jeevanathiyaaga_nee – 22

JN_pic-712005e0

jeevanathiyaaga_nee – 22

ஜீவநதியாக நீ…  

அத்தியாயம் – 22

ஜீவாவும் தாரிணியும் அவள் பெற்றோர் வீட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர். அவன், வேண்டாம் என்று தடுத்தும், அவள் அவன் சொற்களுக்கு செவி சாய்ப்பதாக இல்லை. என்ன பேச வேண்டும் என்பதை அசைப் போட்டபடியே, தாரிணி அவன் மேல் சாய்ந்து அமர்ந்திருந்தாள். ‘என்ன பிரச்சனை வருமோ?’ என்ற ஐயத்தில் ஜீவா தாரிணியின் பெற்றோர் வீட்டின் முன் வண்டியை நிறுத்த, தாரிணி முன்னே செல்ல ஜீவா யோசனையோடு அங்கு தயங்கி நின்றான். 

தயங்கி நின்ற ஜீவாவை  கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள் தாரிணி. கீதா, ரவி இருவரும் அப்பொழுது எதேச்சலாக அவர்கள் அறையிலிருந்து படியில் இறங்கி வர,  தன் அண்ணனை பார்த்ததும் கீதாவின் காலடி சற்று நழுவ, அவள் விழ எத்தனித்தாள். ஜீவாவின் இதயமும் கால்களும் அவளை நோக்கி துடிக்க, ரவி சட்டென்று அவளை இடையோடு தாங்கி கொண்டான். அவன் முகத்தில்  பதட்டமும் அக்கறையும் ஒரு சேர வழிய, அவன் கண்களோ கீதாவை காதலோடு பார்க்க ஜீவா ரவியின் செய்கையை மனதில் குறித்துக்கொண்டான்.

ரவியின் கைகள் தன் மனைவியை முழுதாக பிடித்து அவனோடு சாய்த்து நிற்க வைக்க, உரிமையோடு கணவனாக தீண்டிய அவன் ஸ்பரிசத்திலும் சுவாசக் காற்றிலும்  கீதாவின் முகத்தில் நாணத்தின் அறிகுறியாக செம்மை படர, அவன் மனம் தன் மனைவியை ரசித்தாலும், தாரிணி ஜீவா அவர்களின் வருகையால் அவர்களை நோக்கி சென்றான் ரவி. தன் தங்கையை ரவி பார்த்துக்கொண்ட விதத்திலும், கீதாவின் முகம் காட்டிய பாவனையிலும் ஜீவா ரவி மீதிருந்த கோபத்தை முழுதாக ஒதுக்கி, ரவியை முதல் முறையாக தன் தங்கையின் கணவனாக மட்டுமே பார்க்க ஆரம்பித்தான்.

ஜீவாவை பாய்ந்து அடிக்கவே, ரவியின் தேகம் பரபரக்க, அவன் எண்ணமும் மனமும் கீதாவை மனதில் கொண்டு நிதானிக்க செய்தது. ஜீவாவை விடுத்து, இன்று அவன் தாரிணியிடம் வந்தான். “எங்க வந்த? அவனை விட்டுட்டு வந்திருந்தா உன்னை ஏத்துக்கிட்டு இருப்போம்.” ரவி வார்த்தையை முடிக்குமுன் அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள் தாரிணி. எந்தவிதமான கைகலப்பும் ஏற்பட்டுவிட கூடாது என்று கீதாவையும் சூழ்நிலையையும் கருதி ரவி நிதானிக்க, கீதா பதறிக் கொண்டு அவர்கள் அருகே வர, “நியாயமா இந்த அடி விழ வேண்டிய இடமே வேற” என்று தாரிணி கீதாவை நக்கலாக பார்த்தாள்.

