kiyyaa-17

coverpage-a17281c1

kiyyaa-17

கிய்யா – 17

இருவரும் கோவிலுக்குள் நுழைந்தனர். விஜயபூபதி இயல்பாக இயக்கும் படியாக இருந்தது அந்த சக்கரநாற்காலி. இலக்கியா, அவனுடைய சக்கர நாற்காலி வேகத்திற்கு இணையாக நடந்தாள்.

கோவிலில் பெரிதாக யாருமில்லை. ஓரிருவரை தவிர. கோவிலுக்குள் சென்ற சில நொடிகளில், “அத்தான் ஒரு நிமிஷம் இங்க இருங்க. பக்கத்து கடையில் பூஜை சாமான் வாங்கிட்டு வந்திடுறேன்.” சாலையில் வேகமாக ஓடினாள் இலக்கியா. எதிர்பக்கத்திலிருந்து ஆட்டோ ஒன்று வேகமாக வர, இலக்கியா தன்னை சுதாரித்து கொண்டாள்.

இந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த விஜயபூபதியின் இதயம் நின்று துடித்தது.

“சாவுக்கிராக்கி… வேற வண்டி கிடைக்கலை?” அந்த ஆட்டோ ஓட்டுநர், கடுங்கோபத்தில் கத்தினான்.  

“ஆமா, உன் வண்டி தான் ரொம்ப பிடிச்சிருந்தது” அவனுக்கு கேட்காதவாறு முணுமுணுத்துவிட்டு கடையை நோக்கி நடந்தாள் இலக்கியா.  

கோவிலுக்குள் நுழைந்த இலக்கியாவிடம், “நான் ஒருத்தன் அடிபட்டு கிடக்குறது பத்தாதா? எந்த தைரியத்தில் இப்படி லூசு மாதிரி ரோட் கிராஸ் பண்ணற?” அவன் குரலை உயர்த்த, “எனக்கு ஏதாவது ஆனா, என் தம்பியை நீங்க பார்த்துப்பீங்கன்னு தைரியம் தான் அத்தான்.” அவன் செவியருகே கிசுகிசுத்து கண்களை சிமிட்டினாள் இலக்கியா.

பட்டென்று அவள் கன்னத்தில் தட்டினான் விஜயபூபதி. “கோவில்ல வச்சு என்ன பேச்சு?” அவன் அவளை கண்டித்தான்.

“இல்லை அத்தான். நான் உறுதியா தான் சொல்றேன். நீங்க தான் என் தம்பியை பார்த்துக்க போறீங்க.” அவள் கூறிவிட்டு முன்னே செல்ல, அவன் அவள் கைகளை பிடித்து நிறுத்தினான்.

அவள் பேச்சு ஏதோ பூடகமாக இருப்பது போல் தெரிய, “என்ன உளறுற?” அவன் கண்களை சுருக்கினான்.

 “என் தம்பியை பார்த்துக்க மாட்டீங்களா அத்தான்?” அவள் கேள்வியாக நிறுத்த, “ம்… அதெல்லாம் நான் பார்த்துப்பேன். அதை நீ ஏன் இப்ப சொல்ற?” அவன் சந்தேகமாக கேட்டான்.

“நல்லதை எப்பவேணுமினாலும் சொல்லலாம். இப்ப சாமி கும்பிடுவோம். எல்லாம் நல்ல படியாக நடக்கும்.” அவனை அழைத்து சென்றாள்.

கடவுளை வெறுமையாக பார்த்து கொண்டிருந்தான் விஜயபூபதி. விபத்துக்கு பின் இன்று தான் கோவிலுக்கு வருகிறான். அவன் மனதில் போராட்டம். ‘அவன் உயிரை காப்பாற்றியதற்காக நன்றி சொல்லவா? இல்லை, இப்படி அவனை முடக்கி வைத்ததற்காக கோபித்து கொள்வதா?’ என்ன செய்வது என்று அறியாமல், இறைவனை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் விஜயபூபதி.

‘தனக்காக வேண்டி கொள்வதா? இல்லை தன் வியாபாரத்திற்காக வேண்டி கொள்வதா? தன்னை நம்பி இருப்பவர்களை காப்பாற்று. என்று வேண்டி கொள்வதா?’ அவனுள் பல கேள்விகள் எழ, அவன் முகத்தில் குழப்ப ரேகைகள்.

இலக்கியாவின் முகத்தில் எந்த குழப்பமும் இல்லை.

