Mathu…Mathi!-8

mathu...mathi!_Coverpic-c68ad89c
akila kannan

மது…மதி! – 8

வீட்டிற்கு வெளிய தீப்பொறி ஒன்று பற்ற ஆரம்பிக்க, சமையலறையில் அமர்ந்து அவள் தன் முகத்தை மூடிக்கொண்டு கதற, அவன் அவளை சிறிதும் சமாதானம் செய்யாமல் கோபமாக முறைத்துக்கொண்டு நின்றான். தண்ணீர் குடிக்காமலே அவன் விக்கல் நின்று போனது.

அவள் சமாதானம் ஆவாள் என்ற அவன் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடைய, “இப்ப என்ன நடந்திருச்சுன்னு இப்படி ஸீன் போடுற?” அவன் கோபமாக கேட்க, “என்ன நடக்கணும்? சொல்லுங்க என்ன நடக்கணும்?” அவள் அவன் முன் கோபமாக நிற்க, அவன் அந்த இடத்தை மடமடவென்று சுத்தம் செய்ய ஆரம்பித்தான். சூழ்நிலை கருதி அவன் வீட்டிற்குள் வேலை ஆட்களை அனுமதிக்கவில்லை.

பாட்டிலை எடுத்து குப்பை தொட்டியில் போட்டு, ஒரு துணியை எடுத்து அந்த இடத்தை சுமாராக துடைக்க, அவளுக்கு பிரட்டி கொண்டு வந்தது. “உவ…” அவள் இன்னும் விலகி நிற்க, “ரொம்ப பண்ணாத மதுமதி. இதில் அப்படி எல்லாம் ஒரு வாடையே வராது” அவன் தன் கைகளை கழுவிக்கொண்டு கூற,

“ஏன் வாடை வரக்கூடாதுன்னு காஸ்டலி சரக்கில் சென்ட் போட்டிருப்பாங்களா?” அவள் சிடுசிடுக்க, “சரக்குன்னு சொன்ன செவுட்டை பேத்திருவேன்” அவன் கூற, “ஓ! அப்ப பிராசதமா சாமி முன்னாடி வச்சி எல்லாருக்கும் கொடுப்போமா?” அவள் நக்கல் தொனிக்கும் குரலில் கேட்டாள்.

அவன் மௌனிக்க, “என்னங்க…” அவள் குரல் வருத்தத்தில் ஏக்கத்தில் அழைக்க, அந்த அழைப்பில் அவன் உருகி நின்றான். “நீங்க மாறவுமில்லை. நீங்க திருந்தவுமில்லை” அவள் குரலில் ஏமாற்றமிருக்க, அவள் எதிர்பார்ப்பின் அளவில் அவன் தோய்ந்து நின்றான்.

‘நீ என்னை விட்டு பிரிந்து சென்ற நாளிலிருந்து நான் குடிக்க நினைத்தாலும், என் மனம் விரும்பினாலும், ஏதோவொன்று என்னை தடுக்கிறதே. நான் குடிக்கலையே!’ அவன் மனம் மௌன ஓலமிட்டது.

‘ஆனால்…’ அவன் நிதானித்தான். “மாறுற அளவுக்கு நான் கெட்டவனுமில்லை. திருந்துற அளவுக்கு நான் அயோக்கியனுமில்லை. உன் புரிதல் தான் தப்பு” அவன் கூற, “ஆமாம், என் புரிதல் தான் தப்பு. என்னை வலையில் சிக்க வைத்தது யாருன்னு யோசித்த என் புரிதல் தப்பு” அவள் கூற, ‘இது என்ன சம்பந்தம் இல்லாம ஏதோ பேச ஆரம்பிக்குறா’ அவன் புருவம் நெரிந்தது.

“எல்லாம் பண்ணது உங்க வீட்டில் தான். உங்க அம்மா தான். குடிகார குடும்பம், எனக்கு குடிகாகார பட்டம் வாங்கி கொடுத்து சந்தோஷப்படுது” அவள் கூற, “ஏய்” அவன் கைகளை உயர்த்த, “அடிங்க… அடிங்க…” அவள் அவன் முன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றாள்.

