Neer Parukum Thagangal 13.2

Neer Parukum Thagangal 13.2
நீர் பருகும் தாகங்கள்
அத்தியாயம் 13.2
அப்பாவின் குட்டி இளவரசியாகிய லக்ஷ்மி கேசவன், மினி ஜோசப்
அந்தப் பையனின் அலைபேசிக்கு அழைப்பு வரும் சத்தம் கேட்டு கண் திறந்த லக்ஷ்மி… தொடுதிரையில் தெரிந்த எண்ணைப் பார்த்ததும், ‘மினி அப்பாவாக இருக்குமோ?’ என்ற சந்தேகத்துடனே அழைப்பை ஏற்றார்.
மறுமுனையில், “ஹலோ” என்றதும், அவர்தான் என்று தெரிய, “ஹலோ சார். மினி தூங்கறா. இதோ எழுப்பறேன்” என்று அவசரமாக சொன்னதும், “மேம் வேண்டாம். உங்ககிட்ட பேசணும்” என ஒரு காரணமாக சொன்னார்.
‘என்னிடம் என்ன பேச வேண்டும்?’ என்று லக்ஷ்மி யோசனையில் இருக்க, “என் பொண்ணுக்கு என்னாச்சி-ன்னு சொல்லுங்க? அவளுக்கு ஏதோன்னு எனக்குத் தோணிக்கிட்டே இருக்கு. ப்ளீஸ் சொல்லுங்க மேம்” என அப்போதிருந்த அதே பயத்துடனும், பதற்றத்துடனும்… கூடவே வேண்டுகோள் போலவும் கேட்டார்.
மகளுக்காக ஜோசப் குரலிலிருந்த உணர்வுகளைக் கேட்டு, சொல்லிவிடலாம் என லக்ஷ்மி நினைக்கையில், “அப்போ, ‘மினி பயந்திருக்கா-னு’ சொன்னீங்க. பயந்தா அவளுக்குத் தூக்கமே வராது. வேற ஏதோ நடந்திருக்கு. என்னென்னு சொல்லுங்க?” என்று மகளை நன்கறிந்த பெற்றவராய் கேட்டார்.
அதற்குமேல் மறைக்க விரும்பாமல் லக்ஷ்மி நடந்ததைச் சொல்லிவிட்டார்!
அதன்பின்… ஜோசப் பக்கமிருந்து வார்த்தைகளே வரவில்லை. அவரிடம் ஒரு பேரமைதி நிலவியது. அவரது உயிர் நடுங்கியது. உள்ளம் நிதானம் இழந்தது. தாறுமாறாக இருதயம் துடித்தது. உடலின் ஒவ்வொரு அணுவும் அழுதது.
அவருக்கு மகள்தானே எல்லாமுமானவள். ஆதலால் இப்படி!
மகளது கஷ்டம், வலி, போராட்டம் அப்பாவிற்கு எப்படியொரு வேதனையைத் தருமென்று லக்ஷ்மியால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆகவே அவரும் எதுவும் பேசாமல், கேட்காமல் இருந்தார்.
சில நொடிகளுக்குப் பின்… அடைத்தது போலிருந்த தொண்டையை செருமிக் கொண்டு, “மேம், பயப்படற மாதிரி… வேற எதுவும்…” என ஆரம்பித்த ஜோசப், எந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி தன் மகளின் நலத்தை அறிந்து கொள்ள என்று தெரியாமல் தடுமாறி மீண்டும் பேச்சற்று நின்றார்.
இதற்குமுன் பேசிய போதில்லா நடுக்கம் இப்போது அவர் குரலில் தெரிந்தது!
ஜோசப் கேட்க வருவதைப் புரிந்து கொண்ட லக்ஷ்மி, “சார். ஷி இஸ் ஃபைன் நௌவ். இவ்வளவு நேரம் பேசிக்கிட்டுதான் இருந்தா” என்று மினி இயல்பாக இருக்கிறாளென தெரியப்படுத்தினார்.
