Mathu…Mathi!- 10

Mathu…Mathi!- 10
மது…மதி! – 10
கௌதமிடம் அலைபேசி வழியாக பேசிக்கொண்டிருந்த எதிர்முனை தடுமாற, “நானும் என் மனைவியும் மட்டுந்தான் காரில் இருக்கோம்” அவன் நிதானமாக கூற, அவர்கள் பேச்சை ப்ளூடூத் ஸ்பீக்கர் வழியாக கேட்டுக் கொண்டிருந்த மதுமதியின் புருவம் சுருங்கியது.
“இல்லை சார் அது வந்து, உங்க மனைவியோட அப்பா…” எதிர்முனை தடுமாற, அவன் சட்டென்று பிரேக்கை அழுத்தினான். அவன் கார் ப்ளூடூத் ஸ்பீக்கரை நிறுத்திவிட்டு, ப்ளூடூத்தை தன் செவிகளுக்கு மாற்றினான்.
“ம்… ம்…” என்று மட்டுமே காரை செலுத்தியபடி ‘ம்…’கொட்டினான்.
தன் பேச்சை முடித்துவிட்டு அவன் காரை மெளனமாக செலுத்தினான். ‘மதுமதி எதுவும் கேட்பாளோ? என்ன சொல்வது?’ அவனை இந்த கேள்வி குடைய, அவனிடம் அமைதி. மதுமதி எதுவும் கேட்கவில்லை. ‘மதும்மா என்ன யோசிக்குறா?’ அவன் கண்கள் அவளை அவ்வப்பொழுது அளவிட்டன.
தனக்கும் எதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் அவள் அசட்டையாக அமர்ந்திருந்தாள். அவன் திருநெல்வேலி ஜங்ஷன் அருகே இருந்த ஒரு லாட்ஜ் முன் வண்டியை நிறுத்த, “இங்க எதுக்கு நிறுத்தறீங்க?” அவள் அது தான் முக்கியம் என்பது போல் கேட்க, “இன்னைக்கு இங்க தங்க போறோம்” அவன் காரின் பின் பக்கம் இருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு அழுத்தமான காலடிகளோடு முன்னே செல்ல அவனை அவள் பின் தொடர்ந்தாள்.
அதன் பின் ரிசப்ஷனில் அவன் எதுவோ பேச அங்கிருந்த சோபாவில் அவள் அமர்ந்தாள். அவள் உள்ளுணர்வு ஏதோ கூற, அவள் பட்டென்று திரும்பினாள். ‘யாரோ நிற்பது போல் இருந்ததே’ அவள் கண்கள் சுருங்கியது. அங்கு யாருமில்லை. யாரோ இருப்பது போல் அவள் மனமும் மூளையும் கூறினாலும், இல்லையென்று அவள் கண்கள் பறைசாற்றியது. ‘நான் தான் ரொம்ப பயப்படுறேனோ’ அவள் தலையசைத்துக் கொண்டாள்.
அவர்கள் அறைக்குள் செல்ல, அந்த அறை நல்ல விசாலமாக இருந்தது. “ரெப்பிரேஷ் பண்ணிட்டு வரேன்.” என கூறி தன் வேலைகளை முடித்துவிட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து, எதிரே இருந்த நாற்காலியில் கால் நீட்டினான். இரவு முழுதும் கார் ஓட்டியதில் அவனிடம் கொஞ்சம் சோர்வு. முகம் கழுவிக்கொண்டு மதுமதி அங்கு வர அவன் தன் மனையாளைப் பார்த்தான்.
அவள் ஏதாவது கேட்பாள் என்று அவன் நினைத்து அவள் கேட்காமல் போக, “என்கிட்டே எதுவும் கேட்க மாட்டியா மதும்மா?” என்றான் அவர்களுக்கு இடையே தோன்றிய மௌனத்தை கலைத்தபடி, “எதைப்பத்தி?” என்று எதுவும் அறியாதவள் போல் கேட்டாள் மதுமதி.
