jeevanathiyaaga_nee-7

JN_pic-b071d65d

jeevanathiyaaga_nee-7

ஜீவநதியாக நீ…

அத்தியாயம் – 7

அதிகாலை பொழுது. மஞ்சள் நிறத்தில் வானம் பொலிவாக காட்சியளிக்க அதை வெறித்தபடி நின்று கொண்டிருந்தான் ஜீவா.

 அவன் நண்பர்கள் மூலமாக தன் பெற்றோர் ஊரை காலி செய்துவிட்டதாக அறிந்து கொண்ட தகவலில் அவனுக்கு சுருக்கென்று வலித்தது.

‘சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சிட்டு வீட்டுக்கு போகணும்னு பார்த்தால், இந்த கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ண இத்தனை நாள் ஆகுதே. அப்பா, அம்மாவையும் கீதாவையும் திட்டியே கொன்னுடுவாங்களே’ ஜீவா யோசனையோடு நிற்க,  

அவனை அசைத்தது மெல்லிய விசும்பல் சத்தம்.

தலையணையில் முகம் புதைத்திருக்க, தாரிணியின் முதுகு பகுதி அவள் விசும்பலை உணர்த்தும் விதமாக ஏறி ஏறி இறங்கியது.

அவன் அவளை ஆறுதலாக நீவ, “ஜீவா…” அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.

“என்ன ஆச்சு தாரிணி?” அவன் அவள் தலை கோத, “எனக்கு ரொம்ப பயமா இருக்க ஜீவா.” என்றாள் விசும்பலோடு.

” ஜீவா, உன் முகமே சரி இல்லையே. ஏதோ பிரச்சனை தானே?” அவன் நெஞ்சோரத்தில் சாய்ந்து தலை தூக்கி அவள் கேட்க,

“பிரச்சனை எல்லாம் இல்லை தாரிணி. எல்லாம் சரியா நடக்கணும் இல்லையா? நான் வீட்டில் யார் கிட்டயும் பேசலை. எல்லாரும் எப்படி இருக்காங்கன்னு தெரியலை. நம்ம கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ண இவ்வளவு நேரம் எடுக்கும்முனு நான் நினைக்கலை.” அவன் பேச,

“உங்க வீட்டில் என்னை ஏத்துப்பாங்களா?” தாரிணி கேட்க, “தெரியலை” அவன் பதில் கூற,  

“அப்ப என்ன பண்ணுவ?” அவள் விழிகளில் கவலையோடு கேட்க, அவன் அவள் விழிகளில் இதழ் பதித்தான்.

“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு ஜீவா.” அவள் சிணுங்க, அவன் இதழ்கள் அவள் கன்னத்தில் பதில் கொடுக்க,

“நீ என்ன பண்ணுவேன்னு கேட்டேன்?” அவள் கோபமாக கேட்க, “நான் என்ன பண்ணுவேன்னு நான் தான் செய்து காட்டினேனே” அவன் குறும்பாக சிரித்தான்.  

“ஜீவா…” அவன் சட்டையை கொத்தாக பிடித்து, அவள் அவனை முறைக்க, “…” அவன் உதட்டை பிதுக்கினான்.

“என்ன ஜீவா?” அவள் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு மென்மையாக கேட்டாள்.

“நீ ஜீவான்னு கூப்பிட்ட வேகத்துக்கு நான் என்னன்னவோ எதிர்பார்த்தேன்.” அவன் கண்களில் குறும்பு மின்ன காதல் பளபளத்தது.

“என்ன எதிர்பார்த்த?” அவள் விழிகள் அப்பாவியாக விரிந்தன.

அவன் உயரத்திற்கு எம்பி, அவன் கழுத்தை சுற்றி வளைத்த அவள் கரங்களுக்கு சுமை கொடுக்காமல் முன்னே சரிந்து, அவள் இடையை சுற்றி வளைத்து அவள் கழுத்தில் தன் உரிமையை நிலைநாட்டி, “என்ன எதிர்பார்த்தேன்னு சொல்லட்டுமா?” அவன் அவள் செவியோரமாக கிசுகிசுத்தான்.

அவன் தீண்டலில் அவள் தன்வசம் இழந்தாள். அவன் மூச்சுக்காற்று தேகத்தை தீண்ட அவள் தன் சுவாசத்தை மறந்தாள்.

