Neer Parukum Thagangal 9.1

NeerPArukum 1-18091b14

Neer Parukum Thagangal 9.1


நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் 9.1

சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன்

செல்வி மீண்டும் பேசத் தொடங்கையில், “நல்லபடியா மேரேஜ் முடிஞ்சதும் அம்மாக்கு அவ்வளவு சந்தோசம்” என்று கடுகளவு புன்னகை, சற்றே விரிய சொல்லிக் கொண்டாள்.

அந்த நேரத்தில் மகன் அசைந்ததும், அவனுக்குத் தட்டிக் கொடுத்துவிட்டு, தன் கால்களைப் பிடித்துவிட்டவளிடம், “நான் வேணா இவன வச்சிருக்கவா? நீங்க கொஞ்ச நேரம் எந்திரிச்சி நிக்கிறீங்களா?” என சரவணன் கேட்க, ‘வேண்டாம்’ என்று மறுத்து தலையசைத்து பேச்சைத் தொடர்ந்தாள்.

“எப்படிச் சொல்ல?” என்று தன்னிடமே கேட்டவள், “சுயமரியாதையே இல்லாம, ம்ம்… ஒரு அடிமைக்கு இருக்கிற குணம் இருந்தா மட்டும்தான், அவன்கூட வாழ முடியும்” என வேதனையான குரலில் சொன்னாள்.

ஒரே வரியில் வாழ்ந்த வாழ்வை விவரித்துச் சொல்லிவிட்டு மௌனமானாள்.  அவளது திருமண வாழ்வு சரியாக அமையவில்லை என்றளவிற்குத் தெரியும். ‘எப்படி?’ என முழுவதும் தெரியாது. அதனால், ‘என்ன பேச நினைக்கிறாளோ, அதைப் பேசட்டும்!’ என்று அவனும் அமைதியாக இருந்தான்.

மனதினைச் சமன்படுத்திக் கொண்டு, “மேரேஜ் நடந்து கொஞ்ச நாள் லைஃப் நல்லாத்தான் போனது. எப்போ நான் வேலைக்குப் போக நினைக்கிறேன்னு, அவன்கிட்ட சொன்னேனோ அப்போதிலிருந்து பிரச்சனைதான்.

என்ன வேலை? எங்கே?ன்னு ஒரு வார்த்தை அதைப்பத்தி கேட்கலை. உடனே பயங்கிற கோபத்தோட, ‘வேலைகெல்லாம் நீ போகவே கூடாது’-ன்னு ஆர்டர் போட்டான்.  

‘ஏன் அப்படி?’ன்னு கேட்டா, ‘பொண்ணுங்க வேலைக்குப் போறதே பிடிக்காது. வீட்ட மட்டும் கவனிச்சாவே போதும். நீயும் அப்படித்தான் இருக்கணும்’-ன்னு கத்தறான்! அப்படி ஒரு எரிச்சல் வந்தது” என்றாள் அன்று எழுந்த எரிச்சலைப் பிரதிபலிக்கும் குரலில்!

“அதுக்கப்புறம் நீங்க கேட்டுப் பார்க்கலையா?”

“தினமும் கேட்டுப் பார்த்து ஓஞ்சி போயிட்டேன். சரி, இப்ப இதுக்காக சண்டை போட வேண்டாம். பின்னாடி பார்த்துக்கலாம்னு நினைச்சேன். ப்ச், அட்ஜஸ்ட் பண்ணேங்க. அதான் உண்மை!!” என்றாள் சங்கடத்துடன்!

மேலும், “வீட்ல எல்லா முடிவும் அவன்தான் எடுப்பான். அதை நான் அப்படியே ஏத்துக்கணும். வாய திறந்து எதுவும் கேட்க கூடாது. சொல்லவும் முடியாது. மீறி ஏதும் கேட்டாலோ, சொன்னாலோ கோபப்பட்டுக் கத்துவான்.

அவன் நினைக்கிறது மட்டும்தான் நடக்கணும்!! அவன் சொல்றதைக் கேட்டு நான் நடந்துக்கணும். எனக்கு-ன்னு ஆசை, விருப்பு, வெறுப்பு எதுவுமே இருக்க கூடாது. அப்படியே இருந்தாலும் அதெல்லாம் கண்டுக்க மாட்டான்” என்றாள் ஆதிக்க மனம் கொண்ட ஒருவனால் சமமாக நடத்தப்படாத சலிப்போடு!

