Mk 22

eiS8VZ63923-4c86a6e7

Mk 22

மயங்கினேன்.!கிறங்கினேன்.!

அத்தியாயம் 22

வண்டியில் ஓடும் சக்கரம் போல் சுழன்று கொண்டே இருக்கிறது அவன் வாழ்க்கை.!

” கௌதம் நில்லு ” பார்த்தும் பார்க்காதது போல் செல்லும் கௌதமை நிறுத்த முயன்றான் வெற்றி.

அவனோ வெற்றி அழைத்தது கேட்காதது போல் வண்டியை எடுத்தான்.

வேகமாக ஓடி வந்த வெற்றி பைக் சாவியை எடுத்துக் கொண்டு ஆட்காட்டி விரலால் ஹாயாக சுழற்றினான்.

” சாவிய கொடு ” கட்டுதறித்தார் போல் சொல்ல

” கொடுக்க முடியாது உன்னால என்ன பண்ண முடியும் ?”

” நீயே வச்சிக்கோ எனக்கு கேப் புக் பண்ணி போக தெரியும் ” வண்டியை விட்டு இறங்கிய கௌதம் மெல்ல நடக்க துவங்கினான்.

” அப்படி என்ன தான் உனக்கு கோபம் இப்படி முகத்தை திருப்பிக்கிட்டு போற அளவுக்கு ” அவனை வழிமறித்து கேட்க

“உன்கிட்ட பேச விருப்பமில்லன்னு அர்த்தம் “

” அதான் ஏன் ?”

” ஏன்னா , நீ என் தங்கச்சிய ஏமாத்துற டா . அது போதாதா நான் உன்கிட்ட பேசாம போறதுக்கான காரணம் “

” அடச்சே இது தானாக்கும் . நான் கூட வேற ஏதாவது இருக்குமோன்னு நினைச்சு பயந்துட்டேன் டா “

” ஒரு பொண்ணை ஏமாத்துறது உனக்கு சாதாரணமான விஷயமோ , தம்பி நீங்க ஒரு பொண்ணை இல்லை இரண்டு பொண்ணை ஏமாத்துறீங்க அது புரியுதா உங்களுக்கு ” என அவனின் மூளையை தொட்டு காட்டி சொன்னான் கௌதம்.

” நான் யாரோட வாழ்க்கையிலையும் விளையாடல மச்சான். ரெண்டு பேரும் தான் என்னோட வாழ்க்கைல விளையாடுறாங்க “

” என்ன சொல்ல வர நீ ?” அவன் கூற்று புரியாது கௌதம் கேள்வியாய் நோக்கினான்.

” ஆமா டா. அன்னைக்கு இசைக்கிட்ட உண்மையை எப்படியாவது எடுத்து சொல்லி என் வாழ்க்கையில இருந்து இசையை தகர்த்தெறிந்திடலாம்னு பார்த்தா , அவ பெரியா குண்டா என் தலையில் போட்டா டா “

” அப்படி என்ன போட்டாலாம் உன் காதலி ?”

” அவளுக்கு மண்டையில அடிப்பட்டு இருக்கு டா. அதுல ஏதோ மூளைக்கு போற நரம்பு ஒன்னு கட்டாகிடுச்சாம் அதுக்கு ஏதோ ஆப்ரேஷன் பண்ணணுமா டா, அப்படி பண்ணா கூட ஏதோ ஐம்பது சதவீதம் தான் வாழ்ற சான்ஸ் இருக்குன்னு டாக்டர் சொல்லிருக்காங்கன்னு சொன்னா டா . எனக்கு அவ அப்படி சொல்லும்போது என்ன சொல்றதுனே தெரியலை ” என வெற்றி நிறுத்த ,அவனை முறைக்கலானான் கௌதம்.

” நீ உண்மைய சொல்ல வேண்டியது தானே. இதுல என்ன இருக்கு சொல்லு ” முகத்தை இறுக்கமாக வைத்த படியே தான் கேட்டான் கௌதம்.

” கௌதம் புரியாம பேசாத டா. அவளுக்கு அந்த ஆக்சிடென்ட் ஆக காரணமே நான் தான். என்னை பார்க்க வந்து தான் இப்படி ஆனதே . அப்புறம் எப்படி நான் அவளை அம்போன்னு விடுறது சொல்லு ” நிர்மலமான நிலை அவனது.

