EUTV 3
EUTV 3
3
கல்லூரி இரண்டாம் ஆண்டு நான்காவது செமஸ்டர்:
“என்ன டி பாடிசோடா நம்ம சீனியர்ஸ் முகத்துல நவரசமும் வழியுது? ஒரு கண்ணுல மரண பீதியும் ஒரு கண்ணுல குதுகலமும் தாண்டவமாடுதே? அப்படி யாரு external வரது?” என்று லேப்பிற்கு வெளியே அமர்ந்திருந்த அனைவரும் தங்களை உள்ளே கூப்பிட்டு எந்த சோதனையை செய்ய சொல்லுவார்களோ என்ற பயத்திலும் பதட்டத்திலும் இருக்க, மலர்விழியோ அந்த பயம் நெஞ்சில் துளிக்கூட இல்லாமல் சுற்றி வேடிக்கை பார்த்தவாறு தனது ஒரே தோழியான பாரதியிடம் கலகலத்துக் கொண்டிருந்தாள்.
“நீயும் படிக்கமாட்ட… என்னையும் படிக்கவிடமாட்ட என்ன? “என்று சலித்துக் கொண்டாலும் அவளுக்கான பதிலை கூற ஆரம்பித்திருந்தாள் பாரதி.
“கணிதன் அவர் ஞாபகம் இருக்கா? அவர் தான் இன்னைக்கு வந்திருக்க external… இவளுக குதுகலத்துக்கு காரணம் நல்ல காஷ்மீர் ஆப்பிள் மாதிரி இருக்க அவரை ரெண்டு மணி நேரம் எந்தவிதமான தொந்தரவு இல்லாமல் சைட் அடிக்கலாம் அதுக்காக.. மரண பீதிக்கு காரணம் அந்த ஆளு ஆன்சர் ஒழுங்கா வந்தா தான் விடுவாப்ல அப்புறம் வைவால நசநசன்னு கேள்வியா கேட்டு சாகடிப்பாப்ல. அதான்.”
“ஒஹ்ஹ்ஹ்ஹ்!!!!”என்று ஒரு தினுசாக இழுக்க,
“ஒழுங்கா படி மச்சி… இன்னைக்கு எல்லாம் யாரையும் ஐஸ் வைச்சு பாஸாக வாய்ப்பு இல்லை. அந்த ஆளு ஒரு லூசு அரியர் போட்டு விட்ருவான். லேப்ல அரியர் வாங்குனா தும்பை பூவில தான் தூக்கு போட்டு சாகனும்…”
“அதெல்லாம் எனக்கு தெரியும். நீ மூடிட்டு வேலையை பார்…” என்று கூறிவிட்டு தனது ரெகார்ட் நோட்டில் கவனமானவளுக்கு இரு நிமிடங்களிலேயே அலுத்துவிட மீண்டும் சுற்றி வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
இவள் எடுத்திருப்பது எலெக்ட்ரானிக்ஸ் அனைத்தும் மின்சுற்று தான் என்பதால் அவளுக்கு அது இனிக்கமால் போய் விட்டதால் எப்பொழுதுமே ஏதாவது தகிடுதத்தம் செய்துதான் ஒவ்வொரு லேப் ஹவரையும் ஓட்டுவாள். அது வரும் external வரை சென்று எப்படியென்றே யாராலையும் கண்டுபிடிக்க முடியாதளவு இரண்டு வருடங்களாக தேர்ச்சியும் பெற்று எப்படியோ ஓட்டியும்விட்டாள். இன்று ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் வருகிறார் என்று கூற மலர்விழி என்ன செய்ய போகிறாள் என்று பொறுத்திருந்து காண்போம்.
சிறிது நேரத்தில் தேர்வு நடக்கும் அறையான சோதனைகூடத்திற்குள் அனைவரையும் அழைத்துவிட தனது உடமைகளை வெளியே வைத்துவிட்டு உள்ளே நுழைந்தவளை இன்று அவள் செய்ய வேண்டிய சோதனையை ஸ்லாட் மூலம் தேர்ந்தெடுக்குமாறு அவளது HOD கூற வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட சீட்டிலிருந்து ஒன்று எடுத்தவுடன் கணிதன் முகத்தை நிமிர்ந்தும் பார்க்காமல் அவனிடம் அதை நீட்ட, அவனோ அவளை ஒரு மாதிரி பார்த்துவிட்டு அதை பார்த்தான்.
