Birunthavanam-5

Birunthavanam-5
பிருந்தாவனம் – 5
கிருஷ் அவன் தந்தையை நெருங்க, எதிர் பக்கம் அவன் தந்தையிடம் அலைபேசி வழியாக தகவலை கூறி கொண்டிருந்தது.
“அவனுக்கு ஒரு தங்கை மட்டும் தான் சார். பெயர் மாதங்கி…” அந்த பெயரில் பிரேக் அடித்தார் போல் தன் தந்தை அருகே நின்றான் கிருஷ்.
அதன் பின்னும் பேச்சு தொடர்ந்தது. கிருஷ்க்கு முன் பக்க பேச்சும் விளங்கவில்லை. பின்பக்க பேச்சும் விளங்கவில்லை. ஆனால், அந்த பெயர்… ‘மாதங்கி…’ அதில் அவன் ஒரு கணம் நிற்க, தன் தந்தையின் பார்வையில் கடகடவென்று படியேறி, அவன் அறைக்குள் சென்றான் அந்த கல்லூரி காளை.
‘அப்பா கிட்ட ஏன் அந்த பெயரை சொல்ல போறாங்க? எனக்கு தான் அவ நினைப்பாவே இருக்கோ? எந்த பெயரை கேட்டாலும் அவ பெயர் மாதிரியே இருக்கோ?’ அவன் முகத்தில் அசட்டு புன்னகை வந்தமர்ந்தது.
அதே நேரம் வேணுகோபால், தன் மகன் அறைக்குள் சென்றதை உறுதி செய்துவிட்டு, “அந்த பொண்ணை தூக்கிருங்க. வேற ஒன்னும் செய்ய வேண்டாம். ஒரு நாள் நம்ம கஸ்டடியில் வச்சிட்டு மறுநாள் விட்டருங்க. அந்த போலீஸ்காரன் சரியா வருவான். ” என்று கூற, எதிர்முனை “ம்…” கொட்டியது.
“நான் அவன் கிட்ட தன்மையா பேசி, நட்பை தான் காட்ட நினச்சேன். அவன் சரியா வர்ற மாதிரி தெரியலை. அவனுக்கு இந்த வேலை வச்சி தான் சாப்பாடும் இல்லை. பெரிய பணக்கார வீட்டு பையன். விரும்பி இந்த வேலைக்கு வந்திருக்கான். அது தான் துள்ளுறான். வீட்டு பொண்ணை வச்சி நெருக்கடி கொடுத்தா, இனி நம்ம விஷயத்தில் தலையிட மாட்டான்.” அவர் அலைபேசியில் கர்ஜிக்க எதிர்முனை மரியாதையோடு தலை அசைத்து கேட்டு கொண்டது.
“நாளைக்கே அந்த பொண்ணை தூக்கிருங்க.” என்று அலைபேசி பேச்சை முடித்துவிட்டு, தன் வீட்டினரோடு இணைந்து கொண்டார் வேணுகோபால்.
கிருஷ் மாலையில் குளித்துவிட்டு, தன் அலைபேசியை எடுத்தான்.
சமூக வலைத்தளத்திற்கு சென்று, ‘மாதங்கி…’ என்று அவன் தேட, அவளை பற்றி எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
‘மாதங்கி எதையும் யூஸ் பண்றதில்லை போல… அவ ஃபமிலி பத்தி தெரிஞ்சிக்கலாமுன்னு பார்த்தால், எதுமே தெரியலியே. முகுந்தன் பத்தியும் எனக்கு தெரியாது. அவன் பக்கம் திரும்ப கூடாதுன்னு நான் நினைப்பேன். இந்த பொண்ணு…’ அவன் சிந்தனை சட்டென்று நின்றது.
‘நான் ஏன் மாதங்கியை பத்தி இவ்வளவு யோசிக்குறேன்? இது தேவை இல்லாத வேலை. அம்மாவுக்கு தெரிஞ்சிது என்னை கொன்னுடுவாங்க. ஆனால்…’ அவன் நெற்றியில் சிந்தனை ரேகைகள்.
