MK 15

eiS8VZ63923-6fb03ce6

MK 15

அத்தியாயம் 15

காலையில் வெற்றி எழும்போதே , சேவலின் கூவல் சத்தத்தை விட பேச்சு சத்தம் தான் பெரிதாக அவன் காதில் கேட்டது.

‘ நம்ம வீட்ல யாரு இவ்வளோ சத்தமா பேசிட்டு இருக்கிறது ‘ மனதில் நினைத்தவண்ணம் கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தவன் , கைகளை நன்கு தேய்த்து கண்களில் ஒற்றி கொண்டான்.

பிறகு தன்னை சுத்தப்படுத்தி கொண்டு கீழே வந்தவனுக்கு அதிர்ச்சி தான்.

அவன் வீட்டு ஹாலில் , கிட்ட தட்ட இருபது பேருக்கு மேல் இருந்தனர்.

‘ ஏதாவது விசேஷமா என்ன ?’ சிந்தனையோடு கீழே வந்தவனை பிடித்து கொண்டனர் வீட்டிற்கு வந்தவர்கள்.

“இதோ புது மாப்பிள்ளை வந்தாச்சி” கேலியாக ஒருவர் சொல்ல

” வாங்க வாங்க ” மற்றொருவர் அவனை வரவேற்றார்.

‘ என்ன நடக்குது இங்க?’ புரியாமல் விழித்தான் வெற்றிமாறன்.

பரமசிவம் தான் ,” இவங்க எல்லாம் நம்ம சொந்தம் தான் தம்பி . கல்யாணத்தனைக்கு வர முடியல்லன்னு இப்போ வந்திருக்காங்க ” என விளக்கமளித்தார்‌.

“மன்னிச்சிக்கோங்க கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். ” வந்தவர்களை பார்த்து மன்னிப்பு வேண்டியவன் ,

” வாங்க ” இன்முகத்துடன் வரவேற்றான் வெற்றிமாறன்.

” பரவால்ல தம்பி. நாங்களும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தோம் “வந்தவர்களில் ஒருவர் கூறினார்.

சிறிது நேரம் அங்கேயே நேரத்தை கடத்தி விட்டு மேலே வந்துவிட்டான்.

அதுவரையிலும் அவன் இனியாவை பார்க்கவே இல்லை.

மேலே வரும்போதே அவன் கண்கள் எங்கும் அவன் மனைவியை தான் தேடியது .

அவள் தென்படாமல் போகவே ‘ இன்னுமா இவ தூங்கிட்டு இருக்கா ?’ கேள்வியோடு மேலே போக அறை காலியாக இருந்தது .

“எழும்பிட்டாளா என்ன ? அதிசயமா இருக்கே ” ஆச்சிரியம் கொண்டவன் அவளை அறையில் தேடினான் .

“யாரை தேடுறீங்க தடியன் சார் ?” அறை வாசலில் இருந்து குரல் வரவும் திரும்பி பார்த்தான் .

“என்ன இன்னைக்கு சீக்கிரமா எந்திரிச்சிட்ட? உன்ன எழுப்பவே நான் அத்தனை கஷ்டப்படணுமே . எப்படி இவ்வளவு சீக்கிரமா எழுந்த ?”

“இது என்ன கொடுமையா இருக்கு . நான் எந்திரிக்கலைன்னாலும் திட்டுறீங்க , எந்திரிச்சாலும் இத்தனை கேள்வி கேக்குறீங்க ? உங்களுக்கு எல்லாம் மனசாட்சின்னு ஒன்னு இல்லையா என்ன ?”

” அதை நீ என் மனசாட்சி கிட்டயே கேட்டுக்கோ .” தோள் குலுக்கினான் அவன் .

” உங்களுக்கு காபி இங்க வைக்குறேன் குடிங்க .எனக்கு கீழ நிறைய வேலை இருக்கு ” காபி கப்பை பக்கத்திலிருந்த டேபிளில் வைத்தாள் .

‘இதோ நான் வந்துட்டேன் ‘ வெற்றியிடமிருந்து வெளிவந்தது அவன் மனசாட்சி .