“உண்மை சுடத்தான் செய்யும். கோபம் வரத்தான் செய்யும். அடிங்க” அவள் அவன் கைகளை பிடித்து கூறினாள். அவன் கோபம் கட்டுக்கடங்காமல் போக, “உங்க அம்மா செய்த தப்பை மறைத்து என்னை காப்பாத்த வந்திருக்கீங்க” அவள் கூற, அவள் கூற்றில் அவன் கோபம் சற்று இறங்கியது.

“அப்படி எதுக்கு உன்னை காப்பாற்றணும் மதும்மா?” அவன் தாழ்வான குரலில் கேட்க, அவள் ஒரு நொடி தடுமாறினாள். சட்டென்று தன்னை மீட்டுக்கொண்டு, “உங்க அம்மாவுக்கு எந்த பிரச்சனையும் வந்திற கூடாது. அப்புறம் மனச்சாட்சி உறுத்திருக்கும்” அவள் கழுத்தை நொடிக்க, வெளிப்பக்கம் தெரிந்த வெளிச்சத்தில் சட்டென்று பதட்டமானான்.

“ஐயோ” தலையில் அடித்துக்கொண்டு, அவளை இழுத்து தன் அறைக்கு சென்றான். அவன் பால்கனி வழியாக இறங்க, “என்ன ஆச்சு?” இன்னும் பெரும் தீ பரவாத நிலையில் அதை அறியாமல் மதுமதி கேட்க, “இறங்கு” அவன் கர்ஜித்தான்.

“நான் இறங்க மாட்டேன். உங்க அம்மா பத்தி சொன்னதும் நீங்க பேச்சை மாத்தறீங்க” அவள் பிடிவாதமாக நிற்க, “நம்ம சண்டையை அப்புறம் போடுவோம். நீ இறங்கு மதும்மா” அவன் கெஞ்சினான். “நான் வரலை நீங்க போங்க” அவள் பிடிவாதமாக பால்கனியில் நின்றாள்.

“மதும்மா, ஆபத்து.” விஷயத்தை கூறி அவளை பதட்டம் அடைய வைக்க வேண்டா என்றெண்ணி அவன் சுருக்கமாக கூற, “ஆபத்து! சரியா சொன்னீங்க. உங்க கூட இருந்தா ஆபத்து. வந்தால் ஆபத்து. உங்க குடும்பத்தில் உள்ளவங்க முகத்தில் விழிச்சா ஆபத்து.” அவள் தன் கைகளை இடுப்பில் வைத்து சட்டம் பேசினாள்.

அவன் கடுப்பாகி அவள் கைகளை பிடித்து வேகமாக இழுக்க, வலி தாங்காமல் அவள் ஏணியில் இறங்க எத்தனிக்க, அவன் மடமடவென்று இறங்கி அவளுக்காக கீழே காத்திருக்க, அவள் நடு ஏணியில் நின்று கொண்டு, “என்ன ஆச்சுனு சொல்லுங்க? என்ன நடக்குது? உங்க அம்மா எதுவும் சொன்னாங்களா?” அவள் கேட்க, அவன் ஏணியை அசைக்க, அது தடுமாறியது.

“என்னங்க…” அவள் அலற, அவன் அவளை பிடிக்க முன் வர, அவள் கோபத்தில் விலகி செல்ல, அவன் அவள் தரையில் விழமால் காப்பற்ற முயல அவள் அவன் மீது முழுதாக சரிந்து விழுந்தாள்.

எத்தனை முறை கண்ட காதல் காட்சியாக இருந்தாலும், அவர்கள் தீண்டலுக்கும் காதலுக்கும் குறைவே இல்லாமல் அங்கு காதல் நாடகம் அக்னி பிரவேசத்திலும் அரங்கேறியது. அக்னி முன் திருமணம் மட்டும் தான் நடக்குமா என்ன? காதலும் அரங்கேறும் என்று அவர்கள் மேனியின் தீண்டல் கூற, அவன் தேக ஸ்பரிசத்தில் அவள் உடல் நடுங்கியது.

