Malar – 1

Malar – 1
வைகறை நேரத்தில் நிலவு பளிச்சென்று ஒளி வீசியது. மேகங்கள் மெல்ல கலைந்து செல்ல, கீழ்வானம் மெல்ல சிவக்கத் தொடங்கியது. விடிந்தும், விடியாத காலை நேரத்தில் கடற்கரை மணலில் கால்கள் பதிய, சீரான வேகத்தில் ஜாக்கிங் சென்று கொண்டிருந்தான் மதியழகன்.
ஓரிடத்தில் நின்ற அவனுக்கு மூச்சிரைக்க, சற்று தொலைவில் நின்றிருந்த மங்கையின் மீது அவனது பார்வை பதிந்தது. பல்லவர்களின் கட்டிடக்கலைக்கு பெயர் போன மாமல்லபுரம் சிற்பங்களில் ஒன்றிற்கு உயிர் வந்தது போன்ற பிரம்மிப்பில் சிலையாகி நின்றான்.
கோல்டன் கலர் அனார்கலி சுடிதாரில் நின்ற பெண்ணின் கூந்தல் காற்றோடு கவிதை பேசியது. கலைந்த கூந்தலை அவள் காதோரம் ஒதுக்கிவிட, அவன் மனதில் சாரலடித்தது.
வானிலிருந்த வெண்ணிலவிற்கு போட்டியாக மண்ணில் ஒரு பெண்ணிலவு என்ற எண்ணத்துடன், அவளின் மீதிருந்து பார்வையை அகற்ற முடியாமல் திணறினான்.
“அக்கா!” இளைஞனின் குரலில் அவனது சிந்தனைக் கலைய, அவனைக் கடந்து சென்றான்.
அதுவரை அமைதியாக நின்றிருந்த பெண்ணின் முகம் கோபத்தில் சிவக்க, “இன்னைக்கு கோவிலுக்கு போகணும்னு சொன்னேன் இல்லடா…” அவள் கோபத்துடன் பேச, ‘சுட்டெரிக்கும் சூரியன்தான்’ மனதினுள் கிண்டலாக நினைத்தான் மதியழகன்.
மதியழகன் அவர்களைக் கடந்து செல்ல, “நேற்று நீதான் கடற்கரைக்கு போகணும்னு சொன்னே, அதுதான் ஜாக்கிங் கிளம்பும்போது, உன்னையும் சேர்த்து கூட்டிட்டு வந்துட்டேன்.” இருவரும் பேசுவது காதில் விழுந்தது.
அவளுடன் உரிமையாக சண்டை போடும்போதே, அது அவளது தம்பி என்ற உண்மையை ஓரளவு கணித்துவிட்டான். அவன் சிரித்தபடி விளக்கம் தர, அவளிடமிருந்து என்ன பதில் வருமென்ற ஆர்வம் மதியழகனுக்குத் தலைதூக்கியது.
“உன் தலை! இனி வீட்டுக்குப் போய் சமையலை முடிச்சிட்டுதான், கோவிலுக்கு போக முடியும். அம்மா என்னை திட்டுச்சுனா உன்னைத்தான் போட்டுக் கொடுப்பேன்.” நில்லாமல் நடந்து சென்றவளின் பின்னோடு சென்றது அவனின் மனம்.
“என்னன்னு?” அவளிடம் வம்பு வளர்க்க, மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு தம்பியை ஏறிட்டாள். மதியழகன் ஓடியபடி மெல்ல திரும்பிப் பார்க்க, அவளது கம்பீரமான தோரணைக் கண்டு வியந்தான்.
“அம்மா, உன் அருமை மகன் ஜாக்கிங் போறேன்னு சொல்லிட்டு கடற்கரைக்கு போய் பொண்ணுங்ககிட்ட கடலை போடுறான்னு சொல்வேன்.” அவள் குறும்புடன் கண்சிமிட்டினாள்.
“உன்னை…” தம்பிக்காரன் அவளை அடிக்கத் துரத்த, அவனது கைக்கு அகப்படாமல் கலகலவென்று சிரித்தபடி ஓடினாள்.
“அக்கா ஒழுங்கா அங்கேயே நில்லு, இல்ல ஆடிட்டர் ஆபிஸிற்கு போன் போட்டு லீவ் சொல்லிவிடுவேன். அப்புறம் அந்த ஆடிட்டரிடம் நீதான் திட்டு வாங்கணும்.” சின்னவன் மிரட்ட, அதைக் காதிலேயே அவள் வாங்கவில்லை.
