Mazhai – 2

Mazhai – 2
அத்தியாயம் – 2
அவளின் வருகைக்காக காத்திருந்த முகிலனுக்கு எரிச்சல் அதிகரித்தது. தன் சொந்த வீட்டில் இருந்த போதும் மூச்சு முட்டுவது போல தோன்றவே தந்தைக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்துகொண்டு பால்கனிக்கு சென்றான்.
அவன் சிகரெட்டை பற்ற வைத்த சில நொடிகளில் அறையின் கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் சிற்பிகா.
அவளின் கொலுசின் ஓசைகேட்டு கோபம் அதிகரிக்க, “முதலில் அந்த நாடகக்காரிகள் அணியும் சலங்கையைக் கழட்டு வீசு.. யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது மாதிரி கொலுசு சத்தம் இங்குவரை கேட்குது” என்று எரிந்து விழுந்தான்.
திடீரென்று அறைக்குள் நுழைந்ததும் அவன் திட்டுவதைக் கண்டு புரியாமல் விழித்த பெண்ணவள் நிதானமாக நடந்து சென்று பால் சொம்பை டேபிளில் வைத்துவிட்டு சத்தமின்றி கொலுசை அவிழ்த்து வைத்துவிட்டு, “இதை பொறுமையா சொல்லியிருக்கலாம்” என்று முணுமுணுப்பது அவன் காதில் தெளிவாக விழுந்தது.
அதைகேட்டு வேகமாக அவளின் அருகே வந்தவன், “நான் இப்படித்தான் கத்துவேன். உன்னால கேட்க முடியல என்றால் என் ரூமிற்கு வராதே” கடுப்புடன் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அவனின் முதுகை வெறித்தபடி சில நிமிடம் கடத்தியவள், “மாடிக்கும் போகும் வழி கொஞ்சம் சொல்றீங்களா?” மெல்லிய குரலில் கேட்டாள்.
சட்டென்று அவளைத் திரும்பிப் பார்த்தவன், “இங்கிருந்து வெளியே போய் லெப்ட் சைடு பக்கம் பாரு மாடிப்படிகள் இருக்கும்” என்று சொல்ல சரியென்று தலையசைத்துவிட்டு அனைத்து நகையையும் கழட்டி பத்திரமாக வைத்துவிட்டு சென்றுவிட்டாள்.
அவள் சென்றபிறகு அறையில் இருந்த அலங்காரத்தைக் கண்ட முகிலனுக்கு, “இப்போ இதெல்லாம் இல்லன்னு யாரு அழுத?” என்று தனக்குதானே பேசியபடி படுக்கையில் இருந்த பூ அலங்காரத்தை கலைத்துவிட்டு நடுகட்டிலில் பொத்து என்று விழுந்தவன் சில நொடிகளில் உறங்கி போனான்.
மாடிக்கு சென்ற சிற்பிகாவோ இருண்ட வானத்தை வெறித்தவள், கைப்பிடி சுவற்றைப் பிடித்தபடி மூச்சுக்காற்றை இழுத்து சுவாசிக்க மண்வாசனை மனதிற்கு நிறைவைத் தந்தது.
சில நொடிகளில் மழை சடசடவென்று பொழிய துவங்கியது.இரண்டு கரங்களையும் நீட்டி வானத்தை நோக்கியவளின் பளிங்கு முகத்தில் மழைத்துளி பட்டுத் தெறித்தது.
அதுவரை மனத்தைக் கவ்விய பயம், எதிர்காலம் பற்றி சிந்தனை அனைத்தும் மறந்து குழந்தையாய் குதுகலித்தது அவளின் மனம்.
“இந்த உலகத்தில் ரொம்ப சந்தோசமான பொண்ணு நான் மட்டும்தான்..” என்று கத்தியபடி சொட்ட சொட்ட மழையில் நனைந்தவள் அங்கே வெறும் தரையில் படுத்து உறங்கிவிட்டாள். விடியற்காலை ஐந்து மணியளவில் வழக்கம்போல கண்விழித்த பெண்ணிற்கு ஒரு நிமிடம் எங்கே இருக்கிறோம் என்று புரியவில்லை.
அதன்பிறகு தனக்கு திருமணம் நடந்ததும், இரவு மழையில் நனைந்ததும் நினைவு வரவே, “இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்” என்று தனக்குதானே தைரியமூட்டி வேகமாக படியிறங்கி கீழே சென்றாள்.
