ISSAI,IYARKAI & IRUVAR 2.2

PhotoGrid_Plus_1603258679672-fb5c50e4

ISSAI,IYARKAI & IRUVAR 2.2


இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 2

இரண்டு நாட்கள் கழித்து, ஓர் மாலை வேளையில்

சிவா வீட்டின் அறையில்,

“அண்ணா ப்ளீஸ்” என்று நளினி கெஞ்சிக் கொண்டிருக்க, “சான்ஸேயில்லை” என்று சொல்லி, சிவா தன் மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏன் இப்படி பண்ணற? நாலே நாலு போட்டோதான கேட்கிறேன்” என்று வேலை செய்ய விடாமல், அவன் கையைப் பிடித்தாள்.

“போ…” என்று, அவள் கையைத் தட்டிவிட்டவன் ,”வெளியில பிரவீன் இருக்கான். அவன்கிட்ட போய் கேளு. எடுத்து தருவான்” என்றான்.

“பிரவீன் எடுக்கிறது எனக்குப் பிடிக்காது”

“அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது”

மீண்டும், “ப்ளீஸ் அண்ணா” என்று ஆரம்பித்தாள்.

இதற்கிடையே வரவேற்பறையில்…

செண்பகமும் பிரவீனும் பேசிக் கொண்டிருந்தனர்.

“அவன்கிட்ட இவ என்ன கெஞ்சிகிட்டு இருக்கா மாப்பிள்ளை?”

“ரெனோவேஷன் வொர்க் நடக்குது-ல, அது முடிஞ்சப்புறம் வால் டெகரேஷன்-காக போட்டோஸ் வேணுமா? அதான் அத்தை… சிவா-வ எடுத்துச் தரச் சொல்றா!” என்றான் பிரவீன்.

“ஓ!”

“பொண்ணு போட்டோ காட்டினீங்களா அத்தை? சிவா என்ன சொன்னான்?”

“அவனுக்குப் பிடிச்சிருக்கு மாப்பிள்ளை!” என்றவர், “ஆனா, இன்னும் பொண்ணு வீட்ல இருந்து எந்த தகவலும் வரலை” என்று கொஞ்சமே கொஞ்சம் கவலை கொண்டார்.

“ஓ!”

இதே நேரத்தில் சிவாவின் அறையில்…

“அண்ணா” என்றாள், மறுபடியும்!

“நான் போர்ட்ரைட் போட்டோக்ராபர் கிடையாது. என் கேமரா மனுஷங்களை படம் பிடிக்காது” என்று தெளிவாக மறுத்தான்.

“நம்ம பிசினஸ்-காகத்தான கேட்கிறேன்”

“அது உன் பிசினஸ்! இது என் ப்ரோஃபஷன்!”

“அண்ணா” என்று அன்புடன் அழைத்து, “எனக்காக பண்ண மாட்டியா?” என்று ஆசையாகக் கேட்டாள்.

“டூ ட்ராமட்டிக். மரியாதையா போயிடு” என்றதும், சட்டென மெத்தையில் இருந்து கோபமாக எழுந்தாள்.

அதுவரை தலையை நிமிர்த்திப் பார்க்காதவன், நிமிர்ந்தான். கோபமாக நின்றாள்.

‘எனக்கென்ன?’ என்பது போல், மீண்டும் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

“பாண்டியன்” என்றாள்.

“அப்படிக் கூப்பிடாத” என்று எச்சரித்தான்.

ஆம்! சிவாவிற்கு ‘பாண்டியன்’ என்று அழைத்தாள் பிடிக்காது!!

“அப்படித்தான் கூப்பிடுவேன். அதான உன் பேரு!” என்று அவனை வெறுப்பேற்றினாள்.

“நளினி வேண்டாம்! கோபப்படுத்தாத!”

“சரி சரி ” என்று சொன்னவள், “பாண்டியன்… பாண்டியன்” என்று அழைத்துவிட்டு, கதவின் அருகே சென்று சிரித்தாள்.

“உன்னை” என்று கணினியைத் தூக்கி வைத்துவிட்டு, எழுந்தான்.