அவன் கைகள் அவளை இரும்பு பிடியாக பிடித்து கொண்டிருந்தது. ‘மதும்மாவுக்கு எந்த அடியும் படக்கூடாது’ அவன் கவனம் முழுதும் அவள் தேகத்தில் இருக்க, அவன் அருகாமையில் அவள் தேகம் குழைய, அவள் கண்கள் அவனை ஆழமாக பார்த்தது. அதில் மண்டிக்கிடந்த அக்கறையில், காதலில் அவள் உள்ளம் உருக, சற்று முன் அவள் முன் தோன்றிய கண்ணாடி பாட்டில்களின் பிம்பம் தோன்ற, அவள் வெறுப்போடு அவனை விட்டு வேகமாக விலகினாள்.

“யாரும் உன்னை ஆசைப்பட்டு தாங்கி பிடிக்கலை. மேல படுக்க வச்சி தாலாட்டலை” அவள் விலகிய வேகத்தில், அவன் முணுமுணுக்க, “ஐயோ, நானும் அதைத்தான் சொல்றேன். உங்களை பிடிக்கலை. உங்க கூட வர பிடிக்கலை. என்ன பிரச்சனாலும் பரவால்லை. நான் இங்கயே கிடந்தது சாகுறேன் அப்படின்னு…” அவள் கன்னத்தில் அவன் அறைந்திருந்தான்.

அழுத்தமாக எல்லாம் அவன் அறையவில்லை. கோபத்தில் பட்டென்று தட்டினான் என்று கூறலாம். அவள் அவனை கோபமாக முறைக்க, அவன் கண்கள் கலங்கியது.

 “இதுக்காடி நான் இப்படி கஷ்டப்படுறேன்?” அவன் உடைந்த குரலில் கேட்க, அவள் தடுமாறினாள். தடுமாறிய அவள், “நீங்க ஒன்னும் என்மேல் உள்ள பாசத்தில் எல்லாம் என்னை அடிக்கலை. உங்க அம்மாவை சொன்னேனில்லை. அந்த கோபத்தில் தான் அடிச்சிருக்கீங்க” அவன் கேள்வியில் வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு அவள் வீம்பாக தலை அசைக்க, அவன் “உஃப்” என்ற பெருமூச்சை வெளியிட்டு, எதுவும் பேசாமல் பின் பக்க வாசல் வழியாக வெளியே சென்றான்.

எதுவும் பேசாமல் அவள் அவனை பின் தொடர, அங்கு அவன் நியமித்த ஒருவன் அவர்கள் காரோடு நிற்க, அவன் சாவியை வாங்க கைநீட்டினான்.

“என்ன சார் இவ்வளவு நேரம் ஆகிருச்சு. நான் பயந்துட்டேன்” அவன் கூற, “எல்லாம் நம்ம வீட்டில் பாதுகாப்பா தானே இருக்கு” அவன் மெல்லிய குரலில் கேட்க, “எஸ் சார். நீங்க வெளிய வந்ததும். எல்லாத்தையும் ஆப் பண்ணிட்டோம்” அவன் கூற, “இனி நடக்க வேண்டிய பார்மாலிடிஸை பாருங்க” கார் சாவியோடு இன்னும் சிலவற்றை வாங்கி கொண்டு காரில் தன் மனைவியோடு கிளம்பினான் கெளதம் ஸ்ரீநிவாசன்.

அவன் சீட்டியடித்தபடியே வண்டியை ஓட்ட, ‘எதுவோ சரி இல்லையே’ என்று மதுமதி அவனை கூர்மையாக பார்த்தாள். ஆனால், கீழே விழுந்ததில் அவள் கணுக்கால் வலிப்பது போல் இருக்க, எதுவும் பேச மனமின்றி அவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

* * *

நேரம் நள்ளிரவை எட்டியிருந்தது.

தேவராஜின் அலைபேசி ஒலித்தது. தூக்கக் கலகத்தில் தன் அலைபேசியை அவன் உயிர்ப்பிக்க, “என்னய்யா நடக்குது? அந்த வக்கீல் கிட்ட வம்பு பண்ணாதீங்கன்னு சொன்னேன். இப்ப நியூஸை பாருயா” அவன் மேலதிகாரி திட்டிவிட்டு தன் பேச்சை முடித்துக்கொண்டார்.

