kiyaa-26

coverpage-b3fddd63
akila kannan

கிய்யா – 26

தன் பேரனின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் பொதித்து கொண்டார்.

“நீ தேவை இல்லாமல் யோசிக்கிற விஜய். வாழ்க்கை நம்பிக்கை என்னும் ஆதாரத்தில் தான் நகரும்.” அவர் கண்டிப்போடு பேச, மேலும் பேசி அவன் பாட்டியை வருத்த விரும்பவில்லை.

அவரிடம் அவர் கூற்றுக்கு இசைபவன் போல் தலை அசைத்தான்.

“உன்னை பத்தி பேசின இதையே உன் அப்பா கிட்டையும் பேசியிருப்பார் துர்காவோட அப்பா. அது உண்மையோ, பொய்யான நம்பிக்கையோ இந்த மாதிரி பேச்சு வெளிய உலாவுறது நல்லதில்லை இல்லையா?” பாட்டி நிறுத்த அங்கு மீண்டும் நிசப்தம்.

“அது தான் உன் அப்பா, ஒன்னு இலக்கியாவை உனக்கு கல்யாணம் செய்து வைக்கணும், இல்லை அவளுக்கு அவசர கல்யாணம் செய்திட்டு உனக்கும் ஒரு கல்யாணம் செய்யணும்னு முடிவு பண்ணிட்டான் போல. அவன் அந்த நேர சூழ்நிலையில் இலக்கியாவின் தலையில் எந்த மாதிரி மாப்பிள்ளையும் கட்டி வைத்திருப்பான். அவன் நிலைமையில் உன் அப்பாவின் நிலைமையும் நாம யோசிக்கணும். அவனுக்கும் வேற வழி இல்லை தானே?” பாட்டி கேள்வியாக நிறுத்தினார்.

“ஆனால், இலக்கியா பாவம் இல்லையா பாட்டி? அவளுக்கு அம்மா, அப்பாவும் இல்லை. அடுத்து என்னனு தெரியாத சூழ்நிலை. நானும், துர்காவை காதலித்தவன். நான் காதலிக்கும் சரி இல்லாமல் மனைவிக்கும் சரி இல்லாதவன் ஆகிடுவேனொன்னு…” விஜயபூபதி தடுமாற, பாட்டி சிரித்தார்.

 

அந்த சிரிப்பில் அவர் அனுபவம் கம்பீரமாய் வீற்றிருந்தது.

“இந்த உலகத்தில் யாருமே பாவம் இல்லை விஜய். அப்படி பாவம் என்று பார்த்தால், பகவான் கிருஷ்ணர் தான் பாவம்.” அவர் சிரிக்க, “என்ன பாட்டி என்னை கேலி பண்ணுறீங்களா?” அவன் பாட்டியிடம் செல்லமாக கோபித்து கொண்டான்.

“ம்… சிறையில் பிறந்து, பிறந்தவுடன் பெற்றோரை பிரிந்து, மாடுகளோடு வைக்கோலுக்கு இடையில் வளர்ந்த கண்ணன் பாவம் இல்லையா?” பாட்டி நிறுத்த, அவன் பாட்டியை அதிசயமாக பார்த்தான்.

“அந்த கண்ணனால் கூட அவன் மேல் காதல் கொண்ட அவன் காதலித்த ராதையை மணந்து கொள்ள முடியலையே? அவர் மீது அன்பு கொண்ட பெண்களை, கொடியவர்களிடம் இருந்த காப்பாற்றிய பெண்களை தானே திருமணம் செய்து கொண்டார்” பாட்டி கூற, அவன் சிரித்து கொண்டான்.

“டேய், கடவுளுக்கே இது தான் நிலை. நீயெல்லாம் எம்மாத்திரம். போடா, வாழ்க்கையை அதன் போக்கி வாழ கத்துக்கோ” அவர் முதியவராக அறிவுரை கூறி வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

பாட்டி வீட்டிற்குள் செல்ல, அவன் தோட்டத்துக்கு வீட்டிற்குள் சென்றான். அவன் மனம் சற்று பாரம் இறங்கியது போல் இருந்தது. மற்றவர்களுக்காக சிரித்த அவன் முகத்தில் இன்று தெளிவோடு புன்னகை பூத்தது.

இலக்கியா கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தாள். அதன் பின் அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை. வீட்டில் அமர்ந்திருக்கும் விஜயபூபதியிடமும் அவளுக்கு பேச பிடிக்கவில்லை. ‘அடுத்து என்ன?’ என்ற கேள்வி அவள் மண்டையை குடைந்தது.