“இது… இதுதான் பிரச்சனையா?” என்றான் மெல்லிய குரலில்!

‘இல்லை’ என்று தலையசைத்தவள், “குடிக்கிறது… முதல அப்பப்ப குடிச்சிட்டு வந்தான். அப்புறம் அடிக்கடி குடிச்சான். கடைசியில தினமும் குடிச்சிட்டு வர ஆரம்பிச்சான்” என்றாள் அடக்கமுடியா ஆத்திரத்துடன்!

“நீங்க எதுவும் கேட்கலையா?”

“உண்மையா சொல்றேன், கொஞ்ச நாள் இதை எப்படி ஹேண்டில் பண்ண-னு தெரியாம எனக்குள்ளயே தவிச்சி, தடுமாறுனேங்க” என்று சோர்வான குரலில் சொன்னதும், ‘கேள்வி கேட்கவேயில்லையா?’ என்பது போல் பார்த்தான்.

அவன் பார்வையை வாசித்தவள், “கொஞ்ச நாள்தான் அப்படி. அதுக்கப்புறமா அவன்கிட்ட கேட்டேன்! அதுக்கு, ‘உனக்கென்ன? என் இஷ்டம்! இனிமே இப்படி கேள்வி கேட்டு என் முன்னாடி வந்து நிக்காத!’-ன்னு வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சான்!!

ஆனாலும் கேட்டுக்கிட்டே இருந்தேன். நான் கேட்க… கேட்க இன்னும் மோசமா நடந்துக்கிட்டான். கேவலமா திட்றது… கண்டபடி அடிக்கிறது…” என்று மட்டும் சொல்லி அனுபவித்த கொடுமைகளைத் தணிக்கை செய்து கொண்டாள்!!

“கல்யாணத்துக்கு முன்னாடி பையன் எப்படின்னு விசாரிக்கலையா?”

“பெரியப்பாதான் விசாரிச்சு நல்ல விதமாதான் சொல்றாங்கனு சொன்னாரு. என்னத்த விசாரிச்சாரோ?!”

“உங்க தாத்தாவோ அம்மாவோ விசாரிச்சிருக்கலாம்!” என்றவன், “இதைப் பத்தி வீட்ல சொன்னீங்களா?” என்று கேட்டான்.

“சொல்லாம இருப்பேனா?? அவன் பண்ற கொடுமையைச் சொல்லி, என்னால இங்கே இருக்க முடியாதுனு அழுதேன். எங்க வீட்லருந்து வந்து அவன உட்கார வச்சி அட்வைஸ் பண்ணாங்க. கூடவே, பொறுமையா இரு-ன்னு என்கிட்டயும் சொல்லிட்டுப் போயிட்டாங்க” என்றாள், குடும்பத்தினரின் அணுகுமுறையில் உடன்பாடில்லாத குரலில்!

“அதுக்கப்புறமாவது…??” என்றான் பாதி கேள்வியாய்!

“அதெல்லாம் கேட்டு திருந்திறவனா அவன்?” என்றாள் பட்டென்று!!

“அம்மாகூட அப்படித்தான் சொன்னாங்களா?”

“அம்மா பேசவே இல்லைங்க. பேசவே முடியலை. அழுதுக்கிட்டே இருந்தாங்க. பேசினதெல்லாம் மத்தவங்கதான்” என்று வாடின குரலில் சொன்னாள்!

“அப்போ, அதுக்கப்புறமும் அங்கதான் இருந்தீங்களா?”

“ம்ம், பெரியவங்க சொல்றாங்க… அம்மா அழறாங்க… இதனால இருந்தேன்னு சொல்ல முடியாது. என்னைத் தெளிவா ஒரு முடிவெடுக்க விடாம இதெல்லாம் ரொம்பவே பாதிச்சது. எப்பவுமே குழப்பமா இருந்தேன்…” என்று உறுதியற்ற குரலில் சொல்லும் பொழுதே, “புரிஞ்சிக்க முடியுது. விடுங்க” என்றான்.