“அட்வகேட் மனைவியின் மீது பொய் புகார் கொடுத்து, அதை உண்மையாக்க அவர்களை கொல்ல திட்டம். இதில் போலீசாருக்கும் சம்பந்தம் இருக்குமோ என்ற ஐயம்” தலைப்பு செய்தியாக ஓட, தேவராஜ் திடுக்கிட்டு போனான்.

“கெளதம் வீட்டுக்கு தீ வச்சது யாரு? நான் தான் எதுமே பண்ண கூடாது. ஏதாவது செய்தால் அது நமக்கு பிரச்சனையாகிருமுன்னு சொன்னனே” தேவராஜ் குழப்பத்தில் தனது வட்டத்தில் விசாரிக்க, அவர்கள் அனைவரும் தாங்கள் எதுவும் செய்யவில்லை என்று கூற, தேவராஜ் மடமடவென்று தண்ணீர் குடித்தான்.

தன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தான். அவன் மனம் பலவாறு கணக்கிட ஆரம்பித்தது.

‘இப்படி ஒரு திட்டம் இருப்பதை தெரிந்து கொண்டு, ஏன் இதை கௌதமே செய்திருக்க கூடாது?’ தேவராஜிற்கு பொறி தட்ட, அவன் கௌதமிற்கு அழைத்தான்.

அவர்கள் இருவரும் காரில் பயணிக்க, பிளுடூத்தில் அவன் அலைபேசியை உயிர்பித்தான் கெளதம் ஸ்ரீனிவாசன். விழித்திருந்தாலும், கண்களை திறக்காமல் அமர்ந்திருந்தாள் மதுமதி.

“கெளதம்…” தேவராஜ் கர்ஜிக்க, “நீ பற்ற வைக்க நினைத்த நெருப்பொன்று பற்றி எரிய உன்னை கேட்கும்… உன் பணியை கேட்கும்… உன் குடும்பத்தை கேட்கும்…” தன் பற்களை நறநறத்தான் கெளதம் ஸ்ரீனிவாசன்.

“நான் நெருப்பை பற்ற வைக்கலை” தேவராஜ் கௌதமிடமிருந்து வார்த்தைகளை பிடுங்க முயறச்சிக்க, “போலீஸ்காரன் அவ்வளவு முட்டாளா இருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும்” கெளதம் நக்கலாக கூற,

“அட்வகேட்டா நீ புத்திசாலி தனமா விளையாடிட்ட இல்லை?” தேவராஜ் கேட்க, “உன் யூகம் அது. ஆனால், உண்மை என்ன தெரியுமா? நான் என் உயிரையும் என் மனைவி உயிரையும் காப்பாத்திக்க தெருத்தெருவாக அலையறேன்” கெளதம் தன் அலைபேசி பேச்சை துண்டித்து சிம்மை கழட்டுமாறு தன் மனைவியை எச்சரித்து, தன் கையிலிருந்து வேறு மொபைலை எடுத்து கொடுத்து, தன் மனைவியை உயிர்ப்பிக்க செய்தான்.

“நாம இருந்த வீட்டில் தீப்பிடிச்சிதா?” மதுமதி கேட்க, “தீ பிடிக்க ஆரம்பிச்சது. அதுக்குள்ள நாம தப்பிச்சிட்டோம். தீயை உடனே நிறுத்தியாச்சு. என் நண்பன் ஒருவன் நைட் கார் கேட்டிருந்தான்னு காரை அவனுக்கு கொடுத்துட்டேன். அதனால் காருக்கு எந்த பாதிப்புமில்லை. நம்ம ஆளுங்க ஏணி செட்டப் அல்லாம் பழையபடி மாத்தி வச்சிருப்பாங்க. நோ பிராப்லெம் மதும்மா” அவன் கூற,

“நீங்க தான் தீயை வச்சீங்களா?” அவள் கேட்க, “வைக்கனுமுனு நினைச்சாங்க. நான் பண்ணிட்டேன்” அவன் கூற, “யார் நினச்சா?” மதுமதி கேட்க, “அது தான் தெரியலை” அவன் தன் ஹாரனை வேகமாக அழுத்தி தன் காரை வேகமாக செலுத்தினான்.