” உடம்பு சரியில்லைன்னா உன்னால என்ன பண்ண முடியும் .சரி அவ தான் எனக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னா, நீ என்ன சொல்லியிருக்கணும் ‘ உனக்கு ஒன்னும் ஆகாது மா. நீ கவலைப்படாத எல்லாம் சீக்கிரமே சரியாகிடும்னு ‘ சொல்றதை விட்டுட்டு அவ கூடவே இருப்பியா என்ன ” இதுநாள்வரை அடக்கி வைத்திருந்த கோபத்தை காட்ட துவங்கினான் .

” உனக்கே என்ன பத்தி தெரியும் , தெரிஞ்சிருந்தும் நீ இப்படி பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு டா “

” உண்மைகள் சில நேரம் கசக்க தான் செய்யும் வெற்றி. உனக்கு கல்யாணம் ஆனதையாச்சும் சொன்னியா இல்ல அதையும் சொல்லலையா “

” சொல்ல நினைக்கும்போது இப்படி சொல்லவும் என்னால வேற எதையும் சொல்ல முடியல டா “

” நல்லவன்னா இருக்கலாம் வெற்றி அதுகூட உன்னையும் உன் குடும்பத்தையும் பாதிக்காத வரைக்கும் தான் . இதுக்கு மேல சொல்ல ஏதுமில்லை நான் வரேன்” என்று அவன் கையில் வைத்திருந்த வண்டி சாவியை எடுத்தவன் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

செல்லும் நண்பனை பார்த்து விரக்தியாக புன்னகை புரிந்தவனுக்கு ஏனோ இனியா மீது நம்பிக்கை இருந்தது அவள் தன்னை புரிந்துகொள்வாள் என்று. ஆனால் அது இன்னும் சற்று நேரத்தில் பொய்யாக போகிறது என்று பாவம் அவனுக்கு தெரியவில்லை.

தொய்ந்து போன முகத்தோடு வீட்டிற்கு செல்லலாம் என்று வண்டியை எடுத்த சமயம் இசையிடமிருந்து அழைப்பு வந்தது.

இசையின் அழைப்பை கண்டதும் , அவளுக்கு என்னவோ எதுவோ என்று பயந்து விட்டான் வெற்றி.

உடனே அழைப்பை ஏற்ற வெற்றி ” இசை என்ன இந்த நேரத்துல , உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே ?”

” இப்போ நீங்க எங்க இருக்கீங்க மாறா ?”

” வீட்டுக்கு கிளம்ப இப்போ தான் பைக் ஸ்டார்ட் பண்றேன் சொல்லு மா என்ன விஷயம் ?”

” நீங்க உங்க வீட்டு பக்கத்துல இருக்க பார்க்குக்கு வாங்க மாறா. உங்களுக்காக நான் அங்க காத்திருக்கேன் ” என்றதும் வெற்றியின் புருவங்கள் இரண்டும் முடிச்சிட்டது.

” சரி அங்கேயே இரு நான் வந்தறேன் ” என்று சொல்லி அழைப்பை துண்டித்தவன் அவள் கூறிய இடத்திற்கு சென்றான்.

பூங்காவை வந்தடைந்த வெற்றிக்கு இசை எங்கிருக்கிறாள் என்று தெரியாமல் போகவே அவளுக்கு அழைத்தான்.

” வந்துட்டீங்களா மாறா ?”

” ஹான் , நீ எங்க இருக்க ?”

” உங்களுக்கு பக்கத்துல தான் இருக்கேன். ஆனா தூரமா தெரியுது மாறா”

” என்ன?”

” ஒன்னுமில்லை. உங்களுக்கு ரைட்ல சைட்ல இருக்கிற ஊஞ்சல் பக்கத்துல தான் இருக்கேன் வாங்க ” என்றதும் திரும்பி பார்த்த வெற்றி அவளை நோக்கி கையசைத்தவாறே நடையிட்டான்.

” என்ன இந்த நேரத்துல பார்க்கணும்னு வர சொல்லியிருக்க இசை? உடம்பு ஏதும் சரியில்லையா என்ன ?” கவலையாடு அவள் உடல்நிலையை எண்ணி கேட்க ,

விரக்தி புன்னகை புரிந்த இசை , இரண்டு அடி முன்னோக்கி நடந்தாள்.

” ஏதாவது சொல்லு மா , இப்படி சிரிச்சா என்ன அர்த்தம் ,உடம்புக்கு ஒன்னுமில்லையே?”