தன் கவனத்தை திசை திருப்ப இலக்கியா சமையலறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். அவள் எண்ணம் விஜயபூபதியை சுற்ற, கவனமில்லாமல் அவள் எதையோ இழுக்க மேலே இருந்த டப்பா சரிந்து விழ அதிலிருந்த சர்க்கரை அவள் தலையில் கவிழ்ந்தது.

“ஹா.. ஹா…” பெருங்குரலில் சிரித்தான் விஜயபூபதி.

அவன் சிரிப்பில் அவள் அவனை முறைக்க முயல அவள் கண்களில் சர்க்கரை பட்டுவிட அவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள் .

அவள் கண்களை மூடியபடி தடுமாற, அவன் அவளை அலேக்காக தூக்கினான்.

அவன் வாயில் சர்க்கரை துளிகள் விழ, “ரொம்ப ஸ்வீட்ட்டா இருக்க இலக்கியா” அவன் ராகம் பாடினான்.

“அத்தான், என்னை இறக்கி விடுங்க” அவன் தோளில் அவள் குத்த, “நான் என்ன உன்னை ஆசைப்பட்டா கட்டிகிட்டேன்? தூக்கிட்டு போக” அவன் அங்கலாய்த்தான்.

“அப்ப இறக்கி விடுங்க.” அவள் கூற, அவன் அவளை குளியலறை நோக்கி தூக்கி சென்றான்.

“நீ கண்ணு தெரியாமல் கீழ விழுந்து, நீ உன் கையை உடைச்சிட்டா யார் டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போடுறது?” அவன் அவளை கைகளில் ஏந்தியபடி சந்தேகம் கேட்டான்.

“அத்தான்…” அவள் அலற, அவன் அவளை குளியலறையில் இறக்கி விட்டான்.

தண்ணீரை திறந்துவிட்டு, கைகளை கட்டி கொண்டு அவன் முன்னே நின்றான்.

“நீ என்னை கடமைக்காக பார்த்துகிட்ட மாதிரி என்னால் உன்னை பார்க்க முடியாது. உனக்கு செய்நன்றி கடன். மேலும், நாலு கால் பிராணி பிறப்பு.” அவன் கூற, அவள் அவனை பார்த்து முறைத்து கொண்டிருந்தாள்.

“நான் சொல்லலை மா. நீ எழுதி வச்சது தான். ஆனால், என் பிறப்பெல்லாம் அப்படி இல்லை. மனித பிறப்பு தான். எனக்கு உன்கிட்ட நன்றி கடன் எல்லாம் இல்லை. அது தான் நீ கையை உடைச்சிகிட்டா நான் உன்னை பார்க்க வேண்டாமுன்னு பத்திரமா தூக்கி கொண்டு நிறுத்தினேன்” அவன் கண்சிமிட்டினான்.

“கொண்டு வந்து நிறுத்திட்டீங்கல்ல? வெளிய போங்க.” அவள் ஆணையிட, “இது என் வீடு. நான் எங்க வேணும்ன்னாலும் நிப்பேன். என்னை வெளிய போக சொல்ல நீ யாரு?” அவன் அவளிடம் வம்பு வளர்த்தான்.

‘அத்தான் போக்கே சரி இல்லையே’ அவள் சிந்திக்க, நீர் மொத்தமும் அவளை முழுதாக நனைத்திருந்தது.

அவன் பார்வை அவளிடம் நிலைக்க, அவள் தன்னை குனிந்து பார்த்தாள். நீரில் நனைந்த அவள் சேலை, அவள் உடலோடு ஒட்டி கொண்டு அவள் வதனத்தை வடிவுற காட்டியது.

அடர்ந்த பச்சை நிற காட்டன் சேலை, அவள் வெற்றிடையை பளிச்சென்று காட்ட அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது. நீர் முத்துக்கள் அவள் சிவந்த கன்னத்தை தீண்ட, அவள் கன்னத்தை தீண்டும் பேராவல் அவனுள் எழுந்தது.

அந்த ஆசை, அவன் இதயத்தை தடக் தடக்கென்று பதட்டம் கொள்ள வைக்க, அவனுள் பல கேள்விகள் பறந்தது.

‘நான் தவறு செய்கிறேனா? நான் யாருக்கும் துரோகம் செய்கிறேனா?’ அவனுள் கேள்வி எழ, ‘இல்லை, நான் இப்படியே விலகி நின்றால் தான், நான் இலக்கியாவுக்கு செய்யும் துரோகம்.’ அவன் மனசாட்சி இடித்துரைத்தது.

அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான் விஜயபூபதி. அவள் உடல் சற்று நடுங்கியது. ‘இது என்ன அத்தான் இங்க இருந்து போக மாட்டேங்குறாங்க. என்னை இப்படி பார்க்குறாங்க.’ அவள் உடலில் மெல்லிய நடுக்கம்.

