Mogavalai – 10

coverpic_mogavalai-69575b68

Mogavalai – 10

அத்தியாயம் – 10

பல கேள்விகள் ஆர்த்தியின் மனதில் தோன்றப் பதில் தெரியாமல் அவள் கண்கள் கண்ணீரைச் சொரிந்தது.

தண்ணீர் திறந்திருக்க, அவள் கண்ணீரும் தண்ணீரோடு கலந்து. கண்ணீர் வறண்டு போக, தண்ணீரும் வறண்டு போக தன் குளியலை முடித்துவிட்டு வெளியே வந்தாள் ஆர்த்தி. இது எதுவும் தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தான் ராகவ்.

தாயின் அறைக்குச் சென்று தன் குழந்தைகளைப் பார்த்தாள். மீரா ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். குழந்தை  ரதி அழப்போகும் நிலையை உணர்த்துவது போல் தன் உடலை முறுக்கிக் கொண்டிருந்தாள்.

ரதியைத் தூக்கிக் கொண்டு, அவள் அறைக்கு வந்து படுத்துக் கொண்டாள் ஆர்த்தி. தூக்கம் வரவில்லை.

குழந்தை ரதி பாலைக் குடித்துவிட்டு, தன் பொக்கை வாயைத் திறந்து தன் தாயைப் பார்த்துச் சிரித்தாள்.

‘நான் சிறந்த பெண்ணா? நான் சிறந்த மனைவியா? அப்படியெல்லாம் தெரியவில்லை. ஆனால், ஒரு நல்ல அம்மா தான்.’ என்று குழந்தை ரதியின் சிரிப்பைப் பார்த்து சற்று ஆசுவாசப்பட்டுக் கண்ணுறங்கினாள் ஆர்த்தி.

மறுநாள் காலையில், ராகவ் கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்தான்.

நேற்று நடந்து அவனுக்குப் பெரிதாக ஞாபகம் இல்லை. தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.

பார்வதி பேசியதும், ஆர்த்தியின் மௌனமும் நினைவுக்கு வந்தது. அவன் மனதில் கோபம் குடிகொண்டது. தொடர்ந்து வேகமாக பைக் ஒட்டியதும், ஆட்டோக்காரனிடம் சண்டை வளர்ந்ததும் நினைவு வர, ‘எல்லாம் இந்த வீட்டு பொம்பளைங்கனால…’ என்று எளிதாகத் தவற்றை அவர்கள் பக்கம் திருப்பினான் ராகவ்.

“நான் எப்பயாவது தான் குடிப்பேன். அதுவும் கொஞ்சம் தான். இப்ப வீட்டில் நிம்மதி இல்லை. அடிக்கடி குடிக்க ஆரம்பிச்சிட்டேன்.” சத்தமாகப் புலம்பினான் ராகவ்.

அறைக்குள் நுழைந்த ஆர்த்தி, அவன் பேசியது காதில் விழுந்தும் விழாதது போல் நடந்து கொண்டாள்.

ஆர்த்தியின் மௌனமான ஒதுக்கம், ராகவின் சினத்தைக் கிளப்பியது, ‘திமிர்…’ என்ற எண்ணத்தோடு, “என் குழந்தை எங்க?” என்று தெனாவட்டாக  வந்து விழுந்தது ராகவின் கேள்வி, ‘என்!’ என்ற சொல்லில் அழுத்தம் கொடுத்து.

அந்த, ‘என் குழந்தை.’ என்ற சொல்லில் அடிபட்டு ஆர்த்தி அவனைக் கூர்மையாகப் பார்த்தாள். ‘இது என்னைப் பேச வைக்கும் முயற்சி. சண்டை இழுக்கும் முயற்சி. கேட்டால், நான் மீராவை சொன்னேன். நீ தான் தப்பா யோசிக்குறன்னு, பிரச்சனையை என் பக்கமே திருப்புவான்.’ என்று எண்ணிக்கொண்டு, “நேத்து குடிச்சிருக்கீங்க… குளிச்சிட்டுக் குழந்தைகளைக் கொஞ்சுங்க.” என்று பொத்தம் பொதுவாகக்  கூறிவிட்டு தன் வேலைகளைத் தொடர்ந்தாள் ஆர்த்தி.

