O Crazy Minnal(22)

thumbnail_large-48186c63

22

 அதிகாலை நாலரை மணி, அப்படிதான் அவளது கை கடிகாரம் சொல்லியது.

ஆனால் அவள்தான் அதை நம்பமாட்டாமல் அந்த சாலையையே விழி விரித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள். 

அவள் என்று பிரம்ம முஹூர்த்ததில் எல்லாம் விழித்திருக்கிறாள்? அதெல்லாம் என்றாவது நடக்கும் அதிசய சம்பவங்கள்தான்.

 

உடலை உரசிச் செல்லும் காலைநேர பனிக்காற்றும் வெளிச்சம் பரவியிராத, இருள் கவ்விய வானமும் கூட அவள் ரசனைக்குரியதாகத்தான் இருந்தது.

காரணம் அவள் மனநிலை!

 

“இந்த பேகையும் உள்ள வச்சிரலாமா?” என்ற நரேந்திரனின் குரலில் நடப்புக்கு வந்தவள் அவனிடம்

 

“ஷோல்டர் பேக்தானே நானே வச்சிக்கறேன்” என்றுவிட

 

“ம்ம்ம்” என்று அவளிடம் தலையை ஆட்டியவன் மற்ற பைகளை உள்ளே எடுத்து வைப்பதில் அந்த காரோட்டிக்கு உதவ சென்றுவிட்டான்.

 

அந்த இருளையே வெறித்து நின்றவள் தன் பார்வையைத் திருப்பாது நரேனிடம் 

“ஏன் நரேன், இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும்?” என்று வினவினாள்.

அவனோ ‘ஓ.. நரி நரேனாயிடுச்சா? பரவாயில்லையே’ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டவன் வெளியே

 

“இங்கிருந்து இன்னும் ஒரு ஒன் ஹார் ட்ராவல்தான் யாழி” என்றுவிட்டு மற்ற வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிட்டான்.

 

அந்த காரோட்டியோ இவளை ஒரு ஆச்சர்யப் பார்வை பார்க்க நரேந்திரனின் குரல் அவரை கலைத்தது.

 

“செல்வமண்ணா! கிளம்பலாம்” என்றவன் இவள் புறம் திரும்பி 

 

“கிளம்பலாம் யாழி!” என்க அவளும் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ரேவதியின் பக்கம் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

நரேந்திரனால் செல்வமண்ணா என்று அழைக்கப்பட்ட செல்வமோ இன்னும் ஆச்சரியம் விலகாமலேயே வண்டியை உயிர்ப்பித்தார்.

 

நாலே கால் வண்டி வரும் என்றதால் நான்கு மணிக்கே வந்து காத்துக்கிடந்தவர் அவர். காரணம் வரவிருப்பது நரேந்திரனும் அவரது குட்டி தேவதை ரேவதியும் என்றவுடன் அதிகாலையிலேயே குதூகலமாகக் கிளம்பியிருந்தார்.

 

நரேந்திரனின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக வசதியானவர்கள்.

நகரின் முக்கிய பகுதிகளில் தங்களது டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரை வைத்திருந்தவர்கள் இன்று அதை மாநில அளவில் உயர்த்தி இருந்தனர்.

அவர்களது குடும்பத்திற்கென்று தனி மதிப்பும் மரியாதையும் இருந்தது.

சத்யா & கோ வில் வேலை என்றால் அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டது என்று எண்ணும் அளவு!

வசதியிருந்தது, மரியாதை இருந்தது, அதிகாரமும் இருந்தது.

ஆனால் அவன் அதை எதையுமே மற்றவர்களிடம்  காட்டிக் கொண்டதில்லை.

இல்லையெனில் அந்த ஃப்ளாட்டில் எந்தவித அனாவசிய செலவுகளுமின்றி, ஆடம்பர வாழ்க்கையின்றி, தனக்கான உணவைத் தானே சமைத்து கொண்டு, தன் துணிகளைத் தானே துவைத்துக் கொண்டும் இருந்திருப்பானா?

