Neer Parukum Thagangal 11.2

NeerPArukum 1-9c7f2fe4

Neer Parukum Thagangal 11.2


நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் 11.2

மனிதநேயம் பேசும் மஹிமா – பணம் கண்டு பயங்கொள்ளா பைரவி!

அமைதியாக, குனிந்து அமர்ந்திருந்த மஹிமாவிடம், “நீ கவனிக்கிறியா, நான் நடந்ததை சொல்றேன்” என்று பைரவி சொன்னதும், தலையசைத்து மஹிமா நேராக நிமிர்ந்து அமர்ந்தாள்.

உடனே சண்முகம், “பைரவி சொல்லிக்கிடுவா. வா” என்று மகளின் இழப்பை நினைத்து வருந்திக் கொண்டேயிருந்த அல்போன்ஸை அங்கிருந்து வெளியே கூட்டிச் சென்றார்.

இருவரும் போனதும், “அம்மா அப்பா யாருன்…” என்று ஆரம்பித்தவள், ‘எதுக்கு அங்கிருந்து?’ என எண்ணி, “விவரம் தெரிஞ்சதிலருந்து எனக்கு சொந்தம்னா, அது தாத்தாதான். அவர் மட்டும்தான். அவருக்கு நான்னா உயிர். எங்க உலகம் ரொம்ப சின்னது. அதுல சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டு இருந்தோம்” என்றாள் தங்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகமாக!

மேலும், “தாத்தா ஒரு மரக்கடையில வேலை பார்த்தாரு. நான் ஃபுட் பாக்டரில ப்ரோடைக்ஷன் ஸ்டாஃப் வேலை பார்த்துக்கிட்டே கரஸ்-ல யூஜி படிச்சிக்கிட்டு இருந்தேன். அங்கதான் ஏஞ்சலும் வேலை பார்த்துக்கிட்டு இருந்தா” என சிறிய இடைவெளிவிட்டாள்.

அந்த இடைவெளியில் மஹிமா, “ஏஞ்சல்?” என கேட்க, “அல்போன்ஸ் அங்கிள் பொண்ணு” என விளக்கம் தந்த பைரவி, சற்று யோசித்துவிட்டு, “அங்கிளுக்கு கொஞ்சம் ஹெல்த் ப்ராப்ளம் உண்டு. அதுக்கே நிறைய செலவாகும். அதான் ஏஞ்சல் படிப்பை நிறுத்திட்டு வேலை பார்த்தா” என்றாள்.

“நீயும் ஏஞ்சலும் பிரண்ட்ஸ்-ஸா?”

“இல்லை. இந்தப் பிரச்சனைக்கு அப்புறமாதான் அவளை எனக்குத் தெரியும்” என்று சொன்ன பின்தான், “யாரு உங்களுக்குத் தொல்லை கொடுத்தது?” என மஹிமாவிற்கு பிரச்சனை பற்றிக் கேட்க தோன்றியது.

“ப்ரோடைக்ஷன் மேனேஜர்!! ப்ரோடைக்ஷன் ஸ்டாஃப்ஸ்-ல முக்கால்வாசி பேரு பொண்ணுங்கதான்!! அவங்களுக்கு அவனால நிறைய தொந்தரவு. அவனோட பேச்சு, பார்வை, செயல் எதுவுமே சரியா இருக்காது… சகிச்சிக்கவும் முடியாது. ரொம்ப மோசமானவன்” என்றவள், “ம்? இதுக்கு மேல தேவைப்படுற இடத்தில சொல்லிக்கிறேன்” என்று அங்கே நடந்த பணியிட துன்புறுத்தலை, சீண்டலை பாதியோடு நிறுத்திக் கொண்டாள்.

சரியென மெதுவாக தலையசைத்த மஹிமா, “நீங்க யாரும் மேனேஜ்மென்ட் சைட்ல கம்ப்ளைன்ட் பண்ணலையா?” என்று கேட்டாள்.

“அதெப்படி அப்படி இருப்போம்? முதல சூப்பர்வைசர்கிட்ட போய் அவனைப் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணோம். நாங்க சொன்னதை அவர் கேட்டுக்கிட்டாரு. அவ்வளவுதான். வேற ஒன்னுமே நடக்கலை. அதான் அடுத்து டேரைக்டர்கிட்ட போய் சொன்னோம். இந்தத் தடவை மேனேஜ்மென்ட்டும் உடனடியா ஆக்சன் எடுத்தாங்க” என்று புகழ்ந்து பேசுவது போல் கூறினாள்.

