MK!27

MK!27
மோகனங்கள் பேசுதடி!
மோகனம் 27
யாருக்கும் தெரியாமல் குன்னூர் வந்திறங்கிய நேத்ரா அங்கேயே ஒரு அறையெடுத்து தங்கி விஷ்வாவின் வீட்டினரை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.
மெதுமெதுவாக அந்த குடும்பத்தை பற்றி அறிந்தவள், அருவியின் குடும்பத்தை பற்றியும் சேர்த்தே தெரிந்து கொண்டாள்.
இதற்கிடையில் மதியின் மதிப்பெண்கள் வந்துவிட, நல்ல மதிப்பெணை பெற்றிருந்ததால் அவளை மருத்துவம் சேர்த்து விட்டான் விஷ்வா.
சந்திரா தான் சிறிது தயக்கத்துடன்,” அவளோ பெரிய படிப்பெல்லாம் வேணாமே தம்பி. இங்கேயே ஏதோ ஒரு காலேஜ்ல சேர்த்து விட்டிடலாம்” சொல்ல,
“என்ன அத்தை சொல்றீங்க, அருவி எப்போதும் சொல்லுவா மதி தான் அவளோட முதல் பொண்ணுன்னு. அருவிக்கு மதி பொண்ணுன்னா, அப்போ எனக்கும் அவ பொண்ணு தானே. என் பொண்ணுக்கு செய்றது என்னோட கடமை அத்தை அதை மறுக்க வேணாமே” விஷ்வா கூற, அதனை மறுக்கமுடியாத நிலையில் விஷ்வாவின் பொருட்டே விட்டுவிட்டார்.
விஷ்வா மற்றும் அருவியின் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் அழகாய் அதன் வழியில் காதலோடு பயணிக்க, இங்கு அருணின் வாழ்வில் சுழல் போல் சுழற்றியது.
காதலை சொல்லிவிட்டு சென்றவள் தான், அத்தோடு அவன் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை.
அதற்கு காரணம் அவனுக்கான இடைவெளியையும் யோசிக்கும் நேரத்தையும் கொடுக்க வேண்டும் என்று தான். அது புரியாத அருண் அவள் உண்மையிலே தன்னிடம் காதலை சொன்னாளா இல்லையென்றால் தன்னிடம் விளையான்டாளா என யோசித்து யோசித்தே முழு நேரமும் அவள் எண்ணத்திலே உழன்றான்.
இவனின் மனக்குமுறல்கள் எதுவும் இவனின் வேலையில் பாதிப்பை ஏற்படுத்தியதும் இல்லை, அதேசமயத்தில் அகல்விழியின் பாதுகாப்பையும் நிறுத்தவில்லை.
நாட்கள் அதன் போக்கில் செல்ல, விஷ்வா மற்றும் அருவிக்கு திருமணமாகி மூன்று மாதம் கடந்த நிலையில் இன்னும் தாலி பிரித்து கோர்க்காமல் இருக்க, மஞ்சுளாவிற்கு அந்த நிகழ்வை நடத்திட எண்ணி அதை குறித்து குடும்பத்தாரிடம் பேசவும் செய்தார்.
” உங்களுக்கு கல்யாணமாகி மூன்னு மாசத்துக்கு மேல ஆகிடுச்சி. இன்னும் தாலி பிரிச்சு கோர்க்காம இருக்கோம். அதனால ஒரு நல்ல நாளா பார்த்து அதை பண்ணலாம்னு யோசிக்குறேன். நீங்க எல்லாம் என்ன சொல்லறீங்க?”
“நீ சொல்றதும் சரி தான் மஞ்சு. இவங்க கல்யாணம் தான் எப்படியோ நடந்துடுச்சி, இதையாச்சும் சிறப்பா பண்ணனும்” கங்காதரனும் கூற, மஞ்சுளா அதனை ஏற்றுக்கொண்டார்.
“நாங்க பாட்டுக்கு பேசிட்டு இருக்கோம். நீங்க ரெண்டு பேரும் எதுவும் சொல்லாம இருந்தா எப்படி?” என விஷ்வா மற்றும் அருவியை பார்த்து மஞ்சு வினவிட,அருவியை தான் அந்த நொடி பார்த்தான் விஷ்வா.