“பாண்டியன்” என்று மீண்டும் அழைத்துவிட்டு வெளியே ஓடினவளை,

“ம்மா” என்று உரக்க அழைத்துக் கொண்டே துரத்தினான்.

வெளியே வந்தவள், “பிரவீன் காப்பாத்துங்க” என்று வரவேற்பறையில் இருந்த, கணவனின் அருகில் வந்து அமர்ந்தாள்.

“என்ன நளினி இது? வெளியே கேட்கிறவங்க என்ன நினைப்பாங்க” என்று செண்பகம் கண்டித்தார்.

“அவன் அடிக்க வர்றான்-ம்மா” என்று சொல்லும் போதே, சிவா அவள் அருகில் வந்து, உச்சந்தலையில் சில பல கொட்டுகள் வைத்தான்.

இப்படி அடிக்கடி நடக்கும் என்பதால், பிரவீன் நடப்பதெல்லாம் அமைதியாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.

“கண்ணா கண்ணா… அவளுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு” என்று சென்பகம், அவன் கையைப் பிடித்துத் தடுத்தார்.

“ம்மா, அவ பாண்டியன்னு கூப்பிடுறா! ” என்று சொன்னவன், “எதுக்கு சிவபாண்டியன்-ன்னு வச்சிங்க??” என்று கேட்டான்.

“அப்படி சொல்லக் கூடாது கண்ணா! அது அப்பா ஆசையா வச்ச பேரு”

“ஆங்… இப்போ கூப்பிடுறீங்களே கண்ணா. இந்தப் பேரையாவது வச்சிருக்கலாமே?”

“ஐ கண்ணா! நல்ல பேரு” என்ற நளினி, “ஆனா, கண்ணாவும் சாமி பேருதான் அண்ணா” என்று மீண்டும் அவனை வம்பிற்கு இழுத்தாள்.

“ம்மா” என்று கோபமாக அழைத்தவன், “பிரவீன், இவளை எதுவுமே சொல்ல மாட்டியா-டா??” என்று கேட்டான்.

உடனே செண்பகம், “சிவா!” என்று கண்டிப்புடன் அழைத்தார்! பின், “அவர் இந்த வீட்டு மருமகன்! ‘டா’ போட்டு பேசாதா” என்று எச்சரித்தார்.

ஆம்! செண்பகம் மட்டுமல்ல, மதியழகனும் இப்படித்தான். வீட்டின் மருமகனுக்கு மரியாதை கொடுத்து நடத்த வேண்டும் என்பதில், கவனமாக இருப்பார்கள்.

மேலும், “மாப்பிள்ளை” என்று அவர் அழைக்கவும், பிரவீன் பார்த்தான்.

“நீங்க இதெயெல்லாம் கேட்கணும்” என்று அமைதியாகச் சொன்னார்.

“அப்படி கேட்கணும்னா இவளைத்தான் முதல கேட்கணும்” என்று, பிரவீன் நளினியைக் கை காட்டினான்.

இக்கணம், சிவாவும், பிரவீனும் சிரித்துக் கொண்டனர்.

“பிரவீன்” என்று நளினி உதடு சுழித்தாள்.

“என்ன நளினி இது?” என்று செண்பகம் கேள்வி கேட்டு நின்றார்.

“அம்மா நீங்க சொன்னப்புறம், நான் அப்படிக் கூப்பிடறதே இல்லை” என்றாள் நளினி, சத்தியம் செய்யாத குறையாக!

“அப்படியா மாப்பிள்ளை??” என்றார் பிரவீனைப் பார்த்து!

“ஆமா அத்தை” என்றவன், “உங்க முன்னாடி மட்டும்” என்று மீண்டும் நளினியை மாட்டிவிட்டான்.

மீண்டும் சிவாவும், பிரவீனும் சிரித்தனர்.

இதற்கிடையே, செண்பகத்தின் செல்பேசி சத்தம் போட்டது. “இந்த நேரத்தில யாரு?” என்று செல்பேசியை எடுத்துக் பார்த்தவர், அந்த இடத்தில் நடக்கும் சத்தத்தைக் கண்டு, அவரது அறைக்குள் சென்று… சட்டென அழைப்பை ஏற்றார்.