கூடவே, “ஆனா, அது கம்ப்ளைன்ட் கொடுத்தவங்க மேல” என நிர்வாகத்தை இகழ்ந்து பேசினாள்!

மேலும், “வேற ஏதோ காரணம் காட்டி ரெண்டு பேரை சஸ்பென்ட் பண்ணிட்டு ஒரு பொண்ண வேலையை விட்டே தூக்கிட்டாங்க. மத்தவங்களை அப்படியே வேலை பார்க்க விட்டாங்க. அதுல நானும் ஒன்னு” என்றாள்.

பாதிக்கப்பட்ட பெண்கள் நிர்வாகத்திற்கு எதிராக வாய்திறக்க கூடாதென்று எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைச் சொன்னதுமே பைரவி முகத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்திருந்தது!

அதைப் பார்த்த மஹிமா, “மேனேஜருக்கு ஃபேவரா நடந்துக்கிட்டாங்களா? ஏன்?” என்று கேட்க, “அவன் ஓனரோட தங்கச்சி பையங்கிறதால!” என்றாள் பைரவி காட்டமாக!

மேலும், “அதுமட்டும் கிடையாது. இப்படி ஒரு காரணம் சொல்லி ஒருத்தனை வேலையை விட்டுத் தூக்கினா… பேக்டரியோட பேர் கெட்டுப் போயிடும்னு ஓனர் யோசிச்சாரு.

பொண்ணுங்க வேலை செய்றதுக்கு பாதுகாப்பான இடம்ங்கிற ஒரு பிம்பம் அழிஞ்சிடக் கூடாதுனு நினைச்சாரே தவிர, அது உண்மையா இருக்கணும்னு நினைக்கவேயில்லை” என்றாள் ஆற்றமாட்டாமல்!

பைரவியின் ஆற்றாமையினால் சில நொடிகள் அமைதியாக இருந்த மஹிமா, அதன்பின், “திரும்பவும் ப்ராப்ளம் இருந்ததா?” என்று கேட்டாள்.

“கொஞ்ச நாளா எந்த தொந்தரவுமே கொடுக்காம இருந்தான். அதுக்கப்புறமா பழைய மாதிரியே தொல்லை பண்ண ஆரம்பிச்சிட்டான். என்ன ஜென்மமோ? ச்சே!” என்று அருவருப்பாய் சொன்னவள், “எந்த ஆக்ஷனுமே எடுக்கலைன்னா எப்படித் திருந்துவான்?” என்றாள் வெடுவெடுப்புடன்!

அவளது மன உளைச்சல்களை வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறாள் என்று புரிந்ததால் மஹிமா சற்றுநேரம் அமைதியாக இருந்தாள்.

அதன்பின், “பேக்டரில ஒரு இன்டர்னல் கம்ப்ளைன்ட் கமிட்டி இருக்கும். அதுல எக்ஸ்டர்னல் மெம்பர் இருப்பாரு. யார் இன்ப்ளுயன்ஸும் இல்லாம இருக்கும். அங்க சொல்லியிருக்கலாமே?” என்று, ‘இப்படி ஒரு வழி இருக்கிறதே!’ என்பது போல் மஹிமா கேட்டாள்.

“இது நான்-ஆர்கனைஸ்ட் செக்டர். அதெல்லாம் இல்லை” என்றாள் பைரவி!

கூடவே, “ஆனா அதுக்கப்புறம் வேறெங்கயும் கம்ப்ளைன்ட் பண்ண யாருமே முன்வரலை. அவங்களையும் எதுவும் சொல்ல முடியாது. இந்த வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கிறவங்க… அவங்க குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு வர்றவங்கதான்… அங்க அதிகம்!

அவங்களுக்கு கம்ப்ளைன்ட் பண்ணா வேலை போயிடும், சம்பளம் கட்டாகும், அப்படிங்கிற பயத்தை மேனேஜ்மென்ட் கொடுத்திட்டாங்க. அப்புறமா எப்படி அவங்களை எதிர்த்து பேசுவாங்க?!?” என்றாள் ஆதங்கத்துடன்!

மேலும், “ப்ச், என்னால பேசாம இருக்க முடியல. பார்க்கிற வேலைக்குத்தான் சம்பளம் வாங்குறேனே தவிர, அவன் பண்றதெல்லாம் சகிச்சிக்கிட்டு இருக்க இல்லை. சரிதான?” என்று கேட்டாள்.

சரிதான் என்று மெதுவாக மஹிமா தலையாட்டினாள்.

