jeevanathiyaaga_nee – 14

jeevanathiyaaga_nee – 14
ஜீவநதியாக நீ…
அத்தியாயம் – 14
ஜீவா வேலை தேடி பல இடங்களில் அலைந்தான். அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. ‘நோ வேகன்ஸி’ என்ற பலகைகளும், ‘இங்கு வேலை காலி இல்லை’ என்ற பலகைகளும் தான் தொங்கின.
கணினி பல இடங்களில் அதன் ஆக்கிரமிப்பை நன்றாக பிடித்து கொள்ள ஆரம்பித்த காலம். அதனால், வேலையில் இருந்தவர்களே, வேலையை இழந்து கொண்டிருந்தார்கள். கணினியில் வேலை பார்க்க தேவையானவற்றை கற்று கொண்ட திறமை கொண்டவர்கள் நல்ல வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.
அப்படி சட்டென்று படிக்க, ஜீவாவிடம் பண வசதி இல்லை. இருந்தாலும், அவன் திறமையால் சில அலுவலகத்திற்கு நேர்முகத்தேர்வு வரை சென்றான். ஆனால், பல இடங்களில் பணமென்னும் முதலை விளையாடியது. அதன் பின், ‘சிபாரிசு கடிதம்…’ என்ற சொல் அவனை தாக்கியது. ‘முன் அனுபவம்…’ என்று கேட்டார்கள். பல இடங்களில் பொறுமையாக பதில் சொன்னான் ஜீவா. ஒரு கட்டத்திற்கு மேல், கடுப்பானவன், “யாராவது வேலை கொடுத்தால் தானே முன் அனுபவம் இருக்கும்” என்று சீறினான்.
இதை எல்லாம் தாண்டி அவனுக்கு வேலை கிடைத்தாலும், ரவி அதை நேர்த்தியாக தட்டிவிட்டான்.
இப்படி சில நாட்கள் கடந்து செல்ல, அன்று முழுவதும் எங்கெங்கோ அலைந்து திரிந்த ஜீவா, அன்றைய மாலைப் பொழுதில் மெட்ராஸ் வள்ளுவர் கோட்டம் தேநீர் கடை அருகே நின்று கொண்டிருந்தான். அந்த பரபரப்பான சாலையைப் பார்த்தான். ‘வாழ வைக்கும் மெட்ராஸ்’ அவன் கேள்விப்பட்டது அவன் காதில் இப்பொழுதும் ஒலித்தது. தன் நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டான்.
‘கோடீஸ்வரனாக வாழலாம். பணக்காரனாக வாழலாம். மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினராக வாழலாம். நடுத்தர வர்க்கத்தினராக வாழலாம். இன்னும் சிக்கனமாக வாழலாம். தள்ளு வண்டியில் பிழைப்பு நடத்தி வாழாலாம்.’ அவன் சிந்தனை பல வாழலாம் என்ற நம்பிக்கை நிறைந்த எண்ணத்தோடு வேகமாக ஓடியது.
‘ ஆனால், என்னால் வேலை வாங்க முடியலை. என்னால் வாழ முடியலையே.’ காலையிலிருந்து அலைந்த அவன் உடல் சோர்வு அவனை களைப்படைய செய்தது. ‘நண்பர்கள் கொடுத்த பணம் காலியாகிடுச்சு. நான் வேலைக்கு போய் சம்பாதிச்சா தான், அடுத்த மாசம் சாப்பாடு. நான் தப்பு பண்ணறேன். இந்த வேலை தான் வேண்டும் என்று தேடாமல், கிடைத்த வேலையை பார்க்க வேண்டும் போல. என் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காது. ஒரு ஆபிசில் எனக்கு உடனே வேலை கிடைக்காது. நான் எங்கள் வாழ்வுக்கு முதலில் பணம் சம்பாதிக்க வேண்டும்.’ அவன் மூளையோடு அவன் வயிறும் உரக்க சத்தம் எழுப்ப அவன் தன் வயிற்றை தடவினான்.
பசி வயிற்றை கிள்ளியது. ‘ஒரு டீ குடிச்சா நல்லாருக்கும்.’ தன் சட்டை பையை தடவினான். கொஞ்சம் சில்லறை இருந்தது. ‘ஆனால், இதில் தாரிணிக்கு ஏதாவது வாங்க வேண்டியது வரலாம். அவசர தேவைக்கு பணம் வேண்டும்.’ அவன் யோசனையோடு சாலையை கடக்க, எதிரே வந்த ஆட்டோ சட்டென்று நின்றது.
