Birunthavanam-6

Birunthaavanam-bb1d4e9b

Birunthavanam-6

பிருந்தாவனம் – 6

கல்லூரி மணி அடிக்கவும் வேகமாக தன் வகுப்பறைக்கு சென்றுவிட்டாள் மாதங்கி.

            கிருஷ் தன் லேப் நோக்கி செல்ல, அவன் நண்பர்கள் கூட்டம் அவனை மேலும் கீழும் பார்த்தது. ஆனால், எதுவும் கேட்கவில்லை. எதுவும் தெரியாமல் கேட்க கூடாது என்று மௌனித்து கொண்டார்களா? இல்லை, கேட்கும் தைரியமற்று மௌனித்து கொண்டார்களா? என்றறியாமல் அமைதி காத்தனர்.

அன்று மாலை, பேராசிரியர் சந்திக்க சொன்னதால் அவர்கள் அறை நோக்கி சென்று கொண்டிருந்தாள் மாதங்கி.

           “மாதங்கி நில்லு. நானும் வரேன்” பிருந்தா கூற, “வேண்டாம் பிருந்தா, டார்லிங், எப்படி பேச்சை உடனே நிறுத்தமாட்டாங்க. நானாவது உள்ளே நிற்பேன். நீ எவ்வளவு நேரம் தனியா வெளிய நிற்ப?” என்று கேட்டு கொண்டே அவளை நோக்கி திரும்பினாள் மாதங்கி.

    “நீ கிளம்பும் பொழுது தனியா கிளம்பணுமே மாதங்கி?” பிருந்தா வருத்தத்தோடு கூற, “நீ என்னை தினமும் எங்க வீட்டுக்கு வந்து விட்டுட்டா போற?” கேலி பேசினாள் மாதங்கி.

    பிருந்தா முறைக்க, “நீ யார் கூடவாவது பேசிக்கிட்டே போய், வண்டி  எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்புவியாம். எனக்காக காத்திருக்க வேண்டாம்” மாதங்கி அவளை சமாதானம் செய்ய, “நான் வேற யார் கூடவும் எல்லாம் போக மாட்டேன். தனியாவே போறேன்.” பிருத்தா சட்டென்று கோபித்து கொண்டு விடுவிடுவென்று கிளம்பிவிட்டாள்.

     ‘யார் கிட்டயும் பேசமாட்டா. என்கிட்டே மட்டும் பாசத்தை கொட்டுவா. அவ, சொல்றதை கேட்கலைன்னா கோபம் வந்திரும்.’ தன் தோழியை எண்ணியபடி, மாதங்கியின் முகத்தில் புன்னகை.

    புன்னகையோடு மாதங்கி  உள்ளே நுழைய, “நான் உன்னை விருந்துக்கு கூப்பிடலை.” பேராசிரியரின் குரல் கோபமாக அவள் காதில் விழ, மாதங்கி சுயநினைவுக்கு வந்து அவரை பரிதாபமாக பார்த்தாள்.

         “இப்படி எல்லாம் பார்த்தா விட்டுருவோமா? ஒரு ஃபர்ஸ்ட் இயர் ஸ்டுடென்ட்…” என்று ஆரம்பித்து  காதில் இரத்தம் வரும் அளவுக்கு அறிவுரை கூறிய பின்னே அவர் பேச்சை முடித்து சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின் மாதங்கியை வெளியே அனுப்பினார் அந்த பேராசிரியர்.

    மாதங்கி, வெளியே வருவதை அங்கிருந்த மரத்தில் சாய்ந்து கைகளை குறுக்கே கட்டியபடி பார்த்து கொண்டிருந்தான் கிருஷ்.

                மாதங்கி தன் ஒரு காதில் உள்ள பஞ்சை எடுத்து அங்கிருந்த குப்பை தொட்டியில் போட, ‘அடிப்பாவி…’ என்று கண்களை விரித்தான் கிருஷ்.

மாதங்கி விறுவிறுவென்று நடக்க, “ஹலோ மேடம்….” என்ற கிருஷின் குரல் கேட்டு, அவன் பக்கம் அவள் திரும்ப, கிருஷ் இரண்டே எட்டில் அவள் பக்கம் வந்தான்.