அப்பொழுது அவன் மனதை தைத்தது பிருந்தாவின் எண்ணம். ‘மாதங்கி அடிக்கிற கூத்தில், நான் பிருந்தாவை மறந்தே போய்ட்டேன்.’ அவன் எண்ணங்கள் பிருந்தாவை ஆராய முற்பட்டது.
மறுநாள் காலையில், மாதங்கி வீட்டில் பாத்திரங்கள் கடகடவென்று உருளும் சத்தம் கேட்க, அரவிந்த் எழுந்து சமையலறை நோக்கி சென்றான்.
அவன் அங்கு கண்ட காட்சியில் அவன் படுக்கையறை நோக்கி தெறித்து ஓட, தன் தந்தையின் மேல் மோதி நின்றான்.
“என்னடா, இப்படி காலங்காத்தால, பயந்து ஓடி வர? நீயெல்லாம் ஒரு போலீஸ்காரனா?” என்று தூக்கக் கலக்கத்தில் கடுப்பாக கேட்டார் சக்திபாலன்.
“ஏம்பா, இது என்ன அநியாயமா இருக்கு? போலீஸ்காரன்னா, உயிர் மேல ஆசை இருக்கா கூடாதா? இந்த சின்ன வயசுல எனக்கு ஏதாவது ஆகிருச்சுனா?” என்று சட்டம் பேசினான் அரவிந்த்.
“அப்படி என்னப்பா உன் உயிருக்கு வந்த சோதனை?” என்று கேட்டு கொண்டே அங்கு வந்து சேர்ந்தார் மரகதவல்லி மாதங்கி, அரவிந்தின் தாயார்.
“அம்மா, கிட்சேன் போய் பாருங்க.” என்று கண்களை உருட்டினான் அரவிந்த்.
“அய்யயோ…” என்று அலறி படுக்கையறை நோக்கி ஓட ஆரம்பித்தார் மரகதவல்லி.
“என்னடி, நீயும் இப்படி ஓடுற?” என்று சக்திபாலன் புரியாமல் கேட்க, “இன்னைக்கு முகுந்தனுக்கு பிறந்தநாள்” என்று அரவிந்த் கூற, மூவரும் மீண்டும் படுக்கையறைக்கு சென்று உறங்குவது போல் பாவனை செய்ய ஆரம்பித்தனர்.
அதே நேரம் சமையலறையில், அங்கிருந்த பதார்த்தத்தை கரண்டியால் குத்தி கொண்டிருந்தாள் மாதங்கி.
‘நான் யூடியூபில் பார்த்த மாதிரி தான் செய்யுறேன். அப்புறம் ஏன், இந்த கேசரியில் இவ்வளவு கட்டி?” என்று அதை எல்லாம் உடைத்து கொண்டிருந்தாள் மாதங்கி.
அப்பொழுது வீட்டில் வேலை செய்யும் அலமேலு, “மாதங்கிம்மா எல்லாரும் முழிச்சிட்டு வெளிய வரமா திரும்ப உள்ள போய்ட்டாங்களே” என்று கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தார்.
“அவங்களுக்கெல்லாம் ஒரே பொறாமை அக்கா. நான் நல்லா சமைக்குறேன்ல. அந்த பொறாமை.” என்று அந்த கேசரியில் விழுந்த கட்டியை எப்படி உடைப்பது என்று தெரியமால், அதை சூடாக மிக்ஸியில் போட்டு அவள் ஆன் செய்ய, அது சுவர் எங்கும் தெறித்து ஆரஞ்சு நிறத்தில் காட்சி அளித்தது.
“அய்யயோ, இதை வேற நான் துடைக்கணுமே.” என்று கூறிக்கொண்டு மாதங்கி மேலே ஏற எத்தனிக்க, “அதெல்லாம் நான் துடைக்குறேன் ம்மா” என்று கூறிக்கொண்டு அலமேலு துடைக்க ஆரம்பித்தார்.
