Maane – 8

50cc9edc56edcae619d1af79b7132256

Maane – 8

அத்தியாயம் – 8

தன் தாய்நாட்டை நோக்கி பயணித்த மித்ராவின் மனம் முழுவதும் இந்தர்ஜித் மற்றும் விஷ்வாவின் நினைவுகளே ஆக்கிரமித்திருந்தது. கிட்டதட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு தாய் நாட்டின் காற்றை சுவாசித்தபடியே கொழும்பு மண்ணில் கால்பதித்தபோது மனதில் எல்லையில்லா சந்தோசம் நிலவியது.

அதே ஊரில் இந்தர்ஜித் இருக்கிறான் என்ற என்னமோ என்னவோ அவளின் மனம் வானில் சிறகடிக்கும் பறவை போல ஆனது அவளின் மனம்! அதற்கான காரணம் என்னவென்று அவளுக்கு புரியாத போதும், ‘இந்தர்ஜித் சீக்கிரமே அவனை பார்க்க வேண்டும்’ என்ற எண்ணம் அவளின் மனதில் தோன்றி மறைந்தது.

அவர்கள் இருவரும் வீடு வந்து சேரவே, “அப்பா சென்னையில் எந்த பொருளும் அதிகம் வாங்காமல்  இருந்ததற்கு ஒரே காரணம் நம்ம திரும்பி இலங்கையே வருவோம் என்பதால் தான். ஆனால் இப்போதுதான் இங்கே வந்ததால் எனக்கு பிடிச்ச மாதிரி நான் இந்த வீட்டை மாற்ற போகிறேன்” குழந்தையின் குதூகலத்துடன் அறிவித்தாள்.

தன் மகளின் எண்ணவோட்டம் என்னவென்று கணித்திருந்தவர், “உன் விருப்பம் நான் தலையிடலம்மா. அப்பாவை வேலை வாங்காமல் இருந்தா அதுவே போதும்” என்றவர் அவள் கேட்ட அனைத்து பொருட்களையும் வாங்கி கொடுத்தார்.

அந்த ஊரில் பல இடங்கள் சுற்றி வீட்டை மாற்றியமைக்கவே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. எந்தநேரமும் இனியான கீதங்கள் கேட்டு ரசிக்க வீட்டில் ஹோம் தியேட்டர் வாங்கி ஸ்பீக்கர்களை வைத்தாள். ஜன்னல்களுக்கு தனியாக திரைத்துணி வாங்கி வந்து போட்டாள். வீட்டின் முன்னே மணிபிளண்ட் செடியை கொடியாக படரவிட்டாள். வீட்டின் இருபுறமும் இருந்த காம்பவுண்ட் சுவர்களின் அருகே ரோஜா செடிகளை நட்டு வைத்தாள்.

வீட்டின் முன்னே இருந்த இடத்தில் இரும்பில் ஊஞ்சலை வாங்கி வந்து காட்டிவிட்டாள். மழை காலங்களில் புத்தகங்கள் வாசித்தபடியே நேரத்தை போக்கிட வீட்டின் பின்னோடு தனியறையை தேர்வு செய்து பிடித்த புத்தகங்களை வாங்கி மினி லைப்ரரி ஏற்படுத்திக் கொண்டாள்.

மாடியிலிருந்த அவளின் அறையில் மீன் தொட்டி, பால்கனியில் கண்ணுக்கு குளிர்ச்சியாக செடிகளும் நட்டு வைத்தாள். வீட்டின் சுவர்களில் அழகான பெயிண்டிங்க்ஸ் வாங்கி ஆடியடித்து மாட்டினாள். அவளின் ரசனைக்கு ஏற்றார்போல் அந்த வீட்டினை பார்த்து பார்த்து மாற்றியமைத்தாள்.

அதெல்லாம் பார்த்த ரகுவரன், “ஒரு கட்டிடம் உன்கிட்ட மாட்டிக்கிட்டு இந்த பாடு படுகிறதே நாளைக்கு கட்டிக்க போகின்ற கணவனின் நிலை என்னவாக இருக்குமோ?” என்று மகளை கேலி செய்தார்.

