malar – 14

f8b7ca5f5f7036cd6b7fd3c3b50e3c9e-03a3dcd4

malar – 14

அத்தியாயம் – 14

காலையில் வழக்கம்போல கடைக்கு தயாராகி வந்த வெற்றிக்கு உணவை எடுத்து வைத்த ஜமுனா அவனோடு சேர்ந்து சாப்பிட அமர்ந்தாள். இப்போதெல்லாம் அவளும் கடைக்கு வர தொடங்கியதால் சகஜமாக எடுத்துக்கொண்ட வெற்றி, “இன்னைக்கு சமையல் ரொம்ப நல்ல இருக்கு செல்லம்மா” என்றவன் உணவில் கவனம் செலுத்தினான்.

ஜமுனாவின் பார்வை அவனின் மீதே நிலைத்திருக்க, ‘அண்ணன் முன்னாடி மாதிரி இல்லையே?! ஜனனி பற்றிகூட அதிகமாக பேசுவதில்லையே.. என்ன விஷயமாக இருக்கும்?’ அவள் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது.

சட்டென்று நிமிர்ந்த வெற்றி தங்கை வெறும் தோசையை சாம்பாரே இல்லாத தட்டில் தோய்த்து எடுப்பதை கண்டு, “சாப்பிடும் போது அப்படி என்ன யோசனைன்னு எனக்கு புரியல? முதலில் வயித்துக்கு சாப்பிடு ஜமுனா” என்றவன் அவளுக்கு சாம்பாரை ஊற்றிவிட்டு கைகழுவ எழுந்து சென்றான்.

அவன் சொன்ன அர்த்தம் அப்போதுதான் புரியவே வேகமாக சாப்பிட்டு எழுந்தவள், “சாரி அண்ணா. இனிமேல் ஒழுங்காக சாப்பிடுவேன்” என்று சொல்லிவிட்டு கையைக் கழுவிக்கொண்டு வெளியே வருவதற்குள் கையில் பைக் சாவியுடன் வந்தான் வெற்றி.

மதிய உணவை எடுத்துகொண்டு அண்ணனைப் பின்தொடர்ந்து சென்ற மகளைக் கண்ட விமலா, “ஜமுனா ஒரு நிமிஷம் நில்லு” என்றார்.

அண்ணனும், தங்கையும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டு தாயின் பக்கம் திரும்ப, “அவன் வேலைக்கு போகிறான் அது சரி.. ஆனால் நீயேன் தேவையில்லாமல் அவனோடு போற” கோபத்துடன் கேட்டார்.

“எனக்கு என் அண்ணன் பக்கத்தில் இருக்க பிடிச்சிருக்கு. அதுதான் அவனோடு கடைக்குப் போறேன். அங்கே இருப்பவங்கிட்ட பேசினால் நேரம் போவதே தெரியாது” என்றவள் பட்டென்று பதில் கொடுக்கவே, விமலாவின் முகம் விழுந்துவிட்டது.

வெற்றி அமைதியாக நின்றிருக்க, “ஏண்டா அவ இவ்வளவு பேசற.. நீ மரம் மாதிரி நின்னால் என்ன அர்த்தம்?” என்று மகனிடம் தன் கடுப்பைக் காட்டினார்.

அவனோ சற்றும் யோசிக்காமல், “அவ சொல்வது சரின்னு அர்த்தம். சும்மா வேணும்னு வம்பு இழுக்க நினைத்தால் சாயந்திரம் சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வரேன் அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க” என்றவன் தங்கையின் கையைப் பிடித்து அழைத்து சென்றுவிட அவரோ பல்லைக் கடித்துக்கொண்டு அறைக்குள் சென்று மறைந்தார்.

அவர்கள் இருவரும் பைக்கில் கடைக்கு சென்று கடையை நீக்கினான். ஜமுனா ஒவ்வொரு புடவையாக எடுத்து வந்து வெளியே மாட்டிவும் வேலையைத் தொடங்கினாள். ஒன்பது மணியானதும் எல்லோரும் வந்துவிடவே வெற்றியின் கண்கள் செவ்வந்தியைத் தேடியது.

