kkavithai14
kkavithai14
கவிதை 14
இரண்டு நாட்கள் கடந்திருந்தன.
அந்த டாக்ஸி ‘ஹிட்ச்சின்’ இலிருந்து ‘விட்பி’ யை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. உள்ளே அமைதியாக பவித்ரா அமர்ந்திருந்தாள். இந்த இரண்டு நாட்களும் அவள் முகத்திலிருந்த குழப்பம் தீர்ந்து போய் இப்போது ஒரு தெளிவு தென்பட்டது. தீர்மானமான முடிவோடுதான் ‘விட்பி’ நோக்கிப் பயணப்படுகிறது பெண்.
அவள் விட்பிக்கு போவது ரிஷிக்கு தெரியாது. ரணமாக வலித்த இரண்டு நாட்களிலும் பவித்ரா அவனோடு பெரிதாகப் பேசவில்லை. எந்த வேலைகளிலும் ஈடுபடாமல் சதா சிந்தனை வசமே இருந்த மனைவியை ரிஷியும் தொந்தரவு பண்ணவில்லை. வேலைகள் அவனுக்குப் புதிதல்ல என்பதால் மனைவியை எதிர்பார்க்காமல் அனைத்தையும் அவனேப் பார்த்துக் கொண்டான்.
உணவை மட்டும் அவ்வப்போது ஆர்டர் பண்ணினான். பவித்ரா விருந்தினர் அறையை விட்டு வெளியே வரவில்லை. அதற்காக அவளை அப்படியே ரிஷி விட்டுவிடவில்லை. வேளாவேளைக்கு அவளுக்கான உணவு அவளிருந்த அறைக்குப் போனது. ரிஷி இரண்டொரு வார்த்தைகள் பெண்ணோடு பேச முயன்றான். தலையசைப்பு மட்டுமேப் பதிலாக வந்தது. அதற்கு மேல் ரிஷி அவளைத் தொந்தரவு பண்ணவில்லை. அன்றைக்கு அவன் போய்வந்த கவுன்சில் வேலை அவனைக் கொஞ்சம் தன்பால் ஈர்த்துக் கொள்ளவே அதன் பின்னோடு அலைந்து திரிந்தான்.
அவ்வப்போது வெளியே கிளம்பிப் போனவன் சற்றுத் தாமதமாக வர ஆரம்பித்திருந்தான். அதுவே பவித்ராவிற்கு சாதகமாகிப் போனது. இந்த இரண்டு நாட்களும் காதல், பாசம், குடும்பம், கௌரவம் என ஏதேதோ பல உணர்வுகளோடு போராடிக் களைத்திருந்தாள் பெண்.
இறுதியில், தாய்மை என்ற உன்னதமான உணர்வே வெற்றி பெற்றிருந்தது. தான் பெற்றிராவிட்டாலும் தான் பெற்றுக்கொள்ள மிகவும் ஆசைப்பட்ட தன் அத்தானின் குழந்தை. ரிஷிக்கு அது தன் குழந்தை அல்ல என்ற எண்ணம் இருப்பது பவித்ராவிற்கும் தெரியும். ஆனால் அதுபோன்ற சந்தேகம் பெண்ணுக்கு வரவில்லை.
அவள் அத்தானை அச்சில் வார்த்தாற்போல இருந்தது குழந்தை. ரிஷியை நகலெடுத்தாற்போல ஒரு தோற்றம். இதைவிட வேறு என்ன வேண்டும்? பவித்ரா முடிவெடுத்துவிட்டாள். பெற்றெடுத்தது யாராக இருந்தாலும் அவளுக்கு அதைப்பற்றி இப்போது கவலை இல்லை. அது அவள் அத்தானின் குழந்தை.
உறவுகளின் வலிமை ரிஷிக்கு வேண்டுமானால் புரியாமல் போகலாம். ஆனால் பவித்ராவிற்கு அப்படியல்ல. உறவுகளோடு வாழ்ந்தவள் அவள். உறவின் அருமை என்னவென்று அவளுக்குத் தெரியும். தான் எடுத்திருக்கும் இந்த முடிவால் குடும்பத்திற்குள் எவ்வளவு பெரிய சிக்கல்கள் வரும் என்றும் அவளுக்குப் புரிந்தது.