“அப்பா நீங்க சொல்ற மாதிரி ஒரு கட்டிடத்தையே உயிர்ப்புடன் வைக்க இவ்வளவு மெனகெடும் போதே மகளின் திறமையைப் புரிஞ்சிகோங்க. நாளைக்கு வாழ போகின்ற வீட்டில் வாழும் மனிதர்களையும் இப்படித்தான் அன்பாக அரவணைத்து பாசமா பார்த்துக்குவேன். சிலரோட குணம் சரியில்ல என்றாலும் அவங்களுக்கு நிதர்சனத்தை புரியவைக்க இப்படித்தான் மெனகெடுவேன்” என்று கூறிய மகளின் பதிலில் அவரின் மனம் மகிழ்ந்தது.

ஒரு பெண்ணிற்கு தந்தை என்ற நிலையில், ‘என் மகளை நான் நன்றாக வளர்த்தி இருக்கிறேன்’ என்று மனதினுள் பூரிப்புடன் நினைத்துக் கொண்டார்.

அவரின் சிந்தையைகே கலைப்பது போலவே, “வராத மாப்பிள்ளைக்கு இப்போவே கூஜா தூக்கிறீங்களே.. இதெல்லாம்  ரொம்ப அநியாயம்நு உங்களுக்கே தோணலையா அப்பா” தந்தையை வாரிவிட்டு கலகலவென்று சிரித்தாள்.

“சுத்தம் இனி வாயைத் திறந்தால் பிளாஸ்திரி கொண்டு வந்து வாயை அடைத்தாலும் அடித்துவிடுவா. ஏதோ வயசான கிழவன் தெரியாமல் பேசிட்டேன் என்னை விட்டுடும்மா” முகத்தை பாவமாக வைத்துகொண்டு கூறியவரை பார்த்து அவளுக்கு சிரிப்பு பீறிட்டு கிளம்பியது.

“அது அந்த பயம் இருக்கட்டும்” என்று தந்தையை மிரட்டிவிட்டு மற்ற வேலைகளை எல்லாம் கவனித்தாள்.  முகத்தில் தெரிந்த தெளிவும், எந்தநேரமும் கலகலப்பாக பேசி சிரிக்கும் மகளின் சந்தோசம் கடைசிவரை நிலைக்க வேண்டும் என்று கடவுளை மனதார வேண்டிக் கொண்டார்.

வீட்டை வடிவமைப்பதில் நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. மித்ரா தந்தை தடுத்தும் கேளாமல் தான் படித்த படிப்பிற்கு தகுந்த வேலையைத் தேடிக் கொண்டாள்.

சென்னையிலிருந்து இலங்கை வந்து கிட்டதட்ட நான்கு மாதங்கள் ஓடி மறைந்த நிலையில், “அப்பா மலையகம் ஒரு முறை போயிட்டு வரவா?” என்று ஆர்வமாக கேட்டாள். அவளுக்கு அந்த ஊரை எந்தளவிற்கு பிடித்திருக்கிறது என்று புரிந்து வைத்திருந்தார் ரகுவரன்.

அதனால் எதைப் பற்றியும் யோசிக்காமல், “உனக்கு அங்கே போகணும் என்றால் போயிட்டு பாட்டி வீட்டில் தங்கி நாலு நாள் ஊரை நல்ல சுற்றி பார்த்துவிட்டு வா மித்ரா. இதென்ன சின்னபிள்ளை மாதிரி தயங்கி தயங்கி கேட்கிற?” மகளை செல்லமாக அதட்டினார்.

“சென்னையில் இருந்தவரை நீங்க என்னை எதுவும் சொல்லல என்றாலும், இது நம்ம ஊரு யாராவது வந்து ஏதாவது கேட்டால் நீங்க கோபபடுவீங்களோ என்ற எண்ணத்தில் தான் சொன்னேன்” என்று புன்னகைக்க முயன்றாள் மித்ரா.

“அந்த ஊரில் இருந்தமாதிரியே இங்கேயும் நீ இருக்கலாம் மித்ரா. நான் அதுக்கெல்லாம் தடை சொல்ல மாட்டேன். ஆனால் ஒருத்தரும் உன்னையும், உன் வளர்ப்பையும் தவற பேசாத அளவிற்கு நடந்துக்கணும்” என்றவர் சொன்னதும் சரியென்று தலையசைத்தாள்.