இரவு அவளை கரித்து கொட்டியபிறகு தூங்கியவன் விழிதிறந்து கடிகாரத்தைப் பார்க்கும்போது மணி ஐந்து என்றது.
மெல்ல அறையினுள் பார்வையைச் சுழற்ற அவள் அங்கே இருப்பதற்கான சுவடே இல்லாமல் இருப்பதைக் கண்டு, “என்னோட உயிரை வாங்கவே வந்து பிறந்திருக்கிற போல.. இன்னும் கொஞ்சநேரத்தில் அம்மா வந்தால் என்னைத்தான் திட்டுவாங்க” என்று புலம்பியவன் அவளைத் தேடி செல்ல நினைத்து எழும்போது அறைக்குள் நுழைந்தாள்.
அவளை கண்டவுடன் இரவு தான் சொன்னதை முற்றிலுமாக மறந்து, “ஏய் இரவெல்லாம் நீ அறையில் இல்லாதது தெரிந்தால் எங்க வீட்டில் என்னை என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சியா? நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு இருக்கிற?” என்று கத்த தொடங்கினான்.
அதே பயத்துடன் எழுந்து வந்தவளுக்கு அவன் திட்டியதும் கோபம் வந்தது. ஆனால் பிறந்த வீட்டில் தன் உறவுகளிடம் காட்டும் கோபத்தைப் போல புகுந்த வீட்டில் பெண்கள் வாய் திறக்க இயலாது. அப்படி கத்தினால் வளர்ப்பு பற்றிய பேச்சு எழும்.
அத்தோடு பூமியில் இல்லாத தாய்க்கு வசவை வாங்கி தரும் எண்ணமின்றி, “நேற்று இரவு நீங்கதானே வெளியே போக சொன்னீங்க?” என்று சொன்னது தான் தாமதம் மீண்டும் கோபம் உச்சிக்கு ஏறியது.
சட்டென்று நிமிர்ந்து அவளின் விழிகளை நோக்கிய முகிலன், “ஆமா நான்தான் சொன்னேன். என்னவோ உன்னைக் கண்ட எரிச்சல், கோபம் தான் வருது. கல்யாணம் செய்த ஒரே நாளில் என் இயல்பையே தொலைத்துவிட்ட மாதிரி தோணுது. அதுக்காக என்னை மாற்றிக்க என்னால் முடியாது என்ன நான் சொல்றது புரியுதா?” என்றவுடன் மறுபேச்சு இன்றி குளியலறைக்குள் புகுந்து கதவை அடைத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் குளித்துவிட்டு வந்த சிற்பிகாவை திட்டுவதற்கு வாய் திறக்கும் முன்பே, “எனக்கு நகை போடவும் பிடிக்காது. அதே மாதிரி அதை பத்திரமாக வைத்து கொள்ளும் பொறுப்பும் கிடையாது. சோ உங்க அப்பாம்மா எனக்கு போட்ட நகைகளை நீங்களே வச்சுகோங்க” என்று அவனிடம் கொடுத்தவளை மெளனமாக ஏறிட்டான் முகிலன்.
அவளோ இரவு கலட்டி வைத்த கொலுசை எடுத்து வருடிவிட்டு கண்ணாடி முன் நின்று தலைவாரிய சிற்பிகாவை முறைத்தவன், “இதெல்லாம் போடலன்னா நீ நல்லவன்னு நினைச்சிருவேனா?” என்று அவன் அதற்கும் அவளை வார்த்தைகளால் வதைத்தான்.
கண்ணாடி வழியாக கணவனைப் பார்த்தவள், “உங்களுக்கு இந்த திருமணம் பிடிக்கல. அதே மாதிரி நான் நல்லவள் இல்லன்னு உங்களுக்கே நல்லா தெரியுது இல்ல. அப்புறம் எதுக்கு வீணா விதண்டாவாதம் பண்ணிட்டு இருக்கீங்க.. ம்ஹும் நகையை எடுத்து வைச்சிட்டு வேலையைப் பாருங்க” என்றவள் அவன் கண்முன்னாடியே நின்று காலில் கொலுசை போட்டாள்.