“வெரி ஈசி எக்ஸ்பிரிமெண்ட்… ஆல் தி பெஸ்ட். உங்க ரோல் நம்பர்…”
“######” என்று மலர்விழி கூற அதை அவளுக்கான தேர்வுதாளில் எழுதியவன் அவளிடம் நீட்ட அவனை இப்பொழுதும் நிமிர்ந்தும் பார்க்காமல் வாங்கிக்கொண்டு அவனது கண்ணுக்கு தெரியாத மறைவிடமாக பார்த்து ஒரு தூணிற்கு பின்னால் சென்று அமர்ந்தாள்.
தனது தேர்வுதாளை பார்த்தவளுக்கு அடியும் நுனியும் நான் அறியேன் பராபரமே என்று ஆகிவிட தனது உற்ற தோழி பாரதியைத் தேட அவளோ மிக தூரமாக அமர்ந்திருந்தாள். அப்படியிருந்தும் யுத் பட விஜய் போன்று “திரும்பி பார்… திரும்பி பார்…” என்று டெலிபதியில் பேச முயல அவளின் பரம்பரை பைத்தியமோ தலையைக்கூட நிமிர்த்தவில்லை.
அதில் நொந்தவள் தனது வலப்புறமாக திரும்பி பார்க்க சிறிதுதூரம் தள்ளி அமர்ந்திருந்த இன்னொரு அடிமை திவ்யா சிக்கிவிட,
” ஸ்ஸ்ஸ்ஸ்.. டி பரதேசி திவ்ஸ்…” என்று சுற்றும் முற்றும் நோட்டமிட்டவாறு மென்குரலில் திவ்யாவை மலர்விழி அழைக்க,
அந்த பரதேசி திவ்ஸ் ஆக்கப்பட்டவளோ திவ்யமாக இவள் அழைப்பது எல்லாம் காதில் விழுந்தாலும் விழாததைப் போன்று பாவனை செய்துக்கொண்டு தனது தேர்வு தாளில் வேகவேகமாக ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தாள்.
தொடர்ந்து ஒரு ஐந்து நிமிடங்களாகியும் திவ்யா தன்னை நோக்கி திரும்பாததால் பேனாவின் மூடியை அவளை நோக்கி விட்டெறிய குறி தவறாமல் திவ்யாவின் மூக்குத்தி அணிந்த மூக்கில் பட்டுத்தெறிக்க “ஸ்ஸ்…” என்ற மென்அலறலுடன் மலர்விழியை கொலைவெறியுடன் பார்த்தாள் திவ்யா.
தான் குறிதவறாது எறிந்ததில் மனதில் அளப்பரியா ஆனந்தம் கொண்டவள் அதை தனது முகத்தில் தெரியாதவாறு பார்த்துக்கொண்டு, கண்களால் கெஞ்சி கொஞ்சி தனது சோதனையின் பெயரைக்கூறி அதற்கு மின்சுற்று படம் மட்டும் சொல்லுமாறு சைகை செய்ய, அதற்கு மறுமொழியாக தனது தலையிலே தானே அடித்துக்கொண்ட திவ்யா கண்டுகொள்ளாமல் திரும்ப விரும்பவில்லை.
ஏனென்றால் இப்பொழுது மூடி வந்தது அடுத்தது பேனாவே வரும் என்று போன தேர்விலே தெரிந்து வைத்திருந்ததால் தன்னுடைய தேர்வுதாளின் கடைசிப்பக்கத்தை எடுத்து மலர்விழிக்கான மின்சுற்று வரைபடத்தை வரைந்து காண்பித்தாள்.
“வீட்டுல குழந்தைகளுக்கு பாடம் சொல்லிகொடுறான்னா வயசாகிப்போச்சு வெள்ளை எழுத்தா தெரியுது தூரப்பார்வை கிட்டபார்வைன்னு புழுவிட்டு இங்கே ஐந்நூறு அடி தள்ளி நிக்குற பொண்ணுடைய இடுப்பு மச்சம் அக்கியுரிட்டா தெரியுதா?” என்னும் சந்தானம் காமெடி போன்று, அவ்வளவு பெரிய கரும்பலகையில் கொட்டை எழுத்துகளில் எழுதிப்போடுவது மறைக்கிறது சரியாக தெரியவில்லை என்றும், பத்தடி தொலைவில் காட்டுகத்தல் கத்தி பாடம் நடத்தும் ஆசிரியரின் குரல் கேட்கவில்லை என்றும் கூறும் மாணவர்களுக்கு, தேர்வறையில் ஒரு கீலோ மீட்டர் தொலைவில் இருந்துக்கொண்டு விடை சொன்னாலும் கேட்டுவிடுகிறது. இருபது மீட்டருக்கு அப்பால் இருந்துக்கொண்டு விடைத்தாளில் எழுதப்படும் சிறுசிறு எழுத்துகளும் கூட தெரிந்துவிடுகிறது.
