kiyya-8

kiyya-8
கிய்யா – 8
நேரம் சற்று கடந்திருக்கவே, பாட்டிக்கு விஜயபூபதியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
“இலக்கியா, என்னைக் கொஞ்சம் விஜய்யை பார்க்கக் கூட்டிட்டு போயேன். முன்ன மாதிரின்னா நானே தனியா போய்டுவேன். இப்ப கொஞ்சம் தலை சுத்து அதிகமா வருது.” அவர் இலக்கியாவிடம் கோரிக்கையாகக் கேட்டார்.
“பாட்டி, நான் அங்க வரமாட்டேன். அவங்க ரொம்ப பேசறாங்க.” இலக்கியா மறுப்பு தெரிவித்தாள்.
“இலக்கியா, அவங்க என்ன இன்னைக்கு நேத்தா புதுசா பேசுறாங்க? எப்பவும் பேசுறது தானே? நீ கண்டும் காணாமலும் போக வேண்டியது தானே ?” என்று பாட்டி அறிவுரை கூற, “அது சரி, அவங்களுக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா?” இலக்கியா தன் இடுப்பில் கை வைத்து தன் பாட்டியிடம் எகிறினாள்.
“எல்லாம் என் தலை எழுத்து, என்னால் முடிஞ்சா நானே போய்டுவேன். உன்கிட்ட கெஞ்சவிட்ட அந்த பெருமாளை சொல்லணும். தினம் தினம் அவனை சேவிக்குறேன். என்னை அழைச்சுகிறானா பாரு. என் பேரனை இந்த வயசில் படுக்க வச்சி அதை என்னை பார்க்க வச்சி வேடிக்கை பார்க்கிறான்” அவர் புலம்ப ஆரம்பித்தார்.
“பாட்டி, புலம்பாதீங்க. நான் கூட்டிட்டு போறேன்” பற்களை நறநறத்தாள் இலக்கியா.
“என் மனசை மட்டும் இரும்பால் செஞ்சி வச்சிருக்காங்க. நான் மட்டும் எல்லார் பேச்சையும் கேட்கணும். எனக்குன்னு ஒரு காலம் வராமலா போய்டும். அன்னைக்கு எல்லாருக்கும் வைக்கிறேன் வேட்டு” என்று இலக்கியா முணுமுணுக்க, “என்னை என் பேரனை பார்க்க கூட்டிட்டு போற சரி. அதை கொஞ்சம் சிரிச்சிகிட்டே செய்யேன்” பாட்டி கூற, இலக்கியா “ஈ…” என்று பற்களைக் காட்டினாள்.
“இதுக்கு நீ சிரிக்காமலே இருக்கலாம்.” அவர் கூறிக்கொண்டே தன் பேரனைப் பார்க்கக் கிளம்பினார்.
ஒரு வளாகத்திலிருந்தாலும், தோட்டத்து வீட்டுக்கும், விஜயபூபதியின் வீட்டிற்கும் சற்று நடக்க வேண்டும். பாட்டி மெதுவாக நடக்க, இலக்கியா அவரை கைபிடித்து அழைத்துச் சென்றாள்.
அதே நேரம், துர்கா வேகமாக விஜயபூபதியின் வீட்டிற்குள் நுழைந்தாள். நிர்மலாதேவி அவளிடம் பேச முற்பட, ரங்கநாத பூபதி அவளை யோசனையாக பார்த்தார்.
“என்ன இலக்கியா? இந்த பொண்ணு இவ்வளவு வேகமா போகுது? எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டார் பாட்டி.
“ம்… உங்க மருமகளும், பேரனும் இருக்கிற இடத்தில் பிரச்சனை இல்லாமல் இருக்குமா? இருந்தாலும், நீங்களும் தாத்தாவும் மாமாவுக்கு ஒரு நல்ல பெண்ணாய் பார்த்து கல்யாணம் பண்ணிருக்கலாம். உங்களுக்கு ஒரு நல்ல பேரனும் பிறந்திருப்பான். உங்களுக்கு பொண்ணு பார்க்குற விஷயத்தில் அவ்வளவு சாமர்த்தியசாலித்தனம் பத்தலை” என்று வருத்தம் தெரிவித்தாள் இலக்கியா.