தான் சொல்வதை காதில் வாங்காமல் அவள் செய்யும் செயலில் கடுப்பானவன், அவளிடமிருந்து கொலுசை பறித்து வீசி ஏறிய கதவு திறந்திருந்ததால் ஹாலில் ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த சதாசிவத்தின் மீது விழுந்தது.
காலை உணவு என்ன செய்யலாம் என்று பேச வந்த மகேஸ்வரி திடுக்கிட்டு மேலே பார்க்க, “இவளைக் கல்யாணம் பண்ணி வைத்து உசிரை வாங்கறாங்க” அனைவருக்கும் கேட்கும்படி சத்தமிட்டவன் குளியலறைக்குள் சென்று மறைந்தான்.
அந்த வீட்டிற்குள் வந்த ஒரே நாளில் முகிலனின் வெறுப்பைக் கண்ட சிற்பிகா விழிமூடி மூச்சை இழுத்து சுவாசித்துவிட்டு மாடியிலிருந்து வேகமாக கீழிறங்கி வர, “சிற்பிகா” என்ற சதாசிவத்தின் குரல்கேட்டு தயங்கி நின்றாள்.
மெல்ல அவரின் அருகே வந்தவள், “ம்ஹும் சொல்லுங்க மாமா..” என்றதும் தன் மடியில் இருந்த கொலுசை எடுத்து அவளிடம் கொடுத்தவர், “நீ போட்டுக்கோ” என்றார்.
“வீட்டுக்கு வந்த முதல்நாளே மறுத்து பேச இஷ்டம் இல்ல மாமா.. எனக்கு ஆடம்பாரமான வாழ்க்கை வாழ பிடிக்காது. அதுக்காக இல்லாதவள் மாதிரி உடையணிந்து உங்க.. ஸாரி நம்ம குடும்ப மானத்தை வாங்க மாட்டேன். நாட்டியக்காரி மாதிரி இருக்கும் சலங்கை எனக்கு வேண்டாம் மாமா” புன்புருவலோடு சொல்லிவிட்டு விலகி சென்றாள்.
மகேஸ்வரிக்கு ஏனோ காரணமே இல்லாமல் மகனின் மீது கோபம் வரவே, “சும்மா அந்த பெண்ணைத் திட்ட வேண்டான்னு சொல்லி வைங்க.. பாவம் தாயை இழந்த பிள்ளையை நம்மளும் வார்த்தைகளால் வதைத்தால் நல்லது இல்ல” என்று கூற அவரும் சிந்தனையோடு சரியென்று தலையசைத்தார்.
அங்கே நடப்பதை தங்களின் அறையில் இருந்து பார்த்த மிருதுளாவின் மனம் கனத்துப் போனது. தன் மனைவியின் மனம் புரிந்து அவளின் விரல்பிடித்து அழுத்திய கணவனை கண்ணீரோடு ஏறிட்டாள்.
“ஹே இப்போ எதுக்கு தேவையில்லாமல் கண்ணைக் கசக்குற?” நிரஞ்சன் மனைவியை அதட்டினான்.
“அன்னைக்கு நான் அந்த பஸ்ஸில் போகாமல் இருந்திருந்தா சிற்பிகா எங்காவது நிம்மதியாக இருந்திருப்பா இல்லங்க. பாவம் தாயை இழந்த இழப்பைக் கூட முகத்தில் காட்டாமல் சிரித்தபடி இருந்த பெண்ணோட வாழ்க்கையை நானே கேடுத்துவிட்டேனோ என்று தோணுது..” படபடவென்று மனதில் உள்ளவற்றைக் கொட்டி தீர்த்தாள் மிருதுளா.
தன் மனைவியின் மனம் வருத்தம் அவனுக்கும் புரியாமல் இல்லை. அதற்காக அவளுக்கு ஆதரவாக பேசவும் அவனால் முடியவில்லை. முகிலனின் நிலையிலிருந்து பார்க்கும்போது இந்த திருமணம் அவனின் சுதந்திரத்திற்கு தடை விதித்தது போலவே தோன்றியது.
திருமணம் என்று சொன்ன ஒரே வாரத்தில் அனைத்தும் நிகழ்ந்தது அவனுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்று உணர்ந்தவன் மெளனமாக இருக்க வேகமாக கண்களைத் துடைத்துவிட்டு எழுந்தவளை கேள்வியாக நோக்கினான் நிரஞ்சன்.