சற்று நேரம் கழித்து…

அறையிலிருந்து வெளியே வந்த செண்பகத்திடம்…

“யாரும்மா?” என்றான் சிவா, பேசிக் களைத்ததால் தண்ணீர் குடித்துக் கொண்டே!

“பொண்ணு வீட்ல இருந்துதான்” என்றதும், தண்ணீர் சிவாவின் தொண்டைக்குழிக்குள் தாண்டவம் ஆடியதும்.

“என்ன சொல்றாங்க?” என்றான் பிரவீன் ஆர்வமாக!

“என்ன சொன்னாங்க-ம்மா?” என்றாள், நளினி அவசரமாக!!

இதில் எதையும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முடியாமல், சிவா அவஸ்த்தைப்பட்டான்!!

“அவங்க ஜாதகம் பார்த்துட்டாங்களாம். பொருத்தம் இருக்கு. பொண்ணுக்கும் பிடிச்சிருக்காம். அதான் பையனுக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்டாங்க?”

இந்த நொடியில்… அவஸ்த்தைப்பட்டவன் உள்ளம், ‘அட! அட!’ என்று ஆட்டம் போட ஆரம்பித்தது.

“அண்ணாதான் அன்னைக்கே பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்-ல”

“அதை சொல்லிட்டேன் நளினி”

“சரி, வேற என்ன சொன்ன்னாங்கனு சொல்லுங்க??”

“நாளைகழிச்சு காலையிலே வீட்டுக்கு வரச் சொல்லியிருக்காங்க. நேர்ல பார்த்து கல்யாணத் தேதி பிக்ஸ் பண்ணலாம்னு… அந்த அம்மா சொன்னாங்க”

“வாவ் சூப்பர்! அப்போ அண்ணாக்கு மேரேஜ்” என்று துள்ளிக் குதித்துக் கொண்டு போய், அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு குதித்தாள்.

பிரவீனும், சிவா அருகில் வந்து, “கங்கிராட்ஸ்-டா” என்று சொல்லி, கை கொடுத்தான்.

“ட்ரீட் வேணும் அண்ணா” என்றாள் நளினி, மேலும் அவன் கையைப் பிடித்துத் தொங்கி கொண்டே!!

“மூணு பேரும் வீட்ல இருக்கோம். எங்கயாவது போகலாமா?” என்று பிரவீன் யோசனை சொன்னான்.

“கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும். அப்போ, அப்படியே வாங்கிட்டு வந்துடுங்க” என்றார் செண்பகம்.

“அப்போ நான் போய் ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு வர்றேன்” என்றாள்  நளினி

“நானும் வர்றேன்” என்ற பிரவீன், “சிவா நீ கிளம்பி வீட்டுக்கு வந்திடு” என்றான்.

‘சரி’ என்று சிவா தலையை ஆட்டினான்.

“அண்ணா, வர்றப்போ… அம்மாகிட்டருந்து லிஸ்ட் வாங்கிட்டு வா” என்று சொல்லிவிட்டு, இருவரும் அவர்களது தளத்திற்குக் கிளம்பினார்கள்.

அவர்கள் கிளம்பியதும்,

செண்பகம் மகனின் அருகில் வந்தார்.

“அப்பாகிட்ட சொல்லிட்டீங்களா?” என்று கேட்டான்.

“போன் பண்ணி சொல்லிட்டேன்” என்றவர், “கண்ணா, உனக்கு பிடிச்சிருக்குல?” என்று கேட்டார்.

“ம்ம்ம்” என்று தலையசைத்தவனிடம்… “சரி, நீ ரூம்-ல இரு! நான் லிஸ்ட் ரெடி பண்ணி கொண்டு வர்றேன்” என்று சொல்லிச் சென்றார்.

சிவா, தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

நேரே, அந்த ‘பிளாக் லோகஸ்ட்’ போன்சாய் அருகில் சென்றான். ‘ஹனி’ என்று உதடுகள் மூணுமுணுத்தன.

இரண்டு நாளாய் தடதடத்த மனம், இன்று தாளம் போடா ஆரம்பித்தது. அந்த தாளத்திற்கு ஏற்றவாறு… ‘ஹனி… ஹனி’ என்று இசைப் பிரியையை… பிரியத்துடன் அழைத்துப் பார்த்துக் கொண்டான்.

