gaanam16

gaanam16

காம் 16

அமீலியா வந்து போன பிற்பாடு அந்த வீடு அமைதியின் உறைவிடமாக இருந்தது. ஏனோ தெரியவில்லை! யாரும் யாரோடும் பேசிக்கொள்ளவில்லை. நான்சி எதைப்பற்றியும் கவலைப்படாதவளாக அவளது அறைக்கு வந்திருந்தாள். எல்லோரும் இரவு உணவை முடித்துக்கொண்டு படுக்கைக்குப் போயிருந்தார்கள். ஜேசன் இன்றைக்கு அழைப்பானா மாட்டானா என்று அவளுக்குத் தெரியவில்லை. 
 
தொடர்ந்து பலகட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்கு அவனை உட்படுத்தி இருந்தார்கள். அனைத்திலும் அவன் தேறியிருந்தான். அடுத்து அணிகளுக்கான பயிற்சியில் அவனை இணைத்திருந்தார்கள். இடைப்பட்ட ஐந்து வருட காலத்தில் பல புதிய முகங்கள் அணியில் இடம் பிடித்திருந்தாலும் பல பழைய முகங்களும் இன்னும் காட்சியளித்தன. அவனோடு கூட விளையாடிய சகபாடிகள். 
 
ஜேசன் அவர்களை எதிர்கொள்ள முதலில் லேசாகத் தயங்கினான். ஆனால் அவனே எதிர்பாராத வரவேற்பு அங்கே கிடைத்த போது மகிழ்ந்து போனான். நான்சியிடம் அவ்வப்போது பேசும் போது ஒவ்வொன்றாக அவளிடம் சொல்லி மகிழ்வான். அணியில் விளையாட இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் கூடிய சீக்கிரமே அது அமைந்து போகும் என்ற மகிழ்ச்சியில் அவன் திளைத்திருந்தான். நான்சிக்கு இப்போதெல்லாம் அவனைப் பார்க்கும் போது, பேசும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பழைய ஜேசனை, துடிப்பான விளையாட்டு வீரனை மீண்டும் கொண்டுவந்துவிட்டதில் உள்ளம் பொங்கும்.
 
அவள் அலைபேசி சிணுங்கியது. அவன்தான் அழைத்துக் கொண்டிருந்தான். அன்றைய நிகழ்வுகளின் தாக்கம் ஏதுமில்லாமல் உல்லாச மனநிலையில் அழைப்பை ஏற்றது பெண்.
 
“வைன் ஃபேக்டரி ஓனர் இப்பெல்லாம் ரொம்ப பிஸி போல?!” அவள் குரல் அவனைச் சீண்டியது. எப்போதும் வீடியோ காலில் வருபவன் அவசரம் என்றால் மாத்திரம் சாதாரணமாக அழைப்பான். அன்று வீடியோ காலில் அவன் அவளை அழைக்கவில்லை.
 
“என்ன ப்ராப்ளம் நான்சி?” கேள்வி நேரடியாக வந்தது.
 
“என்னாச்சு ஜே?”
 
“அமீலியா இன்னைக்கு வீட்டுக்கு வந்திருந்தாளாமே?”
 
“உங்களுக்கு யாரு சொன்னா?”
 
“கேத்தரின் டெக்ஸ்ட் பண்ணி இருந்தாங்க, அம்மா பண்ணச் சொன்னாங்களாம்.”
 
“ஓ…”
 
“உங்க வீட்டுல என்ன நடக்குது நான்சி?”
 
“என்ன ஜே வார்த்தைகள் புதுசா இருக்கு? அது என்ன உங்க வீடு, எங்க வீடுன்னு பேசுறீங்க? எனக்கு இருக்கிறது ஒரே வீடுதான்.”
 
“ஹேய்! சின்னப் புள்ளை மாதிரிப் பேசக்கூடாது, சரி… உங்கம்மா வீட்டுல என்ன நடக்குது?”
 
“அதைப்பத்தி எனக்கென்னத் தெரியும் ஜே? என்னோட வீட்டுல எல்லாமே நல்லாத்தான் போகுது.”
 
