ithayamnanaikirathey-19

IN_profile pic-6ebb26fb

ithayamnanaikirathey-19

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 19

“நான் நல்லவன் இல்லையா இதயா? நான் ஒரு நல்ல கணவன் இல்லையா இதயா?” அவன் தவிப்போடு கேட்க,

“நீ நல்லவன் விஷ்வா. நீ நல்ல காதலன். நல்ல தகப்பன். ஆனால், நீ நல்ல கணவனா? இந்த கேள்விக்கு உண்மையை சொல்லி நான் உன்னை காயப்படுத்த விரும்பலை விஷ்வா.” பதிலை கூறிவிட்டு அவள் கண்களின் கண்ணீரை அவன் அறியாவண்ணம் மறைக்க குப்புற படுத்து கொண்டாள் இதயா. 

அவள் கூறிய பதிலில் அவன் இதயம் நனைத்தது. அவன் கண்கள் கசிந்தது. ஒரு ஓரத்தில் புன்னகையும் எட்டி பார்த்தது.

அவள் இதயம் வலித்தது. அவள் கண்ணீரை மறைக்க நினைத்தாலும் குலுங்கிய அவள் முதுகு அவள் கண்ணீரின் வேகத்தை கூற, தலையணை தாண்டியும், அவன் கைகள் அவளை நோக்கி நீண்டு அவள் தேகம் அருகே சென்று காற்று புகும் இடைவெளியில் நின்றது.

அவளை ஆசுவாசப்படுத்த அவன் தேகம் துடிக்க, அவன் மனமோ அவள் வலியை புரிந்து கொண்டு விலகச் சொல்ல, அறிவோ அவள் நிராகரிப்பை சுட்டி காட்டி அவனை ஸ்தம்பிக்க செய்தது.

“இதயா…” அழைப்பில் வலி, அன்பு, காதல்.

“ம்…” அவள் திரும்பாமல் தன் முகத்தை தலையணைக்குள் புதைத்து கொண்டும், கண்ணீரை துடைத்துக் கொண்டும் சத்தம் செய்தாள்.

“இதிம்மா…” அவன் கரைந்து உருகினான்.

“விஷ்வா…” அவள் கதறினாள். “அப்படி கூப்பிடாத” அவள் மீண்டும் விம்ம, “இதிம்மா…” அவன் கெஞ்சினான். ‘இதிம்மா…’ கரிசனத்தை மட்டுமே தேக்கி வைத்திருக்கும் விஷ்வா.

காதலில் கரைந்து உருகும் பொழுது அவனுக்கு அவள் என்றும்  இதயா தான். அவன் இதயம் இதயா மட்டும் தான். ஆனால், வலிகளை தாங்க முடியாத நேரத்தில்  அழைக்கும் பிரத்தியேகமான அழைப்பு.

அவனால், வலிகளை சுமக்க முடியாத பொழுது, அவன் வலிகளை அவளிடம் பகிர்ந்து கொண்டு குழந்தையாய் தன் தாரத்தை தாயாய் எண்ணி அவன் சரணடையும்  பொழுது அவனின் உயிர் துடிப்பு. ‘இதிம்மா…’

இன்று அவள் படும் வேதனையை தாங்க முடியாமல், அவளிடமே வெளிப்பட்டது , ‘இதிம்மா…’

“நீ எழுந்து உட்கார். நான் பேசணும்” அவன் குரலில் பிடிவாதம்.

‘எத்தனை நாட்கள் இப்படி கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடுறது?’ அவன் ஒரு முடிவோடு பேசினான்.

“பழசை பேச நான் விரும்பலை விஷ்வா.” அவள் படுத்துக் கொண்டே அவன் முகம் பார்க்காமல் பேசினாள்.

“சரி பழசை பேச வேண்டாம்” அவன் கூற, “பழசை தவிர உன்கிட்ட பேச எனக்கு ஒன்னும் இல்லை” அவள் கூற, “இதயா” அவன் கர்ஜித்தான்.

