Kiyaa-4

Kiyaa-4
கிய்யா – 4
‘நிச்சயதார்த்தமா? இல்லை திருமணமா?’ என்று சந்தேகிக்கும் வகையில் மண்டபத்தில் கூட்டம் அலைமோதியது.
கொரோனா, முதல் அலை முடிந்திருந்த நேரம். சிலர் முகத்தில் முக கவசம் இருந்தது. பலர் முகத்தில் இல்லை.
முக கவசம் அணிந்து இருந்தவர்ளை கேலி செய்து கொண்டிருந்தது ஒரு கூட்டம். ஒவ்வொரு தூணிலும் செல்வச் செழிப்பு ஜொலித்து கொண்டிருந்தது.
பழங்கள், இனிப்பு வகைகள், உலர்ந்த பழங்கள், பலவித உடைகள், நகைகள் என தங்க தட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வரிசை தட்டுக்கள் அடுக்கப்பட்டிருந்தன.
துர்கா வீட்டினரும் விஜயபூபதி வீட்டினரும் தாம்பூலம் மாற்றிக்கொண்டனர்.
நிச்சயதார்த்தம் இனிதே அரங்கேறியது. துர்கா பிங்க் நிற சேலையில் ஜொலித்தாள். அவள் முகமும் வெட்கத்தில் சிவந்து, அந்த சேலையோடு போட்டி போட்டது.
விஜயபூபதி வெந்நிற கோட் சூட்டில் கம்பீரமாக இருந்தான். அவன் நிற்கும் விதத்திலும், அவன் நடக்கும் விதத்திலும், பல பெண்கள் மயக்கத்தோடு அவனை பார்க்க, துர்கா அவனை பெருமிதத்தோடு பார்த்தாள்.
அவனை பார்த்த மாத்திரத்தில், அவன் அவளை பார்த்து புருவம் உயர்த்த, அவள் பெருமித புன்னகை வெட்க புன்னகையாக மாறியது.
துர்கா முகத்திலும், விஜயபூபதி முகத்திலும் ஒரு வித கலை குடிகொண்டிருந்தது. காரணம் இல்லாமல் பார்த்து கொண்டார்கள். காரணம் இல்லாமல் சிரித்து கொண்டார்கள். காரணம் இல்லாமல் வெட்கப்பட்டு கொண்டார்கள்.
‘இல்லை அவர்களுக்கு காரணம் இருந்ததோ?’ இவர்களை பார்த்து கொண்டிருந்த இலக்கியா, “கல்யாணம் ஒரு தேசிய வியாதி.” என்று தன் அருகே அமர்ந்திருக்கும் தம்பி ஸ்ரீராமின் காதில் கிசுகிசுத்தாள்.
“என்ன அக்கா ஏதேதோ உளறுற?” என்று ஸ்ரீராம் கேட்க, “கல்யாணம் பத்தி எவ்வளவு ஜோக் வருது? பொண்டாட்டி பத்தி எவ்வளவு ஜோக் சொல்லி சிரிக்குறாங்க? பொண்ணுங்க கல்யாணம் பத்தி நெகட்டிவா பேசுறாங்க? ஆனால், பேச்செல்லாம் பேச்சோட போயிடுது பாரேன்! கல்யாணம் அப்படின்னா எல்லாருக்கும் ஒரு ஆர்வம் வந்துடுது. இப்படி ஜோரா கிளம்பி வந்திடறாங்க” என்று இலக்கியா விழிகளை விரித்தாள்.
“அக்கா, நீ வம்பு வளர்க்க ரெடியாகிட்ட. உன் கூட இருந்து நான் அடி வாங்க விரும்பலை. மீ எஸ்கேப்” அவன் நழுவிக்கொண்டான்.
ஸ்ரீராம், வேகமாக செல்வதை பார்த்த பாட்டி, “என்ன இலக்கியா சொன்னே? இப்படி ஓடுறான்?” என்று தன் கண்ணாடியை சரி செய்தபடி கேட்டார்.