ஆனாலும்… அங்கே அநாதைப் போல தனித்து நிற்பது ரிஷியின் ரத்தம், அவன் வாரிசு. முறையாக வந்தாலும், இல்லாமல் போனாலும் அது ரிஷியின் குழந்தை இல்லையென்று ஆகிப்போகுமா? முறையில்லாமல் வந்தாலும் அதற்கொரு முறையான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டிய கடமை அவளுக்கிருந்தது.
இந்த ஆறு மாதங்களில் தன் ஆசையை இறைவன் நிறைவேற்றாததன் காரணம் இப்போது பெண்ணுக்குப் புரிந்தது. அவள் தோள்மேல் இன்னொரு கடமை இருக்கும் போது அவள் வயிற்றில் எப்படி ஒரு உயிர் தங்கும்?! ஆண்டவனின் கணக்கு என்றைக்குப் பிழைத்துப் போயிருக்கிறது?! இரண்டு நாட்கள் தீவிரமான யோசனைக்குப் பிறகு பவித்ரா முடிவெடுத்து விட்டாள். காலைப்பொழுதுகளை வெளி வேலைகளுக்காகப் பயன்படுத்திய ரிஷி அதற்குப் பெரிதும் உதவியாக இருந்தான்.
கையில் இருந்த விசிட்டிங் கார்டில் இருந்த எண்ணைத் தொடர்பு கொண்டாள் பவித்ரா. சில நொடிகளில் ஒரு பெண் தன்னை லில்லியன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். வயதானவர் போலும். அவரின் வார்த்தைகளைத் தொலைபேசி உரையாடலில் புரிந்து கொள்வது புதிதாக இங்கிலாந்து வந்திருந்த பவித்ராவிற்கு கஷ்டமாக இருந்தது.
அவள் அழைப்பாள் என்று அந்தப் பெண்மணி எதிர்பார்த்திருப்பார் போலும். அவள் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதும் சட்டென்று லைனுக்கு வந்துவிட்டார். தான் அவரைப் பார்க்க வேண்டும் என்று இளையவள் சொன்ன போது பெண் மகிழ்ந்து போனார். ரிஷி தம்பதியை அந்த வயதானவர் அன்போடு வரவேற்றார்.
“இல்லை மேடம்… நான் தனியாத்தான் வர்றேன்.” அந்தப் பதிலில் எதிர்முனை சிறிது நேரம் மௌனத்தைத் தத்தெடுத்தது.
“எனி ப்ராப்ளம் பவித்ரா?” அந்தக் கேள்வியில் பவித்ரா இங்கே கசப்பாகப் புன்னகைத்தாள். எத்தனை இலகுவாகக் கேட்கிறார் இந்த அம்மா?! எத்தனைப் பெரிய குழப்பத்தை அவள் வாழ்க்கையில் உண்டு பண்ணிவிட்டு இப்போது எவ்வளவு சாதாரணமாக இந்தக் கேள்வியைக் கேட்கிறார்?! ஆனால் அவர் யாரையும் வற்புறுத்தவில்லையே. ஓர் உதவி கேட்கிறார். முடிந்தால் பவித்ரா உதவி செய்யலாம். இல்லாவிட்டால் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டுத் தன் வாழ்க்கையை இன்பமாக வாழலாம். அப்போதும் இந்தப் பெண்மணி எதுவும் சொல்லப் போவதில்லை.
‘இட்ஸ் டூ பேட் டு பி டூ குட்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். பவித்ராவின் நிலை இப்போது அப்படித்தான் இருந்தது. அவள் மனசாட்சி எப்போதுமே மிகவும் நியாயமாக வேலை செய்யும். விருப்பு, வெறுப்புகளைக் கொஞ்சம் தூரத் தள்ளிவைத்து விட்டு மனிதாபிமானத்தோடு அவள் எடுத்த முடிவு இது.