என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை அப்பொழுது மட்டும் கண்களும் காதுகளும் இவர்களுக்கு சூப்பர்பவர் பெற்றுவிடுகின்றன அபிராமி! அபிராமி!
மலர்விழி வரைந்து முடித்த அடுத்த நொடி எங்கிருந்து வந்தான் என்று கண்டுக்கொள்ள முடியாதளவு தீடிரென்று அவளதருகில் அவளது விடைத்தாளையே பார்த்தாவாறு நின்றுக்கொண்டிருந்தான் கணிதன்.
‘அடியாத்தி! திவ்ஸ்ஸை பார்த்து வரைஞ்சதை கண்டுப்பிடிச்சுட்டானோ முருகா! முருகா! காப்பாத்து டா’ என்ற அவள் வேண்டுதலை பாதிக்கு செவிசாய்த்தும், மீதியை டீலிலும் விட்டுவிட்டார் முருகன் என்பது கணிதனின் பின்வரும் வார்த்தைகளில் தெரிந்தது.
“உங்க பேப்பரை கொடுங்க…” என்று கணிதன் கேட்கவும் தனது பேப்பரை எடுத்து அவனிடம் நீட்டுவது என்பதை எதோ அவளது சொத்து அனைத்தையும் அவனுக்கு எழுதி வைக்க சொன்னதைப்போல் முகத்தை வைத்துக்கொண்டு விஎல்சி பிளேயரில் ஸ்லோமோஷனில் போட்டதைப் போன்று மிகமிக மெதுவாக செய்துக் கொண்டிருந்தாள்.
நீ பேப்பரை எடுத்துக்கொடுக்க நாளைக்கே ஆனாலும் பராவயில்லை இதை பார்க்காமல் போவதில்லை என்று சபதம் எடுத்தவனைப் போல் கால்களை அகலவிரித்து தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்தவாறு கண்கள் அந்த தேர்வறை முழுவதும் கூர்மையாக அலசிக்கொண்டிருந்தாலும் அவளையும் ஒரு பார்வை பார்த்தவாறு நின்றான் கணிதன்.
அவளது தேர்வு தாளை வாங்கியவன் இரண்டு தரம் பார்த்துவிட்டு அவளை அழைத்து தனதருகிலிருந்த இடத்தில் அமரவைத்தான்.
“இங்கே உட்காருங்க… components எடுத்து செய்ய ஆரம்பிக்கலாம்” என்று அவன் கூறிவிட
உலகிலுள்ள அனைத்து கேடுகெட்ட வார்த்தைகளாலும் கணிதனை அர்ச்சித்தவாறு பொருள்களை எடுக்க சென்றாள்.
எப்படியோ தட்டுதடுமாறி பொருள்களை எடுத்துவந்தவள் அவனருகில் இருந்த இடத்தில் அமர்ந்து மின்சுற்றை இணைக்க ஆரம்பித்தாள்.
இணைக்க மட்டுமே முடிந்தது. மலர்விழிக்கு அதில் விடை வரவே இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை. செய்யாத முயற்சி இல்லை. என்ன செய்தும் விடை வரவில்லை. மணி நான்கு ஐம்பதாகிவிட்டது. கிட்டதட்ட அனைவருமே தங்களுக்கான பரிசோதனையை செய்து முடித்துவிட்டு இந்த கணிதனுடன் வைவா என்ற போராட்டத்திலும் பங்குப்பெற்று சிலர் வெற்றிவாகை சூடியும் பலர் புறமுதுகிட்டு ஒடியும் எப்படியோ அனைவரும் சென்றிருந்தனர்.
அவளது HOD வேறு முக்கியமான வேலை இருப்பதாக மூன்று மணி போலவே சென்று விட, அந்த தேர்வறையில் மீதம் இருந்தது மலர்விழி, லேப் அசிஸ்டன்ட் அக்கா, கணிதன் மட்டும் தான்.
