MIRUTHNAIN KAVITHAI IVAL 41

cover page-879a67c1

மிருதனின் கவிதை இவள் 41

தன் கணவனின் கசப்பான கடந்த காலத்தை அறிந்து கொண்ட நொடியில் இருந்து மேகாவின் ஒரு மனம் அவனுக்காக மிகவும் வருந்த, இன்னொரு மனமோ ‘நீ அவனுக்காக உருகுவதெல்லாம் சரிதான் ஆனால் அவன் மனதில் உன்னை பற்றிய எண்ணம் தவறாக உள்ளதே.’ என்று சொல்ல ஆனால் அவளோ, ‘அவனது வார்த்தைகள் என்னை வதைத்தாலும் அவன் காதலிலும் அன்பிலும் பொய் இல்லையே’ என தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டாள்.

இந்த நிமிடம் மேகாவின் மனம் முழுவதும், சீக்கிரம் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து அவனுடன் இன்பமாக வாழ வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே நிறைந்திருக்க அதையே மனதளவில் இறைவனிடமும் வேண்டியவள்,

கழுத்தில் தன் ஸ்டெதெஸ்கோப்பை மாட்டிக்கொண்டு தான் அமர்ந்திருந்த சூழல் நாற்காலியில் இருந்து எழுந்தது தான் தாமதம், மேகாவுக்கு நேற்று போலவே இன்றும் கண்களை இருட்டி கொண்டு வர, அப்படியே டேபிளை இறுக்கமாக பிடித்தபடி நாற்காலியில் அமர்ந்து கொண்டவளின் மனம் எதையோ கணக்கிட்டு புன்னகைக்க மறுநொடியே தன் தோழி திவ்யாவை தன் அறைக்கு அழைத்தாள்.

!!!

“ஏதாவது சொன்னா தானே தெரியும் வந்ததும் வராததுமா கத்துனா எனக்கு என்ன தெரியும் அஷோக்.” என்றாள் இஷிதா.

“எதையும் சொல்ற நிலைமையில இல்லை. உன் அண்ணன் என்ன நினைச்சிட்டு இருக்கான்? கிரண் ஆபிஸ்ல அவனுக்கு என்ன வேலை? என்ன பழிவாங்க பார்குறானா? சொல்லி வை இஷிதா தேவை இல்லாம மோதினான் அவனை தடம் தெரியாம அழிச்சிடுவேன்.” பார்ட்டியில் நடந்த சம்பவம் மற்றும் தீரனின் பாராமுகம் அஷோக்கை பேச வைத்தது.

“அஷோக் பார்த்து பேசு, வார்த்தைய விடாத நீ என் அண்ணனை பத்தி பேசிட்டு இருக்க அதை மறந்திடாத.” சுட்டு விரல் நீட்டி எச்சரித்தாள்.

“அந்த ஒரு காரணத்துக்காக தான் உன்கிட்ட நின்னு பேசிட்டு இருக்கேன்.” பதிலுக்கு வார்த்தையால் எச்சரித்தான்.

“என்ன நடந்துச்சு? அதை முதல்ல சொல்லு.” என்ற இஷிதாவிடம் அன்று பார்ட்டியில் நடந்ததை கூறியவன்,

“எல்லாம் நல்லா போய்ட்டு இருந்துச்சு உன் அண்ணன் தட் ப்ளடி … வந்தான் மொத்தமா போச்சு.” அஷோக்கிடம் இருந்து நிதானமில்லா வார்த்தைகள் கொஞ்சம் தாறுமாறாகவே வந்தது.

“அஷோக்.” என முதலில் கோபத்தில் கத்திய இஷிதா பின்பு தன்னை நிதானப்படுத்தி கொண்டு,

“நீ தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கடா. ரித்து அவ்வளவு மோசம் கிடையாது. எதார்த்தமா தான் வந்திருப்பான்.”