“ரிஷிக்கு இப்போதைக்கு எதுவும் தெரிய வேணாம் மேடம்.”
“ஓ…”
“பின்னாடி நானே சொல்லிக்கிறேன்.”
“சரி பவித்ரா.”
“நான் இப்போ எங்க வரணும் மேடம்?”
“உடம்பு ரொம்பவே முடியாம போனதால நான் லண்டன்ல இருந்து ரொம்பத் தூரத்துல இருக்கேன் பவித்ரா.”
“ஓ… பரவாயில்லை மேடம், நான் அங்கேயே வர்றேன், நீங்க என்னை கைட் பண்ணுங்க.” அத்தனைத் தூரம் பயணப்படுவது கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது பவித்ராவிற்கு. ஆனாலும் அதுவும் நன்மைக்கே. இங்கே எங்காவது அருகில் இருந்தால் ரிஷி சுலபமாகக் கண்டுபிடித்து விடுவான். அவனை விட்டுத் தூரமாகப் போவதே சரியென்று பட்டது பெண்ணுக்கு.
லில்லியன் மிகவும் பாதுகாப்பான முறையில் அனைத்தையும் ஏற்பாடு பண்ணி இருந்தார். தனக்கு இங்கே எதுவும் சரியாகத் தெரியாது என்பதை பவித்ராவும் ஒளிவு மறைவில்லாமல் அவரிடம் குறிப்பிட்டிருந்தாள். அன்று காலை ரிஷி ஏதோ வேலையாக வெளியே சென்ற இருபதாவது நிமிடம் பவித்ரா தனக்கென லில்லியனால் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறிவிட்டாள்.
வீட்டை ஒரு முறைத் திரும்பிப் பார்த்த போது கண்களில் நீர் திரண்டது. அத்தானை விட்டுப் போகின்றோமே என்ற எண்ணம் ஏனோ மனதில் அவ்வளவு வருத்தத்தைக் கொடுக்கவில்லை. மாறாக இன்னொரு புது ஜீவனைப் பார்க்கப் போகின்றோம் என்ற பரபரப்பு அவளைத் தொற்றிக் கொண்டது. தனது பாதுகாப்பை ஒன்றுக்கு இருமுறையாக உறுதிப்படுத்திக் கொண்டவள் தன் பயணத்தை ஆரம்பித்து விட்டாள்.
வாழ்க்கை பவித்ராவிற்கு விட்பியில் வசந்தத்தை வைத்திருக்கிறதா?!
***
‘விட்பி’ அழகிய கடற்கரையோர நகரம். இங்கிலாந்தின் வடகிழக்கில் அமைந்திருக்கும் வனப்பு மிக்க இடம். லண்டனிலிருந்து இருநூற்று ஐம்பத்து ஏழு மைல்கள் தொலைவில் இருக்கும் அந்த நகரத்தைச் சென்றடைய சுமார் ஐந்து மணித்தியாலங்கள் தேவைப்பட்டது பவித்ராவிற்கு.
உடல் மிகவும் சோர்ந்து போயிருந்தது. மாதாந்திரத் தொல்லைகள் இன்னும் முழுதாக நிறைவு பெற்றிருக்கவில்லை. அத்தோடு இந்த இரண்டு நாட்களும் அவள் மனது பட்ட பாடு கொஞ்சநஞ்சமா என்ன? சோர்வுற்றிருந்த பெண்ணிற்கு முழு ஆறுதலாக இருந்தது சுற்றிவர இருந்த இயற்கை மட்டுமே. பார்க்குமிடமெல்லாம் அழகை அள்ளி இறைத்திருந்தது இயற்கை.
ஒரு மெல்லிய புன்னகையோடு அனைத்தையும் இமைக்காமல் பார்த்தபடி பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். கோடை காலம் ஆரம்பித்திருந்ததால் சாதாரணமான சுடிதாரையே அணிந்திருந்தது பெண். இதுபோன்ற இடங்களையெல்லாம் இன்னும் இங்கே பவித்ரா பார்த்திருக்கவில்லை.