“என்ன டீ கொழுப்பா?” என்று பாட்டி கேட்கவும், அவர்கள் வீட்டிற்குள் நுழையவும் நேரம் சரியாக இருந்தது.
வீட்டில் அனைவரும் துர்காவிடம் பேச முற்பட, துர்கா யாரிடமும் பேச விருப்பம் இல்லை என்பது போல் நேராக விஜயபூபதியின் அறைக்குள் நுழைந்தாள். விஜயபூபதி கண்களை இறுக மூடி படுத்திருந்தான்.
“பூபதி, நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க?” துர்கா நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.
‘உன்னைத் தான்…’ அவன் அகமும் புறமும் ஒரு சேர துடிக்க, இடையில் இதழ்களோ, “நிச்சயமா உன்னை இல்லை” என்றது குறுஞ்சிரிப்போடு அவளை சமாளிக்கும் விதமாக.
“ரொம்ப புத்திசாலி தனமா பேசுறதா நினைப்பா?” அவள் கேட்க, “அப்ப, அடிபட்டத்தில் என் புத்தி பேதலிச்சு போச்சுன்னு சொல்றியா ?” அவன் அவளைக் கூர்மையாகப் பார்த்தபடி கேட்டான்.
அவன் வார்த்தையில் அவள் ஒரு நொடி பதறித்தான் போனாள். ‘இல்லை, பூபதி பிரச்சினையைத் திசை திருப்ப முயற்சிக்கிறான்.’ தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள் துர்கா.
“அப்பா கிட்ட என்ன சொன்ன?” அவள் கேட்க, “ஏன், உன் அப்பா சொல்லலியா?” அவன் அசராமல் கேட்டான்.
“பூபதி, நான் கடுங்கோபத்தில் வந்திருக்கேன். இப்படி குதர்க்கமா பேசி என்னை நீ இன்னும் கோபப்படுத்துற” அவள் தன் நிதானத்தை இழந்து கொண்டிருந்தாள்.
“சரி, நான் எதுவும் அனாவசியமா பேசலை. உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு உங்க அப்பா கிட்ட சொல்லிட்டேன். உன்னை இங்க வரவேண்டாமுன்னு சொன்னேன். அனாவசியமா இங்க வந்திருக்கிறது நீ. குதர்க்கமா பேசுறது நீ” அவன் அழுத்தமாகக் கூற, அவள் கண்கள் கலங்கியது.
அவள் கண்கள் கலங்கியதும், அவன் தாடை இறுகியது.
“துர்கா வெளிய போ” அவன் குரல் ஓங்கி ஒலிக்க, “போக மாட்டேன்.” அவள் குரல் பிடிவாதமாக வெளிவந்தது.
“இந்த அறையை விட்டுப் போக மாட்டேன். உன்னை விட்டுப் போக மாட்டேன். உன் வாழ்க்கையை விட்டும் போக மாட்டேன்.” அவள் ஓடிச் சென்று அவன் மார்பில் விழுந்து கதறினாள்.
அவன் இரும்பாய் இறுகிப் போனான். தன் கண்களை மூடிக்கொண்டு வேறு பக்கம் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
அவன் இடது கையால் அவள் தலை முடியைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கினான்.
“வெளிய போய்டு துர்கா.” அவன் கட்டளையிட, “என் முகத்தைப் பார்த்து சொல்லு பூபதி. கண்ணைத் திறந்து சொல்லு பூபதி.” அவள் அவனுக்குக் கட்டளையிட்டாள்.