“…” அவள் முகம் சிவந்து, அவள் வார்த்தைகள் வெட்கத்தில் சிக்கி கொள்ள, “என்ன எதிர்பார்த்தேன்னு சொல்லட்டுமா?” அவன் குரலில் காதல் வழிய புருவங்களை உயர்த்த,

“ஜீவா… என்னை எப்பவும் இப்படி நல்லா பார்த்துப்ப தானே?” அவள் ஆழமான குரலில் கேட்டாள்.

அவன் அவள் தோள்களை தொட்டு தூர நிறுத்தினான். அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான்.

“இப்படி பார்த்தா போதுமா?” அவன் கேட்க, அவள் அவன் நெஞ்சில் குத்த கையொங்க, அவள் கைகளை பிடித்து, அவளை பின்னோடு சுற்றி தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

“நெஞ்சில் என் காதலி இருக்கா… நான் அவளை வாழ்க்கை முழுக்க தங்கத்தட்டில் தாங்கணுமுன்னு நினைக்குறேன். நீ இப்படி அடிக்கிற?” அவன் அவளை பரிவோடு கண்டிக்க,

அவள் அவன் மீது சாய்ந்து கொண்டாள்.

“தாரிணி” அவன் குரல் கண்டிப்போடு ஒலித்தது.

“இனி, இப்படி சந்தேக கேள்வி எல்லாம் வர கூடாது. கொஞ்ச நேரத்தில் நம்ம கல்யாணமும் ரிஜிஸ்டர் ஆகிரும். இனி, நம்மளை யாராலும் பிரிக்க முடியாது. ஆனால், நமக்கு பலர் பல பிரச்சனைகள் கொடுக்கலாம். நம்ம காதலும், நாம ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கிற நம்பிக்கை மட்டுந்தான் நம்ம வாழ்வில் அஸ்திவாரம்” அவன் கூற, அவள் தலை அசைத்தாள்.

அவளை தன் பக்கம் திருப்பினான். தன் ஆள் காட்டி விரலால் அவள் முகத்தை தூக்கினான்.

“புரியுதா?” அவன் குரலில் எவ்வளவு அன்பும், பரிவும் இருந்ததோ அதே அளவு அழுத்தமும் கண்டிப்பும் இருந்தது.

சற்று நேரத்தில் ஜீவா தாரிணி இருவரும் நண்பர்களோடு கிளம்பினர்.

ரிஜிஸ்டர் அலுவலகம்.

கரகோஷம்… கரகோஷம்…

நண்பர்கள் முன்னிலையில் ஜீவா, தாரிணியின் திருமணம் பதிவு செய்யப்பட்டது. நண்பர்கள் முன்னிலையில் அவர்கள் இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர்.

நண்பன் ஒருவன் தன் மனைவியோடு வந்திருந்தான். அவர்கள் குங்குமத்தை நீட்ட, ஜீவா அவள் நெற்றியில் குங்குமமிட, தாரிணி கண்களில் விழிநீர் வெளிவர துடிக்க, ஜீவா மறுப்பாக தலை அசைக்க அவள் விழிமூடி தன் விழி நீரை உள்ளிழுத்துக் கொண்டாள். அவன் தான் வாழ்க்கை, அவன் சொற்கள் தான் வாழ்வு என்பது போல்!

 *** *** *** ***

அவசர அவசரமாக ஏற்பாடு செய்த  திருமணம் என்று சொல்ல முடியாதபடி, அந்த திருமண மண்டபம் கோலாகலமாக காட்சி அளித்தது.

 கெட்டிமேளம்… கெட்டிமேளம்…

 சுற்றத்தார் படை சூழ பெற்றோர் ஆசிர்வாதத்துடன் ரவி கீதா கழுத்தில் தாலி கட்டினான். அவன் தீண்டல், அவன் அருகாமை அவளை எதுவும் செய்யவில்லை. அவள் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“குங்குமம் இடுங்கோ” ஐயர் கூற, ரவி அவளை சுற்றி வளைத்து அவள் நடுவகிட்டில் குங்குமமிட, அவள் அவனின் முழு அணைப்பில் இருந்தாள்.

அவன் கதகதப்பில் அரங்கேறிய சம்பவம் புரிய, அவள் நக்கலாக சிரித்தாள்.

அவளின் விருப்பமின்மை, கோபம் அனைத்தும் அவன் அறிந்ததே. அவனுக்கும் பிடிக்கவில்லை. ஆனால், அவர்கள் இருவருக்கும் விருப்பும் வெறுப்பும் தெரிவிக்க யாரும் இடம் தரவில்லையே.

அவள் வெறித்த பார்வை… அவள் வெறுப்பை எதிர்பார்த்திருந்த அவன், அவள் சிரிப்பில் புருவத்தை உயர்த்தினான்.

