kiyaa-24

coverpage-b1701721

kiyaa-24

கிய்யா – 24

 இலக்கியா கண்களை திறந்து பார்த்தாள். தான் மருத்துவமனையில் இருப்பது அவளுக்கு தெரிந்தது.

தன் கண்களை சுழற்றினாள். ‘நல்ல வசதியான மருத்துவமனை.’ அவள் சிந்தை கணக்கிட்டு கொண்டது.

‘கொரோனா வார்டில் இருக்கேன். என்னை யார் இங்க கொண்டு வந்து சேர்த்திருப்பாங்க?’ இந்த கேள்வி அவள் மண்டையை குடைந்தது.

அங்கு வந்து சென்ற செவிலியர்கள் மிகப்பெரிய உடல் கவசத்துக்குள் இருந்தார்கள். அவளை அக்கறையாக பார்த்து கொண்டார்கள்.

‘என்னை யார் இங்க கொண்டு வந்து சேர்த்தாங்கன்னு கேட்கணும். ஆனால், கேட்டால், நான் யார்? எங்கு இருந்தேன்? என்ற கேள்வி வருமோ’ அவள் தன் வாயை இறுக மூடிக்கொண்டாள்.

ஒருபுறம் அவள் சிந்தனை இவ்வாறு ஓடி கொண்டிருந்தாலும், மறுபுறமோ ‘அத்தானாக தான் இருக்கும்’ என்று அவள் உள்ளம் ஊர்ஜிதம் செய்து கொண்டது.

“ட்ரீட்மெண்ட், குவாரன்டைன்” என்ற சொற்கள் அவள் செவிகளில் மீண்டும் மீண்டும் விழுந்தது. அவளுக்கு சற்று சலிப்பாகவே இருந்தது.

‘உடம்பு கொஞ்சம் சோர்வா இருக்கு. மத்தபடி நான் நல்லாத்தானே இருக்கேன். என்னை வீட்டுக்கு அனுப்பலாமில்லை?’ அவள் முகத்தில் இந்த கேள்வி அப்பட்டமாக தெரிந்தது.

சுமார் மூன்று வாரங்களுக்கு பிறகு, அவள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டாள்.

அவளுக்காக காத்திருந்தான் விஜயபூபதி. அவன் கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருக்க, அவன் நடையில் ஒரு நொடி தன்னையும் மறந்து அவனிடம் லயித்து நின்றாள்.

“அத்தான்…” பல நாட்களுக்கு பின் அவனைப் பார்ப்பதால், அவனிடம் துள்ளி குதித்து சென்றாள் இலக்கியா.

‘எதற்காக சென்றாள்? தான் சென்ற காரியம் முடிந்துவிட்டதா?’ போன்ற எண்ணங்கள் அவனை பார்த்த நொடி அவளுக்கு கொஞ்சம் மறந்து போனது.

‘அத்தான்…’ அவன் மட்டுமே நிறைந்து நின்றான். அவள் முகத்தில் புன்னகை கீற்று.

அவள் அழைப்புக்கு அவனிடம், “ம்…” என்ற பிரதிபலிப்பு மட்டுமே.

“மிஸ்டர் விஜயபூபதிக்கு கோபமா?” அவள் கேட்க, “நான் யார் உன்கிட்ட கோபப்பட?” அவன் கேட்டுக் கொண்டே அவளை தன் காருக்கு அழைத்து சென்றான்.

காரில் முன் பகுதியில் அவனருகே அமர்ந்து கொண்டாள் அவள்.

“அத்தான்…” அவள் குரலில் கண்டிப்பு ஏற, “நீங்க யாரு மேடம்? என்கிட்டே கோபப்பட” அவன் நிறுத்தி நிதானமாக கேட்டான்.

“…” அவளிடம் மௌனம்.

‘நான் யார்?’ அவன் கேள்வி அவளை சாட்டையாக தாக்கியது.