” உடம்புக்கு என்ன அது நல்லா தான் இருக்கு மாறா. ஆனா மனசு தான் ரொம்ப வலிக்குது அதுவும் இங்க தாங்கவே முடியல்லை ” இதயத்தை சுட்டிக் காட்டி சொன்னாள்.

” உங்களை பார்க்குற வரைக்கும் எனக்கு நிம்மதியே இல்ல மாறா. அங்க அப்பாக்கூட இருந்த வரைக்கும் உங்க நினைப்பு தான் மனசு பூரா நிறஞ்சி இருந்தது. அது தான் போல இத்தனை வலிக்கும் காரணமோ என்னவோ “

” நீ என்ன பேசுற இசை ” வெற்றிக்கு புரியாது போக அதை அவளிடம் கேட்கவும் செய்தான்.

” நான் பேசுறது உங்களுக்கு புரியல இல்லை செம்ம காமெடி போங்க மாறா. நான் ராமை வேண்டாம்னு சொல்லிட்டு நீங்க தான் வேணும்னு இங்க வந்ததுக்கு நீங்க கொடுத்த பரிசின் பெயர் தான் துரோகம்  போல”

” இசை நீ என்ன பேசுற எனக்கு சுத்தமா புரியல. அதுவும் பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு இருக்க “

” ஹோ , நான் பேசுறது எதுவுமே உங்களுக்கு புரியல அப்படிதானே . புரியாதவுங்களுக்கு சொல்லி புரிய வைக்கலாம் மாறா ஆனா புரிந்தும் புரியாத மாதிரி நடிக்கிற உங்க கிட்ட என்னத்த சொல்ல” வார்த்தை சிறு கோபத்தை தத்டெத்திருந்தது.

” பச் ,எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லு இசை சுத்தி வளைச்சி பேசாத “

” ம்ம் ஓகே நீங்களே நேரடியா சொல்லுன்னு சொல்லும்போது எனக்கென்ன கவலை “

” உங்களுக்கு கல்யாணமானதை ஏன் என்கிட்ட சொல்லல மாறா ?” அவள் முகமெங்கும் கோபத்தில் சிவந்திருந்தது.

கேட்ட வெற்றிக்கு அதிர்ச்சி தான். ஆனாலும் அதை காட்டாது அமைதியாக நின்றான்.

“ஏன் மறச்சீங்க மாறா ?” அவன் சட்டையை கொத்தாக பிடித்து கேட்டாள்.

“உன்கிட்ட மறைக்கணும்னு இல்லை இசை” என்று அடுத்து ஏதோ சொல்ல வந்தவனை இடைமறித்து பேசினாள் இசை.

“ஏன் இத்தனை நாளா என்கிட்ட சொல்லலை மாறா? என் காதல் உங்களுக்கு அத்தனை சீப்பா தெரியுதா ” என்று கேட்டவளுக்கு தலை வேறு வலிக்க தொடங்கியது. அதனை தொடர்ந்து அவனை தள்ளிவிட்டவள் தலையில் கைவைத்து கீழேயே அமர்ந்துவிட்டாள்.

“இசை என்ன பண்ணுது மா ? பதறிப் போய் கேட்க

” என்ன பண்ணுதா , நெஞ்சே வெடிக்கிற போல இருக்கு மாறா.அன்னைக்கு நான் கேட்டதுக்கு நீங்க என்ன சொன்னீங்க மாறா?” மூச்சு வாங்க வலியை பொறுத்து கொண்டு கேட்டாள்.

“…..”

“என்ன சொன்னீங்க மாறா சொல்லுங்க? ” ஆங்காரமாய் ஒலித்தது அவள் குரல்.

“சொல்லுங்க மாறா , ஏன் அமைதியா நிக்கிறீங்க?” அமர்ந்த நிலையிலே அவனது சட்டையை பிடித்து ஆட்டியபடி கேட்கவும் தலை தாழ்த்தி கொண்டான் வெற்றி.

“அன்னைக்கு நீங்க கல்யாணம் நடக்கலைன்னு தானே சொன்னீங்க ” கண்கள் கண்ணீர் பளபளக்க அவனை நோக்கி கேட்டவளை பார்த்து பேச்சற்று நின்றான் வெற்றி .

” உங்ககிட்ட நான் எதையுமே மறைக்காம அன்னைக்கு எல்லாமே சொன்னேனே மாறா . நீங்க இப்படி என்னை ஏமாத்தலாமா ?”