“உன் அண்ணன் எப்படின்னு எனக்கு தேவை இல்லை. ரிதுராஜ் இனி என் கண்ணுலையே பட கூடாது அவ்வளவு தான்.” ஆக்ரோஷமாக சீறினான். இதை கேட்ட இஷிதாவுக்கு கோபம் தான் வந்தது,

“இது என்ன அராஜகம். விட்டா நீங்க வாழற உலகத்துல என் அண்ணன் இருக்கவே கூடாதுன்னு சொல்வீங்க போல.”

“இஷிதா நீ அந்த பார்ட்டியில இருந்திருக்கணும் அப்போ என் கோபம் உனக்கு புரியும். ஸி கிரண் நல்லவன் கிடையாது. அவனுக்கும் எங்களுக்கும் எப்பவுமே ஒத்து வராது. அவன் கூட உன் அண்ணன் கூட்டு சேர்ந்திருக்கான் நாங்க என்னனு நினைக்கிறது.”

“கூட்டு சேர்ந்து சதி பண்ற அளவுக்கு என் அண்ணன் ஒன்னும் வில்லன் கிடையாது அஷோக். சும்மா அவன் மேல பழி போடாத.”

“பிரச்சனையோட ஆழம் உனக்கு புரியல இதுல அதிகமா பாதிக்க படுறது மேகா தான். உன் அண்ணன் நீ சொல்றது மாதிரி இருந்தா ஓகே. ஆனா அவன் மட்டும் பழிவாங்குறேன்னு ஏதாவது கிரண் கூட சேர்ந்து செய்யட்டும் அப்புறம் நான் செஞ்சிருவேன். உன் அண்ணன்னு எல்லாம் பார்க்க மாட்டேன்.” என்ற அஷோக் தனக்குள் இருக்கும் மொத்த கோபத்தையும் இஷிதா மீது காட்டிவிட்டு,

அவள் கூறவரும் எந்த விளக்கத்தையும் கேட்காமல் சென்று விட, இஷிதா தான் வருத்தம் பாதி குழப்பம் மீதி என மிகவும் தோய்ந்து போனாள்.

அஷோக் பேசியதில் அவன் மீது வருத்தம் இருந்தாலும் அவனது கோபத்தை வைத்தே பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்து கொண்டவள் பாதிப்பு ஏற்படுவதற்குள் அதை சரி செய்துவிட வேண்டும் என உறுதி கொண்டாள்.

!!!

மேகாவின் அறையில் மேகா நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருக்க அவளை பரிசோதித்த அவளது தோழி திவ்யாவோ,

“ப்ரோமோஷன் கிடைச்சதுக்கு கண்டிப்பா ட்ரீட் வேணும்.” என புன்னகையுடன் கூற மேகாவின் முகத்தில் சோர்வையும் தாண்டி அவ்வளவு பரவசம் தெரிந்தது. இமை தட்டி விழித்தவளின் விழியோரம் வடிந்த ஒற்றை கண்ணீர் துளி அவளது ஆனந்தத்தை பறைசாற்ற தீரனை எண்ணியபடி தன் மணி வயிற்றை தடவியவளுக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.

‘இது போதும் கணவனின் மன நிலையை மாற்றி அவன் மனதில் உள்ள துக்கங்கங்களை எல்லாம் நீக்கி விடலாம்.’ என மனதிற்குள் எண்ணியவளுக்கு அவளது கருவறையில் உதித்த புது வரவு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தது.

“நேற்று எனக்கு கொஞ்சம் சிம்ப்டம்ஸ் தெரிஞ்சிது. கிட் பார்த்தேன் இல்லைன்னு தான் வந்துச்சு. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அப்புறம் இன்னைக்கு மறுபடியும் ஒரு மாதிரி இருந்ததும் தான் உன்னை டெஸ்ட் எடுக்க சொன்னேன், ரொம்ப ஹாப்பியா இருக்கு திவ்யா என் சந்தோஷத்துக்கு அளவே இல்லை, தேங்க் யு டி.” என்று தாய்மையின் பூரிப்பில் மகிழ்ச்சி பொங்க கூறிய மேகாவிடம்,

திவ்யா, “ஏர்லி ப்ரக்நென்சி மேகா அதான் கிட்ல காட்டல, ப்ளட் ரிப்போர்ட்ல கன்ஃபார்மா இருக்கு, உனக்கு வேணும்ன்னா ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்திடலாமா.” என கேட்க,