“பூனை கண்ணை மூடிவிட்டு உலகம் இருட்டுன்னு சொல்லுமா. அந்த மாதிரி நீ கண்ணை மூடிக்கிட்டு பேசினா எல்லாம் சரியாகிருமா? என் முகத்தைப் பார்த்து சொல்லு. எனக்கும், உனக்கும் எந்த சம்பந்தமுமில்லைன்னு என்னை பார்த்து சொல்லு.” அவள் சவால் விட்டாள்.
அவன் சற்று தடுமாறினான். தன் மூச்சை உள்ளிழுத்து, சிந்தித்தான் விஜயபூபதி. அவன் அறிவு சிந்தித்தாலும், அவன் மனம், ‘என் துர்கா… என் துர்கா…’ என்று கதறியது.
அவளிடம் சரண் புகவே அவன் இதயம் விழைந்தது. ‘உணர்வில்லா உடலை வைத்துக் கொண்டு மனதிற்கு என்ன உணர்வு?’ அவன் அறிவு அவன் ஆசையை அடக்கி அவன் இதயத்தில் கேள்வியை ஈட்டியாய் இறக்க அவன் சர்வம் அடங்கி கட்டுக்குள் வந்தான்.
அவள் முகத்தை நிமிர்வாய் பார்த்தான்.
“என்ன சொல்லணும்?” அவன் இப்பொழுது நிதானமாகக் கேட்டான்.
அவள் எதுவும் பேசவில்லை. “எல்லாத்தையும் முடிச்சிக்கலாம் துர்கா ப்ளீஸ்” அவன் குரல் இப்பொழுது கெஞ்சியது.
அவன் கைகளை எடுத்து அவள் கழுத்தில் வைத்தாள். அவன் விரல்களால் அவன் அன்று அணிவித்த சங்கிலியை அழுத்தினாள்.
சங்கிலி கொடுத்த அழுத்தத்தில் இருவருக்குள்ளும் பழைய நினைவுகள் அழுத்தத்தைக் கொடுத்தது.
துர்காவின் கன்னம் வழியாக வழிந்த கண்ணீர் அவன் கன்னம் தொட, “வெளிய போ துர்கா” அவன் துடித்தான்.
“இதை தாலின்னு சொன்னியே பூபதி” அவள் குரல் தழுதழுக்க, “அக்கினி சாட்சியா, பெரியவங்க வாழ்த்து சொல்லி கட்டினா தான் அது தாலி. எல்லாம் தாலி ஆகுமான்னு கேட்டியே துர்கா?” இதயம் இடமாறிய காலம் கடந்து, அவர்கள் உரையாடல்கள் இடம் மாறிக் கொண்டன.
“அப்படி நினைச்சிருந்தா, நான் அன்னைக்கு தண்ணியில் குதிச்சிருப்பேனா பூபதி?” அவள் தன் காதலை அவனுக்குப் புரிய வைக்க முயல, “அந்த அளவு நீ அன்னைக்கு ரிஸ்க் எடுத்திருக்க வேண்டாம் துர்கா. நம்ம காதலின் அளவு அந்த சங்கிலிக்கு கூட தெரிஞ்சிருக்கு.” அவன் கைகளை உருவிக் கொண்டு விரக்தியாக கூறினான்.
புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் செய்பவனை என்ன செய்வது, அவளுக்குப் புரியவில்லை. அவனுக்குப் புரிய வைக்கும் வழியும் தெரியவில்லை. அவனை விட்டுச்செல்லவும் அவளுக்கு மனமில்லை.
“கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி ஆகிருந்தா என்னை இப்படி தான் வெளிய போக சொல்லுவியா பூபதி?” அவள் அவனைப் பார்த்து கேட்க, “இது தான் வாழ்க்கைன்னு நீ என் கூட வாழ்ந்திருப்ப? அப்படித்தானே துர்கா?” அவன் கேள்வியாக நிறுத்தினான்.
“இதுல என்ன சந்தேகம். இது தான் வாழ்க்கைன்னு ஏத்துக்கிட்டு நான் வாழ்ந்திருப்பேன்” அவள் அழுத்தமாகக் கூறினான்.
