Birunthavanam-19

Birunthaavanam-87860ff5

பிருந்தாவனம் – 19

மாதங்கி, கிருஷை தொடர்ந்து வந்தவர்களில் ஒருவன் அவள் வயிற்றில் தான் சொருக எத்தனித்தான்.

‘உன்னை பிடிக்கலை…’ மாதங்கி சொன்ன வார்த்தையில் கிருஷின் கோபம் சர்ரென்று ஏற, அவன் சரேலென்று கைகளை உருவி கொண்டான்.

அவன் மேல் கூட்டத்தில் சாய்ந்திருந்த அவள் பிடிமானமின்றி சரிய, மின்தூக்கியின் கதவு திறக்கவும் நேரம் சரியாக இருந்தது.

மடமடவென்று மக்கள் வெளியே செல்ல, மாதங்கி பின் பக்கமாக சரிந்து விழ எத்தனித்தாள். கிருஷ் வேகமாக முன்னே சென்று அவளை இடையோடு தூக்கி நிறுத்தினான்.

“நீ பிடிக்கலைன்னு சொன்னாலும், நான் உனக்கு சந்தோஷத்தை மட்டும் தான் கொடுப்பேன். உன்னை வெறுக்கவே மாட்டேன்.” என்று அவளை இடையோடு தாங்கி பிடித்து அவளை கைகளில் அலேக்காக தூக்கி நிறுத்தி, அவள் தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்ள அவகாசம் கொடுப்பவன் போல் தோள் கொடுத்து நின்றான்.

அவன் வார்த்தைகள் அன்பை மட்டுமே வெளிப்படுத்தியது. அவன் கண்கள் காதலை மட்டுமே வெளிப்படுத்தியது. அவன் அறியவில்லை, அவன் வார்த்தைகளும் விரைவில் அவளை நோக்கி விஷத்தை கக்கும் என்று. அவன் கண்கள் அவளை வெறுப்பாய் மட்டும் பார்க்குமென்று.

பாவம் அவளும் அறியவில்லை, தவறி விழும்பொழுதுகூட மனம் தாளாமல் கைகொடுத்தவன், அவள் தவிடு பொடியாகும் பொழுது விலகி நிற்பான் என்று!

கத்தியை சொருகியவன், இவர்கள் இருவரும் நகர்ந்ததில் மின்தூக்கியின் ஓரத்தில் கத்தியை சொருவ, அந்த கத்தியின் முனை உடைந்து சோகமாக காட்சி அளித்தது.

“உன்னை குத்த சொன்னா, நீ அவங்க பண்ற லவ்ஸ பார்த்திட்டு இருந்தியா?” மற்றொருவன் அவனை கடுப்படிக்க, வாய்ப்பை தவறவிட்டவனோ, “பே…” என்று விழித்து கொண்டு நின்றான்.

மாதங்கி எதுவும் பேசவில்லை. மடமடவென்று தனக்கு வேண்டியதை வாங்கி குவித்தாள். மருந்துக்கும் கிருஷிற்கு பேச வாய்ப்பு கொடுக்கவில்லை மாதங்கி.

அவனும் எதுவும் பேச எத்தனிக்கவில்லை. கைகளை கட்டியபடி, அவளையே யோசனையாக பார்த்து கொண்டிருந்தான்.

‘இவளுக்கு என்னை பிடிக்கும். ஆனால்?’ அவன் மனதில் சற்று குழப்பம் மேலோங்கி இருந்தது.

‘பேச விட்டோம்… காதல் பேசியே கொள்ளுவான்.’ மாதங்கி அறிவு அவளை அறிவுறுத்த, வேலையை முடித்து விட்டு, “இன்னொரு கடைக்கு போகணும். சின்ன பர்ச்சேஸ் தான். நடந்து போயிட்டு வந்து வண்டியை எடுத்துக்கலாம். ஓகேவா?” என்று அவள் கேட்க, அவன் சம்மதமாக தலை அசைக்க இருவரும் சாலையை நோக்கி நடந்தனர்.