“அவன் பண்ற தப்பை தட்டிக் கேட்கணும். அதுக்காக என்னால என்ன செய்ய முடியும்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன். அப்பதான் இன்னொரு பொண்ணும் என்னை மாதிரி யோசிக்கிறானு தெரிய வந்தது. அவதான் ஏஞ்சல்!” என்றாள் மென்மையாக.

“அதுக்கப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து யோசிச்சீங்களா?”

“ம்” என்றவள் “மேனேஜ்மென்ட்ல எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்கனு தெரிஞ்சிடுச்சி. அதான் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுப்போம்னு ஏஞ்சல் சொன்னா. அது சரிதான!?

பேக்டரில வேணா அவங்க வச்சது சட்டமா இருக்கலாம். பேக்டரிக்கு வெளிய அது மாதிரி செய்ய முடியாதுல? அதான் போலீஸ் ஸ்டேஷன் போனோம்” என கடகடவென சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டாள்.

பைரவி குரலில் ஒரு வேகம் இருந்தது. அது அன்றைய நாளில் எடுத்த முடிவில் இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வேகம்! கூடவே அவள் குரலில் அந்த நம்பிக்கை பொய்த்துப் போன ஏமாற்றமும் தெரிந்தது!!

மஹிமாவோ எதுவும் கேட்கவில்லை. அவளாக பேசட்டும் என்று மௌனமாக இருந்து கொண்டாள்!

ஒருசில நொடிகளில், “பேக்டரில நடக்கிறதைச் சொன்னதுமே, இன்ஸ்பெக்டர் அவனை வரச் சொன்னாரு. அவனும் வந்தான். கூடவே ஓனரும் வந்திருந்தாரு. இவர் எதுக்கு-ன்னு நாங்க யோசிக்கிறப்ப, ஓனர் இன்ஸ்பெக்டர்கிட்ட ‘தனியா பேசணும்’-னு சொன்னாரு. உடனே எங்களை வெளிய உட்காரச் சொல்லிட்டு அவங்க மட்டும் பேசினாங்க.

என்ன பேசினாங்களோ… கொஞ்சம் நேரத்தில அவன் கிளம்பிப் போயிட்டான். அதுக்கப்புறமா வெளிய வந்த ஓனர், அப்படி ஒரு கோபத்தோடு எங்க ரெண்டு பேரையும் பார்த்திட்டு, கார்ல ஏறி போயிட்டாரு” என்று நிறுத்தினாள்.

‘ஏன் இப்படி?’ என அன்றைய நாளில் புரிந்தும் புரியாமலும் தானும் ஏஞ்சலும் காவல்நிலைய வாசலில் திருதிருவென்று முழித்து நின்றதை நினைத்து, இந்த நொடியில் பைரவிக்குப் பேச்சு தடைபட்டிருந்தது!

மஹிமாதான், “ஸ்டேஷன் வரைக்கும் போவீங்கன்னு எதிர்பார்க்கலை போல” என ‘ஓனர்’ கோபத்தின் காரணம் கூறி, “இன்ஸ்பெக்டர் என்ன சொன்னாங்க?” என்று கேட்டாள்.

“எங்களை கூப்பிட்டாங்க. நாங்க போய் நின்னதும், ‘இப்படி நடக்கலை-ன்னு அவங்க சொல்றாங்க. பெரிய மனுசன் பேரைக் கெடுக்கப் பார்க்கிறீங்களா? பேசாம போயிடுங்க’-ன்னு எங்களை விரட்டிட்டாரு” என்றவளுக்கு மீண்டும் பேச்சு தடைபட்டது.

காரணம்? அன்று அந்தக் காவலரிடம் கேட்ட பேச்சுக்களை நினைத்ததால்!

அன்று அவரது காட்டுக் கத்தல் இன்றும் காதிற்குள் ஒலித்ததால், “ப்ச், நாங்க வெளிய இருந்த நேரத்தில ஓனரோட பணம் சத்தமா பேசியிருக்குது” என்று அன்று, அங்கிருந்த காவலரின் நேர்மையற்ற நிலையைச் சொன்னாள்.

“மேனேஜர் மேல கம்ப்ளைன்ட் கொடுக்கிறதுல இவருக்கு என்ன ப்ராப்ளம்? ஏன் இப்படிப் பண்ணனும்?” என்றாள் மஹிமா சந்தேகமாக!

“அப்பவே சொன்னேன்ல? பொண்ணுங்க வேலை செய்றதுக்கு பாதுகாப்பான இடம்-ங்கிற பேர் வேணும். அப்பத்தான விமன்ஸ் டே பங்ஷன்ல சீப் கெஸ்ட்டா கலந்துக்க முடியும். அவர் பேக்டரி பத்தி எல்லாரும் பெருமையா பேசுவாங்க” என்றாள் பைரவி சலிப்புடன்!