“ஒழுங்கா உள்ள போயிடு ” மனசாட்சியை விரட்டி விட்டான் வெற்றி.

கதவு வரை சென்ற இனியா, திரும்பி பார்த்து” இப்போ எதாவது சொன்னீங்களா என்ன?” அழகாய் தலைசாய்த்து கேட்க

” இல்லையே நான் ஏதும் சொல்லலையே. ஏன் உனக்கு ஏதாவது கேட்டுச்சா என்ன?” புருவம் உயர்த்தி கேட்டான்.

” நீங்க ஏதோ சொன்ன மாதிரி தான் இருந்துச்சி ” அவள் தலையை சொறிய

” அப்போ உன் நினைப்பு பூரா இந்த அத்தான் மேல தான் இருக்கு போலையே . அதான் நான் பேசலைன்னா கூட உனக்கு பேசின மாதிரி இருந்திருக்கு ” கண்ணடித்து வெற்றி நக்கலாக கூற

ஒரு நிமிடம் அவன் செய்கையில் சிலை போல் அவனையே இரசித்து பார்த்தவள் ,” என்ன மேடம் நான் சொல்றது சரிதானே?” என்ற கிசுகிசுப்பான கேள்வியில் தன்னை மீட்டெடுத்து கொண்டாள் இனியா.

” நினைப்பு தான் புலப்பை கெடுக்குமாம். போய் வேலையை பாருங்க ” புன்னகைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

” சில்வண்டு கணக்கா இருந்துக்கிட்டு என்னம்மா இரசிச்சு பாருக்குற நீ.‌ மேடம்க்கு அவ்வளவு லவ்வோ இந்த ஐயா மேல‌ ” தலையில் கைவைத்து மேலே சீலிங்கை பார்த்த படி நின்றான்.

” எப்படியோ முதல் டெஸ்ட்ல பாஸ் ஆகிட்ட. அதேமாதிரி அடுத்தடுத்த டெஸ்ட்லையும் பாசாகிடு சில்வண்டு . அப்புறம் இந்த அத்தான் உனக்கு தான் ” உல்லாச மனநிலையில் சொல்லி தனக்கு தானே சிரித்து கொண்டான்.

‘ டேய் வெற்றி ! ‘ கோபமாக வெளியே வந்தது அவனது மனசாட்சி.

” இப்போ எதுக்கு டா வந்திருக்க?”

‘ என்னைய எதுக்கு டா அப்போ துரத்தி விட்ட? நீ தானே சொன்ன, ‘ அதை போய் மனசாட்சியிடம் தான் கேக்கணும்னு’ அதுக்கு தான் நான் வந்ததே . ஆனா நீ என்னை துரத்திவிட்டுட்ட ‘ குறைப்பட்டு கொண்டது மனசாட்சி.

” அப்புறம் நீ என் மனசாட்சி, என்கிட்ட மட்டும் பேசினா போதும்டா ” முகத்தை உம்மென்று வைத்து கொண்டு சொன்னான்.

‘ உனக்கு பொறாமை டா. எங்கே என்கிட்ட பேசி அவ இம்ப்ரெஸ் ஆகிடுவாளோன்னு . சரி அதை விடு ஏதோ டெஸ்ட் வச்சேன்னு சொல்றியே அது என்ன ? முதல அதை சொல்லு ?’

” அது வா.., எந்த ஒரு பொண்ணும் நமக்கு பிடிக்காத ஒரு பையனோட வெளிய போகமாட்டா. நான் சொல்லும்போது ஷாக் ஆனாலும் அதுக்கப்புறம் என்கூட நல்லாவே டைம் ஸ்பென்ட் பண்ணா. ஆக்வேர்டா அவ ஃபீல் பண்ணவே இல்லை. அது தான் அவளுக்கு நான் வைச்ச முதல் டெஸ்ட். “

‘ எவனாவது இப்படி ஒரு டெஸ்ட் வைப்பானா சொல்லு?அவ உன்னோட பொண்டாட்டி டா’

” கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு கடமைக்கு வாழ்றது இல்லை வாழ்க்கை. ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சி வாழனும் டா. அவளை புரிஞ்சிக்க இப்போ முடியாதுனாலும் , நான் அவளோட எனக்கு நடந்த திருமணத்தை அவள் விரும்பி ஏற்றாளா இல்லையான்னு தெரிஞ்சிக்க விரும்புறேன். “

‘ அப்போ உன் காதல்?’