“அதே தான் நான் சொல்றேன். நீ ஏத்துக்கிட்டு வாழ வேண்டிய அவசியமில்லை. சந்தோஷமா இரு. விதியேன்னு ஏன் என் கூட வாழணும்னு கேட்குறேன்?” அவன் கூர்மையாகக் கேட்டான்.
“நீ செய்றது விதண்டாவாதம்” அவள் கூற, “இல்லை, எதார்த்தம்” அவன் நிதானமாக அவளுக்குப் புரிய வைக்க முயற்சிதான்.
“எனக்கு இப்படி அடிபட்டிருந்தா என்னை நீ விட்டுட்டு போயிருப்பியா பூபதி?” அவள் அவனைப் பார்த்து பரிதாபமாகக் கேட்டாள்.
அந்த கேள்வி அவனை சுரீரென்று தாக்கியது.
‘மாட்டேன்… மாட்டேன்… உன்னை என் உள்ளங்கையில் வைத்து காத்திருப்பேன்.’ கத்த வேண்டும் என்று அவனின் ஒவ்வொரு அணுவும் துடித்தது.
ஆனால், அதன் விளைவு? தன்னை நிதானித்தான் விஜயபூபதி.
‘பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.’ என்றோ படித்த திருக்குறள் அவனை தொட்டது.
‘நல்லதுக்காக ஒரு பொய்யை சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?’ அவன் அவளைக் கூர்மையாகப் பார்த்தான்.
“நான் உன்னை கல்யாணம் செய்ய நினைத்தாலும், என் அம்மா அப்பா இப்படி ஒரு பொண்ணை வேண்டாமுன்னு சொல்லிருப்பாங்க. அவங்களுக்கு என் எதிர்காலம் முக்கியம். நான் அவங்க பேச்சை தான் கேட்டிருப்பேன்” பொய் என்றறிந்தும் தீர்க்கமாய் உரைத்தான் அவன்.
அவள் அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள். “உங்க வீட்டில், உன் வாழ்க்கை உன் சந்தோஷத்தை யோசிப்பாங்க. விலகி போய்டு துர்கா” அவன் அழுத்தமாகக் கூறினான்.
“பொய் சொல்ற பூபதி. நீ என்னை தாங்கி இருப்ப. விட்டுட்டு போயிருக்க மாட்ட பூபதி. எனக்கு என் பூபதியை தெரியும்” அவள் தன் காதலனின் காதலை உணர்ந்து பேசினாள்.
“உன் காதலனை உனக்கு சரியா தெரியலை துர்கா. எனக்கு கொடுத்து தான் பழக்கம். நான் நிறைய கொடுப்பேன். பலருக்கும் கொடுத்து தான் நீ என்னை பார்திருக்கிற. உனக்கும் விலைமதிப்பில்லா பரிசை தான் கொடுப்பேன். இப்ப, என்னை பார்த்துக்கோன்னு உன்கிட்ட என்னை கை ஏந்த சொல்லறீயா? நான் யாரிடமும் கை ஏந்த மாட்டேன். நான் யாரிடமும் கை ஏந்த மாட்டேன்.” அவன் கத்தினான்.
உணர்ச்சியின் பெருக்கில் அவன் மேல் உடல் மட்டும் வேகவேகமாக அசைந்தது. கீழ் உடல் கட்டை போல் கிடக்க, அவன் பலம் கொஞ்சம் கொஞ்சமாக பலத்தை இழக்க ஆரம்பித்தது.
“நான் போக மாட்டேன். நான் உன்னைவிட்டு ஒரு நாளும் போக மாட்டேன். நான் உனக்கு மனைவியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நான் உன் காதலி, மனைவி அப்படிங்குற பதவியை கொடுக்க தான் நீ வேணும்.” அவள் பேச, “நீ என் காதலி இல்லை. நான் உன்னை என் காதலின்னு சொன்னால் தான், நீ என் காதலி. நான் இல்லைன்னு சொன்னால், நீ என் காதலியும் இல்லை. என் மனதை புரிந்து கொள்ளாத நீ, என் பேச்சை கேட்காத நீ என் காதலியாக இருக்க முடியாது.” அவன் உக்கிரமாக கத்தினான்.