அவள் பேசுவதில் ஏதோ இருப்பதாய் உணர்ந்த மஹிமா, “இன்னைக்கு இங்க நடந்த ப்ரோக்ராம்ல சீஃப் கெஸ்ட்டா வந்திருந்தாரே… அவரா உங்க பேக்டரி ஓனர்?” என்று சற்று யோசித்துக் கேட்டாள்.

“அந்த ஆள்தான்” என்றாள் பைரவி ஒரு நெடுமூச்சுடன்!

இன்று இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்கு கூட காரணம் இருக்கிறதோ என்ற கேள்வி மஹிமாவிற்கு வந்தது. ஆனால் அதைக் கேட்காமல், “அதுக்கப்புறமும் வேலைக்குப் போனீங்களா?” என்று கேட்க, ‘ஆம்’ என தலையசைத்தாள்.

இவர்கள் காவல்நிலையம் போனதற்கான கோபத்தை நிர்வாகத்தினர் எப்படி வெளிப்படுத்தி இருப்பார்களோ என்ற கேள்வி வந்ததால், “உங்க ஓனர் என்ன சொன்னாரு?” என்று மஹிமா கேட்டாள்.

“ஓனர் எங்களைக் கூப்பிட்டு, ‘என்கிட்ட கைநீட்டிச் சம்பளம் வாங்கிறவளுங்க, என் பேக்டரியை பத்தி கம்ப்ளைன்ட் கொடுப்பீங்களோ? இனிமே உங்களுக்கு போலீஸ் ஸ்டேஷன் போற எண்ணம் வரக் கூடாது. வேறேதும் பிளான் பண்ணி பேக்டரி பேரைக் கெடுக்கப் பார்த்தீங்கனா, அப்புறம் நடக்கறதே வேற!’-ன்னு மிரட்டினாரு” என்று ஏற்ற இறக்கம் இல்லாத குரலில் பைரவி சொன்னாள்.

‘என்ன இது, ஒரு உயிரை மதிக்காத பேச்சு’ என்று கலங்கிய மஹிமா, “திரும்ப நீ எதுவுமே பேசலையா?” என்று கேட்டாள்.

“ஏஞ்சல் பேசினா! ’பேக்டரிக்கு எதிரா நாங்க எதுவும் பண்ணலை. அவன்மேல நடவடிக்கை எடுங்க. இல்லை போலீஸை கம்ப்ளைன்ட் எடுக்க விடுங்க’-ன்னு சொன்னா. ஆனா அதுக்கு அந்தாளு, ‘நீயெல்லாம் நான் என்ன செய்யணும்னு சொல்லாத!!’-ன்னு கத்தினாரு” என்றாள்.

பணபலம் இருப்பதால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாதென, கடுகளவும் மனசாட்சியே இல்லாமல் கண்டபடி பேசியதை நினைத்து பைரவி கண்மூடி அமர்ந்திருந்தாள்!

மஹிமா பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்த பைரவி, “இதுல அவன் பங்குக்கு, அவனும் பேசினான். எங்களை வேலையை விட்டுத் தூக்க மாட்டாங்களாம். நாங்களே பயத்தடிச்சி ஓடுற மாதிரி பண்ணுவாங்களாம். ஸ்டாஃப்ஸ் அத்தனை பேர் முன்னாடியும் இப்படிச் சொல்லிட்டுப் போறான்” என்றாள் வெறுமையாக!

அன்று அவன் பேசினதை அப்படியே சொன்னாள். ஆனால் தவறு செய்தவன் தடித்த வார்த்தைகள் பிரயோகிக்கும் தைரியத்தை பணமா தந்தது? என்ற கேள்வி வந்திருந்ததால் பைரவி குரல் தொய்வடைய ஆரம்பித்திருந்தது.

அதைப் புரிந்த மஹிமா, பைரவிக்கு ஆதரவாக இருக்க அவள் பக்கம் நகர்ந்து அமர்ந்து கொண்டாள்! அது பைரவிக்கும் புரிந்தது!!

“வேறென்ன செய்ய-னு தெரியலை? திரும்பவும் போலீஸ் ஸ்டேஷன்ல போய் நின்னோம். ஓனர் மிரட்டினதை… அவன் பேசினதைச் சொல்லி ‘கம்ப்ளைன்ட் எடுத்துக்கோங்க’-னு சொன்னோம். ப்ச் கம்ப்ளைன்ட் எடுத்துக்கவேயில்லை! வாங்கிற சம்பளத்துக்கு நல்லா வேலை பார்த்தாரு” என்றாள் விரக்தியாக!