‘விலகித் தானே சென்றேன். இப்ப எதுக்கு அத்தானை பார்த்ததும் துள்ளி குதித்து ஓடுகிறேன்.’ அவள் முகத்தில் வலியின் ரணங்கள்.

ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றாள். விஜயபூபதியை பரிதாபமாக பார்த்தாள். அவள் விழிகள் கெண்டை மீன் போல் நீளமாக விரிந்து பளபளத்தது. அவன் சொல்லின் வலி தாங்காமல் பளபளப்பை ஏற்றிக்கொண்டே போனது.

தன்னவளின் வலியில் அவன் உடைந்து போனான். அவள் முகத்தை கைகளில் ஏந்தி, அவளுக்கு பலவிதமாக ஆறுதல் கூற அவன் மனம் துடித்தது. அவன் கைகள் அவன் மனதின் துடிப்புக்கு இயங்கிவிடுமோ? என்ற அச்சம் எழ, தன் கைகளால் ஸ்டியரிங்கை அழுந்த பிடித்தான்.

“சீட் பெல்ட் போடு. கிளம்பனும். எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. உன்கிட்ட பேசுறது மட்டும் என் வேலை இல்லை.” அவன் வார்த்தைகளை கடித்து துப்பினான்.

‘நான் இப்ப எங்க போக போறேன்.’ என்ற கேள்வி மனதில் எழ, அவள் புரியாதவள் போல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

“சொன்னா புரியாதா?” அவன் மீண்டும் கடுகடுத்து கொண்டே, அவள் பக்கம் சரிந்தான்.

அவன் சுவாசம் அவள் தேகத்தை தீண்ட, அவள் உடல் நடுங்கியது. அவள் உடலை தீண்டிய அவன் தேகம் அவள் நடுக்கத்தை உணர்ந்து கொள்ள, அவன் இதழ்கள் நமட்டு சிரிப்பு சிரித்தது.

அவன் கைகள் சீட் பெல்ட்டை நழுவ விட்டு, மீண்டும் பிடித்து கொண்டது.

‘ஒரு சீட் பெல்ட் போட இவ்வளவு நேரமா?’ அவன் அருகாமையை விரும்பிய அவள் மனம், அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தது.

அதை அவள் முகபாவம் வெளிப்படையாக காட்ட, அவன் அவள் சுவாசத்தை ரசித்து. மிக சாவகாசமாக செயல்பட்டான்.

“சீட் பெல்ட்டை நான் போட்டுக்குக்குறேன்.” அவள் அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டாள்.

“உனக்கு சீட் பெல்ட் போட்டுவிடணும்னு எனக்கு ஆசையும் இல்லை. அவசியமும் இல்லை.” அவன் தோள்களை குலுக்கி கொண்டு விலகினான்.

அவள் கூறிய வார்தைகள் தான். ஆனால், அதை அவன் கூறுகையில் அவளுக்கு வலித்தது. சுள்ளென்று அவள் கோபம் ஏறியது.

அவன் வேகமாக காரை கிளப்பினான்.

“விஜயபூபதி எங்க போறீங்க? என் மேல் அக்கறை இல்லாதவங்க என்னை கூட்டிகிட்டு போக வேண்டிய அவசியமில்லை. நான் உங்க கூட வர விரும்பலை.” அவள் கோபமாக கூறினாள்.

“உன் மேல உள்ள அக்கறையில் கூட்டிட்டு போறதா நான் சொல்லவே இல்லையே” அவனிடம் அசட்டை.

“என்னை இறக்கி விடுங்க. நான் தங்கி இருந்த வீட்டுக்கே போறேன். நான் உங்க வீட்டுக்கு வரலை.” அவள் கறாராக கூறினாள்.

“ஆமா, நான் எப்படி ஹாஸ்பிடல்க்கு வந்தேன்?” பேச்சீனோடு அவள் தன் சந்தேகத்தை கேட்டாள்.