“யோவ், சாவுகிராக்கி… வேற வண்டி கிடைக்கல. அந்தாண்ட விழுந்து சாவ வேண்டியது தானே?” என்று திட்டிவிட்டு ஆட்டோகாரன் வண்டியை வேறு பக்கம் திருப்பினான். தன் வயிற்றை பிடித்துக்கொண்டு, அந்த தேநீர் கடை பெஞ்சில் அமர்ந்தான் ஜீவா.
“இன்னா வயிறு நோவுதா?” தேநீர் கடைக்காரர் கேட்க, அவன் அவரை பார்த்தான். பதில் பேசவில்லை. “இப்படி பேசாம இந்தாண்ட குந்திக்கினு இருந்தா இன்னா அர்த்தம்?” அவர் கேட்க, அவன் எழ முயற்சித்து தோற்று போனான். காலையில் சாப்பிட்டது. வேகாத வெயிலில் நாள் முழுக்க, வேலை தேடி களைத்து போயிருந்தான். “பன், டீ தரேன். துட்டு இருக்கா?” அவர் கேட்க, அவன் ‘வேண்டாம்…’ என்பது போல் தலை அசைத்தான்.
“இன்னைக்கு கடை பையன் லீவு போட்டுட்டான். வேலையே முடிய மாட்டேங்குது. ஒரே பேஜாரா இருக்கு. நீ எல்லாம் டீ கிளாசையும் கழுவறியா? நான் உனக்கு துட்டு தரேன்” அவர் கேட்க, ‘நான் மாஸ்டர் டிக்ரீ வாங்கினவன். காத்திருந்தால் கவர்ன்மெண்ட் வேலை கிடைக்கும். குறைந்த பட்சம் ஒரு பிரைவேட் வேலையாவது கிடைக்கும்’ அவன் அறிவு விழித்துக்கொண்டது.
‘தற்போதைய தேவை வேலை. அதை விட அதீத தேவை பணம்.’ சட்டென்று வேலை செய்ய தேநீர் கடைக்குள் சென்றான். “இரு… இரு… இன்னா இம்புட்டு அவசரக்காரனா இருக்க? சோந்து போய் கிடக்க. டீயும் பன்னும் துன்னு” அவர் கொடுத்ததை சாப்பிட்டுவிட்டு அவருக்கு உதவினான் ஜீவா. அவனுக்கு அவர் தினக்கூலியாக கொஞ்சம் பணமும் கொடுக்க, அதை சந்தோஷமாக வாங்கி கொண்டான். இன்று பணம் கிடைத்தது அவனுக்கு மகிழ்ச்சியே. நேர்மையாக செய்த வேலையில் வந்த பணம். அவனுள் அந்த நிம்மதி.
‘இது நிரந்திர தீர்வு இல்லை.’ என்று அவனுக்கு தெரிந்தாலும், தற்காலிகமாக பணம் கிடைத்த சந்தோஷத்தில் வீட்டை நோக்கி பேருந்தில் ஏறினான் ஜீவா.
“ரோஜா… ரோஜா…
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில்
என்னைவிட்டு வீடுவந்தேன்
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்
அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன்
உனை வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
ரோஜா… ரோஜா… ரோஜா… ரோஜா…”
அப்பொழுது திரைஅரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த படத்தின் பாடல் பேருந்தில் ஒலிக்க, அவன் மனதை தாரிணி ஆட்கொண்டாள். ‘பார்க்கும் பொழுதெல்லாம், தாரிணி சொல்லுவா. காதலிக்கு ரோஜா பூ வாங்கி கொடுக்கலாம் அப்படின்னு. எனக்கு ரசனையோடு காதலிக்கவும் தெரியாது. பரிசுகளும் வாங்கி கொடுக்க தெரியாது. நான் பேசுறதெல்லாம் தத்துவம். ஆனால், தாரிணி எப்படி என்னை காதலிச்சா? நான் அவ கிட்ட பெருசா ரசனையா எல்லாம் பேசினது கிடையாது. எனக்கும் தாரிணியை எப்படி பிடித்தது?’ அவன் தன் நெஞ்சை தடவிக்கொண்டான்.