“தேங்க்ஸ் அக்கா. நான் உங்களுக்கு ஸ்பெஷலா ஒரு கிண்ணம் கேசரி தரேன்.” என்று மாதங்கி கூற, “அது மட்டும் வேண்டாம்ம்மா. நான் எவ்வளவு வேலை நாளும் பார்க்குறேன். நீங்க செய்த பலகாரம் மட்டும் வேண்டாம். போன தடவை அரவிந்த் ஐயா பிறந்தநாளைக்கு நீங்க கொடுத்த கேக் சாப்பிட்டு, ஒரு வாரம் ஆஸ்பத்திற்கும் வீட்டுக்கும் அலைஞ்சேன் மா” என்று அலமேலு பரிதாபமாக கூறிக்கொண்டு, இடத்தை துடைக்க ஆரம்பித்தார்.
“அக்கா, எப்பவும் இப்படி தப்பு நடக்குமா? போன தடவை எனக்கு மைதாவுக்கும், பேக்கிங் பௌடர்க்கும் வித்தியாசம் தெரியலை. அதனால், கொஞ்சம் அளவு மிஸ் ஆகிருச்சு.” என்று மாதங்கி மெட்டு விடாமல் கூறினாள்.
“இல்லைம்மா…” என்று அலமேலு மேலும் பேச ஆரம்பிக்க, “போதும் போதும்… வேலையை பாருங்க.” என்று அவர் பேச்சை அங்கு நிறுத்திவிட்டு, மிக்சியில் போட்டும் உடைபடாத ரவை கட்டியை, எலக்ட்ரிக் ப்ளெண்டர் வைத்து உடைக்க முற்பட்டு தோற்று போனாள் மாதங்கி.
மிக்ஸி, ப்ளெண்டர் என அனைத்திலும் இருந்த கேசரியை வழித்து மீண்டும் ஒரு பாத்திரத்திக்குள் வைத்து கைகளை கழுவினாள். அது, பிசுபிசுவென்று ஓட்ட, ஒருவாறு தேய்த்து கழுவதற்குள் மாதங்கிக்கு போதும்போதும் என்றாகிவிட்டது.
“ஒரு பாட்டில் நெய் விட்டுட்டோம். அப்படியும் ஏன் இப்படி ஒட்டுது. சரி எல்லாருக்கும் ஒரு ஸ்பூன் போட்டு கொடுத்திருவோம்.” என்று முணுமுணுத்து கொண்டு முகுந்தன் வீட்டை நோக்கி நடந்தாள் மாதங்கி.
எதிரே அவள் பாட்டி, தாத்தா வர, மாதங்கி அந்த இனிப்பை அவர்களிடம் நீட்ட, “எங்களுக்கு சுகர்.” என்று இருவரும் ஒரு சேர கூறினர்.
“அப்ப, நேத்து அண்ணன் வாங்கிட்டு வந்த அதிரசத்தை மட்டும் சாப்பிட்டீங்க.” என்று மாதங்கி அவர்களை கிடுக்கு பிடியாக பிடிக்க, “அது வெல்லம், இன்னைக்கு நீ என்ன என்ன பன்னிருக்கே?” என்று அவர்கள் அவள் கைகளில் வைத்திருந்த பொருளை என்னவென்று கண்டுபிடிக்க முடியாமல் கேட்டனர்.
“கேசரி” என்று தன் சட்டை காலரை உயர்த்தி கொண்டாள் மாதங்கி.
“சீனி சாப்பிட மாட்டோம்.” அவர்கள் தப்பித்துவிட, இப்படியே முகுந்தனின் பெற்றோரும் விரதம் என்று காரணம் கூறி தப்பித்து கொள்ள, மாதங்கி முகுந்தனின் அறைக்குள் நுழைந்தாள்.
அங்கு முகுந்தன் தூங்கி கொண்டிருக்க, அங்கிருந்த ஒரு வாளி தண்ணீரை அவன் மேல் ஊற்ற அவன் பதறிக் கொண்டு எழுந்தான்.
“ஹாப்பி பர்த்டே முகுந்தன்.” என்று அவன் முன் இடுப்பில் கைவைத்து நின்றாள் மாதங்கி.
“அறிவில்லை? இப்படி தான் தூங்கறவன் மேல தண்ணி ஊத்துறதா? இப்படி தான் பர்த்டே விஷ் பண்ணுவாங்களா?” அவன் முகத்தை துடைத்து கொண்டே கேட்டான்.