அப்பொழுது இவர்களை தொடர்ந்து வந்தர்வகள், பைக்கை வேகமாக செலுத்தி, மாதங்கியை இடிக்க முற்பட, “மாது…” அவன் அலறிக்கொண்டு அவளை தன்னோடு சேர்த்து இறுக்கிக்கொள்ள, பைக்கில் பின்னால் இருந்தவனின் கைகள் கிருஷின் கைகளை இடிக்க, “அம்மாஆ…. ஆ….” வலியில் துடித்தான் கிருஷ்.

அவன் வலியின் துடிப்பு அவளுக்கு கத்தியை கொண்டு பாய்ச்சுவது போல் வலித்தது.

அவன் அலறல் அவன் உடலின் இறுக்கம் மாதங்கியை நிலை குலைய செய்தது.

தன்னை மறந்து, “சீனியர்…” அவன் அணைப்பில் இருந்து கொண்டு, அவன் கைகளை பிடித்தாள்.

கிருஷ் வலி தாளாமல் கண்களை இறுக மூடி இருந்தான்.

அவள் அழைப்பு, அவள் துடிப்பு அவனை எட்டவில்லை காலம் முழுவதும் எட்டப்போவதில்லை என்பதை அறிவுறுத்தவுது போல் அமைந்தது சூழ்நிலை.

அந்த வலியிலும், அவன் கைகள் அவளை விடவே இல்லை. அவன் இதயம், “தடக்… தடக்…” என்று அரங்கேறிய சம்பவத்தில் வேகமாக துடித்தாலும், ‘மாது… மாது…’ என்றே அவன் சற்று முன் பதட்டத்தில் அலறியதே, அவள் செவிகளில் ஒலித்தது.

‘இது தான் காதலா?’ அவன் துடிப்பு அவளுக்கு எங்கோ இடித்தது.

“சீனியர்… ஹாஸ்பிடல் போவோமா?” அவள் குரலில் அக்கறை மட்டுமே இருக்க, அவன் மறுப்பாக தலை அசைத்தான்.

“அடி எதுவும் இல்லை மாது. அவன் கை தான் இடிச்சது. அந்த இடிச்ச வேகத்துல வலி சும்மா சுள்ளுனு இழுத்திருச்சு. அது தான் அந்த நேரம் வலி தாங்காமல் கத்திட்டேன்.” அவன் கூறிக்கொண்டே அவளை கைவளையத்தில் இருத்தி கொண்டு நடந்தான்.

கூட்டம் எங்கும் அலைந்தபடியே இருந்ததால், நொடிப்பொழுதில் அரங்கேறிய சம்பவம் யாருக்கும் பெரிதாக புலப்படவில்லை.

“கடைக்கு வேணாம் வீட்டுக்கு போவோம்.” அவள் கூற, “அவங்க நம்மளை ஃபாலோ பண்ணிருக்காங்க. நான் பைக்கில் போனவங்களை லிஃப்டில் பார்த்தேன். யாரா இருக்கும்?” அவன் பேசிக்கொண்டே போக, மாதங்கியின் கவனம் அங்கு இல்லை.

அவன் அணைப்பிலிருந்து, அவள் விலக எத்தனிக்க அவன் பிடிமானமோ இறுகி இருந்தது. அவன் கைகள் அவன் தீண்டல் இப்பொழுது காதல் பேசவில்லை. குழந்தையை அடை காக்கும் தாய் போல் அரண் மட்டுமே பேசியது. அவள் சாய்ந்திருக்கும் அவன் தேகம் அரங்கேறிய சம்பவத்தின் படபடப்பை கூறியது.

அவள் செவியோரம் இருக்கும் அவன் இதயம், “மாது… மாது…” என்று காதல் மொழி அவளிடம் பேசியது.

அவள் சிந்தனை சற்று திணறியது.

