EUTV 11
EUTV 11
11
“பொண்ணை ஒழுங்கமா வளர்க்க திறமில்லாம ஒட விட்டுட்டு பாதிக்கப்பட்ட எங்க வீட்டில வந்து எங்களையே குறை சொல்லுவீயா? போயா வெளிய முதல்…” என்று வீரேந்திரன் கார்த்திகேயனை பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் தனது சட்டையை பிடித்ததில் அதிர்ந்து கார்த்திக்கேயன் நின்றிருக்க,
சிறுபையன் தனது தம்பியின் சட்டையை பிடித்துவிட்டானே என்று கோவம்வர சிவராமன் அவனது கன்னத்தில் சட்டென்று ஒரு அறையை கொடுத்தார்.
அறை வாங்கிய நொடியில் சட்டென்று சுதாகரித்தவன் சிவராமனை நோக்கி கரத்தை வீச, தான் என்ன செய்துவிட்டோம் என்று சிவராமன் அதிர்ந்து நிற்க அவனது கரம் தனது அண்ணனை அடைவதற்குள் தனது குஸ்தி திறமையை பயன்படுத்தி வீரேந்திரனின் கையை முறுக்கி பின்னங்காலில் ஒரு உதை கொடுத்து அவனை மடக்கி கீழே விழ வைத்திருந்தார் கார்த்திகேயன்.
இவையனைத்தும் ஒரு நொடியில் நடந்து முடித்திருக்க யாராலும் தடுக்க முடியவில்லை.
“வீர்…” என்று அனைவரும் அவனை நெருங்கினர். விஜய்யும் ரிஷிபனும் திருமணம் நின்ற விசயத்தை சமாளிக்க எப்பொழுதோ கைப்பேசியை எடுத்துக்கொண்டு மண்டபத்திற்கு சென்றிருந்தனர்.
கணிதனுக்கு கட்டுங்கடங்காமல் கோவம் வந்திருந்தது.
“யோவ் மரியாதையா இரண்டு பேரும் வெளிய போங்கய்யா… பெரிய மனுசங்கன்னு கூட பார்க்க மாட்டேன். எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டுக்குள்ள வந்து என் தம்பி மேலயே கை வைச்சு இருப்பீங்க… ”என்று கத்தியவன் வீரேந்திரனிடம் விரைந்தான்.
கார்த்திக்கேயனுக்கும் சிவராமனுக்குமே ஒரு மாதிரியாகிவிட்டது. சில்லுண்டி பையன் அவன் மீது போய் கைநீட்டி விட்டோமே என்று. இதற்குமேல் இங்கு நின்றால் நன்றாக இராது என்று ஒன்றும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினர்.
வெளியே வந்து வண்டியை ஸ்டார்ட் பண்னும் போது சிவராமனின் அலைப்பேசி அழைக்க யாரென்று எடுத்துப்பார்க்க வீட்டிலிருந்து அழைத்திருந்தனர்.
மலர்விழி வீட்டுக்கு வந்துவிட்டாள் என்பதை கூற இருவரும் விரைந்து தங்களது வீட்டை நோக்கி பயணம் செய்தனர்.
வீட்டிற்குள் நுழைந்தவர்களுக்கு அங்கு சோக சித்திரமாக கன்னங்கள் இரண்டும் ஷிவானியின் தாயின் கைங்கரியத்தால் சிவந்து வீங்கி போயிருக்க கண்ணில் கண்ணீர் கரைகட்டி போயிருக்க அமர்ந்திருந்த மலர்விழி தான் முதலில் கண்ணில் பட்டாள்.
கார்த்திக்கேயன் கொலைவெறியில் இருந்தாலும் ஏற்கனவே அடிவாங்கி ஒய்ந்து அமர்ந்திருந்த அண்ணன் மகளை பார்க்கையில் கொஞ்சம் பாவமாகவும் தான் இருந்து தொலைந்தது.
சிவராமன் மகளை கூர்மையாக பார்த்தவாறு ஒன்றும் பேசாமல் நாற்காலியில் ஒய்ந்து போய் அமர்ந்தார்.
அவரது கண்களில் கண்ணீர் வடிய ஆரம்பித்திருந்தது. மகளை பார்த்தவாறே கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார்.