“பிறந்த நாள் அன்னைக்கு ஏன் இப்படி தூங்குற? ப்ரஷ் பண்ணிட்டு என் ஸ்வீட் சாப்பிடு.” என்று மாதங்கி அவனை மிரட்டினாள்.
“நீ தண்ணீர் ஊதினத்தை கூட நான் மன்னிப்பேன். ஆனால், ஸ்வீட் கொடுத்த கொன்னேபுடுவேன். கண்டகண்ட யூடியூப் பார்த்து சமைக்காதன்னு எத்தனை தடவை சொல்லிற்கேன்.” முகுந்தன் அவள் காதை திருகினான்.
“அப்ப, நீ நான் கஷ்டப்பட்டு செஞ்ச கேசரியை சாப்பிட மாட்ட?” மாதங்கி அவனை முறைத்து பார்த்தாள்.
“மாட்டவே மாட்டேன். ஒரு தடவை நீ கொடுத்த ஹல்வாவை சாப்பிட்டுட்டு, என்னால வாயை திறக்கவே முடியலை. என் பிறந்தநாள் அன்னைக்கு, எனக்கு நானே வேட்டு வச்சிக்கவே மாட்டேன் மாதங்கி. நீ என்ன சொன்னாலும், நான் கேட்பேன். ஆனால், நீ செய்றதை மட்டும் நான் சாப்பிடவே மாட்டேன்.” முகுந்தன் உறுதியாக கூறினான்.
“டேய், உன் பிறந்த நாள் அன்னைக்கு நான் உனக்கு சாபம் கொடுக்கிறேன். உனக்கு சுத்தமா சமைக்க தெரியாத பொண்டாட்டி தான் வருவா. நீ தான், அவளுக்கு சமைத்து போடணும்” அவள் கோபமாக கூற, “சமைக்கலைனாலும் பரவால்லை. ஆனால், உன்னை மாதிரி சமைத்து கொல்ல கூடாது.” முகுந்தனும் தீர்க்கமாக கூறிவிட்டான்.
“பரவால்லை விடு. நான் இதை என் ஃபிரென்ட் பிருந்தாவுக்கு கொடுக்கறேன். என் கேசரியை நல்லாருக்குன்னு சொல்ல ஒரு ஜீவன் கூடவா இந்த மண்ணில் பிறந்திருக்காது.” என்று வீராவேசமாக கேட்டாள் மாதங்கி.
முகுந்தன் குலுங்கி குலுங்கி சிரிக்க, “ஏண்டா சிரிக்கிற?” என்று அவன் கேட்க, “நீ எங்க அம்மா, அப்பா வெட்டிங் டேக்கு ஹல்வா செஞ்சி கொண்டு வந்தியே. அதை நம்ம தெருவில் வர ஒரு நாய்க்கு வச்சோம். அது எப்பவும் நம்ம வீட்டில் சாப்பிட வரும். ஹல்வா கொடுத்து ஏழு மாசம் ஆகுது. அதுக்கு அப்புறம், அது வரவே இல்லை. இந்த வீட்டு சாப்பாடு வேண்டாமுன்னு போச்சா? இல்லை செத்து போச்சான்னு தெரியலை” அவன் மீண்டும் சிரிக்க மாதங்கி அங்கிருந்து வெடுக்கென்று சென்றுவிட்டாள்.
அவள் சென்றதும் பல்துலக்கி, அந்த கேசரியை எடுத்து சாப்பிட்டான் முகுந்தன்.
‘பரவால்லை, இந்த கேசரி கொஞ்சம் கட்டிகட்டியா இருந்தாலும் ரொம்ப கேவலமா இல்லை. நாம ரொம்ப மாதங்கியை ஓட்டிட்டோமோ?’ என்று எண்ணியபடி புன்னகைத்து கொண்டான் முகுந்தன்.
‘இதை அவ கிட்ட சொல்லிராதடா. அவ்வுளவு தான். தினமும் ஏதாவது செய்யறேன்னு நம்மளை கொன்னுடுவா.’ முகுந்தன் எண்ணி கொண்டான்.