‘இவன் ஏன் என்னை இப்படி காதலிக்கிறான்? நான் இவன் காதலுக்கு தகுதி ஆனவளா? அப்படியே இவனை நான் திருமணம் செய்து கொண்டாலும், தெரியாத ஒருவன் மீது வரும் காதலும் அன்பும் கூட, எனக்கு இவன் மேல் வராது. என் அண்ணனை, முகுந்தனை இக்கட்டில் நிறுத்தி, அவர்கள் வாழ்வை ஆட்டம் காண வைத்து, அந்த கத்தி முனையில் என்னை திருமணம் செய்ய நினைப்பவனை நான் எப்படி திருமணம் செய்து கொள்வது? எப்படி அன்பு செலுத்துவது. எப்படி காதல் செய்வது?’

அடுக்கடுக்கான கேள்விகளோடு அவள் அமைதியாக நடந்து வர, ‘நடந்த சம்பவத்தில் பயந்துட்டாளோ? நம்ம ஆள் பயப்படுற ஆளா என்ன? தேவையில்லாமல் பேசி எதுக்கு மாதங்கியை குழப்பணும்’ அவனும் மாதங்கியை கணக்கிட்டு கொண்டு மௌனமாக நடந்தான்.

இருவரும் காரில் ஏற, அவன் காரை கிளப்ப, “நான் கொஞ்சம் பேசணும்” அவள் நிதானமாக கூறினாள்.

அவன் காரை நிறுத்தினான். “சீனியர், கையில் அடி பட்டிருக்கா? தண்ணீர் குடிங்க” காரில் தான் வைத்திருந்த தண்ணீரை நீட்டினாள்.

‘சீனியர்…’ அவள் அழைப்பு, அவனை தென்றலாய் வருடியது. ‘இவளுக்கு நான் சீனியர்ன்னு இவ்வளவு நாள் கழித்து இப்ப தான் தெரியுதா?’ அவன் கண்கள் அவளை ஆழமாக பார்த்தது.

‘மாது காதலை உணரும் நாளும் ஒரு நாள் வரும். என்னை மாது, சீனியர் என்று காதலோடு நெருங்கும் நாளும் வரும்.’ அவளை கணக்கிட்டு கொண்ட, அவன் முகத்தில் மெல்லிய புன்முறுவல். அவள் கொடுத்த தண்ணீரை வாங்கி குடித்து கொண்டான்.

“உங்களுக்கு கை வலிச்சா, நான் ஒட்டட்டுமா சீனியர்?” அவள் சுற்றி வளைத்து பேச, அவன் அவள் முகத்தை கைகளால் ஏந்தினான். அவள் தடுமாறினாள். அவள் முகத்தை திருப்பிக் கொள்ள முயல, அவன் விரல்களில் அழுத்தம் கூடியது.

எடுத்தெறிந்து பேசவும் முடியாமல், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அவள் உணர்வுகளும் உணர்ச்சிகளும் தடுமாறியது.

அவள் இமைகள் படபடத்து, அவள் கருவிழிகளை மறைத்து கொண்டது. அவள் இதழ்கள் பேச்சை மறந்து மௌனித்து கொண்டது. அவன் கைகளின் கதகதப்பில் அவள் கன்னங்கள் ஏதையோ உணர தோற்று போய், துடிதுடித்தது.

“மாது…” அவன் அழைப்பில் காதல் கசிந்து உருக, அவள் கண்கள் கலங்கியது.

“மாது…” அவள் கலக்கத்தை பார்த்த அவன் உள்ளம் காதலோடு, பதட்டத்தையும் ஒரு சேர வெளிப்படுத்தியது.

அவன் பதட்டம், அவன் அக்கறை, அவன் அன்பு அவளை நிலைய குழைய செய்ய, அவள் கண்கள் கண்ணீரை சொரிந்தது.

“ஏன் மாது அழற? இப்ப நினைச்சதை நடந்து பயந்துட்டியா? ஒன்னும் இல்லை டா இது. ஏதோ ஏத்தேசலா நடந்திருச்சு? அழதா டா” அவன் சமாதனம் செய்ய, அவள் மறுப்பாக தலை அசைத்தாள்.

“அப்புறம் என்ன மாது?” அவன் அவள் தலை முடியை ஒதுக்கினான். அவளுக்காக ஏதையும் செய்ய தயாரானான். அவளை அவன் உள்ளம் என்னும் சிப்பிக்குள் வைத்து முத்தாக பாதுகாக்க துடித்தான் கிருஷ்.

