Mogavalai – 6

Mogavalai – 6
அத்தியாயம் – 6
ஆர்த்தி எழுந்து கொள்ள முயற்சிக்க, “அம்மா…” என்று மீரா அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
மீராவை அணைத்தபடி அவள் எழ, “ஆர்த்தி… குழந்தையை எங்க எடுத்துட்டுப் போற?” என்று கேட்டான் ராகவ்.
“அம்மா கிட்ட கொடுத்துட்டு வரேன்.” என்று ஆர்த்தி கூற, “அதெல்லாம் வேண்டாம். மீரா இங்க இருக்கட்டும்.” என்று ராகவ் பிடிவாதமாகக் கூறினான்.
“இல்லைங்க…” என்று ஆர்த்தி தடுமாற, “ஆர்த்தி… சொன்னதை கேளு. நீ அத்தை கிட்ட இப்ப குழந்தையை விட்டா, எதோ நான் தான் அனுப்ப சொன்ன மாதிரிப் பேசுவாங்க. எதுக்குத் தேவை இல்லாதப் பேச்சுக்கு இடம் கொடுக்கணும்?” என்று ராகவ் கேட்க, “நான் குளிக்கப் போகணும்.” என்று ஆர்த்தி தடுமாறினாள்.
“மீரா என் கிட்ட இருப்பா. நீ போ.” என்று ராகவ் ஆணையிட, ஆர்த்தி சம்மதமாகத் தலை அசைத்துக் குளிக்கச் சென்றாள்.
குழந்தை மீரா ராகவின் கைவைளவுக்குள் புகுந்து விளையாட ஆரம்பித்துவிட்டாள்.
ஆர்த்தி குளித்து முடித்து வர, முகத்தில் நீர் வழிய நின்று கொண்டிருந்த மனைவியை ரசனையோடுப் பார்த்தான் ராகவ்.
ஆர்த்தி புருவம் உயர்த்தி வினவ, குறுஞ் சிரிப்போடு மறுப்பாகத் தலை அசைத்தான்.
ஆர்த்தி குழந்தையைக் கையில் ஏந்திக் கொள்ள, ராகவ் குளித்து விட்டு அவசர அவசரமாக வெளியே கிளம்பினான்.
“எங்கே?” என்று ஆர்த்தி வினவ, பதில் கூறாமல் வெளியே சென்றுவிட்டான் ராகவ்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த பார்வதி, “பிடிவாத குணம் ஜாஸ்தி மாதிரி தெரியுது. பார்த்து நடந்துக்கோ.” என்று பார்வதி கூற, “அம்மா… மாப்பிள்ளைன்னு சொல்லுங்களேன்.” என்று ஆர்த்தி தன் காரியத்தில் கண்ணாகக் கேட்டாள்.
மீரா குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருக்க, “மீராவுக்கு இன்னும் பேச்சு வரலை. டாக்டர் கிட்ட போகணும். அடுத்த வாரம் அப்பாயின்ட்மென்ட்” என்று ஆர்த்தி பேசியதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் பேசினார் பார்வதி.
ஆர்த்தி தன் தாயின் பேச்சுக்கு ஆமோதிப்பாகத் தலை அசைக்க, வெளியே சென்ற ராகவ் உள்ளே நுழைந்து, கண்களால் ஆர்த்தியை அறைக்குள் அழைத்தான்.
ஆர்த்தி உள்ளே செல்ல, அவள் தலையில் மல்லிகை பூ சூடி, நெற்றியில் குங்குமமிட்டு அவளைப் பார்த்தான்.
“இப்ப போய் வேலையைப் பாரு.” என்று ராகவ் கூற, “சொல்லிட்டுப் போயிருக்கலாமில்ல?” என்று ஆர்த்தி முகத்தைத் திருப்ப, “எதை சொல்லணும், எதை சொல்லக் கூடாதுன்னு எனக்குத் தெரியும்.” என்று ராகவ் அழுத்தமாகக் கூற, அவனை சரேலென்று நிமிர்ந்துப் பார்த்தாள் ஆர்த்தி.
ராகவின் குரலிலிருந்த அழுத்தத்திற்கும், அவன் கண்களில் தெரிந்த குறுஞ்சிரிப்புக்கும் சம்பந்தம் இல்லாமல் போக, ஆர்த்தி தன்னை சுதாரித்துக் கொண்டு, “சொல்லிட்டுப் போயிருக்கலாம்.” என்று மெல்லிய குரலில் கூறிவிட்டுத் திரும்பினாள்.