இதற்கு மேல் முடியாதென்று கணிதனை பார்த்தவள் “சார்… சார்…” என்றழைக்க, கணிதனும் இவள் செய்துக் கொண்டிருந்ததை பார்த்தவாறு தான் அமர்ந்திருந்தவன் “சொல்லுங்க மலர்விழி…” என்க.
“எனக்கு ஆன்சர் வரமாட்டிங்குது சார்…” என்று கூற,
“அதான் தெரியுதே” என்று மலர்விழியை நோக்கி கேவலமான லுக்கை விட்டவாறு வந்தவன்,
“எந்திரிங்க…”
அவள் எழுந்ததும் அந்த இடத்தில் அமர்ந்தவாறு மின்சுற்றை இணைத்து சோதனையை செய்ய ஆரம்பித்தான்.
‘இவன் யாரு டா? ஆன்சர் வரலைன்னா பாவம்ன்னு அனுப்பி வைப்பான்னு பார்த்தா இவன் உட்கார்ந்து செய்ஞ்ச்சுட்டு இருக்கான். முருகா இவனுக்கும் ஆன்சர் வரகூடாது. இதை மட்டும் நீ நிறைவேத்தி கொடுத்துட்டேன்னு வையேன் என் தகப்பன்சாமி மினி சமுத்திரக்கனிக்கு மொட்டை போடுறேன்’ என்ற அவளது வேண்டுதலுக்கு ஆசையுடன் முருகன் செவிசாய்த்து இருந்தார்.
ஒருமுறைக்கு இருமுறை செய்துப்பார்த்தும் கணிதனுக்கும் விடை வராமல் போய்விட, மலர்விழி தனக்கு வந்த நக்கல் சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டு விட்டாள்.
தனது நக்கலை முகத்தில் காட்டாமல் கணிதனை பரிதாபமாக பார்க்க,
“சில நேரம் இப்படி தான் ஆகும். எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை நம்பவே முடியாது. நீங்க பேப்பரை எடுத்துட்டு வாங்க.” என்றவாறு தனது இடத்தில் சென்று கணிதன் அமர,
‘கோடானு கோடி நன்றிகள் ஏயேசப்பா…! கோடானு கோடி நன்றிகள்…!’ என்று மனதினுள் குதுகலித்தவள் வெளியே முகத்தை அழுவதைப்போன்று வைத்துக்கொண்டு கணிதனிடம் சென்றாள்.
அவளது வாடிய முகத்தைப் பார்த்து சங்கடமாக உணர்ந்தவன் எளிமையான கேள்விகளே கேட்க ஆரம்பித்தான்.
அவனுக்கு தான் அது எளிமையான கேள்விகளை தவிர மலர்விழிக்கு இல்லை என்பது அவள் முகத்தில் இருந்தே தெரிந்தது.
“சொல்லுங்க மலர்விழி இதெல்லாம் பேசிக் கேள்விகள் இதுக்கு கூட உங்களுக்கு பதில் தெரியலன்னா எப்படி?” என்ற அவனது குரலிலே மிதமிஞ்சிய எரிச்சலும் அதிருப்தியும் தெரிய,
அதிலே அவளது எதிர்காலம் கண்முன்னே விரிந்தது. லேப்பிலே தோல்வி அடைந்தற்காக அவளது தகப்பன்சாமி மினி சமுத்திரகனி அட்வைஸ் மழை பொழிந்து தள்ள மலர்விழி வாயில் நுரைதள்ளாத குறையாக அவரது கதாகலேட்சபத்தை கேட்டுக்கொண்டிருப்பதுப் போன்று காட்சி விரிய அதிலிருந்து தப்பிக்க இருக்கும் ஒரே ஒரு மார்க்கத்தை கையில் எடுத்தாள். பெண்ணின் கண்ணீர் என்றால் பேயே இறங்கும் இந்த பிஸ்கோத்து பையன் கணிதன் மனமிறங்க மாட்டானா?
தாரைதாரையாக கண்ணீரை வடித்தவள் சில நொடிகளில் தேம்பி தேம்பி அழ ஆரம்பிக்கவும் கணிதன் பதறிவிட்டான்.