அவளும் அவனை பார்க்க, இருவரது விழிகளும் பேசிக்கொண்டது.
“எனக்கு உங்களோட தயக்கம் புரியுது. அதுக்காக செய்யவேண்டிய சம்பிரதாயத்தை செய்யாம இருந்திட முடியாதே. இன்னும் காலம் எங்கேயோ இருக்கு. அடுத்தவங்க என்ன சொல்லுவாங்களோன்னு கடைசிவரை பயந்துட்டே வாழ முடியாதே மா. சும்மா நெருங்கிய சொந்தத்தை மட்டும் கூப்பிட்டு இதை செய்யலாம். பெரியவங்களோட ஆசிர்வாதமும் முக்கியமில்லையாப்பா ” என நீண்டதொரு சொற்பொழிவை கொடுத்தார் மஞ்சுளா.
வேறுவழியின்றி இருவரும் ஒருமனதோடு சம்மதித்தனர். இதுவே மஞ்சுளாவிற்கு போதுமானதாக இருக்க, அடுத்தநாளே அதற்கான வேலையில் இறங்கிவிட்டார்.
பெரிதாக ஏற்பாடுகள் செய்யவில்லை என்றாலும், நெருங்கிய சொந்தங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் மஞ்சுளா .
இன்னும் இரு தினங்களில் மாங்கல்யம் மாற்றும் வைபோகம் இருக்க, அருவிக்கு மனதோரம் ஒருவித நெருடல் இருந்தமையமாகவே இருந்தது.
எந்தவித சஞ்சலங்களும் இல்லாமல் இந்நிகழ்வு நடந்திட வேண்டுமென மனதோரமெண்ணினாள்.
இப்படியான மனநிலையை மாற்ற நினைத்து மாடிக்கு வந்தவள், அங்கே இருந்த சிறிய வகையான ஊஞ்சலில் அமர்ந்தாள்.
ஊஞ்சலில் அமர்ந்தவளின் கண்கள் அனிச்சையாய் மூடியது இதமான அந்த ஆட்டலில்.
விஷ்வா தான் மனைவியை தேடி மாடி வரைக்கும் வந்தவன், அருவி ஊஞ்சலில் அமர்ந்து விட்டத்தை நோக்குவதை பார்த்து அவளிடம் வந்தான்.
வந்தவன் மெதுவாக ஊஞ்சலை ஆட்டிட மெல்லிய புன்னகை அவளிதழோரத்தில்.
“நல்லா இருக்கு”
“என் பொண்டாட்டி இதை ரசிக்கிறானா காலம் பூரா ஆட்ட நான் தயார் தான்” காதலாய் மொழிய, கணவனை நினைத்து கர்வமாய் இருந்தது.
“ஏது காலம் பூராவா? இதை மட்டும் அம்மு கேட்டா நீங்க அவ்வளவு தான்” அவனை நிமிர்ந்து பார்க்க,
“அவ டாட்ஸ் லிட்டில் பிரின்சஸ் டி. நாம இந்த நேரத்துல இப்படி இருக்கோம்னா அதுக்கு என் ஜூனியர் தானே காரணம்” சொல்லி அவள் நெற்றியில் முத்தமொன்றை பதிக்க, இமைகள் இரண்டும் தானாகவே மூடிக்கொண்டது அருவிக்கு.
இத்தனை நேரம் மனதை போட்டு அறுத்து கொண்டிருந்த விடயங்களை எல்லாம் தூக்கி போட்டு விட்டு அந்த நொடி நேரத்தை ஆழ்ந்து அனுபவித்தாள்.
கணவனின் விரலோடு தன் விரல்களை மெல்ல கோரத்தவள், உற்றானை கண்ணில் நிரப்பினாள்.
இவர்கள் இவர்களது உலகத்தில் சஞ்சரிக்க, அதை கெடுக்கவென விஷ்வாவின் மொபைல் அடித்தது.