” எது காதல் இசை மீது ஏற்பட்டதா? அது காதலே இல்லை. இப்போ ஒரு புதுசா ஹோட்டல் திறக்குறாங்க. அதுல போய் சாப்பிடுறோம். டேஸ்ட் பிடிச்சிருந்தா , திரும்ப திரும்ப போகமாட்டோமா என்ன. அதே தான் இங்கேயும் , இசை அனுப்பின லெட்டர்ஸ் எனக்கு பிடிச்சது. ஏதிர்ப்பார்த்தேன். அந்த எதிர்ப்பார்ப்பை காதல்னு நினைச்சிட்டேன்.

எல்லாரும் காதலிச்சவுங்களோட தான் வாழ்க்கை ஆரம்பிக்கனும், இல்லைன்னா வாழ்க்கையே இல்லைன்னு படத்துலையோ கதையிலயோ வேணா கேக்கலாம். ஆனா ரியல் லைஃப்ல இது எல்லாம் செட்டாகாது. கடைசி வரைக்கும் கூட வர போறது மனைவி மட்டும் தான். அவ கிட்ட போய் எனக்கு காதல் தான் முக்கியம் காதலிச்சவ தான் முக்கியம்னு சொல்லிட்டு இருக்க முடியாது. அது ரெண்டு பேரோட வாழ்க்கையையும் அழிச்சிடும் டா. அதான் இப்படி எல்லாம்” என்று நீண்டதொரு விளக்கத்தை தன் மனசாட்சியிடம் கொடுத்தான்.

‘க்ரேட் டா நீ‌.! ‘

வெற்றி ஏதும் பேசாது புன்னகைக்க மனசாட்சி மறைந்தது.

பின்பு, குளித்து முடித்து வெளியே வந்தவன் பெரியவர்களோடு அமர்ந்து பேச தொடங்கினான்.

அவனது பார்வை வட்டத்துக்குள்ளே இனியாவை வைத்து கொண்டான்.

சிறிது மறைந்தாலும்‌ ஏதாவது வேலை சொல்வது போல் அவளை கூப்பிட்டான்.

புதிதாக ‘ சில்வண்டு ‘ என்ற பெயரோடு அவளை அழைத்தான்.

முதல் அழைப்பில் யாரையோ அழைக்கிறான் என்று நினைத்திருக்க , ஆனால் அது தன்னை தான் அழைத்திருக்கிறான் என்று அடுத்ததாக அவன் இனியா என்று பெயர் சொல்லி அழைத்ததில் தெரிந்து கொண்டாள்.

அதை பற்றி கேட்க வேண்டும் என்று நினைத்து கொண்டு வேலை செய்தாள்.

காலை உணவு செய்யாததால் அனைவருக்கும் சேர்த்து மதிய உணவென சிக்கன் க்ரேவி , மீன் குழம்பு , இறால் தொக்கு , முட்டை , கோலா‌‌ உருண்டை என தடபுடலாக சமையல் செய்திருந்தனர்.

சாப்பிட அமர்ந்த வெற்றி ,” நான் கிளம்புறேன்னு இவ்வளவு செஞ்சியா மா?” பாசத்துடன் அன்னையிடம் கேட்க

” நினைப்பு தான் மகனே. வாரம் வார வர உனக்கு எதுக்கு டா இப்படி தடபுடலா செய்ய போறேன் சொல்லு. இது எல்லாம் என் மருமகளுக்காக டா. அவளுக்காக தான் இத்தனையும் நான் சமைச்சதே.” மருமகளை பார்த்து புன்னகை புரிய

” ம்மா , நான் உன் புள்ள மா. எனக்காக தான் சமைக்கணும் “

” வேணும்னா சாப்பிடு , இல்லைன்னா ரசம் ஊத்தி சாப்பிட்டு போ டா. யாரும் இங்க உன்ன சாப்பிட சொல்லி கெஞ்சல ” மகனை விடுவதாக இல்லை விஜயசாந்தி.