மதுமதிக்கு அவள் தந்தையை பற்றி பேச விருப்பமில்லை. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை. அவனும் மேலும் எதுவும் அவளிடம் கட்டாயப்படுத்தி கூற விரும்பாதவனாய், “அந்த பெண் மேகனாவை அடச்சீ தான் வச்சிருக்காங்க. இப்ப சென்னையில் இல்லை, இடம் மாத்திட்டாங்க” அவன் அவளுக்கு தேவையானதை மட்டும் சுருக்கி கூற,
“ஓ…” என்றாள் சுரத்தே இல்லாமல். மீண்டும் அமைதி. “நான் ஒன்னு சொல்லட்டுமா?” என்று அவள் கேட்க, ‘என்ன?’ என்று அவன் புருவங்களை உயர்த்தினான்.
“நீங்க எதுக்கு இவ்வளவு சிரமப்படுறீங்க? மொபைல் நம்பர் எல்லாம் மாத்தி… இதெல்லாம் தேவை இல்லையோன்னு எனக்கு தோணுது” அவள் கூற, “ஏன் அப்படி சொல்ற?” அவன் தன் நாக்கை சுழற்றியபடி கேட்டான்.
“எப்படியும் நான் கையெழுத்து போட ஒரு போலீஸ் ஸ்டேஷன் போகணும். நாம இருக்கிற இடம் தெரியத்தான் போகுது.” அவள் கூற, “அப்படியில்லை மது. தெரியறது வேற, நம்மளை தொடர்றது வேற. நாம, அடுத்தடுத்தாற் போல போகப் போற இடம் யாருக்கும் தெரிய கூடாது” அவன் முகத்தில் தீவிர சிந்தனையோடு கூறினான்.
அவன் நெற்றி பயங்கர சிந்தனையில் சுருங்க, அதை நீவி அவனுக்கு ஆறுதல் கூற அவள் மனம் படபடத்தது. அதை அவள் கண்கள் அப்பட்டமாக வெளிப்படுத்த, “நினைத்ததை செய்யலாம் மதும்மா” என்றான் உதட்டோர புன்னகையோடு அவள் விழிகளை வாசித்தபடி.
. “ம்… க்கும்…” அவள் கழுத்தை நொடிக்க, “என்ன சலிப்பு?” அவன் அவள் கைகளை பற்றி வேகமாக இழுத்தான். அவன் இழுத்த வேகத்தில் அவள் அவன் மீது முழுதாக சரிந்தாள்.
அவன் ஸ்பரிச கதகதப்பில் அவள் மேனி சிலிர்க்க, அவள் தேக வடிவில் அவன் லயிக்க அவன் கரங்கள் தன்னவளை உரிமையோடு தீண்டியது.
அவன் இடது கை அவளை இசைக்கருவியாக ஏந்திட, அவன் வலது கை அவளை மீட்ட ஆரம்பிக்க, அவள் விலகி செல்ல துடித்தாள். அவன் ஏந்திய விதம் இசைக்கருவியாக இருந்தாலும், அவன் பிடி எஃகாக இருக்க, அவள் முகம் வலியில் துடித்தது.
‘தீண்டலின் வலியா? தீண்டியதால் வலியா? தீண்டிய விதத்தால் வலியா?’ அவள் மனம் அவள் வலியின் வகையை பிரிந்து ஆராய முற்பட, அவள் ஆராய்ச்சிக்கு முந்திக்கொண்டு அவன் கண்களும் கைகளும் காதல் ஆராய்ச்சி செய்ய முற்பட, அவள் உடல் இறுகி விலகல் தன்மையை வெளிப்படுத்தியது.
‘பேச ஆயிரம் வார்த்தைகள் அவளுக்கு தோன்றினாலும், ‘எங்கு அவனை காயப்படுத்திவிடுவோமோ?’ என்று அஞ்சி அவள் இதழ்கள் வார்த்தைகளை நிதானமாக கோர்க்க முற்பட்டது.
“நான்… நான்…” அவள் பேச முற்பட, ‘பேசாதே…’ என்று அவள் மௌனமாக தலையசைத்தான்.
