kiyaa-11

coverpage-faed2b96

kiyaa-11

கிய்யா – 11

விஜயபூபதி இலக்கியா திருமணம் முடிந்த மறுநாள் காலை.

இலக்கியா தலைக்கு குளித்து முடியை தழைய தழைய விட்டிருந்தாள். பாட்டியின் கண்டிப்பில், கொத்தாக மல்லிச்சரம் அவள் தலையில் தொங்கி கொண்டு விஜயபூபதியின் அறையை மணக்க செய்து கொண்டிருந்தது.

இலக்கியாவின் முகத்தில் மெல்லிய பதட்டம். ‘துர்காவுக்கு இன்னைக்கு விஷயம் தெரிஞ்சிருக்கும். எப்படியும் இங்க வருவாங்க. நான் அவங்க முகத்தில் எப்படி விழிப்பேன்?’

அவள் அறையில் குறுக்கும் நெடுக்கும் யோசனையோடு நடக்க, அவள் காலடி ஓசையில் அவன் விழிகளை திறந்து பார்த்தான்.

அவளின் கோலம் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

“அக்மார்க் மனைவியா இருக்கும் முயற்சியா?” அவள் மல்லிச்சரத்தை பார்த்தபடி நக்கலாக கேட்டான் விஜயபூபதி.

இலக்கியா பதில் பேசவில்லை.

“சரி, நீ என்ன பண்றன்னா… சூடா ஒரு கப் காபி கொண்டு வந்து கொடுத்துட்டு என் காலை தொட்டு கும்பிடுற” அவன் கூற, அவள் அவனை மேலும் கீழும் பார்த்தாள்.

‘டீ தானே குடிப்பாங்க. என்ன காபி கேட்குறாங்க?’ என்று எண்ணியபடியே அறையை விட்டு வெளியேறிய இலக்கியா சமையறைக்குள் நுழைந்ததும், “என்ன?” என்று கேட்டார் நிர்மலாதேவி.

“அத்தானுக்கு காபி” அவள் கூற, “என் மகனுக்கு டீ தான் பிடிக்கும். அதையும் நீ கொண்டு போக வேண்டாம்” அவர் கூற, தலையசைத்து கொண்டு அவள் மாமா அருகே அமர்ந்து கொண்டாள்.

சற்று நேரத்தில், உள்ளே நுழையும் தாயை யோசனையோடு பார்த்தான் விஜயபூபதி.

“என் பொண்டாட்டி எங்க?” அவன் குரல் சற்று விலகளோடு ஒலித்தது.

“விஜய்…” அவர் பேச ஆரம்பிக்க, “நான் என் மனைவி எங்கன்னு கேட்டேன்? நான் அவகிட்ட காபி கேட்டேன்” அவன் அழுத்தமாக கூறினான்.

“உனக்கு டீ தானே பிடிக்கும்முனு…” அவர் இழுக்க, “எல்லாம் எனக்கு பிடிச்ச மாதிரி தான் நடக்குதா?” அவன் தன் தாயிடம் எகிறினான்.

“துர்காவை… சாரி இலக்கியாவை வர சொல்லுங்க” அவன் குரல் இறுக, “அவ எதுக்கு பா?” அவர் தன் மகனை சமாதானம் செய்ய முயன்றார்.

“எதுக்குன்னா என்ன அர்த்தம்…” அவன் முகத்தை திருப்பி கொண்டான்.

“இலக்கியா…” அவன் குரல் வீடெங்கும் ஒலிக்க, இலக்கியா பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தாள்.

“என்னவோ, மதர்தெரசா ரேஞ்சுக்கு பில்டப் பண்ணி என்னை கல்யாணம் பண்ணிகிட்டே? ஒரு காபி கொண்டு வர தெரியலை” அவன் அவள் முகத்தை பார்த்து வார்த்தைகளை கடித்து துப்பினான்.