அதன்பிறகும் சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு, நிமிர்ந்து அவனைப் பார்த்து, “அப்படி ஒரு குழப்பத்தில இருக்கிறப்பதான்… அவனோட இன்னொரு கெட்டபழக்கம் தெரிய வந்தது. இனிமே அங்க இருக்கவே கூடாதுனு என்னை முடிவெடுக்கவும் வச்சது” என்று மணவாழ்வு முடிவடைந்ததைக் கூறினாள்.

சரவணன் ஏதும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, “அவன்கிட்ட ஒழுக்கமும் இல்லை” என தன்னை கொடுமை செய்தவனின் திருமணத்திற்கு புறம்பான உறவைப் பற்றிச் சொல்லி, “அதான்… அப்படிப்பட்ட ஒருத்தனோட வாழ வேண்டாம்னு வந்துட்டேன்” என்றாள்.

மேலும் அவளே, “உடம்புக்கோ, மனசுக்கோ நோயிருந்தா எப்படியாவது சரி பண்ணிடலாம்னு நினைச்சி வாழ முடியும். ஆனா குணத்துக்கு நோயிருந்தா எப்படிச் சகிச்சிக்க முடியும் சொல்லுங்க?” என்று சரவணனிடம் கேட்டாள்.

அவன் அமைதியாக இருந்ததும், “அதுக்கப்புறம் ஒரு நிமிஷம் கூட நான் அங்க இருக்கலை. யார்கிட்டயும் கேட்டுக்கிட்டு இருக்கலை. கிளம்பி எங்க வீட்டுக்கு வந்துட்டேன்” என்று ஏதோ விடுதலை கிடைத்த உணர்வோடு சொன்னாள்.

“இதை முதலயே பண்ணியிருக்கலாமே?”

“நீங்க இப்படிச் சொல்றீங்க! ஆனா எங்க வீட்ல நடந்ததே வேற?”

“ஏன் என்ன சொன்னாங்க?”

“வீட்ல எல்லாரும், ‘நீ இப்படி இருந்தா, அம்மா கவலைப்படுவா. வா, உன்னைக் கொண்டு விட்டுட்டு… இனி ஒழுங்கா இருக்கணும்னு அவன்கிட்ட சொல்றோம். பொறுமையா இரு. அவனை மன்னிச்சி ஏத்துக்கப் பாரு. அதான் நல்லது’-ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அவன் வீட்லயுமே இதேதான் சொன்னாங்க!

அவங்க யார் பேச்சையும் நான் கேட்கலைனதும் இஷ்டத்துக்குத் திட்டுவாங்க. அப்பெல்லாம் கஷ்டமா இருக்கும். என் அப்பா இருந்திருக்கலாம்னு தோணும்” என்று அன்றைய தன் நிலையை எண்ணி வருத்தத்துடன் பேசினாள்.

மேலும் செல்வியே, “இப்படிப்பட்ட குணத்தோட இருக்கிறவனைப் பொறுத்துப் போறதுக்குப் பேர் பொறுமையா? அப்படி ஒரு பொறுமையோட இருக்கிறதுல எனக்கென்ன பெருமை?

மன்னிக்கிறது நல்ல விசயம்தான். ஆனா எதை மன்னிக்கிறோம்னு இருக்குல. தெரிஞ்சே ஒழுக்கமில்லாம இருக்கிறவன எப்படி மன்னிக்க முடியும்? அப்படி மன்னிச்சா… அது என்னோட மன்னிக்கிற மனப்பாண்மை இல்ல. என்னோட முட்டாள்தனம்… இல்லையா?” என்று கேட்டாள்.

அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமல், “உங்க அக்காவும் இப்படித்தான் பேசினாங்களா?” என்று கேட்டான்.

“இல்லைங்க. ‘குழந்தை வர போகுது. யோசிச்சிதான் முடிவெடுக்கியா?’-ன்னு மட்டும் அக்கா கேட்டாங்க”

“நீங்க என்ன சொன்னீங்க?”