“என் அண்ணன் பொண்டாட்டியா இருந்திருந்தா திருப்பி அடிச்சிருப்பேன். பகடை காயா ஒரு வாழ்க்கை. இதுல பொண்டாட்டின்னு ஒரு வேஷம்?” தாரிணி நக்கல் பேச, “தாரிணி…” என்று ஜீவாவின் குரல் அவளை  கண்டிக்க, “நான் எதுவும் தப்பா பேசலை ஜீவா. இந்த காதல் வாழ்க்கையில் என்ன சுகம்ன்னு கேட்டாங்க உன் தங்கை. வேற என்ன சுகம் வேணும் ஜீவா? பணமா, காசா? இல்லை ஊருக்குன்னு ஒரு ஜம்பம் வாழ்க்கையா? நீ தானே ஜீவா எல்லாம். எனக்குன்னு நீ இருக்கியே ஜீவா. இதை ஏன் யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க?” தாரிணி படபடக்க, இவர்கள் பேசும் சத்தம் கேட்டு, ஷண்முகம் புஷ்பவல்லி இருவரும் அவர்கள் அறையிலிருந்து ஹாலுக்கு வர, வேலையாட்கள் அவர்கள் வேலையோடு முடங்கி கொண்டனர்.

தன் தாய் தந்தையை பார்த்ததும் தாரிணியின் உள்ளத்தில் சொல்லில் வடிக்க முடியாத உணர்வுகள் வடிய, “ஏய், வெளிய போடீ…” தன் தாயின் குரலில், “அம்மா…” தாரிணி கண்களில் கண்ணீர் மல்க அழைத்தாள். “எனக்கு ஒரே பையன் மட்டும் தான். மகள் வடிவத்தில் ஒரு மருமகள். வேற யாரையும் எனக்கு தெரியாது. வெளிய போ” என்று அழுத்தமாக கூறினார் புஷ்பவல்லி.

“அம்மா…” அவள் தன் தாயின் காலில் விழுந்து கதறினாள். “அம்மா, அப்பாவுக்கும், அண்ணனுக்கும் என் நிலைமை புரியாமல் இருக்கலாம். ஆனால், உங்களுக்குமா என்  நிலைமை புரியலை அம்மா? நான் காதலிச்சது அவ்வுளவு பெரிய குத்தமா அம்மா?” அவள் விழிநீர் புஷ்பவல்லி பாதங்களை நனைக்க, அவள் தன் தாயின் முகம் பார்த்து கேட்டாள்.

“அதை மட்டும் தான் நீ செய்த தப்பு மாதிரி பேசுற?” இப்பொழுது ஷண்முகத்தில் குரல் ஏளனமாக ஒலிக்க, “அப்பா, அடுத்தடுத்த தப்பை செய்ய வைத்தது நீங்க. என் படிப்பை பாதியில் நிறுத்தி, ஒரு கேடுகெட்ட மனுஷனுக்கு என்னை கல்யாணம் பண்ண முடிவு பண்ணது நீங்க. இல்லைனா, நான் ஏன் வீட்டை விட்டு வெளிய போய், ஜீவாவை கஷ்டப்படுத்திருக்க போறேன்” தாரிணி எகிறினாள்.

“நீ செய்த தப்புக்கு நியாயம் கற்பிக்க வேண்டாம் தாரிணி. நீ போன அன்னைக்கே நீ செத்துட்ட. அந்த துக்கம் என் நெஞ்சை அடைச்சிக்கிட்டு கொஞ்சம் நாள் என்னை வாட்டி வதைச்சுது. இப்ப அந்த துக்கத்தோடு  நான் வாழ பழகிட்டேன். வாழ்ந்த ஊரில் எங்களை தலை நிமிர வைக்கலைனாலும் பரவாயில்லை. நீ எங்களை ஓடி ஒளிய வச்சிருக்க” புஷ்பவல்லி பேச, “அம்மா…” தாரிணி இப்பொழுது கதற,

“இவனோட வாழ முடியாமல் நீ இங்க வந்து கதறி எங்க காலில் விழுவன்னு தெரியும். ஆனால், இவ்வளவு சீக்கிரம் வருவன்னு நான் எதிர்பார்க்கலை” ஷண்முகம் தன் மகளை பார்த்து ஏளனமாக கூற, “நான் உங்க கிட்ட கெஞ்ச வரலை அப்பா. அம்மா கிட்ட மட்டும் தான் நான் பேசினேன். அம்மாவால் என்னை புரிஞ்சிக்க முடியும். உங்களால் ஒரு நாளும் என்னை புரிஞ்சிக்க முடியாது.” அவள் தன் தந்தை முன் கோபமாக நின்றாள்.

