை தெரிந்தும் எல்லை மீறிய தன் மீதே கோபம் கொண்டான் ருத்ரேஸ்வரன்.

விழலுக்கு இறைத்த நீர் என தெரிந்தும், ‘இனி அவளிடம் நெருங்க கூடாது.’ என முடிவெடுத்தான். நடக்காத ஒன்றை, நடத்திக் காட்ட வேண்டும் என நினைத்தால் நடக்குமா???

ஆம்! அது நடக்காத ஒன்று. இன்று என்று இல்லை, திருமணத்திற்கு பிறகு பல முறை அவன் தனது கட்டுப்பாடை இழந்துள்ளான். அம்முவின் உடல் மாற்றத்தை உணர்ந்து நொடியில் சுதாரித்து கொள்வான். அது அம்முவின் மனதில் குற்ற உணர்வாக தேங்கியது.

அழகாக ஓடும் நதி நீரே கடலில் சங்கமிக்கும். தேங்கிய நீர் சாக்கடையாகும்.

அம்முவின் தேங்கிய குற்ற உணர்வு நாளுக்கு நாள் அதிகரித்தது. அதிலும் இன்றைய நாளின் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்த காத்திருந்தது. இது தம்பதிகளிடம் விரிசலை உண்டாக்க போகிறது. அந்த இடைவேளையில் நுழைய, ஒருவன் எதிர் வீட்டில் தவம் கிடப்பது தெரியாமல் போனது விதியின் விளையாட்டா???

★★★

மறுநாள் காலை

“எனக்கு டைவர்ஸ் வேணும் ருத்ரா!!!” எனக் கேட்டு, ருத்ரேஸ்வரனை கடுங்கோபத்திற்கு ஆளாக்கினால் மித்ராளினியாகிய அம்மு என்கிற அமிர்தா…..

ஸ்ருதி தப்பியது ராகத்தில்….

ராகம் 16

காரிருள்! ஆள் அரவமற்ற கடற்கரை! பேரிரைச்சலாக அலையோசை! கையைக் கட்டிக் கொண்டு எந்தவித அசைவுமின்றி, பெண் சிலை ஒன்று தனியே நின்றது. நிலவின் ஒளி பெண் சிலையில் பட்டு அதன் பிம்பம் கடல் நீரில் மங்கலாக பிரதிபலித்தது. 

கடல் அலைகள்! பெண்ணின் பாதத்தை ஆக்ரோஷமாக முத்தமிட்டது. அவள் மனதின் அலைக்கழிப்பு போலவே, அன்றைய அலைகளின் அலைக்கழிப்பும் சற்று அதிகமாகவே காணப்பட்டது.

ஆம்! நட்சத்திர பெண்ணின் உள்ளம் அந்தக் கடலலைகள் போல் நிலை இல்லாமல் தவித்தது. தேகத்தை தீண்டும் குளுமையான காற்றையும், பாதத்தில் படியும் ஜில்லென்ற நீரையும் உணராத மோன சிலையாக நின்றாள். வெளி பார்வைக்கு அமைதியாக தெரிந்தாலும் உள்ளத்திலோ பெரும் போராட்டம்.

பெண்ணின் மனக்கண்ணில் ரிஷியின் மகிழ்ச்சியான முகம் தோன்றி அவளை இம்சித்தது. எண்ணற்ற கேள்விகள் சூறாவளியாக மனதை சுழற்றியது.

‘நான் ருத்ராவுக்கு ஏற்ற மனைவியா? நான் ருத்ராவுக்கு செய்வது துரோகம் இல்லையா? நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். ருத்ராவை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னதுல பிடிவாதமா இருந்திருக்கணும்.’ என மனதை போட்டு குழப்பிக் கொண்டிருந்தாள் கட்டவண்டியின் நீலாம்பரி.

ருத்ராவின் அணைப்பில் உறங்கிய அம்முவின் தூக்கம் சிறிது நேரத்திலேயே கலைந்தது. கணவனின் முகம் கண்டால், அவன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்.

அவளை பத்திரமாகச் சிறை வைத்திருந்த அவனது கையை, அவனின் தூக்கம் கலையாமல் விலக்கி மெதுவாக எழுந்தாள். அப்போது புரண்டு படுத்தவன் மீண்டும் அவளை அணைத்துக் கொண்டு தூக்கத்தை தொடர்ந்தான். அம்முவின் செவ்விதழ் லேசாக விரிந்தது.

சிறிது நேரம் அசையாமல் படுத்திருந்தவள், அவன் ஆழ்ந்து தூங்கியதும், மெல்ல எழுந்து வீட்டின் பின் வாசலில் வெளியேறி கடற்கரையை வந்தடைந்தாள். தனிமையில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய நிறைய விஷயங்கள் அவள் மனதை அழுத்திக் கொண்டிருந்தது. அவள் இருந்த குழப்பத்தில், சுற்றியிருந்த தனிமையும் இருளும் அவளுக்கு பயத்தை அளிக்கவில்லை. மாறாக அதீத தைரியத்தை கொடுத்தது. 

‘வருவின் முகத்தில் இன்று இருந்த மகிழ்ச்சியை என்றேனும் என்னால் ருத்ராவிற்கு கொடுக்க முடியுமா? கணவனுக்கு மனைவியிடம் தோன்றும் இயல்பான தாபத்தை கூட எனக்காக மறைத்துக் கொள்ளும் ருத்ராவின் காதலுக்கு நான் தகுதியானவளா? என்னை காதலித்த ஒரே காரணத்திற்காக அவனது உணர்ச்சிகள் அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து வாழ வேண்டுமா? ருத்ரேஸ்வரனுக்கு வாரிசு இல்லாமல் போக வேண்டுமா? அதுக்கு நான் இடைஞ்சலாக இருக்கலாமா?” 

அவள் முன்பிருந்த எண்ணற்ற கேள்விகளுக்கான விடை இரண்டு: ஒன்று அவள் மனதிலிருக்கும் பழைய கசடுகளை நீக்கிவிட்டு கணவனை தன்னுள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அல்லது அவனை விட்டு நிரந்தரமாக பிரிய வேண்டும்: இரண்டையுமே அவளால் செய்ய முடியாது, ஒன்று! மறக்க நினைக்கும் நினைவுகளின் கொடூரம், தப்பான நேரத்தில் மேலெழும்பி அவளை வதைக்கிறது, அடுத்தது காதல் கொண்ட மனது அவனை விட்டுக் கொடுக்க தயாரில்லை.