‘எப்படின்னு தெரியலை? ஆனால், என் வீட்டை தாண்டி, அவளை கல்யாணம் பண்ணுமளவுக்கு பிடித்து போனது.’ அவன் முகத்தில் புன்னகை அரும்பியது. அவன் நிறுத்தம் வரவும், இறங்கி நடந்தான். அங்கு பூக்கடை இருக்க, தாரிணி கூறுவதும் நினைவு வர, இன்று கையில் காசும் இருக்க, அவன் பூக்கடை நோக்கி நடந்தான்.
வானத்தில் இருள் கவ்வி இருந்தது. “பொஞ்சாதிக்கு பூவா? மல்லி பூ வாங்கிட்டு போ” பூக்காரி வியாபாரத்தில் இறங்க, ஜீவாவுக்கு சிரிப்பு வந்தது. ‘மல்லி பூவெல்லாம் வாங்கிட்டு போக காலம் இருக்கு’ தனக்குள் கூறிக்கொண்டு, “ஒரு ரோஜா பூ கொடுங்க அக்கா. சிவப்பு ரோஜாவா குடுங்க” தாரிணி சிவப்பு ரோஜாவை விரும்புவதை அறிந்தவன், அதை வாங்கி கொண்டான். தாரிணி அவனுக்காக காத்திருந்தாள். அவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவள் கண்களில் மின்னல்.
“ஜீவா…” அவள் தண்ணீரை நீட்டினாள். அதை வாங்கி பருகியவன், வாங்கி வந்த ரோஜா பூவை மேஜையின் மீது வைத்துவிட்டு குளிக்க சென்றான். அவள் கண்களும் அந்த ரோஜாப்பூவின் மீது சென்று மீண்டது. ‘என்ன இன்னைக்கு பூ வாங்கிட்டு வந்திருக்காங்க? வேலை கிடைச்சிருச்சோ?’ அவள் சிந்தித்தபடி, அவனுக்கு உணவு எடுத்து வந்தாள்.
ஜீவா குளித்துவிட்டு வந்து அமர, “ஜீவா, நீ மதியமும் சாப்பிடுறதில்லை. ராத்திரியும் நேரம் கழித்து தான் வர்ற. உன் உடம்பு என்னத்துக்கு ஆகுறது? என் மேல உனக்கு அக்கறை இருக்கிற மாதிரி, உன் மேல எனக்கும் அக்கறை இருக்கில்ல?” அவள் சற்று கோபமாக கேட்க, அவன் சிரித்தபடி அவள் கைகளை பிடித்து இழுத்தான்.
“சாப்பிடுவோம் தாரிணி” அவள் கேள்விக்கு பதில் கூறாமல் அவன் மழுப்பினான். அவர்கள் உணவை முடித்ததும், அவளிடம் ரோஜாவை நீட்டினான். அவள் புன்னகையோடு அவனை பார்த்தாள். “எனக்கு உன்னை மாதிரி காதலை எல்லாம் சொல்ல தெரியாது.” அவன் நேரடியாக கூற, “லவ் யூ ஜீவா” அவள் மனமுவந்து கூறினாள்.
“இதுவரை நான் உனக்கு பெருசா பரிசு எதுவும் வாங்கி கொடுத்ததில்லை.” அவன் கூற, “எனக்கு நீ இருக்கன்னு நம்பிக்கை கொடுத்திருக்க ஜீவா. எனக்கு நல்ல வாழ்க்கையும் கொடுத்திருக்க ஜீவா” அவன் மேல் உரிமையாக சாய்ந்து கொண்டு அவள் கூற, “இல்லை தாரிணி. இது நம்ம வாழ்க்கை இல்லை. நாம்ம இதுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு வரலை.” அவன் அழுத்தமாக கூற, அவள் தலை அசைத்துக் கொண்டாள்.
அவளை திருப்பி, அவள் கூந்தலில் பூவை சொருகினான். அவள் கூந்தல் வாசம் அவனை ஈர்க்க, ‘பொஞ்சாதிக்கு மல்லிப் பூ வாங்கிட்டு போ’ பூக்காரி சொன்னது அவனுக்கு நினைவு வர, அவள் கூந்தலை ரசனையோடு தீண்டினான். “மல்லிப்பூ வச்சா இன்னும் நல்லாருக்குமில்லை?” அவன் மூச்சு காற்று அவளை தீண்ட, அவன் குரலும் அவள் செவியை தீண்டியது. அவன் ரசனையில் அவள் சிரித்துக்கொண்டாள். “ஏன், ரோஜா பூ நல்லா இல்லையா?” அவள் விலகி செல்ல எத்தனித்து கேட்க, அவன் அவளை தன் அருகாமையில் அமர வைத்தான்.