“ச்சை, நம்மளை கொஞ்ச நேரம் ரொமேன்ஸ் பண்ண விட்றாங்களா பாரு” புலம்பியப்படி அழைப்பை எடுத்தான்.
புதிய நம்பரிலிருந்து அழைப்பு வந்திருக்க யாராக இருக்கும் என்ற யோசனையிலே தான் அழைப்பை எடுத்தான்.
எடுத்த அடுத்த நொடியே,”விஷ்வாஆஆஆ…” என ஒரு பெண் ஆர்ப்பாட்டமாய் கத்தினாள்.
“யாரு நீங்க?” கேள்வியாய் வினவினான்.
“என்ன விஷ் என்னைய மறந்துட்டீயா” பொய்யான வருத்தத்தை குரலில் தேக்கி சொல்ல,
அந்த ‘விஷ்’ என்ற அழைப்பிலே இவனுக்கு அது யாரென்று தெரிந்து விட சலிப்பு தட்டியது.
“எதுக்கு கால் பண்ணிருக்க நேத்ரா?” வேண்டா வெறுப்பாய் கேட்க,
“உனக்கு எத்தனை ஆசையா நான் கால் பண்ணா நீ இப்படி பேசுறியே விஷ் பேபி”
“ஸ்டாப் காலிங் மீ தட் நேத்ரா” குரலில் அத்தனை கடுமை.
“சாரி…சாரி… உன்னை அப்படி கூப்பிட்டே பழகிட்டேன். இனி அப்படி கூப்பிடல போதுமா” உடனே தணிந்த குரலில் கூறி அவனை தணிய வைக்க பார்த்தாள்.
கணவன் யாரிடமோ கோபமாக பேசுகிறானோ என்றெண்ணி விஷ்வா பக்கம் வந்து யாரென்று கேட்க,
“ஃப்ரெண்ட் டி. இரு பேசிட்டு வரேன்”என்றவன் ,” எதுக்கு கால் பண்ணன்னு இன்னும் நீ சொல்லல நேத்ரா”
“அதுதான் அடுத்து சொல்ல வந்தேன். நாளைக்கு உன்னையும் உன் ஒய்ஃபையும் பார்க்க உங்க வீட்டு வரலாம்னு இருக்கேன். வந்து என்னை பிக்கப் பண்ணிக்க விஷ் ” நேத்ரா சொல்ல, எரிச்சலானது விஷ்வாவிற்கு. ஆனாலும் வருகிறவர்களை வராதே என்று சொல்லவா முடியும். சரியென்று வைத்துவிட்டான்.
அதனை அருவியிடமும் சொல்ல, வரட்டும் என்றாள்.
“அவக்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் அருவி. அவ ஒரு விஷப்பாம்பு “மனைவியை எச்சரிக்கை செய்ய,
“விடுங்க பார்த்துக்கலாம்”என்று முடித்துக்கொண்டாள்.
அடுத்தநாள் காலையிலே ஏனோ அப்போது தான் ஊருக்கு வந்தது போல் செட்டப் செய்தவள், விஷ்வாவிற்கு அழைத்து வந்துவிட்டதாக சொல்ல அவனும் அவளை கூப்பிட வந்துவிட்டான்.
விஷ்வாவை சில மாதங்களுக்கு பிறகு பார்ப்பதனால், அவனை அணைக்க கரங்கள் ஆசையாய் நீள, அவனோ தள்ளி நின்று கொண்டான்.
‘பார்ப்போம் இது இன்னும் எத்தனை நாளுக்குன்னு. எப்போ இருந்தாலும் நீ எனக்கு தான் விஷ் பேபி’ மனதில் நினைத்தவள் அமைதியாய் இருந்து கொண்டாள்.
வீட்டிற்கு வரும் வரையில் கூட விஷ்வா மொபைலில் யாரிடமோ பேசிய படியே வர , கடுப்பாய் இருந்தாலும் எதையும் வெளிகாட்டிக்கொள்ளவில்லை.
வீட்டிற்குள் வண்டி வரும் சத்தம் கேட்கவே, அருவி வெளியே வந்து வரவேற்றாள்.