“பெரியவங்க சொல்ற மாதிரி பொறுமையா இவன சகிச்சிக்கிட்டு வாழ்ந்தா, இந்த குணமெல்லாம் சகஜம்னு என் குழந்தைக்கு நானே சொல்லித்தர மாதிரி ஆயிடாதா? அதான் இதுல யார் பேச்சையும் நான் கேட்கலைனு சொன்னேன். அக்கா அதைப் புரிஞ்சிக்கிட்டாங்க”

இந்த விடயத்தில் அவளது அனுகுமுறை பிடித்து… அவள் மீது ஒருவித மதிப்பு, மரியாதை வந்திருந்த நிலையில், “உங்க அம்மா?” என்றான்.

“என்னோட வாழ்க்கையை சரியா அமைச்சிக் கொடுக்கலை-ங்கிற கவலை அம்மாக்கு வந்திருச்சி. அதோட அவங்களை மாதிரியே தனியா பிள்ளையை வச்சிக்கிட்டு கஷ்டப்படுவேனோங்கிற பயம் அதிகமா இருந்தது.

அப்படியே அமைதியாயிட்டாங்க. அழுதுக்கிட்டே இருப்பாங்க. எதுவுமே பேச மாட்டாங்க. எப்பாவாது ‘என் பொண்ண எதுவும் பேசாதீங்க’-னு சொல்வாங்க. என் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு அம்மாக்கு ரொம்ப கவலை” என்று தொண்டைக் குழியில் தட்டிக் கொண்டே சொன்னாள்.

“மறக்கணும்-னு நினைச்சதெல்லாம் ஞாபகப்படுத்திட்டேனோ?”

நா நரம்புகள் தழுதழுக்க, “மறக்கலாம் முடியாதுங்க. அவ்ளோ பட்டாச்சு” என, விழிகள் நனைவது போல் இருந்ததும் தொண்டையை நனைக்க நினைத்தவள் சுற்றிலும் பார்க்க, “தண்ணீ?” என்று அவள் பார்வை புரிந்து அவன் கேட்க, “ம்” என்றாள் விழிகளில் லேசாக ஈரம் துளிர்க்க!

சரவணன் கொண்டு வந்து தந்த தண்ணீரைக் குடித்தபடியே, கண்களின் ஈரம் கன்னங்களில் இறங்காமல் இருந்திட பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள்!

அவனோ அவளையே பார்த்திருந்தான்!

சில இடங்களில் அவளது நேர்மறை எண்ணங்கள், சில விடயங்களில் அவளது அணுகுமுறை, சில கஷ்டங்களில் அவளது சமாளிப்புகள்… இதமாக உணர்ந்த சரவணன் மனதில், செல்விக்கான சிறு ப்ரியம் துளிர்க்க காரணமாயிற்று!!

*********************************

கருத்தாய் பேசும் கண்மணி, சேது!

எப்பொழுது கண்ணீர் சிந்துவாள் என காத்திருந்தவனிடம், “ஓ! அழுதுக்கோ-ன்னு சொல்றியா?” என்றாள், மெனக்கெடல் எடுத்து ஒருவித மென்னகையை வரவழைத்து!

‘ஆமாம்’ என்பது போல் அவன் மெதுவாக தலையசைக்கவும், “கண்ணீரைக் கன்ட்ரோல் பண்ணியே பழகிட்ட-னா… அழணும்னா கூட தலையணைகிட்ட மட்டும்தான் அழுதிருக்கேன்! இப்படி திடீர்னு ஒருத்தர் முன்னாடி அழறதுக்கு வரலை” என்றாள், நீர்படலத்தில் நீந்தும் கருவிழிகளுடன்!

நீர்கோர்த்த விழிகளையே பார்த்தவனிடம், “இருந்தாலும்… நீ சொன்னதுக்கு தேங்க்ஸ்” என்ற பொழுதே ஒரே ஒரு துளி கண்ணீர் குதித்து வர, “ம்ம்ம், உன் பேரென்ன?” என கேட்கையில், மேலும் சில கண்ணீர் துளிகள் மடமடவென குதித்தன!

சூழ்நிலைக்குச் சம்பந்தமில்லாத முறுவல் ஒன்றை தந்துவிட்டு, “இப்பத்தான் கேட்கணும்னு தோணிச்சா?” என்றவன், “சேது” என்று சொல்லி, ‘அழ வரலை-ன்னு சொல்லிட்டு, நீ அழற கண்மணி!’ என்பது போல் கண்ணீர் துளிகளைச் சுட்டிக் காட்டினான்.