அவன் சுவரில் சாய்ந்து அமர்ந்திருக்க, அவள் அவன் கைவளைவுக்குள் அமர்ந்து கொண்டாள். “நல்லாருக்கு தாரிணி” அவன் கூற, அவன் குரல் சோர்வை காட்டியது. ‘கேட்கவா? வேண்டாமா?’ என்ற சிந்தனையோடு அவன் முகத்தை பார்த்துவிட்டு மீண்டும் மீண்டும் தாரிணி திரும்பிக்கொள்ள, “என்ன வேணும் தாரிணி? கேளு” அவன் சற்று அழுத்தமாக கூறினான்.
“வேலை…” அவள் இழுக்க, “இன்னும் கிடைக்கலை தாரிணி” அவன் அவள் தடுமாற்றத்தை புரிந்து கொண்டு முந்திக்கொண்டான். “என்ன திடீருன்னு பூ…” அவள் நிறுத்த, அவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தினான். “என்ன பூ?” அவன் கண்களில் இப்பொழுது கேலி. “ம்… என்னை கேலி செய்யற ஜீவா” அவள் அவன் கைகளில் குத்த, அவன் இப்பொழுது பெருங்குரலில் சிரித்தான்.
அவள் அவசரமாக அவன் வாயை மூடினாள். “இப்படி சத்தமா சிரிக்காதீங்க. நெருக்கநெருக்கமான வீடு. பக்கத்துக்கு வீட்டுக்கே கேட்டிரும்” அவள் கூற, அவன் கண்கள் அவளை பரிவோடு பார்த்தது. “நான், உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தறேனோ? இந்த இடம் உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கா?” அவள் கைகளை தன் கைகளுக்குள் பொதித்து கொண்டு, அவன் அக்கறையோடு கேட்டான்.
“சின்ன இடம் தான். வசதி கம்மி தான். ஆனால், சுத்தி இருக்கிறவங்க எல்லாம் ரொம்ப அன்பா இருக்காங்க. இப்படியேவா இருக்க போறோம். எல்லாம் சீக்கிரம் மாறிடும்.” அவள் கூற, அவன் அவள் தலை கோதினான். “என்ன திடீருன்னு பூ?” அவள் அதில் குறியாக நிற்க, “இன்னைக்கு ஒரு நாளைக்கு ஒரு வேலை. கொஞ்சம் பணம். அதில் உனக்கு ஏதாவது வாங்கணும்னு தோணுச்சு.” அவன் பேச, அவள் அவனை இடைமறித்தாள்.
“என்ன வேலை?” அவள் கண்கள் கூர்மை பெற, “நான் தப்பான வழிக்கு போக மாட்டேன். தப்பான எந்த வேலையும் செய்ய மாட்டேன்.” அவள் வருந்த கூடாது என்று தான் செய்த வேலையை மறைத்து, குரலில் அழுத்தத்தை கூட்டினான். “என் ஜீவாவை எனக்கு தெரியும்” அவள் குரலிலும் அழுத்தம் இருந்தது. “ஆனால்…” அவள் மீண்டும் தொடங்க. “எனக்கு இன்னும் வேலை கிடைக்கலை தாரிணி. ஆனால், சீக்கிரம் கிடைச்சுடும்.” அவன் கூற, “அது வரைக்கும் நான் ஏதாவது வேலை செய்யட்டுமா?” அவள் அவன் கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்துக்கொண்டு கேட்க, அவன் உடல் இறுகியது.
“எதுக்கு?” அவன் கொஞ்சம் குரலை உயர்த்தினான். “வேற எதுக்கு. உங்களுக்கு வேலை கிடைக்குற வரைக்கும், உதவியா இருக்கும். நமக்கு அடுத்த மாசம் காசு வேணுமில்லை? எனக்கும் சும்மா இருக்க ரொம்ப போர் அடிக்குது ஜீவா. நீ காலையில் போயிட்டு இராத்திரி தான் வர்ற” அவள் கெஞ்சுதலாக கேட்க, “அதெல்லாம் வேண்டாம் தாரிணி” அவன் மறுப்பு தெரிவித்தான்.