“உனக்கு தில் இருந்தா போன் போட்டு சொல்லுடா. நானும் நீ வேலை செய்யும் பேங்கிற்கு உன்னோட ரிசைனிங் லெட்டர் அனுப்பிவிடுறேன். அடுத்த வேலை கிடைக்கும்வரை நீ அம்மாவிடம் திட்டு வாங்குவே.” நானும் பேச்சில் சளைத்தவள் அல்ல என்று அவள் நிரூபிக்க, கடைசியாக தம்பிக்காரன் தணிந்து போனான்.
“அந்த பயம் இருக்கட்டும்!” தம்பியை மிரட்டிவிட்டு, கொஞ்ச நேரத்தில் இருவரும் சமாதானம் ஆக, இந்த காட்சியைத் தள்ளி நின்று ரசித்த மதியழகன், ‘சரியான குறும்புக்காரி’ மனதிற்குள் நினைத்தான்.
அக்காவும் தம்பியும் அங்கேயே நின்று செல்ஃபி எடுக்க, அந்த ஃபோட்டோவோ அவர்களின் பின்னோடு நின்றிருந்த மதியழகனின் பிம்பத்தையும் சேர்த்து உள்வாங்கியது. இருவரும் தங்களுக்குள் பேசி சிரித்தபடி அங்கிருந்து செல்ல, மதியழகன் வீடு நோக்கிச் சென்றான்.
தன் இதயத்தில் அவள் கால்தடம் பதித்ததையே அவன் உணரவில்லை.
***
பாரதிபோல தலையில் முண்டாசைக் கட்டிக்கொண்டு, சமையலறையில் சுறுசுறுப்பாக வேலை செய்தார் ஏகாம்பரம். ஒரு அடுப்பில் ஆவி பறக்க இட்லியை இறக்கிய கையோடு, வீடே மணக்கும் அளவில் புதினா துவையலையும் செய்து வைத்தார்.
அதிகாலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு பரபரப்புடன் சமையலறைக்குள் நுழைந்தாள் நந்தினி. அதற்குள் வேலைகளை முடித்துவிட்ட ஏகாம்பரம், தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து முகத்தைத் துடைத்துவிட்டு தோளில் போட்டார்.
கிட்டத்தட்ட அனைத்து வேலைகளையும் முடித்துவிட்ட தந்தையை மனதினுள் மெச்சிக்கொண்டு,
“என்ன சமையலோ எதிர்த்து கேட்க யாருமில்லை
அப்பா சமையல் தின்று தின்று மரத்துப் போனதே
என்னடி நாக்கு மரத்துப் போனதே
அடுத்த அண்ணி சமையல் ருசிக்க ஆசை வந்ததே…” அவள் ராகத்துடன் பாட, தன் மகளின் குறும்புத்தனம் கண்டு வாய்விட்டுச் சிரித்தார் ஏகாம்பரம்.
வீட்டினுள் நுழைந்த மதியழகனின் காதில் தங்கையின் பேச்சு கேட்டது. சற்றுமுன் கடற்கரையில் சந்தித்த பெண்ணின் முகம் மனக்கண்ணில் தோன்றி மறைய, சட்டென்று தலையை உதறி தன்னிலைக்கு மீண்டான்.
“அந்த எண்ணமிருந்தால் இப்பவே அழிச்சிடு நந்து. என் மனைவி அடுப்படியில் வெந்து நொந்து நூடுல்ஸாக நான் விடமாட்டேன்.” தமையனின் குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றிருந்தான் மதியழகன்.
தன்னுடைய ஆசையில் மண்ணைப் போட்ட அண்ணனை முறைத்த சின்னவளோ, “அதெல்லாம் முடியாது, நான் அண்ணியை வேலை வாங்கியே தீருவேன். இது இந்த நந்தினி சபதம்!” என்றாள் வழக்கமான குறும்புடன்.
அவளின் தலையில் நறுக்கென்று அவன் கொட்டு வைக்க, “அம்மா!” வாய்விட்டு அலறிய மகளைப் பார்த்து சத்தமில்லாமல் சிரித்தார் ஏகாம்பரம்.
தன் அண்ணனின் மீதிருந்த கோபத்தில் நந்தினி காலை ஓங்கி மிதிக்க, “அம்மா!” என அலறிய தந்தையைப் பார்த்து திருதிருவென்று விழித்தாள்.
வீட்டிற்கு மூத்தவன் என்ற பெயரில் பக்கத்தில் இருந்த சட்டகத்தை (தோசைக் கரண்டி) எடுத்து தந்தையின் கையில் கொடுக்க, “உயிரே… உயிரே… எப்படியாவது தப்பித்து ஓடிவிடு…” வடிவேலு பாணியில் பாடிய நந்தினி அங்கிருந்து சிட்டாக பறந்துவிட, தந்தையும் மகனும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்தனர்.