” ம்மா” பற்களை நறுநறுத்தான் வெற்றி.

” போடா போடா.. இனியா நீயும் உட்கார்ந்து சாப்பிடு டா “

” பரவால்ல அத்தை. நான் பரிமாறிட்டு உங்க கூடவே சேர்ந்து சாப்பிட்டுக்கிறேன் ” புன்னகைத்து விட்டு மற்றவர்களுக்கு பரிமாற தொடங்கினாள்.

*******

மாலை ஆகவும் ஊருக்கு செல்வதற்காக இருவரும் கிளம்பினர். சரியாக அவர்கள் கிளம்புவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு இனியாவின் தாயும் தந்தையும் வந்தனர்.

” பத்திரமா போயிட்டு வாங்க மாப்பிள்ளை. என் பொண்ணை நல்ல படியா பார்த்துக்கோங்க ” வெற்றியின் கையை பிடித்து ஞானவேல் சொல்ல

” கவலை படாதீங்க மாமா. இனியா என் பொறுப்பு. உங்களை விட அவளை நான் நல்லா பார்த்துப்பேன் “

“சந்தோஷம் மாப்பிள்ளை . நீங்க அவளை நல்ல படியா பார்த்துப்பீங்கன்னு எனக்கு தெரியும் .இருந்தாலும் நான் ஒரு வார்த்தை சொல்லணும் இல்லையா அதுக்கு தான் “

“சரிங்க மாமா “

பின் மகளும் தந்தையும் பேசிக்கொள்ள , சிறு இடைவேளி விட்டு அமர்ந்திருந்த மாமியாரை நோக்கி சென்றான் வெற்றிமாறன் .

“மாமியாரே !”

” இந்த மாப்பிள்ளைக்கு ஏதும் அறிவுறை இல்லையா என்ன ?” வெற்றியின் நக்கல் பேச்சில் கடுப்பானார் காந்திமதி .

” ஒழுங்கா போய்டு என் வாயை கிளறிட்டு இருக்காத “

“என்ன மாமியாரே இப்படி சொல்லிப்புட்டீங்க ? உங்களுடைய பேச்சை கேட்க ஓடோடி வந்த என்னை காக்க வைக்காதிங்க மாமியாரே ” நக்கலாக சொல்ல ,தூரத்தில் இருந்து இதனை கவனித்தபடி இருந்தாள் இனியா .

“இப்போ உனக்கு என்ன தான் வேணும் ?”

” உங்களோட ஆசீர்வாதம் வேணும் அத்தை ” கிண்டல் குரலை விட்டு சீரியசாக சொன்னான் .

“வாய்ப்பில்லை மாப்பிள்ளை . என் பொண்ணை என்கிட்ட விட்டுட்டு ஒரேடியா போறேன்னு சொல்லு . உனக்கு ஆசிர்வாதத்தோடு சந்தோஷமா உன்னை வழி அனுப்பிவைக்குறேன் .” சிரித்த முகத்தோடு சொன்னார் காந்திமதி .

” என் வாழ்க்கை அவ தான்னு முடிவு பண்ணிட்டேன் . இனி அதை மாத்தா முடியாது . இப்போ வேணா உங்களுக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்காம இருக்கலாம் . ஆனா இதே மாப்பிள்ளையை நீங்க ஒரு நாள் மெச்சிக்கத்தான் போறீங்க . அதை நானும் பார்க்க தான் போறேன் ” சிரிப்போடு கூறினான் வெற்றிமாறன் .

“பாப்போம் பாப்போம் ” காந்திமதி சொல்ல சிரிப்போடு கடந்து விட்டான் .

பின் , அனைவரின் ஆசிர்வாததோடு அவர்களது பயணம் தொடங்கியது.

*******

கர்நாடகா – பெங்களூரு

இந்திரா நகர்

இந்திரப்ரசாத அனிருதா நகரில் உள்ள ஒரு மாளிகையில் விழா கோலம் போல் பூத்திருந்தது .

அனைத்து விதமான பணக்கார வர்கத்தை சேர்ந்தவர்களும் அங்கே கூடி இருந்தனர் .