‘என்ன இவங்க இன்னும் வராமல் இருக்காங்க?’ என்றவன் யோசிக்கவும்  வாசலில் ஸ்கூட்டி வந்து நிற்கவும் நேரம் சரியாக இருந்தது. வெற்றி சட்டென்று திரும்பிப் பார்க்க மைதிலி மட்டுமே வருவதை கண்டு அவனின் புருவங்கள் கேள்வியாக சுருங்கியது.

‘இவங்க மட்டும் வந்திருக்காங்க.. ஆமா செவ்வந்தி எங்கே?’ என்ற சிந்தனையோடு கேட்க நினைக்கும் நேரத்தில் கடைக்குள் ரெகுலர் கஸ்டமர் நுழைவதைக் கண்டு அவர்களைக் கவனிக்கும் வேலையைத் தொடர்ந்தான்.

 அதே நேரத்தில் மைதிலி மற்றவர்களுக்கு துணியை வெட்டிக் கொடுப்பதை கண்டு, “என்னக்கா இன்னைக்கு அண்ணி வரவில்லையா நீங்க கட்டும் கட்டிங் பண்ணிட்டு இருக்கீங்க?” என்று விசாரித்தாள்.

“செவ்வந்தி வேலை விஷயமாக கொஞ்சம் வெளியே போயிருக்கிற ஜமுனா. இல்லன்னா அவதான் இந்த வேலையை செய்வா. நான் என் மிஷினில் தைச்சிட்டு இருப்பேன்” என்றதும் கலகலவென்று இருவரும் சிரித்தனர்.

அனைவரும் வேலையில் கவனத்தை திருப்பிட ஜமுனாவை தன் மிஷினில் அமர வைத்து தைக்க கற்று கொடுக்கும் முயற்சியில் இறங்கினாள் மைதிலி. யாருமில்லாமல் தனியாக வளர்ந்த மைதிலிக்கு ஜமுனா ஒரு தங்கையாகவே மாறிப் போனாள். அதனால் அவளுக்கு பிடித்தது என்று சொன்னதற்காகவே டைலரின் கற்றுக் கொடுக்கிறாள்.

மற்றவர்களுக்கு துணியை வெட்டி கொடுத்துவிட்டு இவள் வேலையைத் தொடர நினைக்கும்போது வெற்றியைக் கவனித்தாள். காலையிலிருந்து வாசலைப் பார்ப்பது பிறகு யாருக்கோ போன் செய்வதுமாகவே இருந்தான். அவனின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருப்பதைக் கண்டவுடன் தன் போனில் இருந்து செவ்வந்திக்கு அழைத்தாள்.

“நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளரின் நம்பர் தற்போது சுவிச் ஆப் செய்யபட்டுள்ளது” என்று வரவே குறும்புடன் போனை கட் பண்ணிவிட்டாள்.

அப்போது ஒரு குடும்பமே உள்ளே நுழைவதை கண்ட ஜமுனா, “மைதிலி அக்கா நான்  அங்கே போறேன். கூட்டம் வருகின்ற மாதிரி இருக்கு” என்று எழுந்து சென்றாள். பெரியவர்களின் படைசூழ தன்னவனோடு கைகோர்த்து நடந்து வந்த ஜனனியைப் பார்த்ததும் திடுக்கிட்டாள்.

ஜவுளி எடுக்க வந்தவர்களுக்கு நல்ல டிசைன் காட்ட சொல்லிவிட்டு, “அண்ணா ஜனனிக்கு திருமணம்னு ஜவுளி எடுக்க வந்திருக்காங்க. நீ எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்கிற” என்று குழப்பத்துடன் தமையனை ஏறிட்டாள்.