“அத்தான்…” அவள் இழுக்க, “அத்தான்னு நீ என்னை கூப்பிடாத… கூப்பிட்ட அடி வெளுத்திருவேன். அத்தான்னு ஒரு துளி மரியாதை இருந்தா நீ நான் சொல்றதை கேட்டிருப்ப” அவன் கர்ஜித்தான்.

“என்னை அசிங்கப்படுத்தினது நீ தான்” அவன் குரல் இறுகி ஒலித்தது.

இலக்கியா செய்வதறியாமல் நிற்க, “போய், காபி எடுத்துட்டு வான்னு சொன்னேன்” அவன் குரல் கடுப்பாக ஒலித்தது.

இலக்கியா அறையை விட்டு சோர்வாக வெளியேற, “இலக்கியா, அவன் உடம்பு சரி இல்லாதவன். கொஞ்சம் இப்படி தான் நடந்துப்பான். அவனுக்கு எல்லாம் சரியாகிருச்சுனு வையென்…” பாட்டி நிறுத்த, ‘சரியாகியதும், எப்படியாவது அத்தானை துர்காவோடு சேர்த்து வச்சிட்டு நான் விலகிருவேன்’ இலக்கியா எங்கோ பார்த்தபடி சிந்தித்து கொண்டிருந்தாள்.

“என்ன இலக்கியா? நான் பேசிட்டு இருக்கேன் நீ ஏதோ யோசனையில் இருக்க?” பாட்டி கேட்க, “அ…” நனவுலகத்திற்கு திரும்பினாள் இலக்கியா.

“விஜய்க்கு சீக்கிரம் சரியாகும் அப்புறம் பாரு உன் வாழ்க்கையை. நீ தான் அவனுக்கு மனைவி ஆகணுமுங்கிறது விதி. அது தான் இதெல்லாம் நடந்திருக்கு” பாட்டி பேசிக்கொண்டே போக, ‘யாரும் நெருங்க முடியாத இடத்துக்கு போயாவது அத்தானை துர்காவோட சேர்த்து வைக்கணும்’ தீவிரமாக முடிவு செய்து கொண்டாள் இலக்கியா.

“நீ கொஞ்சம் பொறுமையா மட்டும் இரு.” பாட்டி கூற, “சரி பாட்டி. நான் பார்த்துக்கறேன்.” என்று அவனுக்கு தேநீரை தயார் செய்ய ஆரம்பித்தாள்.

அதே நேரம், விஜயபூபதி அறையில் ரங்கநாத பூபதியும், நிர்மலா தேவியும் அவன் முன்னே நின்று கொண்டிருந்தனர்.

“இப்ப எதுக்கு இலக்கியாவை திட்டிட்டு இருக்க?” கோபமாக கேட்டார் ரங்கநாதபூபதி.

“ஏன்னா, உங்களை திட்ட முடியலை. நான் உங்க மேல வச்சிருக்கிற மரியாதை என்னை மௌனம் காக்க வைக்குது” அவன் உறுமினான்.

“இப்ப என்ன நடந்திருச்சு விஜய்?” அவன் தாய் தன்மையாக கேட்டார்.

“என்ன நடந்திருச்சா?” தன் முகத்தை சுளித்தான் விஜயபூபதி.

“என் விபத்துக்கு துர்கா அப்பா தான் காரணமுன்னு அவர் மேல பொய்யா பழி சுமத்தி அப்பாவோட பலத்தை யூஸ் செய்து போலீசில் கம்பளைண்ட் பண்ணி அவர் மூலமா என்னை மிரட்டி இலக்கியாவுக்கு கல்யாணம் செய்து வச்சிருக்கீங்க” விஜயபூபதி கோர்வையாக பேசி முடித்தான்.

“அது முடிந்த கதை” என்று ரங்கநாத பூபதி கூற, “ம்… முடிந்த கதை தான். இனி நடக்கப்போற கதை என்னனு நீங்க பாருங்க. நீங்க யாருனு எனக்கு நீங்க காட்டிடீங்க. இப்ப நான் யாருனு உங்களுக்கு காட்டுறேன்.” விஜயபூபதி தன் தந்தைக்கு சவால்விட்டான்.