“ம் ம் ம்” என்று மந்தமான குரலில் சொன்னவர், “மினி… ரொம்ப அழுதாளோ?” என மனம் வெதும்பிக் கேட்டு, “அழுதிருப்பா, நான் பக்கத்தில இருக்கணும்னு நினைச்சிருப்பா. ப்ச், என் பொண்ணுக்கு ஏன் இப்படி?” என்று மகள் மீதிருந்த பாசத்தில் புலம்பினார்.
‘தான் எப்படி ஆறுதல் கூற?’ என்று தயங்கிய லக்ஷ்மி, “மினியை எழுப்பறேன். பேசறீங்களா சார்?” என்று கேட்டதற்கு, “மினி தூக்கம் கலையற… ஐ மென்ட் முழிக்கிற மாதிரி தெரியுதா மேம்??” என்று கேட்டார்.
குனிந்து மடியில் உறங்குபவளைப் பார்த்து, “இல்லை. நல்லா தூங்கறா” என்று லக்ஷ்மி சொன்னதும், “அப்ப வேண்டாம் மேம். டயர்ட்ல தூங்கறா. தூங்கட்டும். இப்ப எந்திருச்சாலும், உடனே என்னைப் பார்க்கணும்னு நினைப்பா. அதான் எழுப்ப வேண்டாம்” என்று மறுத்துவிட்டார்.
‘சரியென்று’ லக்ஷ்மி இருந்து கொண்டார்.
சிறிது சகஜ நிலைக்கு வந்த ஜோசப், “இதை ஏன் என்கிட்ட மினி சொல்லலை? எதுனாலும் உடனே சொல்லிடுவாளே?” என்று மகளின் செயல் விகற்பமாக தெரிவதைப் பற்றிக் கேட்டார்.
“மினி சொல்லணும்னுதான் நினைச்சா! நான்தான், ‘பயப்பிடுவாங்க… நேர்ல பார்க்கிறப்போ சொல்லிக்கோ’-ன்னு சொன்னேன். அப்புறம் நீங்க என்கிட்ட கேட்டப்பவும், டிரைவ் பண்ணிட்டு வர்றீங்கனுதான் சொல்லலை சார்” என்று அவசர அவசரமாக விளக்கம் தந்தார்.
“அப்பா-வா… பயம், டென்சன், கவலை எல்லாம் இருக்கும். அதையும் தாண்டி என் பொண்ணுக்கு ஆறுதல் சொல்லணும்-ல?! தைரியத்தை வரவச்சிக்கிட்டு சொல்லியிருப்பேன்” என்று சாதாரணமாகச் சொன்னார்.
ஆனால் லக்ஷ்மியோ, சரியான தருணத்தில் அவர் மகளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் போனதற்கு தான்தான் காரணமோ என்று உறுத்தியதால், “இப்படி நான் யோசிக்கலை. சாரி சார்” என்றார் சிறிதும் தயங்காமல்.
“மேம் நீங்க மட்டும் இல்லைனா, என் பொண்ணோட நிலைமை? உங்களுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாதுனு நினைச்சிக்கிட்டு இருக்கேன். நீங்க எதுக்கு மேம் சாரி கேட்கிறீங்க?” என லக்ஷ்மி செய்த உதவியைப் பெரிதாகப் பார்த்தார்.
லக்ஷ்மிக்கு… ஜோசப் சொன்னதைக் கேட்டதுமே, அப்பா-மகளுக்கு இடையே இடைஞ்சலாக இருந்துவிட்டோமோ என்று உண்டாகியிருந்த உறுத்தல் சற்று குறைந்திருந்ததில் அமைதியாக இருந்தார்.
“அப்புறம் மேம், போலீஸ் ஃபோன் பண்ணியிருந்தாங்க” என்று அதைப் பற்றிச் சொல்லி, “நீங்க ஏதும் அவங்ககிட்ட ஹெல்ப் கேட்டீங்களா?” என்று கேட்டதும், “இல்ல சார். ஃபோன் இருந்தது. பட் இங்க நடந்ததுல, பேசிக்கிட்டு இருந்ததுல சுத்தமா மறந்திடுச்சு” என்றார்.