அவன் கர்ஜனையில் அவள் எழுந்து அமர்ந்தாள். அவள் முகத்தில் தோல்வியுற்ற சோகம்.

“இதயா…” அவன் அழைக்க, அவளையும் மீறி அவள் மனம், ‘இதிம்மா…’ என்ற அழைப்புக்கு ஏங்கியது.

‘நான் தான் அனைத்துமாக இருந்தேன்னே?’ அவள் மூளை பழைய நினைவுகளோடு போராட, மனமோ காதலோடு போராட ஆரம்பித்திருந்தது.

“இதெல்லாம் எடுத்து தூக்கி போடு” என்று தலையணைகளை காட்டியபடி அவன் குரலில் அதிகாரம்.

“இது இருந்தாலும், நீ பேசுறது எனக்கு கேட்கும்” அவள் குரலில் பிடிவாதம்.

அவனே தூக்கி எரிந்தான், ‘நான் பழைய விஷ்வா இல்லை’ என்பது போல். ‘உன் செயல் என்னை பாதிக்க நானும் பழைய இதயா இல்லை’ என்று அவளும் அழுத்தமாக அமர்ந்திருந்தாள்.

அவள் மெத்தையின் மீது சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள். அவனும் அவள் எதிரே சம்மணமிட்டு அமர்ந்தான்.

“இதயா, நடந்ததெல்லாம் தப்பு தான். தப்பு என் மேலும் இருக்கு. தப்பு உன் மேலும் இருக்கு.” அவன் பொறுமையாக பேசினான்.

“பழசை…” அவள் தொடங்க, “பழசை நான் பேசலை. இனி என்ன பண்ணலாம்?” அவன் கேட்டான்.

“நீ தினமும் கேட்டாலும் சரி. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கேட்டாலும் சரி. எனக்கு நீ வேண்டாம்.” அவள் குரலில் பிடிவாதம்.

“எனக்கு தியா வேணும். தியாவுக்கு அப்பா வேணும்.” அவன் பிடிவாதமாக கூறினான்.

“தியாவுக்கு அப்பா வேணாம்.” அவள் அழுத்தமாக கூற, “இதயாவுக்கு அஜய் வேணும். அஜய்க்கு அம்மா வேணும்.” அவன் கண்கள் கலங்கியது.

“நான் உன்கிட்ட இதை தானே பல வருஷத்துக்கு முன்னாடி கெஞ்சினேன்.” அவள் கண்களிலிருந்து நீர் முத்துக்கள் உருண்டது.

சரேலென்று தன் கைகளை நீட்டி, அவள் கைகளை தன் கைகளுக்குள் புதைத்து கொண்டான். அவள் சோகத்தையும் தனக்குள் புதைத்து கொள்வது போல்!

 அவள் கண்ணீர் துளிகள் அவன் கரங்களில் உருண்டோடியது.

“பழசை பேச விரும்பலைன்னு சொன்னியே இதயா.” அவன் முகத்தில்  புன்னகை. வலியை மறைக்கும் புன்னகை. வலியை தாங்கி கொண்ட புன்னகை.

அவள் அவனை யோசனையாக பார்க்க, “அன்னைக்கு நீ கேட்டப்ப, நான் கொடுக்கலை. இன்னைக்கி தரேன். வாங்கிக்க மாட்டியா?” அவன் நிலைமையை சீர் செய்ய முயற்சிக்க, அவளிடம் மௌனம்.

“அஜய்க்கு அம்மா வேண்டாமா?” அவன் கேள்வியாக நிறுத்தினான்.

“அஜய்க்கு அம்மா வேணும். இதயாவுக்கும் அஜய் வேணும். ஆனால்…” அவள் கண்களில் இப்பொழுது கேலி வந்தமர்ந்து கொண்டது சூழ்நிலையை சமாளிக்கும் தைரியத்தோடு.

“ஆனால்?” அவன் கண்களை சுருக்க, “ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம் மாதிரி, அஜய்யோட சேர்ந்து வர ஃபீரி ஆஃபர் எனக்கு வேண்டாம்.” என்றாள் கண்களில் குறும்போடு.