மாதங்கி கல்லூரிக்கு கிளம்ப, அவளுக்கு அழைத்து, “மாதங்கி, இன்னைக்கு கோவிலுக்கு போறேன். நான் காலேஜ் வரலை.” என்று முகுந்தன் கூற, “நீ காலேஜ் வா. வராமல் போ. எனக்கென?” என்று கேட்டு மாதங்கி பேச்சை துண்டித்துவிட்டாள்.
‘கோபமா? சரி சாயங்காலம் ஒரு சாக்லேட் கொடுத்து சரி செய்வோம்.’ என்று எண்ணி கொண்டான் முகுந்தன்.
மாதங்கி, கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் செல்ல, அவளை இருவர் பின் தொடர்ந்தனர். பலரும் சென்றபடியும், வந்தபடியும் இருந்ததால் அவளை யாரும் நெருங்க முடியவில்லை.
வகுப்பில், பேராசிரியார் பாடம் எடுத்து கொண்டிருக்க, “செம்ம போர்…” என்று முணுமுணுத்தாள் நித்யா.
“பசிக்குது…” என்றாள் வெண்பா.
“நான் கேசரி கொண்டு வந்திருக்கேன். முந்திரி, பாதம் எல்லாம் போட்டு பண்ணிருக்கேன். சாப்பிடுறீங்களா?” என்று கண்களை விரித்து ஆர்வமாக கேட்டாள் மாதங்கி.
“பேசாம இருங்க. மாட்ட போறீங்க.” என்று கடுகடுத்தாள் பிருந்தா.
“அதெல்லாம் மாட்டோம்.” மாதங்கி கேசரி டப்பாவை திறக்க, அந்த சில்வர் மூடி வேகமா உருண்டு ஓடி, “டொய்ங்…” என்று சத்தத்தை எழுப்ப, “நான் தான் சொன்னேன்ல?” பிருந்தா மாதங்கியை முறைத்தாள்.
மாதங்கி ஊற்றிய ஒரு டப்பா நெய்யும் அதன் செயலை இப்பொழுது சரியாக செய்ய, “ம்… ம்…” என்று மாணவ கூட்டம் அவர்கள் மூக்கை இழுக்க, “வாட் இஸ் கோயிங் ஆன்?” என்ற பேராசிரியர் சத்தத்தில், மாதங்கி தன்னை போல் எழுந்து நின்றாள்.
“இந்த கிளாசில் தான் பசங்களை விட பொண்ணுங்க அட்டகாசம் அதிகமா இருக்கு. ஐ சே கெட் அவுட்.” என்றதும் தன் பையை எடுத்து கொண்டு வெளியே நடக்க ஆரம்பித்தாள் மாதங்கி.
“படிச்சா மட்டும் போதாது. ஐ வாண்ட் டிசிப்ளின். ஈவினிங் மீட் மீ இன் மை கேபின்.” என்று அவர் எச்சரித்து மாதங்கியை வெளியே அனுப்பினார்.
மாதங்கி தன் போக்கில் கல்லூரிக்குள் யாரும் இல்லாத மரத்தடியை நோக்கி நடந்தாள்.
‘இன்னைக்கு எனக்கு நேரமே சரி இல்லை’ என்ற எண்ணத்தோடு, அந்த மரத்தடியில் தன் கையிலிருந்த புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள்.
அப்பொழுது அந்த இடத்தை கடந்த மாணவ கூட்டம் அவர்களை பார்த்துவிட, “மச்சான் மாதங்கி தானே?” என்று ஒருவன் கேட்கவும், கிருஷின் முழு கவனமும் அந்த பக்கம் திரும்பியது.
“நாம இன்னைக்கு அவளை அழஅழ வைப்போம் டா…” என்று கூறிக்கொண்டு அவர்கள் முன்னேற, “நீங்க போங்க, எனக்கு வேற ஒரு வேலை இருக்கு.” கூறி கொண்டு நழுவினான் கிருஷ்.
“நீ வராம நாங்க எதுக்கு டா? நீ உன் வேலையை பார்க்க போ. நாங்க கிளாஸ்க்கு போறோம்.” கூறிக்கொண்டு, அவர்கள் வகுப்பை நோக்கி நடக்க, கிருஷ் தன் வேலையை பார்க்க சென்றான்.