“திருமண முடிவுகள் அவரவர் விருப்பம் ஜமுனா. அதில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது. அவளுக்கு மாப்பிள்ளையை பிடித்திருப்பதால் கல்யாணம் பண்ணிக்க ஓகே  சொல்லிட்டா. இதில் வருத்தப்படவோ யோசிக்கவோ ஒண்ணுமே இல்ல” என்று சர்வசாதாரணமாக சொல்லிவிட்டு மற்ற வேலைகளைக் கவனித்தான்.

அவன் சட்டென்று இப்படி  பேசவும் மலைத்துப் போனாள் ஜமுனா. இத்தனை நாளாக நெகட்டிவாக யோசிப்பவனிடம் பாசிட்டிவ் திங்கிங் வந்திருப்பதை புரிந்து கொண்டாள். அதன்பிறகு அவளும் வேலையைக் கவனிக்க திருமணத்திற்கு ஜவுளி எடுத்துவிட்டு கடந்து சென்ற ஜனனி அவளைத் திரும்பிப் பார்க்காமல் சென்றாள்.

அவர்கள் சென்றபிறகு நேராக மைதிலியிடம் சென்ற வெற்றி, “செவ்வந்தி ஏன் இன்னும் கடைக்கு வரல. அவங்களுக்கு உடம்பு சரியில்லையா?” அக்கறையோடு விசாரித்தான்.

வழக்கமாக குறும்பு தலைத் தூக்கிட, “ஆமா அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. அதன் வீட்டிலேயே இருக்க சொல்லிட்டு வந்துட்டேன்” என்றவள் பதில் கொடுக்க அவனின் முகம் சட்டென்று வாடிப் போனது.

தன்னவளுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும், ஜுரம் வந்தால் வீட்டையே இரண்டு பண்ணிடுவாளே. அவளைத் தனியாக அங்கே விட்டு வந்திருக்கிறாளே.. எதற்கும் நேரில் சென்று பார்க்கலாம்’ என்ற எண்ணம்  தோன்றவே அதை அப்போதே செயல்படுத்தினான்.

வெற்றி – மைதிலி இருவரும் பேசுவதை கவனித்த ஜமுனா அவர்களின் அருகே வர, “நான் ஒரு முக்கியமான வேலை விஷயமாக வெளியே போகணும். அதனால் நீ கடையைப் பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டு பைக் சாவியை எடுத்துகொண்டு கிளம்பிவிட்டான்.

அவன் செல்லும் வேகம் கண்டு, “அண்ணா இவ்வளவு வேகமாக போறான்” என்று குழப்பத்தோடு நின்றவளை பார்த்து குறும்புடன் சிரித்தபடி தன் வேலையைத் தொடர்ந்தாள் மைதிலி.

செவ்வந்தியை பார்க்க வீட்டிற்கு சென்ற வெற்றியை பூட்டிய வீடே வரவேற்றது. மைதிலி வேண்டுமென்றே பொய் சொல்லி இருக்கிறாள் என்ற உண்மை புரிந்த மறுநொடி மீண்டும் கடைக்கு வண்டியை திருப்பினான்.

சற்று நேரத்தில் வெற்றி கோபத்துடன் கடைக்குள் நுழைவதை கண்டு, ‘நம்ம நினைச்சது சரிதான். இவரு செவ்வந்தியை உயிருக்கு உயிராக விரும்புகிறார்’ மனதில் நினைத்தவள் பயத்துடன் எழுந்து நின்றாள்.

“மைதிலி என்ன விளையாடிட்டு இருக்கிறீயா? ஆமா செவ்வந்தி எங்கே போனாள்? உன்னிடம் சொல்லாமல் அவள் வெளியே எங்கேயும் போகமாட்டாளே?! அவ எங்கே போயிருக்கான்னு உனக்கு தெரியுமா?” என்று கோபத்துடன் கேட்டான்.