“அந்த போலீசை கூப்பிட்டு கேட்டா தெரியாதா?” அவள் கேட்க, “அது சிக்கலகிரும். நாம கேஸை திசை திருப்ப பாக்குறோமுன்னு பழி வந்திரும்” அவன் மறுப்பாக தலை அசைத்தான்.

“உங்க அம்மா இல்லைனா உங்க வீட்டில் யார் கிட்டயாவது கேட்டா தெரிய போகுது” அவள் அசட்டையாக தோள்களை குலுக்க, “எங்க வீட்டில் நான் இருக்கிற வீட்டில் தீ வைப்பாங்களா?” அவன் கோபமாக கேட்க, “சாரி…” அவள் குரல் இறங்கியது.

அவன் மௌனிக்க, “நான் நீங்க என் கூட இருக்கிறதை மறந்துட்டேன் பாருங்க. நான் தனியா இருந்தால் வச்சிருப்பாங்க” அவள் நிதானமாக கூற, “நீ பேசுற பேச்சுக்கு நானே வைப்பேன்” அவன் ஸ்டியரிங்கை குத்தினான்.

“உங்க மொபைலை மட்டும் நியாபகமா எடுத்திட்டு வந்துடீங்க. என் மொபைல் அங்க இருக்கு” அவள் அது தான் முக்கியம் என்பது போல் கூற, “எல்லாம் நல்லது தான். அங்கையே இருக்கட்டும்” அவன் கூற, அவள் மௌனமாக அமர்ந்திருந்தாள்.

அந்த கார் பயணம் நெடுதூரம் சென்றது. கொஞ்சம் விடியலை அடைய, அங்கிருந்த தேனீர் கடையில் வண்டியை நிறுத்தினான் கெளதம். செய்தி தாளை பார்த்ததும், அவன் முகத்தில் மலர்ச்சி. செய்தித்தாள், வாட்ஸாப்ப், பேஸ்புக் என எங்கும் ஒரே செய்தி.

“மதுமதி மதுவை அருந்தினாளா என்பது ஐயம்!”

“பெண் கொலை செய்யப்பட்டிருந்தால் ஏன் இன்னும் சடலம் கிடைக்கவில்லை?”

“அட்வகேட் மனைவி என்பதால், பழிவாங்கும் விதமாக இந்த பொய் குற்றச்சாட்டா? மதுமதியை கொல்ல நினைப்பது ஏன்?”

“அட்வகேட் மனைவியின் மீது பொய் புகார் கொடுத்து, அதை உண்மையாக்க அவர்களை கொல்ல திட்டம். இதில் போலீசாருக்கும் சம்பந்தம் இருக்குமோ என்ற ஐயம்”

இப்படி பலவிதமான செய்திகள். செய்தித்தாளை அவள் முன்னே வீசிவிட்டு மீண்டும் காரை செலுத்தினான் கெளதம் ஸ்ரீநிவாசன்.

“இவ்வளவு தான் உலகம் இல்லையா? பொய்யை நம்பும்” அவள் சலிப்பாக கூற,  “மதுமதி, உண்மை ஜெயிக்க சில விஷயங்கள் முன்னபின்ன நடக்கும்” அவன் கூற, அவள் எதுவும் பேசவில்லை. அவள் முகம் ஏதோ அசூயையை காட்டியது.

“எதுவும் பிரச்சனையா? ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்று அவன் கரிசனத்தோடு வினவினான். “நீங்க தான் என் பிரச்சனை என்னை விட்டுட்டு போய்டுவீங்களா?” அவள் சிடுசிடுக்க, “போகமாட்டேன்… வலியோடு பிரச்சனையோடே வாழு” அவன் அழுத்தமாக கூறினான்.

“இப்ப எங்க போறோம்?” அவள் கேட்க, “திருநெல்வேலி…” அவன் சொல்லில், “வேண்டாம்… வேண்டாம்… வேண்டாம்…” அவள் காதுகளை மூடிக்கொண்டு அலறினாள்.

அவள் நெற்றியில் வியர்வை துளிகள். அவள் பதட்டத்தில் அவன் முகத்தில் புன்முறுவல் பூத்தது.

 மது… மதி! வருவாள்…