birunthavanam-8
birunthavanam-8
பிருந்தாவனம் – 8
கிருஷ் சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டான். நண்பர்களை பார்த்த சந்தோஷமும், காலையில் மாதங்கியை பார்த்த ஆனந்தமும் மொத்தமாக வடிந்திருந்தது.
தன் பைக்கை வேகமாக செலுத்தி கொண்டிருந்தான் கிருஷ். காற்று புயல் போல் அவனை தீண்டி சென்றது அவன் வேகத்தில். ‘மாதங்கி பற்றிய எண்ணமும் அது போல் அடித்து செல்லப்படுமோ’ என்ற ஐயம் அவனுள்.
‘மாதங்கியை எனக்கு பிடிக்கும். ஆனால், இவ்வளவா? அவளுக்காக நான் இறங்கி பேசுகிறேன். அவள் என்னை விட்டு பிரித்துவிடுவாளோ? என்று தவிக்கிறேன்.’ காதல் கொண்ட அவன் மனம் பித்தாய் பிதற்றியது.
“மாது… மாது…” அவன் மனம் அவளை மட்டுமே பெண்ணாக கருதி, அவளை மட்டுமே அவனுக்கான பெண்ணாக நம்பி அழைத்து கொண்டது.
மாதங்கியை மட்டுமே எண்ணிக்கொண்டு மனமுடைந்தவனாய் இலக்கில்லாமல் அந்த சாலையில் வண்டியை தன்போக்கில் செலுத்தி கொண்டிருந்தான் கிருஷ்.
அதே நேரம், அரவிந்த் வண்டியை செலுத்த முடியமால் சாலையோரம் நிறுத்தினான்.
“என்ன ஆச்சு அரவிந்த்? கிருஷ் சொன்னதை யோசிச்சிட்டு இருக்கியா?” முகுந்தன் தன் நண்பனை பார்த்து கேட்டான்.
“நீ என்ன நினைக்குற முகுந்தன்?” அரவிந்த் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
“நாம யோசிக்க என்ன இருக்கு? மாதங்கியை கூப்பிட்டு நேரடியாக விஷயத்தை கேட்க வேண்டியது தான்” முகுந்தன் பட்டென்று கூறினான்.
“ஆமா, கிருஷை காதலிக்குறேன்னு சொல்லிட்டா?” அரவிந்த் கேள்வியாக நிறுத்த, “கிருஷை பத்தி எடுத்து சொல்லி, மாதங்கி மனசை மாத்தணும்.” முகுந்தன் உறுதியாக கூறினான்.
“கிருஷ் விட மாட்டான்” அரவிந்த் இப்பொழுது உறுதியாக கூற, “அரவிந்த்…” முகுந்தன் இப்பொழுது தடுமாறினான்.
“அவன் கண்களில் மாதங்கியை பத்தி பேசும் பொழுது நான் காதலை பார்த்தேன். அதில் ஒரு தீவிரத்தை பார்த்தேன்” அரவிந்த் கூற, முகுந்தன் இப்பொழுது அவனை யோசனையாக பார்த்தான்.
“மாதங்கிக்கு இவன் மேல அபிப்பிராயம் இல்லைனா பிரச்சனை இல்லை. இருந்தால், இவன் விட மாட்டான்” அரவிந்த் தன் நெற்றி வியர்வை துடைத்து கொண்டான்.
“சரி, நாம எதுக்கு இவ்வளவு யோசிக்கணும்? மாதங்கி கிட்ட இன்னைக்கு நடந்ததை சொல்லுவோம். சொல்லி கேட்போம்” முகுந்தன் ஆலோசனை கூற, “வேண்டாம்… வேண்டாம்…” பதறினான் அரவிந்த்.
“ஏன்?” முகுந்தன் அவனை புரியாமல் பார்த்தான்.