“இன்னும் இரெண்டே நாள். உன்னை குற்றமில்லாதவள்ன்னு நிரூபித்து நம்ம வீட்டுக்கு கூட்டிகிட்டு போறேன். அப்ப, இப்படி எல்லாம் விலகனுமுன்னு நீ நினைக்க கூட முடியாது.” அவன் குரலில் உறுதி இருக்க, அவன் வார்த்தையில் வெகுண்டு, “உங்க வீட்டுக்கு நான் வர மாட்டேன். உங்க கூட வாழ மாட்டேன்.” அவள் அவன் கைகளை பட்டென்று தட்டிவிட்டு துணியை எடுத்துக்கொண்டு வேகமாக குளியலைறைக்குள் சென்றான்.
அவள் விலகி சென்ற விதம், அவள் கூறிய வார்த்தை என அனைத்தும் அவனுள் சினத்தை கிளப்பியது. “இப்படி இவ வெறுக்குற அளவுக்கு நான் என்ன பண்ணிட்டேன்?” அவன் உதடுகள் முணுமுணுத்தது.
குளியறைக்குள் சென்றவள் மீண்டும் வெளியே வந்தவள், “செத்தாலும் சாவனேயொழிய உங்க கூட வாழ மாட்டேன்” அவள் கர்ஜனை செய்துவிட்டு செல்ல, அவன் சினம் மேலே மேலே எழும்பியது. தன் கண்களை இறுக மூடி தன்னை நிதானிக்க முயன்றான். அவர்களின் முதல் சண்டை அவன் நினைவுக்கு வந்து அவனை இம்சித்தது.
*** *** ***
“கெளதம், ஊரில் தான் கல்யாணம் சிம்பிளா வச்சிட்டோம். இங்க சென்னையில் ரிசெப்ஷன் வைக்கணும்” என்றார் அவன் தந்தை.
“ஆமா அப்பா. ஃபிரெண்ட்ஸ் வேற பார்ட்டி கேட்டுட்டே இருக்காங்க. அதையும் அப்படியே பிளான் பண்ணிடலாம் அப்பா” அவன் கூற, மதுமதி விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.
‘இது என்ன இவங்க இப்படி சகஜமாக சொல்றாங்க.’ அவள் முகத்தில் பதட்டம்.
“ஆமா கெளதம். எல்லாத்தையும் ஏற்பாடு செய்திறலாம்.” அவர்கள் முடிவு செய்து விட, அவர்கள் அறைக்குள் வந்ததும், “பார்ட்டின்னா ட்ரிங்க்ஸ் எல்லாம் இருக்குமுன்னு அன்னைக்கு சொன்னீங்களே?” அவள் அவன் முன் கேள்வியாக நின்றாள்.
“ஆமா” அவன் தலை அசைக்க, “உங்க வீட்டில் ஒன்னும் சொல்ல மாட்டாங்களா? உங்க அம்மா கூட ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?” அவள் அவனை பார்த்து பரிதாபமாக கேட்டாள்.
“இதில் சொல்ல என்ன இருக்கு?” அவன் அவளை புரியாமல் பார்த்தான்.
“குடிக்கறது தப்பு இல்லையா?” அவள் கண்களை சுருக்க, “உனக்கு எப்ப பாரு அதே சிந்தனை தானா?” அவன் கடுப்பாக கேட்டான்.
“எனக்கா?” அவள் அவனை கோபமாக பார்த்தாள்.
“எஸ்…” அவன் அழுத்தமாக கூற, “ஜஸ்ட் எப்பாவது பார்ட்டியில் ட்ரிங்க்ஸ் பண்ணுவோம். அதை பார்த்து குடி… குடின்னு சொன்னால் என்ன அர்த்தம்.” அவன் காட்டமாக கேட்டான்.
“நான் ஹாலில் பேசி முடிச்சிட்டேன். அதை அங்கையே மறந்துட்டேன். அதையே கொண்டு வந்து இங்க திரும்ப பேசினா என்ன அர்த்தம்?” அவன் கடுங்கோபத்தில் கேட்க, மதுமதி தன் பொறுமையை இழக்க ஆரம்பித்தாள்.
“நான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்? நீங்க இங்கிலீஷில் ட்ரிங்க்ஸ்ன்னு சொல்றதை நான் தமிழில் குடின்னு சொல்றேன். நீங்க, வெளியில் பகிரங்கமா பேசினதை நான் நாசூக்கா உள்ள பேசுறேன். நான் தப்பு? நீங்க சரியா?” அவள் அவன் முன் கேள்வியாக நின்றாள்.