மாட்டிக் கொண்டவர்கள் நிலைமை உணர்ந்து, “புரியுது மேம்” என்று ஜோசப் சொல்ல, “போலீஸ்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது. மினிகிட்டயே கேட்க நினைச்சேன். பட் கேட்கலை. அதான் சார் உங்ககிட்ட…” என்று நிறுத்தியவர், “இவனைப் பத்தி கம்ப்ளைன்ட் கொடுத்தீங்களா?” என்று கேட்டார்.
“மினி சொன்னதுமே, ஸ்டாக்கிங்-னு ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணேன். எஃப்ஐஆர் பைல் பண்ணி அரெஸ்ட் பண்ணாங்க”
“பின்ன எப்படி வெளிய வந்தான்?! பெயிலா??”
“ம்ம்ம். என்னென்னமோ சொன்னாங்க. அதோட எம்.எல்.ஏ-க்கு சொந்தக்கார பையன் வேற! ஸோ உடனே பெயில் கொடுத்திட்டாங்க” என நொந்து போய் பேசியவர், “தப்பு பண்ணவன் யாரா இருந்தாலும், அதுக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டாமா?” என்றார்.
‘ஆளுமை கண்டு அடங்கிப் போகாத’ நியாயம் எனும் நீர் வேண்டுமென்ற தாகத்துடன் ஜோசப்பின் குரல் ஒலித்தது.
அதோடு விடமால், “அப்படி மட்டும் உள்ளே இருந்திருந்தா… இன்னைக்கு என் பொண்ணுக்கு இந்த மாதிரி நடந்திருக்காதுல?” என்று வருத்தப்பட்டார்.
மேலும், “அவனுக்கு பெயில் கிடைச்சதுமே, மினிய தனியா அனுப்பாம எல்லா இடத்துக்கும் அவகூடவே போய்க்கிட்டு இருந்தேன். பட் அதுக்கப்புறம் அவன் பாலோவ் பண்ணி வரலை. அதனால தனியாவே காலேஜ் போக ஆரம்பிச்சா.
அப்பவும் அவனால எந்த தொந்தரவும் இல்லை. இனிமே அவனால பிரச்சனை எதும் வராதுனு நினைச்சா, இன்னைக்கு இப்படி…” என மகளுக்காக கலங்கிப் போய் பேச்சை நிறுத்தினார்.
அதன் பின்னரும் ஜோசப்பே, “மேம்… நான் வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாகும். சப்போஸ் வெளிய வந்திட்டா, மினி தனியா இருப்பா. நீங்க கொஞ்சம் சிரமம் பார்க்காம நான் வர்ற வரைக்கும் அவகூட இருக்க முடியுமா?” என தயங்கித் தயங்கி… சங்கடப்பட்டு உதவி கேட்டார்.
துளியும் சங்கடமில்லாமல், “சிரமமெல்லாம் இல்லை. நீங்க வர்றவரைக்கும், அவகூட இருக்கிறேன்” என்று லக்ஷ்மி சொன்னதும், “ரொம்ப தேங்க்ஸ் மேம். நான் வச்சிடறேன்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தார்.
சாலையோரம் காரை நிறுத்திவிட்டுத்தான் ஜோசப் அழைத்திருந்தார். பேசி முடித்ததும்… நடந்ததை வணிக வளாகத்தில் இருக்கும் காவலருக்குத் தெரியப்படுத்திவிட்டு, அலைபேசியை டேஷ்போர்டில் போட்டு, இருக்கையில் பின்னந்தலையைச் சாய்த்தார்.
அந்தப் பையனை அடித்து நொறுக்கிவிட வேண்டுமென்ற அளவிற்கு கோபம் தலைக்கேறியது! அந்தக் கோபத்தோடு… மகளுக்கு நிகழ்ந்ததை நினைத்துக் கண்கலங்கினார். மனம் ரணமாய் வலித்தது. கண்ணாற மகளைக் கண்டால் மட்டுமே மனமாறும் என்ற நிலைக்கு வந்திருந்தார்!