“என்ன ஒரு காதில் பஞ்சு?” அவன் கேட்க, “கேட்குற அறிவுரை ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட கூடாதுன்னு டார்லிங் அடிக்கடி சொல்லுவாங்க. அது தான். அறிவுரை கேட்க போகும் பொழுதே முன்னெச்சரிக்கையா ஒரு காதை மூடிட்டேன். இப்ப டார்லிங் பண்ண அட்வைஸ் வெளிய போயிருக்காதில்லை?” அவள் புருவம் உயர்த்தினாள்.

அவன் கண்களை விட, அவன் செவிகளுக்கு ரசனை கூடி அவள் பக்கம் சாய ஆரம்பித்தது.

“அது என்ன டார்லிங்?” அவன் கேட்க, “அது நான் வச்ச பெயர் அவங்களுக்கு. அந்த மேடம்க்கு என்னை ரொம்ப பிடிக்கும். எப்ப பாரு என்கிட்டே மட்டும் அன்பை பொழியுறதால, அவங்க எனக்கு டார்லிங்.” என்று கூறினாள் மாதங்கி.

“பொண்ணுங்களும் ப்ரொஃபெஸர்க்கு நிக் நேம் வைப்பீங்களா?” அவன் இன்னும் கண்களை விரிக்க, “ம்ம்…. நீங்க இண்டீசெண்ட்டா பெயர் வைப்பீங்க. பொண்ணுங்க நாங்க டீசெண்டா வைப்போம்.” அவள்  நமட்டு சிரிப்போடு அவனை பார்த்து கூற, “ஹலோ…” என்று அவன் அவளை முறைத்து பார்த்தான்.

 “சீனியர், நீங்க என்னை ஃபாலோ பண்ணறீங்களா?” என்று அவனை பார்த்து சந்தேகமாக கேட்டபடி நடந்தாள் மாதங்கி.

“ஆமா, உன்னை ஃபாலோ செய்து, உன்னை கடத்த போறேன்” அவன் கேலி போல கூறி கொண்டே அவள் வேகத்தில் அவன் நடக்க, “ஹா… ஹா…” வயிற்றை பிடித்து கொண்டு அவள் சிரித்தாள்.

“ஏன் சிரிக்கிற?” அவன் கேட்க, “என்னை சமாளிக்க முடியாம நீங்களே வீட்டுக்கு கொண்டு போய் விட்டுருவீங்க” அவள் கூற, “அதெல்லாம் நான்  யாரையும் சமாளிப்பேன்” அவன் கெத்தாகவே கூறினான்.

“சீனியர், அப்ப என்னை ஃபாலோ பண்ணறீங்க?” அவள் கேள்வியில் கண்ணாக நிற்க, “ஃபாலோ பண்ற அளவுக்கு நீ அழகா இல்லைன்னு நான் அன்னைக்கே சொல்லிட்டேன்.” அவள் கொழுகொழு கன்னங்களை, அவள் துறுதுறு கண்களை ரசித்தப்படி பதில் கூறிக்கொண்டே அவளோடு நடந்தான்.

“அப்ப எதுக்கு ஃபாலோ பண்ணறீங்க?” அவன் முன் நின்று கறாராக கேட்டாள் மாதங்கி.

“ஃபாலோ எல்லாம் பண்ணலை. இப்ப தான் என் வேலை முடிந்தது. இப்படி கிராஸ் பண்ணும் பொழுது உன்னை பார்த்தேன். சரின்னு, வெய்ட் பண்ணேன்” அவன் பாதி உண்மையும், பொய்யும் கலந்து கூறினான்.

மேலும் பல கேள்விகள் தோன்றினாலும், ‘நான் தான் இவனுக்கு நிறைய இடம் கொடுத்துட்டேனோ?’  என்ற எண்ணத்தோடு மாதங்கி எதுவும் பேசாமல் நடந்தாள்.

அவனும் பேசவில்லை.  கல்லூரி முடிந்து சில மணித்துளிகள் கடந்திருத்ததால் பெரிதாக மாணவர்கள் கூட்டம் இல்லை.

