NSK–18

NSK–18

அத்தியாயம் 18

வசீயின் இதழணைப்பில் திகைத்து போனது என்னவோ ஆதினிதான். அவன் எப்படியும் தன்னுடைய இதழ் முத்தத்திற்கு தன்னை தள்ளிவிடுவான் அல்லது திட்டவாவது செய்வான் என்று எண்ணியவளுக்கு இது அதிர்ச்சியாகதான்  இருந்தது.

பெண்ணவள் மூச்சு விட சிரமப்படுவதை உணர்ந்த வசீகரன் அவளை விடுவித்தான்.

“ஏன்யா! நான் கிஸ் பண்ணா நீ ஏன் என்னை தடுக்காம இருந்த?” என்று மூக்கு நுனி சிவக்க கேட்டவளைக் கண்டு கண்ணடித்தான் வசீகரன்.

“எதுக்கு நான் தடுக்கணும் சொல்லு ஆது குட்டி? ஆசையா என்னோட ஆது இந்த மச்சானுக்கு முத்தம் கொடுக்கும்போது அதை ஏத்துக்காம இருப்பேனா என்ன” என்று அவளின் மூக்கினை பிடித்து ஆட்டினான்.

“மச்சானா? நீ ஏன் விரு இப்படி பேசுற? மண்டையில ஏதாவது அடிப்பட்டுருச்சா சொல்லு? உன்னோட நடவடிக்கையே சரியில்லையே பாஸ்” என்று விழி விரித்து தலையைச் சாய்த்து கேட்க,

அதில் மயங்கிய வசீகரன், அவளின் இடையினில் கை வைத்து அழுத்தம் கொடுக்க, அதில் பாவையவளின் உடலில் சிலிர்ப்பு ஏற்பட்டு அடங்கியது.

“நான் மச்சான் இல்லையா ஆது குட்டி?” என மூக்கோடு மூக்குரசினான்.

ஆதினியோ அவனின் புதிய வகை செயலில் பேந்த பேந்த விழிக்க, அவனோ அவளை கண்டு நமட்டு சிரிப்பொன்றை சிந்தினான்.

“இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க? முதல்ல கையை எடுங்க” என அவனிடமிருந்து விடுபட முயல,

“இவ்வளோ நாள்தான் உன்ன விட்டுட்டேன். இனியும் விட முடியாதுடி என் ஆச அய்த்த மகளே?” என்க.

“அய்யோ! என்னை விட்டுடுங்க. நீங்க இப்படிலாம் பண்ண கூடாது. அப்புறம் நான் என்னோட அத்தை கிட்ட சொல்லிடுவேன்” என்று அவனை மிரட்டினாள்.

“என்னென்னு சொல்லுவ செல்லம். இதோ இப்படி கட்டிப்பிடிச்சு நெத்தியில முத்தம் கொடுத்தேன்னா… இல்லை இப்படி உன் கன்னத்துல கடிச்சு வச்சதையா… இல்ல உன் இடையை கிள்ளினதுக்கா சொல்லு” என்றவன் இறுதியில் அவளில் இதழில் இளைப்பாறியவன், ”இதையுமா…” என ஒவ்வொன்றையும் பண்ணவும் அவளால் மூச்சு விடவே சிரமப்பட்டாள்.

“என்ன மூக்கெல்லாம் சிவக்குது. மச்சான் பண்ணுனது மேல கோபமா இல்ல மச்சான் பண்ணி காட்டுனதுல வந்த வெக்கமா” என அவளை சீண்ட நினைத்து பேசினான்.

அதனை கேட்ட ஆதினி அவனின் நெஞ்சத்தில் மஞ்சமென சாய்ந்து கொண்டாள். வசீகரனுக்கு அந்த நொடி ஏகாந்த நேரமாக அமைய, அதை சோப்பு போட்டு அழிப்பது போல் அவளின் கண்ணீர் அவனின் வெற்று மார்பில் பட்டு தெறித்தது.