அவள் நியாயத்தில் அவன் புருவம் வளைந்தது.
“இப்ப நீ என்ன சொல்ல வர்ற?” சக்கர நாற்காலியிலிருந்த அவன் எம்பி இடம்மாறி அவள் எதிரே மெத்தையில் சாய்ந்தபடி கேட்டான்.
“இப்படி கேட்டால், நான் என்ன வேணுமினாலும் சொல்லுவேன். நீங்க கேட்பீங்களா?” அவள் முறுக்கி கொள்ள, அவன் சிரித்து கொண்டான்.
அவளை தன் ஆள் காட்டி விரலால் அருகே அழைத்தான். அவள் அருகாமையில் அவன் கோபம் பறந்தது.
அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டினான். “எதுவும் கேட்காத. நான் நீ சொல்றதை கேட்க மாட்டேன்.” அவன் தீவிரமாக கூற, அவள் சுணங்கி கொண்டு விலக எத்தனித்தாள்.
அவள் கைகளை பிடித்து, அவளை தன்னருகே அமர வைத்தான். அவள் தலையைத் தட்டி, “இந்த சின்ன மூளைக்குள் தேவை இல்லாத சிந்தனை எல்லாம் வேண்டாம்.” அவன் கூற, அவள் அவனை மௌனமாக பார்த்தாள்.
“யாரும் இங்க மொடா குடிகாரங்க கிடையாது.” அவன் நிதானமாக கூற, அவள் முகம் அவன் கூற்றை ஏற்க மறுக்கும் முகபாவத்தை காட்டியது.
“எப்பையவாது தான் ட்ரிங்க்ஸ் பண்ணுவோம்.” அவன் கூற, அவள் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
‘நல்லா இருந்த மனுஷன் தான் மதுமதி. எப்பையாவது சேக்காளி கூட சேர்ந்து கொஞ்சம் சாப்பிடுதேன்… சாப்பிடுதேன்… சொன்னவரு, இப்படி மாறி போனாரு.’ தன் தாயின் அழுகுரல் இன்றும் அவள் செவிகளை அழுத்த அவள் உடல் நடுங்கியது.
அவள் உடலின் நடுக்கத்தை அவன் கைகள் உணர்ந்தது.
“மது…” அவன் அவளை ஆசையாக அழைத்தான். அவளுள் அவனுக்கான இனிமை அதன் தன்மையை மறந்து, அவள் மதியோடு பயணிக்க ஆரம்பித்தது.
அவள் அவனிடமிருந்து மெல்ல விலகி, அவனருகே படுத்து கொண்டாள்.
“மதுமதி… எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுற? இதெல்லாம் ஒண்ணுமில்லாத விஷயம்.” அவன் அவள் செவியருகே இருக்கும் முடியை ஒதுக்கி அவள் செவியோரம் கிசுகிசுத்தான்.
‘ஒன்னும் இல்லாத விஷயம்… ஒன்னும் இல்லாத விஷயணுமுன்னு சொல்லி சொல்லி உங்க அப்பா நம்மளை இப்படி அம்போன்னு விட்டுட்டாரே’ தன் தாயின் அழுகுரல், அவள் செவிகளில் இன்று போல் ஒலித்தது.
“எது ஒன்னும் இல்லாத விஷயம்?” அவள் மடக்கென்று எழுந்து அமர்ந்து கேட்டாள்.
அவள் விசுக்கென்று கேட்டதில், அவன் நிதானித்து கொண்டான்.
“குடும்பத்தோடு குடியை பத்தி பேசறது ஒன்னும் இல்லாத விஷயமா?” அவள் இப்பொழுது காட்டமாக கேட்க, “குடும்பத்தோட நாங்க குடியை பத்தி பேசினோமா?” அவனும் சீறினான்.