‘ம்ன்??’ என்று மஹிமா கேள்வியாய் பார்க்க, “ஓனர்கிட்ட வாங்க ஆரம்பிச்ச சம்பளத்துக்கு” என்றாள் கொந்தளித்துப் போய்!

பைரவி வார்த்தைகள் தெளிவாய்தான் இருந்தன. ஆனாலும் அவளது குரல் அன்றைய திண்டாட்டத்தின் வலியைப் பிரதிபலிக்க ஆரம்பித்தது!

அதை உணர்ந்த மஹிமா, “இன்ஸ்பெக்டரோட ஹயர் ஆபிசர்கிட்ட சொல்லிப் பார்த்திருக்கலாமே?” என ஆறுதலாக அவள் கைப்பிடித்துக் கேட்டாள்.

“நாங்க முதல கம்ப்ளைன்ட் பண்றப்போ ஒரு லேடி கான்ஸ்டபிள் இருந்தாங்க. அவங்களும் இதைத்தான் சொன்னாங்க” என்றவளின் குரல் அங்கேயும் அந்த முதலாளியின் செல்வாக்கிற்கு முன்னால் அவர்களது ‘சொல்’ செல்லா காசாய் போன வேதனையில் ஒலித்தது.

அதே நிலையில், “இதுக்கிடையில பேக்டரில எங்களை டார்கட் பண்ணாங்க. ஓவர் டைம் பார்க்கச் சொல்றது, ஒர்க் லோட் கூட்டறது, ‘இந்த ஆர்டரை, இந்த டைம்-குள்ள முடிச்சே ஆகணும்னு ஃபோர்ஸ் பண்றது… ப்ச், இதுல அவனோட தொல்லை வேற!” என்றாள் சங்கடமாக!

‘வேலையை விட்டிருக்கலாமே?’ என்று ஒரு கேள்வி மஹிமாவிற்கு வந்திருந்த நிலையில், “அடுத்து என்ன செய்ய முடியும்னு யோசிச்சப்பத்தான், சோசியல் வெல்பேர் கமிட்டி பத்தி தெரிஞ்சது” என்றாள் அவர்கள் அடுத்த முயற்சியை!

‘எல்லா வழியிலும் முயற்சித்தாயா?’ என்று மஹிமா பார்க்க, “பிரச்சனையைப் பத்தி எழுதி, பாதிக்கப்பட்டவங்ககிட்ட சைன் வாங்கி அனுப்பினா… அவங்க வந்து பேக்டரில இன்வெஸ்டிகேட் பண்ணுவாங்க. அப்போ பேசிக்கலாம்னு முடிவெடுத்தோம்” என்றாள் பைரவி.

“நல்ல ஐடியா” என மஹிமா மனதிலிருந்து சொன்னதும், “என்ன நல்ல ஐடியா? எங்களுக்கு எப்படியெல்லாம் தொந்தரவு கொடுக்கிறாங்க-னு எல்லாருக்கும் தெரியும். அப்போ நாங்க கேட்டு யாரு சைன் போடுவா?” என்றாள் ஒவ்வொரு முயற்சியிலும் முட்டிக் கொண்டு நின்ற இயலாமையின் குரலில்!

‘ஓ! இது வேறயா?’ என்று மஹிமா இருக்க, “ஆனாலும் ஸ்டாஃப்ஸ்கிட்ட இதைப் பத்தி சொன்னோம். ரெண்டு பேர் மட்டும் சைன் போட்டாங்க. ஆனா அதுவும் ஸ்டாஃப் இன்சார்ஜ் மூலமா ஓனருக்கு தெரிஞ்சிடுச்சி. அதுக்கப்புறம்…” என்று சட்டென பேச்சை நிறுத்திவிட்டாள்.

அங்கே ஓர் அமைதி பரவியது! அதுவரைக்கும் மஹிமா பைரவியின் குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்த அறை முழுவதும் இக்கணம் அமைதி மட்டுமே!!

மஹிமா எதுவும் கேட்கவில்லை. அவளுக்குப் புரிந்து போயிற்று. அப்பொழுது சொன்னாளே ஓர் உயிரை இழந்திருக்கிறோமென்று!! அது ஏஞ்சல்தான் என்று புரிந்தது! அதனால்தான் அப்படியே அசையாமல் இருந்தாள்! ஆனால், ‘இந்த அளவிற்குப் போவார்களா?’ என்று இதயம் படபடத்தது!!