திரும்பிய ஆர்த்தியின் கைகளைப் பற்றி, தன்பக்கம் இழுத்து, ஆர்த்தியின் கன்னத்தில் அவள் எதிர்பாராத நேரத்தில் இதழ் பதித்தான்.
ஆர்த்தி, இரு கண்களை விரித்து அவனை வெட்கத்தோடுப் பார்க்க, “இதையும் சொல்லிட்டுத் தான் செய்யணுமா?” என்று ஆர்த்தியின் காதில் கிசுகிசுக்க, ஆர்த்தி பதில் சொல்ல முடியாமல் தவிப்போடுத் தரையைப் பார்த்தாள்.
ஆர்த்தியின் சம்மதத்தில், அவனின் நெருக்கம் இன்னும் முன்னேற, “எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டுச் செய்ய முடியாது ஆர்த்தி. நான் சொன்னா சரியா இருக்கும். செய்தா சரியா இருக்கும்” என்று அவன் கைகள் எல்லை மீறிக் கொண்டே, லாவகமாகப் பேசிக்கொண்டே அவன் உறுதியை, அவன் செயல்களைச் சரி என்று பதிய வைத்தான் ராகவ்.
ஆர்த்தி வெட்கப் புன்னகையோடு வெளியே வர, பார்வதியின் கண்கள் தன் மகளை நோட்டமிட்டது.
நடப்பது எதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை என்றாலும், ‘தன் மகளின் இந்த வாழ்க்கையாவது நீடிக்க வேண்டும்.’ என்று ஒரு தாயாக அவர் உள்ளம் மனதார வேண்டியது.
ராகவ், ஆர்த்தியின் திருமண வாழ்க்கை மறுமணம் என்று சொன்னாலே ஒழிய யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி எந்த சிக்கலுமின்றி இனிதாக ஆரம்பித்தது.
மீரா அருகே இருக்கும் பள்ளிக்குச் செல்ல, பார்வதி மீராவைப் பார்த்துக் கொண்டார். பலரின் ஆலோசனையில் பள்ளிக்குச் சென்று விட்டால், பேச்சு வந்துவிடும் என்ற முடிவுக்கு வந்தனர்.
ஆர்த்தி, ராகவ் இருவரும் திருமணம் முடிந்து வேலைக்குச் செல்ல, அலுவலகத்தில் அனைவரின் கண்களும் இவர்களை வட்டமடித்து.
“நல்ல ஜோடி.” என்று பலர் கூறினாலும், ‘இருந்தாலும் ராகவ், குழந்தையோடு இருக்கிற பெண்ணை கல்யாணம் செய்திருக்க வேண்டாம்.’ என்றும் எண்ணத் தான் செய்தனர். நேரில் கூறும் தைரியம் யாருக்கும் வரவில்லை. இவர்களின் சிந்தனையோ, பேச்சோ ராகவ், ஆர்த்தியைப் பாதிக்கவில்லை.
சினிமா, பீச், மால் என்று அவர்கள் வாழ்க்கை அழகாகக் குதூகலமாக நகர ஆரம்பித்தது. ராகவ் புதிதாக அமைந்த குடும்ப வாழ்வில் சந்தோஷமாக இருந்தான். ‘தனக்கு ஒரு குடும்பம் அமைந்து விடாதா?’ என்ற அவன் ஏக்கத்தைத் துடைத்த ஆர்த்தியை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
தன் அழகிற்கும், அறிவுக்கும் ஈடு கொடுக்கும் கணவனைப் பற்றிய பெருமிதம் ஆர்த்தியை சந்தோஷத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றது.
‘தன் கற்பனை நாயகன் தான் ராகவ்.’ என்று அடிக்கடி எண்ணிக் கொள்வாள் ஆர்த்தி. ராகவோடு நடந்து செல்லும் பொழுது, அவளுள் தோன்றும் கர்வத்தை அவளால் மறைக்க முடியவில்லை. அந்தக் கர்வம் ஆர்த்தியை இன்னும் மெருகேற்றியது. அவளையும்… அவள் உடையையும்… அவள் பாவனையையும்…
பார்ப்பதற்கு திரைத்துறை நாயகன் போல்! கதையில் வர்ணிக்கும் கதாநாயகன் போல்… நல்ல உயரம், கேலி தொனிக்கும் நையாண்டிப் பேச்சு. ஆனால் அதிலும் ஓர் அழுத்தம், தான் நினைத்தை சாதிக்கும் பிடிவாதம் என அனைத்து குணங்களிலும் ராகவ் ஆர்த்தியைக் கவர்ந்து விட்டான்.