“ஒருவேளை, மாதங்கிக்கு இதில் சம்பந்தமே இல்லைனா அவ கிருஷ் கிட்ட சண்டைக்கு போய்டுவா. நமக்கு மாதங்கியை பத்தி தெரியும். தேவை இல்லாமல் பிரச்சனை வளரும்.” அரவிந்த் கூற, ‘அவன் சொல்வது தான் சரி’ என்பது போல் தலை அசைத்தான் முகுந்தன்.
“அப்ப, இங்க நடந்தது எதுவுமே யாருக்கும் தெரிய வேண்டாம். மாதங்கி கிட்ட நாசூக்கா பேச்சு கொடுத்து அவ மனசை தெரிஞ்சிப்போம்.” முகுந்தன் கூற, இப்பொழுது அரவிந்த் ஆமோதிப்பாக தலை அசைத்தான்.
அரவிந்த், இப்பொழுது சற்று மனம் நிம்மதி அடைந்தவன் போல் வண்டியை கிளப்பினான்.
“ஒருவேளை, கிருஷ் பிரச்சனை பண்ணா?” முகுந்தன் கேள்வியாக நிறுத்த, அரவிந்த் புன்னகைத்தான்.
“பண்ண மாட்டான். அவன் பலவீனம் மாதங்கி.” என்று அரவிந்த் கூற, முகுந்தன் அவனை புரியாமல் பார்த்தான்.
“புரியலையா? என் கிட்ட காரணமே இல்லாமல் கூட எகிறும் கிருஷ், இன்னைக்கு என்னை பார்த்ததிலிருந்து பம்முறான்.” தன் கழுத்தை நீவிக்கொண்ட அரவிந்தின் முகத்தில் ஓர் ஏளன புன்னகை வந்து அமர்ந்தது.
“அவன் பிரச்னையை தவிர்க்க தான் பார்க்கிறான். எப்படியும் மாதங்கி படிப்பு முடியும் வரை அமைதியா தான் இருப்பான். அவனும் படிச்சி ஒரு வேலைக்கு போகணும். நாம, மாதங்கி படிப்பு முடியுறவரை பொறுமையா இருந்துட்டு, அவளை மேல படிக்க வெளிநாட்டுக்கு அனுப்பிருவோம். இல்லைனா, கல்யாணம் பண்ணி கொடுத்திருவோம். எதை செய்தாலும், பக்குவமா காய் நகர்த்தனும்.” அரவிந்த் போலீஸ்காரனாக திட்டம் தீட்டினான்.
முகுந்தன் மெளனமாக தலை அசைத்து கொண்டான். அதன்பின், அவர்கள் மாதங்கி பேச்சை பேச வேண்டாம் என்று முடிவு எடுத்து கொண்டவர்களாக அவர்கள் பேச்சை முகுந்தனின் ப்ராஜெக்ட் சம்பந்தமாக பேச ஆரம்பித்தனர்.
கிருஷ் இலக்கில்லாமல் சென்ற அவன் பயணத்தை முடித்து கொண்டு, வீட்டிற்கு சென்றான். உள்ளே நுழைகையில், சற்று தள்ளாடினான்.
“குடிச்சிருக்கியா?” தன் பேரனை வழியில் நிறுத்தி கேட்டார் பாட்டி.
“அதெல்லாம் இல்லை பாட்டி.” சோர்வாக சோபாவில் சாய்ந்தான்.
“ஏண்டா உடம்பு சரியில்லையா?” தன் பேரனின் தலையை தடவினார் பாட்டி.
“அதெல்லாம் இல்லை பாட்டி.” தன் பாட்டியின் மடியில் படுத்து கொண்டான் கிருஷ்.
எதிரே அமர்ந்திருந்த அவன் தாய் வேதநாயகி, தன் மகனை யோசனையாக பார்த்தார்.
“ஏதாவது சாப்பிடுறியா?” பாட்டி கேட்க, “சாப்பிட்டேன் பாட்டி” அவன் சோர்வாக பதில் சொன்னான்.