அவள் ஊருக்கு போவதாக சொல்லி அலுவலகத்தில் விடுமுறை கேட்கவே, “நீங்க இப்போதான் ஜாயின் பண்ணிருக்கீங்க மித்ரா. அதனால் இரண்டு மாதத்திற்கு லீவ் கேட்டு வராதீங்க” என்று கண்டிப்புடன் சொன்ன மேனேஜரை வாணலி இல்லாமல் வருத்தேடுத்துவிட்டு வந்து சீட்டில் அமர்ந்தவள் அவளின் வேலையைக் கவனித்தாள்.

ஒருப்பக்கம், ‘இந்தர் என்னை அடையாளம் கண்டு வந்து பேச மாட்டானா? அவனோட தோற்றம் மாறியிருந்தா என்னால் கண்டுபிடிக்க முடியாது என்றாலும், அவங்க அப்பாவைக் கூட பார்க்க முடியவில்லையே’ என்ற எண்ணம் அவளை வதைத்தது.

மற்றொரு பக்கம், ‘விஷ்வா மலையகத்தில் இருக்கிறானோ என்னவோ தெரியல. சென்னை போனபிறகு அவனோட தொடர்பு சுத்தமாகவே இல்லாமல் போயிருச்சு. அவனைப் பார்க்க கண்டிப்பா மலையகம் போய்தான் ஆகணும்’ என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தாள் மித்ரா.

இதற்கிடையே வினோத் இந்தர்ஜித் அருகில் இருந்து கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டான். ஆனால் கடைசிவரை தற்கொலைக்கு ஏன் முயற்சித்தான் என்ற கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை என்ற உண்மையை உணர்ந்தே இருந்தான். அதே நேரத்தில் இந்தர்ஜித் தன் தந்தை தன்னிடம் சொன்ன விஷயம் என்னவென்று அவன் வினோத்திடம் சொல்லவில்லை.

அடுத்த இரண்டு வாரத்தில் ஹாஸ்பிட்டலில் இருந்து அவனை டிஸ்சார்ஜ் செய்துவிடவே, அடுத்து மூன்று மாதங்கள் சென்றபிறகு சென்னையில் தனது நிறுவனத்திற்கான ஒரு கிளையை தொடங்கிய பிறகு மீண்டும் கொழும்பு வந்து சேர்ந்தான்.

அவன் வரும் விஷயமறிந்த பாஸ்கரன் அவனுக்காக வீட்டில் காத்திருந்தார். அவன் தற்கொலைக்கு முயற்சித்த விஷயத்தை ஏற்கனவே வினோத் அவரிடம் சொல்லியிருக்கவே, ‘இன்னைக்கு வரட்டும் அவனுக்கு இருக்கு’ என்று மனதினுள் நினைத்துக்கொண்டு இருக்கும்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

வினோத் ஒருப்பக்கம் கார் கதவை திறந்து இறங்க மற்றொரு பக்கத்திலிருந்து இறங்கிய இந்தர்ஜித், ‘இது புயலுக்கு பின்னாடி வரும் அமைதியான்னு தெரியலையே..’ என்ற எண்ணத்துடன் வீட்டிற்குள் நுழைய அவன்  எதிர்பார்த்து போலவே பாஸ்கர் அவனை முறைத்தபடியே ஹாலில் அமர்ந்திருந்தார்.

அவன் நேராக அறைக்கு செல்ல நினைக்க, “ஏன்டா தற்கொலைக்கு முயற்சி பண்ற அளவுக்கு சாருக்கு தைரியம் வந்துவிட்டதோ? நான் என்ன அப்படி சொல்லிட்டேன்னு நீ அப்படியொரு காரியத்தை பண்ணின? உன்னால் ஊருக்குள் எவ்வளவு தலைகுனிவு தெரியுமா?” என்று அவனிடம் எரிந்து விழுந்தார்.