அவள் மனக்கண்ணில், சற்று நேரத்திற்கு முன் தன்னை ஆக்கிரமித்த ருத்ராவின் தாப முகம் வந்தது. அவன் தேவையை நிறைவேற்றாத நான் பிரிய வேண்டும் என சிந்தித்த அதே நேரம்,

‘நம்ம உணர்வுகளை எல்லார் கூடவும் ஷேர் பண்ண முடியாது நீலாம்பரி. அது மனசுக்கு நெருக்கமானவங்க கூட மட்டுமே முடியும். என்னோட மொத்த உணர்வையும் பார்க்கக் கூடிய ஒரே ஆள் நீ மட்டுமே. நான் நானா இருப்பது உன் கூட இருக்கும்போது மட்டுமே. வேற யார் கூடவும் என்னால் இயல்பா இருக்க முடியாது.’ என என்றோ ருத்ரேஸ்வரன் சொன்னது நினைவில் வந்து, அவளை பிரிவு என்ற முடிவை எடுக்க விடாமல் தடுத்தது. தலையை பிடித்துக் கொண்டாள். தலைவலி வரும் போல் இருந்தது.

ரிஷியின் மகிழ்ச்சியான முகம் மீண்டும் மணக்கண்ணில் தோன்றியது, கூடவே ருத்ராவின் தாப முகமும். தேங்கி கிடந்த குற்ற உணர்வு மேலெழுந்து ஒரு முடிவை எடுக்க வைத்தது.

ஆம்! அவள் முடிவெடுத்துவிட்டாள். ருத்ராவின் மகிழ்ச்சிக்கு தான் குறுக்கே நிற்கக்கூடாது. அவன் வாழ்வை விட்டு தான் விலகினால், முதலில் சிறிது நாட்கள் வருந்தினாலும், பிறகு அவனைப் புரிந்து கொள்ளும் நல்ல வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பான். பின்னர் குழந்தை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பான் என நம்பியது அந்த பேதை உள்ளம்.

மணக்கண்ணில் அந்தக் காட்சியை ஓட்டி பார்த்தாள். நினைவே கசந்து வழிந்தது. ஆனால் அவனது வாழ்வை இனிப்பாக்க இதை விட்டால் வேறு வழி இல்லை என முடிவு செய்தால்.

பைத்தியக்காரி! அவளுக்கு எங்கே தெரியப் போகிறது; இனி மயக்கத்தில் கூட அவன் கரங்கள் இன்னொரு பெண்ணை தீண்டாது என்று! அப்படி தீண்டுவதென்றால் கடந்த ஐந்து வருடங்களில் எத்தனையோ பெண்களை அவன் தீண்டி இருக்கக்கூடும் என்று! இனி ருத்ராவின் வாழ்வில் அவளைத் தவிர இன்னொரு பெண்ணுக்கு இடமில்லை என்று! அப்படி இருக்குமானால் அது அவள் மணிவயிற்றில் வரப்போகும் அவர்கள் மகவை அன்றி வேறில்லை என்று! இது தெரியாமல் அவனை விலகிச் செல்ல முடிவெடுத்தாள் அப்பாவி பெண் மான்.

அவள் முடிவெடுத்த நேரம், அவள் தோளை பிடித்து தன்னை நோக்கி திருப்பியது ருத்ராவின் இரும்புக்கரம். அவளது விழி நீரை ருத்ராவிடமிருந்து மறைக்க சுற்றியிருந்த இருள் உதவியது.

“என்ன அம்மு தூக்கம் வரலையா? இந்நேரத்துக்கு இங்க வந்து தனியா நிக்கிற. என்னை எழுப்பி இருக்கலாம்ல.” 

“நீங்க நல்லா தூங்கிட்டு இருந்தீங்க. எழுப்ப மனசு வரல.” என என்றும் இல்லாத மரியாதையுடன் பட்டும்படாமல் பதில் அளித்தால் அம்மு. அந்த மாற்றத்தை ருத்ரா உணரவில்லை.

“இந்த குளிர்ல, ஜில் தண்ணீல நின்னு டிரஸ்ஸை நனைச்சுக்கிட்டு இருக்க, உடம்புக்கு ஏதாவது வரப்போகுது வா வீட்டுக்கு போகலாம்.” 

அப்போதுதான் தன்னை குனிந்து பார்த்தாள், கடல் நீரில் அவள் போட்டிருந்த நைட் பேண்ட் பாதிக்கும் மேல் நனைந்திருந்தது. “ம்…” ஒரு பெருமூச்சுடன் அவனுடன் இணைந்து நடந்தாள்.

சோலார் விளக்கின் ஒளிச்சிதரலில் தோட்டம் ஜொலித்தது. தோட்டத்துச் செடிகளில் மொட்டு அரும்பியிருந்தது. அதை காணவும் பெண்ணின் கண்கள் மீண்டும் கலங்கியது, அவள் கரம் தன் அடிவயிற்றை பற்றியது, என்றேனும் இப்படி ஒரு மொட்டு தன்னுள் முளைக்குமா என்று. 

அதன்பிறகு யோசிக்கவில்லை அவள் எடுத்த பிரிவு என்ற முடிவு வலுப்பெற்றது.

★★★

மறுநாள் காலை

எழுந்ததிலிருந்து அம்முவிடம் காணப்பட்ட தடுமாற்றத்தை பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரேஸ்வரன். எதை செய்தாலும் தவறாக செய்துவிட்டு மீண்டும் செய்தாள். 

சம்பந்தமே இல்லாத கலரில் உடையை எடுத்தாள். ருத்ரா அதை சுட்டிக்காட்டவும் தலையில் அடித்துக் கொண்டு மாற்றி எடுத்தாள். நெற்றி பொட்டு கோணலாக இருந்தது. அதைக் கண்ட ருத்ரா அவளை படுக்கையில் அமர வைத்து, பொட்டை சரி செய்து கொண்டே, “என் நீலாம்பரியின் மனசை போட்டு என்ன குடையுது. காலையிலிருந்து எல்லாத்தையும் தப்பும் தவறுமா செஞ்சுகிட்டிருக்கா?” என்றான் வாஞ்சையாக.

அவள் கண்கள் குளம் கட்டியது. அதைக் கண்டு பதறியவன், “என்னடா அம்மு! என்னாச்சு? ஏன் கண் கலங்குகிறா? இன்ஸ்டியூட்டில் உன்னை யாராவது ஏதாவது சொல்லிட்டாங்களா? இரு அவங்களை உண்டு இல்லைன்னு பண்றேன்.” என்றவன் தன் அலைபேசியை எடுத்தான். 

அவன் அலைபேசியை பறித்து, அனைத்து தூக்கி போட்டாள். கேள்வியாக பார்த்தவனிடம், “அதெல்லாம் எந்த பிரச்சினையும் இல்லை…” என்றவளின் குரல் கரகரத்தது. “அப்ப வீட்ல யாரும்…” என ஆரம்பித்தவனின் பேச்சு தடைப்பட்டது அவளது பதறிய உடல்வாகில்.