“ஆமாங்க… எப்பாவது குடிக்கிற வீட்டில் கூட, அப்பா குடிக்கறது பிள்ளைகளுக்கு தெரிய கூடாதுன்னு, அப்பா ஏதோ சாப்பிட்டிருக்காங்க அப்படின்னு தான் பிள்ளைக கிட்ட சொல்லுவாங்க. உங்க வீட்டில், பகிரங்கமா அப்பாவும், மகனும் பார்ட்டின்னு பேசுறீங்க. உங்க அம்மாவும் ஒன்னும் சொல்லாம இருக்காங்க. இது குடும்பமா இல்லை…” அவள் வாக்கியத்தை முடிக்காமல் பற்களை நறநறத்தாள்.
“ஏய், இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின” அவன் ஆள்காட்டி விரலை உயர்த்தி எச்சரிக்க அவள் மருண்டு விழித்தாள்.
அவள் கண்கள் கலங்கியது. ‘என் அம்மாவுக்கு ஏற்பட்ட நிலைமை தான் எனக்குமா?’ அவள் மனதில் வலி.
‘படிக்காதவங்க தான் குடிப்பாங்கன்னு நினைச்சேன்னே. படிச்சவங்களும், இப்படி தான் குடிப்பாங்களா?’ அவள் திரும்பி படுத்து கொண்டாள்.
‘ஐயோ, நான் ஏன் கோபப்பட்டேன்’ மனதிற்குள் நொந்து கொண்டான். ‘ஏதோ புரியாமல் பேசிட்டா.’ அவன் மனம் தன்னவளுக்காக வருந்தியது.
‘இதுவரை, நான் ட்ரிங்க் செய்துகூட இவ பார்க்கலை. பேசினத்துக்கே எதுக்கு இவ, இவ்வளவு ஓவர் ரியாக்ட் செய்யறா?’ அவன் அறிவு அவளை எதிர்பக்கம் நிறுத்தி கேள்விகேட்டது.
அவள் மனம் அவன் அருகாமையை விரும்பினாலும், அவள் அறிவு வேகமாக சிந்தித்தது. ‘பார்ட்டின்னா, ஃபிரெண்ட்ஸ் மட்டும் குடிப்பாங்களா? இல்லை இவங்களும் குடிப்பாங்களா? இவுங்களும் குடிச்சா? நானும் என் அம்மா மாதிரி குடிகார புருஷனோடு மல்லு கட்டணுமா?’ அவள் அறிவு வேகவேகமாக பல சந்தேகங்களை எழுப்ப ஆரம்பித்தது.
*** ****
அலைபேசியின் ஒலியில் அவன் நனவுலகத்திற்கு திரும்பினான்.
‘அழகாக ஆரம்பித்த அவர்கள் வாழ்க்கை, மதுவின் போதையில் சற்று தள்ளாட ஆரம்பித்த தருணம் அது தானோ?’ என்று அவன் மனம் நொந்து கொண்டது.
அப்பொழுது, மீண்டும் மீண்டும் அவன் அலைபேசி அழைக்க அவன் அதை எடுத்து பேசினான். அவன் முகத்தில் மென்னகை வந்தமர்ந்து. ‘இனி எல்லாம் எனக்கு சாதகமாக நடக்கும்.’ அவன் தன் கழுத்தை நீவிக்கொண்டான்.
அவள் குளித்து முடித்து வந்திருந்தாள். நீர் முத்துக்கள் வடிய செதுக்கிய சிலையாக இருந்தாள். தீண்ட அவன் உள்ளம் பரபரத்தாலும், அவளிடம் சமாதானம் பேச அவனுக்கு பெரிதாக விருப்பமில்லை. அவளும் முகத்தை திருப்ப, ‘மன வருத்தத்தில் இருக்கா. விட்டுப்பிடிக்கணுமுன்னு நினைச்சேன். இனி இவளை விட்டெல்லாம் பிடிக்க கூடாது. இறுக்கி பிடிச்சி வைக்கணும்’ சினம் கொண்டிருந்த அவனுள் அது வெகுவாய் ஏறியது.