அதுவரை தகப்பன் என்ற  ஒரே காரணத்திற்காக அமைதியாக இருந்த இந்தர்ஜித் சட்டென்று திரும்பி, “அப்பா நீங்க உங்க லிமிட் தாண்டி பேசறீங்கன்னு நினைக்கிறேன். இன்னொரு முறை அப்படி பேசுகின்ற வேலையை வச்சுக்காதீங்க” என்று வீடே அதிரும்படி கர்ஜித்த மகன் அவனுக்கு முற்றிலும் புதியவன்.

அவர் அவனை திகைப்புடன் பார்க்க, “உங்க வாழ்க்கையில் என்ன நடந்ததுன்னு இன்னைக்கு வரைக்கும் கேட்காமல் இருக்கேன். அது நான் உங்களுக்கு கொடுக்கும் மரியாதை. அதே மாதிரி இனிமேல் என் வாழ்க்கையிலும் நீங்க தேவையில்லாமல் தலையிடாதீங்க. நான் சொல்ல வரும் விஷயம் புரியும்னு நினைக்கிறேன்” என்று மறைமுகமாக அவரை மிரட்டிவிட்டு இரண்டு இரண்டு படிகளாக தாவி அவனின் அறைக்குள் சென்று மறைந்தான்.

இத்தனை வருடங்களில் புருவம் தூக்கி பார்த்தாளே பயப்படும் மகன் இன்று தன்னை எடுத்தெறிந்து பேசியதை நினைத்து, ‘என்னையே எதுக்கும் அளவிற்கு உன்னை பேச வைச்சிருக்கிற இல்ல’ என்றவர் மகனின் அறையை சிலகணங்கள் நோக்கிவிட்டு தன் அறைக்குள் சென்று மறைந்தார்.

அவர்கள் இருவரும் பேசியதை கவனித்த வினோத், “என்னடா நடக்குது இங்கே? அப்பா திட்டினால் வாங்கிட்டுப் பதில் பேசாமல் நிற்கும் இந்தர் இவன் இல்லையே.. இவனை இந்தளவுக்கு பேச வைக்கின்ற அளவுக்கு அப்படி என்னதான் சொன்னாரு இந்த மனுஷன்? ஒருவேளை நமக்கிட்ட இவன் பொய் சொல்லிடானோ?” வாய்விட்டே புலம்பியபடி தனியாக நின்றிருந்தான்.

“ரொம்ப யோசிக்காதே வினோத். அது உனக்கு நல்லதில்ல” என்று மேலிருந்து இந்தரின் குரல் சத்தமாக கேட்கவே, ‘அவசரத்தில் வாய்விட்டு உளறிட்டேன் போல’ என்று தனக்குள் நினைத்துகொண்டு வேகமாக மாடியேறிச் சென்றான்.

இந்தர்ஜித் நடத்தி வருவது ஒரு டீ தூள் கம்பெனி. நுவரெலியாவில் அவனின் எஸ்டேட்டில் தேயிலைகள் பறித்துவரப்பட்டு, பச்சை இலைகளை வாடவிட்டு, அரைத்து, நோதிக்க, உலர்த்தியபிறகு தரம்பிரிக்கபட்டு பேக்கிங் முடிந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகிறது.

இந்தர் தனியாக தன் நிறுவனத்தை தொடங்கியபோது அவனுக்கு பக்கபலமாக நின்றான் வினோத். அவனுக்கும் நிறுவனத்தில் நல்லவொரு வேலை கொடுத்து அவனை அருகில் வைத்துக் கொண்டான். இருவரும் திறமையாக செயல்படவே நிறுவனமும் வளர்ச்சியடைய தொடங்கியது.

அவனின் நிறுவனத்திற்கு இந்தியாவில் ஒரு கிளையை தொடங்கும் எண்ணம் இருந்ததால் இருவரும் சேர்ந்து சென்னையில் அதற்குண்டான ஏற்பாடுகளைத் தொடங்கினர். ஏனென்றால் இந்தியா தேயிலை உற்பத்தி மற்றும் நுகர்வு இரண்டிலும் உலக நாடுகளில் முன்னணியில் இருந்தது.

இந்தியாவில் அசாம், டார்ஜிலிங், நீலகிரி தேயிலை பேமஸ் என்றபோதும் முயற்சித்து பார்க்கலாமே என்ற எண்ணம்தான் இந்த புதிய கிளையின் தொடக்கம். அது வெற்றிகரமாக முடிந்துவிட்டதால் அடுத்த கட்ட வேலைகளை துரிதபடுத்தி நடைமுறை படுத்துவதில் மேலும் மூன்று மாதங்கள் ஓடி மறைந்தது.