இங்கிலாந்தில் கால் வைக்கும் போதே குளிர்காலம் ஆரம்பித்து விட்டதால் இது போலப் பார்ப்பதற்கு என்று ரிஷி ஒரு பெரிய பட்டியலே போட்டு வைத்திருக்கிறான். இந்த இடங்களையெல்லாம் அத்தானோடு பார்த்து ரசித்தால் எவ்வளவு சுகமாக இருக்கும்! அந்த வலிமையான தோளில் சாய்ந்துகொண்டு, கையோடு கை கோர்த்துக் கொண்டு… கற்பனை லேசாக வலிக்க மனதை இயற்கையை நோக்கித் திருப்பினாள் பெண். பாதையின் இரு மருங்கிலும் மலைகளே காட்சியளித்தன.
அழகான, பசுமையான மலை வெளிகள். மலை முழுவதும் வெள்ளைப் புள்ளிகளாய் செம்மறி ஆடுகள் மேய்ந்த வண்ணம் இருந்தன. ஓரிடத்தில் கருங்குன்றுகள் போல மொட்டைப் பாறைகள் மாத்திரமேக் காட்சியளித்தன. மொட்டைப் பாறையில் ஆங்காங்கே சிவப்பு நிறப் பூக்கள் படுக்கையாகப் பூத்திருந்தது பார்ப்பதற்கு இன்னும் கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்தினாலும் அவை எல்லாவற்றையும் பவித்ரா ரசித்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
சரியாக இரண்டு மணிபோல பவித்ரா விட்பியை சென்றடைந்தாள். டாக்ஸி ட்ரைவர் லில்லியனுக்கு தெரிந்தவர் போலும். பவித்ராவை மிகவும் தன்மையாக நடத்தினார். லில்லியன் இவளைப் பற்றி அந்த ட்ரைவரிடம் என்ன சொல்லி இருந்தாரோத் தெரியவில்லை. ஆனால் அவரின் நடத்தையிலிருந்தே தான் போகும் இடத்தில் தன் நிலை எப்படி இருக்கும் என்று பெண் புரிந்து கொண்டது.
மிகவும் தன்மையாகவும் கண்ணியமாகவும் அவள் தேவை அறிந்து நடந்து கொண்டார் அந்த ட்ரைவர். வழியில் ஓரிடத்தில் நிறுத்தி பகலுணவையும் முடித்துக் கொண்டார்கள். ட்ரைவர் காரை நிறுத்திய போதுதான் அந்த இடத்தைக் கவனித்தாள் பெண். அது ஒரு ஹோட்டல் வளாகம் போல தெரிந்தது.
பவித்ரா காரை விட்டிறங்கினாள். தூரத்தே நீலக்கடல் தெரிந்தது. காற்றில் உப்பு வாசம். அத்தனைப் பெரிய நகரம் இல்லை என்றாலும் சுற்றுலாப் பயணிகளின் வாசஸ்தலமாக இருந்தது விட்பி. இவள் நின்றிருந்த இடத்தில் கட்டுமானப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ட்ரைவர் அவளை வழிநடத்திச் செல்லப் பின்தொடர்ந்தாள் பெண்.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் இங்கு வருவதால்தான் ஹோட்டல்கள் அதிகமாக இருக்கின்றது போலும் என்று பவித்ரா எண்ணிக் கொண்டாள். ‘தொழில்முறைப் பழக்கம்’ என்று ரிஷி சொன்னது சட்டென்று இப்போது ஞாபகம் வந்தது. ஹோட்டல் துறையில் இருப்பதால்தான் இவர்களுக்குள் பழக்கம்… மேலே சிந்திக்காமல் தலையை உலுக்கிக் கொண்டு உள்ளே போனாள் பெண். முடிவடைந்திருந்த ஒரு கட்டிடத்திற்குள் அவளை அழைத்துச் சென்றார் அந்த ட்ரைவர்.
“வெல்கம் பவித்ரா.” அந்த அழகான வரவேற்பு சக்கர நாற்காலியில் இருந்து வந்தது. எழுபது வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்தான் லில்லியன் என்று புரிந்து கொண்டாள் பவித்ரா.