“ரிலாக்ஸ்…ரிலாக்ஸ்….” என்று கூறியவன் தனதருகிலிருந்த தண்ணீர் பொத்தலை எடுத்து கொடுத்து குடிக்க சொன்னவன், “ஒன்னுமில்லை ஒன்னுமில்லை…”
“இ…இ…இல்லை சார். எனக்கு எல்லாத்துக்கும் ஆன்சர் தெரியும். பதட்டத்துல வரமாட்டு. எ..எ…எ…என்னை பெயில் போட்டுருவீங்களா சார்?” என்று அழுகையுடனே கேட்க கணிதன் உருகிவிட்டான்.
“அப்படியெல்லாம் இல்லை மா… நீ கிளம்பு… போ மா…” என்று அனுப்பிவைத்தான்.
இவ்வளவு நேரமும் மலர்விழிக்காகவே சோதனைகூடத்தின் வெளியே காத்துக்கொண்டிருந்த பாரதி அவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தாள்.
“என்ன டி லுக்கு?” என்று இவ்வளவு நேரமும் இந்த பெண்ணா உயிரே தன்னை விட்டு பிரிந்த மாதிரி அழுதுக்கொண்டிருந்த பெண் என்று சந்தேகிக்கும் அளவிற்கு முகமெல்லாம் கணிதனை ஏமாற்றிவிட்ட மிதப்பிலும் தேர்வில் வெற்றிப்பெற்ற சந்தோஷமும் தெரிய வேறு ஒருத்தியாக அங்கு நின்றிருந்தாள் மலர்விழி.
“இல்லை நீ யாரு டி? இப்படி நடிக்குற? நீயெல்லாம் மனுசியே இல்லை தெரியுமா? ஒரு நிமிசத்துல நானே நம்பிட்டேன் தெரியுமா? கீதா அக்கா ஹெல்ப் கேட்டாங்களேன்னு உள்ளே வந்தேன் டி. அப்படியே உன் நடிப்பை பார்த்து பிரமிச்சு போய்ட்டேன்…. நீ நடிகை டி…! நடிகை…”
என்று வாயில் கைவைத்தவாறு புலம்பினாள் பாரதி.
“ஷாக்கை குறை… ஷாக்கை குறை… கத்தி தொலையாதே டி. அந்த ஆளு காதுல விழ போகுது டி. ஒரு நொடி அங்கிட்டும் இங்கிட்டும் திரும்பி பார்க்க விட மாட்றார். இதுல பக்கத்துல வேற உட்கார வைச்சு… ஒரே குஷ்டம் பா. பயந்தே போய்ட்டேன் தெரியுமா? எப்படியும் ஃபெயிலு ஆகப்போறோம். என் தகப்பன் சாமி மினி சமுத்திரகனிக்கிட்ட செத்து சுண்ணாம்பாக போறோம்ன்னு. சரி எதுக்கும் அழுது ஆக்ஷனை போட்டு பார்ப்போம்ன்னு ட்ரை பண்ணேன். ஒர்கவுட் ஆகிருச்சு.” என்று பேசிக்கொண்டே கல்லூரியை விட்டு வெளிவந்தாள்.
அவள் வெளியேறியவுடனே மனது கேட்கமால் சமாதானம் பண்ணலாம் என்று வந்த கணிதனின் காதில் எல்லாமே கேட்டு விட கொதிநிலைக்கு சென்றான். அவனுக்கு இந்த பொய், புரட்டு, ஏமாத்து வேலை எல்லாம் ஆகவே ஆகாது.
அதனால் தான் என்னவோ அவன் தனது குடும்ப தொழிலான வழக்கை படிக்காமல் ஆசிரியர் ஆனான். அவனை பொறுத்த வரை இந்த சமூகத்தில் இருவரால் மட்டுமே நல்ல மாற்றங்களை கொண்டு வரமுடியும்.
அதில் ஒருவர் எழுத்தாளர் அவர் தனது எழுத்தின் மூலம் மக்களின் சிந்தையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இன்னொருவர் ஆசிரியர் அவர் தனது கற்பித்தல் மூலம் இளைய சமுதாயத்தின் செயல்களில் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்று நம்பினான். எனவே ‘ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி’ என்ற நண்பன் படத்தின் சைலன்ஸர் வசந்தின் வார்த்தைகளுக்கேற்ப தன்னை ஆசிரியர் பணியில் விரும்பியே புகுத்தி கொண்டான்.