“அப்பாஆஆஆ…” என்று மலர்விழி பேச வருவதை கரம்நீட்டி தடுத்தவர் ஷிவானியின் தாயை அழுத்தமாக பார்த்து
“நான் உயிரோட இருக்குற வரை என் மகள் மேல கை வைக்க யாருக்கும் உரிமை கிடையாது… இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்…” என்று கர்ஜித்தவர் தனது அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டார்.
ஷிவானியின் தாய் முனுமுனுத்தவாறு மலர்விழியை முறைத்துவிட்டு சமயலறைக்குள் நுழைந்துக்கொண்டார்.
முறைப்பும் குத்தல் பேச்சுகளுமாக மலர்விழிக்கு இரண்டு நாட்கள் கழிந்தது. சிவராமன் அவளுடன் பேசவே இல்லை. அறையை விட்டும் வெளியே வரவில்லை. ஈஸ்வரி,கார்த்திகா,ஷிவானி மூவரில் யாராவது ஒருவர் நேரத்திற்கு கொண்டுவந்து உணவை கொடுக்க அதை மட்டும் உண்டவர் யாருடனுமே பேசவில்லை.
இரண்டு நாட்கள் அவராக கோவம் குறைந்து அழைப்பார் அவரை துன்புறுத்த வேண்டாம் என்று நினைத்த மலர்விழிக்கு அதற்கு மேல் பொறுமை பறந்துவிட அதிரடியாக தனது தந்தையின் அறைக்குள் நுழைந்தாள்.
நாற்காலியில் மலர்விழியின் சிறுவயதில் அவரை கட்டிக்கொண்டு எடுத்திருந்த புகைப்படத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.
“அப்பா…” என்ற மலர்விழியின் குரலில் திரும்பியவர் அவளை பார்த்தார்.
“என்னை மன்னிச்சுருங்க அப்பா… என் கூட பேசுங்க அப்பா… நான் பண்ணது தப்பு தான்.” என்றவாறு அவரது கால்களை பிடித்தவாறு அண்ணாந்து பார்த்து பேசினாள்.
அப்பொழுது அவளது கண்கள் அவளது தாய் சிவகாமியை சிவராமனுக்கு ஞாபகப்படுத்தியது. இறக்கும் தருவாயில் அவளது கண்கள் இப்படிப்பட்ட ஒரு பாவத்தை தான் அவரிடம் காட்டியது. என்னை எப்படியாவது இந்த வலியிலிருந்து காப்பாத்தி விடேன் என்பது போன்று தான் இருந்தது.
சட்டென்று எதுவோ அவருக்குள் உடைந்து இதயம் முழுவதும் பரவ மலர்விழியின் தலையை மெதுவாக வருடினார்.
“நான் உன்னை எதுல இருந்து காப்பாத்தனும் மலர்?” என்று சிவராமன் கேட்க அவள் தனது தந்தையை அதிர்ந்து பார்த்தாள்.
“அப்பா…”
“சொல்லு மலர்… இப்பயாச்சும் சொல்லு?”
“அப்பா எனக்கு பாடனும் அப்பா… நான் ஆடனும் அப்பா…”
“எனக்கு இந்த படிப்பு வேணாம் அப்பா…. நான் என் பாட்டால என் நடனத்தால இந்த சமூகத்துல சாதிக்கனும் அப்பா… இன்சீனியர் மலர்விழி அப்படின்றத விட சிங்கர் மலர்விழி டான்சர் மலர்விழி அதான் பா எனக்கு பிடிச்சிருக்கு…”
“….”
