jeevanathiyaaga_nee-4

JN_pic-c8db2556
jeevanathiyaaga nee

ஜீவநதியாக நீ… 

அத்தியாயம் – 4

சென்னையை நோக்கி வேகம் எடுத்தது ரயில். ஜீவா உறங்கவில்லை. தாரிணிக்கும் முதலில் பதட்டத்தில் தூக்கம் வரவில்லை. நேரம் செல்ல, செல்ல ஜீவா கூறிய ஆறுதலில், அவன் தோள் சாய்ந்து தூங்க ஆரம்பித்தாள்.

ரயில் மேல்மருவத்தூர் வந்திருந்தது. ஜீவா, தாரிணியை எழுப்பினான். இன்னும் விடிந்திருக்கவில்லை. “சென்னை வந்திருச்சா ஜீவா?” அவள் பதட்டமாக கேட்க, “இறங்கு பேசுவோம்.” அவன் தன் கையிலிருந்த பையையும், அவளிடமிருந்த சின்ன பையையும் தூக்கி கொண்டு இறங்கினான்.

இருவரும் இறங்க, “மேல்மருவத்தூர்ன்னு போட்டிருக்கு?” அவள் கேட்க, “என் நண்பன் கார் எடுத்திட்டு வந்திருப்பான். நான் நேத்தே, சொல்லி அனுப்பிட்டேன்.” ஜீவா கூற, அவள் மலங்க மலங்க விழித்தாள்.

அவன் அவளை கூட்டிக்கொண்டு வேகவேகமாக நடந்தான்.

ஜீவாவின் நண்பன் வெள்ளை நிற மாருதி சுஸுக்கியோடு காத்திருக்க, இருவரும் காரில் ஏறினர்.

தாரிணி காரின் பின்பக்கத்தில் ஏறினாள். ஜீவா தன்  நண்பனோடு முன் பக்கம் ஏறினான்.

“செங்கல்பட், தாம்பரம், மாம்பழம், எழும்பூர்ன்னு எல்லா இடத்துலயும் சிஸ்டர் வீட்டு ஆளுங்க சுத்தி வளச்சிட்டாங்க.” நண்பன் கூற, தாரிணியின் கண்களில் கலக்கம்.

தாரிணி முன் பக்க சீட்டை அழுத்தி பிடிக்க, அவள் கைகளை ஜீவா அழுத்தி பிடித்தான்.

“அது தெரிந்து தானே மேல்மருவத்தூரில் இறங்கினேன்.” அவன் அவளுக்கு ஆறுதல் அளித்து கொண்டே கூறினான்.

“கோயம்பேடுல வீடு பார்க்க சொல்லிருக்கேன். வண்டியை நேரா அங்க விடு” ஜீவா கூற, “இல்லை ஜீவா, இப்ப நாம சென்னை போறதுல நமக்கு நிறைய ஆபத்து இருக்கு. நாம இரெண்டு நாள் இந்த ஊரில் தங்கிட்டு, அங்க போகலாம்.” ஜீவாவின் நண்பன் அறிவுறுத்தினான்.

 

ஜீவாவின் நெற்றி சுருங்கியது. “என்ன யோசிக்கிற?” அவன் நண்பன் கேட்க, “எங்க கல்யாணத்தை முதலில் ரிஜிஸ்டர் பண்ணனும்” ஜீவா உறுதியாக கூறினான்.

“பண்ணலாம் ஜீவா. இரெண்டு மூணு நாள் பொறுத்துக்கோ. இந்த ஊரில் நான் கூட்டிகிட்டு போற இடம் பாதுகாப்பான இடம் தான். ஊருக்கு வெளிய இருக்கிற கிராமம். உங்களை யாரும் அங்க கண்டுபிடிக்க மாட்டாங்க.” நண்பன் கூற, காரில் மௌனம்.

“இரண்டு மூணு நாள் இங்க தங்குங்க. எப்படியும், சிஸ்டர் வீட்டில் ரெண்டு மூணு நாளில் மெட்ராஸில் இருந்து கிளம்பி ஊருக்கு போய்டுவாங்க” நண்பன் கூற, ஜீவா ஆமோதிப்பாக தலை அசைத்தான்.

“ஜீவா, எதுக்கு யோசிக்கிற? உனக்கு எவ்வளவு நண்பர்கள் இருக்கோம். அப்புறம் என்ன? உனக்கும் சிஸ்டர்க்கும் கல்யாணத்தை முடிச்சிட்டு தான் மறுவேலை” நண்பன் ஆதரவாக கூற, ஜீவா முகத்தில் மென்னகை.