அன்றைக்கு அலுவலகம் விடுமுறை என்பதால் வீட்டில் தந்தையிடம் சொல்லிவிட்டு ஷாப்பிங் செய்ய சென்றாள். அங்கிருந்த பெரிய ஜவுளிகடைக்குள் நுழைந்து அழகான உடைகளை தேர்வு செய்து பில் போட்டு எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்தாள்.

அங்கிருந்த காஃபி ஷாப் ஒன்றிற்குள் நுழைந்தவள் ஆர்டர் கொடுத்துவிட்டு ஒரு டேபிளில் சென்று அமர்ந்தவள் கண்ணாடியின் வழியாக வெளிப்புறத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அதன் எதிரே இருந்த ஒரு ஐஸ்கிரீம் பார்லர் முன்னே ஒரு இருபத்தி ஆறு வயதுடையவன் வாட்டசாட்டமாக இருந்தான்.

அவனுக்கு எதிரே ஒரு குட்டிஸ் இரட்டை ஜடையுடன் அவனிடம் ஏதோ சொல்ல அவனும் மெய்மறந்து அந்த குழந்தையோடு பேச்சு கொடுத்தபடி நின்றிருந்தான். அவன் அந்த குழந்தையோடு பேசுவதைப் பார்க்கும்போது ஏனென்றே அறியாமல் நெஞ்சில் இந்தரின் முகம் தோன்றி மறைந்தது.

புளூ கலர் சர்ட், ஆப் ஒயிட் கலர் பேண்ட் அணிந்து இருந்தான். அந்த உடை அவனை அவளின் கண்களுக்கு ஆணழகனாக காட்டிடவே, ‘உனக்கு புத்தி போகுது பாரு’ என்று அவள் தலையில் தட்டிக்கொண்டு இருக்கும்போது  பேரர் கொண்டுவந்து காஃபியைக் கொடுத்தான்.

அவள் அதை ரசித்து அருந்தியபடி மீண்டும் அங்கே நடப்பதை வேடிக்கைப் பார்க்க தொடங்கினாள். அவன் அந்த குழந்தையிடம் ஏதோ சொல்லி மூக்கை தொட்டு காமித்து மறுப்பாக தலையசைத்தான். அதற்கு குழந்தையும் ஏதோ சொல்லி மறுப்பாக தலையசைத்துவிட்டு ஐஸ்கிரீம் பார்லர் நோக்கி ஓடியது.

அவன் பெயர் சொல்லி அழைக்கவும் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு அவனை நோக்கி சென்றது. அவன் மீண்டும் குழந்தையுடன் படிக்கட்டு ஏற இப்போது அவனை போலவே மூக்கை பிடித்து சளி பிடிப்பது போல சைகை செய்துவிட்டு கீழே இறங்கியது.

அவன் மீண்டும் சிரித்தபடி குழந்தையை சமாதானம் செய்து தூக்கிச் சென்று சாக்கோபார் கோன் ஒன்று வாங்கி குழந்தையின் கையில் கொடுத்து வெளியே அழைத்து வந்தான். அந்த குழந்தையை அன்கிருந்த படிக்கட்டில் அமர வைக்க குழந்தை ஐஸ்கிரீமை சாப்பிட தொடங்கியது.

ஒருப்பக்கம் கன்னத்தை குழந்தையிடம் காட்டிட அது முத்தம் கொடுத்துவிட்டு சாப்பிடவே, சிரித்தபடி மற்றொரு கன்னத்தைக் காட்டி குழந்தையிடம் ஏதோ சொல்ல அது அந்த கன்னத்திலும் முத்தமிட்டது. இப்படியே அவன் மறுபடியும் செய்ய குழந்தை சிணுங்கியது. மீண்டும் ஒரு சமாதானப் படலம்..

இதெல்லாம் பார்த்தபடி பில் கொடுத்து பேரரை அனுப்பிவிட்டு தன்  உடைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவளின் பார்வை மீண்டும் அந்த இருவரின் மீதே நிலைத்தது.