‘ஓ… அன்னைக்கு நடந்தது இவளுக்கு எதுவுமே ஞாபகம் இல்லை போல. நல்லது ரொம்ப நல்லது.’ அவன் எண்ணிக் கொண்டான்.

அன்று தன்னை மறந்த நிலையில் அவள் துர்காவோடு பேசியதும், தன்னிடம் அவள் பெற்றுக்கொண்ட வாக்குறுதியும் அவன் கண்முன் வந்து போனது. அதை பற்றி அவளுக்கு நினைவு இல்லாததே நல்லது என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான் விஜயபூபதி.

“எப்படின்னு கேட்குறேன்ல?” அவள் குரலை உயர்த்த, “கிய்யா… கிய்யா… மேஜிக்” அவன் நக்கலாக கூறினான்.

“என்ன கிண்டலா?” அவள் கேட்க, “நான் கிண்டல் செய்து விளையாட நீ என்ன என் காதல் மனைவியா? எனக்கு பணிவிடை செய்ய வந்த மனைவி. அவ்வுளவு தான். நான் ஏன் உன் கூட விளையாட போறேன்.” அவன் கேலியாகவே கேட்டான்.

“மிஸ்டர். விஜயபூபதி, நானும் அதை தான் சொல்றேன். செஞ்சோற்றுக்கடன் தீர்க்க உங்களுக்கு பணிவிடை செய்ய வந்தேன். நான் வந்த வேலை முடிஞ்சிருச்சு கிளம்பிட்டேன். அதுக்கு மேல, எனக்கு உங்க மேல ஒரு கண்ராவியும் கிடையாது.” அவள் சிடுசிடுத்தாள்.

 “வாய்… வாய்… இந்த வாய்க்கு உன்னை செவிட்டில் அறையணும்னு பார்க்குறேன். உடம்பு சரியில்லாமல் இருந்தவன்னு சும்மா விடுறேன்.” ஸ்டியரிங்கை திருப்பியபடி கூறினான்.

அவளிடம் மௌனம்.

“பணிவிடை செய்யுற காலம் முடிஞ்சிதுன்னா, டைவர்ஸ் குடுத்துட்டு போக வேண்டியது தானே? மொக்கையா ரெண்டு லெட்டர் எழுதி வச்சிட்டு போனால் என்ன அர்த்தம்?” அவன் சீறினான்.

‘என் கடிதம் மொக்கையா?’ அவளுள் சினம் கிளம்பியது.

‘நான் உருகி உருகி வலியோட எழுதினா என் கடிதம் மொக்கையா?’ அவள் அவனை கோபமாக பார்த்தாள்.

“இல்லை, நான் தெரியாமல் தான் கேட்குறேன். என்னை விட்டு பிரியணும்னு முடிவு பண்ணின சரி. அதுக்கு எதுக்கு வீட்டை விட்டு ஓடின?” அவன் சாலையில் கவனத்தை செலுத்தியபடி அவளை பார்த்து கேட்டான்.

அவளிடம் பதில் இல்லை.

“அத்தான், என் வேலை முடிந்தது. டைவர்ஸ் குடுங்கன்னு கேட்டா கொடுக்க போறேன். உனக்கும், என்னை பிடிக்காது. எனக்கும் உன்னை பிடிக்காது. கேட்டா, நேரடியா டைவர்ஸ் கொடுக்க போறேன். இதுக்கு எதுக்கு இவ்வளவு ஸீன்?” அவன் உதட்டை பிதுக்கினான்.

அவன் செயல்கள் என்னவோ கம்பீரமாகத்தான் இருந்தது. ஆனால், அவளுக்கு தான் ருசிக்கவில்லை. ரசிக்கவுமில்லை.

‘அத்தான், என்னை பிரிய மாட்டாங்க. என்னை விட மாட்டாங்க. கணவன்னு கடமை பார்பாப்பாங்க. இப்படி எல்லாம் கற்பனையை வளர்த்து கொண்டது நான் தானோ?’ அவள் அவனை புரியாமல் பார்த்தாள்.