“வாங்க… வாங்க…” அன்பொழுக வரவேற்க, முதலை புன்னகையை உதிர்த்தாள் நேத்ரா.
பின், குடும்ப நபர்களை எல்லாம் அறிமுகப்படுத்தி வைத்த விஷ்வா, அருவியிடம் பார்த்துக்கொள்ளும் படி சொல்லி விட்டு கிளம்பிவிட்டான்.
அதன்பின், அவளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்து சென்றவள் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு வந்துவிட்டாள்.
****
இங்கே பள்ளிக்கு வந்த விஷ்வா நேராக ரௌண்ட்ஸ் சென்று எல்லாம் சரிவர நடக்கிறதா என்று பார்வையிட்டு வந்தான்.
அப்படியே தன் மகளை முதல் முறை சந்தித்த இடத்திற்கு வந்தவன், அங்கேயே ஒரு இருக்கையில் அமர்ந்துவிட்டான்.
அன்று அவன் பூவினியை இங்கே சந்திக்காமல் இருந்திருந்தால், இன்று இவனின் வாழ்க்கையில் அருவியும் அவனின் இளவரசியும் இருந்திருக்க மாட்டார்கள். அவனின் வசந்தம் துவங்கிய இடமாகிற்றே, அதற்காகவே இவ்விடத்திற்கு தினமும் வந்துவிடுவான்.
அந்த நேரம் பார்த்து ஜீவா அழைத்திட, அதனை ஏற்றான்.
“என்ன ஜீவா நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சி?” எடுத்தவுடன் கேள்வி எழுப்ப,
“உங்க சந்தேகம் எல்லாம் சரி தான் அண்ணா. ஆனா அண்ணிக்கு ட்ரீட் பண்ண டாக்டர் இப்போ இங்க வேலை பாக்கல. சின்ன அண்ணி, பெரிய அண்ணியோட டிரீட்மென்ட் எல்லாம் ஒரே பீரியட் ஆஃவ் டைம்ல தான் நடந்திருக்கு அண்ணா. நான் அவங்க கொடுத்திருந்த ப்ரொபைலை செக் பண்ணா இப்போ அவங்க இங்க இல்ல. எனக்கு இன்னும் ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க அந்த டாக்டர் இருக்கிற இடத்தை டிரேஸ் செய்து உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்துருறேன்”
“உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறேனா டா தம்பி”
“யாரவது தம்பிகிட்ட இப்படி கேப்பாங்களா?அப்போ நீங்க என்ன தம்பியா நினைக்கவே இல்லையா?” சிறிது கோபத்துடனே கேட்க,
“சும்மா ஒரு பேச்சுக்கு தான் கேட்டேன் டா என் தங்க கம்பியே கோச்சிக்காத . சரி வேலையை முடிச்சிட்டு சீக்கிரமா இங்க வர பாரு. உடம்பை பார்த்துக்கோ டா” அக்கறையுடன் கூறி வைத்துவிட்டான்.
*****
இங்கே விழியின் வீட்டில் மூர்த்திக்காகவே வீட்டை சுத்தம் செய்து, அவருக்கு தேவைப்படும் பொருட்களை எல்லாம் அவர் கைக்கெட்டும் இடத்தில் வைத்தனர்.
அதில் அருவியின் முதல் திருமண புகைப்படமும் அம்முவின் ஆல்பமும் கிடைக்க, அதனையே சந்திரா பார்த்துக்கொண்டிருந்தார்.
அன்னை எதையோ பார்ப்பதை கண்டு அவரிடம் சென்ற விழி,” என்னத்தை ம்மா அப்படி பாத்துட்டு இருக்க?” என்றவள் அன்னை கையில் வைத்திருந்த புகைப்படத்தை பார்த்து பற்றிக்கொண்டு வந்தது.
“ம்மா இதை இன்னும்மா வச்சியிருக்க. இதை யாராவது பார்த்தா என்ன ஆகுறது. அக்கா மட்டும் இதை பார்த்தா அவ மனசு என்ன பாடுபடும் ” என்று அவரிடமிருந்து அதை வாங்கி விட்டாள்.