“இந்த காதல் வேண்டாம் கிருஷ்.” அவள் தன் மடியில் முகம் புதைத்து கதறினாள்.

‘நான் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டுமோ? கொஞ்சம் அவகாசம் கொடுத்திருக்க வேண்டுமோ?’ அவள் கதறலில் அவன் அறிவு அவனை, மெல்ல நிதானிக்க செய்தது. ஆனால், காதல் கொண்ட அவன் மனம், அதன் வேகத்தில் அவன் அறிவை முந்திக் கொண்டது.

‘அவகாசம் கொடுத்தால், எனக்கு வேற கல்யாணம் செய்து வச்சிருவாங்க. இவளுக்கு ஏன் என்னை புரிய மாட்டேங்குது?’ அவன் மனம் முறுக்கி கொண்டது.

அவன் கைகள் விலகியது. அவன் உடல் இறுகியது. தன் காதலை வேண்டாம் என்று அழும் தன் காதலியை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் கையாலாகாதத் தனத்தோடு பார்த்தான் கிருஷ்.

மாதங்கி சில நிமிடங்களில் தன்னை சரி செய்து கொண்டாள்.

“எனக்கு பல தோழிகள். அதுல பிருந்தா நெருங்கிய தோழி. அது மாதிரி எனக்கு பல தோழர்கள். அதில் நீயும் ஒருத்தன். அவ்வளவு தான். அதுக்கு மேல உனக்கு என் மேல் எண்ணம் வரதுக்கு நான் காரணமா இருந்திருந்தா நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். நீ என்னை உண்மையா காதலிக்கலாம். நான் இல்லைனு சொல்லலை. உன் காதல் எனக்கு புரியுதுன்னு வச்சிப்போம். ஆனால், அந்த காதல் எனக்கு வரலை. உன் காதலுக்கு நான் தகுதியானவளும் இல்லை.” அவள் அழுத்தமாக முடித்தாள்.

“எல்லாம் கல்யாணமும் காதலில் ஆரம்பிக்காது. கல்யாணத்திற்கு அப்புறமும் காதல் வரும். உனக்கு அப்படி வரும். நீ ஏன் இப்ப தேவை இல்லாமல் காதலை பத்தி யோசிக்கிற?” அவன் நிதானமாக கேட்டான்.

“எஸ்… நீ சொல்றது சரி. கல்யாணத்திற்கு அப்புறம் காதல் வரும். ஆனால், எனக்கு உன் மேல வரவே வராது. நான் படிக்கனுமுனு ஆசை படுறேன். வேலைக்கு போகணுமுன்னு ஆசை படுறேன். எனக்குன்னு ஆயிரம் கனவுகள் இருக்கு. எல்லாத்தையும் அழித்து நீ என்னை கத்தி முனையில் கல்யாணம் செய்யுற” அவள் கோபமாக பேசினாள்.

அப்பொழுது அவன் செலுத்திய காதலில் உணர்ச்சிவசப்பட்டிருந்த மாதங்கி இப்பொழுது நிதானத்திற்கு வந்து அழுத்தமாக பேசினாள்.

“உன் கனவுக்கு உன் ஆசைக்கு நான் மதிப்பு கொடுப்பேன். நீ கல்யாணத்திற்கு அப்புறம் எல்லாம் செய்யலாம்” அவன் உறுதியாக கூற, “எப்படி மதிப்பு கொடுப்பீங்க? நான் காதல் வேண்டாம்முனு சொன்னது விலகி போய், கல்யாணம் வேண்டாமுன்னு சொன்னதும் சரின்னு ஒத்துக்கிட்டிங்களே! அந்த மாதிரியா?” அவள் உதட்டில் ஏளன புன்னகையோடு நக்கலாக கேட்டாள்.

“மாதங்கி…” அவன் கர்ஜித்தான்.

“உண்மை சுடும்…” அவள் அவனிடம் சண்டைக்கு தயாராக, அவனுக்கு சினம் கனன்றாலும், இந்த மாதங்கியை அவனுக்கு பிடித்து தொலைத்தது.