சமைத்த உணவுகளை மதியழகன் டைனிங் டேபிளில் எடுத்து வைக்க, “உனக்கும் இப்போ வயசு இருபத்தி ஆறு ஆகிடுச்சு. இன்னும் எவ்வளவு நாள்தான் கல்யாணத்தை தள்ளிப்போட முடியும்?” அவர் வழக்கம்போல திருமணப்பேச்சை எடுத்தார்.
அவனது மனக்கண்ணில் அவளது பூமுகம் தோன்றி மறைய, “நம்ம நந்தினிக்கு முதலில் ஒரு நல்ல வரனாக பார்த்து திருமணத்தை முடிங்கப்பா. வயதுக்கு வந்த பெண்ணை வீட்டில் வச்சுக்கிட்டு, நான் கல்யாணம் செய்வது சரிவராது.” கல்யாணப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட, அவரின் முகத்தில் சிந்தனைப் படர்ந்தது.
தன் அறைக்குச் சென்ற மதியழகன் குளித்து உடையை மாற்றிக்கொண்டு கண்ணாடிமுன் நின்று தலைவாரினான். அறையின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, “நந்து உள்ளே வா.” என்றான்.
அண்ணன், தங்கை என்றாலும் அவர்களின் தனியறைக்குள் நுழையும் முன்பு, அனுமதி வாங்க வேண்டும் என்பது அந்த வீட்டின் எழுதப்படாத சட்டம். வயது வந்த பிள்ளைகளுக்கு இப்பழக்கம் இருப்பது நல்லது என்று இருவருக்கும் அடிக்கடி சொல்வார் ஏகாம்பரம்.
“அண்ணா எனக்கு பாக்கெட் மணி கொடு.” அவனின் எதிரே வந்து நிற்க,
“அப்போ அப்பாவிடம் வாங்கும் பாக்கெட் மணி என்ன செய்யற?” பொறுப்பான அண்ணனாக கேள்வியைக் கேட்டபடி, தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து நீட்டினான்.
“நம்ம சுசீலா அக்கா வாரப் பண்டு பிடிக்கிறாங்க அண்ணா. அப்பா கொடுக்கும் பணத்தை அதில் கட்டிவிட்டு, நீ கொடுப்பதை செலவுக்கு வச்சுக்கிறேன்.” உண்மையை மறையாமல் கூற, வீட்டின் சூழ்நிலையை உணர்ந்து நடக்கும் தங்கையை நினைத்து மனதினுள் மகிழ்ந்தான்.
அதை வெளிப்படையாக சொல்ல மனமின்றி, “நான்கூட பிள்ளைகளோடு சேர்ந்து பார்க், சினிமான்னு வெட்டியாக ஊரைச் சுத்திட்டு இருக்கிறேன்னு நினைச்சேனே!” அவளை வேண்டுமென்றே வம்பிற்கு இழுத்தான்.
அவனிடமிருந்து வெடுக்கென்று பணத்தைப் பிடுங்கிக் கொண்டு, “அப்பா, அண்ணா என்னை ஜவுளிக்கடைக்கு கூப்பிடுறான். ஹோட்டலில் கூட வேலை செய்யும் பொண்ணுக்கு சுடிதார் எடுக்கணும்னு சொல்றான், முதலில் அண்ணனைப் பிடித்து என்னன்னு விசாரிங்க.” சத்தமாக குரல்கொடுத்த நந்தினி, அவன் கைக்கு அகப்படாமல் ஓடிவிட்டாள்.
சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழிபோல, தற்காலிகமாக தான் சேமிக்கும் பணம் பின்நாளில் பெரிய விஷயத்திற்கு பயன்படும். அவளது தேவைகளை இரு ஆண்களும் கவனித்துக்கொள்ள, செலவுக்கு கொடுக்கும் பணத்தை சேமிப்பாக மாற்றுவது அவளுக்கு பெரிய விஷயமாகத் தோன்றியதில்லை.
இரு பிள்ளைகளும் அலுவலகம் செல்ல கிளம்பி வருவதற்குள், ஏகாம்பரம் குளித்துவிட்டு வந்து உணவைப் பரிமாற, “நீங்களும் உட்காருங்கப்பா.” என்றாள் நந்தினி.
அவரும் சரியென்று தலையசைத்து அமர, “இன்னைக்கு சட்னி சூப்பர்!” என்றான் மகன்.
மூவரும் தங்களுக்கான உணவைப் பரிமாறிக்கொண்டு சாப்பிட, “மதியத்திற்கு என்ன சமையல் அப்பா?” நந்தினி.