அவள் விழிக்குள் ஊடுருவியவன், “அப்ப இதுக்கு என்ன அர்த்தம்?” கலங்கிய அவள் கண்களை காட்டினான்.

தன் விழியை தாழ்த்திக் கொண்டவள், கேள்விக்கான பதிலை நேரடியாக சொல்லாமல், “எனக்கு ஒன்னு வேணும். உங்களால் தர முடியுமா?” என கேள்வியாலே அவனுக்கு கொக்கியிட்டாள். வாக்கியத்தில் சேர்ந்திருந்த மரியாதையை இன்னும் அவன் உணரவில்லை.

அவள் முகத்தை வலுக்கட்டாயமாக நிமிர்த்தி, தன் கண்களை சந்திக்க வைத்து, “என்ன வேணும்னு சொல்லு. இந்த உலகத்தையே உன் காலடியில் போட நான் ரெடியா இருக்கேன்.”

“சினிமா டயலாகை நிறுத்திட்டு, நான் கேட்கிறதை கண்டிப்பா கொடுப்பேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணுங்க.” என வலது கையை நீட்டினாள். அந்த கையை பற்றி கீழே இறக்கியவன், “உனக்கு என்ன வேணும்னு மட்டும் சொல்லு.”

“ம்ஹூம் ப்ராமிஸ் பண்ணுங்க.” அடம்பிடித்தாள். இப்போது அவள் பேச்சிலிருந்த மாற்றத்தை உணர்ந்தான் ருத்ரேஸ்வரன். ஏதோ தவறாகப்பட்டது. அவன் உடல் விரைப்புற்றது.

“முதலில் சொல்லு. பிராமிஸ் பண்றதா வேண்டாமான்னு நான் முடிவு பண்றேன்.” குரல் கொஞ்சலை விடுத்திருந்தது.

மனதை கல்லாக்கி கொண்டு, கண்களை இறுக மூடி, “எனக்கு டைவர்ஸ் வேணும்…” அடுத்த வார்த்தை பேச அவள் அங்கில்லை, ருத்ரேஸ்வரன் விட்ட அறையால் கீழே விழுந்து கிடந்தாள்.

தரையில் கிடந்தவளின் முன் மண்டியிட்டு, அவள் பூஜ்ஜியத்தை பற்றி, “இடியட்! என்ன கேக்கிறன்னு புரிஞ்சுதான் கேக்கிறியா? ஆர் யூ அண்டர்ஸ்டாண்ட் இட்?” கர்ஜித்தான்.

அவன் கரத்தை தட்டி விட்டவள், “எஸ்! ஐ நோ, வாட் ஐ ஆஸ்கிங். ஐ நீட் டைவர்ஸ். (ஆமா! நான் என்ன கேட்கிறேன்னு எனக்கு தெரியும். எனக்கு டைவர்ஸ் வேணும்.)” 

“திரும்பத் திரும்ப அதையே கேட்காத…” கர்ஜித்தான். 

“வேணுங்கிறதை தானே கேட்க முடியும்.” பெண் சிலிர்த்தால்.

“அது இந்த ஜென்மத்துல கிடைக்காது…” 

“பைத்தியம் மாதிரி பேசாதீங்க. உங்களுக்கு ஒரு யூசும் இல்லாத என்னை வெட்டி விட்டுட்டு, வேற நல்ல பொண்ண பாத்து கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டியோட சந்தோஷமா இருங்க.”

மீண்டும் அவளை அடிக்கத் துடித்த கரத்தை கட்டுப்படுத்தியது அவளது கலங்கிய கண்கள். அந்தக் கண்ணீர் சொன்னது அவள், அவன் மீது கொண்ட ஆழமான காதலை. அவள் டைவர்ஸ் கேட்ட காரணம் புரியாமல் இருக்குமா அவளது கட்டவண்டிக்கு??? அதற்காக ஒன்றுமே இல்லாத காரணத்தை வைத்து அவள் கேட்டதை கொடுக்க முடியுமா??? அவளது குழப்பத்தை போக்க முடிவு செய்தான்.

அவளை இறுக்கி அணைத்தவன், “ஏண்டா அம்மு இப்படி எல்லாம் பேசுற. நீ மட்டும் எனக்கு போதும். எனக்கு நீ உனக்கு நான். நம்ம ரெண்டு பேரு மட்டும் சந்தோஷமா இருப்போம்.”

அவன் அணைப்பிலிருந்து திமிறி விலகியவள், “நீங்க சொல்றது கொஞ்ச நாளைக்கு வேணா நல்லா இருக்கும். அதுக்கப்புறம் என்னடா வாழ்க்கைன்னு சலிப்பு வந்துரும். நம்ம ரெண்டு பேரு மட்டும் இருந்தா அதுக்கு பேரு சந்தோஷமில்லை ருத்ரா… நம்ம அன்பின் அடையாளமா ஒரு குட்டி ஜீவன் வரணும். அதற்கான வழியே இல்லன்னும் போது நம்ம பிரியிறதுல தப்பேயில்லை.”

அவள் பிடித்த பிடியில் நிற்கவும் ஆணவனுக்கு சலிப்பு வந்தது, “சரி உன் வழிக்கே வரேன், என்னை வேற கல்யாணம் செய்ய சொல்லிட்டு, மேடம் என்ன பண்றதா உத்தேசம்.”

“வரு, பிந்து கூட போயிட்டு, அவங்க குழந்தையை பார்த்துக்கிட்டு, அவங்க கூடவே இருந்துக்குவேன்.”

அவனுக்கு வந்த கண்மண் தெரியாத கோபத்தில், எங்கே மறுபடியும் அவளை அடித்து காயப்படுத்தி விடுவோமோ என அஞ்சி, “போடி…” என அவளை தள்ளிவிட்டு, கதவை முழு வேகத்தில் அடித்து சாத்திவிட்டு, வீட்டை விட்டு வெளியேறினான். அம்மு அவன் சென்ற திசையை பார்த்து கண்கலங்கி கீழே கிடந்தாள்.

★★★

அம்முவின் படிப்பு தொடர்ந்தது. அன்று விவாகரத்து கேட்ட பிறகு இருவருக்குள்ளும் இருந்த பேச்சு வார்த்தை குறைந்திருந்தது.

இதை வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைத்து மகிழ்ச்சியாக நடித்தார்கள். இருவரும் நல்ல நடிகர்கள் என சொந்த வாழ்க்கையிலும் நிரூபித்தார்கள். மற்றவர்களை நடித்து ஏமாற்ற முடியும், ஆனால் அவளின் ஒற்றை பார்வையில் அவள் மனதை படிக்கும் அவளது வருவிடம் அவளால் மறைக்க முடியுமா?