வண்டி எடுக்கும் இடத்திற்கு வந்ததும், “பை…” என்று கூறிக்கொண்டு மாதங்கி வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாக கிளம்பிவிட, கிருஷின் முகத்தில் சிந்தனை ரேகைகள். கிருஷ் தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

 கல்லூரியிலிருந்து கொஞ்சம் தூரம் கூட சென்றிருக்க மாட்டாள் மாதங்கி. அவள் வண்டி தன் ஓட்டத்தை நிறுத்தி கொள்ள, மாதங்கி இறங்கி அதை மீண்டும் மீண்டும் ஸ்டார்ட் செய்து பார்த்தாள்.

அப்பொழுது, இருவர் அவளை நெருங்க முற்பட, கிருஷின் கார் அவளை நெருங்கிவிட்டது.

“என்ன ஆச்சு?” அவன் கேட்க, “தெரியலை…” அவள் வண்டியை மீண்டும் ஒரு மிதிமிதித்து கூற, “வண்டியை காலேஜில் விட்டுட்டு வா. நான் உன்னை டிராப் பண்றேன்” கிருஷ் அக்கறையோடு கூறினான்.

“வேண்டாம் நீங்க கிளம்புங்க. நான் எங்க அண்ணனுக்கு இல்லை முகுந்தனுக்கு கால் பண்றேன். யாராவது என்னை வந்து பிக்கப் பண்ணிட்டு போவாங்க” வண்டியை எடுத்து கொண்டு கல்லூரி நோக்கி வண்டியை உருட்டியபடி நடந்தாள்.

‘அளவுக்கு அதிகமா உரிமை எடுத்துக்க கூடாது. என் மனசே எனக்கு சரியா தெரியலை. நான் ஏன் இவகிட்ட இன்னைக்கு தனியா பேசினேன்? நான் ஏன் இவளுக்காக காத்து நின்றேன்?’ போன்ற கேள்விகள் தோன்ற, அவன் தோள்களை குலுக்கி கொண்டு, வண்டியை மெதுவாக ஓட்டினான் எதிர்பக்கமாக.

மாதங்கி திரும்பி பார்க்காமல் வண்டியை உருட்டி சென்றாள்.

அப்பொழுது, கிருஷ் கண்ணாடி வழியாக மாதங்கியை பார்க்க, இருவர் அவளை தொடர்வது போல் தெரிய, அவன் மனதில் சந்தேக பொறி தட்டியது.

தன் காரை திருப்பி கொண்டு, அவன் இப்பொழுது கல்லூரி முன் அவள் வருகைக்காக காத்திருந்தான்.

ஒரே சாலை என்பதால், அவன் பார்வை வட்டத்திற்குள் அவள் இருந்தாள்.

அவள் வண்டியை கல்லூரிக்குள் நிறுத்திவிட்டு வந்து, “சீனியர் நான் உங்களை கிளம்ப சொன்னேன்.” அவள் வாரத்தைகள் சுள்ளென்று வந்து விழுந்தன.

“மாதங்கி அதை நீ சொல்ல கூடாது. என்னை பார்த்தா உன்னை ஃபாலோ பண்ற தேர்ட் ரேட்டேட் ரவுடி மாதிரி இருக்கா?” அவன் வார்த்தைகளும் சுள்ளென்று வந்து விழுந்தன.

‘இவன் தான் கிருஷ். பலர் கூறும் கிருஷ். இதுவரை தன்னிடம் இவன் இப்படி பேசியதில்லை.’ அவன் பேச்சில் இருந்த உண்மை அவள் மனதை தொட மாதங்கி மௌனித்து கொண்டாள்.

“நான் தான் நம்ம டிபார்ட்மென்ட் ஸ்டுடென்ட் ஹெட். நீ இங்க தனியா நிற்கிற? உன்னை அப்படியே விட்டுட்டு போக சொல்றியா? நான் இங்க யார் நின்னுகிட்டு இருந்தாலும் இந்த நேரத்தில் ஹெல்ப் பண்ணிருப்பேன்” அவன் கோபமாக கேட்டான்.

“ஓ… எல்லா பொண்ணுகளையும் வீட்டு வரைக்கும் கொண்டு விடுவீங்களா?” அசராமல் கேட்டாள் மாதங்கி.