“அப்ப எதுக்கு இங்க வந்த?” அவர் எங்கோ பார்த்தபடி கேட்க, “என்  ஜீவா நல்லவன். நீங்களும் அண்ணனும் செய்த கேடுகெட்ட வேலை எல்லாம் என் கிட்ட ஜீவா சொல்லலை. ஆனால், எனக்கு இப்ப தெரிஞ்சு போச்சு. இனி உங்களால் ஜீவாவுக்கு ஏதாவது இடைஞ்சல் வந்தால், அப்பா, அண்ணன்னு கூட பார்க்க மாட்டேன். போலீஸ் கேஸ்ன்னு உங்களை அலைய விட்டுருவேன்.” அவள் தன் பிறந்த வீட்டை ஒற்றை விரல் உயர்த்தி மிரட்டினாள்.

“நான் உங்க வழிக்கு வரலை. ஆனால், நீங்க எங்களை கஷ்டப்படுத்திட்டீங்க. நான் ஜீவாவை மாதிரி நல்லவ கிடையாது. உங்களுக்கு பொண்ணு, ரவிக்கு தங்கைன்னா சும்மா இருக்க முடியுமா? உங்களுக்கு எதிராவே தான் எங்க வளர்ச்சி இருக்கும். உங்களுக்கு போட்டியா நாங்க வளர்ந்து நிற்போம். உங்க கிட்ட கெஞ்ச வரலை. சவால் விட வந்திருக்கேன்” அவள் பேச, “தாரிணி, எதுக்கு தேவை இல்லாத பேச்சு? வா கிளம்புவோம்” அவன் அவள் கைகளை பிடிக்க, அவன் அவள் கைகளை உதறி கீதா முன் நின்றாள்.

“என் காதல் என்ன கொடுத்திருக்குன்னு கேட்டியே? நான் வந்த வழி தப்பா இருக்கலாம். ஆனால், நான் வாழற வாழ்க்கை நிஜம். உன் புருஷன் செய்த தப்பை நேரடியா சொல்ல முடியாம எங்கோ வந்து கத்திக்கிட்டு போற அவல நிலை எனக்கில்லை. என் புருஷனை கூட்டிகிட்டு வந்து எல்லார் முன்னாடியும் சவால் விடுற தைரியத்தை கொடுத்திருக்கு என் காதல். நான் ஆசை பட்டத்தை கொடுத்திருக்கு. எனக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கு.” தாரிணி பேச, “எல்லாம் இருந்தால் சந்தோசம் தான்.” கீதா முகத்தில் அழுத்தம்.

“இல்லைன்னு சொல்லணும்முன்னா எங்க கிட்டே இப்ப பணம் காசு மட்டும் தான் இல்லை. அது வந்திற கூடாதுனு தானே அப்பாவும் அண்ணனும் கங்கணம் கட்டிக்கிட்டு அலையறாங்க. எங்க கிட்டையும் செல்வச்செழிப்பு வரும்.  அதுவும் காலத்தோட ஓட்டத்தில், எங்க உழைப்பின் வேகத்தில் வரும்.” தாரிணி கூற, கீதாவின் முகத்தில் மென்னகை. அவள் சிரிப்பை ஜீவா கண்டுகொண்டான். மறைமுகமாக தனக்கு இருந்த பிரச்சனையை தன் தங்கை நடுக்கூடத்திற்கு கொண்டு வந்து முடித்து வைத்துவிட்டாள் என்று அவனுக்கு புரிந்தது. ‘இதற்கு மேல் தாரிணியை பேச விட கூடாது.’ என்று அவன் எண்ணி அழைத்து செல்ல அவள் கைகளை பிடித்து திரும்ப எத்தனிக்க,