“அதில்லை ஜீவா…” அவள் ஆரம்பிக்க, “வேண்டாமுன்னு சொல்றேன்னில்லை?” அவன் கோபமாக பேசினான். “ஏன் வேண்டாம்? நமக்கு இப்ப வேலை வேணும். அதை நீ செய்தால் என்ன? நான் செய்தால் என்ன? எனக்கு ஹிந்தி தெரியும். தையல் தெரியும். கைப்பொருள் செய்ய தெரியும். நான் வீட்டிலிருந்தே கிளாஸ் எடுக்கறேன். நமக்கும் ஒரு வருமானம்.” அவளும் குரலை உயர்த்தினாள்.
“தாரிணி, இந்த பேச்சை இத்தோட விடு. நான் வேண்டாமுன்னு சொன்னால் அதில் ஒரு காரணம் இருக்கும். நீ வேலைக்கு போக வேண்டாம்” அவன் கூற, ” அப்படி என்ன காரணம் ஜீவா?” அவள் கேட்க, “எனக்கு வேலையே கிடைக்காதுனு சொல்றியா தாரிணி?” அவன் அவள் கேள்விக்கு பதில் கூற விரும்பாமல், பேச்சின் போக்கை திருப்பினான்.
“ஜீவா, உன் பாரதியார் பாட்டு, பாவேந்தர் கொள்கை எல்லாம் பேச்சோடு தான் இல்லையா? உன் மனைவின்னு வரும் பொழுது நீ ஒரு பழமைவாதி தான். உனக்கும், என் அண்ணனுக்கும், என் அப்பாவுக்கும் என்ன வித்தியாசம்? என் படிப்பை நிறுத்தி எனக்கு பிடிக்காதவனோட, அவங்க பிசினெஸ் வளரணும்னு என்னை கல்யாணம் பண்ண பார்த்தாங்க. நீ கல்யாணம் பண்ணி என் படிப்பை நிறுத்திட்ட. இப்ப, நான் சுதந்திரமா சம்பாதிக்க கூடாதுன்னு நினைக்குற.” கோபம் கொண்ட தாரிணி, வார்த்தைகளை தாறுமாறாக சிதறவிட்டாள். “தாரிணி…” அவன் குரல் உயர்ந்தது.
“நீ அவங்களை மாதிரி தான். நீயும் அவங்களை மாதிரி” அவள் அவனை பார்த்து அழுத்தமாக கூற, “யாரை யாரோடு ஒப்பிடற?” அவன் கைகள் ஒங்க, “பார்த்தியா, பொண்டாட்டியை அடிக்க கை ஓங்குற” அவள் உதட்டை பிதுக்க, “தாரிணி…” அவன் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு தன்மையாக அழைத்தான்.
“நீ மட்டுமில்லை இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ஆம்பிளைங்களும் ஒன்னு தான். ஊரு உலகத்துக்கு ஒரு நியாயம். ஆனால், தன் மனைவிக்கு ஒரு நியாயம்.” அவள் விம்மியபடி தன் முகத்தை தலையணைக்குள் புதைத்துக்கொள்ள, அவன் தன் மனைவியை புரியாமல் பார்த்தான்.
பக்கத்து வீட்டில் இருந்த ரேடியோவில் ஒலித்த பாடல் இவர்களுக்கு தெளிவாக கேட்டது.
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா
வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தால்
ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கத்தான் இப்போது ஆள் இல்லை
சம நீதி கேட்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும்
உங்களின் இரவுகள் விடியவில்லை…
அந்த பாடலோடு தாரிணியின் விம்மல் சத்தத்தில் ஜீவா தலையை பிடித்து கொண்டு அமர்ந்தான். ‘தாரிணி என்னை புரிந்து கொள்ளவில்லையா? கோபத்தில் பேசுகிறாளா? இல்லை, அவள் என்னை புரியாமல் பேசுகிறாளா?’ இன்றைய உடல் சோர்விலும், தாரிணி பேசிய பேச்சிலும் அவன் மனதில் ஒரு வெறுமை சூழ்ந்தது.
நதி பாயும்…