“சரி, உனக்கு என்கிட்ட கேட்குறது கெளரவ பிரச்சனை. டைவர்ஸ் கேட்க உன் சுயமரியாதை இடம் கொடுக்கலைனே வச்சிப்போம்.” அவன் நிறுத்த, அவள் மலங்கமலங்க விழித்தாள்.

“நீ எனக்கு டைவர்ஸ் கொடுத்திருக்கலாமே. கொடுத்து தானே உங்களுக்கு வழக்கம். உங்க வாழ்க்கையை கொடுப்பீங்க. வாழ்க்கையை கொடுத்த உனக்கு, டைவர்ஸ் கொடுக்கறதெல்லாம் ஒரு பொருட்டா என்ன?” அவன் கேள்வியாக நிறுத்த, அவள் அவனை யோசனையாக பார்த்தாள்.

‘அத்தான் பேச்சே ஒரு தினுசா இருக்கே’ அவள் கண்களை சுருக்கி அவனை கூர்மையாக பார்த்தாள்.

 “நீ வாழ்க்கையை கொடுத்த வாங்கிட்டேன். எனக்கு உன் கிட்ட வாங்கிக்கறதில் எந்த கெளரவ பிரச்சனையும் இல்லை. நீ இப்படி லெட்டர் எழுதி வச்சிட்டு போகாம டைவர்ஸ் கொடுத்திருந்தா, நானும் துர்காவும் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்நேரம் ஹனிமூன் கிளம்பி இருப்போம்.” அவன் ரசனையோடு கூறினான்.

“ஆமா, ஊரே கொரோனாவில் இருக்கு. உங்களுக்கு மட்டும் ஹனிமூன் கேட்குதா?” இலக்கியா பற்களை நறநறத்தாள்.

“ஓ…” அவன் ராகம் பாட, “என்ன ஓ?” என்று அவள் அவனை முறைக்க, “நானும் துர்காவும் கல்யாணம் பண்ணிக்கிட்டு அதே வீட்டில் இருப்போம். அதை பார்க்க உனக்கு பொறாமை. உன்னால் ஏத்துக்க முடியாது. அதுக்காத் தான் இப்படி ஓடி ஒளிஞ்சியா?” அவன் அப்பாவியாக கேட்டான்.

“நீங்களும், துர்காவும் சந்தோஷமா வாழறத்தில் எனக்கு என்ன பொறாமை?” அவள் சாலையை பார்த்தபடி கேட்க, “அப்ப வீட்டில் இருந்து எங்களை சேர்த்து வை.” கூறியபடி காரை அவன் வீட்டிற்குள் செலுத்தினான்.

விஜயபூபதியின் தாயார் வாசலில் நின்று கொண்டிருந்தார். இலக்கியா வீடு திரும்பியதில் அவருக்கு திருப்தி. இருந்தாலும், எதுவும் மாறவில்லை. அவர் விலகியே நின்று கொண்டார்.

வீட்டில் வேலை செய்யும் பெண்ணை ஆரத்தி எடுக்க சொன்னார். விஜயபூபதி அவள் அருகே நிற்காமல் விலகி சென்று விட்டான்.

அவன் விலகி செல்வது வலித்தாலும், அது தானே நிதர்சனம். அதை புன்னகையோடு ஏற்றுக் கொண்டாள் இலக்கியா.

மாமாவும், பாட்டியும் அவள் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் சென்றதை குறித்து திட்டி தீர்த்தனர். ஸ்ரீராம் அவளிடம் சண்டை பிடித்தான். விஜயபூபதி எதுவும் கேட்கவில்லை. மூன்றாம் மனிதர் போல் அவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.