“நீ காதலித்தவன் நல்லவனாவே இருக்கலாம். உன் புருஷன் உனக்கு எல்லாமே செய்து தரலாம். ஆனால், உறவுகள்…” புஷ்பவல்லி ஆரம்பிக்க, “நீங்க தான் என்னை ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிடீங்களே… அப்புறம் என்ன உறவுகள்?  என் ஜீவா எனக்கு எல்லாமாகவும் இருப்பான். நான் ஜீவாவுக்கு எல்லாமாகவும் இருப்பேன்.” தாரிணி உறுதியாக அழுத்தமாக கூற, ” நானும் உறவுகளைச் சொல்லலை. இந்த காதல் திருமணத்தில், நீ இழந்ததுன்னு ஒன்னு உண்டு. அதை நாங்க இப்ப சொன்னால் உனக்கு புரியாது. வருட போக்கில் எல்லாம் மாறலாம். சில விஷயங்கள் மாறாது. காலம் உனக்கு நீ இழந்ததை உன் கண்முன் காட்டும்” வந்த கண்ணீரை அடக்கி கொண்டு, தன் மகளை மன்னிக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் அவளுக்காக மருகவும் முடியாமல் தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார் புஷ்பவல்லி.

ஜீவாவும் தாரிணியும் வீடு திரும்ப, “ஏன் தாரிணி இந்த தேவை இல்லாத வேலை?” என்று கேட்டப்படி வீட்டிற்குள் நுழைந்தான். ” தேவை இல்லாதெல்லாம் இல்லை ஜீவா. உன் வேலை எல்லாம் தட்டி விட்டுட்டாங்க. நாம அடுத்ததா செய்யப் போற விஷயத்திற்கு இடைஞ்சல் தரக்கூடாதில்லை . அதுதான் வெட்டு ஒன்னு துண்டு இரண்டுன்னு பேசிட்டு வந்துட்டேன். இனி வர யோசிப்பாங்க. பயந்து பயந்து ஓட கூடாதுனு நீ தானே ஜீவா சொல்லுவ.  நான் வெளிய எல்லாம் தைரியம் தான்.  ஆனால், எங்க அப்பா, அண்ணா முன்னாடி பேசுற தைரியம் கிடையாது, இன்னைக்கு நீ இருக்கிற தைரியத்தில் எல்லாரையும் கேள்வி கேட்டுட்டு வந்துட்டேன். அவங்க பண்ற தப்பு நமக்கு தெரியுமுன்னு தெரிஞ்ச கொஞ்சம் அடக்கி வாசிப்பாங்க.” அவள் கூற, ஜீவா எதுவும் பேசவில்லை.

தனக்கு பக்கபலமாக இருக்கும் தங்கையையும் மனைவியையும் எண்ணி புன்னகைத்துக் கொண்டான். ‘இவர்களுக்கு நான் என்ன செய்ய போகிறேன்?’ என்ற கேள்வியும் அவன் மனதைக் குடைந்தது. ‘என் வளர்ச்சி மட்டுமே, அனைவரையும் மகிழ்விக்கும்’ என்ற பதிலும் அவனுக்கு சட்டென்று உதித்தது.

இருவரும் செல்ல சீண்டல் பேச்சுகளோடும்  சின்ன சின்ன சமாதானங்களோடும் இரவு உணவு தாயார் செய்த பின், தாரிணி அவள் பாடங்களை படிக்க ஆரம்பித்தாள். ஜீவா, தன் எதிர்கால வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் திட்டமிடும் விதமாக சில வேலைகளில் ஈடுபட்டான்.

 ***

அன்றிரவு.