இன்னும் சற்று நேரத்தில் விழா தொடங்கிவிடும் என கூறிச்சென்றார் அம்மாளிகையின் தலைவர் சுவாமிநாதன் .

” நமஸ்காரு . நான் கூப்பிட்டதுக்காக எல்லாரும் வந்துருக்கீங்க அதுக்கு நன்றி . இப்போ எல்லாரும் பார்ட்டிய என்ஜாய் பண்ணுங்க . சீக்கிரமே நிகழ்ச்சியை தொடங்கலாம் ” சுவாமிநாதன் கூறி நிகழ்வை தொடக்கி வைத்தார் .

அனைவரும் அவரது பேச்சிற்கு கை தட்டினர் .

மாளிகைக்குள் நுழைந்த சுவாமிநாதன் “கிரிஜா ” என கத்த

கணவனின் குரலுக்கு ஓடோடி வந்தார் .

” சொல்லுங்க ?”

” உன் மகளு ரெடி ஆகிட்டாளா ?”

“அது வந்துங்க ….” கிரிஜா இழுக்க

“என்ன அம்மா அவ கிளம்பினாளா இல்லையா ?” கோபமாக கேட்டான் அவ்வீட்டின் மூத்த வாரிசு சூர்யா

“இல்ல தம்பி “

” அவளுக்கு எவளோ திமிரு இருக்கும். அப்பா அவள நீங்க திட்ட மாட்டேங்கிறீங்க . அதான் அவ இஷ்டத்துக்கு ஆடுறா ” கோபமாக மொழிந்தான் .

“தம்மா (தம்பி )” அழுத்தம் திருத்தமாக அழைத்தார் .

“போங்க அப்பா “அவ்விடத்தை விட்டு நகர்த்துவிட்டான் சூர்யா .

“வா !” மனைவியுடன் மகள் இருக்கும் அறை நோக்கி நடையிட்டார் .

“மகளு ” மகள் அறையிலிருந்து மெதுவான குரலில் அழைக்க

“அப்பா ” என ஓடிவந்து அணைத்து கொண்டு அழ தொடங்கினாள் . அவள் இசை … இசையாழினி .

“மகளு , நின்னு யாகே அழுத்த இட்தியா ?(ஏன் அழுகிறாய் )”

” அப்பா , நனகே இ மதுவே பேடா (எனக்கு இந்த கல்யாணம் வேணாம் )”

“ஏன்?”

” அப்பா , இம் இன் லவ் வித் வெற்றி “

” இதை ஏன் நீ முதலையே சொல்லல மகளு ?”

” என்னைய யாரும் சொல்ல விடல பா . என்னால ராமை கல்யாணம் செய்ய முடியாது ப்பா “

” இப்போ ஏதும் பண்ண முடியாது மகளு .அஜ்ஜா ,அஜ்ஜி ,மாவா ,சிக்கப்பா ,சிக்கம்மா , டோட்டப்பா டோட்டம்மா எல்லாரும் வந்திருக்காங்க . நீயும் அலியாவும் (மருமகன் ) சின்ன வயசுல இருந்தே நண்பர்கள் . ஆனா பெரியவுங்க நாங்க அப்படி கிடையாதே . உன் அத்தை சாம்பவி உன் மாவா தான் வேணும்னு போனதுக்கப்றம் ,அவ கூட நாங்க யாரும் பேசவே இல்லையே மகளு. இப்போ தான் உங்க அஜ்ஜா இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்காரு . அதை கெடுக்க வேணாம் . இப்போ இந்த நிசித்தார்தா (நிச்சயதார்த்தம்) பண்ணிக்கோடா . அப்புறம் நானே அப்பா கிட்ட பேசி நிறுத்துறேன் ப்ளீஸ் டா மகளு இப்போ சரின்னு சொல்லு மா “

தந்தையின் பேச்சை மீற முடியாமல் ,” கண்டிப்பா நிறுத்திடுவீங்க தானே ப்பா ?”

“கண்டிப்பா மகளு ” தலையை கோதி விட்டார் .

பின் , கிரிஜா இசையை நிசித்தார்தாவிற்கு தயார் செய்தார் .