நான்காம் ஆண்டு… கடைசி செமஸ்டர்…
“மச்சி ஜாலியா இருக்க… இன்னைக்கும் உன் ஆளுதான்.” என்று பாரதிக்கூற, அவளது வாயில் தனது வலதுகையை கொண்டு அடித்தவள்,
“வாயை கழுவித்தொலை. என் ஆளாம். கொன்றுவேன்.” என்று மலர்விழி படபடப்பாக பேச,
“நீ ஏன் இவ்ளோ டென்சன் ஆகுற? அவரை என்ன உன் புருசன்னா சொன்னேன்? உன் ஆளுன்னு தானே சொன்னேன். இல்லை ஒரு காலத்துல கனி கனின்னு உருகுவ? இப்ப என்னவாம்? சரி அதைவிடு. நீ இந்த வருசமும் ஒரு நடிப்பை போட்டு பாஸ் ஆகிருவ? அப்படிதானே?”
“ஹி…ஹி…ஹி… அது ஒரு காலம் மச்சி. இந்த வருசமும் அந்த மாதிரி நடந்துட்டா சந்தோசம் தான்.” என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே உள்ளே அழைத்துவிட தேர்வறைக்குள் சென்றனர்.
எப்பொழுதும் போன்று அனைத்து செய்முறைகளும் முடிந்து அவளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து தனக்கு வந்திருந்த சோதனையை பார்த்தவள் ஏககுஷி. ஏனெனில் நேற்று தனது தந்தை ஆரம்பிக்கவிருந்த அட்வைஸ் மழையிலிருந்து தப்பிக்க எதாவது படிப்போம் என்று எடுத்து படித்த செய்முறை அதுவே அவளுக்கு வந்துவிட மலர்விழி ஹாப்பி அண்ணாச்சி…
எழுதிமுடித்தவுடன் மின்சுற்றை செய்ய ஆரம்பித்தவளுக்கு இந்த முறை நிஜமாகவே விடை வரவில்லை. எவ்வளவு முயற்சி செய்தும் வரவில்லை. சரி தனது hod யை வந்து பார்க்க சொல்லாலம் என்று பார்த்தால் அவருக்கும் மலர்விழிக்கும் நேற்று தான் சிறியதாக இல்லை கொஞ்சம் பெரிதாகவே வாய்க்கால் தகராறு. அதனால் அவரிடம் சென்று உதவிகேட்டால் திட்டி அனுப்பி விட்டுவிடுவார்.
கணிதனிடம் சென்று கேட்கலாம் என்றால் அவன் என்னமோ தன்னை பார்த்ததிலிருந்தே முறைத்துக் கொண்டே இருக்கின்றான். வேறு வழியே இல்லை அவனிடம் தான் செல்லவேண்டும் என்று அவன் அருகில் சென்று வரசொன்னதற்கு ஒரு முறைப்பான பார்வையை மலர்விழியை நோக்கி செலுத்தியவன் எழுந்து நின்றான்.
அவளது மின்சுற்றை பார்த்தவன் “ஐசியை தலைகீழா மாட்டுனா எப்படி ஆன்சர் வரும். ஐசி தான் புகையும். என்ன பார்த்துட்டே இருக்க. காது கேக்கலை வேகமா மாத்து.” என்று மலர்விழியிடம் கூற, அவளும் வேகவேகமாக குனிந்து மாற்றிக்கொண்டிருக்க அவளுக்கு மிக அருகில் குனிந்தவன் ,
“நடிச்சு ஏமாத்துறதுல இருக்க கவனம் படிக்குறதுல இருந்ததுனா பிரச்சினையை இல்லை மலர்விழி. நம்மளுக்காக பரி தாபப்படுறவங்களை முட்டாள் ஆக்குற மாதிரி பாவம் வேற எதுவுமே கிடையாது. அதுக்கான பலனை அனுபவிப்ப” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு மெதுவாக கூறியவன் அந்த இடத்தை விட்டு அகன்றான்.
