Thithikkum theechudare – 16

Thithikkum theechudare – 16

தித்திக்கும் தீச்சுடரே – 16

முகிலன் வீட்டிற்குள் உல்லாசமாக நுழைய, கோவிந்தராஜன் அவனை மேலும் கீழும் பார்த்தார். அவன் தன் தந்தையை யோசனையாக பார்த்துக் கொண்டே, “அம்மா…” அமிர்தவள்ளியை கட்டி  கொள்ள, அவரோ தன் கணவரை கம்பீரமாக பார்த்தார். ‘என் மகன்…’ என்பது போல.

‘எல்லாம் கொஞ்சுங்க. கொஞ்ச நேரத்தில் உங்க கதை எப்படி நாற போகுதுன்னு நான் பார்க்க தானே போறேன்.’ என்று தொண்டையை செருமிக் கொண்டு, சோபாவில் அமர்ந்தார்.

“முகிலன் குளிச்சிட்டு வரியா? நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” அவர் கூற, “எஸ் அம்மா…” அவன் படிகளில் தாவி ஏறி, தன் அறை நோக்கி சென்றான்.

“பார்த்தீங்களா, அவன் என் மகன். நான் சொல்றதைத் தான் அவன் கேட்பான்.” அமிர்தவல்லி கூற, “நான் இல்லைன்னு சொல்லவே இல்லையே. நீ தான் கோபமா இருந்த” அவர் அப்பாவியாக கூற, “உருப்படியா தெளிவா என்னைக்காவது பேசறீங்களா? குண்டக்க மண்டக்கண்ணு தான் பேசறீங்க ” அவர் அங்கலாய்த்துக் கொண்டார்.

சில நிமிடங்களில், முகிலன் கீழே வர, “வா முகிலா. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன். அதுக்குள்ளே நான் எடுத்து வச்சிருக்கிற பொண்ணுங்க போட்டோவில் உனக்கு யாரை பிடிச்சிருக்குனு பார்த்து சொல்லு. நாம பேசி முடிச்சிருவோம்” கூறிவிட்டு அமிர்தவல்லி உள்ளே செல்ல, “அப்பா, நான் தான் உங்க கிட்ட பொண்ணு பார்க்க வேண்டாமுன்னு நாசூக்கா சொன்னேனில்லை” அவன் தந்தையிடம் கிசுகிசுத்தான்.

“அதனால தான் இன்னும் பேசி முடிக்காம இருக்கா உங்க அம்மா” என்றார் அவர் கெத்தாக. அவர் எதையோ சாதித்தது போல. “அம்மா,கிட்ட நீங்க வேற எதுவும் சொல்லலையா?” அவன் தன் தந்தையிடம் சண்டைக்கு தயாராக, “நீ என் கிட்ட வேற எதுவுமே சொல்லலையே?” என்றார், ‘நான் உனக்கு அப்பன் டா’ என்பது போல்.

“அது தான் உங்க மேனேஜர் எல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டாரே” அவனும் விடாமல் தன் தந்தையிடம் கேட்க, “நான் என் மகனை தான் டா நம்புவேன். யார் யாரோ சொல்றதை எல்லாம் நம்ப முடியுமா?” அவர் நியாயம் பேச, “இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை” அவன் பற்களை நறநறத்தான்.

“நான் ஜெயசாரதி பெண்ணை கல்யாணம் பண்ண ஆசைப்படுறேன் அப்பா” அவன் கூற, அவர், “ஓ” என்றார் ஆச்சரியப்படாமல்.

“உங்களுக்கு தெரியும் தானே?” அவன் கேட்க, “ஒரு யூகம் இருந்தது.” அவர் கூற, “எல்லாத்தையும் அம்மா கிட்ட சொல்லுவீங்க தானே? இதை ஏன் சொல்லலை?” அவன் தன் தந்தையிடம் பரிதாபமாக கேட்க, “சொன்னால் திட்டு விழும். நீ சினிமாவுக்கு நடிக்க போனதிலிருந்து ஆரம்பிப்பா. அது தான் நீ வந்து திட்டு வாங்கிக்கோன்னு அமைதியா இருந்தேன்” அவர் உண்மையை சொல்ல,

“என்ன அப்பா நீங்க? நீங்க அம்மா கிட்ட பக்குவமா சொல்லிருப்பீங்கன்னு நினைச்சேன்” அவன் தன் தந்தையிடம் செல்லமாக கோபித்துக் கொள்ள,  “அ… வந்ததும் கொஞ்சறதுக்கு அம்மா. திட்டு வாங்குறதுக்கு அப்பாவா?” அவர் கேட்க, “அப்பா…” அவன் தன் தந்தையிடமே எகிறினான்.