“பேபி, சொல்றதைக் கேளு.”
 
“நாம வேற பேசலாமே ஜே.”
 
“இங்கப்பாரும்மா, யாருக்காக இல்லாட்டியும் உம்மேல பாசம் வெச்சிருக்கிற பாட்டிக்காக அந்த வீட்டுக்கு ஒரு தடவைப் போயிட்டு வா, மனசு கஷ்டப்படுற நேரத்துல நாம நேசிக்கிறவங்க நம்ம பக்கத்துல இருக்கிறது எவ்வளவு பெரிய ஆறுதல்னு எனக்குத் தெரியும்.”
 
“இன்னைக்கு ப்ராக்டீஸ் எப்பிடிப் போச்சு ஜே?” அவள் வேறு பேச ஆரம்பிக்க ஜேசனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. ஒரு பெருமூச்சோடு அவனும் அவள் வீட்டுக்கதையை நிறுத்திவிட்டான். அவள் தந்தை மேல் கட்டுக்கடங்காத கோபம் அவனுக்குண்டு. ஆனால் தந்தை என்ற வார்த்தை மேல் அவனுக்கிருந்த பிரியம், மரியாதை அவனை அவளிடம் பேச வைத்திருந்தது.
 
“ஆன்டனியும் லியோவும் என்னப் பண்ணுறாங்க ஜே?” அதன் பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு உறங்கப் போய்விட்டார்கள். 
 
***
அன்று சனிக்கிழமை. நான்சியின் பாடசாலையால் நடாத்தப்படும் கால்பந்துப் பயிற்சிக் குழுவை இரண்டு நாட்கள் உல்லாசப் பயணமாக வெளியே அழைத்து வந்திருந்தார்கள். இங்கிலாந்தின் மிகவும் பிரபலமான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பிரமாண்டமான ஸ்டேடியம் மான்செஸ்டரில் அமைந்திருந்தது. அதைப் பார்ப்பதற்காக மாணவர்கள் குழு மான்செஸ்டர் வந்திருந்தது. இதுதான் சரியான தருணம் என்று நான்சியும் அவர்களோடு இணைந்து கொண்டாள். 
 
பாடசாலையால் நடாத்தப்படும் நிகழ்வு என்பதனால் வீட்டில் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஜேசனிடமும் பேசும் போது இதைச் சொல்லி அனுமதி வாங்கியிருந்தாள்.
 
“இதையெல்லாம் எங்கிட்டச் சொல்லணும்னு அவசியமில்லை பொண்ணே! உனக்குப் பிடிச்சிருந்தாப் போ, ஆனா கவனமா இருக்கணும் புரியுதா?”
 
“ஜே, பசங்களைப் பார்த்துக்கத்தான் நான் கூடப் போறேன், நீங்க என்னைப் பத்திரமா இருக்கச் சொல்றீங்க!”
 
“அதுவும் சரிதான், என்னப் பண்ண? எனக்கு இன்னமும் இந்த நான்சி சின்னப் பொண்ணு மாதிரித்தானே தெரியுறா!”
 
“அப்பிடியா? எல்லா நேரமும் சாருக்கு நான் சின்னப் பொண்ணு மாதிரித்தான் தெரியுறேனா?!” அவள் வேண்டுமென்றே ஆச்சரியம் கூட்டினாள்.
 
“ஆமா, வளர்ந்திருக்கா… ஆனா ஒரு மண்ணும் தெரியலை.” சொல்லிவிட்டு அவனும் கடகடவென்று சிரித்தான்.
 
“ஜே…” பெண் சிணுங்கியது.
 
“அதெல்லாம்தான் ஒன்னும் தெரியாதுன்னு பார்த்தா, பப்ளிக்ல ஜேசனோட காதலியா பேசக்கூடத் தெரியலை…”
 
“ம்ஹூம்… இதை நான் ஒத்துக்கமாட்டேன்.” அவன் பேச்சை அவள் முடிக்க விடவில்லை.
 
“ஏன்?” 
 