“நான் இப்ப நினைத்தாலும் துர்காவை கஷ்டப்படுத்த முடியும். துர்கா அப்படிங்குற துருப்பு சீட்டு இன்னும் என் கையில் இருக்கு.” ரங்கநாதபூபதி தன் மகனை மிரட்ட, “இனி துர்காவை தொட்டு பாருங்க. உங்க தங்கை பொண்ணு கதறுவா” அவன் தந்தையை மிரட்டினான்.

ரங்கநாதபூபதி தன் மகனை மிரட்சியோடு பார்த்தார்.

“இலக்கியாவை கஷ்டப்படுத்த மாட்டேன்னு நினைக்காதீங்க. நான் இலக்கியா மேல கொலைகாண்டில் இருக்கேன். அவ, உங்களை எதிர்த்து பேசி இருந்தா, இன்னைக்கு இந்த சிக்கலே வந்திருக்காது.” விஜயபூபதி, தன் தந்தையிடம் சிடுசிடுத்தான்.

“இலக்கியாவை மனைவியா என்கிட்டே கொடுத்து, நீங்களே வலையில் சிக்கிடீங்க” விஜயபூபதியின் இதழ்கள் ஏளனமாக வளைந்தது.

ரங்கநாத பூபதியின் நெற்றியிலிருந்த சுருக்கத்தை பார்த்த விஜயபூபதி, “இப்ப யோசிக்க கூடாது அப்பா. யோசிக்க வேண்டிய கால கட்டத்தை நீங்க கடந்துடீங்க. நான் உங்க கிட்ட சொன்னேன் இலக்கியாவோட வாழ்க்கை என்கூட நல்லாருக்காதுன்னு. நீங்க தானே சொன்னீங்க உங்க மகன் வாழ்க்கை தான் முக்கியமுன்னு.“ அவன் தன் பேச்சை நிறுத்தி நிதானமாக அடுத்த வரியை கூறினான்.

“உங்க மகன் வாழ்க்கை சிறப்பா இருக்கும். ஆனால், உங்க மருமக வாழ்க்கை? கதறுவா. கதறிக்கிட்டு அவளே வெளியே ஓடுவா”

‘தப்பு பண்ணிட்டேனோ?’ ரங்கநாதபூபதியின் இதயம் ஒரு நொடி நின்று துடிக்க, ‘ஹப்பாடா… எங்க விஜயபூபதி அவளை மனைவியா ஏத்துப்பானோன்னு பயந்துகிட்டே இருந்தேன். இந்த மனுசனுக்கு பயந்து வாயை கூட திறக்க முடியாத நிலை. எப்படியாவது இலக்கியாவை இங்கிருந்து அனுப்பிடனும். அவளை பார்த்தாலே, எனக்கு பழசெல்லாம் நியாபகம் வந்து கொல்லுது’ நிர்மலாதேவியின் முகத்தில் நிம்மதி பரவியது.

மகனிடம் பேச எதுவும் இல்லை என்பது போல் இருவரும் அவன் அறையை விட்டு வெளியே சென்றனர்.

அதே நேரம் துர்கா தன் தந்தை முன் கோபமாக நின்றாள்.

“அப்பா, பூபதிக்கு கல்யாணம் ஆகிருச்சு” என்று அவள் ஆவேசமாக கூற, “ம்…” எந்த அதிர்ச்சியும் இல்லாமல் கூறினார் குமரன்.

“உங்களுக்கு தெரிஞ்சி தான் நடந்திருக்கு? அப்படித்தானே?” தன் தந்தையின் முகபாவனையில் கண்டுகொண்டாள் துர்கா.

