MIRUTHNAIN KAVITHAI IVAL 16

cover page-951d1646

மிருதனின் கவிதை இவள் 16

மனதை மயக்கும்  இன்ஸ்ட்ருமென்ட்டல்  இசையில் நனைந்தபடி ரிதுராஜ் மேகாவுடன் கதைத்து கொண்டிருக்க, தன் மார்புக்கு குறுக்கே கை கட்டியபடி அவர்களை பார்த்து கொண்டிருந்த தீரனின் அருகே வந்த அஷோக் ,

” இவ்வளவு நேரம் எங்க போயிருந்த ?” சிறு  கோபத்துடன் கேட்டான் .

” ஜஸ்ட் சும்மா ஒரு வாக்,  நீ ஏன் டென்க்ஷனா  இருக்க ?” அஷோக்கை பார்த்து இயல்பாக  வினவினான் அக்னி .

” நாம ஏன் இவ்வளவு பொறுமையா இருக்கோம் அக்னி ?வா மேகா அப்பாகிட்டா பேசலாம் ” என்றான் அஷோக்.

” அவர்கிட்ட என்ன பேசணும்  ? “அஷோக்கின் விழிகளை பார்த்துக்கொண்டே கேட்டான் தீரன் .

“மேகாவ  உனக்கு  கல்யாணம் பண்ணி குடுக்குறதுக்கு  கேட்போம் “

” உங்க பொண்ணை குடுங்கன்னு கெஞ்ச சொல்றியா , ஹாங்” புருவம் உயர்த்தினான் தீரன் .

” அப்படி இல்லை , அவர் கிட்ட கேப்போம் ஒத்துக்கலைன்னா,   மேகாவை கூட்டிட்டு கிளம்பலாம் ” எங்கே நண்பனின் ஆசை நிறைவேறாது  போய்விடுமோ என்ற துடிப்பு அஷோக்கின் தீவிரமான பேச்சிலே அக்னிக்கு புரிய ,

” நான் பேசவேண்டியது மேகா கிட்ட , அவ அப்பா கிட்ட இல்லை , மேகா கிட்ட என்ன பேசணுமோ பேசிட்டேன் . முடிவு அவ கிட்ட இருக்கு ,அவளுடைய முடிவு எதுவா இருந்தாலும் ஏத்துக்கிறேன்” என்றான் தீரன் , குரலில் மறந்தும் கூட கோபம் இல்லை .

” அப்போ அவ்வளவு தானா ! உன் மேகாவ விட்டு கொடுக்க போறியா தீரா” என ஆவேசத்துடன் அஷோக் அக்னியிடம் கேட்டான் .

அஷோக்கின் சிவந்த முகத்தை பார்த்து  புன்னகைத்த தீரன்,

” ரிலாக்ஸ் மேன் ஏன் இவ்வளவு டென்ஷன்? ப்ங்க்ஷன் போய்ட்டு இருக்கு என்ஜாய் பண்ணு , நான் காஃபி குடிக்க போறேன் உனக்கு வேணுமா ” என்ற தீரன்  இயல்பாக  நடந்துகொள்ள , அஷோக் தான் மிகவும் குழப்பமுற்றான்  . ‘இது தீரன் அல்ல’ என அஷோக்கின் மனம் அடித்து கூற , தீரனின் எண்ணத்தை அஷோகாலே புறிந்து கொள்ள முடியவில்லை .

~~~~~~~~~~~~~~~

அலைபேசியில் இருந்து அழைப்பு வந்ததும் மண்டபத்தில் இருந்து உடனே கிளம்பிவிட்டார் கோபாலகிருஷ்ணன் . உள்ளே ஒருவித படபடப்பு இருந்தாலும் அவர் வெளிகாட்டிக் கொள்ளவில்லை .