“லவ் பண்ணறியா கிருஷ்?” பாட்டி கேட்க, படக்கென்று எழுந்து அமர்ந்தான்.
“அப்ப பண்ற?” கிருஷின் தாய் கேட்க, “அதெல்லாம் இல்லை அம்மா” மறுத்தான்.
“அப்ப எதுக்கு இவ்வளவு பதட்டம்?” பாட்டி அவனை வாகாக கிடுக்கு பிடியில் நிறுத்தினார்.
‘பாட்டி, அம்மா கிட்ட சொல்லுவோமா?’ அவன் அறிவு ஓர் நொடி சிந்திக்க, ‘இன்னும், அவ கிட்டயே சொல்லலை. இந்த லட்சணத்தில் அவ அண்ணன் கிட்ட சொல்லியாச்சு. அதுக்கே என்ன நடக்கணும்னு தெரியலை. இதுல அம்மா, பாட்டி கிட்ட வேறையா?’ சிந்தித்தபடி மௌனித்து கொண்டான் கிருஷ்.
“என்ன என் பேரன் கிட்ட வம்பு பண்ணறீங்க?” கிருஷின் தாத்தா வந்து அமர, “அப்படி கேளுங்க தாத்தா. தேவை இல்லாம பேசுறாங்க அம்மாவும் பாட்டியும்…” என்று தன் தாத்தாவிடம் புகார் படித்தான் கிருஷ்.
“அது அப்படி தான்டா பேராண்டி. நான் சொல்றதை கேளு நம்ம வீட்டு அரசியல் வாரிசு நீ தான். அறிவிச்சிரலாமா?” தாத்தா காரியத்தில் கண்ணாக கேட்டார்.
கிருஷின் தந்தையும் வந்து அமர, “என் பையன் அரசியலுக்கு வர வேண்டாம்.” கோரிக்கை வைத்தார் வேதநாயகி.
“வேதநாயகி…” கர்ஜித்தார் வேணுகோபாலன் கிருஷின் தந்தை.
“என் பேரன் அரசியலுக்கு வரமாட்டன். அரசியலால் நான் இழந்தது போதும்.” அதிகாரமாக கூறினார் ரங்கம்மாள் கிருஷின் பாட்டி.
பெண்களின் ஆதரவு இல்லாமல் கிருஷின் தாத்தா கைகளை பிசைய, “எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை தாத்தா.” கிருஷ் நிதானமாக கூறினான்.
“அரசாங்கமே நமக்கு கீழ. அதை வேண்டாமுன்னு சொன்னால் என்ன அர்த்தம்?” கர்ஜித்தார் வேணுகோபால்.
‘அரசாங்கம் நமக்கு கீழ். அந்த போலீசும் நமக்கு கீழ்.’ கிருஷின் மனம் கணக்கிட்டு கொண்டது.
“அப்பா…” கிருஷ் பேச எத்தனிக்க, “படிப்பு முடிஞ்சி நீ அரசியலுக்கு வரணும். அவர் குரலில் ஆணை இருந்தது. போலீஸ் எல்லாம் உனக்கு கீழ…” உன்னை நானறிவேன் என்ற பார்வையோடு தன் மகனிடம் பேச, கிருஷ் மௌனமாக தலை அசைத்து கொண்டு தன் அறை நோக்கி படியேறி சென்றான்.
தன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தான்.
காதல் மயக்கம் அவனை சிந்திக்க விடாமல் செய்திருக்க வீட்டின் சூழ்நிலையில் அவன் குழப்பம் சற்று குறைந்திருந்தது.
தன் அலைபேசியை எடுத்து, ‘மாதங்கி கிட்ட எல்லாத்தையும் சொல்லிருவோமா?’ தன் தாடையை தடவினான்.
‘என்னத்த சொல்ல. வரது வரட்டும்.’ அலைபேசியை மெத்தையில் எறிந்தான்.