மேகவோ, “நோ நோ முதல் முதல்ல பாப்பாவை அவர் தான் பார்க்கணும் திவ்யா அவரும் வரட்டும்.” என மென்னகையுடன் கூற, மேகாவை பார்த்து புன்னகைத்த திவ்யா,

“எல்லாம் சரி தான் சீக்கிரம் வீட்ல சொல்லு, நீ ரொம்ப வீக்கா இருக்க. நிறைய ரெஸ்ட் தேவை, ப்ரெஷர் லெவல் எல்லாம் நார்மலா இல்லை ஸ்ட்ரெஸ் அதிகம் எடுத்துக்காத, இந்த மாதிரி மயக்கம் வருவதெல்லாம் கொஞ்சம் டேஞ்சர் மேகா. நீ ஒரு டாக்டர் இதெல்லாம் நான் உனக்கு சொல்லணும்ன்னு அவசியம் இல்லை. ஆனாலும் இப்போ எல்லாம் நீ ரொம்பவே ஸ்ட்ரெஸ்ஸா தெரியுற அதான் ஒரு தோழியா அட்வைஸ் பண்றேன். கொஞ்ச நாள் ஹாஸ்ப்பிட்டல் பக்கம் வராத. வீட்ல எப்பவுமே ஒரு ஆள் உன் கூடவே இருக்கணும். நீ உடனே அம்மாவை வர சொல்லு சரியா. டிலே பண்ணாத முடிஞ்சளவு தனியா இருக்காத. பாத்ரூம் போகும் பொழுது கவனம்.” என அறிவுரை கூற.

மேகாவோ, “தீரனுக்கு சர்ப்ரைஸா சொல்லணும்டி. அதுக்கப்புறம் தான் அம்மாகெல்லாம்.” என பிடிவாதமாக கூறினாள்.

“ஏய் டிலே பண்ணாத உனக்கு ரொம்ப ரெஸ்ட் தேவை. பெரியவங்க யாரவது கூட இருக்கணும். அட்லீஸ்ட் உன் நாத்தனார் நேத்ரா கிட்டயாவது சொல்லு. ஒரு லேடி சப்போர்ட் தேவை.” என திவ்யா சொல்லவும் உடனே மறுத்த மேகா,

“அதெல்லாம் என் தீரன் பார்த்துக்குவாரு முதல்ல அவர்கிட்ட தான்டி சொல்லுவேன் அவரோட சந்தோஷத்தை நான் என் கண்ணால பார்க்கணும். அவருக்கு குழந்தைங்கன்னா அவ்வளவு இஷ்டம் தெரியுமா. ஸோ இந்த விஷயம் உன்னையும் என்னையும் தவிர வேற யாருக்கும் தெரிய கூடாது. யார்கிட்டயும் சொல்லிடாத சரியா.” என்று மேகா தீர்க்கமாக கூற வேறு வழியின்றி சரியென்று உறுதியளித்த திவ்யா உடம்பை பார்த்து கொள்ளுமாறு கூற, ஆமோதித்த மேகா தனது ட்யூட்டியை அவளை பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு உடனே வீட்டிற்கு செல்ல தயாரானாள்.

தன் கைப்பையை எடுத்து கொண்டு கிளம்ப ஆயத்தமானவளின் மனம் தன்னவனை மிகவும் நாட, உடனே அவனுக்கு அழைப்பு விடுத்தவள் அவன் தன் அழைப்பை ஏற்கவில்லை என்றதும்.

‘எவ்வளவு தான் என்னை அவாய்ட் பண்ணுவீங்க தீரன். இனிமே நீங்க என்னை அவாய்ட் பண்ணவே மாட்டீங்க நம்ம வாழ்க்கை மாற போகுது.’ என்று தன் அடிவயிற்றை மென்மையாக தடவியவள், அவனது வாட்ஸப்பிற்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்றை தட்டிவிட்டு முகம்கொள்ளா புன்னகையுடன் கிளம்பினாள்.

!!!!!