“ஹே பகவான். இவன் என்ன வில்லன் மாதிரி பேசிட்டு போறான். எதுவும் பழிவாங்குவானோ? ச்சீ…ச்சீ…” என்று தனக்குள்ளே பேசிக்கொண்டவள் தனது மின்சுற்றை கவனிக்க ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் ஏதோ தெய்வாதீனமாக விடை வந்துவிட மிகுந்த சந்தோசத்தில் அனைத்தையும் குறித்து கணிதனிடம் காட்ட சென்றால் இன்று மிகவும் உக்கிரமாக இருப்பான் போல். அவள் இந்த நான்கு வருட வாழ்க்கையில் இதுவரை கேள்வியே பட்டிராத வார்த்தைகளை கொண்டு எல்லாம் கேட்க இன்று நிஜமாகவே மலர்விழிக்கு அழுகை வரும்போல் இருந்தது.
மலர்விழி தெரியாது என்று சொல்லியும் கணிதன் விடுவதாக இல்லை. இன்னும் துருவிதுருவிக் கேட்க அவளை அறியாமல் கண்கள் கலங்கி இரு கண்ணீர் சொட்டுகள் வடிந்தது. அதற்கு பிறகு மிகவும் உக்கிரமாக கேள்விகள் கேட்டான்.
அவளது கண்ணீர் அதிகமாக மிதமிஞ்சிய எரிச்சலுடன் தன் கையிலிருந்த அவளது விடைதாளை மலர்விழியின் முகத்தில் விட்டெறிந்து இருந்தான். அந்த தேர்வறையில் இருந்த அனைத்து மாணவர்களூம் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தனர். மலர்விழிக்கு மிகவும் அசிங்கமாக போய்விட்டது.
“இதுக்கு கூட பதில் சொல்ல தெரியல்லை நீங்க எல்லாம் நாலு வருசம் என்ன கழட்டிட்டு இருந்தீங்க. கேள்வில இருந்து தப்பிக்குறதுக்கு கண்ணீர் வேற. கெட் அவுட்.” என்று கணிதன் கோவமாக கூற,
அதைவிட எரிச்சலுடன் கணிதனை நோக்கியவள் தனது விடைதாளை எடுத்துகொண்டு வெளியேற, “பேப்பரை வைச்சுட்டு போங்க. பின்ன எப்படி மேடமுக்கு மார்க் போடுறது?” என்று கேட்க,
“எனக்கு எந்த மார்க்கும் வேணாம். அடுத்த வருசம் வந்து எழுதிக்கிறேன்.” என்றவள் கிளம்பி சென்றுவிட்டாள். நடந்த அனைத்தையும் குரூர சிரிப்புடன் பார்த்தவாறு அமர்ந்திருந்தார் அவளது HOD.
*******************************************************************************
ஜோசப் வில்லா….
“ப்ரோ மலர்விழி கூப்பிட்டாங்கன்னு சொன்னியே என்ன சொன்னாங்க?” என்று வீட்டில் நுழைந்தவனை பார்த்ததுமே விசாரித்தான் வீர்.
அவனது கேள்வியை காதிலே வாங்காமல் தங்களது தந்தைமார்களின் அலுவலக அறைக்குள் நுழைந்தவன் தனது தந்தைகளிடம் என்னேன்னவோ பேசி இரு வாரம் கழித்து வைத்திருந்த நிச்சயத்தை இன்னும் ஐந்து நாட்களில் என்று மாற்றி வைக்கவிட்டிருந்தான்.
அதை தினகரனும்,சுதாகரனும் அறையிலிருந்து வெளியே வந்து அனைவரையும் வரவேற்பறையில் உட்காரவைத்து இந்த முடிவை கூற சகோதரர்கள் மற்றும் அவர்களது தாய்மார்களும் கணிதனை ஒரு மார்க்கமாக பார்க்க அவனோ எப்பொழுதும் தனக்கு வராத அசட்டு சிரிப்புடன் அவர்களை பார்த்து இளித்து வைத்தான்.
சகோதரர்கள் நால்வரும் தூவென்று துப்பி விட்டு தந்தைகளின் பேச்சை கவனிக்க, அவர்கள் இருவரும் சம்மந்தி வீட்டுக்கு சென்று முறையாக சொல்வது தான் சரி என்று உடனே கிளம்பி மலர்விழியின் வீட்டிற்கு சென்றனர் தங்களது மனைவிகளையும் அழைத்துக்கொண்டு…
மீதிருந்த கணிதனது சகோதரபடைகள் அவனை பிடித்துக்கொள்ள மலர்விழியை முதன்முதலாக பார்த்தது பற்றி கூற ஆரம்பித்திருந்தான்.
இதுவரை அவர்களிடம் கூட அவன் பகிரவில்லை.