“என்ன சிரிப்பு?” அவள் செவியோரம் சாய, அவள் படக்கென்று விலக எத்தனிக்க, “ம்…” அவன் கர்ஜனையில் அசையாமல் இருந்தாள்.

“மொத்த மண்டபமும் நம்மளை பார்த்துகிட்டு இருக்கு. என் அம்மா, அப்பாவும், உன் அம்மா அப்பாவும் பார்த்திட்டு இருக்காங்க. யாரும் வருத்தப்பட கூடாது. நானும் உன்னை விரும்பி கல்யாணம் செய்யலை. நம்ம இந்த ஊரை பொறுத்தவரை மனமொத்து வாழற புருஷன் பொண்டாட்டி தான்.” அவன் குரலில் ஆணை இருக்க, அவள் இப்பொழுதும் சிரித்தாள்.

அவள் சிரிப்பில் அவன் மனம் மயங்க, அதை ஒதுக்கி, “என்ன சிரிப்புன்னு கேட்டேன்?” அவன் கேள்வியோடு நிறுத்தினான்.

“கல்யாணம் கிணற்றில் விழுந்து சாகுற மாதிரி, காதல் கல்யாணம் சூசைட், நிச்சியக்கப்படுற கல்யாணம் மர்டர் … இப்படின்னு நான் பல இடத்தில படிச்சிருக்கேன். எங்க அண்ணன் கிணற்றில் விழுத்திட்டான்னு, என்னை எங்க அம்மா அப்பா கிணற்றில் தள்ளிட்டாங்க” அவள் நக்கலாக கூற,  

அவனும் சிரித்தான்.

“என்ன சிரிப்பு?” இப்பொழுது கேட்பது, அவள் முறையாயிற்று.

“கிணற்றில் கல்லை கட்டி தள்ளி விட்டா தான் தப்பு. வெளிய வர முடியாது. என் தங்கை கல்லை கட்டிக்கிட்டு இறங்கிருக்கா. அவ வெளிய வரவே முடியாது. நியாயம், கொள்கை, சட்டம்முனு வாழ்க்கைக்கு ஒத்து வராத ஒருத்தனை நம்பி குதிச்சிருக்கா” ரவி கூற, கீதாவின் பார்வை கனல் பார்வையாக மாறியது.

“ஆனால், உங்க வீட்டில், என்னை மாதிரி ஒரு கெட்டிக்காரனோடு தான் தள்ளி விட்டிருக்காங்க. இந்த உலகத்தில் பிழைக்க தெரிந்தவன். உன் பாஷையில் சொல்லணுமுன்னா இந்த கிணற்றில் நீந்த தெரிந்தவன். உன் வாழ்க்கை நல்லாருக்கும்.” அவன் அவளை விட, ஒரு படி அதிகமான நக்கலோடு கூறினான்.

பொண்ணு மாப்பிள்ளை அப்புறம் பேசிக்கலாம்.  

“மாப்பிள்ளை பொண்ணுக்கு மெட்டி போடுங்க” என்று ஒரு குரல் வர, இருவரும் எழுந்தனர்.

ரவி முன்னே செல்ல, கீதாவை அவள் உறவு முறையினர் அழைத்து வந்தனர்.

‘எனக்கு இந்த ரவியை சுத்தமா பிடிக்கலை. அதுவும் எப்பப்பாரு, அண்ணனை ஏதாவது சொல்லிகிட்டே இருக்கான். இதுல நல்லவன் மாதிரி பேச்சு வேற.’ அவள் கடுப்பாக தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

முகத்தை எங்கோ திருப்பியபடி, அவள் கால்களை அம்மி மேல் வைக்க, அவள் பெருவிரல் அம்மியை வேகமாக இடிக்க எத்தனித்தது.

மெட்டி அணிய அவள் பாதங்களை பார்த்தபடி அங்கு அமர்ந்திருந்த ரவி பதறியபடி அவள் பாதங்களை பிடித்தான். அவன் பிடியில் சட்டென்று தன் பார்வையை அங்கு திருப்பினாள் கீதா. நொடிக்குள் அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்தும் கொண்டாள்.  

இருந்தும், அவனை காண பிடிக்காமல் தன் முகத்தை வெறுப்போடு திருப்பிக்கொண்டாள் கீதா.

 அவன் மென்மையாக அவள் பாதங்களை தன் இடது கைகளில் ஏந்தினான். அவன் தீண்டலில் அவளுள் மெல்லிய நடுக்கம். அவன் விரல்கள், அவள் பாதத்தில் உரிமை கொண்டாடியது.