அவள் கேலியை ரசித்து சிரித்து கொண்டு, “இப்படி சிரிச்சிகிட்டே இருக்கணும் இதயா. நீ அழுதா எனக்கு தாங்கலை.” அவள் கண்களை துடைத்துக் கொண்டே அவள் கேலியை சாமர்த்தியசாலித்தனமாக ஒதுக்கினான்.

புரிந்தாலும், அவன் செயல் அவளுக்கு இதமாகத்தான் இருந்தது. ஏற்றுக்கொள்ளத்தான் மனமில்லை.

“கொஞ்ச நாளைக்கு இப்படி இருப்போம். சரிப்பட்டு வரலைனா, அப்புறம் யோசிப்போம்.” அவன் கூற, அவள் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

“இல்லாத மூளையை ஏன் கசக்கி பிழியுற?” அவன் கேலி பேச, அவள் புன்னகைத்து கொண்டாள்.

“இனி சண்டை போடாத. ஃபிரெண்ட்ஸ்” அவன் நட்புக்கரம் நீட்டினான்.

“நீ அப்பப்ப ரொமான்ஸ் பண்றேன்னு, என் உசிரை எடுக்க கூடாது. நோ  ரொமான்ஸ்… நோ சண்டை…” அவள் தன் சட்டதிட்டங்களோடு கைகளை நீட்டினாள்.

“ஏன் இதயா, என்கிட்டே மயங்கிருவோம்முனு பயமா இருக்கா?” அவன் கண்சிமிட்ட, தன் கைகளை உருவிக் கொள்ள முயற்சித்து, அவனை எரித்துவிடுவது போல் பார்த்தாள்.

“நோ வைலென்ஸ்… நோ ரொமான்ஸ்…” அவன் பற்றி இருந்த அவள் கைகளை விடாமல் சமரசம் பேசினான். 

அவன் கைகளோ, இனி என்றும் உன்னை விடுவதில்லை என்பது போல் அவள் பூ போன்ற கைகளை பற்றிக்கொண்டு, அந்த சுகத்தை அனுபவித்தது.

அவன் வார்த்தைகளுக்கும், அவன் செயலுக்கும், சிந்தைக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை என்று அவன் மனமோ, காதலோடு துள்ளாட்டம் போட ஆரம்பித்தது.

அவள் இதுவே போதும் என்பது போல் உறங்கிவிட்டாள். அவன், இப்போதைக்கு இது போதும் என்று உறங்க முயற்சித்தான்.

‘நோ வைலென்ஸ்… நோ ரொமான்ஸ்… நோ சண்டை…’ அவர்கள் தீர்மானம் நிறைவேறியது.

 பாவம் அவர்கள் அறியவில்லை, கணவன் மனைவிக்கு இடையில் வரும் சண்டையை அந்த இறைவனே நினைத்தாலும் தடுக்க முடியாது என்றும்! காதலும், ஊடலும் தீர்மானத்திற்கு கட்டுப்பட கூடியவை அல்ல என்றும்!

மார்ச் மாதம் ஆரம்பித்த லாக்டவுன் ஏப்ரல் மாதத்தை தொட்டிருந்தது. தீர்மானித்தின் படி, இருவரும் அத்தனை சண்டையிட்டு கொள்ளவில்லை. ஏற்ற இறக்கம் இல்லாமல் அவர்கள் நாட்கள் நகர ஆரம்பித்திருந்தது.

    அஜய், தியாவின் சகோதர பாசம் சற்று அளவுக்கு அதிகமாவே வளர்ந்திருந்தது. வெளியே செல்ல வழி இல்லை. விளையாடுவதற்கு வேறு நண்பர்கள் இல்லை. சண்டையோ, சமாதானமோ அவர்கள் இருவரே அவர்களுக்கு துணை என்பது போல் நெருங்கிவிட்டனர்.