“இந்த வீட்டில் குழந்தையைக்  கொஞ்சக் கூட ஆயிரம் இடைஞ்சல்…” என்று ராகவும் பொத்தம் பொதுவாக இரு பொருள்படப் பேசிவிட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

ராகவ் ஆர்த்திக்கும் இடையிலான  பேச்சு வார்த்தைகள் குறைந்திருந்தது. ஆர்த்தியின் கோபத்தின் விளைவாக, ராகவ் அடிக்கடி  மது அருந்தவில்லை.

முன்பு போல் என்றாவது ஒரு நாள்… அதுவும்  அளவு அதிகமாகாமல் பார்த்துக் கொண்டான்.

மீராவைப் பற்றிப் பேச்சு எழாமல் பார்த்துக்கொண்டார் பார்வதி.

‘எந்த விதத்திலும் சண்டை வந்திடக் கூடாது. ஆர்த்தியின் வாழ்க்கை சிக்கலாகிற கூடாது.’ என்ற சிந்தனையோடு, மிகவும் பதமாக நடந்து கொண்டார் பார்வதி.

ஆர்த்தி  மகப்பேறு விடுப்பு முடிந்து வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். “மீராவை ஸ்கூல்ல  விட்டுவிட்டு ஆபீஸ் போவோம்.” என்று ராகவ் கூற சம்மதமாகத் தலை அசைத்து மீராவோடுக் கிளம்பினாள் ஆர்த்தி.

இருவரும் அலுவலகத்திற்கு செல்ல, ஆர்த்தி அவள் வேலையில் மூழ்கினாள்.

அலுவலகத்தில் ராகவின் புதிய நட்பு, ஆர்த்தியைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. ‘இந்த ஆபிசுக்கு வந்ததிலிருந்து என்கிட்டே தான் நெருக்கமா இருப்பாங்க. சேர்ந்தே வருவோம். சேர்ந்தே போவோம். நான் லீவில் போன இந்த நாள்ல தான் இவங்க நட்பா? இவர்களோடு சேர்ந்து தான் அடிக்கடி குடிக்கறாங்களோ?’ என்ற கேள்வி தோன்ற அவளால் கவனத்தை வேலையில் செலுத்த முடியவில்லை.

கூட்டமாக ராகவின் அறையிலிருந்து ஒரு சிலர் பேசியபடியே, சிரித்துக் கொண்டே வெளிய வர, அவர்களைக் கவனித்தாள் ஆர்த்தி.

அவர்கள் பேச்சு சந்தேகத்தைக் கிளப்ப, வேகமாகக் கோபமாக ராகவின் அறைக்குள் சென்றாள்.

சில நாட்களாக இல்லாத சண்டை, அதுவும் மனைவி தன்னைத் தேடி வந்ததில் மகிழ்ச்சி, என முகத்தில் புன்னகையோடு, “வா ஆர்த்தி…” என்று அவளை வரவேற்றான் ராகவ்.

அழகு, கம்பீரம், கட்டுக்கோப்பான உடம்பு  என அனைத்தும் இருந்தாலும் குடி அவனிடம் கொஞ்சம் தளர்வை ஏற்படுத்தி இருந்தது.

அதை ஆலோசித்தப்படி, “இவங்க தான் உங்க புது நட்பா? இவங்களோடு தான் குடிக்கறீங்களா?” என்று நேரடியாகக் கேள்வியோடு நின்றாள் ஆர்த்தி.