~~~~~~~~~~~~~~~~`

காஃபியை சுவதைப்படி மேடையை வெறித்து கொண்டிருந்த அக்னியிடம் , ” சாரி அக்னி சார் ஒரு முக்கியமான கால் அதான் பேசிட்டு வந்தேன் , எல்லாம் ஓகே தானே ? உங்களுக்கு ஏதாவது வேணுமா ?” மீண்டும் பல்லைக்காட்டியபடி கனகராஜ்  இவர்களுடன் ஒட்டிக்கொள்ள , அக்னி தன் புருவத்தை தேய்த்த விதமே அவன் பொறுமையை இழுத்து பிடித்து வைத்திருப்பதை கூறியது .

” எல்லாம் ஓகே சார் “நண்பனின் கோபம் உணர்ந்து கனகராஜ்க்கு பதில் கூறிய அஷோக் ,”உங்க பையன எங்களுக்கு இண்ட்ரோடியுஸ் பண்ண மாட்டிங்களா?  ” என்றான்  நமட்டு சிரிப்புடன்  .

” அட ஆமா இதோ இப்பவே அழைச்சிட்டு வரேன் ” என்றவரை தடுத்த அக்னி ,

” நோ நோ இன்னைக்கு  ஷோவோட  ஸ்டார்,  நம்மளை தேடி வந்தா நல்லா இருக்காது ” என்றவன் மேடையை நோக்கி முன்னேறி நடக்க ,கனகராஜும் அஷோக்கும் அவனுடனே வந்தனர் .

மேடையில் ,” ஏன் அக்கா  பேய் அறைஞ்ச மாதிரியே இருக்க ” மேகாவின் தங்கை மயூரி தொடங்கி அவள் தாய் ,ரிதுராஜ் , இஷிதா  என அவளுக்கு தெரிந்த பலர் மேகாவிடம் கேட்டு  விட்டனர் , ஆனால் மேகாவோ  ‘ஒன்றுமில்லை ‘ என கடைசி வரை சாதித்தவள் , தன்னால்  யாருக்கும் எந்த  பிரச்சனையும் வந்துவிட கூடாது என்று  எண்ணி , அக்னி தன்னுடன் நடந்து கொண்டதை இஷிதாவிடம் இருந்து கூட மறைத்துவிட்டு  கடமைக்காக சிரித்து கொண்டிருந்தாள்.

அப்பொழுது  அக்னி ரிதுராஜை பார்த்தபடி மேடையை நோக்கி அழுத்தமான நடையுடன்  நடந்து வர , மேகாவின் இதயத்தில்  முரசு கொட்ட துவங்கியது. தீரன் மேடையை நெருங்கி ரிதுராஜின் அருகே வந்ததுமே  மேகாவின் கரம் தானாக இஷிதாவின்  கரத்தை பற்றுக்கோளாக  பற்றிக்கொள்ள ,இஷிதாவோ ,

” ரிலாக்ஸ் டி ” என தோழிக்கு சொல்லுவது போல தனக்கும் தைரியம்  சொல்லி கொண்டாள் .

கனகராஜோ “ரிதுராஜ்,  சார்  தான்  அக்னி தீரன் …” என்று தொடங்கி அக்னியை பற்றி அது இது என ஒரு முழுபக்கத்து புகழுரையை வாசித்து முடிக்க , மேகாவிற்கு தான் அவனது அருகாமை ஏதேதோ  செய்தது .

அந்த மொத்த மேடையையும்  அவனே ஆக்கிரமித்து  இருப்பது  போல தோன்ற ‘ அனைவரின் முன்பும் எதாவது செய்துவிடுவானோ  ‘ என்கின்ற பயத்தில் கரத்தை  பிசைந்தாள் . சரிந்து விழாத கற்றை முடியை அடிக்கடி காதோரம் ஒதுக்கியவளுக்கு, சிறிது நேரத்திற்கு முன்பு மூடிய அறையில் , அவன் நடந்து கொண்டது நினைவில் வர ,முடிந்தளவு  அவனை பார்ப்பதை தவிர்த்து தன் பார்வையை வேறெங்கோ வீசியபடி நின்றிருந்தாள் . அவளது உடல் மொழியே ‘நான் பயப்படுகிறேன்  !மிகவும் பதட்டமாக  இருக்கிறேன் !’ என்பதை அப்பட்டமாக கூறியது .