“இன்னுமா பொண்ணு போட்டோவை பார்க்கறீங்க?” அமிர்தவல்லி குரல் கொடுக்க, “ஆமா, எல்லா பெண்ணும் அழகா இருக்காங்க இல்லையா, அது தான் முகிலனுக்கு ஒரே குழப்பம்” கோவிந்தராஜன் தன் மனைவிக்கு குரல் கொடுக்க, “அப்பா…” முகிலன் தன் தந்தையிடம் பற்களை நறநறத்தன்.  

“எல்லாம் என் கிட்ட கோபப்படு. போய், உங்க அம்மா கிட்ட சொல்லு. இல்லை அங்க போய் எகிறு.” அவர் சோபாவில் நன்கு சாய்ந்து அமர்ந்தார்.

“உங்களுக்கும் நான் சொல்றதில் சம்மதம் இல்லையா அப்பா?” முகிலன் இப்பொழுது பரிதவிப்போடு தன் தந்தையிடம் கேட்க, “விளையாட்டு பொருள் வாங்கறதில் ஆரம்பித்து உன் படிப்பு, வேலை,கார் எல்லாம் உன் விருப்பம் தான் என் விருப்பம். அப்படி இருக்க, உன் கல்யாண விஷயத்தில் மட்டும் வேறயாவா இருக்க போறேன். உன் விருப்பம் சரியா இருக்குமுன்னு நம்புறேன். உன் தேர்வு தப்பா போகாதுன்னு நம்புறேன். நீ தப்பு பண்ணவும் மாட்டேன்னு நம்புறேன்.” அவர் கடைசி வாக்கியத்தை கண்டிப்போடு கூற, 

“அப்பா, தேங்க்ஸ் அப்பா” என்று அவர் கைகளை பிடித்தபடி கூறினான்.

“மீரா, ரொம்ப நல்ல பொண்ணு அப்பா” அவன் கூற, “நான் விசாரிச்ச  வரைக்கும் அப்படித்தான் சொல்றாங்க. ஜெயசாரதி பொண்ணுங்கிறது தான் ஒரே ஒரு குறை. நீ என்ன ஜெயசாரதி கூடவா வாழ போற? அவர் பொண்ணு கூடத்தானே? ஒன்னும் பெரிய பிரச்சனை இருக்க கூடாது.” அவர் கூற, முகிலன் முகத்தில் மிக பெரிய புன்னகை.

“ஆனால், உங்க அம்மா கிட்ட பேச வேண்டியது உன் பொறுப்பு. நான் ஆரம்பித்தா ரொம்ப கோபப்படுவா” கோவிந்தராஜன் தெளிவாக கூறிவிட்டார்.

“சரி அப்பா…” அவன் தலையசைத்து, தான் கொண்டு வந்த பையிலிருந்து மீராவின் புகைப்படத்தை எடுத்தான். மீராவுக்கு தெரியாமல் கடற்கரை பின்னணியில் எடுத்த புகைப்படம். ‘எப்பவாது சேலை, சுடிதார், லெக்கிங்ஸ் போடுறாளா? எப்பப்பாரு பேண்ட் சட்டை இல்லைனா ஷார்ட்ஸ்.’ மனதோடு நொந்து கொண்டே  தன் தாய் வைத்திருக்கும் புகைப்படங்களோடு சேர்த்துவிட்டான்.

“கேடி, திட்டத்தோட தான் வந்திருக்கியா?” கோவிந்தராஜன் தன் மகனின் முதுகில் தட்ட, “கல்யாணமுன்னா சும்மாவா அப்பா. கொஞ்சம் முன்ன பின்ன இருந்து தானே ஆகணும்.” அவன் கூற, அமிர்தவல்லி அங்கு வந்தார்.