மனைவியின் மறைவிற்குப் பிறகு, தன் வாழ்க்கையை வறண்டு போகாமல் உயிரோட்டமாய் வைத்திருக்கும் மகளை எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பார்க்க வேண்டும்!
அவளை அரவணைத்துக் கொண்டு ஆறுதலாக பேசி தேற்ற வேண்டுமென்ற இதயத்துடிப்புடன் காரை அதிவேகமாகச் செலுத்தினார்!!
இதே நேரத்தில் லக்ஷ்மி… மடியில் உறங்கும் மினியைப் பார்த்தார். ‘இன்னும் சற்றுநேரம் இவளருகே இருக்கலாம்’ என்ற இதயத்தின் பிடிப்புடன், மீண்டும் அவள் தலை வருடி விட்டபடியே கண்களை மூடிக் கொண்டார்!!!
****************************
வணிக வளாகத்தின் வெளியே
மஞ்சள் நிறத் தடுப்புகள் வரை ஆய்வாளர் வந்ததைப் பார்த்ததும், சோர்வுடன் அங்கங்கே இருந்தவர்கள், ‘ஏதோ தகவல் தெரிவிக்க வருகிறாரோ?’ என்கின்ற எதிர்பார்ப்பில் சட்டென்று எழுந்து நின்றனர். ஆனால் அவர் எதுவும் பேசாமல் போகவும், தங்களுக்குள் சலசலக்க ஆரம்பித்தனர்.
ஆனாலும் அவர்கள் அனைவருக்கும் நெடுநேர காத்திருப்பு நிறைவுக்கு வரப் போகிறது போல? என்ற எண்ணம் வரத் தொடங்கியது.
அதுபோல் பேட்டி தருவாரென தயார் நிலையில் இருந்த ஊடகத்தினரும் ஒரு ஏமாற்றத்துடன் நின்று கொண்டிருந்தனர்.
***********************************
கடமை தவறா காவலர் பெனசீர் – வழக்கறிஞர் கார்த்திகேயன்!
இதற்கிடையே வணிக வளாக புல்வெளிப் பகுதியில் ஆய்வாளர் பெனசீருடன் செல்வம், தினேஷ், கார்த்தி மூவரும் நின்றிருந்தனர். பைரவி சொல்லியிருந்த அனைத்தையும் கூறிய நிலையில்… தகவல் சேகரித்துவிட்டுக் காவலர்களை அணுகலாம் என்று நினைத்திருந்ததாகவும் கார்த்தி சொன்னான்.
காவல்துறையைச் சார்ந்த மூவருமே கார்த்திகேயனிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை. அது, அவன் சட்டதுறையைச் சார்ந்தவன் என்பதற்காக அல்ல. அவனுக்கு இதில் சம்பந்தமில்லை என்பதால்!
மேலும் காவலர்களின் பார்வை, ‘என்ன சொல்லப் போகிறார்?’ என்று ஏஞ்சல் அம்மாவான மேரியிடமே இருந்தது.
ஒரு வார்த்தை கூட பேசாமல் தன்னிடம் இருந்த ஆதாரங்களை, விவரங்களை மேரி எடுத்துக் கொடுத்தார்.
பெனசீர் அதை வாங்கியபடியே, “தப்பு செஞ்சவனுக்குத் தண்டனை வாங்கித் தரணுங்கிற முயற்சி தப்பேயில்லை. ஆனா அதுக்காக இப்படி ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தது நிச்சயம் தப்புதான். இதுக்காக உங்க மேலயும் நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும்” என்று தன் கண்டனத்தைப் பதிவு செய்தார்.
மேலும், “நான் அப்ப கூப்பிட்டு விசாரிச்சேன்ல?! அப்போவே சொல்லியிருக்க வேண்டியதுதான? எதுக்கு இவ்ளோ டிலே பண்ணீங்க? எல்லார் முன்னாடியும் சொல்ல முடியலைனாலும், தனியாவது வந்து சொல்லியிருக்க வேண்டாமா?” என்று பெனசீர் கோபப்பட்டார்.
எதற்கும் வாய் திறவாமல் நின்ற மேரியிடம், “ஏதாவது பேசுங்க” என பெனசீர் அழுத்திக் கேட்டார்.