“நான் உன் காதலி இல்லை?” அவள் பரிதவிப்போடு கேட்டாள். அவள் கண்கள் நீரை சொரிந்து கொண்டே இருந்தது. அவள் முகம் சோர்வாக காட்சி அளித்தது.
“இல்லை…” அவன் உறுதியாக கூற, “நான் உன் காதலி இல்லை…. நான் உன் காதலி இல்லை…” அவள் பைத்தியம் போல் பிதற்றினாள்.
அவன் கண்களை இறுக மூடிக்கொண்டான்.
‘இளகி விடாதே விஜய்…. இளகி விடாதே விஜய்… இன்னக்கி இளகிட்டா, துர்கா வாழ்க்கை பாழாகிவிடும். இந்த பிரச்சனைக்கு இன்னைக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்.’ அவன் வலியை மறைத்து தன்னை கட்டுப்படுத்த அரும்பாடு பட்டான்.
“நான் உன் காதலி இல்லை. ஆனால், நீ என் காதலன். உனக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருச்சுனு உன்னை விட்டுட்டு போகிற அளவுக்கு , நான் கொடும்பாவி இல்லை. நான் வருவேன். நீ சரியாகுற வரைக்கும் நான் வருவேன். என்னைக்கு உனக்கு சரியாகுதோ, அன்னைக்கு நான் வரமாட்டேன். நீ என்னை தேடி வருவ. உன் காதலை தேடி வருவ.” அவள் சவால் விட, “வெளிய போ….” அவன் குரலை உயர்த்தினான்.
“நீ சொல்லி நான் போகணுமா?” துர்கா பிடிவாதமாக நின்றாள்.
அவர்களுக்கு இடையே வாக்குவாதம் அதிகமாகி அவன் குரல் உயர, ‘இது விஜயபூபதியின் உடலுக்கு நல்லது இல்லை.’ என்று குடும்ப உறுப்பினர்கள் உள்ளே செல்ல எண்ண, இலக்கியா வேகமாக அவன் அறை நோக்கி வேகமாக ஓடினாள்.
துர்கா அவன் முன் பிடிவாதமாக நிற்க, தன் அருகே இருந்த பூ ஜாடியை அவன் எறிந்தான். அவன் தன் கோபத்தில் தன் இயலாமையில் எறிந்தான்.
துர்காவின் மேல் பட்டுவிடக் கூடாது என்று அவள் இல்லாத திசை நோக்கி இருந்தான்.
அவன் எறிந்த திசையில் அவளறியாமல் வந்து நின்றாள் இலக்கியா.
அந்த பூ ஜாடி அவள் நெற்றியைப் பதம் பார்த்தது. ரத்தம் வழிய, “இலக்கியா…” துர்கா பதட்டப்பட்டாள். விஜயபூபதி பதறி போனான். தன் முகத்தை தன் மேல் கொண்ட வெறுப்பில் சுளித்தான்.
துர்கா அங்கிருந்த துணியை அவள் தலையில் கட்டி, “ஹாஸ்பிடலுக்கு போகலாம்” என்றாள்.
“இல்லை துர்க்கா. எனக்கு ஒன்னும் பெருசா இருக்காது. நீங்க கிளம்புங்க. அத்தான் உடம்பு சரி இல்லாமல் இருக்காங்க. உங்க விஷயத்தை அப்புறம் பேசிக்கலாம்” என்று இலக்கியா கூற, “நீயும் என்னை போக சொல்றியே இலக்கியா?” என்று துர்கா கண்ணீர் மல்கக் கேட்டாள்.