“தக்காளி சாதமும் உருளைக்கிழங்கு பொடிமாஸ் செஞ்சு வச்சிருக்கேன் சாப்பிடுங்க.” என்றார்.
இருவரும் மெளனமாக உணவில் கவனம் செலுத்த, “இன்னைக்கு சாயங்காலம் மார்க்கெட் போய் காய்கறி, வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான் வாங்கணும். நீ கொஞ்சம் சீக்கிரம் வந்திடுப்பா. நந்தினி நீ நைட் சமையல் பண்ணிடுமா.” அவர் அடுத்தடுத்த கட்டளைகளைப் பிறப்பித்தார்.
“சரிப்பா.” என்றனர் மதியும் நந்துவும்.
காலை உணவு முடிந்ததும் சாப்பிட்டத் தட்டை எடுத்துச்சென்று கையோடு கழுவி வைத்த நந்தினியிடம், “கொஞ்சம் சீக்கிரம் கிளம்பு நந்து, இன்னைக்கு ஆபீஸில் முக்கியமான மீட்டிங் ஒன்று இருக்கு.” என்றான் மதியழகன்.
“இதோ இரண்டே நிமிஷம்…” நந்தினி தன்னுடைய ஹேண்ட்பேக்கை எடுத்துக்கொண்டு வர, அவளுக்கு டிஃபனை எடுத்து கொடுத்தான் பெரியவன்.
தன் அண்ணனின் கையில் பைக் சாவியைக் கொடுத்த மகளின் அருகே வந்த ஏகாம்பரம், “பொண்ணு நெற்றியில் பொட்டு சரியா வைக்கணும்.” தகப்பன் அதை சரி செய்துவிட, மூவரும் வீட்டைவிட்டு வெளியே வந்தனர்.
“சரிப்பா, நாங்க கிளம்பறோம். நீங்க சாயங்காலம் கிளம்பி தயாராக இருங்க. நந்துவை வீட்டில் விட்டுவிட்டு, நாம கடைக்கு போயிட்டு வரலாம்.” என்றான்.
நந்தினி அண்ணனின் பின்னோடு அமர, “ரோட்டில் ட்ராஃபிக் கம்மியா இருந்தாலும், நீ கொஞ்சம் மெதுவாகவே போப்பா. மிதமான வேகம் எல்லோருக்கும் நல்லது ஞாபகம் இருக்கட்டும்.” கண்டிப்புடன் கூற, சரியென்று தலையசைத்து பைக்கை எடுத்தான் மதியழகன்.
தன் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பிய கையோடு வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பிய ஏகாம்பரம், நேராக சென்றது அவருடைய டைலரிங் கடைக்குத்தான். பெரிய கடைகளில் ஆர்டர் எடுத்து பேண்ட் மற்றும் சர்ட் தைத்து கொடுக்கிறார்.
சிறுவயதிலேயே மனைவியை இழந்த ஏகாம்பரத்தின் வாழ்க்கைச் சக்கரம் இன்றுவரை சுழல காரணமே மதியழகனும் நந்தினியும்தான். தாயின் இடத்தில் இருந்து அன்பையும் பாசத்தையும் தந்து, தந்தைக்கு உரிய கண்டிப்பையும் காட்டி வளர்த்தார்.
நடுத்தர குடும்பத்து தலைவனான ஏகாம்பரம் தையல் தொழில் செய்து பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்தார். மதியழகன் BHM முடித்துவிட்டு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஈவண்ட் மேனேஜராக வேலையில் இருக்க, B.Sc முடித்த கையோடு பேங்க் தேர்வு எழுதி வேலையில் சேர்ந்துவிட்டாள் நந்தினி.
மதியழகனும் நந்தினியும் வேலைக்குச் சென்று கைநிறைய சம்பாரித்துக் கொடுத்து, தந்தைக்கு பக்கபலமாக இருக்கின்றனர்.
தன் சம்பாத்தியம் குடும்பத்திற்கு முக்கியம் என்ற காரணத்தால், டைலரிங் கடையை இன்றுவரை நடத்தி வருகிறார். தனக்கு கீழே வேலை செய்யும் நபர்களுக்கு இணையாக அமர்ந்து அவரும் வேலை செய்கிறார். தன்னுடைய பூர்வீக சொத்தை விற்றதில் வந்த பணத்தை, இரு பிள்ளைகளின் பெயரிலும் சரிசமமாக ஃபிக்ஸ்ட் டெப்பாசிட்டாக போட்டு வைத்திருக்கிறார்.