அதுவரையில் ஒன்றும் பேசாமல் நின்ற மேரி, “இன்னைக்கு நடந்த பங்சன்ல, அந்த பேக்டரி ஓனர், வேல செய்ற இடத்தில பொண்ணுங்க பாதுகாப்பு பத்தி அவ்ளோ பேசறான். ஆனா என் பொண்ணு இல்லாததுக்கு காரணமே அவன்தான். மால் வாசல்ல நின்னு அந்த ஆள் பேச்ச கேட்டப்போ, எனக்கு எப்படி இருந்திருக்கும்னு நினைச்சிப் பாருங்க மேடம்” என்றார் துளி கண்ணீரோடு!
நால்வரும் அமைதியாக நின்றனர்.
“நாங்க செஞ்சது தப்புதான் மேடம். இல்லைனு சொல்லலை. எங்க மேல என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஏத்துக்கிறோம். அதேசமயம் அந்த ஆள் பணத்தைப் பார்த்து நாங்க எப்படி பயப்படலையோ… நீங்களும்…” என்று நிறுத்தி, “அவன் மேல நடவடிக்கை எடுங்க மேடம்” என்றார் மேரி!
‘செல்வாக்கு கண்டு செத்துப் போகாத’ நியாயம் என்னும் நீர் வேண்டும் என்ற தாகத்தில் மேரியின் குரல் ஒலித்தது!!
ஏனோ அதன்பின் அவரிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை. இழப்பின் பக்கம் நிற்கிறார் என்பதாலோ, அந்த இழப்பிற்கு ஒருவகையில் காரணமானவர்கள் அவர்கள் பக்கம் இருப்பதாலோ… தெரியவில்லை!
ஆனால் கேள்வி கேட்கவில்லை!
மகளை இழந்த வேதனையை வெளிப்படுத்தாமல் அழுகையை அடக்கியபடி அழுத்தமாக நின்றவரிடம், “நீங்க போய் உட்காருங்க. பேசிட்டு சொல்றோம்” என்று பெனசீர் சொன்னதும், சற்றுத் தள்ளிச் சென்று மேரி அமர்ந்தார்.
காவலர்கள் மூவரும் மேரி கொடுத்திருந்த விவரங்களை பார்த்தனர். மேலும் ஏஞ்சல் கொலை வழக்குப் பதியப்பட்டிருந்த காவல் நிலையத்தில் பைரவிக்கு உதவிய பெண் காவலரைத் தொடர்பு கொண்டு வழக்கின் நிலை பற்றிய சில விவரங்களைப் பெற்றுக் கொண்டனர்.
பின் பெனசீர், “செல்வம், இது நம்ம ஸ்டேஷனுக்கு கீழ வராது. ஆனா அவங்க டிமான்ட் ப்ரோடைக்ஷன் மனேஜர் மேல ஆக்ஷன் எடுக்கணும்னுதான். ஸோ இவங்க தந்த எவிடன்ஸ் வச்சி ஒர்க்பிளேஸ் செக்ஸுவல் ஹரஸ்மென்ட்னு அவன் மேல ‘ஸீரோ’* எப்ஐஆர் போடுங்க.
லேட்டரா எந்த ஜூரிஸ்டிக்ஷன்-க்கு கேஸ ட்ரான்ஸ்பர் பண்ணணும்னு பார்த்து பண்ணிடலாம். பட் எப்ஐஆர் கிளியரா இருக்கணும். அன்ட் எப்ஐஆர் காப்பி எனக்கு வேணும்.
அதுக்குள்ள நான்… எப்ஐஆர் போடாம இந்த பொண்ணுகளை அலைக்கழிச்ச இன்ஸ்பெக்டர் அன்ட் எஸ்பி பத்தி கமிஷனர்கிட்ட சொல்லி ஆக்ஷன் எடுக்கச் சொல்றேன்” என்று பெனசீர் சொல்ல, “ஓகே மேடம்” என்று சென்றான்.