அவளிடமிருந்து சில தூர இடைவெளியில் சுவரில் எதிர்பக்கம் சாய்ந்திருந்தவன், நிதானமாக நடந்து அவளை நெருங்கினான். எந்த பாதங்களின் நடையை ஆவலாக பார்த்தாலோ, அந்த பாதங்களின் நடையை அவள் இன்று சற்று மிரட்சியோடு பார்த்தாள்.

‘அத்தான்… அத்தான்…’ அவள் மனம் அழைக்கத்தான் செய்தது. இதழ்கள் வார்தைகள் வராமல் இறுக மூடிக்கொண்டன.

நீரில் சற்று குளிர் மேலோங்க, அவள் கைகளை தன் உடலின் குறுக்கே கட்டி கொள்ள எத்தனிக்க, அவன் அவள் கைகளை பிடித்தான்.

“கைகள் பத்திரம்… எனக்கு விவாகரத்து கொடுக்கணுமே” அவன் ஆழமான குரலில் கூற, அவள் முகத்தில் வடிந்து கொண்டிருந்த நீரை மெல்ல தீண்டினான்.

“என்ன பண்ணறீங்க அத்தான்?” அவள் கேட்டுவிட்டாள்.

அவன் அவள் கன்னத்தில் வழிந்தோடிய நீரை மெல்ல ஊதினான்.

“இல்லை உன் கன்னம் சிவக்குது. சின்ன வயசில் இருந்து உன் கன்னத்தை பார்க்குறேன். இப்படி சிவந்ததே இல்லை. இன்னைக்கு தான் இப்படி சிவக்குது. அது தான் உண்மையா இல்லையான்னு பார்க்குறேன். வெட்கத்தில் சிவந்திருக்கா? இல்லை கோபத்தில் சிவந்திருக்கான்னு தெரிந்தா தானே நான் விவகாரத்தை ஒத்துக்கணுமா வேண்டாமான்னு முடிவு பண்ண முடியும்” அவன் மூச்சு காற்று அவள் செவிகளை தீண்ட அவன் பதில் கூறினான்.

“எல்லாம் கோபத்தில் தான் சிவந்திருக்கு. யாருக்கும் வெட்கம் வரலை.” அவள் கோபத்தில் படபடக்க, அவள் உடல் அசைவில், அவள் தேகம் நீரோடு அவன் தேகத்தை தீண்டி விலக, அவனுள் மெல்லிய வருடல்.  அவன் அதை ரசிக்க, அவள் நடுங்கி போனாள்.

‘இல்லை… இல்லை… இது நல்லதுக்கில்லை.’ அவள் பதற, அவன் அவள் அருகாமையை ரசித்து கொண்டு தன்னை மறக்க, “கிய்யா… கிய்யா…” என்று சத்தம் அவனை நனவுலகத்திற்கு கொண்டு வந்தது.

“அது என்ன கிய்யா… கிய்யா மேஜிக்?” அவளிடமிருந்து விலக மனமில்லாமல் அவன் பேச்சை வளர்க்க, “அதெல்லாம் இப்ப சொல்ல முடியாது.” அவள் சிடுசிடுத்தாள்.

“இப்ப ஏன் இப்படி எரிஞ்சு விழற?” அவன் சத்தமாக கேட்டுக்கொண்டு கோபமாக தள்ளியதில் அவள் சுவரோடு சாய்ந்து நின்றாள்.

அவன் அவள் கன்னத்தை பிடித்திருந்தான். அவள் அதரங்கள் குவிந்து, அவனுக்கு அழகாக காட்சி அளித்தது.

“ஏன் எரிஞ்சு விழறன்னு கேட்டேன்?” அவன் கேட்க, “நீங்க துர்காவை கல்யாணம் செய்யணும்” அவள் கூற, “இப்ப எனக்கு நீ மனைவியா? துர்கா மனைவியா?” அவன் கேட்டான்.

“…” அவள் பதில் கூறவில்லை. “உன்னை டைவர்ஸ் பண்ணிட்டு துர்காவை கல்யாணம் செய்யும் பொழுது இதெல்லாம் நான் அவ கிட்டயும் பேசிக்குறேன்.” அவன் கூற, அவனை வேகமாக தள்ளிவிட்டு, “என்ன கொழுப்பா?”அவள் சீறினாள்.

அவள் கோபத்தில் அவனுள் சாரல்.

“சரி… சொல்லு கிய்யா… கிய்யா மேஜிக்ன்னா என்ன? நமக்கு டைவர்ஸ் ஆகிருச்சுனா நான் எப்படி தெரிஞ்சிக்கிறது?” சுவரில் சாய்ந்திருக்கும் அவளின் இரு பக்கமும் கைகளை ஊன்றி அவன் வாகாக கேள்வி கேட்டான்.