“அரியர் எல்லாம் கிளியர் பண்ணிட்டு நான் உங்க கனவை நிறைவேத்திட்டேன். என் கனவை என்னை நிறைவேத்த அனுமதி தாங்கப்பான்னு தான் உங்ககிட்ட கேட்கனும் நினைச்சேன். இப்படி கேட்கவேண்டிய நிலைமை வரும்னு நான் நினைச்சு கூட பார்க்கலைப்பா…”
“…”
“உங்க கண்ணால நான் உலகத்தை பார்த்தது போதும் பா. அதை நான் எப்பயும் குறைவாவே நினைக்கலை. ஆனால் எனக்கும் கண்ணு இருக்கு அப்படின்றதையே நீங்க மறந்துட்டீங்களே அப்பா…”
“…”
“நான் முயற்சி பண்ணி என் கனவுல தோற்றுட்டா கூட என் மனசு அமைதியாயிரும் பா… ஆனால் நான் முயற்சியே பண்ணாமல் என்னோட வெற்றிக் கோட்டை நோக்கி ஒடாமயே நீ தோத்துட்டன்னு என்னால என் மனசை அமைதிப்படுத்த முடியலைப்பா… தினம் தினம் எங்கூடயே நான் போராடி தோத்து போறேன் பா. அது ரொம்ப வலிக்குது அதில இருந்து எனக்கு விடுதலை வாங்கி தாங்கப்பா… ப்ளீஸ்… நீங்க என்ன சொன்னாலும் கேட்குறேன் அப்பா என் கனவை நோக்கி ஒடி அதில வெற்றியோ தோல்வியோ அடைஞ்ச பின்னாடி…” என்று மலர்விழி அழுதவாறு கூறிமுடிக்க சிவராமன் தனது மகளை அணைத்துக்கொண்டார்.
எப்பொழுதும் தன் உடனே வைத்திருந்த ஒரு பொம்மையை ஒரு குழந்தையிடம் இருந்து பறித்தால் அது மனநிலை எப்படியிருக்குமோ அப்படி தான் சிவராமனின் மனநிலையும் திருமணம் நடக்கவிருந்த தினத்தின் முதல் நாள் இருந்தது.
நெஞ்சம் நிறைந்த சந்தோசம் இருந்தாலும் எதுவோ அழுத்தும் உணர்வும் அவரை ஆட்டிவித்தது. அவர் வாழ்க்கையில் மலர்விழியை தவிர்த்து எவரும் அப்படி ஒரு முக்கிய இடத்தை பெற்றதில்லை. தந்தை, தாய், தம்பிகள், தங்கை, மனைவி என்று அவரை சுற்றியிருந்த அனைவரிடமும் தன் கடமையை மட்டுமே செய்தார் என்று தான் சொல்லவேண்டும்.
ஆனால் மலர்விழி அப்படி கிடையாது. அவருக்கே அவர்க்கென்று கிடைத்த பொக்கிஷம் அல்லவா அவள். கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டார். அவருக்கு முன்பெல்லாம் அவ்வளவு கோவம் வரும். தன்னுடைய இளமைகாலத்தின் பெரும்பகுதியை இரானுவத்தில் கழித்தாலோ என்னவோ எப்பொழுதுமே ஒரு ஒழுங்கு, சுத்தம், கீழ்படிதல் என்று அனைத்திலும் எதிர்பார்ப்பார்.
அப்படி சரியாக நடக்காத பொழுது யாராக இருந்தாலும் ஆடி தீர்த்துவிடுவார். தன் மனைவியின் இறப்பிற்கு பிறகு சில மாதங்கள் வீட்டில் இருந்த பொழுது நிஜமாகவே மலர்விழியின் செயல்கள் அவருக்கு வெறுப்பை உண்டாக்கியது. ஒரு நாள் அவருக்கு தெரியாமல் பேனாவை எடுத்து எழுதுகிறேன் என்று அனைத்து மையையும் அவரது புத்தகத்தில் கொட்டிவிட பயங்கர கோவம் கொண்டு அடித்துவிட அப்பொழுது அவள் அரண்டு அவரை பார்த்த பார்வையை என்றும் மறக்க முடியாது. இன்றும் ஞாபகம் இருக்கிறது. அதற்குபின்பு அவள் காய்ச்சல் கொண்டு ஒரு வாரம் படுக்கையில் விழுந்து விட சிவராமன் துடித்து போய்விட்டார்.
அதற்கு பின்பு அவரை பார்த்தாலே பயந்து அழ உடனே இரானுவத்திற்கு சென்று விட்டார். சில காலங்கள் அப்படியே கழிய அவளது பயந்தமுகம் அவருக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது.
கோவத்தை மிகவும் குறைத்தார். குறைத்தார் என்பதை விட அறவே அந்த கோவத்தை விட்டொழிந்தார். ஒரு தனித்துகிடந்த ஆணின் வாழ்க்கையில் ஒரு காதலியின் வருகையால் என்னென்ன மாற்றம் நிகழுமோ அத்தனையும் சிவராமனுக்கு நிகழ்ந்தது.