அவன் மகிழ்ச்சி கோபமாக மாறி, “ஆர்த்தி… நான் சீனியர் மேனேஜர். நீ மேனேஜர். அதைத் தவிர இங்க பேச ஒண்ணுமில்லை.” என்று வெட்டித் தெறித்தார் போல் கூறினான் ராகவ்.

அவன் பேச்சை சட்டை செய்யாமல், “இன்னைக்கி நீங்க அவங்களோட குடிக்கப் போகக் கூடாது.” என்று அழுத்தமாகப் பிடிவாதமாகக் கூறினாள் ஆர்த்தி.

“மிசஸ்.ஆர்த்தி ராகவ் உங்க அதிகாரத்தை வீட்டோட நிறுத்திக்கோங்க. இங்க இல்லை. ரதி பிறந்ததும் ட்ரீட் கேட்டாங்க. நான் நீ ஜாயின் பண்ணதும் தரேன்னு சொல்லிருந்தேன். நான் போறேன். டாட்.” என்று ராகவ் கூற, அவனைக் கையாலாகாதத் தனத்தோடுப் பார்த்தாள் ஆர்த்தி.

கதையின் நாயகன், திரைப்படத்தின் நாயகன் போல் இருந்த அவன் அழுத்தம், பிடிவாதம், ஆர்த்தியைக் கவர்ந்த அதே அழுத்தம், பிடிவாதம் அவள் வாழ்க்கையைப் புதை குழியில் தள்ளுவதை உணர்ந்தாள் ஆர்த்தி.

‘சில விஷயங்கள் தள்ளி இருந்து பார்க்கும் பொழுது தான் அழகாக இருக்குமோ?’ என்ற கேள்வி ஆர்த்தியின் மனதில் எழுந்தது.

‘உனக்கு வந்த விதிக்கு நான் என்ன செய்வேன்?’ என்பது போல் அவன் வேலையில் மூழ்கிவிட்டான் ராகவ்.

‘ராகவுக்கு என் மேல் பாசம் உண்டு. ஆனால்…’ என்ற குழப்பத்தோடு ஆர்த்தி அறையை விட்டு வெளியேறினாள்.

ஆர்த்தியின் பேச்சுக்கு மரியாதை இல்லை. ராகவ், ஆர்த்தி இருவரும் வேலை முடிந்து வீடு திரும்பினர்.

‘குடிப்பழக்கம் தொடர் பழக்கமாக மாறிவிடுமோ?’  என்ற எண்ணம் தோன்ற ஆர்த்தி கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கச் சண்டை வளர்ந்தது.

‘இவள் யார் என்னைக் கட்டுப்படுத்த?’ என்ற வெறியோடு பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான் ராகவ்.

அவன் பைக்கை கிளப்பிய விதத்தை வாசலில் நின்று பார்த்தாள் ஆர்த்தி. ‘ஸ்டைல்…’ என்று சிந்திக்கும் ஆர்த்தியின் மூளை இன்று ஆபத்து என்று எச்சரிக்கை மணி அடித்தது.

‘இப்படி பைக் ஒட்டலைன்னு யார் அழுதா?’ என்ற சலிப்போடு வீட்டிற்குள் சென்றாள் ஆர்த்தி.

நண்பர்கோளடு பேசிக் கொண்டே அவன் மதுவின் அளவு கூடிக்கொண்டே போனது. அத்தோடு ராகவின் பிடிவாதமும்.

‘நான் என்ன பொண்டாட்டி தாசனா? இவ சொல்றதை எல்லாம் கேட்டு ஆடுறதுக்கு?’ என்ற கேள்வியோடு அவன் போதை ஏறிக் கொண்டே போக, அவன் அறிவு மழுங்கிக் கொண்டே போனது.

மது எல்லை மீறியதால், அதீத தள்ளாட்டத்தோடு நடந்தான் ராகவ்.