“ஹே! ஆது மா” என்று பதறியவனாய் அவளை அவனிடம் இருந்து பிரித்தான் வசீகரன்.

“எதுக்கு இப்போ அழுகுற?” என்று இரு கன்னத்தையும் தாங்கி கேட்க,

“எனக்கு ஏன் கண்ணெல்லாம் வேர்க்குது தெரியல கரண், ஆனா வேர்க்குது. அதுக்கு காரணம் இது உண்மையா பொய்யான்னு தெரியல. இனி இப்படி ஒரு காதல் எனக்கு கிடைக்காதுன்னு நினைச்சா, இல்ல என் கண்ணு முன்னாடி ஒரு காதலி என்னை மாதிரியே வந்து நிக்கிறாளே அவளுக்கு என்னால எதுவும் செய்ய முடியலைன்னு வேர்க்குதா, எனக்கு தெரியல. ஆனா வேர்க்குது கரண்” என்று மூக்குறிஞ்சிய படியே வார்த்தையோடு கண்ணீரையும் வெளியிட்டாள்.

“என்னோட நங்கை அம்மா வளர்ப்பு இப்படி அழுகலாமா சொல்லு? தைரியமா இருக்க வேணாமா நீ. உன்ன நம்பி எவ்ளோ பெரிய பொறுப்பை உனக்கு கொடுத்திருக்கேன். என்னைய கன்னத்துல அடிச்ச பொண்ணு எங்க போனா ஆது மா. அவளை எங்கேயாவது பார்த்தியா என்ன? காதல் வந்தா தன்னையே மறந்துடுவாங்கன்னு சொல்லுவாங்களே அது இது தானா” என்று ஆதங்கத்துடன் ஆரம்பித்தவன் நக்கலாக முடித்திருந்தான்.

“என்ன மிஸ்டர் விருமாண்டி உங்களுக்கு அடி வாங்கி ரொம்ப நாள் ஆச்சில அதான் ஓவரா வாய் நீளுதோ. அப்புறம் பாருங்க பேசுறதுக்கு வாயில்லாம ஒட்ட வெட்டிடுவேன்” என புன்னகையோடு மிரட்டல் விட்டாள் ஆதினி.

அதனை ரசனையுடன் பார்த்தவனை, ஆதினி வியப்புடன் நோக்கினாள்.

“நான் ஒன்னு உங்ககிட்ட கேக்கலாமா கரண்?” என்று அவனை விட்டு தள்ளி நின்று கேட்டாள்.

“கேட்கலாமே மிஸ் ஆதினி, உங்களுக்கு பதில் சொல்லதான் இனி இந்த வசீகரன் இருப்பான். ‌உங்களோட அடிமையா மாற நான் தயார் பா” என்று தோள்களைக் குலுக்கி கட்டிலில் அமர்ந்தான்.

“இதெல்லாம் எப்படி சாத்தியம் ஆச்சி? உங்களுக்கு எப்போ என்மேல காதல் வந்துச்சின்னு தெரிஞ்சிக்கிலாமா?” எனத் தலை சாய்த்து கேட்டாள் ஆதினி.

“ஹோ! தெரிஞ்சிக்கலாமே. பட் நான் சொல்ல மாட்டேன் நீயே கண்டு பிடி. அப்படி கண்டு பிடிக்க முடியலைன்னா உனக்கு பனிஷ்மெண்ட் இருக்கு. அதை பண்ணா நான் எப்போ எனக்கு காதல் வந்துச்சின்னு சொல்றேன் சரியா” என பூனையைப் போல் எதையோ யோசித்து இதனை கேட்டான்.

மேலே பார்த்து யோசிப்பது போல் பாவனை செய்தவள், “ஹான், நான் கண்டு பிடிச்சிட்டேன். உங்களோட பேரை சொல்லி அவமானப்படுத்தி பேசினதுல சிம்பத்தில வந்துடுச்சி அதானே” என்று சந்தோஷத்தில் ஆரம்பித்து கவலையில் முடித்தாள்.