தன் நண்பர்கள் வகுப்புக்கு சென்றதை உறுதி செய்துவிட்டு, அவன் கால்கள் மாதங்கி இருக்கும் இடத்தை நோக்கி சென்றது.
மனமோ, ‘நான் ஏன் அவள் இருக்கும் இடத்திற்கு தனிமையில் செல்ல விரும்புகிறேன்?’ என்று கேட்டு கொண்டது.
‘அழ வைக்க வேண்டும்.’ அன்று போல் இன்றும் எண்ணி கொண்டே அவள் இருக்கும் இடத்திற்கு சென்றான் கிருஷ்.
“ஹலோ சீனியர், நீங்க எங்க இங்க?” அவள் கண்விரித்து கேட்க, ‘இவளை அழ வைக்க வேண்டுமா?’ அவன் மனம் தடுமாறியது.
“நான் உன்னை கேட்கணும். நீ என்னை கேட்கற? நாங்க சீனியர்ஸ் அப்படி இப்படி சுத்துவோம். ஃபர்ஸ்ட் இயர் உனக்கு மரத்தடியில் என்ன வேலை?” கிருஷ் கேள்வியாக நிறுத்தினான்.
“அதுவா, ப்ரோஃபசர் நான் செஞ்ச கேசரியை கேட்டாங்க. தரமாட்டேன்னு சொல்லிட்டேன். கெட் அவுட் சொல்லிட்டாங்க.” அவள் தோள்களை குலுக்கினாள்.
அவள் சொல்லிய விதத்தில், அங்கு நடந்ததை யூகித்து விட்ட கிருஷ், “நீ எப்பவும் இப்படி தானா?” என்று கேட்டு கொண்டே அவள் அருகே இங்கிதமாக சற்று இடம் கொடுத்து அமர்ந்தான் கிருஷ்.
“இப்படின்னா எப்படி?” அவள் கண்களை உருட்ட, அவள் கொழுகொழு கன்னங்கள் அவனுள் சற்று கிறக்கத்தை உண்டுபண்ணியது.
‘எதுவோ சரியில்லை…’ அவன் இதயம், “தடக்… தடக்…” என்று துடிக்க ஆரம்பித்தது.
“அந்த கேசரி, எனக்கெல்லாம் கிடையாதா?” அவன் வார்த்தைகள் அவளிடம் பேச்சு வளர்க்கவே விரும்பியது.
“என் சமையல் ஹிஸ்டரி தெரியாம, நீங்களா வந்து சிக்கறீங்க சீனியர்” கூறிக்கொண்டே, அவள் கேசரியை நீட்டினாள்.
“சமையலுக்கு எதுக்கு ஹிஸ்டரி? ஜியோக்ரஃபி? அது ஹோம்சைன்ஸ்” அவன் விளக்கம் கொடுக்க, “பயங்கர மொக்கை” மாதங்கி நாக்கை துருத்தினாள்.
“ஏன், நீ மட்டும் தான் மொக்கை போடுவியா? நாங்க போட கூடாதா?” அவன் நியாயம் பேச, அவள் சிரித்து கொண்டாள்.
“கேசரியா? இல்லை கல்சரியா?” அவன் கேலி போல கேட்க, அருகே இருந்த கம்பை அவன் மீது வீசினாள் மாதங்கி. அந்த கம்பு அவன் நெஞ்சை தொட்டு, தரையில் விழுத்தது.
அவள் செய்கையில் ஒரு நொடி, அவன் அவளை ஆழமாக பார்த்தான். ‘இவளுக்கு எப்படி இத்தனை தைரியம்? யார் கொடுத்த இடம்?’
ஒரு பக்கம் அவன் நெஞ்சை தொட்டது எதுவென்றும் அவனுக்கு தெரியவில்லை.
“சாரி…” அவள் தடுமாறி தன் பையை எடுத்து கொண்டு அங்கிருந்து எழுந்து செல்ல, அவன் அவள் கைகளை பிடித்து நிறுத்தினான்.
அவன் கைகளை அவள் ஆழமாக பார்த்தாள். ‘இவனுக்கு எப்படி இத்தனை தைரியம்? யார் கொடுத்த இடம்?’ அவள் கண்களில் மின்னல் போல் கோபம் வெட்டியது.