“உங்களை போக சொல்ற தகுதி எல்லாம் எனக்கு கிடையாது துர்கா. நாம பொறுமையா பேச வேண்டிய விஷயம். அத்தான் கிட்ட பேச வேண்டியது என் பொறுப்பு” இலக்கியா பக்குவமாக கூற, “இலக்கியா, நீ எதுக்கு இப்ப இங்க வந்த? வந்ததில் உனக்கு அடி பட்டிருச்சு” அவன் கோபமாக பேசினான்.
“அத்தான் நீங்க ஏன் இவ்வளவு கோபமாக பேசறீங்க? உங்க உடம்புக்கு…” இலக்கியா பொறுமையாக பேச, “நான் நோயாளி. என் உடம்பில் கோளாறுன்னு என்னை குத்தி காட்ட தான் வந்தியா?” அவன் இலக்கியாவிடம் சீறினான்.
“உங்க உடம்புக்கும் ஒன்னும் இல்லை. உங்க மூளைக்கு தான் கோளாறு.” அவள் அவனிடம் ஏறினாள்.
துர்கா கண்ணீரோடு விசும்ப, “நீங்க அழாதீங்க. நான் பேசுறேன்” இலக்கியா துர்காவை சமாதானம் செய்ய, “நீ எங்களுக்கு இடையில் வராதா இலக்கியா. உன் மண்டை உடைந்த மாதிரி, நீ சிக்கி சின்னாபின்னமாக போற” அவன் கர்ஜித்தான்.
“அத்தான், நீங்க பேச வேண்டாம். இப்படித்தான் உங்களை தேடி வந்த பெண்ணை அழவைப்பீங்களா? துர்கா, அத்தானை உங்க கூட சேர்த்து வைக்க வேண்டியது என் பொறுப்பு. அதுக்கு அப்புறம் அத்தானை உங்க கைக்குள் போட்டுக்கறது உங்க சாமர்த்தியசாலித்தனம்” இலக்கியா, துர்கா கைகள் மேல் தன் கைகளை வைத்து உறுதி கொடுக்க, விஜயபூபதி தன் கண்களை மூடி இறுகி போனான்.
அங்கு அவரவர் உணர்வுகளோடு மயான அமைதி!
விஜயபூபதி! அவன் இதயத்தில் காதல். அவன் இதயத்தில் வலி. அவன் இதயத்தில் எதிர்காலத்தைப் பற்றிய தவிப்பு. தகிப்பு.
துர்கா! அவள் இதயத்தில் காதல். அவள் இதயத்தில் பரிதவிப்பு. அவள் இதயத்தில் ஏக்கம்.
இலக்கியா! அவள் இதயத்தில் அவர்களுக்கான துடிப்பு.
‘இவள் ஏன் தேவை இல்லாமல் எங்களுக்கு இடையில் வந்து சிக்கி கொள்கிறாள்.’ என்ற எண்ணத்தோடு, “எங்களுக்கு இடையில் வராத இலக்கியா, உனக்கு நல்லதில்லை.” அவன் முணுமுணுப்பாக எச்சரிக்க, துர்கா அவர்களைப் பரிதாபமாக பார்த்தாள்.
இது தான் அவர்கள் வாழ்க்கை என்று அறியாமல் அங்கு அந்த காட்சி அரங்கேறியது.
அவன் விழிகள், அடிபட்டு வலியை ஏந்தி கொண்டிருக்கும் இலக்கியாவையும், மனதால் வலியை ஏந்தி கொண்டிருக்கும் துர்காவையும் பார்த்தன. தன் வலியையும் மறந்து, அவன் இதயம் துடித்தது.
இதயம் துடிக்கும்!
உயிர் வாழ துடிக்குமா?
வலியால் துடிக்குமா?
வழியறிமால் துடிக்குமா?
அவனுக்காக துடிக்குமா?
தன்னவளுக்காக துடிக்குமா?
அவர்களுக்காக துடிக்குமா?
சிறகொடிந்த பறவையாய் துடிக்குமா?
யாருக்காக துடிக்கும்?
எதற்காக துடிக்கும்?
சிறகுகள் விரியும்…