அவன் முகத்தில் புன்னகை கீற்று எட்டி பார்க்க எத்தனித்தது. ‘இதுக்கு தான் இவளை எனக்கு பிடிச்சி தொலையுது. நான் என்ன எகிறினாலும், அசராம பதில் பேசுறா. சிரிச்சி தொலைச்சிறாத கிருஷ். அப்புறம் எடக்குமடக்கா  கேள்வி கேட்பா’ எண்ணத்தோடு அவளை மேலும் கீழும் பார்த்தான்.

“எல்லா பொண்ணுகளையும் வீட்டுக்கு கொண்டு போய் விடுறது தான் என் வேலையா? வேற ஏதாவது ஏற்பாடு பண்ணுவேன். தனியா விட்டுட்டு போக மாட்டேன். உங்க அண்ணனுக்கு ஃபோன் பன்றேன்னு சொன்னியே பண்ணிட்டியா?” அவன் கேட்க, “பண்ணேன் எடுக்கலை. திரும்ப பண்றேன்.” கூறிக்கொண்டு அவள் முயற்சிக்க, அங்கு பதில் இல்லை.

“அண்ணா எடுக்கலை. நான், முகுந்தனை கூப்பிடுறேன்.” அவள் மீண்டும் அலைபேசியை எடுக்க, “வீட்டிலிருக்க முகுந்தனை கூப்பிட்டு வர சொல்லி, அவன் வர வரைக்கும் வெயிட் பண்றதுக்கு பதிலா நானே உன்னை கொண்டு போய் விட்டுட்டு போய்டுவேன்.” கிருஷ் முணுமுணுத்தான்.

“எனக்கு தனியா நிற்க பயமா இருக்கு. நீங்களும் நில்லுங்கன்னு நான் சொல்லலை சீனியர். நீங்க கிளம்பி போயிட்டே இருக்கலாம்.” அவள் முகம் திருப்பிக்கொண்டு நின்றாள்.

“நான் பைக்ல கூட வரலை இன்னைக்கு. கார்ல தான் வந்திருக்கேன். இருட்ட ஆரம்பிச்சிருச்சு. வா கிளப்புவோம்” அவனுக்கு வண்டி கூட இல்லாத அவளை தனியே விட்டு செல்ல மனமில்லை.

வேறு வழியின்றி அவள் காரில் ஏற, அவன் காரை செலுத்தி கொண்டே பேச ஆரம்பித்தான்.

“உன்னை உங்க வீட்டில் தேட மாட்டாங்களா?” அவன் கேட்க, “வர லேட் ஆகுமுன்னு மெசேஜ் போட்டுட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் தேட ஆரம்பிச்சிருவாங்க.”

காரில் ஏறி கொஞ்ச நேரத்தில் மீண்டும் தன் சகோதரனுக்கு அழைத்தாள் மாதங்கி. பதில் இல்லாமல் போக, அவள் முகம் சுருங்கியது.

“என்ன ஒரு பொறுப்பில்லாத அண்ணன்? தங்கை ஃபோன் பண்ணினா எடுக்க வேண்டாமா?” அவன் நக்கலாக கேட்டான்.

“காரை நிறுத்துங்க. நான் இறங்கிக்குறேன்.” அவள் கதவை திறக்க முற்பட, “ஹே… கூல்… கூல்…” அவன்  தன்மையாக பேசினான்.

“எங்க அண்ணன் பத்தி பேசுற யோக்கியதை இந்த உலகத்தில் யாருக்கும் கிடையாது. அவன் பெரிய பதவியில் இருக்கிற போலீஸ். அவன் வீட்டை பத்தி எப்பவும் நினைச்சுகிட்டு இருக்க முடியாது. அவனுக்கு வேலை தான் முக்கியம். அதுமட்டுமில்லை, அவனுக்கு தெரியும் நான் என்னை பாதுகாத்துப்பேன்னு.” அவள் பொரிந்து தள்ளினாள்.

“சீனியர் நீங்க கூப்பிட்டு போறீங்கன்னு ரொம்ப பேச வேண்டாம். நான் கூப்பிட்டிருந்தா முகுந்தன் உடனே வந்திருப்பான்.” அவள் சிடுசிடுக்க, “அது என்ன சீனியர்? ஒன்னு பெயர் சொல்லி கூப்பிடு. இல்லை, அண்ணன்னு கூப்பிடு. எல்லா சிரியர்ஸை அக்கான்னு கூப்பிடுற மாதிரி…” அவன் கண்கள் இவளை ஆழம் பார்த்து கொண்டே அவள் கோப பேச்சை திசை திருப்பியது.