“ஹோ! மை கேர்ள், நீ தப்பா பதில் சொன்னதுனால உனக்கு இப்போ பனிஷ்மெண்ட் இருக்கு, ரெடியா செல்லம்” எனக் கண்ணடித்து கேட்டான் வசீகரன்.

“சீக்கிரமா சொல்லுங்க பண்ணி தொலைக்கிறேன்”

“நீ என்ன பண்ணணும்னா… எனக்கு லவ் யூ கரண் மச்சான்னு சொல்லி இங்க ஒரு உம்மா கொடுக்கிற ஓகேவா” என்றான் நமட்டு சிரிப்போடு.

“ச்சீ! இதெல்லாம் ஒரு பனிஷ்மெண்டா. நானெல்லாம் பண்ண மாட்டேன் பா. நீ எப்போ என்னைய காதலிக்க ஆரம்பிச்சன்னு எனக்கு தெரியவே வேணாம். உன்னோட காதல் மட்டும் போதும்” என்று சிட்டாக பறந்து விட்டாள்.

அதனை ரசனையுடன் பார்த்தவன் ஒரு சிரிப்போடு கிளம்ப ஆயத்தமானான்.

அதன் பின் வந்த நாட்கள் யாவும் அங்கிருந்த அனைவருக்கும் சந்தோஷமாகவும் கலகலப்பாகவும் சென்றது.

மிளனிக்கு மட்டுமே சிறிது துக்கமாக நாட்கள் கடந்தது. விபுவும் வேலை, வேலை முடிந்ததும் வீடு என இருந்து விட, இருவரும் சந்திக்கும் நாள் வரவில்லை.

இன்னும் இரண்டு வாரத்தில் திருமணம் என்றிருந்த நிலையில் சென்னையில் இருந்தபடியே பத்திரிகை அடிக்க கொடுத்திருக்க, அன்று ஒன்றிற்கு இரண்டாக பாக்ஸில் பத்திரிக்கைகள் வந்திருந்தது.

“என்ன இது ரெண்டு பாக்ஸ்ல பத்திரிகை வந்திருக்கு” என்று யோசித்தபடியே அதனை திறக்க போன பரணியிடம், ”வேணாம் பெரியப்பா திறக்காதீங்க எல்லாரும் வந்திடட்டும். அதுல ஒன்னு எனக்கு வந்த பார்சல்” என்றான் வசீகரன்.

“சரி நீ போய் எல்லாரையும் கூப்பிடு” என்றவர் அமர்ந்து விட்டார்.

முதலில் விபுவிற்கு அழைத்து வேகமாக வீட்டிற்கு வர சொன்னவன் வீட்டிலுள்ள அனைவரையும் ஹாலிற்கு வரவைத்தான்.

“எதுக்கு கூப்பிட்ட வசி?” என பாரி கேள்வி கேட்க,

“கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க பா. விபுவை வர சொல்லி இருக்கேன். அவன் வந்ததும் நான் உங்க எல்லார்க்கிட்டயும் எதுக்கு வர சொன்னேன்னு சொல்றேன்” என்றவன் வாசலையே விழிவிரித்து பார்த்தான்.

“அவனுக்காக எதுக்கு காத்திட்டு இருக்கணும். உன்னோட நண்பன்னா அதை உன்னோடவே வச்சிக்கோ தம்பி. இப்படி வயசு பொண்ணுங்க இருக்கிற இடத்துக்கெல்லாம் கூப்பிட்டாத பா” என பேச்சியம்மாள் அறிவுறுத்த,

“இங்க பாருங்க பாட்டிமா… அவன் எனக்கு ஒரு நண்பன்னு சொல்றதை விட. அவன் எனக்கு இன்னொரு அம்மா மாதிரிதான் . எனக்காக எப்படி நங்கை அம்மா எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்றாங்களோ அதே மாதிரிதான்  அவனும் பாட்டி. என்னால அவன் மாற்றான் வீட்டு பையனா பார்க்க முடியாது. அப்படிதான் பாக்கணும்னு இருந்தா, அப்படிபட்ட கண்ணே எனக்கு தேவையில்லை” என்றான் உணர்வுப்பூர்வமாக.