குடி, புகைப்பழக்கத்தை விட்டு ஒழித்தார். சிரிக்க பழகினார். கை பேசுவதை முற்றாய் விட்டு வாய் பேசுவதை பழக்கப்படுத்தினார். உடை விசயத்தில் கவனம் செலுத்தினார். மரியாதையான தோற்றத்தை உண்டாக்கினார். எப்படி தன்னை விட தகுதியான ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்த ஒரு ஆண் தன்னுடைய தகுதியெல்லாம் உயர்த்திக்கொண்டு அவளிடம் செல்வானோ அப்படி தன்னை ஒரு சிறந்த தகப்பனாக மாற்றிக்கொண்டு மலர்விழியை சந்தித்தார்.
அப்பொழுது அவளது படிப்பறிவு மிகவும் மோசமானதாக இருக்க அவளது எதிர்காலம் அவரை பயமுறுத்த மலர்விழியை ரொம்ப சிரமப்படுத்தி படிக்கவைத்தார்.
இப்படி அவரது வாழ்வின் மையப்புள்ளி என்றாகிவிட்ட மலர்விழி தன்னை விட்டு பிரிகிறாள் என்று ஒரு புறம் சோகமாக இருந்தாலும் தனது காலத்திற்கு பிறகு அவள் பாதுக்காப்பான கைகளில் இருப்பாள் என்பது அவருக்கு அளவில்லா மகிழ்ச்சியையும் கொடுத்திருந்தது.
அதனால் உறக்கம் வராமல் மண்டபத்திற்கு வெளியே இரவு ஒரு மணிப்போன்று நடமாடிக்கொண்டிருந்த பொழுது ஒரு உருவம் துப்பாட்டாவை வைத்து முகத்தை மறைத்துக்கொண்டு செல்ல யாரென்று தெரிய அவரும் பின் தொடர்ந்தார்.
சில நொடிகளிலே தெரிந்துவிட்டது அது மலர்விழி தான் என்பது. அதிர்ந்துவிட்டார் இந்த பெண் இந்நேரத்தில் எங்கு செல்கின்றாள் என்று பார்க்க அவளோ நடந்தே சென்றுக்கொண்டிருந்தாள்.
இவரும் மறைந்து மறைந்து பின் செல்ல அவர்களது வீட்டிற்கு வந்துவிட்டாள். கதவு பூட்டி இருந்தது. தள்ளிப்பார்த்தாள் திறக்கவில்லை. வீட்டு சாவியை எடுத்துக்கொண்டு வராத தன் மடத்தனத்தை நொந்துக்கொண்டு தன் தலையில் தானே அடித்துக்கொண்டவள் சில நொடிகள் நின்று யோசித்தாள்.
வீட்டிற்கு பின்புறம் சென்றவள் அங்கிருந்த சுற்றுசுவரின் மேலேறி உள்ளே குதித்திருந்தாள். அவர்கள் வீட்டிற்கு பின்புறம் கொஞ்சம் இடம் கிடக்கும். அதில் செம்பருத்தி நெல்லி ரோஜா போன்ற சிறுசிறு செடிகள் வைத்திருப்பர். அந்த புறம் தான் குதித்திருந்தாள்.
சிவராமன் அதிர்ந்து பார்த்துகொண்டிருந்தார். நேரம் சென்றது அவள் திரும்பி வரவேயில்லை அப்பொழுது தான் புரிந்தது அவருக்கு தன் மகள் திருமணத்தை நிறுத்த இப்படி அர்த்த ராத்திரியில் வந்திருக்கிறாள் என்பது.
ஒளிந்திருந்து பார்த்த மரத்தின் அடியிலே உட்கார்ந்தவருக்கு கண்கள் கரித்துக்கொண்டு வந்தது. அவர் இதுவரை அழுததை விரல் விட்டு எண்ணிவிடலாம் மனைவி இறப்பின் போதும் அன்னையின் இறப்பின் போதும் தான் அவர் அழுது இருக்கிறார்.
மலர்விழி இப்படி செய்ததை நினைத்து அவருக்கு கோவம் எல்லாம் வரவில்லை. அவருக்கு தெரியும் மலர்விழிக்கு தன் மீது எவ்வளவு அன்பு இருக்கிறது என்பது. தன்னுடைய சந்தோஷத்துகாக வராத படிப்பைக்கூட வலுக்கட்டாயமாக வரவைத்து இன்று வரை போராடிக்கொண்டிருப்பவள். அப்படிப்பட்டவள் இப்படி ஒரு காரியத்தை செய்கிறாள் என்றால் அவளை செய்ய தூண்டியது தான் தான் என்று அவருக்கு தெளிவாக புரிந்தது.