“அன்னைக்கு நான் அப்பிடிப் பேசப் போகத்தானே நீங்க சட்டுன்னு முடிவெடுத்தீங்க?”
 
“சட்டுன்னு ஏன் முடிவெடுத்தேன்னு உனக்குத் தெரியுமா பொண்ணே?”
 
“ஏன்னா… அந்த ஸ்டேட்மெண்ட் என்னோடது, அதுக்காக ஜே எந்த எல்லைக்கும் போவாரு.” சொன்னவளின் குரலில் காதல் பெருமிதத்துடன் வழிந்தது. அவன் இப்போது அடிக்குரலில் சிரித்தான்.
 
“அதுல ரொம்பப் பெருமையோ உங்களுக்கு?”
 
“ஆமா, நான் என்ன சொன்னாலும் என்னோட ஜே மாட்டேன்னு சொல்ல மாட்டாரு.”
 
“ஆனா நான் சொல்றதை யாரும் கேட்கிறது இல்லை, மன்னிக்கிற மனசில்லை.” 
 
“ஜே! நாம வேற பேசலாம்.” அவன் அவள் வீட்டுப் பேச்சை எடுக்கும் போதெல்லாம் நான்சி அதைத் தட்டிவிடுவாள். அவளுக்கு ஏனோ அந்தப் பேச்சுப் பிடிக்கவில்லை. ஆனால் அந்த விஷயத்தைப் பொறுத்தவரை உன் செய்கையில் எனக்கு உடன்பாடில்லை என்பதை அவன் காட்டிய வண்ணமே இருந்தான். 
 
அளவில் மிகவும் பெரியதாக இருந்த அந்த மைதானத்தை அன்று அனைவரும் சுற்றிப் பார்த்தார்கள். மாலை வேளை ஓய்வுக்கென ஒதுக்கப்பட்டிருக்க அன்று லியோவிடம் வாங்கிப் பத்திரப்படுத்திய முகவரியோடு கிளம்பிவிட்டது பெண். துணைக்குக் கூடவரக் கேட்ட ஆசிரியையைத் தவிர்த்துவிட்டுத் தனியாகவே கிளம்பினாள்.
 
அவள் தேடிய முகவரி அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அவ்வளவு தொலைவில் இருக்கவில்லை. முப்பது நிமிடங்கள் பயணம் செய்த பிறகு நகரின் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்தது அந்தக் கட்டிடம். சூழவர நல்ல விசாலமான இடம் காணப்பட்டது. தன்னை யாரென்று அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் உள்ளே போனாள் பெண். தங்கள் சொந்தத்தில் இதுபோல அதீத தேவைகளோடு இருக்கும் குழந்தைகளைக் கொண்டு வந்து சேர்ப்பதற்காகச் சிலர் இப்படி வந்து அந்த இடத்தைப் பார்வையிடுவதுண்டு. அதனால் அவளை அங்கு யாரும் தடுக்கவில்லை.
 
நான்சியின் கண்கள் ஒரு ஆசிரியையாக சுற்றுவட்டாரத்தை ஆராய்ந்தது. அவர்கள் பாடசாலையிலும் இதுபோலப் பல மாணவர்கள் இருப்பதால் இந்தச் சூழல் அவளுக்குப் புதிதல்ல. இது போன்ற தேவையுள்ள மாணவர்களுக்காக அவர்கள் செய்திருக்கும் ஏற்பாடுகள் அவளைக் கொஞ்சம் வியப்பில் ஆழ்த்தியது. மிகவும் திறனுள்ள திட்டமிடலோடு அந்த இடம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
 
“டாக்டர் போல்.” யாரோ அழைக்கும் குரல் கேட்கவும் சட்டென்று திரும்பினாள் பெண். அவள் தந்தையின் வயதை ஒட்டிய ஒரு மனிதரை விளித்து யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். லியோ சொல்லிய டாக்டர் இவர்தான் போலும் என்று எண்ணிக் கொண்டாள் நான்சி. 
 