அவனிடம் இவ்வளவு கோபத்தை எதிர்பார்க்காத மைதிலி பயத்தில் கைகால்கள் வெடவெடக்க, “அவ என்னிடம் எதுவும் சொல்லிட்டுப் போகல. ஆனால் திரும்ப வருவதற்கு ஒரு வாரம் ஆகும்னு மட்டும் எழுதி வச்சிருந்தா..” என்று அவனுக்கு பதில் கொடுத்தாள்.

‘யாரிடமும் சொல்லாமல் எங்கே போனாள்?’ என்ற கேள்வியுடன் தேதியைப் பார்த்தவன் தீவிரமான சிந்தனையோடு அங்கிருந்து நகர்ந்தான். அதன்பிறகுதான் மைதிலிக்கு போன உயிர் திரும்ப வந்தது.

***

அதே நேரத்தில் வேளாங்கண்ணியை நோக்கி பயணித்து கொண்டிருந்தாள் செவ்வந்தி. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கடலலை கண்ணைக் கவர்ந்தது. சூரியன் கிழக்கே உதித்து தன் பயணித்தை இனிதே தொடங்கியிருந்தது. ஆங்காங்கே சில குடிசைகள் அவளின் கண்களில் விழுந்தது.

‘இத்தனை வருடத்தில் கடலோர குடிசைகள் மாளிகையாக மாறவிட்டாலும் குட்டி ஓட்டு வீடுகளாக அவதாரம் எடுத்திருக்கிறதே இதுவே பெரிய விஷயம் தான்’ என்று மனதளவில் நினைத்துக் கொண்டாள்.

அடுத்த ஸ்டாப்பில் பஸ் நிற்க அதில் ஏறிய இருவரும் செவ்வந்தி சீட்டிற்கு பின்னோடு இருந்த இருக்கையில் அமர்ந்தனர். சங்கீதா மருந்தின் வீரியத்தினால் கணவனின் தோள் சாய்ந்து தூக்கிவிட்டார். உயிருக்கு உயிரான  மகளின் நினைவில் இரண்டு நாட்களாக விடிய விடிய அழுத சங்கீதாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருந்த காரணத்தில் மருத்துவரிடம் காட்டுவதற்கு டவுனிற்கு அழைத்துச் சென்றார்.

அவரை செக் பண்ணிய டாக்டர், “எதுக்குங்க தேவையில்லாத கவலைகளை மனதில் தேக்கி வைத்து இப்படி அழுது உடம்பை கேடுத்துக்கிறீங்க? உங்க மகள் உங்களைத் தேடி வருவாள். அந்த நம்பிக்கையை இழக்காமல் இருங்க” என்று தைரியம் சொல்லி ஊசிபோட்டு மருந்துகளை எழுதி கொடுத்து அனுப்பினார்.

ஜெகதீஸ் மனைவியின் கூந்தலை வருடிவிட, “ஏங்க பாப்பா என்னைத் தேடி வந்துவிடுவாள் தானே?” என்று அரைத் தூக்கத்தில் கேட்டார். அந்த குரல்கேட்டு செவ்வந்திக்கு மனம் வலித்தது.

‘நான் உறவுகள் இல்லாமல் தனிமையில் கிடந்தது தவிக்கிறேன். இவங்க மகளைத் தொலைத்துவிட்டு அழுதே கரையிறாங்க. எல்லாம் விதிப்படி நடக்குமென்று சிலர் சொல்றாங்க’ என்ற எண்ணத்துடன் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார்.

அவள் திரும்பிப் பார்க்க மனமில்லாமல் அமர்ந்திருக்க, “கண்டிப்பா.. உன்னைவிட அவளுக்கு வேற எதுவுமே முக்கியம் கிடையாது” என்று மனைவியைத் தேறியவர் அடுத்த ஸ்டாப்பில் இறங்கிவிட்டார்.