அவள் கைகளை அழுந்த பற்றினான். “நாம இப்ப கோவிலுக்கு போகலை” அவன் கூற, “நானும் உங்க கூட கோவிலுக்கு வர விருப்பப்படலை” அவள் சிடுசிடுக்க, அவன் அவளை சுவரோடு சாய்த்தான். “இன்னைக்கு போகலை. ஆனால், நாளைக்கு, நாம்ம நெல்லையப்பர் கோவிலுக்கு போறோம். உங்க ஊர் கோவிலைப் பற்றி ஒவொண்ணா நீ எனக்கு சொல்ற” அவள் இதழை அழுத்தியபடி அவன் கூற, அவள் நெற்றி சுருங்கியது.
“அப்ப உன் மனசில் வேற எதுவும் இருக்க கூடாது. உன்னோட இன்னைக்கு சிந்தனையை இன்னையோட விட்டிரு. இந்த கெளதம் ஸ்ரீநிவாசன் உன் கணவன், அது மட்டுந்தான் உன் மனசில் இருக்கணும். நீ என் கூடத்தான் வாழப்போற.” அவன் கூற, அவள் உதட்டை சுளித்தாள்.
“நான் நெல்லையப்பர் கிட்ட வேண்டுதல் வைக்க போகணுமுன்னு நினைத்தேன். அவர் வேண்டுதல் வைக்க வரவேண்டாம், பிரச்சனையை முடிச்சிட்டு வந்து நன்றி சொல்லிட்டு போன்னு சொல்லிட்டார்” அவன் கர்வமாக கூற, “இந்த கேஸ் முடிஞ்சிட்டா, நம்ம கதை முடிஞ்சிரும். அப்புறம் எனக்கும் உங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இ…” அவள் இதழ்களை சட்டென்று தன் இதழ்களால் மூடினான்.
அவள் சுவாசம் அவன் சுவாசமாகி போக அவள் தடுமாற, அவன் அவளை தன் பிடியில் நிறுத்திக்கொண்டான். இதழ்கள் பேச மறக்க, ‘இவங்க என்னை விட்டு விலகவும் மாட்டங்க. என்னை விலகி போகவும் விட மாட்டாங்க போலையே’ அவள் இன்னும் இன்னும் நடுங்க, அவன் அணைப்பும் பிடியும் இன்னும் கூடியது.
அவள் அவன் தோளில் சாய்ந்தே ஆறுதல் தேட, தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, அவள் முகமருகே சென்றான். அவள் கன்னத்தோடு கன்னம் இழைந்து, “இந்த கேஸ் முடிஞ்சா கதை முடியுமுன்னு எந்த முட்டாப்பையன் சொன்னான்? இனி தான் டீ, நம்ம கதையே ஆரம்பமாகப் போகுது. செஞ்சவன் எவன்னு கண்டுபிடிக்கணும். குற்றவாளி மதுமதி இல்லைன்னு இந்த உலகத்துக்கு அட்வகேட் கெளதம் ஸ்ரீநிவாசன் இரண்டே நாளில் சொல்லுவான். சொன்ன பிறகு, மதுமதியின் கணவன் கெளதம் ஸ்ரீனிவாசனின் ஆட்டத்தை…” நிறுத்தி அவள் மூக்கை செல்லமாக ஆட்டினான்.
“காதல் ஆட்டத்தை பாரு மதும்மா. ஏதோ சோகமா இருக்கியேன்னு உன்னை பட்டுப்படாமலும் டீல் பண்ணிட்டு இருக்கேன். இனி இந்த சாஃப்ட் டீலிங்கெல்லாம் இருக்காது.” கைகளால் அவள் கன்னத்தை தட்ட எத்தனித்து, மறுப்பாக தலையசைத்து, அவன் இதழ்களால் தீண்டிச் சென்றான்.
‘இவங்க எப்படி இவ்வளவு உறுதியா பேசுறாங்க கேஸ் பத்தி? என்ன நடந்திருக்கும்? கேஸ் முடிஞ்சாலும் என் பிரச்சனை முடியாது போலையே? அப்பான்னு வேற சொன்னாங்களே. என்னவா இருக்கும்?’ பல கேள்விகள் எழ, அவனிடம் கேட்க விருப்பமில்லாமல் தனக்குள் சிந்தித்தபடி அவள் சோபாவில் அமர்ந்தாள்.
மது… மதி! வருவாள்…