அந்த மாருதி சுஸுக்கி கார் ஒரு வீட்டின் முன் நின்றது. மூவரும் காரிலிருந்து இறங்கினர். பெரிய தோட்டம். நடுவில் ஒரு குடில். பின்பக்கமாக கிணறு. அந்த இடத்தை மறைப்பது போன்ற அடர்ந்த மரங்கள்.

அந்த தனிமையும், இருளும் தாரிணிக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்த அவள் ஜீவாவை நெருங்கி நின்றாள். ‘தவறான முடிவை எடுத்துவிட்டோமா?’ என்ற ஐயம் ஒரு நொடி அவளுள் வந்தது.

தாரிணியின் தேகம் அவனை தீண்டவும், அவளின் உடல் நடுக்கும் அவள் அச்சத்தை உணர்த்த, அவன் கைகள் அவளை ஆறுதலாக சுற்றி வளைத்தது.

அவன் கைகளின் கதகதப்பை உணர்ந்த நொடி, அவள் ஐயம் மாயமாய் மறைந்தது.

“இது என் அத்தை வீடு தான். அத்தை ஊருக்கு போயிருக்காங்க. பத்திரமா இருங்க. எங்கையும் வெளிய போகாதீங்க. உள்ள ஒரு டெலிபோன் இருக்கு.” நண்பன் கூற, ஜீவா தலை அசைத்துக் கொண்டான்.

“என்ன விஷயமா இருந்தாலும், நம்ம நண்பர்கள் வீட்டுக்கு பேசு. நான் சூழ்நிலையை விசாரிச்சிட்டு வரேன். ரெண்டு மூணு நாளில் உங்க கல்யாணத்த ரிஜிஸ்டர் பண்ணிடலாம்” கூறிவிட்டு நண்பன் சென்று விட, தாரிணி சற்று ஆசுவாசமாக அமர்ந்தாள்.

 

அவள் அருகே அவன் அமர்ந்ததும், அவள் சட்டென்று விலகி செல்ல எத்தனிக்க, அவன் கைகள் அவள் இடையை சுற்றி வளைத்தது.

“எங்க போற?” அவன் அவள் நெற்றியோடு, தன் நெற்றியை மோதி கேள்வியாக நிறுத்தினான்.

“அ… அது…” அவள் தடுமாற, “சாதாரணமா கல்யாணம் முடிந்திருந்தா…” அவன் வார்த்தைகளை முடிக்காமல் அவளை கேலியாக பார்த்தான்.

அவன் பார்வையில் அவள் ஜிவ்வென்று பறந்தாள். அவள் முகத்தில் வெட்கம் சூழ, அவன் அவள் முகம் நோக்கி குனிந்தான்.

“நம்ம கல்யாணத்தை இன்னும் ரிஜிஸ்டர் பண்ணலை.” அவள் குரல் மெலிதாக ஒலித்தது. “நான் உன் கழுத்தில் தாலி கட்டி இருக்கேன்.” அவன் குரல் உரிமையோடு, அவளை தன்னோடு சேர்த்து கொண்டு ஒலித்தது.

அவன் சுவாசம், அவள் கழுத்தை தீண்டி, அவன் விரல்கள் அவள் தாலியை தீண்டி அவன் கூற்றி மெய்யென்று அழுத்தி கூறியது.

அவன் இதழ்கள், அவளை நெருங்க அவள் தன் கைகளால் முகத்தை மூடிக்கொள்ள, அவன் சிரித்து கொண்டான்.

அவள் விரல்களை விலக்கி, விரல்களின் இடுக்கில் வழியே, ‘அவனுக்கு கோபமா?’ என்று பார்த்தாள். அவன் முகத்தில் புன்னகையை கண்டதும், அவளுள் அவன் பன்மடங்காங்க உயர்ந்து நின்றான்.

அவன் தோளில் தன் கைகளை மாலையாக கோர்த்து, அவன் மார்பில் சாய்ந்து கொண்டு, “லவ் யூ ஜீவா.” என்றாள் தாரிணி மென்மையாக.

“நூறு…” என்றான் அவன். அவள் புரியாமல் நிமிர்ந்து பார்க்க, அவன் புருவத்தை உயர்த்தினான். “என்ன நூறு?” அவள் தன் தலை சரித்து கேட்க,

“நீ நூறாவது தடவை சொல்ற ‘லவ் யூ ஜீவா’ அப்படின்னு.” அவன் குரலில் பெருமிதம் கலந்த கேலி. அவன் கண்களில் சந்தோஷம்.

“எண்ணிக்கிட்டு இருக்கியா ஜீவா?” அவள் கேட்க, “…” அவன் தலை அசைத்தான்.