“நான் முகிலனிடம் கொஞ்சம் பேசிட்டு வரேன்” என்று வேகமாக வெளியே வந்த மகளைப் பார்த்தார் சதாசிவம்.
தந்தையைக் கண்டவுடன் தயங்கி நின்றவளைக் கவனிக்காமல் பேப்பரின் மீது பார்வையைத் திருப்பியவுடன் விறுவிறுவென்று படிக்கட்டு ஏறி மாடிக்கு சென்றாள் மிருதுளா.
தனக்கு பிடித்த பாடல் ஒன்றை முணுமுணுத்த தம்பியை முறைத்தவள், “டேய் எதுக்காக அவளை இப்படி திட்டி தீர்க்கிற?” என்று கேட்டவளை நிதானமாக ஏறிட்டான் முகிலன்.
தமக்கையின் சிவந்த முகம் கண்டே அவளின் கோபத்தின் அளவை புரிந்துகொண்டு, “வயசில் மூத்தவள் என்ற ஒரே காரணத்தால் உன்னைத் திட்ட என்னால முடியல அக்கா. இருபத்தி நாலு வயதில் சிகரெட் மற்றும் தண்ணியடிப்பது கொலை குற்றம்னு நினைச்சியா? வாழ்க்கையில் எவ்வளவு சந்தோசமாக இருந்தவனோட நிம்மதியை ஒரே நாளில் குழிதோண்டி புதச்சிட்டியே..” என்று அவளை கேள்வி கேட்க தொடங்கினான்.
“உன் மாமாவிற்கு இல்லாத கேட்ட பழக்கத்தை எல்லாம் கத்து வச்சிருக்கிற.. என் தம்பி நல்லா இருக்கணும்னு தானே உனக்கு ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்தேன். வீட்டுக்கு வந்த ஒரே நாளில் அவளை இந்தளவுக்கு நோகடிக்கிற.. உன் மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கிற?” நானொன்றும் உனக்கு சளைத்தவள் அல்ல என்று வார்த்தைகளால் நிரூபித்தாள்.
சட்டென்று கோபத்துடன் திரும்பியவன், “அவளை வெறுக்காமல் பாசமழை பொழிய சொல்றீயா? இன்னும் எண்ணி ஒரே வருஷத்தில் டைவர்ஸ் வாங்கிட்டு நிம்மதியாக இருக்கிறேனா இல்லையான்னு மட்டும் பாரு..” அவளின் தலையில் இடியை இறக்கினான்.
அதைக்கேட்டு அதிர்ச்சியில் சிலையென உறைந்து நின்றவளை கண்டு கொள்ளாமல் கிளம்பியவனிடம், “நம்ம செய்யறது தான் சரின்னு நினைக்காதே முகில். நீ வெறுப்பது ஒரு பொம்மையோ பொருளோ இல்ல.. ஊனும் உயிரும் இல்ல ஒரு மனுஷி.. நீ மட்டும் டைவர்ஸ் செய்ய முடிவெடுத்தால் அதை நடக்கவிடாமல் செய்ய என்னால முடியும்..” என்ற தமக்கையை ஏறயிரங்க பார்த்தான்.
பிறகு, “நானா டைவர்ஸ் கேட்டாலும் கிடைக்கும். என் டார்ச்சர் தாங்க முடியாமல் அவளே கையெழுத்துப் போட்டு தந்தாலும் விவாகரத்து வாங்க என்னால முடியும்.. உன்னால் என்ன முடியுதோ அதை தாரளமாக செய் அக்கா” என்றவன் அறையைவிட்டு வெளியேறினான்.
இருவரும் பேசுவது அங்கிருந்த மற்ற நால்வரின் காதிலும் தெளிவாக விழவே செய்தது. தன் கடமையைச் செய்கிறேன் என்று காபியைக் கலந்த சிற்பிகா இறங்கி வருபவனிடம், “இதை கொஞ்சம் குடிச்சிட்டு கிளம்புங்க” என்று மட்டும்தான் கூறினாள்.
அடுத்த நிமிடமே அவளின் கையிலிருந்த காபியைத் தட்டி விட்டவன், “நான் வெளியே கிளம்பும்போது எதிரே வராதே.. உன் மாமனார், மாமியாருக்கு சமைத்து கொட்டு. அப்போதான் ரொம்ப நல்லவள்னு பெயர் வாங்க முடியும்..” என்று தன் மொத்த கோபத்தையும் அவளிடம் காட்டிவிட்டு வீட்டைவிட்டு கிளம்ப நினைத்து இரண்டடி எடுத்து வைத்தான்.