ரிஷியால் அவர்களது பிரச்சனையின் அடிப்படையை ஓரளவு யூகிக்க முடிந்தது. கணவன் மனைவிக்கு இடையில் அவன் தலையிடக்கூடாது என ஒதுங்கி நின்றான். ஆனால் மனதினுள் மறுகித் தவித்தான். அம்மு விவாகரத்து கேட்டிருப்பாள் என தெரியாத ரிஷி சற்றே மெத்தனமாக இருந்தான். அவனிடம் பகிராதது அம்முவுக்கு மன அழுத்தத்தை கொடுத்தது.

இதற்கிடையில் இன்ஸ்டியூட்டில் சிலர் புதிதாக முளைத்திருந்தார்கள். காவலாளியிலிருந்து அவளது பாதுகாவலர் வரை பெரும்பாலானோர் மாற்றப்பட்டிருந்தனர். அதற்கான காரணத்தை ரிஷி, ருத்ராவிடம் கேட்டால் செக்யூரிட்டி ரீசன் என பட்டும் படாமலும் முடித்தார்கள். இதில் அடிக்கடி அஜய் கண்ணாவின் மித்ராவுடனான சந்திப்பு நடந்தது. 

ருத்ராவுடனான ஊடல், ரிஷியிடம் பகிராதது போன்றவற்றால் அவளுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்துக்கு வடிகாலாக, அஜய் கண்ணாவின் நட்பு கரத்தை பற்றினாள். இந்த இடைப்பட்ட நாட்களில் அவளிடம் நற்பெயரை பெற்று, தன்னை கண்ணா என்று சகஜமாக அழைக்க வைத்திருந்தான். ஓரிரு வருடங்களே அவளை விட பெரியவன் என்பதால், அந்த அழைப்பு பெண்ணுக்கு தவறாக படவில்லை.

அவர்களின் சந்திப்பை ரிஷிவர்மாவிடம் தெரிவித்து விடுவாள் அவனின் மிரு பேபி. தன்னிடம் மறைக்காமல் சொல்லும் அவளிடம், அஜய்யுடனான நட்பை முறிக்க சொல்ல அவனுக்கு மனம் வராது. 

அவளுக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என, மறைமுகமாக ருத்ராவிடம் சொல்லி அவர்களின் சந்திப்பை தடுக்க நினைத்தான், ஆனால், “அஜயால் அம்முவுக்கு எந்த தீங்கும் வராது.” என ஆணித்தரமாக ருத்ரா சொல்லிவிட்டான். 

‘உன்னை பெரிய டான்னு நினைச்சேன்! நீ இப்படி தத்தியா இருக்க!’ என ரிஷியின் மனதினுள், ருத்ராவை கழுவி ஊத்தினான்.  

அவர்களது நட்பை தடுக்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் இருதலை கொள்ளி எறும்பாக தவித்தான் ரிஷிவர்மா. அவன் தவிப்பைக் கூட்டுவது போல், அஜய் அடிக்கடி ரிஷியை அழைத்து, “என்னோட ஏஞ்சல்! இன்னைக்கு வைட் ட்ரெஸ்ல நிஜமான ஏஞ்சல் மாதிரியே இருந்தா! அவ ட்ரெஸ்ஸுக்கு மேட்ச்சா வைட் கலர் வெண்ணிலா ஐஸ் கிரீம் சாப்பிட்டோம். சும்மா ஜில்லுனு தொண்டைக்குள்ள இறங்குச்சு.” என ஒருமுறை சொல்லி அவனை கொதிக்க விட்டான். மறுமுறை, “ஏஞ்சலை கூப்பிட்டு பீச்சுக்கு போறேன் ரிஷி.” என்றான். “ஏஞ்சல் இன்னைக்கு தடுக்கி விழ பாத்தா, நான் தான் அவளை விழாம புடிச்சேன்.” என பெருமை பட்டான் ஒருமுறை.

“மிருகிட்ட இருந்து தள்ளியே இரு அஜய். உன்னால் அவளுக்கு ஏதாவது பிரச்சனை வந்துச்சு, நான் மனுஷனா இருக்க மாட்டேன்.” என எச்சரிப்பான் ரிஷிவர்மா. “சரிதான் போ நண்பா…” என அலட்சியமாக அழைப்பை துண்டிப்பான் அஜய். 

அஜய்யின் சீண்டல் ரிஷியிடம் மட்டுமே, அம்முவிடம் நல்ல பிள்ளையாகவே நடப்பான். நடிப்பானோ?? இதில் ரிஷியின் முகம் கவலையுடன் காணப்பட்டது.

அம்முவின் முதல் வருட விடுமுறையில், ஈஸ்வர் பிரோடுக்ஷனில் தன் முழு கவனத்தையும் செலுத்தினாள். அதே நேரம் ரேகாவும் பிருந்தாவும் தங்கள் படிப்பை முடித்து வீட்டில் இருந்தார்கள். 

வயிற்றில் இருக்கும் சிசுவின் லீலையால், சாப்பிட்ட அனைத்தையும் உடனே வாந்தியாக வெளியேற்றி விடுவாள் பிருந்தா. எப்போதும் சோர்ந்து காணப்பட்டாள். அவளது சோர்வை பார்க்கவே அம்முக்கு கஷ்டமாக இருக்கும். வீட்டிலிருக்கும் நேரங்களில் பிருந்தாவுடன் தன் பொழுதை கழிப்பவள், ஏதாவது சுவாரஸ்யமாக பேசி அவளை மகிழ்ச்சியாக வைத்திருப்பாள். சில நேரங்களில் அவர்களுடன் ரிஷியும் இணைந்து கொள்வான்.

இப்போதெல்லாம் ருத்ராவைப்போல் ரிஷிவர்மாவும் சற்று இறுக்கத்துடன் காணப்பட்டான். அதை தவறாக புரிந்து கொண்ட அம்மு, “பார்டா! பொண்டாட்டிக்கு முடியலைன்னவுடனே சாரு எவ்ளோ சோகமா சுத்துறாரு! ச்ச்ச்!” என அவனை கிண்டல் அடிப்பாள். அவனும் சிறு சிரிப்புடன் விலகி செல்வான். பிருந்தாவின் விழிகள் அவனையே தொடரும். ஆனால் அவனது கண்களோ அதிகமாக மித்ராவை சுத்தும்.