‘கடவுளே, அத்தானுக்கு சீக்கிரம் சரியாகணும். அத்தானையும், துர்காவையும் சேர்த்து வச்சிட்டு, நான் விலகிருவேன். அத்தான் சந்தோஷமா இருக்கனும்.’ அவள் வேண்டி முடிக்க, அந்த கோவிலின் மணி, ஓசை எழுப்பி அவள் மனதை குளிர செய்தது.

“அத்தான் நான் கொஞ்ச நேரம் இந்த இடத்தை சுத்திட்டு வரேன். வெய்ட் பண்றீங்களா?” என்று கேட்க, அவன் சம்மதமாக தலை அசைத்தான்.

பல நாட்களுக்கு பின் இயற்கை காற்று அவனுக்கு பிடித்திருந்தது.

கோவிலில் நூற்றுஎட்டு சுற்று சுற்றி கொண்டிருந்த இலக்கியாவை அவன் பார்த்தான். சில மணி நேரத்தில் பிராகாரத்தை சுற்றிவிட்டு, வந்தவளிடம்,”இதெல்லாம் மனைவியா நீ எடுத்துகிட்ட கடமையா இலக்கியா?” அவன் விழிகளை உயர்த்தினான்.

“அப்படி எல்லாம் இல்லை விஜய்யபூபதி…” வழமை போல் அவன் பெயரை அழுத்தி உச்சரித்தாள்.

“நான் உங்களுக்காக செய்தேன். அவ்வளவு தான்.” கைகளை விரித்து புன்னகைத்தாள்.

“என்னமா, இவ்வளவு நேரம் புருஷனுக்காக சுத்திட்டு நெற்றியில் ஒரு குங்குமம் கூட வைக்கலை?” என்று முதிய பெண்மணி அவர் தன் கைகளில் உள்ள குங்குமத்தை நீட்டினார்.

இலக்கியா, இன்முகமாக அவரிடம் குங்குமத்தை எடுத்து கொள்ள முயல, “தம்பி, நீங்க வைங்க. தீர்க்கசுமங்கலியா இருக்கனும். அந்த பொண்ணு சந்தோஷமா இருக்கணும்னு வைங்க.” என்று அவர் தன் கைகளை விஜயபூபதியிடம் நீட்டினார்.

அவர்களிடம் மெல்லிய தடுமாற்றம்.

வீட்டில் அரங்கேறிய திருமணம். அதன்பின் அவர்களுக்கு இடையில் இப்படியொரு தர்மசங்கடமான சூழ்நிலை இதுவரை வந்ததில்லை. அவர்கள் எண்ணங்கள் வேகவேகமாக ஓடியது.

‘இலக்கியா என் மனைவி. இது மாறாது.’ அவன் அறிவு அவன் முன் நிதர்சனத்தை அடித்து கூறியது. ‘என் மனதில் துர்கா…’ அவனால் மேலும் சிந்திக்க முடியவில்லை.

‘இல்லை, இனியும் நான் துர்காவை மனதால் நினைப்பது கூட, நான் இலக்கியாவுக்கு செய்யும் துரோகம்.’ அவன் மனதிற்கு கடிவாளமிடும் சமயத்திலே அவன் மனம் நொடிபொழுது திக் என்று அதிர்ந்தது.  

‘நான் இலக்கியாவை மனைவியாக ஏற்றுக்கொண்டேனா?’ அவன் தலை மறுப்பாக அசைந்தது. ‘இலக்கியா என் மனைவியாக இருக்கலாம். ஆனால், என் மனதில் அவளால் மனைவி என்று சிம்மாசனமிட்டு அமர முடியுமா? என்னால், மீண்டுமொரு முறை காதலிக்க முடியுமா?’ அவன் கைகள் நடுங்கியது.

அதே நேரம், இலக்கியா தன் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த தாலியை பார்த்தாள்.

‘மஞ்சள் கயிறு மேஜிக்? ச்… ச்ச… அதெல்லாம் இல்லை. தாலி ஏறியதற்காக இதெல்லாம் நான் ஒத்துக்கொள்ள வேண்டுமா?’ அவள் விலகி செல்ல எத்தனிக்க, “என்னமா, புருஷனுக்காக இவ்வளவு நேரம் வேண்டிக்கிட்டு, முழு பலனை வேண்டாமுன்னு சொல்ற மாதிரி விலகி போற?” அவர் கேட்க, ‘இது என்ன புது வியாக்கியானம்?’ என்ற ரீதியில் இலக்கியா அவரை பார்த்தாள்.