“என்ன முகிலன், எந்த பெண்ணைப் போய் பார்க்கலாம்?” அவர்  கேள்வியாக அவன் முன் நிற்க, முகிலன் படபடவென்று புகைப்படங்களை  எடுத்தான்.  “அம்மா, இந்த பெண் தான் அம்மா” மீராவின் புகைப்படத்தை நீட்டினான்.

அமிர்தவல்லி அந்த புகைப்படைத்தைக் கூர்மையாக பார்த்தார். ‘அந்த யூடியூப் விமர்சனம் போட்ட பொண்ணு தானே  இந்த பொண்ணு’ தன் மகனின் சேட்டையை கண்டுகொண்டார் அமிர்தவல்லி.

‘இந்த பொண்ணு அரசியல்வாதி ஜெயசாரதி பெண்ணாச்சே.’ அவர் மூளை நொடிப்பொழுதில் கணக்கிட்டு கொண்டது.

“எனக்கு இந்தப் பெண்ணை பிடிக்கலை முகிலன்.” அவர் நேரடியாக கூற, “எனக்கு பிடிச்சிருக்கு அம்மா” அவன் அழுத்தமாக கூறினான். “அம்மா, பார்க்குற பெண்ணை நீ கல்யாணம் பண்ணுவேன்னு வாக்கு கொடுத்திருக்க முகிலன்.” அவன் தாயார் கண்டிப்போடு கூற, “எனக்கு பிடிக்காததை நீங்க செய்யமாட்டீங்கன்னு நீங்க எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கீங்க அம்மா” அவன் உறுதியாக கூறினான்.

“இந்த பொண்ணு வேண்டாம் முகிலன். இப்ப சாப்பிட வா” அவர் கூற, “எனக்கு சாப்பாடு வேண்டாம் அம்மா” முகிலன் இப்பொழுது பிடிவாதமாக கூறினான். “முகிலா, இந்த பெண்ணை நான் வேண்டாமுன்னு சொன்னால், உனக்கு அம்மா சாப்பாடு கூட வேண்டாமா?” அவர் சற்று பரிதவிப்போடு கேட்க,”வேண்டாம் அம்மா. எனக்கு எந்த சாப்பாடும் வேண்டாம் அம்மா” முகிலனின் குரலில் பிடிவாதம் மட்டுமே இருந்தது.

‘இந்த ஒரு வாரத்தில், நான் எல்லாத்தையும் முடிக்கணும். மீராவை நான் இங்க தனியா விட்டு போக முடியாது. இன்னைக்கு என் முதல் திட்டம் நடந்தே ஆகணும். இன்னைக்கு காலையில் நியூஸ் விஷயத்தில் நடந்த தோல்வி நாளைக்கு நடக்க கூடாது.’ அவன் சிந்தனையில் வேகம் இருக்க, 

“நீ சாப்பிடலைனா பரவாயில்லை. நாங்க சாப்பிடுறோம்.” அமிர்தவல்லி கூறிக்கொண்டே உணவு மேஜையை நோக்கி சென்றார்.  கோவிந்தராஜன்  முகத்தில் சிந்தனை ரேகை பரவ, “அப்பா, சொல்லுங்களேன்” என்றான் கெஞ்சுதலாக.

“நீ சாப்பாடு வேண்டாமுனு சொல்லிட்டு நீ போய்டுவ. உனக்கு ஒரு பெண் கிடைப்பா. என் நிலைமை” அவர் கேலியாகவே பதில் கூற, “அப்பா, அம்மா உங்களை திட்டறதெல்லாம் சரி தான். உங்களுக்கு எப்பப்பாரு கேலி தான்.” கடுப்பாக பேசி கொண்டே சாப்பிடாமல் வெளியே சென்றுவிட்டான்.

சென்றவன் என்ன நினைத்தானோ என்னவோ மீண்டும் உள்ளே வந்தான். “அம்மா, நான் ஆபிஸ் போயிட்டு வரேன். அப்பா, நான் வர ராத்திரி ஆகும். எனக்கு சாப்பாடு வேண்டாம்.” கூறிவிட்டு மடமடவென்று காரை அலுவலகம் நோக்கி செலுத்தினான்.