 கீதா ஜன்னல் வழியாக நிலவை பார்த்துக் கொண்டிருந்தாள். ‘அண்ணனுக்கு பொறுமை வந்திருக்கு. முன்ன மாதிரி இருந்தா இன்னைக்கு கோபப்பட்டிருப்பான். இப்ப போற வேலைக்கும் தொடர்ந்து போறான். கஷ்டமான வேலை தான். ஆனாலும், அண்ணன் யார்கிட்டையும் சண்டை வளர்க்கலை. நான் தாரிணி வரைக்கும் விஷயத்தை கொண்டு போனதில், இவங்களும் அண்ணா கிட்ட முன்னே மாதிரி வம்பு பண்ணலை. தாரிணி நேரடியா வீடு வரைக்கும் விஷயத்தை கொண்டு வருவான்னு எதிர்பார்த்தேன். அதுவும் நடந்திருச்சு. அத்தைக்கு என்ன தான் கோபம் இருந்தாலும் இனி அத்தை பார்த்துப்பாங்க. இனி அண்ணனை பத்தி கவலை இருக்காது. அண்ணன் வாழ்க்கையில் முன்னேற்றம் தான். ஆனால் என் வாழ்க்கை?’ அவள் யோசனையை கலைத்தது அவன் சுவாசக்காற்று.

அவள் பின்னே நின்று இருபக்கமும் ஜன்னல் கம்பிகளை பிடிக்க, அவன் முகம் அவள் கழுத்து பகுதியில் புதைய, அவன் ஸ்பரிச தீண்டலில் அவள் அசைய முற்பட்டு, அவன் நெருக்கத்தில் அசைய முடியாமல் அவள் திரும்ப எத்தனிக்க, “என்ன கீது யோசனை? அது தான் உன் அண்ணன் வாழ்க்கையை உன் திட்டப்படி பாதுகாத்துட்டியே?” அவன் அவள் செயல்களை படித்தவன் போல் கேட்க,

“நான் பாதுக்காக்கும் நிலையில் எல்லாம் என் அண்ணன் இல்லை. அவனே பார்த்துப்பான். அவன் பார்க்குற விதமே வேற மாதிரி இருக்கும். ஆனால், நான் சம்பந்தப் பட்டிருக்கிறதால் ரொம்ப மென்மையா தன்மையா கையாளுறான். அதனால், நான் என் அண்ணனை பத்தி யோசிக்கலை” கீதா கூற, “அப்ப என்ன யோசனை?” அவன் அவளை தன் பக்கம் திருப்பி, அவள் முகம் உயர்த்தி அவள் கண்களை பார்த்துக் கேட்டான்.

“என் வாழ்க்கை?” என்றாள் அவள், அவன் முகம் பார்த்து.  ரவியின் முகத்தில் சிந்தனை ரேகைகள். “என்னை கல்யாணம் செய்து நீங்க ஏழை வீட்டோட சம்பந்தம் வச்சீப்பீங்க. என் அண்ணன் மேல தான் தவறுன்னு இந்த உலகத்தை நம்ப வைக்கனுமுனு நினைச்சீங்க. உங்க காரியம் வெற்றி தான். என் அண்ணனை எங்க குடும்பத்திலிருந்து முழுசா பிரிக்கனுமுனு நினைசீங்க அதுவும் நடந்திருச்சு. ஆக அங்கையும் உங்களுக்கு வெற்றி தான். ஆனால், பகடை காயாக ஊர் ஜம்பத்திற்கு…” அவள் இதழ்களை தன் ஆள் காட்டி விரலால் மூடினான் ரவி.

“தாரிணி சொன்னதை யோசிச்சிட்டு இருக்கியா?” அவன் குரலில் வலி இருக்க, “யாரோ சொல்லி கேட்க, நான் எடுப்பார் கைப்பிள்ளை இல்லை. உண்மையை சொல்லித்தானே ஆகணும்?” அவள் புருவம் உயர்த்த, அவன் அவள் புருவத்தை நீவினான். “கீது, உனக்கு என்னை பிடிக்கலையா?” என்று அவன் கேட்க, அவள் சிரித்து கொண்டாள்.  “எதுக்கு கீது சிரிக்கிற?” அவன் கேட்க, “பிடிக்கலைன்னு சொன்னால் எப்படி இருக்குமுன்னு யோசிச்சேன் சிரித்தேன்” அவள் கூற, அவன் இப்பொழுது தன் ஆள் காட்டி விரலால் அவள் இதழை தீண்டி, “இதுக்கு கொழுப்பு ரொம்ப அதிகம். ரொம்ப பொய் பேசுதுன்னு நான் சொல்லுவேன்” அவன் அவள் இதழுக்கு பரிசளித்து கண்சிமிட்டினான்.