“கொஞ்சம் நான் சொல்றதை கேளேன் இசை . உனக்காக தான் சொன்னதே , மறைக்கணும்னு எந்த ஒரு இன்டென்ஷனும் எனக்கு இல்லை. உன்னைய கூட்டிட்டு போய் அப்பா கிட்ட பேசணும்ன்னு தான் நினைச்சதே ,ஆனா எல்லாம் கை மீறி போச்சி மா .அதுவும் இல்லாம உன்னோட ஹெல்த் என்ன எதையும் உங்கிட்ட சொல்ல விடல ” அவளுக்கு எப்படியாவது தன் நிலையை சொல்லி புரியவைக்க முயன்றான் .

“நீங்க எதுவுமே சொல்ல வேண்டாம் மாறா .எனக்கு உங்களோட நிலை நல்லாவே புரியுது அதான் நானே அவ கிட்ட பேசிட்டேன் ” என மூக்குறிஞ்சியபடியே சொல்ல

“எத யார் கிட்ட சொன்ன இசை ?” புருவம் சுருக்கி கேட்க ,

“அதான் நீங்க இன்னைக்கு பைக்ல கூட்டிட்டு போனீங்களே உங்க பொண்டாட்டி அவங்க கிட்ட தான் “என்றதும் தலையில் அடுத்தடுத்து இடி விழுந்தது போல் இருந்தது .

” இனியா கிட்ட பேசுனியா என்ன ?” முகம் இறுக்கத்தை காட்டியது .

“ஹோ அந்த பொண்ணு பேரு இனியாவா அதான் நான் சொன்னதும் ஸ்வீட்டா புரிஞ்சிகிட்டா . நல்ல பொண்ணு தான் போல மாறா ” குரலில் ஒரு உற்சாகத்தை காட்டியது .

“அவ கிட்ட என்ன சொன்ன இசை ?” ஒரு வித இறுக்கத்தோடு கேட்க

“பெருசா ஒன்னும் இல்ல மாறா பேபி . நம்ம வாழ்க்கைய விட்டு போக சொன்னேன் அவ்ளோ தான் . பட் அவ ஈஸியா புரிஞ்சிகிட்டதும் இல்லாம உன்ன விட்டு போறேன்னும் சொல்லிட்டா தெரியுமா .நான் கூட ஏதாவது வம்பு பண்ணுவாளோன்னு நினைச்சேன் ” என்றதும் கோபமாய் வந்தது வெற்றிக்கு அதும் இசை மீது இல்லாது இனியா மீது தான் வந்தது .

‘எத்தனை கொழுப்பு இருக்கும் அவளுக்கு ‘ மனதினுள் கருவியவன் வெளியில் அமைதியாய் நிற்மலமாய் நின்றான் .

” நீ வீட்டுக்கு போ இசை நேரமாச்சு பாரு ” என்று அவளை வண்டி ஏத்திவிட்டு வீட்டிற்கு கோபமாய் கிளம்பினான் .

********

இனியாவிற்கு ஏதும் புரியவில்லை . அவள் உலகமே ஒரு நிமிடத்தில் முடிந்தது போலான உணர்வு .

‘என்னோட தரு இனி எனக்கில்லயா ‘ அந்த நினைப்பே அவளை உயிரோடு கொன்றது .

மெதுவாக வெற்றியின் அறைக்குள் நுழைந்தவள் அவனின் வாசத்தை தனக்குள் நிறைக்க முயன்றாள் .

‘ என்னால இந்த ரூம்ல கடைசிவரை உரிமையா நுழையவே முடியாதா , அப்படி என்ன தான் நான் தப்பு பண்ணிட்டேன்னு எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை . கைக்கு கிடைச்சும் அந்த பொக்கிஷத்துக்கூட வாழ முடியாம பண்ணிட்டீங்களே கடவுளே ‘ உள்ளத்து ஆர்ப்பாட்டங்களை அவளால் வெளியில் காட்டவே முடியவில்லை .

அப்படியே அவனது கட்டிலில் அமர்ந்தவள் , தினமும் அணைத்து தூங்கும் தலைகாணியை எடுத்து தன்னோடு பொத்திக் கொண்டாள்.

சிறிது நேரத்திற்கு முன்பு,

வெற்றி இனியாவை வீட்டில் விட்ட சிறிது நேரத்திலே அழைப்பு மணி அழைக்கவே , சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த இனியாவிற்கு இது யோசனை தான் ‘ யாராக இருக்கும் என்று’.