‘என்னால் வண்டி ஓட்ட முடியாது. இன்னைக்கு கொஞ்சம் எல்லை மீறிட்டோம்.’ என்ற எச்சரிக்கை உணர்வு தோன்ற, ‘பைக்கை நாளைக்கி எடுத்துக்கலாம்.’ என்ற முடிவோடு வீட்டிற்கு நடந்து  செல்ல ஆரம்பித்தான்.

சாலையில், இருள் சூழ்ந்திருந்தது. எதோ சலசலத்தபடி நடந்து கொண்டிருந்தான் ராகவ்.

ராகவ் எதோ ஒரு அனுமானத்தில் நடந்து கொண்டே இருக்க, திடீரென்று நடக்க முடியமால் அவன் கால் எதிலோ சிக்கி கொண்டது.

“ஐயோ… ஐயோ…” என்று கத்தினான் ராகவ். “அம்மா… ” என்று அலறினான்.

ராகவ் கீழே விழுந்திருந்த இடத்தை நெருங்க,  ராகவிடமிருந்து வந்த போதையின் நெடியில், “குடிச்சிட்டு இப்படி விழுந்து கிடக்க வேண்டியது.” என்று முணுமுணுத்துக் கொண்டே அவனைக் கடந்து சென்றனர்.

நேரம் செல்ல செல்ல, ராகவின் ஒரு கால் குழிக்குள் இறங்க ஆரம்பித்தது. ராகவ் வலி தாங்காமல் கதறினான். அவன் மூளை செய்வதறியாமல் தவித்தது.

வலி அதிகமாக அதிகமாகப் போதை சற்று இறங்க, தன் அலைபேசியைச் சட்டைப் பையில் துழாவினான் ராகவ். அதற்குள் அவன் ஒரு கால் முழுதாக குழிக்குள் இறங்கி ஒரு கால் அந்தரத்தில் தொங்கியது.

அலைபேசியை விட, உயிரைக் காப்பாற்றுவது முக்கியம் எனத் தோன்ற தன் கைகளைத் தரையில் ஊன்றினான் ராகவ்.

எதோ சாலை பணிக்காகத் தோண்டிவிட்டு மூடாமல் சென்றப் பணியாட்களை வலியில் திட்டினான் ராகவ்.

அழுத்தம் கொடுக்க கொடுக்க, அவன் இடது கையில் வலி அதிகமாகியது. அலைபேசியில் ஆர்த்தியின் அழைப்பு வந்து கொண்டே இருந்தது.

ஆர்த்தியின் அழைப்பு தான் என்று தெரிந்தாலும், அவனால் பதில் அளிக்க முடியவில்லை.

ராகவின் போதை முற்றிலும் வடிந்து, தன் இயலாமையில், வலியில் அவன் கண்களில் கண்ணீர் வடிந்தது.

அவன் பிடிவாதம் தளர்ந்து, ‘நான் ஆர்த்தி சொன்னதைக் கேட்டிருக்கணும். குடித்திருக்கக் கூடாது.’ என்று  காலம் தாழ்ந்து யோசித்தான் ராகவ். அந்த நேரத்தில், அந்த சாலையில் ஜனநடமாட்டமும் குறைந்திருந்து. இப்பொழுது அவனைக் கவனிக்கவும் ஆளில்லை.

பல நிமிடங்களுக்குப்  பின் யாரோ இருவர் வர, இவன் கோலத்தைப் பார்த்து நிலைமையின் வீரியத்தைப் புரிந்து ராகவுக்கு உதவி செய்தனர்.

ராகவ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். ஆர்த்தி மருத்துவமனைக்கு, குழந்தைகளைத் தாயிடம் விட்டுவிட்டுத் தனியாக ஓடி வந்தாள். ராகவின் கோலம் அவளை அச்சுறுத்தியது. ராகவ் அவளைக் குற்ற உணர்ச்சியோடு பார்த்தான்.