அவள் மனம் முழுவதும் வெற்றி மட்டுமே நிரம்பி இருந்தான் .

‘ வெற்றி உனக்காக நான் வருவேன் டா. நம்ம காதல் சீக்கிரமே கை கூடும் ‘ மனதோடு வெற்றியிடம் பேசினாள் இசை .

அடுத்த அரைமணி நேரத்தில் விழா தொடங்கியது .

மணமகனாக பலராமன் மேடையில் நின்றிருக்க அவன் பக்கத்தில் மணமகளாக இசையாழினி நின்றிருந்தாள் .

*******

இங்கே ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த இருவரும் அமைதியாகவே அமர்ந்திருந்தனர் .

இனியா ஏதும் பேசாது அமைதியாக தன் மொபைலை நோண்டியபடி இருந்தாள் .

இப்போது வெற்றியால் தான் அமைதியாக வர முடியவில்லை .

” மொபைல்ல அப்படி என்ன பாக்குற ?” மெதுவாக பேச்சை தொடங்கினான் வெற்றி.

“சும்மா தான் “

“ஹோ “

” நீ என்ன படிச்சுருக்க ?”

” அது தெரிஞ்சி என்ன பண்ணபோறீங்க தடியன் சார் ?” புருவம் உயர்த்தி கேட்டாள் .

” ஏன் நான் தெரிஞ்சிக்க கூடாதா என்ன ? உன் அத்தான் தான் தெரிஞ்சிக்கணுமோ நாங்க எல்லாம் தெரிஞ்சிக்க கூடாதா ?” சிறுபிள்ளையாய் கேட்டான் வெற்றிமாறன் .

இனியாவிற்கு அவனின் கேள்வியில் சிரிப்பு தான் வந்தது .

” ஹோ ! தெரிஞ்சிக்கலாமே “

” அப்போ சொல்லு ?”

” பி.ஈ சிவில் என்ஜினீயரிங் படிச்சிருக்கேன் . மூணு வருஷமா ஒரு கம்பெனில வேலை பார்த்தேன் . இப்போ வேற ஒரு இடத்துல வேலை பார்க்குறேன் “

“சூப்பர் சில்வண்டு ” மனதார பாராட்டினான் வெற்றி .

” தேங்க் யூ ” என்றவள் ” அது என்ன புதுசா சில்வண்டுன்னு கூப்பிடுறீங்க ?”

“அது செல்ல பெயர் சில்வண்டு . நீ எப்படி என்னைய தடியன் சார்னு கூப்பிடுறியோ அந்த மாதிரி தான் இதுவும் .புரியுதா ” சிரித்த முகமாக சொன்னான்.

“புரியுது புரியுது ” முகத்தை திருப்பி கொண்டு வெற்றிக்கு தெரியாமல் புன்னகை புரிந்தாள் .

நடு இரவு ,

“சரி ,அன்னைக்கு நீ என் அத்தானை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லிட்டு அப்புறம் ஏன் என்னைய கல்யாணம் பண்ணிகிட்ட ?”

‘இது என்ன கேள்வி ‘என்பதுபோல் பார்வை பார்த்து வைத்தாள் இனியா .

“சொல்லு இனியா . ஏன் உன் அத்தானை கல்யாணம் பண்ணிக்கல?”

“இந்த கேள்வி உங்களுக்கு அபத்தமா தெரியல “கோபமாகவே கேட்டாள் .

” இதுல என்ன இருக்கு. நீ தானே அன்னைக்கு உன் அத்தான் துரைபாண்டி கிட்ட சொன்ன ‘ என் காதல் நம்மளை சேர்த்து வைக்கும்னு ‘ அப்போ உனக்கு அவன் கூட வாழ தான் ஆசை இல்லையா”

” நிறுத்துங்க வெற்றி “

” நான் எதுக்கு நிறுத்தனும் இனியா. நான் உன் வாயால கேட்டதை தான் இப்போ உன்கிட்ட கேக்குறேன். அவன் கூட தான் உன் வாழ்க்கைனு முடிவு பண்ணின பிறகு எதுக்கு இப்போ என்கூட சென்னைக்கு வர ” எப்படியோ ஆரம்பித்த பேச்சுவார்த்தை இப்போது சூடுபிடித்தது.