‘யாரா இருக்கும் ‘ என்ற சிந்தனையூடே கதவை திறந்தவளுக்கு அதிர்ச்சி தான்.

அங்கே நின்றது இசையே.

அதிர்ந்த முகத்தோடு அவனையே நோக்கியபடி இருந்த இனியாவை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்த இசை ஒய்யாரமாக இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

” யார் நீங்க ?” இசையை தெரிந்திருந்தாலும் தெரியாதவாறே காட்டிக்கொண்டாள்.

” ஹோ , உனக்கு என்னை தெரியாதுல நான் தான் இசை மாறாவோட காதலி வருங்கால மனைவி ” என பெருமிதமாய் கூற இனியாவின் தலையில் இடி தாக்கியது போல் இருந்தது.

” என்ன ?”

” இங்க பாரு நான் சுத்தி வலைச்சி எல்லாம் பேச வரல நேராவே விஷயத்தை சொல்றேன் . நானும் மாறாவும் சின்சியரா காதலிக்கிறோம் எங்க வாழ்க்கையில இடைஞ்சல் பண்ணிகிட்டு இல்லாம எங்க வாழ்க்கையை விட்டு போக பாரு. அவருக்கு என்னோட சந்தோஷமா வாழணும்னு ஆசை ஆனா அதுக்கு தடையா நீ இருக்க ” இவளது பேச்சுக்கள் யாவும் இனியாவை அகத்தினுள் உடையவைத்தது.

இது போல் என்றேனும் ஒரு நாள்  வரும் என்று அவளுக்கு முன்னே தெரியும் தான் இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் நேரம் எமனையே சந்தித்தது போலான ஓர் உணர்வு அவளுள்!

” என்ன நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு அமைதியா இருந்தா எப்படி ?”

விரக்தியான புன்னகை புரிந்த இனியா ,” நான் போறேன் ஆனா என்னோட தரு என்னைக்குமே என்னை விட்டு கொடுக்க மாட்டார். உண்மைன்னு ஒன்னும் நிஜம்னு ஒன்னும் நம்ம வாழ்க்கையில இருக்கு அது வெளிச்சத்துக்கு வரும்போது எல்லாமே மாறும். என் காதல் உண்மையானது மட்டுமல்ல தூய்மையானதும் கூட அது என் தருவை என்கிட்ட சேர்பிக்கும்னு நம்புறேன் “

” குட் ஜோக் இனியா. ஆனா ஒன்னு தெரிஞ்சிக்கோ நீயோ நானோ அவரை காதலிக்கிறது முக்கியமில்லை அவர் இப்போ யாரை காதலிக்கிறாங்கன்றது தான் விஷயமே ” என்று சொன்னவள் ” சீக்கிரமா கிளம்பப்பாரு .பெட்டர் லக் ஃபார் நெக்ஸ்ட் இன்கர்னேஷன் ( ஜென்மம்) பேபி” சொல்லிச் சென்றாள்.

அவள் அணைத்திருந்த தலைகாணிக்கு மட்டுமே தெரியும் அவள் சிந்தும் கண்ணீரின் வலி என்ன என்று .

இறுகணைத்தவாறே கண்ணீரில் கரைந்தவளை அவளது அழைப்பேசி அழைப்பு அழைத்தது.

முதலில் எடுக்காதவள் அடுத்தடுத்து வந்த அழைப்பை பார்த்தவள் ,தந்தை என்றதும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு அவருக்கு அழைத்தாள்.

” ப்பா, என்ன இத்தன தடவை கூப்பிட்டு இருக்கீங்க?”

” அம்மு மா ” அவரது குரலிலே ஒரு வித கவலை தென்பட,

” என்னாச்சி பா , யாருக்கும் ஏதும் பிரச்சனை இல்லையே “

” பிரச்சினை இல்லமா ஆனா சுமதி அக்காவுக்கு தான் உடம்பு சரியில்லை ” என்றதும் இனியாவால் தாங்கவே முடியல்லை.

சின்ன வயதிலிருந்து ஒரு தாயாய் இருந்து தன்னை அத்தனை ஷ்ரத்தையோடு பார்த்து கொண்டவர் , அவருக்கு உடம்பு சரியில்லை என்றதும் மனம் கவலை கொண்டது.