“நான் சொல்ல நினைச்சது இது தான். எனக்கு உங்க மேல காதல் இல்லை. ஆனால், என் மனசில் ஏதோவொரு ஓரத்தில்…” அவள் தன் இதயத்தை தடவ, “நான் இருக்கேனா?” அவன் நமட்டு சிரிப்போடு கேட்டான்.

அவள் மறுப்பாக தலை அசைத்து, “உங்க மேல அக்கறை இருக்கு. அந்த அக்கறை, நான் உங்களுக்கு எதிரா செய்ய போற வேலையை வேண்டாமுன்னு சொல்லுது. நான் செய்ய போற வேலை, உங்களுக்கு ஆயுசுக்கும் மறக்க முடியாத வலியை கொடுக்கலாம். நீங்க பல விஷயத்தை இழக்கலாம்.” அவள் பேசி கொண்டே போக, அவன் கலகலவென்று சிரித்தான்.

“சிரிக்காம, நீங்களே கல்யாணத்தை நிறுத்திட்டா…” அவள் பேசி முடிக்குமுன் அவன் அவள் சங்கை பிடித்திருந்தான்.

“என்ன? சின்ன பொண்ணுன்னு கொஞ்சம் இறங்கி வந்தா, என்னையே மிரட்டுறியா?” அவன் பற்களை நறநறக்க, “மிரட்டல் இல்லை. உங்களுக்கு வலியை கொடுக்க கூடாதுன்னு நான் நினைக்குறேன். இது நட்பா? அக்கறையான்னு தெரியலை.” அவள் சுவாசத்தை எடுத்து கொண்டாள்.

“உங்களுக்கு கொடுக்க போற வலியை நினைக்கும் பொழுது, எனக்கும் லேசா வலிக்குது. அதுக்கு தான் சொல்றேன், நீங்களே கல்யாணத்தை நிறுத்திருங்க. இல்லைனா, ரொம்ப வருத்தப்படுவீங்க. இந்த கல்யாணம் நடக்காது.” அவள் அவன் அருகாமையிலும் அவன் கொடுத்தது அழுத்தத்தை தாண்டியும் உறுதியாக கூறினாள்.

அவன் அவன் கன்னம் தட்டி, “ஐ அம் வெயிட்டிங் பேப்ஸ்…” மேலும் பேசாமல் காரை கிளப்பினான்.

‘அவங்க வீட்டில் சம்பந்தம் பேசியாச்சு. ஊரறிய, பத்திரிக்கை கொடுத்தாச்சு. அவங்க அம்மா, அப்பா, அண்ணன் கிட்ட கூட நான் மிரட்டினத்தை மாதங்கி சொல்லை. இவ என்ன செய்திற முடியும்?’ அவன் மனம் சற்று தோரணையாகவே எண்ணி கொண்டது.

நாட்கள் வேகமாக நகர ஆரம்பித்தது திருமண நாளை நோக்கி.

கிருஷின் வீட்டில், ‘பிருந்தாவனத்தில்…’ திருமணம் நடப்பதாக ஏற்பாடு. வீட்டின் பின் பக்கத்தில் மிகப்பெரிய மைதானம் போன்ற தோட்டம். அங்கே பந்தலிட்டு, அனைத்து வேலைகளும் நடக்க ஆரம்பித்தது.

பிருந்தாவின் வீடு.

     கோதண்டராமனும் ரங்கம்மாளும் கிருஷின் திருமண பத்திரிக்கை கொடுப்பதற்காக வருகை வந்திருந்தனர்.

“பாட்டி… தாத்தா…” கட்டிக்கொண்டாள் பிருந்தா.

“அம்மா… அப்பா…” சரவணனின் கண்கள் கலங்கியது. ருக்மணி தலை அசைத்து கொண்டார். அவர்களின் வருகை ருக்மணிக்கு பிடிக்கவில்லை. ஆனால், எதிர்த்து பேசும் தைரியம் அவருக்கு ஒருநாளும் கிடையாது. தன் கணவனை முன் வைத்தே, தன் காரியத்தை சாதித்து கொள்ளுவார்.