‘அம்மா சம்மதிக்க மாட்டாங்களா? அம்மாவை எதிர்த்து எப்படி பண்றது.  அப்பா பேசி சரி பண்ணிருவாங்களா? நான் அம்மா கிட்ட பொறுமையா பேசிருக்கணும். நான் ஏன் இப்படி படபடன்னு பேசிட்டு வந்தேன். என் கால நெருக்கடிக்கு அம்மா என்ன பண்ணுவாங்க. நான் முதலில் நிதானமா இருக்கணும். அதுக்கு ஆபிசில் எனக்கு தனிமை வேணும். நான் நைட் அம்மா கிட்ட நிதானமா பேசி சம்மதம் வாங்குறேன்’ அவன் தீவிர சிந்தனையில் இருக்க, அவனுக்கு மீராவிடமிருந்து அழைப்பு வந்தது. “சொல்லு மீரா” அவன் கூற, “நீங்க…” அவள் சற்று தடுமாறினாள்.

“சொல்லு மீரா” அவனுக்கு இருந்த மனக்குழப்பத்தில், அவன் அவள் தடுமாற்றத்தை கவனிக்க மறந்தான்.

“உங்களுக்கு என்னை பிடித்து தானே கல்யாணம் எல்லாம் பேசறீங்க. எங்க அப்பாவை பழிவாங்க என்னை…” அவள் பேசி முடிக்குமுன் அவன் அவள் அலைபேசி பேச்சை துண்டித்தான்.

‘இவளுக்காக நான் எவ்வளவு போராடிகிட்டு இருக்கேன். கேள்வியை பாரு. திமிர் பிடித்தவள்’ அவன் இன்னும் அவளை தாறுமாறாக திட்டினான்.

‘இவங்க அப்பனை பழிவாங்க இவளை கல்யாணம் பண்ணனுமா? எனக்கு ஊரு உலகத்தில் வேற பெண்ணே கிடைக்கலை பாரு. முட்டாள்… முட்டாள் ரவுடி’ அவன் அவளை மனதில் வறுத்துக் கொண்டிருந்தான்.

மீரா மீண்டும் மீண்டும் அழைக்க, “நாட் ரீச்சபிள்” என்றே வந்தது. முகிலன், மீராவின் எண்ணை பிளாக் செய்துவிட்டே மீண்டும் காரை எடுத்தான்.

முகிலன் அலுவலகம் சென்று, தன் சாய்வு சூழல் நாற்காலியில் சாய்ந்தான். மீண்டும் படக்கென்று எழுந்து மடமடவென்று தண்ணீரை குடித்தான். நடந்த அத்தனை விஷயங்களையும் அசைப்போட்டான்.

“எனக்கு என்ன பிரச்சனை? இது என் குணம் இல்லையே” அவன் முணுமுணுத்தான். எழுந்து அமர்ந்து, தன் அலைப்பேசியை ஒரு சுற்று சுற்றினான்.

“இந்த திட்டத்தில், ஜெயசாரதி இன்னைக்கு ஒரு நாள் ஜெயிச்சிட்டாரு. அவர் கிட்ட அவமானப்படுறது எனக்கு என்ன புதுசா? எத்தனை அவமானங்கள். எல்லாத்தையும் சிரிச்சிக்கிட்டே சமாளிச்சிருக்கோம். இது என்ன ஜுஜுபி” அவன் தன்னை நிதானப்படுத்தி கொண்டான்.

‘இப்ப என்ன பிரச்சனை? நான் பத்து நாளில் ஷூட்டிங் போகணும். அதுக்குள்ள மீராவை சம்மதிக்க வைத்து என் கூட கூட்டிகிட்டு போகணும். என் மனைவியா. இது என் அம்மா சம்மதத்தோட நடக்கணும்.’ அவன் சிந்தை சிந்திக்க, “நடக்கும்” அவன் இதழ்கள் அழுத்தமாக முணுமுணுத்தது.

அப்பொழுது அவன் அலுவலக தொலைப்பேசி ஒலிக்க, காலர் ஐடியில் மீராவின் எண் மின்ன, “ஹீரோ ஸ்பீக்கிங்…” என்றான் முகத்தில் புன்னகையோடு.

அவள் பட்டென்று அலைபேசி பேச்சை துண்டித்தாள். அவன் முகத்தில் புன்னகை பெரிதாக விரிந்தது. “அவசரம்… அவசரம்… ” அவன் முணுமுணுத்து கொண்டான்.