இதே நேரத்தில், வேணிம்மா வீடு

செண்பகத்திடம் பேசியதும், முகம் முழுதும் புன்னைகையுடன் பாவை இருக்கும் இடம் தேடித் சென்றார், கிருஷ்ணவேணி!

பூஜை அறையிலிருந்து, இருவரின் குரல் வருவது கேட்டது.

உடல்நிலையையும் தாண்டி, பூஜை அறையை நோக்கி வேகமாக நடந்தார்.

பூஜை அறையில்

கலையும் மீனாட்சியும் ஒரு புறம் நின்று கொண்டிருந்தனர்.

கடவுளின் சிலைகளுக்கு முன்னர், பாவையும் கௌசியும் சம்மணம் இட்டு அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு எதிர்புறம், சங்கர் மிருதங்கத்துடன் அமர்ந்திருந்தான். 

“ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை

ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட” என்று இருவரும் ஒரே சுருதியில் பாடினார். அதற்கேற்றபடி சங்கரின் மிருதங்க தாளம்!

“அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்

அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்” என்று வரிகள் உணர்ந்து இருவரும் பாடிக்  கொண்டிருக்கும் போது, வேணிம்மா வந்து பூஜை அறை வாசலில் நின்றார்.

“பூ மாலை சாற்றினாள்

கோதை மாலை மாற்றினாள்

சீதா மாலை சாற்றினாள்

கோதை மாலை மாற்றினாள்'” என்று தாளத்தில் ஒரு சிறு வேறுபாடு கொடுத்து, சற்று வேகமாகப் பாடினார்கள். அதற்கேற்றபடி, சுந்தர் மிருதங்கத்தின் தாளத்தை மாற்றி அமைத்தான்.

“மாலை சாற்றினாள்…” என்று மீண்டும் ஒருமுறை பல்லவியைப் பாடி, பாடலை முடித்தார்கள்.

முடித்தவுடன், மூவரும் கைகூப்பி இறைவனை வணங்கிக் கொண்டார்கள்.

மீனாட்சி, கௌசிக்கும்… சங்கருக்கும் விபூதி வைத்துவிட்டதும், “மீனா” என்று வேணிம்மா அழைத்தார்.

“என்னம்மா?”

“குங்குமம் எடு” என்றதும், மீனாட்சி எடுத்து தந்தார்.

பாவையின் நெற்றியில் வைத்துவிட்டு, “நாளைகழிச்சு பையன் வீட்ல இருந்து வர்றாங்க! அன்னைக்கே கல்யாணத் தேதி குறிச்சிடலாம்” என்று புன்னகை செய்து கூறினார். பின்னர், “பாவைக்கு கல்யாணம் ஆகப்போகுது” என்றார், சத்தமாகச் சிரித்துக் கொண்டு!

பாவையும் சிரித்துக் கொண்டாள்.

“கிரி எங்க, மீனா?” என்றார் மகளிடம்.

“வெளியில போயிருக்கான்-ம்மா” என்று சொல்லி, மீனாட்சி சென்றுவிட்டார். அவ்வளவுதான், அவரின் எதிர்வினை! வேணிம்மா, அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை!! அவரின் நிலை, சந்தோசம் மட்டுமே!!

மீனாட்சி கிளம்பிச் சென்றதும்,

‘பாவைக்கு கல்யாணம் முடிந்தால்…’ என்றதில் ஆரம்பித்து, கௌசியின் எண்ணங்களில் சில பல கேள்விகள் வந்தன.

“கௌசி வா” என்று கலை சொன்ன பின்னரே, அவள் நிகழ்விற்கு வந்தாள். பின், தன் கணவனுடன் சென்றாள்.

கௌசி போவதையே பார்த்துக் கொண்டிருந்த பாவை, தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

“பாவை, வா போகலாம்” என்று வேணிம்மா அழைத்ததும்… பாவை, அவர் பின்னேயே சென்றாள்.

இதற்கிடையே, ‘பாவைக்கு கல்யாணமா?’ என்று திகைத்துப் போய் நின்றிருந்த சங்கர், அவர்கள் இருவரும் பூஜை அறைக்குள் இல்லாதது தெரிந்ததும்… வெளியே வந்தான்.