இதையறியாத பெண்ணவளின் மனதில் எழுந்த ஆவலை அடக்க முடியாமல் திரும்பி பார்த்தாள். அந்த இடத்தில் இரண்டு கல்லூரி பெண்கள் உட்கார்ந்து இருப்பதை கண்டு பெருமூச்சுடன் மீண்டும் பழையபடி திரும்பி அமர்ந்தாள்.

அடுத்த ஸ்டாப்பில் வேளாங்கண்ணி வந்துவிடவே ஸ்டாப்பில் இறங்கியவள் ஹோட்டலில் ரூம் எடுத்து குளித்துவிட்டு வெளியே வந்தவள் சிறிதுநேரம் ஓய்வெடுத்தாள். மாலை நேரமானதும் தன் கையோடு கொண்டு வந்திருந்த செவ்வந்தி பூவின் கவரை கையில் எடுத்துக்கொண்டு கடற்கரை நோக்கி நடந்தாள்.

கிருஸ்துமஸ் என்பதால் கடற்கரையில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சிறுபிள்ளைகள் அலையில் விளையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தபடி மணல்பரப்பில் அமர்ந்தவளின் மனம் ஏனோ கனத்துப் போனது. குறிப்பிட்ட வயதிற்கு பிறகு கிருஸ்துமஸ் அன்று வேளாங்கண்ணிக்கு வருவது அவளின் வழக்கமாகி போனது.

செவ்வந்தி சூரியனின் அஸ்தமனத்தை பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள். காற்றோடு கூந்தல் அசைந்தாடிட அவளின் பார்வை எதர்ச்சியாக அந்த வயதான தம்பதியின் மீது படிந்தது. கணவனின் கரங்கள் மனைவியை தோளோடு அனைத்து காதிற்குள் ஏதோ சொல்ல அந்த பெண்ணின் முகம் மெல்ல தெளிவடைந்தது.

அவளின் சிந்தனையைக் கலைக்கும் விதமாக, “அக்கா எனக்கு இதில் ஒரு பூ கொடுக்கிறீங்களா?” என்ற குல்கேட்டு சட்டென்று திரும்பியவளின் எதிரே ஒரு குட்டிப்பெண் நின்றிருந்தாள்.

அவள் முகத்தையே பார்ப்பதை கண்டு, “என்ன வேணும்னு கேட்ட பாப்பா” என்றாள் செவ்வந்தி புன்னகையோடு.

“இந்த பூ ஒன்னு மட்டும் கொடுங்க அக்கா” என்று அவள் தனியாக பையில் வைத்திருந்த மஞ்சள் நிற செவ்வந்தி பூவை கைகாட்டினாள் சின்னவள்.

அதில் இரண்டு பூக்களை எடுத்து சின்னவளின் கையில் கொடுக்க முகம் மலர, “தேங்க்ஸ் அக்கா” என்று கூறிய சிறியவள் விளையாட ஓடிவிடவே செவ்வந்தி எழுந்து கடலை நோக்கி சென்றாள்.

அலைகள் அவளின் காலைத் தொட்டு தழுவிச் செல்ல, ‘எனக்கென்று இந்த உலகில் இருந்த இருவரையும் உனக்கு வேண்டுமென்று எடுத்து கொண்டாயே நியாயமா?!’ என்று மனதிற்குள் கடலிடம் பேசியவள் கையில் இருந்த பூக்களை கடலலையில் கொட்டினாள்.

அவள் கொட்டிய பூக்கள் சில கடல் அலைகளில் மிதப்பதை கண்டு அவளின் உதடுகளில் புன்னகை அரும்பிட, ‘அப்பா, அம்மா இந்த பூக்கள் உங்களோட பாதங்களில் வந்து சேரட்டும்’ என்ற எண்ணத்துடன் தன்னை மறந்து அப்படியே நின்றாள் செவ்வந்தி.

ஜெகதீஸ் – சங்கீதா இருவரும் வீட்டிற்கு செல்வதற்காக எழுந்தபோது செவ்வந்தி கொட்டிய பூக்கள் அவர்களின் காலடியில் கரை ஒதுங்கியது.