தீரனின் அலுவலக அறையில் விடிந்தும் விடியாத அதிகாலை வேளையிலே தன் அலுவலகத்தில் தஞ்சமடைந்த தீரனால் எவ்வளவு முயன்றும் முன் தின இரவை முழுதாக நினைவில் கொண்டு வர முடியவில்லை. நேற்றைய இரவு காட்சிகள் அனைத்தும் கோர்வையற்ற காட்சிகளாய் மனதில் தோன்றின. அதை வைத்து முழுவதுமாக எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

மேகா தன் அலுவலக அறைக்குள் வந்து தன்னிடம் உரையாடியது வரை கொஞ்சம் கொஞ்சம் நினைவில் இருக்கிறது அதன் பின் நடந்தது என்ன? எப்படி அந்த அறைக்கு சென்றோம்? மேகாவும் அங்கே வந்தாளா? இல்லை தான் மட்டும்தான் அங்கே சென்றோமா? போதையின் பிடியில் அவளிடம் என்னவெல்லாம் உளறி கொட்டினோம்? என தீரனுக்கு எதுவுமே சுத்தமாக நினைவில் இல்லை. இதை பற்றி நினைக்க நினைக்க தலை கனக்க எரிச்சலுடன் அமர்த்திருந்தவனின் அலைபேசி தன் இருப்பிடத்தை காட்டவும் அதை எடுத்து பார்த்தவனுக்கு தொடு திரையில் தெரிந்த தன்னவளின் முகம் பார்த்ததும் மனம் லேசாகுவதை உணர்ந்தவன் மிகவும் ஆச்சரியப்பட்டான்.

மேகாவை பார்க்க கூடாது அவளை தவிர்க்க வேண்டும் என்பதால் தான் இங்கே வந்து அடைந்து கிடக்கிறான். ஆனால் அவள் அழைப்பை கண்டதும் மனம் உருகுகிறதே! வியப்பாக இருக்க, அழைப்பை ஏற்பதா? வேண்டாமா? என்னும் சிந்தனையில் அமர்ந்திருந்தவன் ஏனோ அட்டென்ட் செய்யாமல் விட்டுவிட கொஞ்ச நேரத்தில் வந்த பீப் ஒலியில் சிறு யோசனையுடன் வாட்ஸப்பை திறந்து பார்த்தான்.

“தீரன் நீங்க கேட்டுகிட்டு இருக்கீங்கன்னு எனக்கு தெரியும். இன்னைக்கு உங்க கிட்ட ரொம்ப முக்கியமான விஷயம் ஒன்னு ஷேர் பண்ணனும். ஸோ ப்ளீஸ் இன்னைக்கு மட்டும் என்னை அவாய்ட் பண்ணாதீங்க. உங்களுக்காக காத்துகிட்டு இருப்பேன் தீரன் ஐ லவ் யு.” மனைவியின் குரலில் இருந்த சந்தோஷமும் அதில் நிறைந்து வழிந்த காதலும் அவன் மனதை நிறைக்க, அப்படியே அமைதியாக கண்களை மூடி அமர்ந்திருந்தவனின் அமைதியை கெடுக்க அவனது அலைபேசி மீண்டும் ஒலியெழுப்ப, அலைபேசியை எடுத்தவன் தன் நெற்றியை நீவியபடி  திரையில் தோன்றிய பெயரை புருவம் சுருக்கி பார்த்தான். கிரண் பாஸ்கர்.

கொலைவெறி தான் வந்தது. ஆனால் என்ன செய்ய? தாரிக்காவின் கணவனாக போய்விட்டானே. இல்லையென்றால் அன்று அவன் மேகாவை பேசிய பேச்சுக்கு உயிரோடு இருந்திருப்பானா என்பதே ஆச்சரியம் தான். தீரனுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்து விட்டது கிரணுக்கு தன்னை பற்றி அனைத்தும் தெரிந்திருக்கிறது மேலும் தான் நினைப்பது போல அவன் சாதாரணமானவன் கிடையாது. ஏதோ ஒருவித வன்மத்துடன் தான் அவன் இருக்கிறான். ஆக அவனை பற்றி முழுவதும் அறியாமல் அவனை இனி எதிர்ப்பது புத்திசாலித்தனம் அல்ல என்று முடிவெடுத்தவன் கோபத்தை உள்ளடக்கியபடி அலைபேசியை உயிர்பித்த மறு நொடி தீரனின் கண்கள் ரெத்தமென சிவக்க அவன் முகம் இறுகியது.