இலக்கியா அனைவரிடமும் பேச்சு வாங்கிவிட்டு அவள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

“இலக்கியா” நிர்மலாதேவி அழைக்க, ‘ஐயோ… இப்ப அத்தை கிட்ட திட்டு வாங்கணுமா?’ இலக்கியா நிர்மலா தேவியை பரிதாபமாக பார்த்தாள்.

“உன் வீட்டுக்கு தானே போற?” அவர் கேட்க, அவள் “ம்…” கொட்டினாள்.

“உனக்குன்னு எதுவும் சமைக்காத. நான் உனக்கு சாப்பிடு செய்து கொடுத்து அனுப்பறேன். கொஞ்ச நேரத்தில் ஜூஸ் கொடுத்து அனுப்பறேன்.” அவர் கூற, “அத்தை…” அவள் கண்கள் கலங்க எத்தனிக்க, தன்னை சாமாதானம் செய்து கொண்டாள் இலக்கியா.

ஒருவேளை, நிர்மலா தேவி தன் தாயாக இருந்திருந்தால், இல்லை அவளுக்கு தாய் என்று ஒருத்தி இருந்திருந்தால், அவள் அவர்களை கட்டிக்கொண்டு ‘ஓ…’ என்று கதறி அழுதிருப்பாள்.

ஆனால்… ‘நான் யாரும் இல்லாத அனாதை பெண் தானே’ என்ற எண்ணம் தோன்ற வெளி வேற துடித்த அவள் கண்ணீர் அவள் விழிகளுக்குள்ளே சென்று விட்டது. அவள் மனப் போராட்டத்தை அறிந்தவன் போல், அவளை கூர்மையாக பார்த்து கொண்டிருந்தான் விஜயபூபதி.

‘இவள் தோள் சாய்ந்து அழ நான் இல்லையா? தனக்கு தானே இறுகி கொள்வாளா? இது என்ன பிடிவாதம்?‘ அவன் கண்கள் சுருங்கியது.

‘ இவள் ஒரு நாளும் என்னை ஏற்றுக் கொள்ளமாட்டாளோ? இவள் என் மேல் வைத்துள்ள அன்பை ஒத்து கொள்ள மாட்டாளா? இல்லை நான் துர்காவின் காதலன் என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள மாட்டாளா?’ அவன் பதில் கண்டுபிடிக்க முடியாத குழப்பத்தில் இருந்தான்.

‘நான் தவறு செய்துவிட்டேன். இப்படி ஓடி ஒளிந்திருக்க கூடாது. ஆனால், துர்காவோடு அத்தானை சேர்த்து வைத்துவிட்டு, அதை பார்த்துக்கொண்டு வாழும் தைரியம் என்னிடம் இருக்கிறதா?’ குழப்பத்தோடு அவள் தோட்டத்துவீட்டை நோக்கி நடந்தாள் இலக்கியா.

அவள் சென்றதும், ரங்கநாத பூபதியும், நிர்மலாதேவியும் விஜயபூபதியின் முன் சற்று தயக்கமாக நின்றனர்.

“ஏன் இலக்கியா உன்னை கல்யாணம் செய்துகிட்டா? அவ ஏன் பல வருஷங்களுக்கு முன்னாடி நம்ம வீட்டில் தங்காம தோட்டத்து வீட்டில் தங்க ஆரம்பிச்சா? இதெல்லாம் நீ தெரிஞ்சிக்கணும் விஜய்.” நிர்மலாதேவி இலக்கியாவின் பக்க நியாயத்தை பேச ஆரம்பித்தார்.

“வேண்டாம் அம்மா. யாரும் எதுவும் சொல்ல வேண்டாம். என்ன நடந்திருந்தாலும், அதை என் மனைவி என்கிட்டே சொல்லணும். அவளா என்கிட்ட வந்து சொல்லணும். என்னை நம்பி சொல்லணும்.” அவன் வார்த்தைகளில் கடினத்தன்மை மிதமிஞ்சி இருந்தது.

 சிறகுகள் விரியும்…

Leave a Reply

error: Content is protected !!