“நான் என்ன பெருசா கேட்டேன். கொரோனா காலம். இவ்வளவு கூட்டம் தேவையா? உங்க மகன் கிட்ட காசு இருந்தாலும், இந்த ஆர்ப்பாட்டம் ரொம்ப ஓவரா இருக்கு. ஊர் பெருமைக்கு செய்த மாதிரி இருக்கு . இந்த ஆடம்பரம் தேவையான்னு கேட்டேன்?” என்று இலக்கியா பாட்டியை பார்த்து கண்ணுருட்ட, பாட்டி தன் பேத்தியை முறைத்து பார்த்தாள்.
“நான் உண்மையை சொன்னேன். நீங்க ஏன் பாட்டி முறைக்குறீங்க?” அவள் பாட்டியிடம் சண்டைக்கு செல்ல, “ஏற்கனவே உங்க அத்தை, நாம அவ மேல பொறாமை படுற மாதிரியே பார்ப்பா. இந்த லட்சணத்துல, நீ வேற இப்படி பேசி வைக்காத” என்று தன் பேத்தியை மிரட்டினார் பாட்டி.
“எல்லாரும் கிஃபிட் கொடுக்கறாங்க. நீ ஏதோ கேக் செய்தேன்னு சொன்னியே. அதை கொடு, நாம வீட்டுக்கு கிளம்புவோம்” பாட்டி கூற, “என்ன பாட்டி, உங்க பேரன் நிச்சயதார்த்தம். இப்படி விறுவிறுன்னு கிளம்பணும்னு சொல்றீங்க?” என்று இலக்கியா கண்களை சுருக்கினாள்.
“இருக்கணுமுன்னு தான் எனக்கு ஆசை. ஆனால், நீ மாஸ்க்கை கழட்ட கூடாதுன்னு சொல்ற. எனக்கு இந்த மாஸ்க் போட்டுக்கிட்டு மூச்சு விட கஷ்டமா இருக்கு. மாஸ்க் போட்டுக்கிட்டு மத்தவங்க பேசறதும் தெளிவா இல்லை. எனக்கு கேட்கறதுக்கு ரொம்ப சிரமமா இருக்கு. இதுக்கு பேசாம வீட்டுக்கு போய்டலாம் போல இருக்கு” என்று பாட்டி சலித்து கொண்டார்.
“சரி பாட்டி. உங்களுக்கு சௌகரியம் இல்லைனா, கிளம்பிருவோம். இதோ கேக் எடுத்துட்டு வரேன்.” என்று கூறி சிட்டாக பறந்தாள் இலக்கியா.
இலக்கியா மேடைக்கு அவள் செய்த கேக்கை எடுத்து வர, அனைவரின் பார்வையும் அவள் மீது தான் இருந்தது.
இலக்கியா மேடைக்கு செல்ல, “வாவ்…” என்று ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள் துர்கா.
“எவ்வளவு பெருசு? அதுவும் ட்ரிபிள் லேயர் கேக். எங்க டிரஸ் கலருக்கு மேட்ச்சா பிங்க் அண்ட் வொய்ட்ட்ல. பிங்க் ரோசெஸ் வைத்து… என் பெயரும் பூபதி பெயரும் ஒவ்வொரு லேயரில் போட்டு… சூப்பர் இலக்கியா. சூப்பர்” துர்கா இலக்கியாவை பாராட்டும் விதமாக அடுக்கி கொண்டே போனாள்.
“நான் ஏதாவது கொடுத்தா நீ வாங்க மாட்ட. நீ மட்டும் இவ்வளவு பெரிய கேக் கொடுத்தா நான் வாங்கணுமா?” என்று சிறுபிள்ளை நோக்கோடு அவளிடம் சண்டையிட விஜயபூபதி சிடுசிடுத்தான்.