அவன் சென்றதும் தினேஷும் பெனசீரும் ஏஞ்சலின் வழக்கு பற்றிப் பேசினர். ஏற்கனவே விபத்து என்று வழக்குப் பதிவாகி விசாரணை நடப்பதால், ‘என்ன செய்ய?’ என்றது போல் இருவரின் பேச்சு இருந்தது.
அக்கணம் கார்த்தி, “இது விபத்தில்லை, கொலை-னு உண்மையைச் சொல்லி செகன்ட் எப்ஐஆர் போடலாமே?” என்று கேட்டு, பேச்சில் கலந்து கொண்டான்.
“போடலாம். ஆனா இதுதான் உண்மைன்னு ப்ரூவ் பண்ணலைனா கோர்ட்ல செகன்ட் எப்ஐஆர் தள்ளுபடி ஆயிடும்” என்றான் தினேஷ்.
“கரெக்ட். பட் அட்டாக் நடந்ததை பார்த்ததுக்கு ஐவிட்னெஸா ஷிஃப்ட் ஆளுங்க இருக்கிறாங்க. அவங்களுக்கும்கூட அங்கே ஹராஸ்மென்ட் நடந்திருக்கலாம். பைரவி, ஏஞ்சலுக்கு என்ன தொல்லை கொடுத்தாங்கனு பார்த்திருப்பாங்க.
மேனேஜ்மென்ட் பத்தி வெளிய சொல்ல பயம் இருந்தாலும்… ஓனர், மேனேஜர் மேல உள்ளுக்குள்ள கோபம் இருக்கும். மேனேஜர் அரெஸ்ட் ஆக போறான்னு, தெரிஞ்சா கண்டிப்பா உண்மையைச் சொல்வாங்க.
நாமளும் அவங்ககிட்ட பேசி, நம்பிக்கைத் தந்து சாட்சி சொல்ல வைக்கணும். ஸோ கேஸ் தள்ளுபடி ஆகாம பார்த்துக்கலாம்” என்றான் கார்த்தி.
இதைக் கேட்டதும் பெனாசீர், “அன்ட் இதுல இன்னொன்னு… போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட்ல ஏஞ்சலோட பின்கழுத்துல காயம் இருக்கிறதைப் பத்தி தெளிவா மென்சன் பண்ணியிருக்காங்க. இதை வச்சி எப்.ஐ.ஆர் போட்டுருந்தா… அது கிரிமினல் கேஸா போயிருக்கும்.
இதை சிவில் கேஸா கொண்டு போய்… காம்பென்ஷேஷன் மட்டும் கொடுத்து தப்பிக்கத்தான் வேன்ல அடிபட்டதை வச்சி ஆக்சிடென்ட் கேஸ்னு எப்.ஐ.ஆர் போட்டுருக்காங்க.
அப்படினா அட்டாக் பண்றது மட்டும்தான் அவங்க பிளானா? ஏஞ்சல் தடுமாறி வேன்ல விழுந்ததை அவங்களுக்குச் சாதகமா யூஸ் பண்ணிக்கிட்டாங்களா? இல்ல, அந்தப் பொண்ண தள்ளி விட்டாங்களா? அப்போ வேன் டிரைவருக்கும் இதுல சம்பந்தம் உண்டா? இந்த ஆங்கிள்ல விசாரிக்கணும்” என்றார்.
உடனே கார்த்தி, “செகன்ட் எப்.ஐ.ஆர் போட்டு ரெண்டு பசங்களையும் பிடிச்சி விசாரிச்சா உண்மை வெளிய வரும் மேடம். அப்புறமா கொலையா, கொலை முயற்சியா… அதுக்கான காரணம், புது அக்யூஸ்டுனு இந்த கேஸ் மட்டுமில்ல, ஹராஸ்மென்ட் கேஸுமே ஸ்ட்ராங் ஆகும். ஏஞ்சல் கேஸ ஆக்சிடென்ட்-னு போட்ட ஃபர்ஸ்ட் எப்.ஐ.ஆர தள்ளுபடி பண்ண வச்சிடலாம்” என்றான்.