‘என்ன பண்ணிருவான் அந்த போலீஸ். அவன் நடந்துக்கிற முறையில் இருக்கு அவன் தங்கை வாழ்க்கை. திமிர் பிடித்தவன் என் அப்பாவை பத்தி தப்பா சொல்லுறான். அவனை அங்கையே அடி வெளுத்திருக்கணும். மாதங்கி, அவ அண்ணன் மேல உயிரையே வச்சிருக்கா. ஒரு தடவை தப்பா சொன்னதுக்கே கோபம் வந்திருச்சு. மாதங்கியால், தப்பிச்சான் அந்த போலீஸ்’ எண்ணத்தோடு அவள் வளையலை கைகளில் எடுத்தான்.
“மாதங்கி உன் அண்ணன் சரியா நடந்துக்கலைனா, அவனுக்கும் உனக்கும் ஒரு நாளும் சம்பந்தம் இருக்காது.” அவன் அரசியல்வாதியின் வாரிசாக திட்டம் தீட்டிக்கொண்டே அவள் வளையை அசைக்க அந்த வளை ஓசை எழுப்பியது.
அந்த வளையோசை, ‘சரி…’ என்று கூறுவதாக அவன் எண்ணிக்கொண்டான்.
பாவம், அவனறியவில்லை, ‘நெருங்கி பார் அவளை! அப்பொழுது தெரியும் அவள் ருத்திரதாண்டவம்’ என்று அந்த வளையோசை அவனுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறதென்று!
அதே நேரம் மாதங்கி வீட்டில்.
அரவிந்த் மற்றும் முகுந்தன் வீட்டிற்குள் நுழைய, “ரெண்டு பெரும் எங்க சுத்திட்டு வரீங்க?” கால் மேல் கால் போட்டு அவர்களை கேள்வியாக பார்த்தாள் மாதங்கி.
“பொறுப்பான அண்ணனா உனக்கு தான் மாப்பிளை பார்த்திட்டு வரேன். இன்னும் ஒரு வருஷத்துல உன் படிப்பு முடியும். முடிஞ்சவுடனே உனக்கு கல்யாணம்” கேலி போல அரவிந்த் கூறி, தன் தங்கையை கூர்மையாக பார்த்தான்.
“ஹா… ஹா…” வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தாள் மாதங்கி.
“ஏன் அண்ணா, ஒரு அப்பாவி பையனின் வாழ்க்கையை கெடுக்க பார்க்குற? உன் மேல் கிரிமினல் கேஸ் போட்டுற போறாங்க” மாதங்கி புன்னகைக்க, அரவிந்தின் முகத்திலும் சற்று முன் இருந்த குழப்பம் மறைந்து, புன்னகை தொற்றி கொண்டது.
“உன் சமையலை சாப்பிட்டா கிரிமினல் கேஸ் தான்.” முகுந்தன் அவள் கூற்றை ஆமோதிக்க, அருகே இருந்த பொருளை முகுந்தன் மேல் வீசினாள் மாதங்கி.
“இந்த பார், நான் பல குக்கிங் ஷோ பார்த்து, என் சமையல் அறிவை வளர்த்திருக்கேன்” மாதங்கி தீவிரமாக கூற, “பல குக்கிங் ஷோ பார்த்தேன்னு சொல்லு. நான் நம்புறேன். ஆனால், உன் சமையல் அறிவை வளர்த்துகிட்டேனு மட்டும் சொல்லாத.” முகுந்தன் கேலியாகவே தன் பேச்சை தொடங்கினான்.
மாதங்கி அவனை முறைக்க, “உன் சமையல் பத்தி தெரிஞ்ச யாரும் உன்னை கல்யாணம் செய்ய மாட்டாங்க. நீயா யாரையாவது லவ் பண்ணா தான்.” முகுந்தன் பேச்சை கொடுக்க, சட்டென்று அவள் மனம் நொடிக்கும் குறைவான நேரத்தில் கிருஷை எண்ணியது.