மீரா, அவள் வீட்டிலிருந்து வெளியே கிளம்ப, “எங்க கிளம்பிட்ட மீரா?” ஜெயசாரதி கேட்க, ” ம்…  ஊரு சுத்த…” அவள் தன் வண்டியை எடுத்து கொண்டு வேகமாக முகிலனின் அலுவலகம் நோக்கி சென்றாள்.

புயல் வேகத்தில் அலுவத்திற்குள் நுழைந்தாள்.  அவளை யாரும் தடுக்க முடியவில்லை. அவனுக்கு அலுவலக நுழைவாயிலிருந்து  செய்தி வர, அவளைத் தடுக்க வேண்டாம் என்று அவன் கட்டளைப் பிறப்பித்தான்.

கதவை தள்ளிக்  கொண்டு அவன் முன்னே சென்று நேராக சட்டையைப் பிடித்தாள். ‘மீரா வருவான்னு தெரியும். ஆனால், இவ்வளவு சீக்கிரமாவா?’ இத்தனை வேகத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.

“நம்பிக்கை துரோகம்” அவள் கோபமாக கூற, அந்த வார்த்தையில் அவன் ஒரு நொடி ஆடிவிட்டான். பதறிக் கொண்டு எழுந்தான்.

“மீரா” அவன் தடுமாற, “ஹீரோ, நீங்கலாம் எனக்கு ஃபிரெண்டா?” அவள் கோபமாக கேட்க, அவள் ஹீரோ என்ற அழைப்பில் ‘வேற ஏதோ விஷயம் தான்’ அவன் நிதானத்திற்கு வந்தான்.

“நான் எதுவோ தெரியாம சந்தேகப்பட்டு கேட்டா, நீங்க என்னை பிளாக் பண்ணுவீங்கலா? இவ்வளவு தான் உங்க நட்பா? இவ்வளவு தான் உங்க அக்கறையா?” அவள் கோபமாக கேட்க, அவன் புன்னகைத்தான்.

“என்ன சிரிப்பு? ஜெயசாரதிக்கு உங்களை பிடிக்காது. உங்களுக்கும் அவரை பிடிக்காது. அது தான்… அது தான்…” அவள் தடுமாற, அவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தினான். “ஆனால், எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.” அவன் அவள் விழிப்பார்த்து கூறினான்.

அவன் விழிகள் காட்டிய நெருக்கத்தில் அவளிடம் ஏதோவொரு மாற்றம். அவன் காட்டிய நெருக்கத்தில் அவளிடம் கொஞ்சம் தடுமாற்றம்.

“எனக்கும், உங்களை பிடிச்சிருக்கு” அவள் எங்கோ பார்த்துக் கொண்டு கூற, “காலையில் தெரியாதது, அதுக்குள்ளே தெரிஞ்சிருச்சா?” அவன் அவளை தன் பக்கம் திருப்பி கேட்க, “ம்… எங்க வீட்டுக்கு போனதும் தெரிஞ்சிருச்சு. அந்த வீடு எனக்கு பிடிக்கலை. நீங்க இருக்கிற இடம் பிடிச்சிருக்கு” அவள் இப்பொழுது அவன் விழி பார்த்து கூற, அவன் அவளை வாஞ்சையோடு பார்த்தான்.

“அதுவும் நீங்க பிளாக் பண்ணதும், நான் எதோ தப்பு பண்ணிட்டேன்னானு பயந்து வேகமா வண்டியை ஒட்டிக்கிட்டு வந்தேன்.  ரெண்டு தடவை லாரி கிட்ட ஜஸ்ட் மிஸ். எனக்கு ஆயுசு கட்டி தான் போல.” அவள் அசட்டையாக கூற, அவன் அவளை சரெலென்று இழுத்து அணைத்தான்.

அவன் இதயம் அதன் துடிப்பின் வேகத்தை ஏற்றிக்கொண்டது. அதை அவள் உணர்ந்து கொண்டாளோ இல்லை அவன் உணர்ந்து கொண்டானோ இல்லையோ அவர்களுடைய உணர்வுகள் உணர்ந்து கொண்டது.