சில நேரங்களில் ஆர்த்தியின் எண்ணங்கள் தோற்பது போல் இருந்தாலும், ஆண்மையிடம் தோற்கும் அவள் பெண்மை அவன் ஆளுமையை ரசித்தது.
‘இவன் என் கணவன்.’ என்று ஆர்த்தியின் மனம் பூரித்தது. நாட்கள், மாதங்களாக இனிதாக நகர்ந்தன. வீடு, பணி என அனைத்திலும் அவர்கள் மனமொத்தத் தம்பதிகளாக வாழ ஆரம்பித்தனர். அன்று மாலை, ஆர்த்தி சோர்வாகக் காட்சி அளிக்க, “ஆர்த்தி என்ன ஆச்சு?” என்று கன அக்கறையாக விசாரித்தான் ராகவ்.
“மீரா ஸ்கூலுக்குப் போய்ட்டா பேச்சு வந்திரும்னு பார்த்தேன். ஆனா, அவ கொஞ்சம் கூடப் பேச ஆரம்பிச்ச மாதிரியே தெரியலை.” என்று ஆர்த்தி கூற, “கொஞ்சம் நாள் ஆனா பேசிருவா. வேணுமின்னா இதுக்குன்னு இருக்கிற ஸ்பெஷலிஸ்ட் கிட்ட கூட்டிட்டுப் போய் காண்பிப்போமா?” என்று ராகவ் கேட்கச் சம்மதமாகத் தலை அசைத்தாள் ஆர்த்தி.
இருவரும் மீராவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர்.
‘குடும்பத்தில் யாருக்கேனும் இந்தப் பிரச்சனை இருக்கிறதா?’ என்று தெரிந்து கொள்ளும் நோக்கோடு, மருத்துவர், ஆர்த்தியைப் பற்றி அவள் குழந்தைப் பருவத்தைப் பற்றி விசாரித்தார். அடுத்ததாக அவர் ராகவைப் பற்றி விசாரிக்க, “டாக்டர்! நான் குழந்தைக்கு அப்பா இல்லை.” என்று பளிச்சென்று கூறினான் ராகவ்.
ராகவ் கூறியது உண்மை என்றாலும், அந்த நேரடி நிராகரிப்பு ஆர்த்தியைத் தாக்க, சடாரென்று திரும்பிப் பார்த்தாள் ஆர்த்தி. “டாக்டர் கிட்ட எல்லாத்தையும் சொல்லிரனும் ஆர்த்தி.” என்று ராகவ் தன்மையாகக் கூற, அவன் கூற்றில் உள்ள எதார்தத்தைப் புரிந்து கொண்ட ஆர்த்தி, இயல்பு நிலைக்குத் திரும்பினாள்.
அவர் கேட்ட கேள்விக்குத் தனக்குத் தெரிந்த பதிலைக் கூற, அதைக் கேட்டுக்கொண்ட மருத்துவர் குழந்தையைப் பரிசோதிக்க ஆரம்பித்தார்.
பரிசோதனைக்கு பின், “ஒன்னும் பிரச்சனை இல்லை. இப்ப தானே ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சிருக்கா. கொஞ்சம் நாளான சரி ஆகிரும். ரொம்ப கார்ட்டூன் பார்க்க விடாதீங்க. நீங்க குழந்தை கிட்டப் பேசுங்க.” என்று அறிவுரை கூறி அனுப்பினார் மருத்துவர். ஆர்த்தி மீராவைத் தூக்கிக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தவளாக வீடு திரும்பினாள்.
“தேவை இல்லாமல் கவலைப் படாத ஆர்த்தி. எல்லாம் சரியாகிரும். மெடிக்கல் சயின்ஸ் எவ்வளவோ வளர்ந்திருச்சு.” என்று ராகவ் கூற ஆமோதிப்பாகத் தலை அசைத்தாள் ஆர்த்தி. வீட்டுக்கு வந்த அசதியில் ஆர்த்தி சோர்வாக நாற்காலியில் சாய்ந்தாள்.
பார்வதி மீராவை அழைத்துக் கொண்டு அவர் அறைக்குச் செல்ல, “ஆர்த்தி உடம்பு முடியலையா?” என்று அவள் தலை கோதினான் ராகவ். “அதெல்லாம் இல்லைங்க… சாப்பிட்டா சரியாகிரும்.” என்று ஆர்த்தி கூற, “நீ இரு. நான் எடுத்துட்டு வரேன்.” என்று கூறிக்கொண்டு சமையல் அறையிலிருந்து உணவைக் கொண்டுவந்துப் பரிமாற ஆரம்பித்தான் ராகவ்.