அந்த நேரம் பார்த்து உள்ளே வந்த விபுனன், வசீகரன் சொன்னதை கேட்டு ஓடிச் சென்று நண்பனை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“இதுங்க என்ன இப்படி பொசுக்கு பொசுக்குன்னு கட்டி பிடிச்சிக்கிதுங்க. எனக்கு ஒன்னு தோனுது மிளனி” என்று ஆதினி அவள் காதில் கிசுகிசுக்க,

“உனக்கு அப்படி என்ன தோனுது?” என கேள்வியாய் நோக்க,

“எனக்கு என்னமோ உன்னோட ஆளு அதான் விபு அண்ணா, என்னோட ஆளைதான் காதலிக்கிறானோன்னு தோனுது டி” என்று விரிசல் விட்டிருந்த இதயத்தில் கல்லை தூக்கி போட்டாள் ஆதினி.

‘என்ன?’ என்பது போல் முகபாவனைக் காட்ட,

“ஆமாம் மிளா, இதுங்க ரெண்டும் ஆனா ஊன்னா கட்டி பிடிச்சுக்குங்க. இதை நானே நிறைய தடவை பாத்துருக்கேன். இதுல இதுங்க கண்ணாலே கூட பேசிக்குவாங்கடி அப்புறம் உன்னோட இஷ்டம்தான் எல்லாம் பா” என்று திரும்பி நின்றுகொண்டாள்.

“அதான் உன்னோட இன்னொரு அம்மாவும் வந்தாச்சுல. இப்போவாவது என்னென்னு சொல்றது” என்று பரணி கிண்டலாக கூற,

“இதோ! இதோ!” என அவனிடம் இருந்த பாக்ஸை எடுத்துக் கொண்டு பூஜை அறைக்குச் சென்றான்.

“இவன் என்னத்த தான் பண்றானோ தெரியலையே” என்று மனதினுள்‌ நினைத்தவாறே அவனையே பார்த்திருந்தனர் நங்கையும் பாரியும்.

சாமி அறையில் அப்பெட்டியை வைத்து சாமி கும்பிட்டவன் வெளியே வந்து விபுவின் கையில் திணித்து, “இதை திறந்து பார்த்து என்னோட அம்மா, அப்பா கிட்ட கொடுடா. இது அவங்களுக்காக இந்த மகன் கொடுக்கிற சின்ன பரிசு. அதை நீ கொடுத்தா நான் சந்தோஷப்படுவேன்” என்க.

புன்னகையோடு அதனை வாங்கி பிரிக்க தொடங்கினான்.

‘இப்படி ஒரு தெய்வீக காதல் எனக்கு கிடைக்குமா’ என்பது போல் ஆதினி வசீகரனையே பார்க்க, அவனோ எதார்த்தமாக ஆதினியின் புறம் திரும்ப, அவள் தன்னையே நோக்குவது கண்டு இதழ்குவித்து முத்தமொன்றை கொடுக்க, அதில் அவனை முறைத்து முகத்தை திருப்பி கொண்டாள் பாவையவள்.

அதனை பிரித்து பார்த்தவன், ஒரு புன்சிரிப்போடு, ”நீ சாதிச்சிட்ட மச்சான்” என்றவன், ”இப்படி ஒரு பரிசை இன்ன வரைக்கும் எனக்கு தெரிஞ்சி யாருமே கொடுத்திருக்க மாட்டாங்க” என்றவன் ஒரு பத்திரிகையை எடுத்து அவர்கள் கையில் கொடுத்தான்.