இவளைப் பொறுத்தவரை டெய்சி என்ற பெண்மணி மேல் அத்தனை நல்ல அபிப்பிராயம் தோன்றவில்லை. மூன்றாவது மனிதர் ஒருவருக்கு இப்படி நேர்ந்திருந்தாலே அவள் குறை சொல்லியிருப்பாள். அப்படியிருக்க, அவள் உயிராய் நேசிக்கும் ஜேசனை தவிக்கவிட்ட டெய்சியை பற்றி எப்படி அவளால் நல்லதாக நினைக்க முடியும்?!
 
ஸ்விம்மிங் பூல், விளையாட்டுப் பூங்கா என பார்த்துப் பார்த்து அந்த இடம் வடிவமைக்கப்பட்டிருந்தது. கட்டடத்தின் உள்ளேயும் விளையாட்டுப் பொருட்கள் அங்கிருக்கும் குழந்தைகளின் தேவை அறிந்து ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. ஒரு புறம் இசைக்கருவிகள் நிறைந்த அறை காணப்பட்டது. அன்று முழுவதும் அலைந்து திரிந்தது பெண்ணுக்கு லேசான அயர்வைக் கொடுத்தது. தலை கொஞ்சம் பாரமாக இருப்பது போலத் தோன்றியது.
 
“நான்சி!” தன்னைப் பெயர் சொல்லி அழைத்த குரலில் திடுக்கிட்டுத் திரும்பினாள் பெண். திரும்பிய வேகத்திற்குத் தலை கிர்ரென்று சுழன்றது.
 
“ஏய்! பார்த்துப் பார்த்து… என்னாச்சு?” கேட்டபடி தன்னருகே வந்த அந்தப் பெண்ணை நான்சி கூர்ந்து பார்த்தாள். சொல்லாமலேயே புரிந்தது, அது டெய்சி என்று. அவள் ஆசையாசையாய் காதலிக்கும் அவன் முகம் அவளெதிரில் நிற்கும் பெண்மணியின் சாயலையும் கொண்டிருந்தது.
 
“வா நான்சி.” ஏதோ நெடுநாட்களாகப் பழகியவர் போல அவளை உள்ளே அழைத்துச் சென்றார் டெய்சி. அது அவர் அறை போலும். நல்ல விசாலமாக, வசதியாக இருந்தது. சுவரில் இரண்டொரு சான்றிதழ்கள் பெரிது பண்ணப்பட்டு மாட்டியிருந்தது. அது அவரது சேவைக்கான அங்கீகாரம் போலும். அதைப் பார்த்த மாத்திரத்தில் நான்சியின் முகத்தில் வந்து போன இகழ்ச்சி பாவத்தை டெய்சியும் கவனிக்கத் தவறவில்லை. இருவரும் உட்கார்ந்தார்கள்.
 
“இங்க என்னப் பண்ணுற நான்சி?”
 
“என்னோட பெயர் உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”
 
“ஜேசனை சார்ந்த அத்தனைப் பேருக்குமே உன்னை யாருன்னு தெரியும்தானே!”
 
“ஓ… நீங்க ஜேசனை சார்ந்தவங்களா?” கேட்ட குரலின் இகழ்ச்சியில் டெய்சி லேசாகப் புன்னகைத்தார்.
 
“எம்மேல இவ்வளவு வெறுப்பு இருக்கிறவங்க எதுக்காக என்னைப் பார்க்க இவ்வளவு தூரம் வந்திருக்காங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”
 
“எனக்கு உங்களைப் பார்க்கணும்.”
 
“ஏன்?”
 
“எதுக்காக ஜேயை இப்பிடி அம்போன்னு தவிக்க விட்டுட்டுப் போயிட்டீங்கன்னு கேட்கணும்.” சொன்னவளை விசித்திரமாக ஒரு பார்வைப் பார்த்தார் டெய்சி.
 
“இவ்வளவு நாள் கழிச்சா?”
 
“இல்லை… இப்போதான் உண்மைத் தெரிஞ்சுது.” 
 
“ஓ… இதிலிருந்தே உனக்குப் புரியலையா? இந்த அம்மாவைப் பத்தின என்னோட மகனின் அபிப்பிராயத்தை?”
 