“விஜயபூபதி, உங்களுக்கு யாரும் கேக் கொண்டு வரலை. நான் துர்காவுக்கு தான் கொண்டு வந்தேன்.” அவள் அவர்கள் முன் கேக் வைக்க, “நீங்க ரெண்டு பெரும் எப்பவும் இப்படி தான் சண்டை போடுவீங்களா?” துர்கா அவர்களை பார்த்து கேலியாக கேட்டாள்.
“நான் சண்டை போட மாட்டேன். இவ தான் திமிர் பிடித்தவள். வம்பு இழுப்பா. நான் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் கேக் வாங்கிட்டு போவேன். வாங்கிக்க மாட்டா. திருப்பி கொடுத்திருவா. ஏதாவது வேணுமான்னு கேட்டாலும் வேண்டாமுன்னு சொல்லுவா” அவன் துர்காவை நெருங்கி புகார் கடிதம் அவள் காதில் சத்தமாக கிசுகிசுத்தான். அவனுக்கு துர்காவை நெருங்க ஒரு சாக்கு.
அவன் குற்றச்சாட்டை பார்த்து இலக்கியா நாக்கை துருத்தினாள். பாவம் அவர்கள் அறியவில்லை. வரும் பிறந்தநாளுக்கு இலக்கியா பரிசு கேட்பாள் என்றும், அவனும் அதை செய்வான் என்றும்!
“துர்கா, நம்பாதீங்க. இவன் ஒரு அம்மா பிள்ளை. அவன் அம்மா என்ன சொன்னாலும் சரின்னு சொல்லுவான். வீட்டுக்கு வந்ததும், தனி குடித்தனம் கூட்டிட்டு போய்டுங்க. இல்லை, எங்க மாமா, அத்தையை கிராமத்துக்கு அனுப்பிடுங்க.” இலக்கியா அந்த பிரமாண்ட கேக்கை அவர்கள் வெட்டுவதற்கு ஏதுவாக வைத்து கண்சிமிட்டி துர்காவுக்கு இலவச ஆலோசனை வழங்கினாள்.
“கிராதகி எங்க அம்மா உன்னை பத்தி சொல்றதெல்லாம் உண்மை தான்.” விஜயபூபதி அவளிடம் பாய, துர்கா அவர்கள் பேச்சை ரசித்து சிரித்தாள்.
கீழே இருந்து பார்ப்பவர்களுக்கு இவர்கள் ஏதோ கேலி பேசுவது போல காட்சி அளிக்க, அவர்கள் கண்களோ, கீழ் அடுக்கில் அடுக்கடுக்காய் ரோஜா பூக்களும், மேல் அடுக்கில் துர்காவின் பெயரையும், அதற்கு மேல் அடுக்கில் பூபதியின் பெயரையும் தாங்கி கொண்டிருந்த கேக்கின் மீதே இருந்தது.
பலரின் பார்வை கேக்கையும் இளம் ஜோடியையும் வட்டமிட, நிர்மலாதேவியின் பார்வை தன் மகனையும் மருமகளையும் வட்டமிட்டாலும், அவர் பார்வை சற்று வெறுப்பாக இலக்கியா மீதே வந்து நின்றது.
“சரி… சரி… பேசினது போதும் கேக் கட் பண்ணுங்க.” கீழே இருந்து ஒரு குரல் வர, “ஆமா… சீக்கிரம், அப்படியே பொண்ணு மாப்பிளைக்கு சுத்தி போடணும். எல்லார் கண்ணும் பட்டிருக்கும்.” விஜயபூபதியின் தாயார் நிர்மலா தேவி, இலக்கியாவை பார்த்தபடி கூறினார்.
“ஆமா… ஆமா சீக்கிரம் சுத்தி போடுங்க. அப்படியே நான் செய்த கிஃப்ட்டையும் சேர்த்து சுத்திப்போடுங்க. நிறைய பேர் கண்ணு பட்டது.” இலக்கியா தோள்களை குலுக்கி கொண்டு சென்றாள்.