 

இருந்திருப்பான்! அவன் அப்படித்தான் அவனை பொருத்தமட்டில் அதெல்லாம் அவனுடைய வேலைகள்! அதை அவன் செய்வதில் அவனுக்கு எந்தவிதமான கௌரவ குறைச்சல் இல்லை என்றெண்ணினான்.

எங்கிருந்தாலும் தன்னியல்பிலேயே இருப்பவன் அவன்.

யாருக்காகவும் எதையும் மாற்றிக்கொள்ள மாட்டான். மனிதர்களை மனிதர்களாய் மதிக்கத் தெரிந்தவன் அவன்.

 

கல்லூரி படிப்பின் பொழுதே தொழில் இறங்கிவிட்டான் தந்தைக்குத் துணையாக.

ஒரு இடத்தில் சோம்பி உட்கார்ந்துவிடாத அவன் குணத்தாலேயோ என்னவோ யதீந்திரனின் செல்லப் பேரனாகிப் போனான்.  

 

அவன் ரேவதிக்கு அண்ணன் முறை என்று மட்டுமல்ல அவன் அம்மா வழியிலும் சொந்தம்.

 

அவன் அம்மா சத்யபாமா பானுமதி பாட்டி குடும்பத்தின் வழி வந்தவர்.

அவனுக்குப் பெயர் வைத்ததே யதீந்திரன் எனும்போது  பாசம் இராதா?

அவனது பிள்ளை பருவம் முக்கால்வாசி ரேவதியுடன் நெல்லையிலேயே கழித்தவன். ரேவதியும் விடுமுறையென்றால் போதும் சென்னைக்கு பெட்டியைக் கட்டிவிடுவாள்.

 

அவர்களிருவரையும் சிறுவயதிலிருந்து பார்த்து வந்தாலும் இன்று பேசும்பொழுதும் ஒரு வித மரியாதை ஒட்டிக் கொள்ளும் செல்வத்திற்கு.

அவரும் அவர்கள் வந்து இறங்கியதில் இருந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார் நரேந்திரனிடம் குறிஞ்சி பேசும் விதத்தை!

 

அவளது உரிமையான பேச்சும் ‘வா போ’ என்ற அழைப்பே அவரது ஆச்சரியத்திற்கான காரணம்.

 

அவன் சொன்ன நேரத்திற்கு முன்பே சரியாக ஒரு முக்கால் மணி  நேரத்தில் வண்டி இரு பெரிய இரும்பு கதவுகளுக்கு முன் வந்து நின்றது. 

கதவுகள் திறந்து கொள்ள நீண்ட நெடிய பாதையில் வண்டி வழுக்கிச் சென்றது.

வலதுபுறத்தில் அழகாகப் பச்சை பசேலென லான் அமைத்திருந்தனர்.

விடியத் தொடங்கியிருந்த வேளையில் அந்த லான் அவள் கண்களுக்குக் குளிர்ச்சியாய் இருக்கக் கீழே இறங்கிய மறுநொடி ஆழ மூச்செடுத்தாள்.

 

இவர்களின் வரவிற்காக காத்திருந்தவர்போல வண்டி வாசலில் வந்து நின்றவுடன் படியிறங்கி வந்த நடுத்தர வயது பெண்மணியைக் கண்டு  செல்வம் மரியாதையாக புன்னகைக்க ரேவதியோ “பெரியம்மா!” என்ற அழைப்புடன்  ஓடிச் சென்று கட்டிக் கொண்டாள்.

 

“வா வா வா” என்று அவளை சிறுபிள்ளைபோல் அனைத்துக் கொண்டவர்தான் சத்யபாமா என்று குறிஞ்சிக்கு யாரும் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை.

காரணம் முதலில் அவரது தோற்றம், நரேந்திரனை ஒத்திருந்த அவர் தோற்றத்திலேயே இவராகத்தான் இருக்கும் என்று எண்ணி கொண்டிருக்க இரண்டாவதாக ரேவதியின் அழைப்பு.

 

அவளுக்குப் பெரியம்மா என்றால்?  நரேந்திரனுக்கு அம்மாதானே? என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கப்  பெரியவரின் கவனம் இப்பொழுது  அவள் புறம்.