“அந்த அபிப்பிராயத்தை மகனோட மனசுல உருவாக்கினது நீங்கதானே?”
 
“இத்தனை வெறுப்புகளைத் தாண்டி எதுக்கிந்தப் பயணம் நான்சி?”
 
“அதான் சொன்னேனே, எனக்கு உங்களைப் பார்த்துக் கேட்கணும், ஜே க்கு ஏன் இப்பிடிப் பண்ணினீங்கன்னு கேட்கணும்.”
 
“அப்பிடி என்னப் பண்ணிட்டேன் நான்சி ஜே க்கு நான்? ஜெயில்ல போட்டுட்டேனா?” நிதானமாக அவர் கேட்டபோது நான்சி துடித்துப் போனாள். அவள் கண்கள் குளமாகிக் கரையுடைத்தது. அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை பெரியவர் நீட்ட அதை வாங்கிப் பருகினாள் பெண்.
 
“அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டேன்னு அநியாயமாப் பழி சொல்லக் கூடாது.”
 
“சின்னப் பையன், பத்து வயசுதான் ஆகுது, அவனை விட்டுட்டுப் போயிருக்கீங்க.” சிலம்பெடுக்காத கண்ணகி போல தனது காதலனுக்காக நியாயம் கேட்டாள் பெண். 
 
 “நீ ஏன் அப்பிடி நினைக்கிறே? பத்து வயசிலேயே ஜேசனுக்கு அவனோட தேவைகள் அத்தனையையும் நிறைவேத்திக்கத் தெரியும், நான் அப்பிடித்தான் அவனை வளர்த்தேன்.”
 
“விட்டுட்டுப் போறதுக்காகவே ட்ரெயின் பண்ணினீங்களா?”
 
“பால் குடிக்கிற குழந்தையை நடுரோட்டுல நான் விட்டுட்டு வரலை நான்சி, வெவரமான ஒரு குழந்தையை அதோட அப்பாக்கிட்டப் பாதுகாப்பா விட்டுட்டுத்தான் வந்தேன்.”
 
“இது சரியான விளக்கமில்லையே, அப்பிடியென்ன சர்வீஸ் உங்களுக்கு? பெத்த புள்ளையைத் தவிக்க விட்டுட்டு?” அவள் கேட்ட தோரணையில் டெய்சி பக்கென்று சிரித்தார். 
 
“பரவாயில்லை, நான் நினைச்சதை விட எம் பையன் மேல பாசமாத்தான் இருக்கே.”
 
“அவர் உங்கப் பையன் கிடையாது, கிரேஸ் ஆன்ட்டியோட பையன்.”
 
“சரி, அவன் கிரேஸோட பையனாவே இருக்கட்டும்.” நிதானமாகச் சொன்னவர் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். கொஞ்ச நேரம் இருவருமே எதுவும் பேசவில்லை. இளையவள் நிதானிக்கச் சிறிது நேரம் கொடுத்துவிட்டு டெய்சி மீண்டும் பேச ஆரம்பித்தார்.
 
“ஜேசன் பொறந்த கொஞ்ச நாள்லயே தெரிஞ்சு போச்சு, இது எனக்கான வாழ்க்கை இல்லைன்னு…”
 
“ஏனப்பிடி?”
 
“தெரியலை, காலைல எந்திரிச்சதுல இருந்து நைட் தூங்கிற வரைக்கும் ஒரு சின்ன வட்டத்துக்குள்ள ஓடுற வாழ்க்கை, எனக்கு அதுல திருப்தி வரலை நான்சி.”
 
“…”
 
“எந்திரிக்கிறது, சமைக்கிறது, குழந்தையைப் பார்த்துக்கிறது, சாப்பிடுறது… இதுதான் வாழ்க்கையா? இதுக்குத்தான் நான் பொறந்தேனா?”
 
“இதுவும் உங்க கடமைதானே?”
 
“அந்தக் கடமை எங்கிற வார்த்தைதான் என்னைப் பத்து வருஷம் கட்டிப்போட்டுச்சு, ஒரு கட்டத்துல ராபர்ட்டுக்கு புரிஞ்சு போச்சு, என்னால இந்தச் சின்ன வட்டத்துக்குள்ள வாழ முடியாதுன்னு, எனக்கு மூச்சு முட்டுதுன்னு.”
 