சிவப்பு நிறத்தில் அழகான ஆடை அணிந்திருந்தார். ஆடைக்கு ஏற்றாற் போல சிவப்பில் ஷூ அணிந்திருந்தார். சிவப்பு நிற லிப்ஸ்டிக். தலை பழுப்பு நிறத்தில் மின்னியது. பவித்ரா ஒரு கணம் அந்த வயதான மாதை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள். இலங்கையில் இந்த வயதைப் பெண்கள் அடைந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டது போல ஸீன் போடுவார்கள்.
பெற்ற பெண்ணின் துணையில்லாமல், பேரக் குழந்தையின் சுமையையும் தோளில் சுமந்து கொண்டு, தொழிலையும் பார்த்துக் கொள்கிறார். இத்தனைக்கும் சக்கர நாற்காலியில் வேறு இருக்கிறார்! இளையவளின் வியந்த பார்வையில் லில்லியன் புன்னகைத்தார். அவர் அங்கிருந்த சோஃபாவை காட்டவும் பவித்ரா அமர்ந்தாள்.
“எதுக்கு இவ்வளவு ஆச்சரியம் பவித்ரா?” அழகான ஆங்கிலத்தில் கேட்டார் லில்லியன்.
“ரொம்ப அழகா இருக்கீங்க மேடம்.” உண்மையான பாராட்டு.
“தான்க் யூ, ஆன்ட்டின்னு கூப்பிடலாமே பவித்ரா.” லில்லியன் புன்னகைத்தார்.
“ஓகே ஆன்ட்டி.” சட்டென்று தன்னை மாற்றிக் கொண்டது பெண். ஏனோ பவித்ராவிற்கு லில்லியனை மிகவும் பிடித்திருந்தது.
“நீ இங்க வர்றது ரிஷிக்கு தெரியுமா, தெரியாதா?” மீண்டும் லில்லியன் அதே கேள்வியைக் கேட்கவும் பவித்ராவின் தலை குனிந்தது.
“உன்னைக் கஷ்டப்படுத்தணுங்கிறது என்னோட நோக்கமில்லை பவித்ரா, ரிஷிக்கு இந்த இடத்தைக் கண்டு பிடிக்கிறது அவ்வளவு கஷ்டமில்லை.” லில்லியன் சொல்லி முடித்த போது பவித்ரா விலுக்கென்று நிமிர்ந்தாள்.
“இவ்வளவு தூரத்துல… எப்பிடி?”
“ரொம்ப சிம்பிள், நீ வீட்டுல இல்லைன்னா என்னைத் தேடித்தான் வந்திருப்பேங்கிறது ரிஷிக்கு நல்லாவேத் தெரியும், என்னைக் கண்டுபிடிக்கிறது ரிஷிக்கு பெரிய வேலையில்லை.”
“இப்போ… என்ன பண்ணுறது?”
“அதனாலதான் கேட்கிறேன், ரிஷிக்கு நீ இங்கதான் வர்றேங்கிறது தெரியுமா?”
“இல்லை… நான் வீட்டை விட்டு வந்ததே அவங்களுக்குத் தெரியாது.”
“ஓ… ரிஷி இங்க உன்னைத் தேடி வந்தா உனக்கு அது ஓகேவா பவித்ரா?” சிறிது நேரம் சிந்தித்துப் பின் கேட்டார் லில்லியன்.
“இல்லையில்லை… இப்போதைக்கு அத்தான் இங்க வர வேணாம்.”
“இப்போதைக்கு வர வேணாம்னா?”
“எனக்குக் கொஞ்ச நாள் தனியா இருக்கணும் ஆன்ட்டி.” பவித்ரா சொன்ன பதிலில் அந்த மூதாட்டி கொஞ்ச நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார்.
“பவித்ரா… உன்னோட வாழ்க்கையைக் குலைக்கணுங்கிறது என்னோட நோக்கமில்லை.” நிதானமாக வந்தது குரல்.
“………….”