இதற்கிடையில் உடல்நிலை காரணமாக வெளியே நிற்க முடியாமல் உள்ளே வந்திருந்த அல்போன்ஸ் கண்ணிலிருந்து மகள் இழப்பை நினைத்து கண்ணீர் கொட்டியது. அவரை ஆறுதல் படுத்தும் விதமாக பெரியவர் இறுக்கமா அவர் கைப்பிடித்துக் கொண்டார்.

இருவரும் ஓரிடத்தில் அமர்ந்தனர்!

மனதை திடப்படுத்திய பைரவி, “பேக்டரி… அவுட்டர்ல இருக்கு. கொஞ்ச தூரம் நடந்து வந்து ஷேர் ஆட்டோ பிடிப்போம். அன்னைக்கு… அப்படித்தான் ஷிஃப்ட் முடிஞ்சி வந்தோம். அங்கங்க ஷிஃப்ட் ஆளுங்க நின்னாங்க. அப்போ… தீடீர்னு ரெண்டு பேர் வந்து நின்னானுங்க.

என்னென்னு நாங்க சுதாரிக்கிறதுக்குள்ள ஒருத்தன் ராட் வச்சி என் தலையில அடிச்சான்… இன்னொருத்தன் ஏஞ்சல் பின்கழுத்துல அடிச்சிருந்தான்… அவன் அடிச்ச வேகத்தில… அவ ரோடுல விழுந்து… ஒரு வேன்…” என்று பைரவி தட்டுத் தடுமாறும் பொழுது, “போதுமே… அங்கிள் அழறாங்க” என்றாள் மஹிமா.

அந்தச் சம்பவக் காட்சிகள் அனைத்தும் ஞாபகத்தில் வரவும், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க இருந்த பைரவியிடம், “தண்ணீ குடி” என்று மஹிமா பாட்டிலை எடுத்துக் கொடுத்தாள்.

தண்ணீர் குடித்தவள், “மஹிமா இதுக்காக” என்று தலைக் காயத்தைக் காட்டி, “ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப அவன் வந்தான். ‘திரும்ப எங்களுக்கு எதிரா எதும் பண்ண நினைக்காத! இனியாவது ஒழுங்கா இருக்கப் பாரு’-ன்னு மிரட்டிட்டுப் போறான்” என்றாள் துவண்டுபோய்!

“யாரு ஒழுங்கா இருக்கனும்!? அவனா? நானா? எது அவனுக்கு இவ்வளவு திமிர் தந்திச்சி? ம், பணமா? பணம் வச்சிருக்கிற பெரிய மனுசன் தர்ற பாதுகாப்பா?  ஃபர்ஸ்ட் யாரு பெரிய மனுசன்? தப்புக்குத் துணை போறவன் எப்படிப் பெரிய மனுசன் லிஸ்ட்ல வர முடியும்?” என்றாள் துடிப்பாக!

“தாத்தா மாதிரி எனக்கு இன்னொரு சொந்தம்னு நினைச்ச பொண்ணு. இப்ப உயிரோட இல்ல. அவளைக் கொன்னுட்டு, என்னை மிரட்டினா நான் எப்படிப் பயப்படுவேன்? கோபம்தான எனக்கு வரும்?!” என்றாள் துக்கத்தோடு!

மஹிமா, பிடித்திருந்த பைரவியின் கைகளில் அழுத்தம் கொடுத்து ஆறுதலை அதிகப்படுத்தினாள்!

மேலும் பைரவி, “இது மர்டர் கேஸ்! ஆனா ஆக்சிடென்ட்னு ஸ்டேஷன்ல கேஸ் ரெஜிஸ்டர் ஆகியிருக்கு. காம்பென்சேஷன் பத்திப் பேசறாங்க. எங்களுக்கு எப்படி இருக்கும்னு சொல்லு?” என்றாள் துன்பத்தோடு!

கண்கள் மூடித் தன்னை சாந்தப்படுத்திக் கொண்ட பைரவி, “எவ்ளோ தடவை போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல போய் நின்னோம். நாங்க சொல்றதைக் கேட்டு நடவடிக்கை எடுத்திருந்தா, எங்க ஏஞ்சல் இப்போ உயிரோட இருந்திருப்பா” என்று பேசும் பொழுது பைரவியின் குரல் உடையப் பார்த்தது.

உடனே சமாளித்துக் கொண்டு, “நாங்க பண்ணது தப்புதான். அதுக்கு என்ன தண்டனைனாலும் கொடுங்க. ஆனா… எங்களுக்கு நியாயம் கிடைக்கணும். இப்பவாது அவன் மேல ஆக்ஷன் எடுக்கணும்” என்றாள் உறுதியாக!