மேலிருந்து விழுந்த நீர் அவர்கள் நின்ற நெருக்கத்தில் இருவரையும் நனைத்து சென்றது.

‘…’ அவள் பிடிவாதமாக மௌனம் காத்து எதிர்ப்பு தெரிவிக்க, அவன் தேகம் தீண்டி சென்ற நீர் அவனுக்கு அழைப்பு கொடுக்க, அவன் விரல் அவள் நெற்றியை மெல்ல தீண்டியது. நெற்றியில் வழிந்த நீர் கோபத்தில் வெடவெடத்து கொண்டிருந்த அவள் மூக்கை வருட, அவன் விரல்களும் அவள் மூக்கை வருடியது.

உருண்டோடிய நீர், அவள் உதட்டை பளபளக்க செய்ய அவன் அவள் இதழ்களின் பளபளப்பை ரசிக்க, “நான்… நான் சொல்லிடுறேன்…” அவள் இதழ்கள் இப்பொழுது தந்தியடித்தது.

“கிய்யா… கிய்யா மெஜிக்ன்னா…” அவள் தொண்டையை விழுங்க, அவன் அவள் அதரங்களை மூடினான்.

“நான் கேட்குறப்ப நீ சொல்லலை. இப்ப நீ சொலல் வேண்டாம். அது என்ன கிய்யா கிய்யான்னு நான் உனக்கு சொல்லி தரேன்.” அவன் முகத்தில் நமட்டு சிரிப்பு.

“கிய்யா…. ” அவன் கைகள் அவள் இடையை நெருங்கியது. அவள் நெஞ்சில் படபடப்பு கூடியது.

அவன் கைகளுக்கும் அவள் இடைக்கும் இடையில் காற்று புகும் இடைவெளி. இப்பொழுதோ மெல்லிய நீர்த்துளி புகுந்து கொண்டிருந்த இடைவெளி. அவன் இதய ஓசை அவளுக்கு  கேட்க, அவள் இதய  ஓசை அவனுக்கு கேட்டது.

அவள் மனம் அவன் அருகாமையை விரும்பியது. அவள் தேகம் அவன் தீண்டலை விரும்ப, அவள் விலகி கொள்ள எத்தனித்தாள்.

அவள் விலகப்போவதை உணர்ந்தவன் போல், அவள் வெற்றிடையை பற்ற, “கிய்யா… கிய்யா…” என்று குருவிகள் வெளியே கூச்சலிட்டன.

அவன் பிடிமானம் அதிகரிக்க, “கிய்யா… கிய்யா மேஜிக்ன்னா நான் என்னன்னே சொல்லையே . அதுக்குள்ளையே விலகினா எப்படி.” அவன் அவளை இடையோடு சேர்த்து கொண்டான்.

“கிய்யான்னா….” அவன் அவள் நெற்றியை நெருங்க, அவள் இமைகள் படபடத்தன. அவள் படபடப்பை அவன் விழிகள் ரசிக்க, அவன் இதழ்கள் அவள் முகத்தை நெருங்க, “கிய்யான்னா…” அவன் மேலும் பேசவில்லை.

இடையை சுற்றிய அவன் கைகள், மெல்ல உரிமையாய் அவளை தீண்ட, மனதின் வேட்க்கையால் அவனை விலக்கவும் முடியாமல், அறிவின் கட்டளைக்கு இணங்கி  அவனை ஏற்றுக்கொள்ளவும் இயலாமல், “அத்தான்… அத்தான்…அத்தான்…” அவன் மார்பில் சாய்ந்து கதறினாள் இலக்கியா.

அவள் கதறல் அவனுக்கு வலித்தாலும், இந்நேரம் அவள் கதறல் அவனுக்கு இனித்தது.

“கிய்யான்னா என்னனு நான் இன்னும் சொல்லவே இல்லையே…” அவன் ஆரம்பிக்க, “அத்தான்… என்னால் முடியலை. அந்த வார்த்தை என்னை என்னன்னவோ செய்யுது.” அவள் அவன் வாய்மூடி அவன் தோள் சாய்ந்து விம்மினாள்.

அவளை விலக்கி நிறுத்திவிட்டு படபடவென்று விலகி சென்றான் விஜயபூபதி.

அவனுக்கு மேலே குருவிகள், “கிய்யா… கிய்யா…” என்று சத்தம் எழுப்பிக்கொண்டு பறக்க, அவன் முகத்தில் ரசனையோடு கூடிய புன்னகை.

‘தனியா அழுத இலக்கியா இன்னைக்கு என் தோள் சாய்ந்து அழறா. கூடிய சீக்கிரத்தில், அவள் மனதை அதில் மண்டிக்கிடக்கும் வலியை என்கிட்டே சொல்லுவாளா?’ அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

சிறகுகள் விரியும்…