உணவின் வாசனை ஆர்த்தியைத் தீண்ட, அவளுக்குப் பிரட்டி கொண்டு வந்தது. உணவை மறுத்துவிட்டு அவர்கள் அறைக்குள் நுழைந்து கொண்டாள் ஆர்த்தி.
விஷயத்தைக் கணித்து விட்ட ராகவ், அவளை ஆர்வமாகப் பின் தொடர்ந்தான். “ஆர்த்தி….” என்று கூவிக்கொண்டு அவளைக் கைகளில் ஏந்தினான் ராகவ்.
‘நான் நினைப்பது சரியா?’ என்று அவன் தன் தலையை மேலும் கீழும் அசைக்க, ‘ஆம்…’ என்பது போல் மேலும் கீழும் தலை அசைத்தாள் ஆர்த்தி. ஆர்த்தியைச் சுவரில் சாய்த்து அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி, “தேங்க்ஸ்… தேங்க்ஸ்…” என்று உணர்ச்சிப் பெருக்கோடுக் கூறினான் ராகவ். ராகவ் எழுப்பிய சத்தத்தில், அவர்கள் அறையை நெருங்கிய பார்வதி, அவர்கள் நெருக்கத்தில் அவர்கள் வாசலுக்குச் சற்றுத் தொலைவிலே நின்று கொண்டார்.
“ஆர்த்தி… எனக்கு ஒரு குழந்தை. என் குழந்தை, என்னை அப்பான்னு கூப்பிட ஒரு குழந்தை.” என்று கண்கலங்க தன் உணர்வுகளை மட்டுப்படுத்த முடியாமல் பேச ஆரம்பித்தான் ராகவ். “எனக்கு அம்மா, அப்பா இல்லை. ஆனால், என் குழந்தை என் அரவணைப்பில் வளரணும். என் குழந்தைக்கு எல்லாமே பெஸ்ட்டா குடுக்கணும். நீயும் வேலை பார்க்குற, நானும் வேலை பார்க்குறேன்.. நம்மளால எல்லாமே பெஸ்ட்டா குடுக்க முடியும்.” என்று ராகவ் ஆர்வமாகக் கூற, அவன் கண்களில் தெரிந்த சந்தோஷத்தில் மயங்கி அவனை ரசித்தபடி சம்மதமாகத் தலை அசைத்தாள் ஆர்த்தி.
ராகவின் பேச்சில் பார்வதிக்கு எங்கோ சுருக்கென்றுத் தைத்தது. ‘ராகவின் ஆசை கனவு எல்லாம் தப்பில்லை தான். ஆனால், மீரா? இதுவரைக்கும் நல்லா தான் பார்த்துக்கிட்டாங்க. இனி இந்த நிலை நீடிக்குமா?’ என்று மறுக்க மறக்க நினைத்தாலும், இந்தக் கேள்வி பார்வதியை வண்டாகக் குடைய நிகழ் கால சந்தோஷத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் பார்வதி தவித்தார்
மீராவை அவர்கள் அறையின் வெளியே விட்டுவிட்டு அவர் அறைக்குள் நுழைந்துக் கொண்டார் பார்வதி. குழந்தை நடந்து சென்று ஆர்த்தியை நெருங்க, குழந்தையைத் தூக்கக் குனிந்தாள் ஆர்த்தி. “லூசா நீ? இந்த மாதிரி நேரத்தில் யாரவது வெயிட் தூக்குவாங்களா?” என்று ராகவ் ஆர்த்தியைக் கண்டிக்க, ஆர்த்தி மலங்க விழித்தாள்.
‘இன்னும் டாக்டர் கூட உறுதி பண்ணலை. அதுக்குள்ளே இத்தனை ஆர்பாட்டமா?’ என்று சலிப்போடு ஆர்த்தி ராகவைப் பார்த்தாள். ராகவோ ஆர்த்தியைக் கவனிக்கும் மனநிலையில் இல்லை. “மீரா குட்டிக்கு, தம்பி பாப்பாவோ… தங்கச்சி பாப்பாவோ வரப் போகுது.” என்று மீராவைத் தூக்கிக் கொண்டு அவளிடம் ராகவ் பேச, ராகவ் மீராவிடம் காட்டிய நெருக்கத்தில் ஆர்த்தியின் சலிப்பு மறைந்து புன்னகை தோன்றியது.
குடும்பத்தில் ஒவ்வொருவரும் அவரவர் எண்ண வலையில் தங்கள் வாழ்வில் பயணிக்க ஆரம்பித்தனர்.