இப்போது எலிசா அவளது விடுதி அறையை காலி செய்துவிட்டு, பிருந்தாவுக்கு துணையாக அவள் வீட்டில் வசிக்கிறாள். இந்த சில மாதங்களில் எலிசா பிருந்தாவின் நடுவில் ஒரு தோழமை உருவாகி, அது பலம் பெற்றிருந்தது. எலிசா பிருந்தாவை பார்த்துக் கொண்டாலும், அவளும் சிறு வயது பெண் என்பதால் பல நேரம் தடுமாறினாள். அதனால் அம்பிகா தேவி முடிந்த அளவு பிருந்தாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்.

ரேகாவும் கைக்குழந்தையுடன் இருப்பதால், கிராமத்திலிருந்து பாட்டி அவளுக்கு துணையாக வந்திருந்தார். இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர்கள், அம்மு ருத்ராவின் இடையிலான விரிசலை கவனிக்க தவறினர். 

தம்பதியரின் இறுக்கத்தை வீட்டு பெரியவர்கள் உணராமல் இருக்கலாம், ஆனால் இதற்காகவே காத்திருந்த எதிர் வீட்டு ஜன்னல் அவர்களை கண்டு குதூகழித்தது.

உதட்டில் மட்டும் புன்னகையுடன் சுற்றும் அவர்களை பார்த்துக் கொண்டுதானே இருந்தது. ‘பார்ரா எல்லாம் ரொம்ப ஃபாஸ்ட்டா நடக்குது! இன்னும் கொஞ்ச நாள்ல நான் ஆசைப்பட்டது என் கைக்கு வந்துடும் போல இருக்கு.’ என தனக்குத்தானே தட்டிக் கொடுத்துக் கொண்டது.

ராகம் இசைக்கும்

ராகம் 17

ரம்யமான மாலை நேரம்,

மனதுக்கு இதமளிக்கும் பாடல்கள் காரில் ஒலிக்க, மனதிற்கினியவளுடன் பயணிப்பதே இன்பம். அதிலும் அவளை தோளில் சாய்த்து பயணிப்பது பேரின்பம். அந்த பேரின்பத்தை அனுபவித்து, சூழலை ரசித்து, தன் காதல் மனைவி அம்முவுடன் அந்தப் பயணத்தை மேற்கொண்டான் ருத்ரேஸ்வரன்.

எங்கு அவளை கண்டு மனம் தொலைத்தானோ!!! எங்கு அவள் தூய அன்பில் உள்ளம் கரைந்தானோ!!! எங்கு அவள் கரம் பிடித்தானோ!!! அங்கு, அவன் மனம் கவர்ந்த அந்த ஊருக்கு செல்கிறான். 

ஆம்! அவன் சென்று கொண்டிருப்பது அவன் மனதை கவர்ந்த பசுஞ்சோலைக்கு. தன்னவளை தனக்கு கொடுத்த ஊரை, அவன் மனதுக்குப் பிடிக்காமல் போகுமா என்ன??? 

தன் மனம் கவர்ந்த ஊருக்கு, மனம் கவர்ந்தவளுடன் செல்வது ருத்ராவிற்கு உற்சாகத்தை அளித்தது. அதிலும் சில மாதங்களாக எதற்காகவும் தன்னை நாடாமல், விரைத்துக் கொண்டு சுற்றிய மனைவி, இப்போது தன் தோள் சாய்ந்திருக்கிறாள். அதில் அவனுக்கு உலகை வென்ற மகிழ்ச்சி உண்டானது.

ஆம்! அம்மு ருத்ராவின் தோள் சாய்ந்திருந்தாள். விவாகரத்து கேட்டு தொந்தரவு செய்து கொண்டிருந்தவள் இப்போது அவன் தோள் சாய்ந்திருந்தாள். 

காரில் ஏறும் போது கூட ஆளுக்கு ஒரு மூளையில் அமர்ந்திருந்தனர். பயணம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே உறக்கத்தின் பிடியில் சிக்கிய அம்மு, தன்னை மறந்து அவன் தோள் சாய்ந்திருந்தாள். இதுதான் சாக்கு என, சீட்டில் நன்றாக சரிந்து அவளுக்கு வாகாக அமர்ந்து, அவள் தோளில் கையிட்டு தன்னுடன் இறுக்கிக் கொண்டான் ருத்ரேஸ்வரன். 

மனக்குழப்பத்தில் சில மாதங்களாக தூக்கத்தை தொலைத்திருந்த பெண், இப்போது தன்னவனின் ஸ்பரிசத்தில் நிம்மதியாக துயில் கொண்டிருந்தாள். அந்த பயணம் முழுவதும் அவன் கை சிறையில் உறங்கியே கழித்தாள். நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த தன்னவளின் அருகாமை ருத்ராவிற்கு கசக்கவா போகிறது??? அதை ரசித்துக் கொண்டே பயணத்தை முடித்தான்.

கார் நின்றும் உறக்கம் கலையாத அம்முவின் தலையை மெல்ல கோதி, “அம்மு வீடு வந்தாச்சு எந்திரி.” எழுப்பினானோ அல்லது அவளது தூக்கத்தை தொடர செய்து அவளை தூக்கிச் செல்ல கள்ளத்தனம் செய்தானோ தெரியாது, ஆனால் அவன் குரல் அம்முவின் செவியில் நுழைந்து மூளையை சென்றடைந்தது.

அதில் பெண்ணின் மான் விழிகள் மெல்ல திறந்தது. அரை தூக்கத்தில் எழுந்தவளுக்கு தங்கள் ஊடல் மறந்திருந்தது. முகத்தில் புன்னகை விரிய, “குட் மார்னிங் கட்டவண்டி.” என்றவளின் இதழ் எப்போதும் போல் அவன் கன்னத்தில் பதிந்து விலகியது.

பெண்ணின் எதிர்பாராத இதழ் ஸ்பரிசம் ஆடவனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது. அவளது நெருக்கம் கிளர்ச்சியூட்டியது. ருத்ராவின் கண்கள் அவள் கண்களை சிறை செய்தது. அவன் விழிச்சிறையில் தன்னை மறந்து சிக்குண்டு கிடந்தவள், சிறிது நேரத்திற்கு பிறகே தன் நிலை உணர்ந்து, அவனிடமிருந்து அவசரமாக விலகி, “தூக்கத்து…ல தெரியா…” என தடுமாறினாள்.

அவள் தடுமாற்றத்தை மனம் ரசித்தாலும், விரைப்பாகவே முகத்தை வைத்துக்கொண்டு, “ம்! இட்ஸ் ஓகே! வீடு வந்தாச்சு.” என கெத்தாக சொல்லி சென்றான். அவன் கண்களை விட்டு மறையவும் வரை அவனின் முதுகையே வெரித்திருந்தவள், பிறகு தன் தலையை குலுக்கி, தன்னை சமன்படுத்திக் கொண்டு காரை விட்டிறங்கினாள்.