‘ச்சீ…அவன் எனக்கு சீனியர் மட்டும் தான். அவனுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அது அவன் பிரச்சனை. இட்’ஸ் ஜஸ்ட் இன்ஃபக்சுயேஷன்.’ தன்னைத்தானே அலசி ஆராய்ந்து கொண்டு, “அந்த கேனத்தனமான வேலையை எல்லாம் நான் பண்ண மாட்டேன். என்னையே கிணத்துல போய் குதிக்க சொல்றியா?” மாதங்கி முகுந்தனிடம் சட்டம் பேசினாள்.
அரவிந்தின் முகத்தில் தெளிவோடு, ‘வந்து பாற்ரா இனி. உனக்கு வைக்கிறேன் வேட்டு’ என்ற கிருஷை பற்றிய எண்ணத்தோடு கர்வபுன்னகையும் வந்து அமர்ந்தது.
“உன்னை யாரவது விரும்பினா?” முகுந்தன், தன் தோழியை விடாமல் கிடுக்குபிடியில் நிறுத்தினான்.
‘இல்லை என்று அவள் சொல்வாள்’ என்று அரவிந்த், முகுந்தன் இருவரும் எதிர்பார்த்திருக்க, “ம்… என்னை மாதிரி, அழகு அறிவு நிறைஞ்சி இருக்கிற பொண்ணை நூறு பேரு லவ் பண்ண தான் செய்வாங்க. தினமும் எனக்கு ஒரு ரெண்டு லவ் லெட்டராவது வரத்தான் செய்யும். நான் ரெண்டை ரிஜெக்ட் பண்ணுவேன். ஒன்னு ரெண்டை யோசிச்சி முடிவு பண்ணலாமுன்னு ஹோல்டு பண்ணுவேன்.” மாதங்கி தலை அசைத்து, வாகாக சாய்ந்து கொண்டே கூற, அவள் பின்னே வந்த மாதங்கியின் தாய் மரகதவல்லி நறுக்கென்று அவள் தலையில் கொட்டினார்.
“அம்மா….” என்று அவள் அலறுகையில், “என்ன பேச்சு… ஹோல்டு பண்ணுவியா?” என்று அவர் இவள் காதை திருக, மற்ற இருவரும் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.
“தேவை இல்லாம பேசுவியா?” என்று அவர் கண்களை உருட்டி மாதங்கியை மிரட்ட, “அம்மா, நான் பேசலை. பேசினது, அண்ணாவும், முகுந்தனும் தான்.” என்று அவள் புகார் கடிதம் வாசித்தாள்.
“பொய்… வாயை திறந்தாலே வரதெல்லாம் பொய். அவங்க ரெண்டு பேரை பத்தியும் எனக்கு தெரியும். உன்னை பத்தியும் எனக்கு தெரியும். இப்படி தேவை இல்லாத விஷயத்தை அவங்க பேசவே மாட்டாங்க. நீ தான்… நீ தான்…” சொல்லி சொல்லி அவர் மாதங்கியின் தலையில் நறுக் நறுக்கென்று கொட்ட, “அப்படி சொல்லுங்க ஆண்ட்டி.” முகுந்தன் நாக்கை துருத்தி கொண்டு மாயமாக மறைந்துவிட்டான்.
‘நான் கேட்ட கேள்விக்கு நீ நேரடியாக பதில் சொல்ல வேண்டியது தானே?’ என்று அரவிந்த் தன் தோள்களை குலுக்கிவிட்டு அவன் அறைக்கு சென்றுவிட, மாதங்கி அவள் தாயிடம் மாட்டிக்கொண்டு விழித்து நின்றாள்.
மறுநாள் காலையில், கிருஷ் மாதங்கி வரும் நேரம் தெரிந்து அவளுக்காக காத்திருந்தான். அதே மரத்தடியில்! அவள் விழிகள் நொடிப்பொழுதில் அவனிடம் காதல் பேசிய அதே இடத்தில். அவள் சுவாசம், அவனை தொட்ட அதே இடத்தில்.