“புது ஜோடி மாதிரி இருக்கு, இப்படி வெட்கப்படலாமா?” அந்த முதிய பெண்மணியோடு வந்த நடுத்தரவயது பெண்மணி பேச, விஜயபூபதி அவர்கள் பேச்சுக்கு முற்று புள்ளி வைக்க முடிவு செய்தான்.

அவன் விரல்களால் குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் இட, அவர்களுள் சொல்லில் வடிக்க முடியாத ஓர் அழகான உணர்வு. அவன் விரல் அவள் நெற்றியை தீண்ட, அவள் கண்மூடி அவனுக்கு ஏதுவாக அவன் முன் குனிந்து நின்றாள்.

அவள் முகத்தில் அவன் நலனை மட்டுமே எதிர்பார்க்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பு.  

அன்று தாலி கட்டும் பொழுது இருவரும் பதட்டமாக இருந்தனர். அன்று உணர்வுகளுக்கு இடமில்லை. ஆனால், இன்று அவள் நெற்றியை அவன் உரிமையோடு தீண்டினான்.

‘என்னால், இலக்கியாவை காதலோடு பார்க்க முடியுமான்னு தெரியலை. ஆனால், அவள் கண்ணில் கண்ணீர் வரமாலாவது பார்த்து கொள்ள வேண்டும்.’ அவன் பிரார்த்தனை செய்து கொண்டான்.

அவன் வைத்த குங்குமம் அவள் விழிகளில் விழ எத்தனிக்க, அவன் இதழ்கள் காற்றை வெளிப்படுத்தி, அவள் விழிகளுக்கு அரணாய் அமைந்தது.

அவன் செயலில், அவள் சட்டென்று விழி உயர்த்தி அவனை பார்த்தாள். ‘நான் விலகி விடுவேன். துர்காவிற்கான இடம் இது. நான் விலகினாலும், அத்தானுக்கு நான் தானே முதல் மனைவி.’ அவள் உள்ளம் ஏதோவொரு ஓரத்தில் அவளறியாமல் துள்ளி குதித்தது.

‘அவனை அவள் அறிவாள். அவளை அவன் அறிவான். அத்தானாக! தோழியாக! ஆனால், கணவன் மனைவியாக அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்களா?’ என்றறியாமல், அவர்கள் விழிகள் ஒன்றை ஒன்று தழுவி கொண்டு விழித்து நின்றன.

“கிய்யா… கிய்யா…” என்று குருவிகள் சத்தம் எழுப்ப, இருவரும் சுயநினைவு பெற்று விலகி கொண்டனர்.

“கிய்யா… கிய்யா… மேஜிக்” அவன் அவளை கேலியாக பார்த்தான்.

“நான் உங்க கூட இல்லைனாலும், இந்த கிய்யா… கிய்யா சத்தம் வந்தா உங்களுக்கு என் நினைப்பு வரும் தானே?” அவள் அவனிடம் வம்பு வளர்த்தாள்.

“நீ இல்லைனா, ஹப்பாடான்னு யோசிப்பேனா? அதை விட்டுட்டு, உன்னை பத்தி எவனாவது யோசிப்பானா?” அவன் கேலி செய்ய, முகத்தை சுளித்து கொண்டு அவள் வேகமாக முன்னே நடக்க, அவன் கேலி சிரிப்பு அவளை தொடர்ந்தது.

அவன் சிரித்தாலும், ‘இவள் பேச்சு சரி இல்லையே?’ என்று அவன் மூளை சிந்தித்தது.

இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். கொஞ்ச நேரத்தில், “அத்தான்…” சந்தோஷமாக அவனை அழைத்தபடி உள்ளே நுழைந்தாள் இலக்கியா.

“டாக்டர் அப்பாய்ன்ட்மென்ட் கிடைச்சாச்சு. நம்ம கோவிலுக்கு போயிட்டு வந்ததும், எல்லாம் சரியாகுது பாருங்களேன்.” அவன் தோள்களில் கைகளை மாலையாய் கோர்த்தப்படி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள் இலக்கியா.

“உனக்கே இந்த கடவுள் நம்பிக்கை கொஞ்சம் ஓவரா இல்லை?” அவன் கண்களை சுருக்க, “நம்பிக்கை தானே அத்தான் வாழ்க்கை.” அவள் ஆழமான குரலில் கூறினாள்.