தான் பிறந்து, வளர்ந்த மண்ணில் கால் பதித்ததும் பெண்ணின் உடல் சிலிர்த்தது, உள்ளம் உற்சாகத்தில் துள்ளியது. அந்த உற்சாகத்துடன் வீட்டுக்குள் நுழைந்தவளை வரவேற்றனர் ரேகாவின் பெற்றோர்கள். சிறிது நேரம் அவர்களுடன் பொழுதை நெட்டித் தள்ளியவள், தன் வாண்டு நண்பர்களை தேடி சென்றாள்.

★★★

“வா அம்மு வா! எங்களை பார்க்க ஓடோடி வந்த உன்னை அன்புடன் வரவேற்கிறோம்.” என நாடக பாணியில் அவளை வரவேற்றார்கள் சோட்டுவும் கிட்டுவும். 

“வந்தேன் வந்தேன் நானும் வந்தேன் உங்களைத் தேடி ஓடி வந்தேன்.” என அவளும் தானாக ஒரு மெட்டை உருவாக்கி பாடினாள்.

“போதும் அம்மு. இனி நாங்க உன்னை வரவேற்கவே மாட்டோம்.” என்றார்கள் கோரசாக.

“ஏன்டா நான் வந்தது உங்களுக்கு புடிக்கலையா?” என முறைத்தாள்.

“நீ வந்ததெல்லாம் ஓகே… எந்த பிராப்ளமும் இல்ல… ஆனால் பாட்டுங்குற பேர்ல இப்ப கர்ன கொடூரமா என்னமோ சொன்னியே, அதை மட்டும் திரும்பி சொல்லிடாத.” என்ற சோட்டுவுடன் இணைந்து கிட்டுவும் கையெடுத்தும் கும்பிட்டான்.

“ஆத்தி அவ்வளவு கொடூரமாவா இருந்துச்சு?” என்றாள் வடிவேலு ஸ்டைலில்.

“ஆமாங்கறேன்…”

“டேய் உண்மையை சொல்லுங்கடா…” மிரட்டினாள்.

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட கிட்டுவும் சோட்டுவும், “ராகம் எல்லாம் ஓகே. லிரிக்ஸ் தான் படி கேவலம்.” என்றவர்கள், அவளின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை உணர்ந்து, அவளது அடியில் இருந்து தப்பித்து ஓடினார்கள். அவர்களை துரத்த தொடங்கிய அம்முவின் விழிவட்டத்தில் சிக்கினாள் சோகமாக அமர்ந்திருந்த பிங்கி.

“அவனுங்க ரெண்டு பேரும் என்னை கிண்டல் பண்றாங்க. எனக்கு சப்போர்ட் பண்ணாம, என்னமோ கப்பல் கவுந்த மாதிரி கன்னத்துல கைய வச்சுகிட்டு இங்க உட்கார்ந்திருக்கிற…” என விளையாட்டாக பிங்கியை சீண்டிக்கொண்டே அவளை நெருங்கினாள் அம்மு.

“ப்ச்” பதில் சொல்லாமல் சலித்தாள் பிங்கி.

“என்ன ஆச்சு பிங்கி! ஏன் சோகமா உக்காந்திருக்க? எதுக்கு போன் பண்ணி என்னை வரச் சொன்ன?” என அடுக்கடுக்காக கேட்டாள். 

ஆம்! அம்முவின் இந்த பசுஞ்சோலை வரவு பிங்கிகாகவே. திடீரென அவளை அழைத்து, காரணத்தை சொல்லாமல் இங்கு வரச் சொல்லி ஒரே அழுகை. வீட்டில் சொல்லிவிட்டு கிளம்ப, அவளுக்கு துணையாக ருத்ராவை அனுப்பினார்கள். பிருந்தாவிற்கு நெடுந்தூர பயணத்தை தவிர்க்க வேண்டும் என மருத்துவர் சொல்லியதால், அவளால் வர முடியவில்லை. அவளுக்கு துணையாக ரிஷி அங்கிருந்தான்.

அம்மு பிங்கியை நெருங்கி கேட்டதுதான் தாமதம், அவள் கழுத்தை கட்டிக்கொண்ட சின்னவள், “ஓ” என ஒரே அழுகை. காரணம் தெரியாமலேயே, “ஒன்னும் இல்லடா பிங்கி. நான் இருக்கேன். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.” என சின்னவளுக்கு தைரியம் அளித்தாள்.

பதில் வராமல் அழுகை தொடர, தன்னிடமிருந்த சின்னவளை பிரித்து, “ஏதாவது சொல்லு பிங்கி. இப்படி அழுதா என்ன தெரியும்… நீ சொன்னா தானே என்னால உனக்கு உதவ முடியும்.”

“நானும் உன் கூட வரேன். என்னையும் கூட்டிட்டு போ.” இவ்வளவு நேரம் இருந்த தன் மௌனத்தை விடுத்து தேம்பியவாறு கூறினாள். 

“சரி கூட்டிட்டு போறேன். ஆனா நீ இன்னும் காரணத்தை சொல்லலையே?”

“எனக்கு ட்வள்த்ல நல்ல மார்க் வந்துச்சு.” என்ற சின்னவளை இடைமறைத்து, “அது எல்லோருக்கும் தெரியுமே…” என்ற பெரியவளை முறைத்தாள் சின்னவள்.

“இனி நான் வாயை திறக்க மாட்டேன். நீ சொல்லு.” என தன் வாயை கைக்கொண்டு மூடினால் பெரியவள். அப்போது கிட்டுவும் சோட்டுவும் திரும்ப வந்து அவர்களுடன் இணைந்து கொண்டனர்.

“என்னை படிக்க வைக்க மாட்டேன்னு அம்மா, அப்பா சொல்றாங்க. காலேஜ் சேர்த்து விட மாட்டாங்களாம். நீ அவங்க கிட்ட பேசி என்னையும் உன் கூடவே கூட்டிட்டு போயிடு.”

“அவ்வளவுதானே! நான் அவங்க கிட்ட பேசி உன்னை கூட்டிட்டு போறேன்.” என சமாதானப்படுத்தியவளுக்கு தெரியாது, பிங்கியின் பெற்றோர்கள் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கப் போவதாக சொல்லி இருப்பது. அதேபோல் அவள் படிக்க விரும்பும் படிப்பும், அவர்களது சக்திக்கு அப்பாற்பட்டது என்று.

சொன்னது போலவே மறுநாள் அவர்களை சந்தித்த அம்மு பிங்கிக்காக பேச, அவளது பெற்றோர்கள் அவளை படிக்க வைக்க மறுத்த காரணத்தை கேட்டு அவளுக்கு தலை சுற்றியது.