அவன் தீண்டலில், அவன் உரிமையில் அவளுள் மின்சாரம். அவன் தீண்டலில் அவளிடம் சொல்லில் வடிக்க முடியாத உணர்வு. ஆனால், ஏற்றுக்கொள்ள முடியாத தகிப்பு.

அவன் கண்கள் மருதாணியிட்ட அவள் பாதங்களை ரசித்தது. வழவழப்பான அவள் கால்களை தழுவிய அவள் கொலுசு அவன் கண்களை பறித்தது.

தன் வலது கையை மெட்டியோடு அவள் விரல் அருகே அவன் எடுத்து செல்ல, அவன் மனம் அவளிடம் எதையோ விழைய, அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

அவள் காட்டிய அசூயை அவனிடம் சினத்தை கிளப்ப, அவனுள் ஒரு வீராப்பு எட்டி பார்த்தது.

அவன் கைகள் அவள் பாதத்தை அழுத்தியது. அவன் தீண்டலில் தவித்த அவள் பாதங்கள், அவன் அழுத்தத்தில் மருதாணியில் சிவந்த அவள் பாதங்கள் இப்பொழுது ரத்தம் சுண்ட சிவந்தது.  

அவன் விழிகள், அவள் பார்வைக்காக ஏங்கி அவளை பார்த்தது. வெறுப்போடு திரும்பிய அவள் முகம் இப்பொழுது வலியில் சுருங்கியது.

அவள் இன்னும் அவன் பக்கம் திரும்பாமல் ஒற்றை காலில் தொடர்ந்து நிற்கவும் முடியாமல், பாரத்தை பாதத்தை அவன் கைகளில் இறக்க, அவன் அழுத்தம் இன்னும் கூடியது முகத்தில் கடினத்தோடு.

“என்ன மாப்பிள்ளை, மெட்டியை போடுங்க?” ஒரு குரல் வர, “பொண்ணு என் முகத்தை பார்த்தால் தான் மெட்டி” அவன் சிரிப்பினோடு வம்பு வளர்க்க,  

அவள் பட்டென்று கோபமாக திரும்பி பார்த்தாள். வலியில் கண்ணீர் வடிக்க, அவள் விழிகள் விரும்பினாலும் அவள் இறுமாப்பு அவளை அழுத்தமாக நிற்க வைத்தது.

வலியில் சுருங்கிய அவள் முகம், பல மொழி பேசிட அவன் தன் அழுத்தத்தை குறைத்து கொண்டு, அவள் பாதத்தை மென்மையாக வருடினான்.

மெட்டியை அணிவித்துவிட்டு அவன் புன்னகையோடு எழுந்தான். “நீ எப்படி இருக்கியோ? நான் அப்படி இருப்பேன். என் கிட்ட வெறுப்பை காட்டணும்னு நினைச்ச, நான் உனக்கு வலியை தான் காட்டுவேன்” மனதிற்குள் அவனுக்கு ஆயிரம் எண்ணங்கள் ஓடினாலும், அவன் அவளை அழுத்தமாக மிரட்டினான்.

அவள் இப்பொழுதும் நக்கலாக சிரித்தாள்.

“என்ன சிரிப்பு?” அவன் புரியாமல் கேட்க, “இல்ல, என் அண்ணனை கைக்குள் வைக்க, என்னை கல்யாணம் பண்ணிருக்கீங்க. அதே மாதிரி, உங்க தங்கை என் அண்ணன் கிட்ட இருக்கான்னு மறந்துடீங்களே?” அவள் ஏளனமாக கூறினாள்.

“உங்க அண்ணன் தான் என் தங்கையை காதலிச்சு கல்யாணம் பண்ணிருக்கானே” ரவி கேலியாக கூற, “அதுவும் சரி தான். எங்க அண்ணன் நல்லவன். காதலிச்ச பெண்ணை கல்யாணம் பண்ணுவான். உங்க தங்கையை நல்லா பார்த்துப்பான்னு சொல்லறீங்க? ஆனா நீ…” கீதா இப்பொழுது கண்சிமிட்டி அப்பாவியாக கேட்க, அவன் முகம் இறுகியது.

‘அண்ணனுக்கு தங்கை கொஞ்சம் கூட சளைத்தவள் இல்லை. இவளை வைத்து தான் நான் என் ஆட்டத்தை ஆரம்பிக்கணும்’ அவன் சூளுரைத்துக் கொண்டான்.

நதி பாயும்…                  

    

 

Leave a Reply

error: Content is protected !!