கன்னத்தை தொட்டுப் பார்த்து, “எஸ்! அழறேன்” என்று ஒப்புக் கொண்டவள், “ஏன்… ஏன் எனக்கு இப்படி நடக்கணும்?” என்று ஒடுங்கிய குரலில் சொல்லி, “ஏன் சேது?” என்று விழிநீர் விழ விழ உடைந்து கொண்டிருந்தாள்.

உடையச் சொன்னவனே அவன்தானே! அதனால் கடமையே என்று கண்மணியைப் பார்த்திருந்தான்!!

“சேது… அப்பாக்கு என்னாலதான இப்படின்னு ரொம்ப கஷ்டமா இருக்கு!” என்று அடிமனதின் கவலைகளைக் கண்ணீர் திவலைகளாக வெளியேற்றினாள்.

‘கடமையே’ என்ற பார்வை கொஞ்சமாக உடைவது போலிருந்தது சேதுவிற்கு!

“ஜாப்ல என்ன அச்சீவ் பண்ணாலுமே சந்தோஷமோ… திருப்தியோ வர மாட்டிக்கு. யாரையும் நம்பவே முடியலை. எப்பவும் ஆபத்து இருக்குற மாதிரி, பாதுகாப்பே இல்லாத மாதிரி… ச்சே! என் லைஃப் இனிமே இப்படித்தானா சேது?” என்று சரமாரியாக சங்கடங்களைக் கொட்டினாள்.

கண்மணியின் கண்ணீரும், கவலைகளும், சங்கடங்களும், ‘கடமையே’ என்று பார்ப்பதை கைவிடவைத்து, அவளுக்காக சிறிதளவு மனம் கலங்குவது போல் சேது உணர்ந்தான்!

“ரொம்ப கஷ்டமாயிருக்கு சேது. ரொம்பவே” என சொல்லி, வேதனை தாங்காமல் குலுங்கிக் குலுங்கி அழுதாள்!

சற்று நேரம் அறை முழுவதும் அவள் அழுகைச் சத்தத்தின் எதிரொலிப்புகள் மட்டுமே! எதிரொலிப்பின் பிரதிபலிப்பாய் சிறிதளவு கலங்கிய அவன் மனம், பெரிதளவு அவளுக்காக வருத்தப்படுவது போல் சேதுவிற்குத் தோன்றியது!!

கண் நரம்புகள் சிவக்க அழுதிருந்தவள், “நான் இவ்வளவு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன் சேது… தப்பு பண்ணவனுங்க, வெளிய சுத்திட்டு இருக்கிறானுங்க!” என்றாள் மேலும் கண்ணீர் வடிந்தபடி!

கண்ணீர் வடிக்கும் கண்களைப் பார்த்தவன், “அரஸ்ட் நடந்ததுனு சொன்ன?” என கேட்டதும், “நடந்தது! பட் பெயில் கிடைச்சிருச்சி” என்றாள் வெறுப்புடன்!

“அதெப்படி கண்மணி? இது நான்-பெயிலபில் செக்ஷன் இல்லையா?”

“ஓ! ரியலி!!?” என்று நக்கலாக ஆச்சரியப்பட்டவள், “இதுவரைக்கும் இங்க எந்த ரேப் அக்கியூஸ்ட்-க்கும் பெயில் கிடைச்சதே இல்லையா சேது? ம்ம்ம்??” என்று அழுதபடியே ஆவேசத்துடன் கேட்டாள்!

அவள் அழுகையை ‘எப்படி நிறுத்த?’ என்று புரியாமல், ஆவேசத்திற்கு ‘என்ன பதில் சொல்ல?’ என்று தெரியாமல் சேது மௌனமாக இருந்தான்.

“என் லாயர் எவ்வளவோ ட்ரை பண்ணாங்க!! என்னை டிஸ்டர்ப் பண்ணவோ, மிரட்டவோ, விட்னஸ கலைக்கவோ கூடாதுனு கன்டிஷன் பெயில் கிடைச்சது” என நிறுத்தியவள், “அதைத்தான் டைஜஸ்ட் பண்ணவே முடியலை சேது” என சுக்கலாய் நொறுங்கிய குரலில் சொல்லி அழுதாள்.