“இங்க பக்கத்துல காலேஜுக்கு போய், ஏதோ ஒரு படிப்பை படிச்சா நாங்க வேண்டாம்னா சொல்லப் போறோம். ஆனா இவ…” என அவளை முறைத்தார்கள்.

“அவ அப்படி என்ன படிக்க ஆசைப்பட்டா?” என்றாள் அம்மு புரியாமல். 

“அவளையே கேளு.”

குழப்பத்துடன் பிங்கிடம் திரும்பிய அம்மு கேள்வி கேட்கும் முன், “எனக்கு நீ படிக்கிற படிப்பை படிக்கணும்.” எதிலும் அம்முவை பின்பற்றும் பிங்கி இதிலும் அவளை பின்பற்றினாள்.

அதில் என்ன தவறு என பிங்கியின் பெற்றோர்களை பார்த்தாள். “சினிமா சம்பந்தப்பட்ட எதுவும் வேண்டாம்னு சொன்னா கேட்க மாட்டீங்கறா அம்மு. அதுதான் படிப்பேன்னு அடம் பிடிக்கிறா. நம்ம குடும்பத்துக்கு அது ஒத்து வருமா?”

“நானும் சினி ஃபீல்டுல தான் இருக்கேன்.” 

“உன்னோட நிலை வேற, உனக்கு துணையா நிறைய பேர் இருக்காங்க. ஆனா இவளுக்கு அப்படி இல்லை. அதோட அது படிக்க நிறைய செலவாகும் எங்களால் அவ்வளவு செலவு பண்ண முடியாது.”

ஆம்! அம்மு படிப்பது சாதாரண கல்லூரியில் அல்ல. ஐந்து நட்சத்திர தரம் வாய்ந்த இன்ஸ்டியூட்டில். அதில் கல்வி கட்டணம் மட்டுமே சில லட்சங்களை விழுங்கும். சாமானியர்கள் கனவில் மட்டுமே படிக்கக்கூடிய இடம்.

பெற்றோர்களாக அவர்களது பயம் நியாயமானது. அவர்களை குறை சொல்ல முடியாது. ஆனால் பிங்கி அம்முவுடன் படிப்பதில் உறுதியாக இருந்தாள். 

அம்முக்கு அவர்களை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை.

அன்று இரவு ரிஷியிடம் இதைப்பற்றி பேசிக்கொண்டு இருந்தாள் அம்மு. ரிஷியும் பிங்கியின் பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்ளலாம் என சொல்லிக் கொண்டிருந்தான். தற்செயலாக அவர்கள் பேசுவதை கேட்ட ருத்ரா, அம்முவிடமிருந்து அலைபேசியை பறித்து, “பிங்கியின் பொறுப்பு என்னது. நான் அதை பார்த்துக்கிறேன்.” என முடித்தான். தன் கையிலிருந்த போனை பிடுங்கி பேசிய ருத்ராவை கண்டு அம்முவிற்கு ஆத்திரமாக வந்தது. ஆனால் கற்பாறையாக இறுகிப் போயிருந்தவனை ஒன்றும் செய்ய முடியாமல் அவனை முறைத்து நின்றாள். ருத்ரா அதை கண்டு கொள்ளவில்லை.

என்ன செய்தானோ, எது செய்தானோ அம்முவும் ருத்ராவும் கிளம்பும்போது அவர்களுடன் இணைந்து பிங்கி, சோட்டு, கிட்டு மூவரின் குடும்பமும் கிளம்பியது.

ஆம்! சோட்டுவையும், பிங்கியுடன் இணைந்து ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்த்து விடவும், கிட்டுவை, பப்பு படிக்கும் அதே கல்லூரியில் இன்ஜினியரிங் சேர்த்து விடவும் அனைவரும் கிளம்பினார்கள். சோட்டு, பிங்கி இருவரின் படிப்பு செலவையும் ருத்ராவே ஏற்றுக் கொண்டான் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம்.

★★★

பிரிந்திருந்த நண்பர்கள் ஒன்று கூடி விட்டார்கள் இனி கேட்கவும் வேண்டுமா!!! அவர்களது சேட்டைகள் ஆரம்பமானது சென்னையில். 

அவர்கள் நால்வரும் விடுதியில் தங்கி படித்தாலும், விடுமுறை நாட்கள் அம்முவுடன் அவள் வீட்டில் கழிந்தது. அப்போது ரேகாவும் அவர்களுடன் இணைந்து கொள்வாள். 

அப்படிப்பட்ட ஒரு நாள் ரேகா சமையல் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் சமையலறையை போர்க்களமாக மாற்றி வைத்தார்கள் நம் பஞ்சபாண்டவர்கள். அவர்களது அட்டகாசம் தாங்காமல் ரேகா அவர்களை விரட்டியடித்தாள்.

“ஏன் ரேக்ஸ் செல்லோ எங்களை இப்படி விரட்டுற? நாங்க உனக்கு ஹெல்ப் தானே பண்றோம்!” என்றாள் அம்மு அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு. 

“ஏது! நீங்க செய்றதுக்கு பேரு ஹெல்ப்பா!”

“இல்லையா பின்ன!”

“இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல.”

“இல்ல” உடனே பதில் வந்தது அம்முவிடம்.

“இருக்கு” பல்லை நறநறத்தாள் ரேகா.

“நாங்க அப்படி என்ன ஓவரா பண்ணிட்டோம் நீயே சொல்லு ரேகாகா?” என சண்டைக்கு வந்தான் கிட்டு.

“பொரியலுக்கு கட் பண்ணின கேரட் எங்கேடா?” என முறைத்தாள் ரேகா. “பார்க்க நல்ல கலர்ஃபுல்லா இருந்ததா அதுதான்…” என அசடு வழிய சிரித்தான் கிட்டு.

“நீ குருமாக்கு கட் பண்ண கேரட்டில் பாதியை காணோம். அந்த அவன் முந்திரிப்பருப்பை காலி பண்ணிட்டான். இந்தா இவ சப்பாத்திக்கு மாவுபிசையுறேன்னு அடுப்பு மேடை ஃபுல்லா மாவை கொட்டி வச்சிருக்கா. இதை சுத்தம் பண்ணவே எனக்கு ஒரு மணி நேரம் வேணும். அது பத்தாதுன்னு அங்க பாரு பாத்திரத்தை கிளீன் பண்றேன்னு சிங்க சுத்தி தண்ணியாக்கி வச்சிருக்கீங்க.” என ஒவ்வொருத்தரையும் குற்றம் சாட்டினாள் ரேகா. அனைவரும் திருட்டு முழியுடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து நின்றனர்.

“உனக்கு ஹெல்ப் தானே பண்ணுனோம்!” என்றால் பிங்கி அப்பாவியாக.