” ப்ளிஸ் எதுவும் பேசாதீங்க வெற்றி. நான் அன்னைக்கு அத்தான்னு யாரை‌ வேணா சொல்லியிருப்பேன். ஏன் அது நீங்களா கூட இருந்திருக்கலாம். ஆனா நாங்க பேசியதை ஒழுங்கா கூட கேட்காம நீங்களா எதையாவது கற்பனை பண்ணிட்டு பேசாதீங்க “

” பேசுற உங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இருக்கலாம். ஆனா கேட்கிற எங்களுக்கு அது பெரிய வலியை உண்டு பண்ணும். பேசும்போது பார்த்து பேசுங்க தடியன் சார் ” இனியா தன் பேச்சு முடிந்தது என்பது போல் ஜன்னல் புறம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

” சாரி..” சட்டென மன்னிப்பை கோரினான் வெற்றி.

” மன்னிப்பு கேட்டா நீங்க பேசியதை திருப்ப வாங்க முடியுமா என்ன?”

“நான் பேசினது தப்பு தான் ஐம் ரியலி சாரி சில்வண்டு”

” உங்க சாரி எனக்கு தேவையில்லை . போங்க ” கோபித்து கொண்டாள் பெண்.

” சாரி. நான் வேணும்னா தோப்புக்காரணம் போடட்டுமா ” என சுற்றி முற்றிலும் பார்வையை ஓட்டினான்.

அதனை உணர்ந்த இனியா ,” சரி சரி தோப்புக்கரணம் எல்லாம் போட வேணாம். ஆனா இனி இப்படி பேசாதீங்க . இதுக்கான தண்டனை உங்களுக்கு கண்டிப்பா இருக்கு ” மிரட்டினாள் பெண்.

முதல் ஊடல் இருவருக்குள்ளும் .‌ அது வெற்றியின் பார்வைக்கு அழகாக தெரிந்தது. ஆனால் இனியாவின் கண்ணோட்டத்தில் வெற்றியின் பேச்சு ஊசியால் நெஞ்சை குத்தியது போல் அவன் வார்த்தைகள் அவள் நெஞ்சத்தை குத்தியது.

அதிகாலை நாலரை மணிப்போல் ரயில் எக்மோரை அடைந்தது.

” வா வா ” கைபிடித்து இனியாவை ரயிலிலிருந்து வேகமாக இறக்கினான் வெற்றிமாறன்.

” சீக்கிரமா வா. ஆல்ரெடி நேரமாச்சி” இனியாவை துரிதப்படுத்த அவளோ ஒரு இடத்தில் சட்டமாக நின்றுகொண்டாள்.

” ஏன் நின்னுட்ட ? ரெஸ்ட் ரூம் ஏதாவது போகனுமா என்ன?”

” இல்லை. நான் உங்க கூட வரல “

” என்ன?”

” நான் உங்க கூட வரலைன்னு சொல்றேன். எப்படியும் என்னை ஒரு நாள் உங்களோட காதலிக்காக விட தானே போறீங்க. அதுக்கு நான் வராமலே இருந்துக்கிறேன் .”

” ஏய் ! என்ன பேசுற நீ ? தெரிஞ்சு தான் பேசுறீயா” கோபமாக கேட்க

” எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறேன். நான் உங்க கூட வரல. நீங்க நேத்து பேசினதுக்கு இது தான் உங்க தண்டனை ” என்று அவளது பையை மட்டும் எடுத்து கொண்டு கிளம்பிவிட்டாள்.

இவன் தான் அவள் போகும் பாதையை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தான்.

காலம் இப்போது எல்லாம் தப்பு செய்யும் நபர்களுக்கு தண்டனை கொடுக்க அடுத்த பிறவி வரை எல்லாம் காத்திருப்பதில்லை. அவன் செய்யும் தவறுக்கு , அடுத்த சிறிது காலத்திலே அதற்கான தண்டனையும் கிடைக்கிறது.

இது தான் வாழ்க்கை!

Leave a Reply

error: Content is protected !!