‘அரசியல் சீட்டு தரமாட்டாங்க. கல்யாண காகிதம் தர எதுக்கு வந்திருக்காங்க?’  ருக்மணி கண்களை சுருக்கி பார்த்தார்.

“அப்பாவும், பொண்ணும் கண் எல்லாம் கலங்குறீங்க. இந்த அம்மாவை, பாட்டியை நேரில் வந்து பார்க்கனுமுனு தோணலை.” ரங்கம்மாள் மகனையும், பேத்தியையும் பார்த்து வருத்தமான குரலில் பேசினார்.

“அம்மா… அது…” சரவணன் தன் மனைவியை பார்த்தார். ருக்மணி தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் முகத்தை திருப்பி கொண்டார்.

“உன் அப்பாவை விடு. நீ வர கூடாதா?” என்று பாட்டி பிருந்தாவை பிடித்து கொள்ள, “பாட்டி, நான் அப்ப சின்ன பொண்ணு. நீங்க என் காதை திருகி உங்களோட கூட்டிட்டு போக வேண்டியது தானே? ஏன் என்னை எங்க அம்மா அப்பா கூட விட்டுடீங்க?” தன் பாட்டியை மடக்கினாள் பிருந்தா.

“ஹா… ஹா…” பெருங்குரலில் சிரித்தார் தாத்தா.

“அப்படி கேளு பிருந்தா. உன் பாட்டியை கேள்வி கேட்க ஆளே கிடையாது.” தாத்தா கூற, “அட, என் பேரன் சொன்னது சரி தான். உன் பேத்தி சரியான வாயாடி. கறார் பேர்வழின்னு சொன்னான்” பாட்டி கண்களை உருட்டினார்.

“ஐயோ பாட்டி, அண்ணா சொல்றது பொய்” பிருந்தா தாத்தாவின் அருகில் அமர்ந்து கொண்டார்.

சரவணனுக்கு, தன் மகள் தாய், தந்தை அருகே அமர்ந்திருப்பதை பார்ப்பதற்கு மகிழ்வாக இருந்தது.

ருக்மணி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“எல்லாரும் கல்யாணத்துக்கு வந்துருங்க” தாத்தா, பாட்டி பூ, பழம், உடை, அணிகலன்களோடு அழைப்பு விடுக்க, “மாப்பிளையோட, அம்மா அப்பா வரலையா?” தொடுக்காய் கேள்வியை சொருகினார் ருக்மணி.

சரவணன் தன் மனைவி எதிர்ப்பு தெரிவிக்க கண்டுகொண்ட வழியை கண்டுகொண்டவர் போல், தன் மனைவியை பரிதாபமாக பார்த்தார்.

‘நீ செய்த வேலைக்கு, அவங்க உன் வீட்டுக்கு வருவாங்களா?’ ரங்கம்மாள் தன் மருமகளை முறைத்தார்.

‘தன் மனைவியை சரியான இடத்தில் வைக்க முடியவில்லை. இதில் இவனை நான் எப்படி அரசியலுக்கு கொண்டு வர முடியும்? இதை புரிஞ்சிக்காம, இவனும் தன் பொண்டாட்டி பேச்சை கேட்டு இப்படி தனியா வந்துட்டானே.’ தன் மகனை வருத்தத்தோடு பார்த்தார் கோதண்டராமன்.

“பாட்டி, தாத்தா நான் தான் கல்யாணத்தில் விதவிதமா டிரஸ் பண்ணிட்டு முன்னாடியே நிற்பேன்.” பிருந்தா சூழ்நிலையை சரி செய்தாள்.

“சாப்பிட்டுட்டு தான் போகணும்.” என்று பாட்டி, தாத்தாவை வற்புறுத்தி உண்ண வைத்தாள். 

“உன் ஃபிரெண்டை என் பேரன் விரும்பிருக்கான். அவளும் உன்னை மாதிரி வாயாடியா?” என்று பேத்தியை வம்பிழுத்தார் பாட்டி.

“ச்ச… ச்ச… அமைதினா அமைதி. அவ இருக்கிற இடமே தெரியாதுன்னா பாருங்களேன்.” தன் தோழியின் புகழாரம் பாடினாள் பிருந்தா.