நேற்று அவன் விழிகளை தொட்ட அவள் விழிகளின் துடிப்பு, அவன் இதய துடிப்பை இன்றும் தொட்டது. அந்த மரத்தடியில் அவளை தீண்டிய நினைவு, இன்று அவள் வாசத்தை உணரச் செய்தது.
நண்பர்களோடு பலமுறை பேசி சிரித்த அதே இடம் இன்று அவனுக்கு வேறு முகம் காட்ட, ‘காதல் சுகமானதா? இல்லை சுமையானதா?’ அவன் நெஞ்சம் காதல் சுகத்தை ரசித்தபடி, அவளிடம் சொல்லமால் தான் மட்டுமே சுமந்து கொண்டிருக்கும் காதல் சுமையை ரசித்தபடி பாடி கொண்டது.
காதலியை தன்னவளாக்கி, அவள் சுற்றத்தாரை எதிர்பக்கம் நிறுத்தி, அவன் அறிவும் மனமும் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தது.
‘மாதங்கி அண்ணன், அவ கிட என்ன சொல்லிருப்பான்? உண்மையை சொல்லிருப்பானா? இல்லை இட்டுக்கட்டி சொல்லிருப்பானா? இல்லை சொல்லாமலே இருந்திருப்பானா?’
‘ஒருவேளை விஷயம் தெரிஞ்சி மாதங்கி என்கிட்டே சண்டைக்கு வருவாளோ?’ அவன் இதயம் ‘மாது… மாது…’ என்று திக் திக் என்று அடித்து கொண்டது.அது காதலின் தவிப்பு.
‘நேற்று நடந்ததை சொல்லிட வேண்டியது தான். இல்லை வேண்டாம். முதலில் காதலை சொல்லுவோம். ஒருவேளை, மாதங்கி முடியாதுன்னு சொல்லிட்டா?’ அவன் தன் நெஞ்சை நீவிக்கொண்டு குழப்பத்தோடு குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்.
அவனின் சிந்தனையை கலைத்தது அவள் வாசம். சற்று தொலைவில் மாதங்கி வந்து கொண்டிருந்தாள். அவன் அவளை பார்த்தான். அவன் முகத்தில் இப்பொழுது தவிப்பு மறைந்து கோபம் குடிகொண்டது.
‘இவ எதுக்கு எப்ப பாரு அந்த பிருந்தாவோடவே சுத்துறா. ஒரு வார்த்தை நிம்மதியா பேச முடியுதா?’ அவன் அவர்களை கடுப்பாக பார்த்தான்.
“பிருந்தா நீ எத்தனை வருஷம் தான் இப்படி கிருஷ் கிட்ட பேசாமலே இருப்ப?” மாதங்கி பிருந்தாவிடம் சிடுசிடுத்தாள்.
அன்று மாதங்கி கிருஷிடம் கேட்ட கேள்வி, ‘உனக்கும் பிருந்தாவுக்கும் என்ன சம்பந்தம்?’ கிருஷ் பதில் கூறவில்லை.
ஆனால், மாதங்கி அவள் கேள்விக்கு இத்தனை வருடத்தில் பதில் கண்டுபிடித்துவிட்டாள்.
“இன்னைக்கு உன் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும். வா கிருஷ் கிட்ட பேசுவோம்.” என்று மாதங்கி பிருந்தாவின் கைகளை அழுந்த பிடித்து கொண்டு அவனை நோக்கி சென்றாள்.
“வேண்டாம் மாதங்கி விடு” பிருந்தா அவள் கைகளை உறுவிக்கொள்ள முயல, “நான் இவளிடம் எப்படி காதலை சொல்வது?” என்ற தவிப்போடு கிருஷ் இவர்களை பார்த்து கொண்டிருந்தான்.
பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…