“கடவுளுக்கும் நம்பிக்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை அத்தான். நாம நம்பிக்கையா இருக்கும் பொழுது கடவுளை தேடுறதில்லை. நமக்கு பயமோ, இல்லை நம்பிக்கை குறையும் பொழுது தான் கடவுளை தேடுவோம். அவர் பெருசா எதுவும் செய்யறதில்லை அத்தான். உங்களுக்கு நான் இருக்கேன்னு நம்பிக்கை கொடுக்கறார். அவர் பார்த்துப்பார்ன்னு நம்பிக்கையில் நாமளும் அடுத்த வேலையை பார்க்க ஆரம்பிச்சிருவோம்.” அவள் நிறுத்த, அவன் தலை அசைத்து கொண்டான்.

“அப்புறம் என்ன மேஜிக் தான். நம்பிக்கை வரும். எல்லாம் ஜீம் பூம்பா மாதிரி நல்லதே நடக்கும்.” அவள் கண்களை விரிக்க, “என்ன இது சின்ன புள்ளை மாதிரி, எப்ப பாரு மேஜிக் மேஜிக்ன்னு விளையாடிகிட்டு.” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் நிர்மலா தேவி.

இலக்கியா, அவரை சற்று அசட்டையாகவே பார்த்த்தாள்.

“எப்ப ஆபரேஷன்னு சொன்னியா?” அவர் கேட்க, இல்லை என்பது போல தலை அசைத்தாள் இலக்கியா.

அவர் அவளை முறைக்க, “அத்தான், ஆபரேஷன்  மூணு மாசம் கழிச்சி தான். ஆனால், அந்த ஆபரேஷன் முடிஞ்சா, நீங்க கண்டிப்பா நடக்க ஆரம்பிச்ருவீங்க.” அவள் நம்பிக்கையோடு பேச, அவன் சிரித்து கொண்டான்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி பேச, இலக்கியாவின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.  

‘அத்தானுக்கு குணமானதும் நான் நினைப்பதை எப்படி செய்வது?’ என்ற கேள்வி எழ, அவள் தீவிர சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாள்.

அனைவரும் பேசிவிட்டு சென்றுவிட, “இலக்கியா…” அவன் அழைக்க, அவள் திரும்பவில்லை.

“இலக்கியா…” அவன் குரல் உயர தன்னை மறந்து விழித்தாள் இலக்கியா.

“என்ன யோசனை? நான் கேட்ட கேள்விக்கு கூட பதில் சொல்லாமல்?” அவன் அழுத்தமாக கேட்டான்.

“என்ன கேட்டீங்க?” அவள் கேட்க, “நாளைக்கு உன் பிறந்தநாளைக்கு என்ன வேணும்ன்னு கேட்டேன்?” அவன் கூற, “எனக்கு எதுவும் வேண்டாம் அத்தான்.” அவள் மறுப்பாக தலை அசைத்தாள்.

“நீ எப்பவும் என் கிட்ட எதுவும் வாங்க மாட்ட. அப்ப, எனக்கு எதுவும் கஷ்டமா இருக்காது. ஆனால், இப்ப நீ எதுவும் கேட்கலைன்னா, என்னால் உடலாலும் முடியாது. பணத்தாலும் நான் அடிவாங்கிட்டேன். அதனால நீ வேண்டாமுன்னு சொல்றேன்னு நான் நினைப்பேன்.” அவன் குரலில் வேதனையும், கோபமும் மண்டி கிடந்தது.

“அத்தான், நீங்க பேசறது தப்பு.” அவள் எதிர்க்க, “உனக்கு என்ன வேணும்ன்னு சொல்லு.” அவன் கறாராக கேட்க, ‘எதிர்த்து பயனில்லை.’ அவள் புரிந்து கொண்டாள்.

“நான் என்ன கேட்டாலும் செய்வீங்களா அத்தான்?” சட்டென்று சூழ்நிலையை சாதகமாக்கி, அவள் குரல் இப்பொழுது சற்று குழைந்தது.

அவர்கள் வாழ்வையே திசை மாற்றப்போகும் விசித்திரமான ஆசை, அவள் மனதில் வந்து அமர்ந்தது.

சிறகுகள் விரியும்…

Leave a Reply

error: Content is protected !!