பல மணி நேர சிகிச்சை நடந்தது. பணம் தண்ணீராகக் கரைந்தது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அவர்களது மொத்த சேமிப்பும் கரைந்தது.

பல நாட்களுக்குப் பின் ராகவ் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான். அவனால், நேராக நடக்க முடியவில்லை. நொண்டி நொண்டி நடந்து வந்தான். இடது கையையும் வேகமாக அசைக்க முடியவில்லை.

பார்வதி எதுவும் பேசாமல் மௌனமாக அவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்  அவர்களுக்கு உதவியாக!

பார்வதியின் முகத்தில் வேதனை  குடிகொண்டிருந்தது.

தன் தாயின் முகத்தைப் பார்த்த ஆர்த்தி, “அம்மா… எல்லாம் சரியாகிரும். பிஸியோதெரபிஸ்ட் கிட்டக் காட்ட சொல்லியிருக்காங்க. கொஞ்சம் செலவாகும்.” என்று மென்று விழுங்கினாள் ஆர்த்தி.

“எப்ப சரியாகும்? எவ்வுளவு செலவாகும்?” என்று பார்வதி கேள்வியாக நிறுத்தினார்.

ஆர்த்தி பதில் தெரியாத இந்தக் கேள்வியோடு, அவர்கள் அறைக்குள் நுழைந்தாள்.

அவர்கள் கட்டில் அருகே இருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தான் ராகவ்.

மொத்த அழகும் தொலைந்து, மருந்தின் வீரியத்தில் சற்றுக் கொடூரமாகவே காட்சி அளித்தான் ராகவ்.

அப்பொழுது நுழைந்த ஆர்த்தியிடம், “ரொம்ப அசிங்கமா இருக்கேன்ல?” என்று ராகவ் கேட்க, “அப்படி எல்லாம் இல்லை. எல்லாம் கொஞ்ச நாளில் சரியாகிரும்.” என்று ஆறுதலாகக் கூறினாள் ஆர்த்தி.

“நான் இப்படி இருக்கேன்னு என்னை விட்டுட்டுப் போயிருவியா?” ஏக்கமாகக் கேட்டான் ராகவ்.

அந்தக் கேள்வி ஆர்த்தியின் ஒவ்வொரு அணுவிலும் சாட்டையடியாக இறங்கியது.

‘ராகவிற்கு  அவள் பழைய வாழ்வின் பிரிவின் காரணம் தெரியாது. இது வரை அவன் ஒரு வாரத்தைக் கேட்டதில்லை. பழையவை, கடந்தவை மறக்கப்பட வேண்டியவை.’ என்று ராகவ் கூறுவது இப்பொழுதும் ஆர்த்தியின் காதில் ஒலித்தது.

‘ஏன் இப்படிக் கேட்கிறான்?’ என்று ஆர்த்தி பதட்டமாக அவனைப் பார்க்க, “நான் உனக்கு பாராமுன்னு விட்டுட்டுப் போயிருவியா? பதில் சொல்ல மாட்டேங்குற?” என்று ஏக்கத்தை விட்டுக் கோபமாகக் கேட்டான் ராகவ்.

அவன் உடல்நிலையின் வெளிப்பாடு, என்பதைப் புரிந்து கொண்டாள் ஆர்த்தி.

“உடல் நல்லா இல்லைன்னு யாரவது விட்டுட்டுப் போவாங்களா?” என்று அனுசரணையாகக் கேட்டுக் கொண்டே ராகவுக்குப் பணிவிடை செய்தாள் ஆர்த்தி.

‘ஏன் நீ விட்டுட்டுப் போகலையா?’ என்ற கேள்வியை அவள் மனசாட்சி எழுப்ப, ஆர்த்தியின் கைகள் பதட்டத்தில் நடுங்க ஆரம்பித்தது.

அவள் நடுக்கத்தைப் பார்த்து ராகவ் கேட்ட கேள்வி ஆர்த்தியைக் கொல்லாமல் கொன்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!