அவன் அறிவென்னவோ, அவள் கோபத்தில் வெகுண்டாலும் அவன் மனம் அவளை சமாதானம் செய்யவே விழைந்தது.

“அப்படி எல்லாரையும் என்னால் அண்ணன்னு கூப்பிட முடியாது. எனக்கு அண்ணன்னா, அது எங்க அண்ணன் மட்டும் தான்” அவள் பிடிவாதமாக கூறினாள்.

அப்பொழுது  மாதங்கியின் அலைபேசி அழைக்க, “சொல்லு முகுந்தன்…” வள்ளென்று விழுந்தாள் அவள்.

“என்ன இவ்வளவு நேரம் வீட்டுக்கு வரலை? ஆண்ட்டி தேடுறாங்க.” முகுந்தன் கேட்க, “ஹ்ம்ம்… இப்ப கேளு. உனக்கு என் மேல கொஞ்சமாவது அக்கறை இருந்தா காலையில் கேசரி சாப்பிட்டிருப்ப. அப்பவே ஃபோன் பண்ணி கேட்டிருப்ப” அவள் முகுந்தனிடம் ஏறினாள்.

“இப்ப என்ன ஆச்சு?” அலைபேசி வழியாகவும் முகுந்தனின் குரல் தன்மையாக வெளி வந்ததை, கிருஷ் குறித்து கொண்டான்.

“என் வண்டி ரிப்பேர். என்னை வந்து கூட்டிட்டு போக, இத்தனை பேர் இருந்தும் யாரும் வரலை.” அவள் முணுமுணுக்க, “நீ, எனக்கு ஃபோன் பண்ணியா? எனக்கு என்ன ஜோசியமா தெரியும் உன் வண்டி ரிப்பேர்ன்னு. இப்ப எங்க இருக்க? எப்படி வர்ற? அதை சொல்லு. நான் உடனே கிளம்பி வரேன்.” அவன் அக்கறையோடு கேட்டான்.

“காலேஜ் சீனியர் கூட வரேன்” அவள் கூற, “கிருஷா?” சட்டென்று புருவ மத்தியில் முடிச்சோடு கேட்டான் முகுந்தன்.

“ம்… கிருஷ் தான்” அவள் கூற, “சரி வா” பேச்சை முடித்து கொண்டான் முகுந்தன்.

மீண்டும் அவள் அலைபேசி அழைக்க, “அண்ணா…” அவள் பேசுமுன் அரவிந்தின் குரல் இடைமறித்தது. “எதுவும் பிரச்சனையா? நான் ஒரு கேஸை விசாரிச்சிட்டு இருந்தேன். இப்ப தான் டா உன் அழைப்பை பார்த்தேன்” அவன் மன்னிப்பை யாசிக்கும் குரலில் கேட்டான்.

“பரவால்லை அண்ணா. வண்டி ரிப்பேர், முகுந்தனுக்கு கூப்பிடலாமுன்னு பார்த்தேன். அதுக்குள்ள எங்க காலேஜ் சீனியர் கிருஷ்  கூட வந்துட்டு இருக்கேன் அண்ணா. கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு போய்டுவேன்.” பேசிவிட்டு அலைபேசியை வைத்துவிட்டு, தன் தாய்க்கு அழைத்து அதையே சொல்லிவிட்டு வைத்தாள் மாதங்கி.

அவளையே பார்த்து கொண்டிருந்த கிருஷ், தன் அலைபேசியை அவள் பக்கம் நீட்ட, அவள் அவனை புரியாமல் பார்த்தாள்.

“என் கான்டக்ட்ஸ்ல இருக்கிற எல்லா நம்பருக்கும் ஃபோன் பண்ணி சொல்லிடு. நான் சீனியர் கிருஷ் கூட வீட்டுக்கு போறேன் அப்படின்னு.” அவன் கேலி செய்ய, “ஹ… சரியா தெரியாத ஒருத்தர் கூட காரில் போறேன். எனக்கு ஒரு பாதுக்காப்பு வேண்டாமா? என்னை நீங்க ஃபாலோவ் பண்ற மாதிரி வேற தெரியுது” அவள் முகத்தை சுழித்து கொண்டாள்.