கேலி பேச்சுக்கள், சிரிப்பு, வம்பு பேச்சுக்கள் என அந்த இடம் களைகட்டியது.
ஒரு வாரத்திற்கு பின், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில்.
“உன்னை இந்த போட் ரைட் கூட்டிட்டு வரதுக்குள்ள…” விஜயபூபதி சலித்து கொள்ள, “கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மாசம் தானே இருக்கு. இப்ப ஏன் வெளியே போகணுமுன்னு சொல்றாங்க.” துர்கா அவன் தோளில் வாகாக சாய்ந்து கொண்டாள்.
“மனசாட்சி இல்லாம சொல்றாங்க. ரெண்டு மாசம் தான் இருக்கா? ரெண்டு மாசம் இருக்கு” அவன் கைகளை விரித்து பரிதாபமாக கூற, விரிந்த அவன் கைகளுக்குள் அடைக்கலமானாள் துர்கா.
அவன் மார்பில் அவள் சாய்ந்து கொள்ள, அவன் தன் கைவளைவுக்குள் அவளை பொதித்து கொண்டான்.
துர்கா அவன் மேல் சாய்ந்து கொண்டு, அவனை முகம் நிமிர்த்தி பார்த்தாள்.
“கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படியே இருப்ப தானே?” அவள் கேட்க, “என்ன திடீர் சந்தேகம்?” அவன் அவள் தலை முடியை ஒதுக்கி விட்டு கேட்டான்.
“இல்லை…” அவள் தடுமாற, அவன் புருவம் உயர்த்தினான்.
“நீ அம்மா பிள்ளைன்னு இலக்கியா சொன்னாங்க.” அவள் ராகம் பாட, “சரி…” அவன் தீவிரமாக கேட்க, “நான் கேட்க வரது புரிஞ்சும், நீ புரியாத மாதிரி நடிக்கிற…” துர்கா கோபமாக விலகி கொள்ள எத்தனிக்க, அவன் அவளை தன்னோடு நெருக்கி கொண்டு, “ஹா… ஹா… ” என்று பெருங்குரலில் சிரித்தான்.
“துர்கா பார்க்க தான் அமைதி. துர்காவுக்கும் கோபம் வரும். துர்காவும் பிடிவாதக்காரி தான்” அவள் முகத்தை திருப்பி கொள்ள, “எனக்கு என் துர்காவை பற்றி தெரியாதா?” அவன் அவள் முகத்தை நிமிர்த்தி கேட்டான்.
“ம்… இல்லை, எனக்கு உன் அளவு வசதி கிடையாது. நாம லவ் மேரேஜ் வேற… அது தான் உங்க வீட்டில்…” அவள் தயங்க, “எங்க வீட்டில் உனக்கு எந்த பிரச்சனையும் வராது. இலக்கியாவுக்கும் அம்மாவுக்கும் ஒத்து வராது. அது தான் அவ விளையாட்டா கேலி செய்யறா. இலக்கியாவும் ரொம்ப நல்ல மாதிரி. எங்க வீட்டுக்கு நீ வந்த பிறகு, உனக்கு அவ சகோதரியா இருப்பா” அவன் கூற, அவள் தலை அசைத்து கொண்டாள்.
“உனக்கு எது நல்லதோ, அதை மட்டுந்தான் நான் செய்வேன். உன் சந்தோசம் எனக்கு ரொம்ப முக்கியம்…” அவன் தொடர்ந்து உணர்ச்சிவசப்பட, அவள் அவன் இதழ்களை தன் கரம் கொண்டு மூடி மறுப்பாக தலை அசைத்தாள்.
“நீ இவ்வளவு பேச வேண்டாம் பூபதி. எனக்கு உன்னை பத்தி தெரியும். ஏதோ கேட்கணுமுனு தோணுச்சு கேட்டுட்டேன்.” அவள் உணர்ச்சியோடு பேசி கொண்டே விலகி அமர்ந்தாள்.