“முகில் என் மருமகளைக் கூட்டிட்டு கோவிலுக்கு போயிட்டு வா.. மகேஸ்வரி எனக்கு டிப்பன் எடுத்து வைமா.. நான் குளிச்சிட்டு வரேன். மிருதுளா நீ போய் மாப்பிள்ளையைக் கூட்டிட்டு வா சாப்பிடலாம்” பேப்பரை புரட்டியபடி கூறியவர் எழுந்து அறைக்குள் சென்றான்.
கீழே கொட்டிய காபியைத் துடைத்துவிட்டு நகர்ந்த மருமகளிடம், “நீ போய் ட்ரஸ் மாத்திட்டு வா” என்று அவளை மாடிக்கு அனுப்பியவர் முகிலனின் முதுகை வெறித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
அப்போது ஹாலிற்கு வந்த கணவனிடம், “நீங்க உங்க பங்குக்கு எதுவும் சொல்லாதீங்க.. அதுக்கும் அவன் தேவையில்லாமல் கத்துவான்..” என்றவள் அவனை இழுத்துச் சென்றாள்.
அனைவரின் கோபத்தையும் கண்ட முகிலனுக்கு ஏனோ வீட்டிற்கு வரவே வெறுப்பாக இருந்தது. தான் செய்வது தவறென்று தெரியாமல் செய்ய அவன் எதுவும் தெரியாத குழந்தை இல்லையே?! படிக்காத பிள்ளையை படிக்க வைக்க நல்லா ஆசிரியரிடம் கண்டிக்க சொல்வது போல தன்னை திருத்துவதற்கு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வைத்தது கோபத்தை வரவழைத்தது.
‘அவர் ஒன்றும் உன்னோட கைகால்களை கட்டி வைத்து கட்டுடா தாலியைன்னு சொல்லலையே’ மனம் அவனை கேள்வி கேட்டது.
‘இத்தனை வருடமாக எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் எங்களுக்காக உழைத்த மனிதனுக்கு செய்யும் கைமாறு தான் இந்த கல்யாணம்’ அவன் தனக்கு தெரிந்த நியாயத்தை சொன்னான்.
‘தந்தைக்காக திருமணம், தாய்க்காக திருமணம் இதெல்லாம் கதைக்கு ஒத்துவரும். வாழ்க்கைக்கு சரிவருமான்னு யோசிச்சியா?’ அவனின் மனம் கேள்வியால் குடைந்தெடுத்தது.
தன் மனதிற்கு பதில் கொடுக்கும் முன்னரே, “நம்ம கிளம்பலாமா?” என்று கிளம்பி வந்தவளிடம், “ஒரு புடவை கட்டி தயாராக இவ்வளவு நேரமா?” அதற்கும் எரிந்து விழுந்தான் முகிலன்.
“ம்ஹும் புடவை கட்டுவது ஈஸின்னு நினைக்கிறீங்களா? ஒருநாள் கட்டி.. ஐ மீன் யாருக்காவது சேலை கட்டிவிட்டு பாருங்க தெரியும்” தான் வந்ததை பாதியில் நிறுத்திவிட்டு அவள் மாறியதைக் கண்டு அவன் காதில் புகை வராத குறைதான்,
அனைவரிடமும் சொல்லி விடைபெற்று வாசலை அடைந்தவளின் உதடுகளில் புன்முறுவல் பூத்தது. ஏனோ அவன் திட்டும்போது தாயின் அருகே இருப்பது போன்றொரு எண்ணம் எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை. அவளை முறைத்தபடியே வந்து பைக்கை எடுத்தவனின் பின்னோடு அமர்ந்தாள் சிற்பிகா.
இருவரும் வேண்டாவெறுப்பாக கோவிலுக்குள் நுழைய அங்கிருந்த தெய்வீக சக்தி மனதிற்கு அமைதியைத் தரவே சாமியைக் கும்பிட்டுவிட்டு வெளியே வரும்போது, “சிற்பிகா நீ ஏண்டி மூன்று மாதமா காலேஜ் வரல” என்ற கேள்வியோடு அவளை எதிர்கொண்டாள் புவனா..