நேற்று நடந்தது, நாளை நடக்க போவது இரண்டைப் பற்றியும் எந்த கவலையும் இல்லாமல், இந்த நிமிடம் வாழ்க்கையை அனுபவித்து வாழ்கின்றனர்.
மற்றவர்கள் போல டிவி, செல்போன் என நேரத்தை செலவிடாமல், தங்களுக்குக் கிடைக்கும் கொஞ்ச நேரத்தை கலகலப்பாக பேசி சிரிப்பார்கள். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளுடன் அவர் தோழமை பாராட்ட, அவர்களும் அதற்கு ஏற்றார்போல நடந்து கொண்டனர்.
***
நடுத்தர வாழ்க்கை வாழும் நபர்கள் வசிக்கின்ற குடியிருப்பு பகுதியில், பத்மாவதி இல்லம் அமைந்திருந்தது. காலையிலேயே சமையலறைக்குள் பம்பரமாக சுழன்ற பத்மாவதி, “நேற்று ஜாதகம் பார்க்க போன இடத்தில், பிள்ளைகளுக்கு நேரம் சரியில்ல. துர்க்கைக்கு ஏழு வாரம் விளக்கு போடுன்னு சொல்றான். இங்கே நம்ம சொன்னால் யார் கேட்கிறா?” புலம்ப, அருண்மொழி பம்மியபடி சாப்பிட அமர்ந்தான்.
காலையில் அக்காவைக் கடற்கரைக்கு அழைத்து சென்றதால் வந்த வினை என நினைத்து, “அம்மா அக்காவைத் திட்டாதே, நான்தான் அவங்களை ஜாக்கிங் போகும்போது கூட்டிட்டு போனேன்.” அவன் மொத்த பழியும் தன் தலையில் போட்டுக் கொண்டான்.
அவன் சொன்னதைக் காதிலேயே வாங்காமல், “இன்னைக்கு உன் அக்காவைக் கோவிலுக்கு போய் விளக்கு போட சொல்லுடா. வேலைக்கு போகணும்னு இதை செய்ய மறந்தால், அப்புறம் நடக்கறதே வேற…” என்றார் கோபத்துடன்.
அதற்குள் அலுவலகம் செல்ல தயாராகி வந்தவளோ, “ஐயோ! சரிம்மா, உனக்கு விளக்குதானே போடணும். நான் ஆபீஸ் போகும் வழியில் போட்டுவிட்டு போறேன்.” தம்பியை முறைத்தபடி வாசலை நோக்கி சென்றாள்.
தமக்கையின் கோபத்திற்கான காரணம் புரிய, ‘ஐயோ! அக்கா வேற முறைக்கிறாங்களே, இப்போ இவங்களை எப்படி சமாளிக்கறது?’ மானசீகமாக தலையில் கை வைத்தான் அருண்மொழி.
“ஏய், சாப்பிட்டு போ.” பத்மாவதி குரல் கொடுக்க, “டைம் இல்லம்மா.” கிளம்பிவிட, அருண்மொழி பைக் சாவியை எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தான்.
தன் பைக்கை ஸ்டார்ட் செய்த அருண்மொழி அக்காவின் முன்பு வண்டியை நிறுத்த, “இப்படியே ஏதாவது செய்து என் வாயை அடைத்துவிடு. டேய் சீக்கிரம் வண்டியை எடு.” என்றாள்.
பத்மாவதி கொண்டு வந்த டிபன் பாக்ஸைக்கூட வாங்காமல், “அம்மா நாங்க கிளம்பறோம்.” பைக்கை எடுத்த அருண்மொழி நிற்காமல் சென்றான்.
“அப்பா இல்லாத பிள்ளைகள்னு செல்லம் கொடுத்த என்னைச் சொல்லணும். ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம். இவங்களுக்கு நல்லது சொல்லி தந்தே, எனக்கு வயசாகிடும் போல.” வழக்கம் போலவே பிள்ளைகளை வறுத்தெடுக்கத் தொடங்கினார்.
பத்மாவதியின் கணவன் ஒரு விபத்தில் இறந்துவிட, தாயின் துணையுடன் பிள்ளைகளை வளர்த்தி ஆளாக்கினார். தாயாரும் சமீபத்தில் இறந்துபோக, வீட்டில் இருந்து அவர்களைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறார்.
தன் அக்காவை அவள் வேலை செய்யும் அலுவலகம் முன்பு இறக்கிவிட்டு, அருண்மொழி கிளம்பிச் சென்றான். அவன் சென்றதை உறுதி செய்த மலர், ‘இனி இவனை வேற சமாளிக்கணும்.’ சிந்தனையுடன் கோவிலுக்குள் நுழைந்தாள்.