“நீங்க செய்ற இந்த ஹெல்பே எனக்கு வேண்டவே வேண்டாம். முதல அஞ்சு பேரும் வெளியே போங்க.” 

“இந்த அடுப்பு மேடையை மட்டும் சுத்தம் பண்ணி…” என ஆரம்பித்த அம்முவை, “நீங்க ஆணியே புடுங்க வேண்டாம்…” என ரேகா கையெடுத்து கும்பிட்டு அவர்களை அனுப்பினாள். 

“வர வர நல்லதுக்கே காலமில்லை. நீயே செய். நாங்க போறோம்.” என்ற முணுமுணுப்புடன் தோட்டத்திற்குள் புகுந்தனர்.

அங்கு சென்று சும்மா இருப்பார்களா! செடிகளுக்கு தண்ணீர் விடுகிறேன் என்ற பெயரில், ஐவரும் நீரை வாரி ஒருவர் மீது ஒருவர் ஊற்றி கொண்டு நின்றார்கள். 

“உங்களுக்கு இன்னும் சின்ன குழந்தைகள்ன்னு நினைப்பா? காலங்காத்தால என்ன வேலை பாக்குறீங்க?” என பிருந்தா அவர்களை முறைத்தாள். 

“அவங்க கொஞ்ச நேரம் விளையாடட்டும் பிந்துமா.” ரிஷி அவர்களுக்கு பரிந்து கொண்டு வந்தான். அம்மு அவர்களுடன் இருக்கும் போது தன் கவலையை மறந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தவனாக.

“ரிஷி! இவங்களை பத்தி உங்களுக்கு தெரியாது. அவங்களுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க. அப்புறம் ரொம்ப சேட்டை பண்ணுவாங்க.”

அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு நின்றவர்களை பார்த்த ரிஷி, “சச்ச! அப்பிடியெல்லாம் பண்ண மாட்டாங்க. இன்னைக்கு ஒரு நாள் விளையாடட்டும். கொஞ்ச நேரத்துல போய் சுடுதண்ணியில் குளிச்சிட்டு டிரஸ் மாத்திக்குவாங்க. என்ன நான் சொல்றது சரிதானே.” என்றவன் அவர்களைப் பார்த்து கண்ணடித்தான் பிருந்தாவிற்கு தெரியாமல்.

வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, “ம்ம் ம்ம்” ஐவரும் பூம்பூம் மாடுகள் மாதிரி தலையாட்டினர்.

அவர்களை சந்தேகமாக பார்த்த பிருந்தா, “உங்களை எல்லாம் திருத்தவே முடியாது. என்னமோ பண்ணி தொலைங்க.” என தலையில் அடித்துக்கொண்டே அவனையும் முறைத்து சென்றாள்.

அவள் அங்கு இருக்கும் வரை ஒன்றும் செய்யாத நல்ல பிள்ளைகள் போல் நின்று கொண்டு, அவள் சென்றதும் ஒருவரை ஒருவர் குறும்புடன் பார்த்து சிரித்து கொண்டார்கள். “ப்பா” ஒரு பெருமூச்சுடன் அவர்களிடம் திரும்பிய ரிஷிவர்மா கள்ளப் புன்னகை செய்தான்.

அதன் பிறகு கேட்கவும் வேண்டுமா!!! ரிஷியையும் தங்களுடன் இழுத்துக் கொண்டாள் அவனின் மிரு பேபி. அவர்களுடன் இணைந்து அவனும் நனைய அங்கு மகிழ்ச்சிக்கு குறைவில்லாமல் போனது.

இவர்களின் சேட்டைகளால் உயிர்புடன் இருந்த வீட்டை அம்பிகாதேவியும் ஈஸ்வரமூர்த்தியும் மிகவும் ரசித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக, அந்த எதிர்த்த வீட்டு ஜன்னலில் இருந்து இவர்களை வன்மமாக முறைத்தது அந்த ராட்சச கண்கள்.

இந்த நிகழ்ச்சியை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என சிந்தித்தது. 

★★★

அம்மு விவாகரத்து கேட்டு சில மாதங்கள் கடந்திருந்தது. அவளும் ருத்ராவிடம் போராடி பார்த்து விட்டாள் அவன் அதற்கு சம்மதிப்பதாக இல்லை. அதில் அம்மு அவனின் மேல் கோபமாக இருந்தாள். அவன் அதற்கும் மேல் கொலை வெறியில் இருந்தான்.

முதலில் அம்முவும் ருத்ராவும் தங்களது பிணக்கை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல பெரியவர்களால் அவர்களது விலகலை உணர முடிந்தது. இவர்கள் வாழ்வை நினைத்து அனைவர் மனதிலும் கலக்கம் உண்டானது.

அவர்களது விலகளுக்கான காரணம் தெரியாத பாட்டிக்கு, ரிஷியை இட்டு சண்டையோ என மனதில் பயம் உருவானது. அவர்களை இணைக்க சில முயற்சிகளை மேற்கொண்டார். அதில் ஒன்றே பசுஞ்சோலை பயணம். 

இந்நிலையில் பிருந்தாவுக்கு ஏழாவது மாதம் தொடங்கியது. பிறந்த வீட்டு சார்பாக அம்மு அவளுக்கு வளைகாப்பு ஏற்பாடு செய்தால் ருத்ராவின் துணையுடன். அம்முடன் ருத்ராவை கோர்த்துவிட்டது பாட்டியின் வேலை என்று நான் சொல்லவும் வேண்டுமா!!!

‘தான் பிறந்த ஊரில் தனக்கு குழந்தை பிறக்க வேண்டும்!’ என்ற பிருந்தாவின் வற்புறுத்தலில் அவளை பசுஞ்சோலைக்கு அழைத்துச் செல்வது என முடிவானது. பிருந்தாவுக்கு துணையாக அம்முவாள் செல்ல முடியாத ஒரு இக்கட்டில் மாட்டிக் கொண்டாள். அதனால் பசுஞ்சோலையில் பாட்டியின் வீட்டில், அவரது பொறுப்பில் அவளை விட முடிவு செய்தார்கள்.

வளைகாப்பு நல்லபடியாக முடிந்தது. பிருந்தாவும் அவளுக்கு துணையாக எலிசாவும், பாட்டியின் பொறுப்பில் பசுஞ்சோலை கிராமத்தை அடைந்தார்கள். 

அம்முவின் தொந்தரவு தாங்க முடியாமல், எங்கே அவள் கேட்டதை கொடுத்து விடுவோமோ என அஞ்சிய ருத்ரா வேலையை காரணம் காட்டி வெளி நாட்டிற்கு பறந்திருந்தான். 

அம்மு? ரிஷி?

ஸ்ருதி சேருமா??? 

பொறுத்திருந்து பார்ப்போம்.

error: Content is protected !!