திருமண நாளும் வந்தது. பிருந்தாவனம் விழா கோலம் பூண்டிருந்தது. 

பிருந்தாவன வாயிலில், ஒரு காலை மடக்கி பசு மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்த கண்ணனின் கழுத்தில் செம்மஞ்சள் நிறத்தில் பூமாலை. கண்ணனின் கண்களில் குறும்பும், காதலும்  உதட்டில் சிரிப்பும் மிக அழகாய்.

கண்ணன் சிலையை சுற்றி பலவண்ண பூக்கள் பூத்திருந்து வண்ணமயமாக காட்சி அளித்தது.

‘யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே

கண்ணனேடுதான் ஆட..

பார்வை பூத்திட பாதைபாத்திட

கண்ணன் இங்கு வாட

இரவும் போனது பகலும் போனது

கன்னி இல்லயே கூட..

இளையகண்ணனின் இமை இமைத்திடத கண்

அங்கும் இங்கும் தேட….

 அவள் மனதில் கண்ணன் இல்லையோ

ஆசைவைப்பதே அன்பு தெல்லயோ…

பாவம் கண்ணனோ?’

 இங்கு மாயக்கண்ணன் பாவமாகி போனான். கிருஷ் சிலைக்கு அருகே நின்று கொண்டிருந்தான். கிருஷின் கண்கள் தன் வருங்கால மனையாளை தேடியது. அவள் அவளுக்கென ஏற்பாடு செய்திருந்த அறையில் இருந்தாள்.

கிருஷின் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. ‘நீங்க நான் சொன்னதை கேட்டிருக்கலாம். கேட்கலை. இருந்தாலும் என்னை மன்னித்து விடுங்கள்.’ அவன் நெற்றி சுருங்கியது.

‘எதுவும் ஏடாகூடமா செய்துவிடுவாளோ?’ அவன் உள்ளம் அவளுக்காக பதறியது.

‘இல்லை என் மாதங்கி முட்டாள் இல்லை.’ தன்னை தானே சரி செய்து கொண்டான்.

‘இன்னும் சில மணிநேரம் தான். திருமணமாகிவிட்டால் எல்லாம் சரியாகிரும். எத்தனை படத்தில் பார்த்திருக்கிறேன். கதைகளில் படித்திருக்கிறேன். பிடிக்காத கல்யாணம். மஞ்சள் கயிறு மாஜிக். என் அருகாமையில் எல்லாம் சரியாகிவிடும். இந்த கல்யாணம் மட்டும் நடக்கட்டும். அதன்பின் என் வாழ்க்கை முழுதும் நான் அவள் சொல்வதை கேட்பேன்.’ அவன் உறுதிமொழி எடுத்து கொண்டான்.

முகூர்த்த நேரமும் வந்தது. அவன் மணமேடையில் அமர்ந்திருந்தான். “பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ…” குரல் ஒலிக்க, அவள் மணமேடைக்கு மாலையோடு வந்தாள்.

மீடியா, கேமரா அனைத்தும் அவர்களை சூழுந்து இருந்தது. அரசியல்வாதி வீட்டு திருமணம் அல்லவா?

அதன் பின் அவள் செய்த செய்கையில் அனைவரும் அதிர்ந்து நின்றனர்.

அவன் காதல் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை இழந்து முழுதாக தோல்வியை தழுவி விழுந்தது. அவள் வாழ்க்கையும் அங்கு திசை மாறி கொண்டிருந்தது.

இத்தனை காலம் கிருஷ் மாதங்கி அவர்கள் இருவர் வாழ்விலும் அவர்களே விளையாடி கொண்டிருந்தார்கள்.

இப்பொழுது விதி அவர்கள் வாழ்வில் விளையாட திருமாலின் சக்கரத்தை பிருந்தாவனம் நோக்கி சுழட்ட ஆரம்பித்தது.

“ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ?” என்ற கேள்வியோடு அந்த பிருந்தாவனம் ஸ்தம்பித்து நின்றது.

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!