” சுமதிமாக்கு என்னாச்சு பா ?” சற்று கவலை படிந்த குரலோடு வினவ

” வீட்டுக்கு கிளம்புறேன்னு சொன்னவுங்க அப்படியே நெஞ்சை பிடிச்சுட்டு மயங்கி விழுந்துட்டாங்க அம்மு ஹாஸ்பிடல்ல சேர்திருக்கோம் ட்ரீட்மெண்ட் நடந்துட்டு இருக்கு “

” ப்பா நான் உடனே கிளம்பி அங்க ஊருக்கு வரேன் . சுமதிமாக்கு ஒன்னும் ஆகாதுல ” கண்ணீருடன் கேட்கவே தந்தையாக அவள் கூட இருந்து ஆறுதல் சொல்ல முடியா நிலையை எண்ணி வருந்தினார்.

” அவுங்களுக்கு ஒன்னும் ஆகாது டா நீ பயப்படாத மாப்பிள்ளை கிட்ட சொல்லி அவர் கூட வா “

” சரிங்க ப்பா ” என்றவள் மொபைலை வைத்து விட்டு துணிகளை அடுக்க துவங்கினாள்.

இங்கே கோபமே உருவமாய் வீட்டிற்கு வந்த வெற்றிக்கு கிடைத்தது என்னவோ பெட்டியை அறையிலிருந்து இழுத்து வந்த இனியா தான்.

‘ எவ்வளவு தைரியம் இருந்தா இவ இப்படி ஒரு காரியத்தை செய்ய துணிஞ்சிருப்பா ‘ ஆத்திரமாக வந்தது கணவனுக்கு.

கணவனுக்கு மனைவியின் நோக்கம் புரியவுமில்லை தெரியவும் வாய்ப்பில்லை.

“என்ன கிளம்பிட்ட போல ” எகத்தாளமாக கணவன் கேட்க , அது புரியா பேதையோ ” ஆமா தரு நான் போயே ஆகனும் . உங்களுக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சா என்ன ?” சொன்னதன் அர்த்தமும் வேறே , கேட்டவன் புரிந்து கொண்ட அர்த்தமும் வேறே.

இருவரும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டு பேசினர்.

” விட்டுட்டு போறதுன்னா மட்டும் உனக்கு எங்க இருந்து அத்தனை வேகம் வருது இனியா ” ஆவேசமாய் அவன் குரலுயர்த்தி கேட்கவே , இல்லாள் புரியாது விழித்தாள்.

” என்ன எதுவுமே புரியாத மாதிரி நடிக்கிற ? ஹோ , உனக்கு நடிக்கிறது என்ன புதுசா சொல்லு . நான் தான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்சும் நீ அழகா நடிச்சு என்னை ஏமாத்தினவ தானே ” இனியாவிற்கு அவன் சொல்ல வருவது புரியவில்லை என்றாலும் குத்தி காட்டி பேசுவது நன்றாகவே புரிந்தது.

” யாரு ஏமாத்தினவ நானா நைஸ் ஜோக் மிஸ்டர். இனியா சாரி சாரி வருங்கால மிஸ்டர். இசை . ஆனா உங்க காமெடிக்கு நான் சிரிக்கிற நிலையில இல்ல. நான் கிளம்பணும் ” சிறு கோபத்தை தத்டெத்திருந்தது அவள் குரல்.

” வார்த்தையை விட்டு வாங்கி கட்டிக்காத இனியா. நீ எங்கேயும் போக கூடாது அவ்வளவு தான் ” விடாப்பிடியாக அவன் நிலையில் நிற்க

“நான் போயே ஆகனும் வெற்றி “

” உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா இனியா. நீ போக கூடாதுன்னா கூடாது தான் . அப்புறம் நான் இசையை பத்தி உன்கிட்ட பேசணும்”

” வெற்றி வீணா விதண்டாவாதம் பண்ணாதீங்க . அதான் உங்க காதலியே வந்து என்னை வீட்டை விட்டு போக சொல்லிட்டாங்களே அப்புறம் என்ன “

” நான் என்ன சொல்ல வரேன்னு கேக்குறியா கொஞ்சம் ” கோபத்தில் குரலுயர்த்த

” நான் எதையும் கேக்கவும் வேணாம் தெரிஞ்சிக்கவும் வேணாம். கேக்க வேண்டிய எல்லாத்தையும் கேட்டாச்சி ” அவளுமே அவனுக்கு நிகராய் குரலுயர்த்தினாள்.