“ஓ…”
 
“எனக்கு என்னத் தேவைங்கிற‌ தெளிவு ஏற்கனவே எனக்கிருந்துச்சு, அதை முதல்ல ராபர்ட் கிட்டத்தான் சொன்னேன், உனக்குப் பிடிச்சதை நீ தாராளமாப் பண்ணுன்னு எனக்கு அனுமதி குடுத்தாரு.”
 
“இல்லைன்னாலும் நீங்க உங்க இஷ்டத்துக்குத்தான் நடந்திருப்பீங்க.”
 
“இல்லை நான்சி, என்னோட வாழ்க்கையை நானும் அனுபவிச்சு வாழணும்னு நினைச்சனே தவிர பொறுப்புகளை என்னைக்கும் உதறணும்னு நினைக்கலை.”
 
“…” 
 
“ஆரம்பத்துல சட்டப்படி நாங்க பிரியலை, வாழ்க்கை அப்பிடியே ஓடிச்சு, ராபர்ட் வாழ்க்கையில கிரேஸ் வந்தப்போ அதை அவர் எங்கிட்டத்தான் முதல்ல சொன்னாரு.”
 
“வருத்தமா இருக்கலையா?”
 
“சத்தியமா இல்லை, அது எனக்கான வாழ்க்கை இல்லைன்னுத் தெளிவாப் புரிஞ்சு போச்சு, ராபர்ட் அந்த விஷயத்தை எங்கிட்டச் சொன்னபோ ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு, உடனடியா‌ ரெண்டு பேரும் சட்டப்படி பிரிய ஏற்பாடு பண்ணினேன், அவங்க ரெண்டு பேரோட கல்யாணத்துக்கு நானும் சாட்சிக் கையெழுத்துப் போட்டேன்.”
 
“என்னது?!” இதுவரை சாய்ந்து உட்கார்ந்திருந்த நான்சி இப்போது திடுக்கிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள். என்னப் பேசுகிறார் இந்தப் பெண்?! தனது கணவனை இன்னொரு பெண்ணுக்குத் தாரை வார்த்ததும் இல்லாமல் அதற்குச் சாட்சிக்கு வேறு போய் நின்றிருக்கிறாரே!
 
“இந்த இடத்தை நல்லாச் சுத்திப் பாரு நான்சி, இதுக்குப் பின்னாடி இருக்கிற எங்களோட உழைப்பு உனக்குப் புரியும்.”
 
“பார்த்தேன்.”
 
“நீயும் ஒரு டீச்சர்தானே, உன்னால இதைப் புரிஞ்சுக்க முடியும், எத்தனைப் பிள்ளைங்கத் தெரியுமா? இத்தனைப் பசங்க நல்லா இருக்கிறதுக்காக ஜேசன் ஒருத்தன் கஷ்டப்படுறது தப்பில்லை, அதோட… ஜேசன் கஷ்டப்படலையே, அவனுக்குத்தான் கிரேஸ் இருந்தாளே!” அந்த விவாதத்தின் நியாயத்தில் நான்சிக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அங்கு பயன்பெறும் சிறுவர்களைப் பார்த்த போது மனது கொஞ்சம் லேசானது.
 
சின்னஞ்சிறு சிறுவர்கள். ஆனால் ஏதேதோ குறைபாடுகள். நான்சிக்கு எப்போதுமே இதுபோன்ற இளையவர்களைப் பார்க்கும் போது மனது வலிக்கும். எந்தப் பாவமும் செய்யாமல் சிலுவை சுமக்கும் ஜீவன்கள். அவர்களுக்கு நடக்கும் சின்னச் சின்ன நன்மைகளுக்காக எந்த விலையும் கொடுக்கலாமே! நான்சியின் மனதுக்குள்‌ இப்போது பெரும் போராட்டம் நடந்தது. 
 