அவன் கண்கள் அவளிடம் மன்னிப்பை யாசித்தது. அவன் உதடுகள், அவன் கௌரவத்தை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.
“பாத்திரத்தை வாங்காம போனா எப்படி? அது… தான்…” வார்த்தைகள் மன்னிப்பை யாசிக்க விரும்பாமல், ஆனால் அவளை விலகவும் விட முடியாமல் கைகளை விடுவித்து தடுமாறியது.
அவள் கைகளை நீட்ட, “அங்கங்க கட்டியா இருந்தாலும், கேசரி நல்லாருக்கு.” கேசரியை ருசித்தபடி அவன் தன்மையாக கூற, “பொய் சொல்ல வேண்டாம். எனக்கு சமைக்க தெரியாதுன்னு எனக்கே தெரியும்.” அவள் சிலுப்பி கொண்டாள்.
“சமைக்க தெரியாம யாராவது கேசரி பண்ண முடியுமா? நிறைய பேருக்கு வெந்நீர் கூட போட தெரியாது. இந்த கேசரியில், ரவையை விட நெய் அதிகம். கொஞ்சம் பல் உடையுற மாதிரி கட்டி. அவ்வுளவு தான்” அவன் சிரியாமல் கூற, “சீனியர்…” அவள் தன் கால்களால் மண்ணை உதைத்தாள்.
“நல்லா படிக்குற… நல்லா பாடுற…” பாராட்டில் ஆரம்பித்து, அவளை ஆழமாக பார்த்தான். அன்றைய பாடலை எண்ணியபடி. அவள் பாடிய பொழுது கோபம் தான். ஆனால், அவளை பார்த்ததும், அந்த கோபம் பிசுபிசுத்து போன காரணம் தெரியவில்லை அவனுக்கு.
“நல்லா பேசுவேன்…” அவள் கெத்தாக கூற, “அது இந்நேரம் காலேஜுக்கே தெரியும்.” அவன் நமட்டு சிரிப்போடு புருவம் உயர்த்த, அவள் அவனை முறைத்து பார்த்தாள்.
அவள் பார்வை நட்பை மட்டுமே அவன் பக்கம் வீசியது . ஆனால், அவள் கருவிழிகள் ஆடிய நடனத்தில், அவள் கன்னங்கள் காட்டிய செழுமையில், அவள் அதரங்கள் பேசியல் பேச்சில், அவன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தொலைத்து கொண்டிருந்தான்.
அவன் இதயத்தில் மெல்லிய சாரல். அதில் சுகமாக நனைய, அவன் அறிவு விரும்பிட தன்னை கட்டுக்குள் கொண்டுவர அவன் அரும்பாடு பட்டுக்கொண்டிருந்தான். அவள் வழமை போல் வளவளத்து கொண்டிருந்தாள்.
கல்லூரி வருட நிறைவில் இருக்கும் அவன், அடுத்ததாக அவனுக்காக பல தொழில்கள் காத்திருக்க… அவள் அருகாமையில், காதல் பாடம் கற்க ஆரம்பித்துவிட்டான் கிருஷ்.
அப்பொழுது அவர்களை கடந்து சென்ற, மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட் மாணவர்கள், “அந்த பொண்ணு முகுந்தன் ரிலேஷன் மாதங்கி தானே? அது கிருஷ் தானே? அந்த பொண்ணு ஏன் கிருஷ் கூட தனியா பேசிட்டு இருக்கு? முகுந்துக்கும், கிருஷ்க்கும் ஆகாதே? ” என்று அவர்களுக்குள் பேசி கொண்டே இவர்களை கடந்து சென்றனர்.
கிருஷ் மாதங்கியின் பேச்சு தொடர்ந்து கொண்டிருக்க, ‘மாதங்கியை எப்படி கடத்த?’ என்று சுவருக்கு இந்த பக்கம் ஒரு கூட்டம் கல்லூரியை வட்டமடித்து கொண்டிருந்தது.
அரசியல் ஆடுகளத்தில் காதல் என்ன கண்ணாம்பூச்சி ஆட்டமா?
பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…