” இனியா ஏதும் தெரியாம பேசாத பின்னாடி நீ வருத்தப்பட வேண்டி வரும் ” எச்சரிக்கை விடுத்தான் வெற்றி.

” நான் எதுக்கு பின்னாடி வருத்தப்படணும் இப்பவே வருத்தப்பட்டுடு தான் இருக்கேன் உங்களை கல்யாணம் பண்ணதுனால ” அதிவேகமாக அவளும் அவனை எதிர்த்து பேசினாள்.

கணவனும் மனைவியும் உனக்கு நான் நிகரில்லை என்பது போல் வார்த்தைகளால் ஒருவரையொருவர் சாடினர்.

” வார்த்தையை விடாத இனியா “

” நீங்க பண்ற தப்பை உங்ககிட்டயே எடுத்து சொன்னா அது கசக்குதோ. தப்பு பண்ணிட்டீங்க வெற்றி “

” இனியா ” கோபத்தில் பற்களை நறுநறுத்தான் வெற்றி.

“என் பேரை சொல்லி கூப்பிட கூட உங்களுக்கு தகுதி இல்லை ” ஆட்காட்டி விரல் நீட்டி பேச

” எது தகுதி உன்னோட புருஷனை வேற ஒருத்திக்கு வச்சிக்கோங்கன்னு விட்டு கொடுத்திட்டு வந்தியே அது தான் ஒரு பொண்டாட்டிக்குறிய நல்ல தகுதியா ” அவளை மீண்டும் குத்திக்காட்டி பேச

” பொண்டாட்டி இருக்கும்போதே இன்னொரு பொண்ணு கூட சுத்துற நீங்க நல்லவுங்க இல்லை. அடுத்தவுங்க பொருளுக்கு நான் என்னைக்கும் ஆசைப்படவே மாட்டேன் வெற்றி “

” அண்ட் ஒன் மோர் திங்க் நீங்க தகுதியை பத்தி பேசாதீங்க கல்யாணம் வேண்டான்ற ஒரு காரணத்துக்காக நீங்களும் என்னோட அம்மாவும் சேர்ந்து என்னை ஏலம் விட்டவுங்க தானே. எத்தனை லட்சம் கொடுத்தாங்க அவுங்க ” அவள் எதுவும் அறியாது குத்திக்காட்டி பேசவும் இதுவரை யாரையும் அடித்திறாத வெற்றி பளாரென்று அவளை அறைந்திருந்தான்.

அவன் அடித்ததில் கீழே விழுந்த இனியா கன்னத்தை தாங்கி இருந்தாள்.

” அறிவுன்னு ஒன்னு இருக்கா இல்லையா உனக்கு எதுவும் முழுசா தெரிஞ்சிக்க மாட்டியா நீ , அரைகுறையா தெரிஞ்சிக்கிட்டு பேசுறது. உன்கூட போய் இத்தனை நாள் வாழ்ந்தேன்னு நினைக்கும் போதே அசிங்கமா இருக்கு ” அவனின் கோபம் உச்சத்தை தொட்டது.

கடினப்பட்டு எழுந்த இனியா ,” உங்களோட காதலிக்காக என்னைய அடிச்சிட்டீங்கள ” என்று சொல்லும் போதே கணவனுக்கு இன்னும் ஆத்திரம் மேலோங்கியது.

” என் கண்ணு முன்னாடி நிக்காத வெளிய போடி ” என்றவன் இருக்கையில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டான்.

கண்ணீரோடு அவனை ஏறிட்டு பார்த்த அவனின் சில்வண்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.

இருவருமே துணைவரை உயிருக்கு உயிராய் காதலிக்கின்றனர். காதலை செயலில் காட்டத்தெரிந்த அவர்களுக்கு சொல்லாய் சொல்ல தெரியவில்லை.

அதுவே இங்கே பிரச்சனையாக வந்து நிற்கிறது.

இருவருமே போட்டி போட்டு வாக்குவாதத்தில் வெற்றி பெறவே விரும்பினரே தவிர குடும்பம் என்பது ஒருவரது வெற்றியிலோ தோல்வியிலோ அல்ல ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதில் இருப்பது என்று யார் இவர்களுக்கு சொல்லி புரியவைப்பது.