“நான் காலம் முழுக்க சொல்லப்போறதை உன்னால் எண்ணவே முடியாது ஜீவா.” அவள் விளையாட்டாகவே சவால் விட்டாள்.  “அதையும் பார்த்திருவோம்” அவன் அவள் செவிகளை திருகி கூறினான்.

நண்பர்கள் ஏற்படுத்தி கொடுத்த தனிமையில் அவர்கள் பொழுது, பேச்சினோடு இனிதே கழிந்தது.

*** *** ***

சென்னையில் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவின் வாயிலில்.

ஜீவாவின் தாய் மரகதம் தலைவிரி கோலமாக அமர்ந்திருந்தார். அவர் கண்களை சுற்றி கருவளையம். அழுதழுது அவர் முகம் வீங்கி இருந்தது. வேகமாக உள்ளே நுழைந்தான் ரவி.

“என்ன உங்க மகனோடு, நீங்களும் ஊரை விட்டு ஓடி வந்துடீங்களா?” அவன் கேட்க, “ஐயோ தம்பி, அப்படி எல்லாம் சொல்லாதீங்க” அவர் பதட்டமாக கூறினார்.

“என்ன பணக்கார வீட்டு பொண்ணை வளைச்சி போட்டுட்டா…” ரவி வார்த்தைகளை முடிக்கும்முன், “ஐயோ… ஐயோ… ஜீவா என்னை இப்படி எல்லாம் பேச்சை கேட்க வச்சிட்டியே.” அவர் தலையில் அடித்து கொண்டு தரையில் அமர்ந்தார்.

தன் தாயை ஓரமாக அமர வைத்துவிட்டு, ரவியின் முன் வந்து நின்றாள் கீதா.

“இது ஹாஸ்பிடல், எங்க அப்பா உடம்பு சரி இல்லாம இங்க இருக்காங்க. நீங்க தயவு செய்து வெளிய போய்டுங்க. தேவை இல்லாமல் பிரச்சனை பண்ணாதீங்க” கீதா வெளிப்பக்கமாக கைகளை நீட்டினாள்.

அவன் கண்முன்னே காதலி. அவளிடம் பேச அவன் ஒரு வருடமாக தவமிருக்கிறான். என்ன பேசுவதென்று, அவன் மூளையும், மனமும் ஒரு சேர கசங்கி பிழிந்தும் அவன் கண்டுபிடிக்க முடியாத சொற்களை அவன் இதழ்கள் இன்று கோபத்தில் சர்வசாதாரணமாக உதிர்க்க ஆரம்பித்தது.

“எது டீ தேவை இல்லாதது. என் தங்கை எங்க? குடும்பத்தோட அவளை எங்க மறைச்சு வச்சிருக்கீங்க?” அவன் காட்டமாக கேட்டான்.

“உங்க தங்கை வச்சி நாங்க என்ன பண்ண போறோம்?” கீதா சிடுசிடுத்தாள்.

“உங்க அண்ணன் அவளை எங்க இழுத்திட்டு ஓடினான்?” ரவி பற்களை நறநறக்க, “அதை ஓடி போன உங்க தங்கை கிட்ட கேட்க வேண்டியது தானே?” கீதா கடுப்பாக கேட்டாள்.

ரவி அவள் பேசிய விதத்தில் உடைந்து போனான். அவளிடம் பேசாமலே வளர்ந்த அவன் காதல் அவள் பேச ஆரம்பித்த நொடியிலிருந்து உடைய ஆரம்பித்தது.

அவன் அவள் முடியை கொத்தாக பிடித்திருந்தான். “யாரை பார்த்து என்ன சொல்ற?” ரவி காட்டமாக கேட்க, “நான் புதுசா ஒன்னும் சொல்லலை. நீங்க சொன்னதை தான் சொன்னேன். எங்க அண்ணனை சொல்லும் பொழுது இனிக்குது. உங்க தங்கையை சொன்னா வலிக்குதா?” அவள் அவன் கைகளை பிடித்து தள்ளிய படி உறுமினாள்.

“அப்படியே உங்க தங்கை ஓடினாலும், உங்களை மாதிரி ஒரு காட்டு மிராண்டியை பிடிச்சிக்கிட்டு ஓடலை. என் அண்ணனை மாதிரி ஒரு யோக்கியனை தான் நம்பி ஓடிருக்கா” அவனை வேகமாக தள்ளிவிட்டு விலகி நின்றாள் கீதா.

அவள் தள்ளிய  வேகத்தில் அவன் தேகம் வலிக்கவில்லை. ஆனால், அவள் சொல்லின் வேகத்தில் அவன் மனம் வலித்தது.

‘இவளையா நான் ரசித்து ரசித்து காதலித்தேன்? இவளிடம் பேசவா நான் வார்த்தைகள் வரமால் துடித்தேன்.’ அவன் வெறுத்து போனான்.