“உனக்கு உதவி செய்ய வந்தேன் பாரு. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.” அவன் தலையில் அடித்து கொண்டான்.

அப்பொழுது அவர்கள் காரை ஒரு காரும், இரு வண்டியும் தொடர்ந்தது.

“யார்ரா அந்த பையன், நம்ம வேலைக்கு இடைஞ்சலா?” வண்டியில் இருந்த தாடிக்காரன், மீசைக்காரனிடம் கேட்க, “எதுக்கு இடைஞ்சல்ன்னு சொல்லணும்? நான் அவங்க ரெண்டுபேரையும் காலேஜ் வாசலிலே போட்டோ எடுத்துட்டேன். பொண்ணை கடத்துறோம். போலீசில் மாட்டினாலும் இவன் போட்டோவை காட்டுறோம். பெரிய வீட்டு பையன் மாதிரி தான் இருக்கான். பழியை அவன் மேல போடுறோம். நாம்ம தப்பிக்குறோம்.” என்றான் மீசைக்காரன்.

மீசைக்காரனின் திட்டம் தாடிக்காரனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

மாதங்கிக்கு தன் சகோதரனை கிருஷ் பேசிய விதத்தில் கோபம். அதனால், எதுவும் பேசாமல் மௌனமாக வந்தாள்.

“அண்ணனை ரொம்ப பிடிக்குமோ?” அவன் தான் பேச்சை வளர்த்தான்.

 “என் அண்ணன் ஒரு சின்சியர் போலீஸ் ஆஃபிசர். ஆனால், என் கிட்ட எப்படி பாசமா இருப்பான் தெரியுமா? நான் கேட்டு அவன் எதுமே இல்லைனு சொன்னதில்லை. எனக்கு என் அம்மா, அப்பாவை விட என் அண்ணனை தான் ரொம்ப பிடிக்கும். என் மனசை அவன் தான் சட்டுன்னு புரிஞ்சிப்பான். இனி, என் அண்ணனை பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசினீங்கன்னா, நான் உங்க கிட்ட பேசவே மாட்டேன் சீனியர்” அவள் உறுதியாக கூறினாள்.

‘எந்த போலீஸ் இவள் அண்ணனோ? இனி எந்த போலிஸிடமும் வம்பு வளர்க்க கூடாது’ அவன் மனம் ஏன் என்று அறியாமல் உறுதி எடுத்து கொண்டது.

“முகுந்தனை ரொம்ப பிடிக்குமோ?” அவன் கேள்வி அவளை மீண்டும் ஆழம் பார்க்க முற்பட்டது.

“அவன் எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃபிரெண்ட். எங்க அண்ணன் மாதிரி என் மேல அக்கறையா இருப்பான். அதுக்காக எல்லாம் அவனை அண்ணன் எல்லாம் கூப்பிட மாட்டேன். நான் என்ன சொன்னாலும் முகுந்தன் கேட்பான்” அவள் பேசிக்கொண்டே  போனாள்.

“உன் பலவீனம் உங்க அண்ணனும், முகுந்தனும் தான் போல?” அவன் கண்சிமிட்டி அவளை பார்த்து சிரிக்க, “என் அண்ணனும், முகுந்தனும் தான் என் பலம்” அவள் அவன் விளையாட்டு பேச்சை ரசித்து சிரித்தாள், இந்த பேச்சு அவள் விதியை மாற்றப்போவது அறியாமல்.

“என்னை பத்தி இவ்வளவு கேட்கறீங்க, நான் ஒரு விஷயம் உங்க கிட்ட கேட்கட்டுமா?” என்று அவள் கேட்ட கேள்வியில் அவன்  தன் காரின் வேகத்தை திடிரென்று அதிர்ச்சியில் குறைக்க, பின்னே வந்த வண்டி அவன் வண்டியை மோத, கிருஷ் இறங்கி கோபமாக காரின் பின் பக்கத்தை நோக்கி சென்றான்.

தாடிக்காரனும், மீசைக்காரனும் முன்னே அமர்ந்திருந்த மாதங்கியை நெருங்கினர்.

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!