        அஜய் இதயாவிடம் இயல்பாக பேச ஆரம்பித்திருந்தான். ‘அம்மா’ என்று கட்டி கொஞ்சினான் என்று சொல்ல முடியாது. ஆனால், முன்பை விட சற்று நெருங்கியிருந்தான் உரிமையோடு. இதயாவும், அவனை வற்புறுத்தவில்லை. ஆனால், இயல்பாக அவனை அவள் பக்கம் ஈர்த்து கொண்டிருந்தாள். தாய்மையின் பரிவோடு!

    தியா, விஷ்வாவிடம் பகைமை பாராட்டவில்லை. அஜயின் தந்தை என்ற விதத்தில் அவனை நிறுத்தி இருந்தாள். தியாவிடம் நெருங்கும் வழி தெரியாமல் விஷ்வா சற்று தடுமாறி கொண்டிருந்தான்.

பலவிதமான எலி பொறி வைத்தும் எலி இன்னும் அகப்படவில்லை. “கிரீச்… கிரீச்…” என்ற சத்தத்தோடு அதன் சேட்டையை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.  

     வீட்டின் நிலை சற்று சுகமாக இருந்தாலும், உலகத்தின் நிலை சற்று பரிதாபமாக இருந்தது.

  கொரோனா, அதன் ருத்திர தாண்டவத்தை காட்டிக்கொண்டிருந்தது. இத்தாலியில் மக்கள் பரிதாபமாக உயிரிழந்து கொண்டிருந்தனர். அதனை தொடர்ந்து அமெரிக்காவிலும், கொரோனாவால் பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை விறுவிறு என்று கூடி கொண்டிருந்தது.

      நியூயார்க்கில் மக்கள் குவியல் குவியலாக உயிரை இழந்து கொண்டிருந்தனர். இந்தியாவில், லாக்டவுன் அறிவித்திருந்தாலும் மக்களிடம் அத்தனை பயம் இல்லை.

அன்று காலை, “விஷ்வா, அத்தைக்கு அறிவில்லை? தெரு கோவில் திறந்திருக்குன்னு, அங்க போய் நாலு பேரா சேர்ந்து ஃபோட்டோ வேற போட்டிருக்காங்க” எகிறிக்கொண்டு வந்தாள்.

அவள் ‘அத்தை’ என்ற அழைப்பில், அவன் முகத்தில் புன்னகை. அவன் புன்னகையில் சுதாரித்து கொண்டு, “உன் அம்மா…” தடுமாறினாள் இதயா.

“நீ மாறலை இதயா” அவன் உணர்ச்சி பொங்க கூற, “யாரும் கெட்டு போகணும்னு நான் நினைச்சதில்லை. அது மட்டுமில்லை, உங்க அம்மாவுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை? எனக்கு வருத்தம் மட்டும் தான்” அவள்  நிறுத்தினாள்.

அவன் அமைதி காக்க, “அவங்களுக்கு கோபம். நான் உன் கூட வாழலைங்கறது தான் அவங்க பிரச்சனை. எப்படி பார்த்தாலும், பிரச்சனை நமக்குள்ள தானே? அவங்க கோபத்தில் நியாயம் இருக்கு. அதே நேரத்துல்ல, அவங்க என் பக்கம் இல்லையே. அதனால் எனக்கு வருத்தம். என் வருத்தத்திலும் நியாயம் இருக்கு.”

தன்னையும் மீறி, மனம் திறந்து பேசும் மனைவியை பார்த்து கொண்டிருந்தான் விஷ்வா.   “படபடன்னு பேசுவங்களே தவிர, அவங்க மனசில் சிலரை மாதிரி…” முடிக்காமல் அவனை பார்த்தாள் இதயா.

அவர்கள் சட்டத்திட்டத்தை முன்னிட்டு, அவள் சண்டையை வளர்க்காமல் நிறுத்த, “தீர்மானம்?” அவன் கேள்வியாக சிரித்தான்.

அவளும் புன்னகையோடு விலக, “நான் அம்மா கிட்ட பேசுறேன்…” அவன் தலை அசைத்து கொண்டான். அவன் கேசமும் அலையலையாக அசைந்து அவளை ஈர்த்தது.