அவன் குறும்புடன் சிரித்தபடி குழந்தையின் கன்னத்தில் முத்தமிடுவதை கண்டு, ‘ம்ஹும் குழந்தைகளை கொஞ்சுவது கூட ஒரு கலைதான் போல.. என்ன அழகாக கொஞ்சுகிறான். அதை பார்க்கும்போது எவ்வளவு சந்தோசமாக இருக்கு’ என்று நினைத்தபடி தன்னையும் அறியாமல் அவனை நோக்கி நடக்க தொடங்கிவிட்டாள் மித்ரா.

அவள் அவனை நெருங்கும்போது இடையில் வந்த ஒருவன் குழந்தையின் கையிலிருந்த ஐஸ்கிரீமை பிடுங்கிவிட்டு ஏதோ சொல்ல குழந்தை அழுகைக்கு தயாராகவே, அடுத்த நிமிடமே அவனின் கன்னத்தை பதம் பார்த்தது மித்ராவின் கரங்கள்!

அவளிடம் அடிவாங்கியவன் பரிதாபமாக அவளை நோக்கிட, “அவரு இவ்வளவு நேரம் அந்த குழந்தையை எவ்வளவு அழகாக கொஞ்சிட்டு இருந்தாரு தெரியுமா? அதை பார்க்கும்போது அவ்வளவு அருமையாக இருந்தது. அத்தனையையும் இடையில் புகுந்து கெடுத்த உன்னை ஒரு அடியோடு விட்டேனே என்று சந்தோசப்படு. இன்னொரு முறை நீ இதே மாதிரி செய்வதை பார்த்தேன் தொளைச்சிருவேன் சாக்கிரதை” என்று மிரட்டிவிட்டு குழந்தையின் கன்னத்தை கிள்ளிவிட்டு விறுவிறுவென்று அவர்களைக் கடந்து சென்றுவிட்டாள்.

இந்தர் திகைப்புடன் செல்லும் அவளை பார்த்தபடி நின்றிருப்பதை கண்ட வினோத், “ஏண்டா எவளோ ஒருத்தி உன் உயிர் நண்பனை அடிச்சிட்டு போறதை இவ்வளவு சுவாரசியமாக வேடிக்கைப் பார்க்கிறாயே இது உனக்கே நியாயமா?” என்று பரிதாபமாக கேட்ட நண்பனை கண்டு அவனுக்கு சிரிப்பு பீறிட்டது.

“அடே அவ அடிக்கல என்றால் நானே உன்னை அடிச்சிருப்பேன். அந்தளவுக்கு எனக்கு கோபம் வந்துச்சு. ஆனால் அதுக்குள் அவ உன்னை அடிச்சிட்டுப் போயிட்டா” என்றவனை முறைத்த வினோத் காலை பிடித்து, “மாமா ஐஸ்கிரீம்” என்றாள் சின்னவள்.

தன் தங்கை குழந்தையை தூக்கி கொண்டவன், “இந்தா உன்னால் எனக்கு ஒரு கன்னம் பழுத்தது தான் மிச்சம்” என்று கூறவே இந்தருக்கு சிரிப்புதான் வந்தது.

“அன்னைக்கு ஒருத்தி வந்தா ஹாஸ்பிட்டலில் வைத்து என்னை லெப்ட் அண்ட் ரையிட் வாங்கினாள். இன்னைக்கு ஒருத்தி வந்தா என் கன்னத்தை பழுக்க வைத்துவிட்டு போய்விட்டாள். இதெல்லாம் பார்க்கும்போது மித்ராவை மறுபடியும் பார்த்த மாதிரியே இருக்கு” என்று சொல்லவே இந்தர்ஜித் சிந்தனையோடு சட்டென்று அவள் சென்ற திசையை நோக்கினான்.

அதுவரை அவள் மித்ராவாக இருப்பாளோ என்ற சந்தேகத்துடன் இருந்தவனின் நெஞ்சில் அவளின் குழந்தை முகம் தோன்றி மறைந்தது. இன்னொரு முறை அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவனின் மனதில் ஆழமாக வேரூன்றியது.

   

Leave a Reply

error: Content is protected !!