கண்மணி மனம் நொறுங்கிக் கொண்டிருப்பதை, தன் மனதால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையோ என்று எழுந்த கேள்வியுடன் சேது அமைதியாக இருந்தான்!

அவளோ, “தண்டனை கிடைக்காத வரைக்கும் எல்லா தப்புமே இங்கே வெறும் சம்பவம்தான்! இந்த சமுதாயம் தண்டனையைக் கடந்து போக முடியாது. பட் சம்பவத்தை ஈஸியா கடந்து போயிடும்! ஏன்… மறந்தும் போயிடும்! அதுதான் இங்க நடந்துக்கிட்டு இருக்கு” என்றாள் வெறுமையாக!

மேலும், “ஆனா பாதிக்கப்பட்டவங்கதான் மறக்கவும் முடியாம… ப்ச், கடந்து போகவும் முடியாம…” என வெறுத்துப் போய் அழுதாள்.

கண்மணி பேசுவது சரிதான் என்றாலும், ‘தனக்குள் ஏதோ சரியில்லை!’ என்ற உள்ளுணர்வு வருவது போல் தோன்றவும், “ஏன் எதையெதையோ பேசிக்கிட்டு இருக்க?” என கேட்டு சேது எழுந்துவிட்டான்.

அவன், ‘என்ன உணர்கிறான்?’ என்று கவனிக்கின்ற நிலையில் இல்லாததால், “எதையெதையோ-வா? தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கிடைக்கணும்னு போராடிக்கிட்டு இருக்கேன். அதான் இப்படிப் பேசறேன்” என்றாள்.

கண்மணியின் குரல் இதற்கெல்லாம் சாக்குபோக்கு சொல்லாத நியாயம் என்ற நீருக்காக காத்திருக்கும் தாகத்துடன் ஒலித்தது!

வெகு இயல்பாய் இருப்பது போல காட்டிக் கொண்டு, “சரி, அழுதது போதும்! நிறுத்திக்கோ கண்மணி!” என்று சொல்லிப் பார்த்தான்.

“இதுல ஒரு கூட்டம் அந்த நேரத்தில அங்க எதுக்கு போகணும்? தப்பிக்க ட்ரை பண்ணியிருக்கலாமே? என்ன டிரஸ் போட்ருந்துச்சோ?-ன்னு பேசிக்கிட்டு இருக்குதுங்க! எப்படித்தான் முடியுதோ!?” என்றாள் காட்டமாக!

“இதுக்கெல்லாம் காரணம் பொண்ணுங்கள வேல்யூலெஸ்ஸா, ஆப்ஜெக்ட்-டா பார்க்கிற கண்ணோட்டம்தான்! அப்படிக் காட்டுற சினிமா, விளம்பரங்கள் மீடியாதான்!

பொண்ணுங்க தைரியமா இருக்கணும்னு சொல்ற மூவிலகூட பாதிக்கப்பட்ட பொண்ண சூசைடு செய்ய வைக்கிறது. வேற யாரோ அதுக்காக போராடறது. இது விழிப்புணர்வு மாதிரி தெரியலையே!?! இந்த மாதிரி பொண்ணுங்களாம் வாழறதுக்கே தகுதி இல்லைனு ரெஜிஸ்டர் பண்ற மாதிரி இருக்கு!!” என்றாள் கடுங்கோபமாக!

“பொண்ணுங்க பயப்படாம இருக்கணும்னு சொல்றதெல்லாம் ஓகே! ஆனா அதே சமயம் இப்படியொரு தப்பு பண்ண நாலு பேருக்கு உடனே தண்டனை கொடுத்து, அடுத்து தப்ப நினைக்கிறவனுக்கு ஏன் ஒரு பயத்தைக் கொடுக்க மாட்டிக்கிறாங்க?” என்றாள் ஆவேசமாக!

கடைசியாக, “இதுக்கு ஒரு நிரந்தரமா தீர்வு வர்ற வரைக்கும் இந்த சில்ட்ரன்ஸ் டே, விமன்ஸ் டேலாம் எதுக்குனு சொல்லு? ப்ச்… ஹேஷ்டேக்ல கிடைக்கிறளவு நியாயம்கூட கோர்ட்ல கிடைக்க மாட்டிக்கே சேது!” என்றாள் புலம்பலாக!