“நான் என்ன வேணும்னா இதை எடுத்து வச்சிருக்கேன். சுத்தப்படுத்தும்போது கிடைச்சுது டி. இதை எரிச்சிடனும், அப்புறம் இது அம்முவோட ஆல்பம் இதை உன் அக்காக்கிட்ட கொடுத்திடு” சொல்லி அந்த படத்தை வாங்கி பின்வாசலுக்கு வந்தவர், அங்கே தண்ணீர் வைப்பதற்காக இருந்த அடுப்பில் அப்படத்தை போட்டு எரித்துவிட்டார்.
அறைக்குள் இருந்த மூர்த்திக்கு இவர்கள் பேசுவது புரிய, மனதில் அந்த விக்ராந்தை திட்டிதீர்த்தார் .’ அவன் மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால் தனக்கு இந்த நிலையே வந்திருக்காது’ என அவனை கருவினார்.
அடுத்தநாள் காலையில் அகல்விழி கிளம்பும் நேரத்தில் அருண் அழைத்ததும், பார்த்த விழிக்கு ஆச்சரியம் தான்.
தான் காதலை சொன்ன நாளிலிருந்து இப்போது வரை அருணாக அழைத்தது இல்லை. இப்போது அழைக்கிறான் என்றால் எதாவது வேலை விடயமாக தான் இருக்கும் என்றெண்ணியே அழைப்பை எடுத்தாள்.
“சொல்லுங்க சார்!” என்க,
‘ஒரு ஹலோ கூட இல்ல’ நொடி நேர பொழுதில் அகல்விழியை மனதில் வைதான்.
“சார்! லைன்ல இருக்கீங்களா?”
“ம்ம்ம்.”
“எதுக்கு கால் பண்ணிருக்கீங்க, ஃபைல் ஏதும் எடுத்துட்டு வரணுமா சார்?” அவன் இதை தான் சொல்லுவான் என கணித்துக் கேட்க,
“அதே தான் அகல்விழி. ரொம்ப முக்கியமான ஃபைல் ஒன்னு வீட்டிலையே மறந்து வச்சிட்டு வந்துட்டேன். அம்மாட்ட சொல்லிட்டேன் அவங்க கிட்ட இருந்து வாங்கிட்டு வந்தா போதும். சரி நான் ஒரு க்லைன்டை பார்க்க வந்திருக்கேன் பாய்” சொல்லி தன் வேலை முடிந்தது போல் அழைப்பை துண்டித்து விட்டான்.
அருணின் செயலில் கட்டுப்பாய் வந்தாலும், இது வேலை சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் அருணின் வீட்டிற்கு கிளம்பினாள்.
இங்கே விஷ்வாவின் வீட்டில் பரபரப்பாக வேலைகள் அனைத்தும் நடந்து கொண்டிருக்க, மருமகளாக அருவி அனைத்தையும் முன்னிருந்து செய்து கொண்டிருந்தாள்.
அப்போது அங்கே வந்த மஞ்சுளா,” நீயே மா இந்த வேலை எல்லாத்தையும் செஞ்சிட்டு இருக்க? இதையெல்லாம் நாங்க பார்த்துக்க மாட்டோமா என்ன” அக்கறையுடன் கேட்ட மாமியாரை புன்னகையுடன் ஏறிட்டாள்.
“இதுல என்ன இருக்கு அத்தை. நீங்களும் எவ்வளவு வேலையை தான் பார்ப்பீங்க சொல்லுங்க. மாமாவையும் வேற நீங்க பார்த்துக்கணும். உங்களுக்கும் சிரமம் தானே”
“உங்க மாமா என்னை பார்த்தாலே தெரிச்சி ஓடுறாரு. இதுல எங்க நான் அவரை போய் பார்க்க. சரி நீ இந்த வேலையெல்லாம் விட்டுட்டு ஸ்கூலுக்கு கிளம்பி போ. இங்க நான் பார்த்துக்கிறேன்” வாஞ்சையுடன் சொல்ல,
“சரிங்க அத்தை…”என்று கூறி அவளது அறைக்கு சென்று கிளம்ப ஆரம்பித்தாள்.