“நீங்க …” தீரனின் கணீர் குரலில் சட்டென்று நிமிர்ந்து தீரனை பார்த்தாள்  .அவன் பார்வை அவளை துளைத்தெடுத்து அவள் ஆன்மாவை  தொட்டது . உடனே அவன் பார்வையை தவிர்த்தாள் .

“ம்ம்ம்ம் நீங்க …உங்க பேரு “நெற்றியில்  புருவம் சுருங்க யோசிப்பது போல மேகாவை ஆழ்ந்து பார்த்தான் . மீண்டும் அவனது பொல்லாத பார்வை  அவளுக்குள் ஊடுருவ முயல , அவனது பார்வையை எதிர்கொள்ள  முடியாது மிகுந்த சங்கடத்தில் இருந்தாள்.   

“உங்க பேரு கூட ஏதோ , உங்க பேர் என்ன ?” கண்களை மூடி ஆழ்ந்து சிந்திப்பது  போன்ற பாவனையில் நிர்மலமான  முகத்துடன் கேட்டான் .

அவன் கேட்ட கேள்வியில் இஷிதாவே ஒருகணம் அதிர்ந்து விழிக்க , கனகராஜ்ற்கே ‘ அதற்குள் இவள் பெயரை மறந்துவிட்டானா ! என சிறு அதிர்ச்சி தான் ,பிறகு ‘கோடிக்கணக்கில் பிஸ்னஸ் செய்கிறான் ,தினமும்  பல பேரை சந்திக்கிறான் ,இவள் பெயரெல்லாம் இவன் மனதில் இருக்குமா  !’ என்று எண்ணியவர் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை .

” மேக வர்ஷினி ” உன் பெயரை அவனால்   எப்படி மறக்க முடியும் ? அவன் நடிக்கிறான் மேகா ! என அவள் மனம் சொல்லுவதை கூட கேட்காமல் மந்திரத்திற்கு  கட்டுப்பட்டது  போல அவன் கேட்டதும் தன் பெயரை சொன்னாள் மேகா .

” ஆங்… மேக வர்ஷினி ” அவளது  பதற்றம் ஜனித்த முகம் பார்த்து நமட்டு  சிரிப்புடன் அவளது பெயரை இழுத்து ராகம் போட்டவன்,

” வாழ்த்துக்கள் மேக வர்ஷினி “மீசைக்குள் மறைந்திருந்த வஞ்ச புன்னகையுடன் கூறியவன்  , மேகா முன்பு தன் கரங்களை நீட்டினான் .

உள்ளுக்குள் உதறல் எடுக்க கலவரத்துடன், ரிதுராஜை பார்த்தாள், முகம் முழுவது புன்னகையோடு நின்றிருந்தான் . படபடப்புடன் தன் ஒரு கரத்தால் இஷிதாவின் கரத்தை இறுக்கமாக பிடித்து கொண்டு,

” தேங்க் யு ” தட்டு தடுமாற கூறியவள் மறு கரத்தால் அவனது கரத்தை பற்றி குலுக்கினாள் . மேகாவின் முக மாற்றத்தை நன்கு உள்வாங்கிக்கொண்டான் தீரன். அவள் வதனம் பயத்தில் சிவந்திருந்தது  , தடுமாற்றத்தால் அதரங்கள் துடித்தது .

‘தடுமாறிகிறாள் ! இது தான் வேண்டும் , என்னையா ஏமாற்றுகிறாய் , நான் யார் என்று காட்டுகிறேன் !’ அவளுடைய படபடப்பை  ஆனந்தமாய் ரசித்தவன் ,

“என்ஜாய் யுவர் டே , ஸ்டே ஹேப்பி  மேகா ” என வாழ்த்தினான் . ‘ சந்தோஷமா இருந்திருவ , இருந்து தான் பாரேன் ‘ என்றது அவனது பார்வை . திகைப்புடன்  அவனை பார்த்தாள்! புன்னகையுடன் ரிதுராஜை கட்டி தழுவிவிட்டு ,