“விரும்பியது கிடைக்கலைனா, வேற வழி இல்லை. கிடைத்ததை விரும்புன்னு சொல்லுவாங்க.   நீங்க அப்படித்தான். என் அண்ணனை பழிதீர்க்க, உங்க குடும்ப கெளவரத்தை காப்பற்ற உங்களுக்கு நான் கிடைத்தேன். நீங்க என்னை வேற வழி இல்லாமல்…” இதை கூறும்பொழுதே அவள் முகத்தில் அவமானம் குவிய,  “கீதா…” அவன் குரலில் கண்டிப்பும், கோபமும் ஒரு சேர இருக்க, கீதா மேலும் பேசாமல் விலகி செல்ல எத்தனித்தாள்.

அவன் அவள் கைகளை அழுத்தமாக பிடித்து இழுக்க, அவள் அவன் மார்பில் மோதி விலகுகையில், அவன் அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான். “நீ அப்படித்தான் வேறு வழி இல்லாமால் என் மேல் அன்பு செலுத்தறியா கீது?” அவன் குரலில் தாபத்தோடு கேட்க, “நான் உங்கள் மேல் எந்த அன்பும் செலுத்தலை” அவள் எங்கோ பார்த்தபடி கூற,  அவன் அவள் முகத்தை நிமிர்த்த, அவள் விழிகள் அவன் கண்களின் தீட்சண்யத்தில் அசையாமல் நிற்க, அவன் சுவாசக்காற்றும் அவள் சுவாச காற்றும் தீண்ட, அவர்கள் இதழ்கள் இடைவெளியோடு பேசும் மொழி தெரியாமல் மௌனிக்க, அங்கு நிசப்தம் நிலவியது.

“கீது…” அவன் அவளை சமாதானம் செய்யும் விதம் தெரியாமல் அழைக்க, “நீங்க எந்த பொய்யும் சொல்லி என்னை சமாதானம் செய்ய வேண்டாம். நானும் எந்த பொய்யும் சொல்லி உங்களை சமாதானம் செய்ய விரும்பலை.” அவள் ஏக்கத்தோடு வாழ்வில் ஏதோவொரு ஏமாற்றத்தை சந்தித்தவள் போல் கூற, ‘நான் உன்னை காதலித்தேன். என் காதலால் தான் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொன்னேன்.’ என்று சொல்ல அவன் மனம் பரபரத்தாலும், ‘நான் இப்பொழுது சொன்னால், கீதா நம்புவாளா? அவள் நம்பாவிட்டால்?’ என்ற கேள்வி அவன் சிந்தையில் எழ, அவன் அவள் கன்னம் தொட்டு முகத்தை கைகளில் ஏந்தினான்.

“எதுவும் பொய்யில்லை. நீ என் மேல் வைத்திருக்கும் அன்பு நிஜம். நான் உன்மேல் வைத்திருக்கும் அன்பும் நிஜம் அப்படின்னு நீ உணரும் நாள் சீக்கிரம் வரும் கீதா. அப்ப, இந்த இதழ்கள் உண்மையை மட்டும் தான் பேசும்.” அவன் அவள் கன்னம் தட்டி அவர்கள் அறைக்குள் இருக்கும் தன் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டான். ‘ரவி சொல்லும் நாளும் வருமா?’ என்ற கேள்வி கீதவிற்குள்ளும் எழுந்தது.

இரு ஜோடிகளும் தங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்காக சிந்திக்க ஆரம்பித்துவிட,  காலம் இவர்கள் எண்ணத்தை ஈடேற்றுமா?

நதி பாயும்…                  

Leave a Reply

error: Content is protected !!