காதல் இருந்தும் என்ன பயன் ஏதோ ஒரு விதத்தில் இருவருக்குள்ளும் அவநம்பிக்கை இருந்திருக்கிறது . அதனாலே தான் ஒருவருக்கு ஒருவர் காயப்படுத்தி கொள்கின்றனர்.

இருவரது சண்டையிலும் என்ன கிடைத்தது .வெற்றியா அல்லது தோல்வியா? வலி மட்டுமே மிஞ்சி இருந்தது.

ஒருமணி நேரமாய் , அதே இடத்தில் தலையில் கைவைத்த நிலையில் அமர்ந்திருந்த அவனின் செவிகளுக்கு மெதுவாய் இடியின் சத்தம் கேட்கவே தன்நிலை பெற்றான்.

அப்போது தான் சிந்தை கலைந்து நிகழ்வுக்கு வந்த வெற்றிக்கு இனியாவை அடித்தது நினைவிற்கு வந்தது.

‘அய்யோ! இப்படி அவளை அடித்துவிட்டேனே. பாவம் வலித்திருக்குமே’ அவன் முகத்தில் கவலை அப்பட்டமாக தெரிந்தது.

“இனியா “

” இனியா எங்க இருக்க? என்னை மன்னிச்சிடு டா” ஹாலில் இருந்தபடியே அழைத்து மன்னிப்பு கேட்க, அந்த இரவு நேரத்தில் அவனது குரலே அவனுக்கு எதிரொலித்தது.

எந்த ஒரு எதிர் குரலும் வராமல் போகவே தான் ,அவள் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றது நினைவு வந்தது.

‘அய்யோ சில் என்ன கஷ்டபடுறான்னு தெர்லயே நான் சொன்னேனா இவ போய்டுவாளா என்ன , அறிவேயில்லை ‘திட்டியபடி வண்டி சாவியை தேடலானான்.

அது கிடைக்கவும் உடனடியாக வண்டி சாவியை எடுத்து வெளியே வந்த நேரம் சாரலாய் மழைதுளிக்க தொடங்கியது.

அங்கே இங்கே என அவனுக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் தேடிய வெற்றிக்கு பயம் தொற்றிக் கொண்டது.

‘எங்கமா போன நீ ? என்கிட்ட சீக்கிரமா வந்துடு சில் ‘ புலம்பிவாறே அவளை தேடினான்.

சாரலாய் தொடங்கிய மழை இடியுடன் கொட்ட துவங்கியது.

இரண்டு மணி நேரத்திற்கும் மேல் தேடிய வெற்றி ‘ வீட்டிற்கு சென்றிருப்பாளோ ‘ என்ற நப்பாசையுடன் அப்பார்ட்மெண்டை அடைந்த நேரம் வெற்றிக்கு தூரமாய் இருந்த சிட்டௌட்டில் ஒரு உருவம் தெரிய வர வண்டியை அப்படியே போட்டுவிட்டு வேகமாய் ஓடினான் .

மூச்சு வாங்க ஓடிவந்த வெற்றி அவள் தோள்பட்டையை பிடித்து ” சில் ” என்றழைக்க அடுத்த நொடியே அவன் மீதே சரிந்து விழுந்தாள்.

பயந்த வெற்றி உடனே அவளை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தவன் அவளுக்கு உடையை மாற்றியதும் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றான்.

” சில் “

” இனியா இனியா எழும்பு டி ” கன்னத்தை தட்டி அழைக்க , அவளோ சயனமின்றி இருந்தாள்.

பயந்து போன வெற்றி அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை.

எழும்பாமல் இருந்து அவனை பயமுறுத்தி கொண்டு இருந்தாள் அவனின் சில்வண்டு. எப்போதும் போல் அவனை ஒருவழி செய்து கொண்டிருந்தாள்.

மனைவியின் நிலை மன்னவனை கவலைக் கொள்ள செய்ய , இல்லாள் அசையாமல் போகவும் அவளுக்கு தனது மூச்சை கொடுத்து அவளை விழிக்க வைக்க முயன்றான்.

முதல் இதழ் முத்தம் இருவருக்குள்ளும் ஆனால் அது இருவருக்கும் தெரியும் நிலையோ புரியும் நிலையோ இல்லை.

அப்போதும் அவள் அசைவின்றி இருக்கவே , உடனே கௌதமுக்கு அழைத்து விவரத்தை கூறிய வெற்றி மனையாளை தூக்கி கொண்டு காரில் மருத்துவமனை நோக்கி பயணித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!