வெளியே சென்ற வேணிம்மாவையும், பாவையையும் பின் தொடர்ந்து வந்த சங்கர், “பாட்டி” என்று அழைத்தான்.

இருவரும் திரும்பிப் பார்த்தனர். “என்ன?” என்று கிருஷ்ணாம்மா கேட்டார்! 

“நான் எந்த விதத்தில பாவைக்கு பொருத்தம் இல்லை. நான் அவளை நல்லா பார்த்துக்கிடுவேன் பாட்டி! ஏன் பாவையை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டிக்கிறீங்க?” என்று ஆற்றமாட்டாமல் கேட்டான்.

சட்டென அடித்தார். அவனுக்கு, இது சகஜம் தானே! அப்படியே நின்றான்!!

“இதுக்கு முன்னாடி நீ இப்படி உளறிக்கிட்டு இருந்தது வேற. இனிமே…” என்று திட்டும் போதே,

“இது உளறல் இல்லை பாட்டி! உண்மை!!” என்று திருத்தினான்.

பாவைக்குத் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

“வாயைமூடு!  இப்போ அவளுக்கு கல்யாணம் ஆகப்போகுது. இனிமே இப்படிப் பேசாதா” என்று கண்டிப்புடன் சொன்னவர், “நீ வாம்மா” என்று பாவையை அழைத்துக் கொண்டு சென்றார்.

போகிறவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றவன், ‘எத்தனை அடி வாங்கினாலும்… தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளப் போவதில்லை?’ என்பதில் உறுதியாக இருந்தான்.

‘என்ன செய்ய?’ என்று வேறு யோசிக்க ஆரம்பித்தான்.

வேணிம்மா அறையில்

இருவரும் மெத்தையில் அமர்ந்திருந்தனர்.

அவள் முகத்தயே பார்த்துக் கொண்டிருந்தவர், “உனக்கு பையனை பிடிச்சிருக்கிதுல?” என்று கேட்டார். ஏற்கனவே நிறைய முறை கேட்ட கேள்விதான், அவளும் ‘பிடித்திருக்கு’ என்று பதிலும் சொல்லிவிட்டாள்.

இருந்தும், கேட்டார்!

‘ம்ம்ம்’ என்று தலையாட்டினாள்.

 சிரித்துவிட்டு, “சரி! பாட்டி கொஞ்ச நேரம் படுத்திருக்கேன். சாப்பிடப் போறப்போ கூப்பிடு” என்றார்.

எழுந்து கொண்டாள்.

“அப்புறம் பாவை” என்றதும், நின்று திரும்பினாள், “என்ன புடவை கட்டணும்? என்ன நகை போடணும்? எல்லாம் எடுத்து வச்சிக்கோ. சரியா?” என்றார்.

‘சரி’ என்பது போல், தலையாட்டிச் சிரித்தாள்.

வேணிம்மா படுத்துக் கொண்டதும், ‘வார்டரோபை’ திறந்து கொண்டு நின்றாள், பாவை.

ஒவ்வொரு புடவையாகப் பார்த்தாள். ‘என்ன புடவை கட்டிக் கொள்ள?’ என்று நினைத்தவளுக்கு, கட்டிக்கப் போகிறவன் முகம் கண் முன்னே வந்து நின்றது.

சிரித்துக் கொண்டாள்.

‘ஸஸ ரிரி கக ரிரி… ஸஸ ரிரி கக மம …

ரிரி கக மம கக… ரிரி கக மம பப….

கக மம பப மம… கக மம பப தத…

மம பப தத பப… மம பப தத நிநி…

பப தத நிநி தத… பப தத நிநி ஸ்ஸ்…|

ஸ்ஸ் நிநி தத நிநி… ஸ்ஸ் நிநி தத பப’ என்று இசையை ரசித்து ராகமொழிகளில் பாடியவள், இயற்கையை ரசிப்பவனை நினைத்து, ‘கக மமப கமப பாண்டியன்’ என்று ரசனை மொழியில் முடித்தாள்!!

Leave a Reply

error: Content is protected !!