அவர்கள் அறியவில்லை, அவர்கள் சந்தோசம் கேட்க போகும் விலையை!
“ஏன் தள்ளி போற?” கேட்டுக்கொண்டே அவன் அவளை இழுத்தான்.
அவன் அவளை இழுத்த வேகத்தில், அவள் கழுத்தில் அன்று விஜயபூபதி பரிசளித்த விலை உயர்ந்த சங்கிலி, தண்ணீருக்குள் விழுந்து, அருகே இருந்த செடியில் மாட்டி கொண்டது.
சங்கிலி விழுந்த வேகத்தில் தண்ணீருக்குள் “டோம்…” என்று குதித்து நீந்தி அதை பற்றினாள் துர்கா.
நொடிக்குள் நடந்த சம்பவத்தில், விஜயபூபதியின் இதயம் நின்று துடித்தது.
படகில் இருந்த படி அவள் முடியை பிடித்து இழுத்து அவளை கொத்தாக தூக்கினான் விஜயபூபதி.
அவள் படகிற்கு வந்ததும், அவன் கைகள் அவள் கன்னத்தை பதம் பார்த்தது. அவன் கண்களில் கண்ணீர் கோர்த்து கொண்டது.
“அது ஒரு செயின் அவ்வுளவு தானே? அதுக்காக இப்படி லூசு மாதிரி குதிக்குற? உனக்கு ஏதாவது ஆகிருந்தா?” அவன் கோபத்தின் உச்சியில் கத்த, “ஒரு செயின் தான்னு சொல்ற. அன்னைக்கு நீ தானே தாலின்னு சொன்ன. உன் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் நான் அவ்வளவு சீக்கிரத்தில் விட்டு கொடுக்க மாட்டேன்.” அவள் பிடிவாதமாக உதட்டை பிதுக்கினாள்.
அவள் கண்களிலும் கண்ணீர் கோர்த்து கொண்டது. “எனக்கு என்ன ஆனாலும் நான் கண்டுக்க மாட்டேன். எனக்காக நீ இருக்க தானே?” அவள் கண்ணீரோடு விசும்ப, அவள் கண்ணீர் அவன் மனதை நனைத்தது.
“துர்கா…” அவன் அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டான்.
‘நான் இருக்கிறேன்… நான் இருக்கிறேன்…’ சொல்லாமல் சொல்லியது அவன் செய்கை.
அப்பொழுது அலைபேசி ஒலிக்க, இருவரும் சட்டென்று விலகி கொண்டார்கள்.
அவன் அலைபேசியை எடுக்க, “இலக்கியா…” அவன் உதடுகள் முணுமுணுத்தன.
“ஹலோ…” அவன் கூற, “அத்தான்…” அவள் குரல் ஒலித்தது.
“ஹலோ… ஹலோ…” அவன் குரலில் பதட்டம் சூழ்ந்து கொண்டது. “என்ன ஆச்சு?” துர்கா கேட்க, “சிக்னல் இல்லை. நாம் காருக்கு போவோம்.” அவர்கள் கரை நோக்கி படகை செலுத்தினர்.
“எதுவும் பிரச்சனையா?” துர்கா கேட்க, “அப்படி தான் நினைக்குறேன். ஏதாவது பிரச்சனைனா மட்டுந்தான், இலக்கியா அத்தான்னு என் உதவியை நாடி வருவா.” அவன் முகத்தில் பதட்டம் அப்பட்டமாக தெரிந்தது.
‘….’ என்னவென்று தெரியாமல் அவர்கள் முகத்தில் சிந்தனை ரேகை பரவியது.
இலக்கியாவின், ‘அத்தான்…’ என்ற அழைப்பே, அவன் இதயத்தை அழுத்தியது.
சிறகுகள் விரியும்…