“ரவுடி, இனி இப்படி எல்லாம் வண்டி ஒட்டாத.” அவன் கண்டிப்போடு கூற,  அவன் கதகதப்பு அவளுக்கு பிடித்திருந்தது. அவள் அவன் அரவணைப்பை ரசித்தாள். “மீரா, நான் சொல்றது கேட்குதா?” அவன் அவள் முகம் உயர்த்தி கேட்க, “அப்ப, எனக்கு ஏதாவது ஆனா நீங்க அழுவீங்களா? எனக்கும் அழ ஆள் இருக்கா இப்ப?” மீரா சிரித்துக் கொண்டே கேட்க, அவன் அவள் தலையை செல்லமாக தட்டினான்.

“இப்படி பேச கூடாது மீரா” அவன் கண்டிப்போடு கூற, அங்கு அமைதி நிலவியது. அவள் அருகாமையை அவன் ரசித்தான். அவளும் ரசிக்க, அவளோ முதலில் சுதாரித்துக் கொண்டு சட்டென்று விலகி நின்றாள். “கரெக்ட், இப்படி பக்கத்தில் நின்னு பேச கூடாது. இப்படி சுமுகமாவும் பேச கூடாது. ஏன் என்னை பிளாக் பண்ணீங்க” அவள் மீண்டும் சண்டைக்கு தயாராக, “நாம்ம பிரெண்ட்ஸ் இல்லையா? இப்படி எல்லாம் சண்டை போட கூடாது.” அவன் அவளை தோளோடு சேர்த்துக் கொண்டான்.

அவர்கள் அருகாமையை அவளறியாமல் இயல்பாக்கிக் கொண்டிருந்தான்.

“பிளாக் பண்ணினா நீ வருவன்னு தோணுச்சு. அதுவும் நீ அப்படி கேட்டதும் கோபம். அது தான். ஆனால், நீ இப்படி வேகமா வருவன்னு யோசிக்கலை. இனி யோசிச்சி தான் பண்ணுவேன்.” அவன் சமாதான கொடியை பறக்க விட,  அவன் பேச்சை ஒதுக்கி அவள் அடுத்த கேள்விக்கு தாவினாள்.

“கல்யாணத்திற்கு அப்புறமும் இப்படி பிரெண்ட் மாதிரி இருப்பீங்க தானே? மாற மாட்டீங்க தானே?” அவள் மீண்டும் சந்தேகமாகவே கேட்க, அவனுக்கு அவள் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது.

“என்னைக்கும் நான் உனக்கு ஒரு நல்ல நண்பன் தான். ஆனால், இந்த நண்பன் உனக்கு ஒரு கணவானாவும் இருப்பான். காதலனாகவும்…” அவன் பேச்சை முடிக்குமுன்னு அவன் இதழ்களை தன் கரம் கொண்டு மூடினாள்.

“இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பேசுவோமா?” அவள் தலைச் சரித்து கேட்க, அவன் அவள் கரங்களில் இதழ் பதிக்க அவள் சட்டென்று தன் கரங்களை உருவிக் கொள்ள, அவன் அவளை தன்னோடு அணைத்து கொண்டான்.

“ரவுடி…” அவன் அவள் செவியோரம் கிசுகிசுக்க, அவன் தீண்டல் பிடித்திருந்தாலும், அவளிடம் தடுமாற்றம். ‘ஹீரோ ரொம்ப தான் வேகம்.’ அவள் மனம் சிணுங்கியது. ‘ரவுடி இப்படி சீக்கிரம் சம்மதம் சொல்லுவான்னு நான் நினைக்கலை.’ அவன் மனம் துள்ளாட்டம் போட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

 “ஹீரோ…” அவள் அவனிடமிருந்து கொஞ்சம் விலகி நின்றாள். அவள் விலகி நிற்க, அவள் விருப்பத்திற்கு இணங்கி, அவன் தன் பிடியை தளர்த்தினான். ஆனால், முழுதாக தன் பிடிமானதை விடவில்லை, அவளை தன் அருகில் நிறுத்தி கொண்டான்.

 “நான் சொல்றதை மட்டும் கேட்டுட்டு போ” அவன் அவள் செவிகளில் கிசுகிசுத்தான். இதழ் தீண்டாமல், அவன் வார்த்தைகள் அவள் செவிகளை தீண்ட ஆரம்பித்தது.

அவன் சுவாச காற்று தீண்டலில் முதலில் அவள் கிறங்கி நிற்க, அவன் கூறிய சொற்களில் அதிர்ந்து நின்றாள்.

தித்திப்புகள் தொடரும்…