அடுத்த அரைமணி நேரத்தில் கிளம்பி வந்த அருவி, மூவருக்குமான மதிய உணவை எடுத்துக்கொண்டவள் அத்தையிடம் சொல்லி கிளம்பும் நேரம் பார்த்து அங்கே அகல்விழி வருகை தந்தாள்.
“இந்த நேரத்தில இங்க என்ன பண்ணுற விழி, வேலைக்கு போகலையா?” அருவி கேட்க,
“ஒரு ஃபைல் எடுத்திட்டு வர சொன்னாரு. அதோட இங்க வரோம்ல அப்படியே அம்முவோட ஆல்பமை கொடுத்திட்டு போகலாம்னு வந்தேன்” என ஆல்பமை நீட்ட,
“அங்க டேபிள்ல வச்சிடு விழி. நான் வந்து சாய்ங்காலமா எடுத்து வச்சிக்கிறேன் ” என்றவள் நேரமாகவும் கிளம்பி விட்டாள்.
பின்னர் அகல்விழியும் அருவி சொன்னது போல் ஆல்பமை டேபிளில் வைத்தவள், அருண் எடுத்து வரச்சொன்ன ஃபைலை வாங்கி சென்றாள்.
இவையனைத்தையும் நேத்ரா மேலிருந்து அவள் அறையில் கவனித்து கொண்டிருந்தாள்.
********
அனைத்து வேலைகளும் முடிய மாலையாகிவிட, சோர்ந்து போன முகத்துடன் சோஃபாவில் அமர்ந்தார் மஞ்சுளா. அவருடன் கங்காதரனும்.
அப்போது தான் வீட்டிற்குள் வந்த அருவி, மகளை விஷ்வாவுடன் அறைக்கு அனுப்பிவிட்டு அத்தையிடம் வந்தாள்.
“என்ன அத்தை அதிக வேலையா இருங்க ரெண்டு பேருக்கும் நான் ஜூஸ் போட்டு கொண்டு வரேன்”
“நீயே இப்போ தான் வீட்டுக்கு வந்திருக்க, உடனே வேலை செய்யனுமா என்ன” பரிவோடு சொல்ல,
“இதுல என்ன இருக்கு அத்தை. இருங்க நான் போய் ஜூஸ் போட்டு எடுத்திட்டு வரேன் “சொல்லி சமையலறைக்கு வந்துவிட்டாள்.
டேபிளில் ஆல்பம் இருப்பதை கண்ட கங்காதரன் அதனை எடுத்து பார்க்க,” நம்ம அம்முவோட சின்ன வயசு ஆல்பமா” சொல்லி மனைவியுடன் சேர்ந்து அதனை பார்க்க தொடங்கினார்.
“ஏங்க இந்த கிருஷ்ணர் வேஷம் போட்ட ஃபோட்டோவை பார்த்தா நம்ம அருணோட சின்ன வயசு ஞாபகத்துக்கு வருதுங்க. அருண் சின்ன வயசுல இப்படி தான் இருந்தான். அதே மாதிரி இவளும் இருக்கா பாருங்களேன்” என ஒரு புகைப்படத்தை சுட்டிக்காட்டி மஞ்சுளா சொல்ல,
“அப்படியா சொல்ற, எனக்கு அப்படி ஒன்னும் தெர்லயே மஞ்சு. நீ அருணையே நினைச்சிட்டு இருக்கிறதால அப்படி தெரியுமா இருக்கும்” கங்காதரன் சொல்ல,
“அப்படியா சொல்றீங்க? ஆனாலும் இதை பார்த்ததும் நம்ம பசங்க பண்ண சேட்டையெல்லாம் ஞாபகத்திற்கு வருது” சிரித்தப்படி சொல்லிவிட்டு மற்றைய படத்தை பார்க்க தொடங்கிவிட்டார்.
ஆனால் அத்தைக்கும் மாமாவும் ஜூஸ் கொடுக்கவென்று வந்த அருவி இதனை கேட்டு ஆடித்தான் போனாள்.
அவள் வாழ்வில் சுழல் இல்லாமலே சூறாவளி அடிக்கத்தொடங்கியது.