” டேக் கேர் ரிதுராஜ் ” இரு பொருள் பட கூறிய தீரன் , மேகாவின் வெளிறிய முகத்தை திருப்தியுடன் பார்த்து ரசித்து ,ரித்துராஜின் தோளை தட்டிவிட்டு கீழே இறங்கினான் . பீதியுடன் , பனிக்கட்டி சிற்பம் போல உறைந்த நிலையில் நின்றிருந்தாள் மேகா.

~~~~~~~~~~~~~~~~~

“அக்னி சார் நீங்க வருவது மட்டும் முன்னாடியே தெரிஞ்சிருந்தா , எல்லா ஏற்பாடும் இன்னும்  க்ராண்டா  செஞ்சிருப்பேன். உங்களுக்கு ஏற்ற மாதிரி ஏற்பாடு எதுவும் நான் பண்ணல அது தான் கொஞ்சம் சங்கடமாக இருக்கு , ஆனால் டெல்லில ரிசப்ஷன்  பயங்கர க்ராண்டா பிளான் பண்ணிருக்கேன் ஜமாய்ச்சிடலாம் அக்னி சார் “பெருமிதத்துடன் கூறிய கனகராஜ்  , எப்படியாவது அக்னியை  தன் கைக்குள்ளே போட்டு கொண்டு , தான் நினைத்ததை சாதித்துக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணத்தில்,  அக்னியின் கணக்கு புரியாமல் , தன் மனதில் ஒரு கணக்கை போட்டு கொண்டு ஆதாயத்திற்காக அவர்களுடன் அட்டை போல ஒட்டிக்கொண்டே திரிந்தார் ,

” பொண்ணு வீட்ல  நம்ம ஸ்டேட்டஸ்க்கு ரொம்பவே கம்மி தான் . அவங்க  இது பண்ணுனதே பெரிய விஷயம் , அங்க ஒன்னும் இல்லை சார் .என்ன செய்ய பையனுக்காக ஒத்துக்கிட்டேன் .” பெண் வீட்டை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காக ஏதேதோ பேசியவர் அக்னியின் பார்வை மாற்றத்தை கவனிக்க தவறி,  தன் போகிலே பேசிகொண்டிருந்தார், 

“இந்த பொண்ணு தான் வேணும்ன்னு அடம் பிடிச்சிட்டான் .லவ் பண்றானாம் லவ் . ஆனா அவ , அப்பா சம்மதிச்சாதான் கல்யாணம்ன்னு  கண்டிஷன் போட்டா ,நான் என் பையனுக்காக  என் ஸ்டேட்ஸ்க்கு  விட்டு இறங்கி வந்து பொண்ணு கேட்டேன் ,எல்லாம் தலையெழுத்து ” கையில் பழசாறு அடங்கிய கோப்பையுடன் அளவளாவிய  கனகராஜ் வெளிப்படையாக  தன் நெற்றியில் கைவைக்க , தீரனின் கை முஷ்டி இறுகியது .

” கடைசியில என் கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்குறவ என் மருமகளா வரணும்ன்னு என் விதில எழுதியிருக்கு , இந்த காலத்து பொண்ணுங்களுக்கு எப்படி செட்டில் ஆகணும்னு நல்லா தெரிஞ்சிருக்கு,  அதை இதை பண்ணி பணக்கார பசங்களை ஈஸியா கைக்குள்ள போட்டுக்கறாங்க , இந்த பொண்ணை ரொம்ப அப்பாவின்னு நினைச்சேன் , ஆனா விவரமா தான் இருந்திருக்கா ” என கனகராஜ் பழச்சாறை விழுங்கியபடி மேடையில் நிற்கு மேகாவை பார்த்து கொண்டே தன் மனதில் உள்ள மொத்த ஆதங்கத்தையும் கூற  , அக்னியின் முகம் விகாரமாய் மாறியது .

சட்டையை முழங்கை வரை ஏற்றி கனகராஜை வெளுத்து வாங்குவதற்காக தயாராய் நின்றவனின் தோரணையை கண்ட அஷோக்கோ , அமைதியாக இருக்கும் படி கண்ணசைக்க , தீரேனோ அதை கொஞ்சமும் கண்டுகொள்ள வில்லை .

” பேசணும்  வா” கனகராஜை ஒருமையில் விழித்த தீரன் அவனை தன் கண்கள் இடுங்க பார்த்தபடி முன்னே நடந்து செல்ல ,தீரனின் ‘ வா ‘ என்ற விழிப்பில் அதிர்ச்சியடைந்த கனகராஜ் ,

“என்ன பேசணும் ?ஏன் அவர் முகம் ஒரு மாதிரி இருக்கு ?” என  அஷோக்கிடம் கேட்க ,

” உங்களுக்கே தெரியும் ”  என்றவன் அவரை முன்னே போகும் படி செய்கை செய்தான் .