“எந்த பேக்டரி பேரைக் காப்பாத்திறதுக்காக ஒரு உயிரை அழிச்சாங்களோ, அந்த பேக்டரி பத்தி எல்லாருக்கும் தெரிய வரணும்!! பொண்ணுங்களுக்குப் பாதுகாப்பான வேலையிடம்னு ஒரு பிம்பத்தை உருவாக்க நினைச்சாங்கள, அது உடையணும்! இன்னைக்கு அந்தப் பிம்பம் உடைஞ்சே ஆகணும்!!” என்று இறுதியாக மூச்சிரைக்க பைரவி சொல்லி முடித்தாள்.

ஒருவித அழுத்தத்துடன் இருந்த பைரவியிடம், “உனக்கு வேலையை விடணும் தோணவேயில்லையா?” என்று மஹிமா கேட்டாள்.

‘ம்கூம்’ என்று பைரவி தலையசைக்க, “வேலையை விட்ருந்தா இப்போ ஏஞ்சல் உயிரோட இருந்திருப்பாளா?” என்றும் கேட்டாள்.

சில நொடிகள் எதுவும் பேசாமல் இருந்த பைரவி, “உன் கால்ல அடிபட்டிருக்கு. ‘கஷ்டமாயிருக்கும், இங்கிருந்து கிளம்பு’-னு சொன்னாலும்… போகாம நீ ஏன் எல்லாருக்கும் ஹெல்ப் பண்ண நினைச்ச?” என்று கேட்டாள்.

“ஏன்னா இதுதான் நான்” என்றாள் மஹிமா தன் குணத்தை!

“அதுதான் நாங்க!” என்று தவறைக் தட்டிக் கேட்கும் அவர்கள் குணம் பற்றிச் சொல்லிவிட்டு, “எங்களுக்காக நாங்க போராடாம, வேற யார் போராடுவா?” என்று தெளிவாகவே கேட்டாள்.

இருந்தும் இழப்பை நினைத்து பைரவி இதயம் வெம்புவதை புரிந்த மஹிமா, “நீங்களாவது சொல்லியிருக்கலாமே?” என்று அல்போன்ஸ் சண்முகத்தைப் பார்த்து கேட்டதும், இருவருமே அமைதியாக இருந்தனர்.

சிறிது நேரத்தில்… கண்ணீரைத் துடைத்துவிட்டு… தொண்டையைச் செருமிக் கொண்டு, “சொல்லியிருக்கலாம். சொல்லியிருந்தா, இப்போ என் பொண்ணு உயிரோடு இருந்திருப்பா” என்றார் அல்போன்ஸ்.

மேலும், “எனக்கும் மேரிக்கும்… இது தீராத வேதனைதான். நா… நாங்க சாகற வரைக்கும் இருக்கும். ஆ… ஆனா பணபலத்தைப் பார்த்துப் பயந்து போகாம, எந்த ஒரு தப்பான முடிவெடுக்காம, அவளுக்காகவும் மத்தவங்களுக்காகவும் அந்த ஆளுங்களை தைரியமா எதிர்த்து நின்னானு… எங்க மனசு கொஞ்சமா ஆறுதல் பட்டுக்கிட்டு இருந்துச்சி” என்று கண்கலங்கி நிறுத்தினார்.

மீண்டும் கண்ணீர் வர, “ஆனா நீ இப்படிக் கேட்கிறப்போ… ஏதோ நாங்கதான் தப்பு…” என்று சொல்லும் போதே, “அந்த அர்த்தத்தில நான் கேட்கலை. எனக்கு கஷ்டமா இருந்தது. அதான் கேட்டேன் அங்கிள்” என்று அழும் குரலில் மஹிமா அவசரமாக குறுக்கிட்டாள்.

இருந்தும் அல்போன்ஸ் பேசப் போக்க, “அல்போன்ஸ் அந்தப் பொண்ணு வேற மாதிரி யோசிக்கிறா. தப்பைத் தட்டிக் கேட்டதைப் பத்திச் சொல்லலை. நம்ம பொண்ணுக்கு இப்படி ஆயிடுச்சேன்னு மனசு வருத்தப்பட்டுக் கேட்கிறா” என பெரியவர் அவரைச் சமாதானப்படுத்தினர்.

அவர்கள் இருவரும் அமைதியாகிவிட… மஹிமா அவர்களைப் பார்த்திருக்க, பைரவிதான், “லாயருக்கு ஃபோன் பண்றியா?” என்று கேட்டுவிட்டு, “அவர் என்னென்ன கேள்வி கேட்கப் போறாரோ?” என்று யோசிக்கலானாள்.