அதில் பாரிவேந்தர் என்ற பெயரும் தேவநங்கை என்ற பெயரும் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு அதற்கு மேல் திருமண அழைப்பிதழ் என்றிருந்தது.

அதனை கண்ட இருவருமே பல உணர்ச்சிக்களுக்குள் சிக்கி தவித்தனர்.

அனைவரும் அது என்னவென்று நோக்க, இருவரும் அழுகை கூடிய சிரிப்புடன், ”இது அவன், எங்களுக்காக எங்களோட கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்கிற திருமண அழைப்பிதழ்” என்றனர்.

அதனை கேட்ட அனைவருக்குமே சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆதினியோ தன் காதலனை பெருமிதத்தோடு நேரிட்டாள். அவளுக்குமே இந்த செய்தி கண் கலங்க வைத்தது.

என்னதான்  இருவரும் சட்ட பூர்வமான கணவன் மனைவியாக இருந்தாலும் தாலி கட்டி தன்னவளாய் ஆட்கொள்வது போல் இருக்காதே. அதுமட்டுமின்றி இவர்கள் இணைந்தது முதல் இந்த நாள்வரை இருவரும் தனித்து தானே இருக்கின்றனர். இது இவர்களின் இத்தனை கால பிரிவினை போக்க கூடிய நல்ல மருந்தாக இருக்குமே.

சௌந்தர்யாவிற்கோ வார்த்தை வர வில்லை. வசீயிடம் சென்றவர், ”நீ ஒரு பையனா நிறைய விஷயம் செஞ்சிட்ட பா. இங்க பலரும் சுயநலமாதான்  இருக்கோம். ஆனா நீ உன்னோட பெத்தவங்களுக்காக யோசிச்சு பண்ற. நீ வயசுல சின்ன பையனா இருந்தாலும் மனசால உயர்ந்து பொய்ட்ட வசி. நீ எப்பவும் நல்லா இருக்கணும் பா” என்று கண்ணீரோடு ஆசிர்வதித்து சென்றார்.

“அபி அண்ட் பூங்குழலியோட மேரேஜ் முடிஞ்ச அடுத்த நாளே நல்ல நாளா இருக்கவும் அன்னைக்கு அம்மாக்ககும் அப்பாக்கும் கல்யாணத்தை நடத்தலாம்னு நான் முடிவு பண்ணி இருக்கேன். சோ எல்லாரும் முன்ன நின்னு என்னோட அம்மா, அப்பா கல்யாணத்தை நடத்தி தரணும்” என்று அனைவரிடமும் வேண்டினான்.

“இது எங்களோட கடமை வசி. இனி அபியோட கல்யாணத்தோட இந்த கல்யாணத்தையும் பண்ணிடலாம்” என்று தோள் தட்டி கொடுத்தார் பரணிதரன்.

விபுனன் வந்ததிலிருத்தே மிளினியின் பார்வை அவனிடம்தான். முதலில் மிளனியை பார்த்த விபுவிற்கு அது யாரோ என்பது போல்தான்  இருக்க, அதன்பிறகே அது மிளனி என்று அவள் பார்வை வீச்சால் கண்டு கொண்டான்.

“சரி மச்சி நான் கிளம்புறேன்” என்க.

“சரிடா போய் ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணி வச்சிக்கோ மச்சி. நாம எல்லாரும் நாளைக்கு நைட் ஊருக்கு போறோம். வேன் சொல்லி இருக்கேன் அதுலையே ஊருக்கு பொய்டலாம்” என்றான்.

அதன் பின் அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் என ஓடிவிட்டான்‌ விபுனன்.

“என்கிட்ட இருந்து பயந்து ஓட பாக்குறீயா நீ. உனக்கு இருக்கு நாளைக்கு. நீ கிளம்பி வா உனக்காக நான் காத்திருக்கேன்” என்று கை இரண்டையும் சோம்பல் முறித்து உள்ளே சென்றாள். 

error: Content is protected !!