அவள் பார்வையில் சமுதாயத்தின் மீதிருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தி முடித்தபின் கண்மணி பேசவேயில்லை! ஒரே அழுகைதான்!!

அவளது பேச்சுகளைக் கேட்டுக் கொண்ட சேதுவினால், அவள் கண்ணீரைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போக, “ப்ச்! கண்மணி போதும்! முதல இப்படி அழறதை நிறுத்தறியா?” என்றான் அதட்டலாக!

அப்பொழுதுதான் அவன் எழுந்து நிற்பதை… அதட்டலை… உணர்ந்தவள், “ஏன்? ஏன் போதும்? நீதான அழ சொன்ன? இப்போ என்ன?” என்றாள் அழுத்தமாக!

ஆறுதலாக பேச நினைத்த மனதை அடக்கிக் கொண்டு, “ஓகே ஃபைன்! நான் அழ சொன்னேன்னுதான அழுத!? இப்ப நான் அழாதன்னு சொல்றேன். அழாம இரு!!” என்றான் அதிகாரமாய்!

நிமிர்ந்து பார்த்தபடியே, “என் பலவீனம் தெரிஞ்சதுமே, உன்னோட பலத்தைக் காட்டிடுவியோ-ன்னு பயப்பிடுறியா சேது?!” என்றாள் அனர்த்தமாக!

“இல்லவே இல்லை!” என்றான் அதிராமல்!

“அப்ப பரிதாபம் வருதா?! பத்து பைசாவுக்கு பிரயோஜனம் கிடையாது! நீயே வச்சிக்கோ!” என்றாள் அலட்சியமாக!

“இவ்ளோ தெளிவா பேசற பொண்ணைப் பார்த்து எதுக்கு பரிதாபப்படணும்?” என்றான் அசட்டையாக!

“கரெக்ட்! தெளிவா பேசற பொண்ண ஆட்டியூட் பிடிச்சி பொண்ணு-ன்னுதான் சொல்லணும். அப்படித்தான் பொதுவா சொல்வாங்க” என்றாள் அழுகையுடன் அத்தனை ஆதங்கமாக!

அவளது கண்ணீர் கவலை தர, “போதும் கண்மணி. அழறதை நிறுத்தேன்!?” என்றான் ஆற்றமாற்றாமல்

“என்னதான் பிரச்சனை சேது உனக்கு? அழுதிட்டு போறான்னு விடேன்!?” என கத்திவிட்டு, அவனைப் பார்த்தவாறே மீண்டும் அவள் அழுதிட ஆரம்பித்ததும், ஏதும் சொல்லாமல் வந்தமர்ந்து கொண்டான்.

சிலநிமிடங்கள் இருவருக்கும் இடையே ஒர் அடர்ந்த அமைதி நிலவியது!

பின் மெதுவாக திரும்பிய சேது, கண்ணீர் சிந்தும் கண்மணியின் கண்களைச் சந்தித்து, “பாசத்தைக் காட்டிடுவேனோ-ன்னு பயமா இருக்கே கண்மணி” என பதைபதைக்கும் தன் மனதைப் பற்றிச் சொன்னான்.

கண்ணீர் சொட்ட சொட்ட, இமை தட்டாமல் அவனையே பார்த்தாள்! அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான்!!

மீண்டும் பல நிமிடங்கள் இருவரையுமே ஓர் செறிந்த அமைதி சூழ்ந்தது!!  

உண்டான காயங்கள் தனது கண்ணீரால் பாதி, அவன் கண்பார்வையினால் மீதி… கரைவது போல் உணர்ந்த கண்மணி, “பாசம் காட்டுறதுக்கு எதுக்காக பயப்படணும் சேது?” என அமைதியாக கேட்டு, தன் கன்னங்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

அதன்பின் கண்மணி அழவில்லை. மேலும் அவளையே பார்த்தவனிடம், “ஏன் சேது, இந்த மாதிரி பொண்ணுகிட்ட பாசம் காட்ட கூடாதா?” என்று அர்த்தமாக கேட்டதற்கு, அவன் சொன்ன பதிலில் அதிர்ச்சி அடைந்தாள்!!

***********************************

Disclaimer :

Opinion differs! I respect each other’s opinion!!

Leave a Reply

error: Content is protected !!