சங்கீதா குனிந்து பூக்களை கையில் எடுத்துக்கொண்டு, “செவ்வந்தி” என்றார் உணர்வு பூர்வமாக.

அந்த மலர்களை கடலில் போட்டது யாரென்ற கேள்வியோடு பார்வையை சுழற்றிய ஜெகதீஸ் அருகே அந்த குட்டிப்பெண் தன் தோழிகளோடு விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த பெண்ணை அருகே அழைத்த ஜெகதீஸ், “பாப்பா இந்த பூவை யாரும்மா உனக்கு கொடுத்தாங்க” என்று விசாரிக்க அந்த பெண்ணோ தூரத்தில் நின்ற செவ்வந்தியைக் கைகாட்டினாள்.

“அதோ அந்த அக்காதான் எனக்கு பூ கொடுத்தாங்க..” என்றாள் குறுஞ்சிரிப்புடன்.

“எனக்கு ஒரு பூ வாங்கிட்டு வந்து கொடுக்கிறீயா பாப்பா”  என்றவரின் குரல் தழுதழுத்தது.

குட்டி பெண் சிந்தனையில் நின்றிருக்க, “பாப்பா இந்த ஆண்ட்டிக்கு அந்த பூ வேணுமாம். பாவம் இந்த ஆன்ட்டிக்கு உடம்பு சரியில்ல. அவங்களுக்கு இந்த பூவைக் கொடுத்தால் உடம்பு சரியாகிடும். ஒரே ஒரு பூ மட்டும் வாங்கிட்டு வா” என்றதும் சிறிய பெண்ணின்  மனம்  இளகிவிட்டது.

உடனே செவ்வந்தியை நோக்கி ஓடினாள் சிறுமி. சங்கீதா கண்கள் கலங்கிய கையில் வைத்திருந்த பூவை பார்த்தபடி சிலையாகி நின்றுவிட்டார்.

தன் தாய் அழைப்பது போன்ற பிரம்மை உருவாக்கிட கால்கள் தடுமாறிட மீண்டும் கடலின் அலையில் கால் பதித்துவிட்டு மீண்டும் கையிலிருந்த பூக்களை கொட்டுவதற்கு முன்னால், “அக்கா இன்னொரு அம்மாவுக்கு இந்த பூ வேணும்னு கேட்டாங்க” என்று தூரத்தில் நின்றிருந்த அந்த வயதான பெண்மணியைக் கைகாட்டினாள்.

தூரத்தில் நின்று பார்த்த செவ்வந்தியால் முக ஜாடையை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடவே, “இந்த கவரோடு பூவை அவங்ககிட்ட கொடுத்திரு பாப்பா” என்றவள் அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

சிறுமி பூவை கொண்டு வந்து ஜெகதீஸிடம் கொடுக்க, “தேங்க்ஸ் பாப்பா” என்றார்.

சங்கீதா புன்னகையோடு அந்த பூவை தொட்டு பார்த்தவரின் கண்களில் கண்ணீர் பெருகிட, “என்னை தேடி என் பொண்ணு சீக்கிரம் வருவாள்” என்று கூறிய சங்கீதா மனதில் நினைத்ததை வெளிப்படையாக கூறினார்.

அந்த வார்த்தைகள் ஜெகதீஸ் மனதிற்கு புத்துயிர் கொடுக்க மனைவியை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார். செவ்வந்தி ரூமை காலி செய்துவிட்டு பஸ் ஏறியவளின் கண்களில் கண்ணீர் பெருகியது. தன் தாய், தந்தையின் இழப்பை எண்ணியவளுக்கு சற்றுமுன் அவள் கண்டது தன்னுடைய பெற்றோர் என்ற உண்மை தெரியாமலே போனது.

 

 

 

Leave a Reply

error: Content is protected !!