“நீ என்னைச் சரியாப் புரிஞ்சுக்கணும், ஹரி யை பார்த்தாத்தான் உனக்கு என்னோட நிலைமைப் புரியும்.”
“குழந்தையோட பெயர் ஹரி யா?” ஆர்வம் மேலிடக் கேட்டது பெண்.
“ஆமா.”
“நான் பார்க்கலாமா?” அவளுக்குள் இப்போது ஒரு பரபரப்பு!
“இன்னும் கொஞ்ச நேரத்துல கூட்டிட்டு வருவாங்க.”
“யாரு பார்த்துக்கிறாங்க?”
“வேலையாட்கள்தான், என்னால ஒரு இடத்துல இருக்க முடியாது, நிறைய இடத்துல ஹோட்டல் கிளைகள் இருக்கிறதால அலைஞ்சுக்கிட்டே இருப்பேன்.”
“ஓ…”
“ரெண்டு வயசுக் குழந்தையை அப்பிடி அலைய வைக்க முடியாதில்லையா? அதால ஹரி இங்க விட்பி லதான் இருக்கான், நான் வாரத்துக்கு ஒரு தடவை வந்து பார்த்துக்குவேன், இப்போ அதுகூட முடியலை ம்மா.”
“ஓ…”
“என்னால இங்க இன்னைக்குத் தங்க முடியாது, உடனேயே கிளம்பியாகணும் பவித்ரா.”
“ஏன் ஆன்ட்டி?”
“இந்நேரத்துக்கு ரிஷி நீ எங்கன்னு தேட ஆரம்பிச்சிருப்பாரு இல்லையா?”
“…………..”
“அவரோட இலக்கு இப்போ நான்தான், நான் இங்க இருந்தா நேரா ரிஷி இங்கதான் வருவாரு.”
“ம்…”
“அதனால இன்னைக்கே நான் இங்க இருந்து கிளம்பிடுறேன், நீ தங்குறதுக்கான எல்லா ஏற்பாடும் பண்ணி இருக்கு பவித்ரா.”
“ம்…” பவித்ரா தலையை ஆட்டினாள்.
“இங்கேயே ஹோட்டல்ல தங்கிக்கோ ம்மா, அதுதான் ஹரியை பார்த்துக்க உனக்கு வசதியா இருக்கும்.”
“சரி ஆன்ட்டி.”
“இப்போ குழந்தையைக் கவனிச்சுக்கிற வேலையாட்கள் அவனோட வேலைகளைப் பார்த்துப்பாங்க, ஹரிக்கு இப்போதைக்குத் தேவைப்படுறது… ஒரு பாசமான அம்மா.” இதைச் சொன்ன போது லில்லியனின் கண்கள் கலங்கியது.
“எல்லா வசதிகளும் இருந்தும் அந்தக் குழந்தை ஒரு அநாதைப் போல வளருது பவித்ரா, எனக்கு அதுதான் ரொம்பக் கஷ்டமா இருக்கு.” அந்த வயதான பெண்மணிக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று இளையவளுக்குப் புரியவில்லை. அவர் பெற்றெடுத்த பெண்ணின் பெயரை உச்சரிக்கவே பவித்ரா விரும்பவில்லை.
ரிஷி மேல் தவறிருப்பது உண்மை என்றாலும் நடந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் ரிஷி மாத்திரமே பொறுப்பல்ல. அப்படி இருக்கும் பட்சத்தில் எதற்காக முழுக் குற்றத்தையும் ரிஷியின் முதுகில் ஏற்ற வேண்டும்?! அப்படிப் பார்த்தால் அவளுடைய வாழ்க்கையும்தான் இன்றைக்குக் கேள்விக்குறியாக நிற்கிறது!
யாருக்கும் யாரும் சமாதானம் சொல்லும் நிலைமை அங்கே இல்லாததால் இருவரும் பேச்சை அத்தோடு முடித்துக் கொண்டார்கள்! பவித்ராவிற்கு புரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அங்கு இரு உயிர்கள் அன்புக்காக ஏங்குகின்றன. ஒன்று பாட்டி… இன்னொன்று பேரன்!