“தெரிஞ்சி மட்டுமில்லை இந்த கல்யாணம் நடக்கலை. என்னால தான் நடந்திருக்கு. நான் தான் பூபதியின் விபத்துக்கு அப்புறம் பூபதி வீட்டுக்கு போய் பேசினேன். சாதாரணமா நிச்சயம் பண்ண பொண்ணா இருந்தா என் மக உங்க மகன் பின்னாடி இப்படி வந்திருக்க மாட்டா . அவள் காதல் அவளை வரவைக்குது. நீங்க அவ காதலை பயன்படுத்த பார்க்கறீங்க. உங்களுக்கு தெம்பு இருந்தா, உங்க பையனுக்கு வேற பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணுங்க. ஏன் என் பொண்ணு வாழ்க்கையை சீரழிக்கனுமுன்னு நினைக்குறீங்கன்னு கேட்டேன்” அவர் நிதானமாக பேசினார்.

“இன்னும் நிறைய…” என்று அவர் ஆரம்பிக்க, “ஏன் அப்பா இப்படி பண்ணீங்க?” துர்கா கண்ணீர் மல்க கேட்டாள்.

“என் மக வாழ்க்கை எனக்கு முக்கியம்” அவர் கூற, “அவளுக்கு இனி எங்க அப்பா இருக்கு வாழ்க்கை? அதை தான் குழி தோண்டி பொதைச்சிடீங்களே?” தலையில் “மடார்… மடார்…” என்று அடித்து கொண்டு கதறினாள்.

“அப்படி எதுவும் ஆகலை துர்கா. அவன் வேற பொண்ணை கல்யாணம் பண்ணும் பொழுது, நீ வேற ஒரு பையனை கல்யாணம் செய்ய கூடாதா?” கலைச்செல்வி அழுத்தமாக கேட்டார்.

“என் மனசில் பூபதியை தவிர யாருக்கும் இடம் கிடையாது. நான் பூபதியை பார்க்க போறேன்.” அவள் அவன் வீட்டிற்கு கிளம்பினாள்.

“எதுக்கு அவசரப்படுற?” தன் மகளை தடுத்தார் குமரன்.

“அவசரப்பட்டு எது நடக்க கூடாதுன்னு நினைச்சு பொறுமையா இருந்தேனோ அதுவே நடந்திருச்சு. இனி இழக்க எனக்கு ஒண்ணுமில்லை. நான் என் விருப்பப்படி தான் இருப்பேன்.” துர்கா நிதானமாக பேச, அவள் பெற்றோர் திகைத்து நின்றனர்.

“நான் பூபதி கிட்ட தான் வேலை பார்த்தேன். அவனை தினமும் பார்க்க போவேன். மனைவின்னு ஒருத்தி வந்துட்டா என் காதல் இல்லைன்னு ஆகிரும்மா என்ன?” துர்கா பேச, “என்ன லூசு மாதிரி பேசுற? இப்ப பூபதி இலக்கியாவுக்கு புருஷன்” அவள் தாய் எடுத்து கூறினாள்.

“இருந்துட்டு போகட்டும். நான் அவங்க வாழ்க்கையை கெடுக்க மாட்டேன். ஆனால், எனக்குன்னு இன்னொரு வாழ்க்கை கிடையாது” துர்கா உறுதியாக கூறினாள்.

“பைத்தியமா பிடிச்சிருக்கு உனக்கு. பூபதியின் அப்பா சொன்ன வார்த்தையை காப்பாத்திட்டார். எப்படி செய்த்தார்ன்னு எனக்கு தெரியாது. ஆனால், உங்க பொண்ணு வாழ்க்கைக்கு எங்களால் இடைஞ்சல் வராதுன்னு சொன்னார். நானும் கொஞ்சம் வார்தைகளை விட்டேன். அவரும் கோபமாக தான் பேசினார். ஆனால், சொன்னதை செய்திட்டார்” என்று குமரன் தன் மகளை பார்த்து பேசினார்.

“நான் பூபதியை பார்க்க போறேன்” துர்கா கிளம்ப, “முட்டாளா நீ? பேசிக்கிட்டே இருக்கேன். கிளம்புற?” தன் மகளின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார் குமரன்.

கண்ணீர் மல்க தன் தந்தையை பார்த்தாள் துர்கா.