அதற்குமேல் நேரத்தை வீணடிக்காமல் கொஞ்சமாக தண்ணீர் குடித்துவிட்டு, கார்த்தியை அழைத்து அனைத்தையும் கடகடவென சொல்லி முடித்தாள்.

இப்பொழுது கார்த்திகேயன் கேள்வி கேட்க ஆரம்பித்தான்!

**********************************

வணிக வளாகத்தின் வெளியே

சூழல் இன்னுமே இரவாகிப் போயிருந்தது!

முக்கிய சாலையின் போக்குவரத்துச் சத்தம் குறைந்திருந்தது. பெரும்பாலும் உள்ளே மாட்டிக் கொண்டவர்களின் உறவினர்களும், ஊடகத்தினரும் மட்டும் இருந்தனர். ஆட்கள் குறைந்ததால், அதுவரை நின்று கொண்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்தி வந்த காவலர்கள் சற்று இளைப்பாறிக் கொண்டார்கள்.

காத்திருக்கும் செல்வியின் அக்காவிற்கு அவள் கணவன் மாமியாரிடமிருந்து அலைபேசி அழைப்பு திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருந்தது. ‘ரொம்ப லேட்டாகுது. பசங்க தேடுறாங்க. சீக்கிரம் கிளம்பி வரப்பாரு’ என சொல்லிக் கொண்டே இருந்தனர்.

நிலைமையை எடுத்துச் சொன்னாலும் புரிந்து கொள்ள மறுத்தார்கள்!

கூடவே செல்வியின் பெரியம்மாவும் தாத்தாவும், ‘போதும் நீ அவளுக்கு உதவி செஞ்சது. வீட்டுக்கு கிளம்பி போ’ என்று அலைபேசியில் திட்டியிருந்தார்கள்.

‘என்ன செய்ய?’ என புரியாமல் அவள் முழித்துக் கொண்டிருந்தாள்.

********************************

கடமை தவறா காவலர் பெனசீர்!!

‘ஆமா, இன்னைக்கு அம்மா வர்றதுக்கு லேட்டாகும்’ ‘அப்பா வந்தாச்சா?’ ‘நீங்க சாப்பிட்டாச்சா?’ என பெனசீர் பேசிக் கொண்டிருக்கும் போது, தினேஷ் வந்து நின்றதும், ‘அம்மா அப்புறமா பேசறேன்’ என்று அலைபேசியை வைத்துவிட்டு, ‘சொல்லுங்க’ என்பது போல் பார்த்தார்.

“மேடம் கண்மணி கேஸ் பைல். அவங்க ஒரு ரேப் விக்டிம். ஃபோன் நம்பர் ரீச் ஆகலை. பட் அக்கியூஸ்ட்டுக்கு ஜாமீன் கிடைச்சிருக்கு. அதுல இவங்களுக்கு ரொம்ப கோபம். கொஞ்சம் சஸ்பெக்ட் பண்ற மாதிரி இருக்கு” என தினேஷ் சொல்லுகையிலே, செந்தில் வந்து நின்றான்.

“மேடம், நீங்க கேட்ட ஃபோன் நம்பர் லிஸ்ட்” என்று சமர்பித்ததான்!

ஒவ்வொருவரின் பெயர், விலாசம், அலைபேசி எண், வணிக வளாகத்தில் அவர்களது பணிவிவரம் என்று அந்தப் பட்டியல் இருந்தது!

ஒருமுறை அதைப் பார்த்தவர், பேனாவை எடுத்து ஒரு எண்ணை வட்டமடித்து, “இந்த நம்பர்லருந்து எந்தெந்த நம்பருக்கு கால் போயிருக்கு… வந்திருக்குன்னு பாருங்க. அந்த ஃபோன் நம்பர்ஸ் லொக்கேஷன் என்னென்னும் ஐடென்டிஃபை பண்ணுங்க” என்று படபடவென்று உத்தரவிட்டார்.

“ஓகே மேடம்” என்று தனக்கிடப்பட்ட வேலையைச் செய்யச் சென்றான்.

அங்கேயே நின்ற தினேஷ், “ஏதும் சஸ்பெக்ட் பண்ற மாதிரி இருக்குதா மேடம்” என்றதும், “ம்ம்” என்றவர், “சரி, நீங்க சொல்லுங்க” என பேசியதைத் தொடரச் சொன்னாலும், பெனசீர் பார்வை முழுவதும் ஒரே ஒரு செக்யூரிட்டி மேலேயே இருந்தது!!

********************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!