உடனே பெனசீர், “பைரவி கொடுத்த டீடெயில்ஸ் வச்சி அந்த ரெண்டு பசங்க மேல மர்டர் அட்டாக்னு செகன்ட் எப்ஐஆர் போடணும். நான் கமிஷனர்கிட்ட பேசி அந்த ஸ்டேஷன் சப்இன்ஸ்பெக்டரை இதைப் பார்க்க சொல்றேன்.
தினேஷ், எதுக்கும் நீங்களும் கூட இருந்து பார்த்துக்கோங்க. மெயினா அந்தப் பசங்க எஸ்கேப் ஆகிடக் கூடாது” என்றதும், “ஓகே மேடம்” என கிளம்பினான்.
அவன் சென்றதும் பெனசீர் கார்த்தியைப் பார்த்தார். செல்வி, மினி மற்றும் கண்மணி பற்றி தினேஷ் சேகரித்து வைத்திருந்த விவரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஆரம்பத்தில இவங்கதான் காரணமா இருக்குமோ-னு நினைச்சி டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணது” என்று பெனசீர் சொல்ல, கண்மணி வழக்கின் குற்றவாளி விவரங்களைக் கார்த்தி காட்டியதும், “பெயில்-ல வெளிய வந்தவனுங்கதான் ஏஞ்சல் கேஸ்ல இன்வால்வ் ஆகியிருக்காங்களா?” என்று பெனசீர் கேட்கவும், ‘ஆம்’ என்று தலையாட்டினான்.
இதுபற்றி இருவரும் ஐந்து நிமிடம் பேசியபின், “ஏஞ்சல் கேஸ்ல யாரெல்லாம் ஐவிட்னெஸ்னு பார்த்து, அவங்ககிட்ட பேசி சாட்சி சொல்ல வர வைக்கணும். நீங்க அதைப் பார்த்துக்க முடியுமா? நான் கமிஷ்னர்கிட்ட பேசணும். ஸீரோ எப்ஐஆர் ரிலேட்டடாவும் சிலது பண்ணனும்” என்றார் பெனசீர்.
சரியென தலையாட்டியவனிடம், “அன்ட்… என்னதான் பப்ளிக்க பிடிச்சி வச்சி டிமான்ட் பண்ணலைனு சொன்னாலும், அதைத்தான் அவங்க பண்ற மாதிரி ப்ரோஜெக்ட் ஆகும்.
இப்பவே போலீஸ உள்ளே அனுப்பி அவங்க மூணு பேரையும் பிடிச்சிட்டு வர முடியும். ஆனா ஏற்கனவே நிறைய காயப்பட்டிருக்காங்க. அதனால இந்த மாதிரியெல்லாம் வேண்டாம்னு நினைக்கிறேன்.
ஸோ உள்ளே உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணு இருக்காங்கள, அவங்ககிட்ட சொல்லி மூணு பேரையும் உடனே வெளிய வரச் சொல்லுங்க” என்று கேட்டுக் கொண்டதற்கு, கார்த்தி சரியென்றான்.
மேலும், ‘முதலுதவி ஏற்பாடு இருக்கிறதா?’ என்று மஹிமாவிற்காக கேட்டுக் கொண்டான்.
காவல்துறை மற்றும் சட்டத்துறையைச் சார்ந்த நபர்கள் நியாயம் கிடைக்க வேண்டுமென்ற பைரவியின் போராட்டத்திற்குத் துரிதமாக உதவி செய்ய கிளம்பினார்கள்!
இல்லை! இப்படிச் சொல்வதைவிட, அவர்கள் அவர்களது கடமையைச் செய்ய சென்றார்கள் என்று சொல்வதே சரியாகும்!!
*******************************
மனிதநேயம் பேசும் மஹிமா, பணம் கண்டு பயங்கொள்ளா பைரவி!
கார்த்தி அழைத்து அனைத்து விவரங்களைச் சொல்லியிருந்தான். அதன் பேரில் மஹிமா அவர்கள் மூவரையும் வெளியே கூட்டிச் செல்வதற்காகப் பேசிக் கொண்டிருந்தாள்!