~~~~~~~~~~~~~~~~~

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து மண்டபம் திரும்பினார் கோபாலகிருஷ்ணன் . விழிகள் பயங்கரமாய் சிவந்திருந்தது .
“எங்க போயிருந்தீங்க கிருஷ்ணா ? கால் பண்ணினா கட் பண்றீங்க , சம்பந்தி உங்களை தேடிட்டே இருந்தாரு , ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” தவிப்புடன் கேட்டார் ராதிகா .

“ஒன்னும் இல்லை, ஒரு சின்ன வேலை நான் தான் கூட்டிட்டு போயிருந்தேன் ” என்றார் கோபால கிருஷ்ணனின் நண்பர் நிலவன் .

” வாங்க அண்ணா , லேட்டா வந்திருக்கீங்க வைஃப்   புள்ளைங்களை எல்லாம் கூட்டிட்டு வரலையா ?”

” இல்லை மா அவ புள்ளைங்களை கூட்டிட்டு அம்மா வீட்டுக்கு போயிருக்கா “

“சரி வாங்க அண்ணா ” என்ற ராதிகா ” கிருஷ்ணா சம்பந்தி ஏதோ பேசணும்ன்னு சொன்னாரு ” என்றவர் கணவனின் வாடிய முகத்தை ஒரு கணம் பார்த்து விட்டு உள்ளே சென்றார் .

ஆக எப்படி நடக்குமோ என்று அஞ்சிக் கொண்டிருந்த நிச்சயதார்த்தம்,எந்தவித தடங்கலும் இன்றி இனிதே நடைபெற்று முடிந்திருக்க , மாப்பிள்ளை வீட்டாரும் , பெண் வீட்டாரின் தூரத்து நண்பர்கள் அனைவரும் அந்த ரெசார்ட்டிலே தங்கிவிட , மேகா தன் தோழி இஷிதா மற்றும் தன் குடும்பத்துடன் தன் வீட்டிற்கு சென்றாள். செல்லும் வழியெல்லாம் மேகா நடுக்கத்துடனே அமர்ந்திருக்க , இஷிதாவோ,

” என் அப்பாக்கு அறிவு கிடையாது ,அது தெரிஞ்சது தான் . உன் அப்பாக்கு எங்க டி போச்சு அறிவு , இப்படி பண்ணிட்டாங்க “என்று பற்களை கடித்தபடி கூறினாள் .

” இப்போ என்ன டி பண்றது ” மேகாவுக்கு எங்காவது சென்று மறைந்து கொள்ளலாம் போல இருக்க .இஷிதாவுக்கோ அவ்வளவு ஆத்திரம் வர ,மேகாவின் வீட்டார் முன்பு கோபத்தை வெளிப்படுத்த இயலாது  காரில் அமைதியா அமர்ந்திருந்தாள்.

~~~~~

ரிசார்ட்டில் தனக்கான அறையில் உள்ள  ரெஸ்ட் ரூமில் இருந்து  பூத்துவாலையால் தன் முகத்தை துடைத்தபடி வெளியே வந்த ரிதுராஜ்,  விடாமல் மாறி மாறி ஒலிக்கும் காலிங் பெல் மற்றும் கதவு தட்டும் சத்தம் கேட்டு சிறு பதற்றத்துடன் கதவை திறந்தவன், அதிர்ச்சியடைந்தான் !

தொடரும்