“நான் லூசு தான்… நான் பைத்தியம் தான்… நான் முட்டாள் தான்…” சுவரில் முட்டி கொண்டு கதறினாள்.

“நான் புத்திசாலியா இருந்திருந்தா, உங்க பேச்சை கேட்டு இப்படி வீட்டில் அடைந்து கிடந்திருப்பேனா?” அவள் பாவமாக கேட்டாள்.

தன் கண்ணீரை துடைத்து கொண்டு, கோபமாக தன் பெற்றோரை முறைத்து பார்த்தாள்.

“துர்கா லூசா இருக்கலாம். பைத்தியமா இருக்கலாம். முட்டாளா இருக்கலாம். ஆனால், நல்லவ… துரோகி இல்லை… பூபதிக்கு உடம்பு சரி இல்லைனு அவனை விட்டுட்டு துர்கா இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிகிட்டாங்கிற பேச்சுக்கு ஒரு நாளும் இடமில்லை. அந்த அவ பெயர் எனக்கு வேண்டாம். நான் பூபதி கிட்ட தான் வேலை பார்த்தேன். இப்பவும் அங்க தான் பார்க்குறேன். இனியும் அங்க தான் பார்ப்பேன்” துர்கா உறுதியாக கூறினாள்.

 

“அவன் காதல், காதலை தியாகம் செய்யுற அளவுக்கு உண்மைன்னு எனக்கு வலியை கொடுத்து நிரூபிச்சிட்டான் பூபதி. என் காதல், வாழ்க்கையை தியாகம் செய்யுற அளவுக்கு உண்மைன்னு அவன் முன்னாடியே இருந்து ஒவ்வொரு நிமிடமும் நான் அவனுக்கு நிருப்பிப்பேன்” கூறிக்கொண்டு விஜயபூபதியின் வீட்டை நோக்கி கிளம்பினாள் துர்கா.

‘பார்த்து பதவிசமாக நடந்து இனி என் வாழ்வில் காப்பாற்றி கொள்ள எதுவுமில்லை…’ என்ற எண்ணம் சிந்தையில் தொடங்கி, அவள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் பரவ ஆரம்பித்தது.

அதே நேரம் விஜயபூபதியின் வீட்டில்.

  தேநீரை எடுத்து கொண்டு விஜயபூபதியின் அறைக்குள் நுழைத்தாள் இலக்கியா.

   “நான் காபி கேட்டேன்.” அவன் குரல் கண்டிப்போடு ஒலித்தது. “உங்களுக்கு காபி பிடிக்காது.” இலக்கியா அசட்டையாக கூறினாள்.

“ஓ… மேடம் எனக்கு பிடிச்சதை தான் பண்ணுவீங்க.” அவன் ஒற்றை புருவம் உயர்ந்தது.

“பண்ணனும்னு தான் நினைக்குறேன்.” அவள் உதட்டை சுளித்து கூறினாள்.

“சரி, பொண்டாட்டியா லட்சணமா என் காலை தொட்டு கும்பிடு.” அவன் தன் கைளால் அவன் காலை சுட்டி காட்டினான். அவன் அருகே மெத்தையில் அமர்ந்தாள் இலக்கியா.

“மிஸ்டர் விஜயபூபதி… நீங்க எந்த காலத்தில் இருக்கீங்க? பொண்டாட்டி புருஷன் காலை தொட்டு கும்பிடறது எல்லாம் ஓல்ட் ஸ்டைல். எட்டி மிதிச்சிட்டு போகாம இருந்தாலே நீங்க சந்தோஷ படணும்.” அவள் அவன் முகம் பார்த்து கூறினாள்.

‘எட்டி மிதிப்பாளா? திமிர் பிடித்தவள்… திமிர் பிடித்தவள்…’ அவன் உள்ளம் கருவியது.