அப்படி என்ன விசயத்திற்காக மலர்விழி இப்படியெல்லாம் செய்கிறாள் என்று அவருக்கு புரியவில்லை. அவளுக்கு வேறொருவன் மீது விருப்பம் இருந்தால் இந்நேரத்துக்கு அவள் அவனுடன் சென்றிருப்பாளே? எதற்கு வீட்டிற்கு வந்திருக்கிறாள் என்ற யோசனையுடன் விடியும் வரையுமே அங்கு அமர்ந்திருந்தவர் விடிந்தபின்பு மண்டபத்திற்கு வந்தார்.
அப்பொழுது தான் மலர்விழி காணவில்லை என்ற பஞ்சாயத்து ஆரம்பித்திருந்தது. ஒன்றுமே தெரியாதததை போன்று கேட்டுக்கொண்டவர் அனைவரையும் தேடுமாறு பணித்துவிட்டார்.
“மாமா நான் போய் வீட்டில எதுக்கும் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரேன்…” என்று கூறிய தங்கை மகன் பிரசாந்தை முறைத்துப்பார்த்தார்.
“கொப்பன் மகனே சொன்னதை மட்டும் செய் டா… அப்பனை மாதிரியே அகராதி பிடிச்சவன்…” என்று வாய்க்குள் முனங்கியவர்,
“உன்னை நான் பஸ் ஸ்டான்ட்ல போய் பார்க்க சொன்னேன் அதை மட்டும் செய்… ”
“சரிங்க மாமா…” என்று பவ்வியமாக கூறியவன் அந்த இடத்தை விட்டு அகன்றான்.
அதுவரை அங்கு நடந்ததை தாடியை சொறிந்தவாறு கவனித்த பிரசாந்த் மற்றும் ஈஸ்வரியின் தந்தை சிவராமனை ஒரு மாதிரியாக சந்தேகத்துடன் பார்த்துவைத்தார்.
அவரது சந்தேக பார்வையை கவனித்துவிட்ட சிவராமனுக்கு ஐயோடா இவன் பார்வையே சரியில்லையே என்று வயிற்றை கலக்க ஆரம்பித்தது.
அடுத்தடுத்து நடந்த அனைத்தும் தான் நமக்கு தெரியுமே. எங்கயும் தேடி அவள் கிடைக்காததால் வீட்டிற்கு வந்தவர்களுக்கு அவள் தோட்டத்தில் அமர்ந்திருந்தது அதிர்ச்சியை கொடுத்தது.
அன்று சிவராமன் அழுததற்கு காரணம் அவளது சிவந்திருந்த கன்னங்களும், அங்கு கணிதன் வீட்டில் அவளை பார்த்து மற்றவர்கள் பேசிய பேச்சும் தான். எப்படி சீராட்டி வளர்த்த மகளை தன் முன்னவே இப்படி பேசுகிறார்களே தான் இல்லாமல் இவள் மட்டும் தனியாக இந்த சமுதாயத்தில் எவ்வளவு பேச்சு வாங்க வேண்டியிருக்கும் என்பது தான்.
கடந்த இரு நாள்களுமே சிவராமன் அதை யோசித்து தான் கலைத்து போயிருந்தார்.
“ம்ம்ம்… உனக்கு பிடிச்சதை செய் அப்பா கூட இருப்பேன். ஆனால் ஒரே ஒரு சத்தியம் நீ எனக்கு பண்ணிக்கொடுக்கனும். நான் கைகாட்டுற மாப்பிள்ளையை தான் நீ கல்யாணம் செய்யனும். ஏன்னா என் பொண்ணு வேற யாரையும் விரும்பி ஒடிவரல. அவ லட்சியத்திற்காக தான் வந்து இருக்கா. அவ அதை அடைஞ்சவுடனே எப்பயும் போல நான் சொல்றவனை கல்யாணம் பண்ணிப்பா… சரியா…” என்று கேட்க மலர்விழி தன் தந்தையை இன்னும் இறுக்கமாக பற்றிக்கொண்டாள்