ஒருவார்த்தை கூட பேசாமல் தீரன் பட்டென்று அலைபேசியை வீசியடித்த மறுகணம், பதற்றத்துடன் ரிஷியும் அஷோக்கும் அவனது அறைக்கு வர,
கிரண் சொன்ன அதே செய்தியை அவர்களும் சொல்ல உக்கிரமாக அவர்களை வெறித்தவன்,

“எப்படி?” ஆத்திரத்தில் வினவினான்.

“தெரியல சார் சோர்ஸ் மேகவர்ஷினி மேம் அக்கவுண்ட்ல தான் சார்” என்று ரிஷி கூறியதும் விருட்டென்று தன் நாற்காலியில் இருந்து எழுந்த தீரன்,

“என்ன சொல்ற?” என முதலில் சீறியவன் பின்பு தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு,

“ராங் இன்ஃபார்மேஷனா இருக்கும்.” என்றான் ஏனோ தன்னவளை அவனால் விட்டு கொடுக்க முடியவில்லை.

“சாரி சார் மேம் அக்கவுண்ட் தான் இப்போ என பண்றது.” என்று ரிஷி தயக்கத்துடன் கேட்க,

“எதுவுமே இருக்க கூடாது ஜஸ்ட் ரீமூவ் இட்.” குரல் தழுதழுக்க உத்தரவிட,

“சார்” ரிஷி தான் மீண்டும் அழைத்தான்.

“வாட்?” அதே சீற்றத்துடன் வினவினான்.

“ஃபோட்டோஸ் டெலி நியூஸ் சேனலுக்கும் லீக் ஆகியிருக்கு சார்.” ரிஷி கூறியதும் தீரனின் முகம் ஆக்ரோஷமாக மாற, நிலைமை உணர்ந்து ரிஷியை அனுப்பிய அஷோக் தீரனை ‘அடுத்து என்ன செய்வது?’ என்பது போல பார்த்தான்.

!!!!

சிட்டி மாலில் உள்ள அலங்கார மற்றும் பரிசு பொருட்கள் இருக்கும் பிரிவில் ஒவ்வொரு பொருளாக பார்வையிட்டபடி வந்த மேகாவின் கண்களை, திறந்த நிலையில் சிப்பி வடிவில் உள்ளே முத்து இருப்பது போன்ற கண்ணாடியில் உருவாக்கப்பட்ட அந்த பொருள் மிகவும் கவர, ஆசையோடு அதை எடுத்து பார்த்தவள் உடனே அதை பில் போட்டுவிட்டு. இன்னும் ஒரு சில பொருட்களை எல்லாம் பார்த்து பார்த்து வாங்கிக்கொண்டு அதே உற்சாகத்துடன் வீட்டிற்கு வந்தவளுக்கு மனம் முழுவதும் ஒருவித இன்ப படபடப்பாகவே இருந்தது.

பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் விடிவு வர போகிறது என்பதாலோ என்னவோ மிகுந்த மகிழ்ச்சியுடனே காணப்பட்டாள். தீரனின் பிம்பத்தையும் அவன் இதுவரை கொடுத்த அழகிய தருணங்கள் அத்தனையையும் இதுவரை யாருக்கும் கிடைக்காத புதையல் போல தன் இதயத்தில் வைத்து பூட்டி கொண்டவள் நிமிடத்திற்கு ஒரு முறை தன் ஆலிலை வயிற்றை தொட்டு தொட்டு வருடி கொண்டாள். தீரனை நினைக்க நினைக்க அவளது இதழ் ஓரம் அழகிய புன்னகை தவழ தன்னவனின் வரவை எதிர்ப்பார்த்து ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தாள் மேகா.