“சரி… சரி… சின்ன புள்ளை மாதிரி நானும் ஆண்டிஹீரோ தான்னு சீனை போடாம, நான் கொடுத்த டீயை குடிச்சிட்டு கொடுங்க” அவள் அவனுக்கு ஆணையிட,’ரொம்ப பேசுறாளே… இவளை என்ன செய்யலாம்?’ அவன் யோசிக்க, “கிய்யா… கிய்யா…” என்று குருவி ஜன்னல் வழியாக சத்தம் செய்தது.

“அச்சோ… நான் அங்க இருக்கும் பொழுது உனக்கு சாப்பாடு போடுவேன். இப்ப மறந்துட்டேன் பாரேன். வரேன் இரு.” அவள் துள்ளி குதிக்க எத்தனிக்க, அவள் கைகளை பிடித்து இழுத்தான் அவன்.

அவன் இழுத்த வேகத்தில் அவன் மேல் சரிந்தாள் அவள். இந்த நெருக்கத்தில், விஜயபூபதி முதலில் தடுமாறினான். அவள் தடுத்து நிறுத்த எண்ணினானே ஒழிய, இதை அவன் எதிர்பார்க்கவில்லை.

அவன் அவளை குற்ற உணர்ச்சியோடு பார்க்க, அவன் விழிகளில் தட்டுப்பட்டதோ மிரண்டு விழித்த அவள் விழிகள்.

அவன் உதட்டில் இப்பொழுது ஏளன புன்னகை. விலக்க நினைத்த கைகளை அவன் விலகிகொள்ளவில்லை.

“என்ன மேடம், மனைவி பொண்டாட்டின்னு சொன்னீங்க. இப்ப இப்படி பார்த்தா என்ன அர்த்தம்?” அவன் கேட்க, அவள் விலக எத்தனித்தாள்.

“கிய்யா… கிய்யா…” என்று குருவி சத்தம் எழுப்ப,”குருவிக்கு சாப்பாடு வச்சிட்டு வரேன்.” அவள் கூற, “வச்சிட்டு எதுக்கு வரீங்க?” அவன் சீட்டியடித்தான்.

“நீங்க கூப்பிட்டிங்க அத்தான்.” அவள் பேச, அவன் அவள் உதட்டில் சட்டென்று அடித்தான்.

“என்னை அத்தான்னு கூப்பிடாத. நீ என்னை அத்தான்னு கூப்பிடாத. நீ என்னை அத்தான்னு கூப்பிடறது பொய். சும்மா தான். பாசமும் இல்லை. மதிப்பும் இல்லை. உன் வாழ்க்கை… உன் வாழ்க்கையை…” மேலே பேச முடியாமல் அவன் கண்கள் கலங்கியது.

“நான் போகணும்?” அவள் விலக எத்தனிக்க, “என்னடி போகணும் போகணும்னு சொல்ற? மனைவின்னா சும்மாவா? எனக்கு மனைவியா இருக்க சம்மதிச்சு தானே இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட?” அவன் அவள் இதழ்களை அழுத்தி பிடித்திருந்தான்.

பேச எத்தனிக்கும் அவள் இதழ்கள் பேச இயலாமல் வலியில் துடித்து கொண்டிருந்தது.

“உன்னால முடியாதில்லை. இங்க இருந்து கிளம்பிடு. உங்க மாமா கிட்ட சொல்லிட்டு, உங்க மகனை எனக்கு பிடிக்கலைனு சொல்லிட்டு கிளம்பிடு. நானே உனக்கு வேற நல்ல மாப்பிளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.” அவன் அவள் செவியோரம் கிசுகிசுத்தான்.

அவன் மூச்சுக்காற்றும் அவளை விலக சொல்லி கெஞ்சியது.

அவனிடமிந்து தற்காலிகமாக விலக முடியமால் அவன் பிடியிலும், நிரந்திரமாக விலக முடியாமல் தன் மாமனின் பிடியிலும் சிக்கி கொண்டாள் பேதை அவள்!

அப்பொழுது துர்கா கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய, இலக்கியாவோ பதறிக்கொண்டு விலக, அவன் முகத்திலோ கோபம்.

சிறகுகள் விரியும்…

Leave a Reply

error: Content is protected !!