தன்னை மீட்டு கொண்டு, “அம்மா, அப்பாவும் சொன்னதையே கேட்க மாட்டேன்றாங்க” அவள் வருந்தினாள்.

“இதயா, அது தான் அங்க நரேன் இருக்கானே. நீ ஏன் இவ்வளவு கவலைப்படுற?” விஷ்வா கூற, ‘நரேன்’ என்ற பெயரில் அவனை திடுக்கிட்டு பார்த்தாள் இதயா.

‘நரேன் அங்கு வந்தது இவனுக்கு எப்படி தெரியும்? நரேனை இவன் சந்தித்தானா?’ என்ற கேள்வி இதயாவின் மனதில்.

‘நரேனை, பார்த்ததையும் பேசியதையும் சொல்லுவோமா? நான் எப்படி இவளை இத்தனை வருஷங்கள் கழிச்சி தேடி வந்தேன்னும் சொல்லணும். இப்ப தான் எல்லாம் சுமுகமா போயிட்டு இருக்கு. இந்த விஷயத்தை சொன்னா ஆடிருவா.’ என்ற தொடர் எண்ணம் தோன்ற, தன் வாயை இறுக மூடிக்கொண்டான்.

அங்கு நிசப்தம் நிலவ, அதை கலைக்கும் விதமா, “அம்மா” என்று அழைத்து கொண்டு வந்தாள் தியா. 

“அம்மா, டெக்வாண்டோ ஆன்லைன் கிளாஸ் இருக்குன்னு சொன்னீங்களே. என் எல்லோ பெல்ட் எங்க?” அவள் கேட்க, தன் மகளோடு சென்றாள் இதயா.

அமெரிக்காவில் லாக்டவுன் தான் நிலைமை என்று தீர்மானமாக, நியூயார்க்கின் நிலைமை பீதியை கிளப்பினாலும், மக்கள் இயல்பு வாழ்க்கையை மீட்டுக்கொள்ளவே முயற்சித்தனர்.

 அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் வகுப்பைகளை தொடங்கிவிட்டது.

வெள்ளை பண்ட் ஷர்ட், இடுப்பில் மஞ்சள் நிற பெல்ட்டோடும் களத்தில் இறங்கிவிட்டாள் தியா.  

“மூடோ, ஜுன்பி…” என்ற குரலோடு வகுப்பு ஆரம்பித்துவிட்டது.

மடிக்கணினி முன் கைகளையும், கால்களையும் தூக்கி மடித்து, குட்டி சிங்கம் போல் செயல்பட தொடங்கினாள் தியா.

“சமனும்… கோ… குமனம்… குங்க்யே…” என்ற சத்தத்தோடு, தியாவின் செயல்களை தன்னை மறந்து பார்த்து கொண்டிருந்தான் விஷ்வா.

தன் தங்கையின் வேகத்தில் மிரண்டு விழித்த அஜய், தன் தந்தையின் காதுகளில், “நானும் இந்த கிளாஸ் போகணும்” என்று ஆசையோடு கேட்டான்.

‘அஜய் என்ன கேட்டிருப்பான்’ என்று ஊகித்துவிட்ட இதயா, “நீ இந்த வருஷம் தானே இங்க வந்திருக்க, அது தான் உனக்கு புதுசா இருக்கு. இது ரொம்ப ஈஸி. நான் உன்னை சேர்த்து விடுறேன்.” அவள் கூற, அஜய் ஆர்வமாக தலை அசைத்து கொண்டான்.

தியாவின் வகுப்பு முடிந்ததும், “இதை ஏன் கத்துக்குற தியா?” விஷ்வா கேட்க, தன் மகள் கூறிய பதிலில், ‘விஷ்வா வருத்தபடுவானோ?’ என்று இதயா பதறிவிட்டாள். அவள் சமயோஜிதமான பதிலில் விஷ்வா ஸ்தம்பித்து நின்றான்.

 இதயம் நனையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!