“உருட்டி மிரட்டி ஜேசனை ஒரு வழி பண்ணிட்டே போல இருக்கு?” டெய்சி மகனைப் பற்றிப் பேசவும் நான்சி புன்னகைத்தாள்.
 
“கிரேஸ் எப்பிடி இருக்கா? இப்போ பரவாயில்லையா?”
 
“ம்… நல்லா இருக்காங்க, இப்பல்லாம் நல்லாவே பேச முடியுது அவங்களால.”
 
“நீ இங்க வந்திருக்கிறது ஜேசனுக்கு தெரியுமா?”
 
“ம்ஹூம்…” அவள் இல்லை என்று தலையாட்ட டெய்சி சிரித்தார். 
 
“தப்புப் பண்றியோ?”
 
“இல்லை, ஜே க்கு இது பிடிக்காதுன்னு நல்லாவேத் தெரியும், ஆனா நான் பண்ணுறது தப்புன்னு எனக்குத் தோணலை.”
 
“இதே மாதிரி அன்னைக்கு நானும் யோசிச்சிருக்கலாம் இல்லையா நான்சி? என்னைச் சுத்தி இருந்த நாலு பேருக்கு, ஏன்… இன்னைக்கு உனக்குக் கூடத் தப்பாத் தெரியுற விஷயம் அன்னைக்கு எனக்குத் தப்பாத் தெரியாமப் போயிருக்கலாம்.” 
 
“நீங்க ஒரு தாய்.” 
 
“இங்கேயும் நான் எத்தனையோ குழந்தைகளுக்குத் தாய்தான் நான்சி, எத்தனைக் குறைபாடுகள், எவ்வளவு தேவைகள், மனசையே நோகடிக்கிற கண்ணீர், தாங்கவே முடியாத இழப்புகள்… ரெண்டு நாள் எங்கூட இங்க இருந்து பார்த்துட்டு அதுக்கப்புறமா நான் பண்ணினது தப்புன்னு சொல்லு பொண்ணே.” அந்தக் கடைசி வார்த்தையில் அவள் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். ஜேசன் பேசியது போலவே இருந்தது. கிரேஸ் தண்ணீரூற்றி வளர்த்திருந்தாலும், விதையைப் போட்டது அவளெதிரில் இருப்பவர்தானே! ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் உண்மை உண்மைதானே!
 
நான்சி அதற்கு மேல் அங்கே தாமதிக்கவில்லை. டாக்டர் போலை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தார் டெய்சி. திருமணமே செய்து கொள்ளாமல் தனக்கென எதையும் சேமிக்காமல் அந்த சென்டருக்காகவே உயிர் வாழும் ஒரு துறவி போல இருந்தார் அந்த மனிதர். டெய்சி அவரைப் பார்க்கும் பார்வையிலேயே அத்தனை மரியாதைத் தெரிந்தது. அவரோடும் இரண்டொரு நிமிடங்கள் பேசிவிட்டுப் பெண் கிளம்பிவிட்டது. உடலின் அயர்வு அவளை வாட்டியது.
 
அதையும் தாண்டி மனது ஏதேதோ சிந்தனைகளில் மூழ்கிக் கிடந்தது. வாழ்க்கையின் தாற்பரியம் என்னவென்று அவளுக்குப் புரியவில்லை. தான் இதுநாள் வரைப் புரிந்தது சரியென்று நினைத்திருந்த பெண் முதல்முதலாக அது தவறோ என்று சிந்தித்தது. வாழ்க்கை என்பது என்ன?! அந்தந்த நேரங்களில் அவரவர்க்குத் தோன்றும் நியாயங்கள்தானா?! டெய்சிக்கு அவர் நியாயம், ஜேசனுக்கு அவனது நியாயம், அப்படியென்றால் அவள் அப்பா! அவருக்கும் அவரது நியாயமா?! நான்சி கண்களை மூடிக்கொண்டாள். இரண்டு காவலர்கள் கூட வர அன்றைக்குத் தலையைக் குனிந்தபடி நடந்து போன ஜேசனே அப்போதும் அவள் மனக்கண்ணில் தோன்றினான்.

Leave a Reply

error: Content is protected !!