‘இந்த ஜென்மம் மட்டுமில்லை ஏழேழு ஜென்மத்திற்கும் நான் இவள் முகத்தில் காதலோடு விழிக்க மாட்டேன். இவள் பக்கம் காதலை யாசித்து திரும்ப மாட்டேன்.’ அவன் மனம் உறுதி எடுத்து கொண்டது.

“ஆமா, நான் அயோக்கியன் தான். உங்க யோக்கியன் அண்ணா எங்க இருக்கான்?” ரவி சீற, “எங்களுக்கு தெரியாது.” கீதா முகத்தை திருப்பிக் கொண்டு நடக்க,

“இது ஆஸ்பத்திரி. உங்க வீடில்லை” அங்க வந்த செவிலியர் சிடுசிடுத்து விட்டு சென்றார்.

கீதா அவனை கண்டுகொள்ளாமல் நடக்க, ரவி அவள் கைகளை பிடித்திருந்தான். கீதாவை சுவரோடு சாய்த்து கழுத்தை பிடித்திருந்தான்.

“உங்க யோக்கியமான அண்ணன் எங்க?” அவன் வார்த்தைகளை மீண்டும் கடித்து துப்ப, “எனக்கு தெரியாது. நீ என்னை அடித்தாலும் சரி, மிதித்தாலும் சரி, என்னை கொன்னே போட்டாலும் சரி எங்களுக்கு தெரியாது.” கீதா நிதானமாக கூறினாள்.

“ஏய், உன்னை அடிக்க வேண்டாமுன்னு பார்க்குறேன். ஆனால், நீ என் பொறுமையை சோதிக்குற. உனக்கு சாவு என் கையில் தான்.” ரவி உறும, கீதா அசட்டையாக திரும்பினாள்.

“நீங்க எதுக்கு மெட்ராஸ் வந்தீங்க?”ரவி கேட்க, “அதை நான் எதுக்கு உன் கிட்ட சொல்லணும்?” கீதா கேள்வியாக நிறுத்தினாள்.

“நீயா சொல்லிட்டா, உன் அண்ணனை உயிரோட அனுப்புவோம். நாங்க கண்டுபிடிச்சா அவனை பிணமா தான் உங்க கிட்ட அனுப்புவோம்.” ரவி தன் மீசையை முறுக்கி ஏளனமாக கூறினான்.

இப்பொழுது கீதா அவனை பார்த்து ஏளனமாக சிரித்தாள்.

 “எங்க அண்ணன் கையில்  மட்டும் நீ சிக்கினேன்னு வை. நீ தான் பிணமாகனும். உன்னால் முடிஞ்சா, எங்க அண்ணன் கிட்ட மோது. பெண் பிள்ளை கிட்ட வந்து உன் வீரத்தை காட்டிகிட்டு. ச்சீ போ” என்றாள் கீதா தென்வட்டாக.

“ஏய்!” ரவி கீதாவின் தலையை சுவரோடு மொத எத்தனிக்க,

“தம்பி, அவளை ஒன்னும் பண்ணிடாதீங்க. ஏற்கனவே, என் பையனை காணும். அவன் நண்பர்கள் மெட்ராஸில் தான் இருக்காங்க. அதனால், அவனை தேடி நாங்க குடும்பத்தோட இங்க வந்தோம். வந்த இடத்தில், அவருக்கு நெஞ்சு வலி வர இப்படி ஆஸ்பத்திரியில் இருக்கோம். என் பெண்ணை விட்டிருப்பா” மரகதம் கையெடுத்து கும்பிட்டார்.

“இந்த பாருங்க. உங்க பொண்ணை நோக்கடிக்கணும்ங்கிறது என் நோக்கமில்லை. எனக்கு என் தங்கை வேணும். நீங்க சொல்ற விஷயத்தை உங்க பொண்ணு முதல்லயே சொல்லிருந்தா, நான் கேட்டுட்டு அப்படியே போயிருப்பேன்.” கூறிவிட்டு மடமடவென்று தன் பூட்ஸ் கால்கள் சத்தம் எழுப்ப நடந்து சென்றான் ரவி.

ரவி ஷண்முகம் இருவரும் பல இடங்களில் விசாரித்தும், அவர்களால் ஜீவா தாரிணி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஜீவா வீட்டினராலும் அவன் இருக்கும் இடத்தை கணிக்க முடியவில்லை. ரவி, ஜீவா வீட்டினரை கண்காணித்து கொண்டிருந்தான். கண்காணித்தும் ஒரு பிரயோஜனம் இல்லாததால், அடுத்ததாக என்ன செய்வது என்று புரியாமல் இரு குடும்பத்தினரும் தவித்தனர்.

நதி பாயும்…