அதைக் கவனித்த நரேந்திரனோ அவரை  முந்திக் கொண்டவனாக 

 

“அம்மா! இவதான் யாழி” என்க அவரும் முகம் நிறைந்த புன்னகையுடன்.

 

“ஓ.. நீதானாமா? உன்ன பத்தி நரேன் நிறைய சொல்லிருக்கான். ரொம்ப அழகான பேருமா உனக்கு” என்றவர் அவள் தோள்களில் கைபோட்டுப் பேசிக்கொண்டே உள்ளே அழைத்துச் செல்ல அவளுக்கானால் 

‘என்னடா இது?” என்று ஆச்சரியமாய் போனது. ஆனால் சற்று நேரத்திலேயே அந்த சூழலுக்கு அவள் பொருந்திவிட இருவரின் பேச்சும் நீண்டு கொண்டே போக உள்ளே வந்த நரேந்திரனோ பொருத்து பொருந்து  பார்த்தவன் ஒரு கட்டத்தில் பொங்கிவிட்டான். 

“இதெல்லாம் அநியாயம்! அந்த கடவுளுக்கே அடுக்காது!” என்க அவன் குரலில் திரும்பிய சத்யாவோ 

 

“என்ன கண்ணா?” என்றார் பரிவாக

 

“இத்தனை நாள் கழிச்சு வந்துருக்கானே அவன கவனிப்போம்னுலாம் இல்லாம மூணு பேரும் கதை கதையா பேசறீங்க!” என்று பொய் கோபம் காட்ட 

அதை அறிந்தவர் அவன் தோளில் லேசாக தட்டியவர் “படவா! முதல் தடவ வீட்டுக்கு வந்துருக்கா பேச விடமாட்டியே!” என்று அவனை கேலியாய் பார்த்துவிட்டு  பின் மணியை பார்த்தவர் 

 

“ப்ரயாண களைப்பு இருக்கும்!  மேல வெண்ணீர் ரெடியா இருக்கும் போய் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க  நைட் வேற ட்ராவல் பண்ணனும்ல மறுபடியும்” என்றவருக்கு அவர்களது இரவு பயணத்தில் துளியும் விருப்பமில்லை இருந்தும் என்ன செய்ய  முடிவெடுத்துவிட்டான் கேட்டால் ஆயிரம் காரணம்.

 

எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்  அவனிடம் “கண்ணா நாங்க நாளன்னைக்கு கிளம்புவோம் எல்லாரும் சேர்ந்தே கிளம்பலாம், ஒரே நாள் அலைச்சல் வேணாம்” என்று அவன்தான் கேட்ட பாடில்லை!

 

“நைட் பஸ்ல சரியா தூங்க முடிஞ்சிதோ என்னவோ இப்ப கொஞ்ச நேரம் தூங்குங்க நான் அப்புறமா எழுப்பறேன்” என்றார்

 

அவரது ‘தூங்க முடிஞ்சிதோ என்னவோ’வில் குறிஞ்சியைப் பார்த்தவன் கேலியாகப் புன்னகைக்க அவளோ பார்வையாலே  ‘உன்ன!’ என்று தாளித்திருந்தாள். இரவின் தனிமையை அவன் ரசித்துக் கொண்டிருக்கும்பொழுது அங்கு வந்தவள், நன்றாக பேசிக் கொண்டிருந்தவள் வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட 

 

நடந்தவை அனைத்தையும் அசைபோட்டு கொண்டிருந்தவன் சிந்தனை கலைந்தவனாக நிகழ் உலகிற்கு வர அவளைப் பார்த்தால்..

அவளோ கண்ணாடி யன்னலில் தலை சாய்த்தவாறு கண்ணயர்ந்திருந்தாள்.

அவளை இனி இங்கிருந்து அந்த சீட்டிற்கு தூக்கிச் செல்வதெல்லாம் நடக்காத காரியம்! தூக்க முடியாமல் இல்லை.

தூக்கமே வரல என்றவள் அசந்து உறங்குகிறாள்! இப்பொழுது தூக்க முயன்றால் விழித்துவிடக்கூடும். என்றெண்ணியவன் அவளை அங்கேயே  சரியாகப் படுக்க வைக்க முயன்றான்.

 

ஒரு ஓரமாக யன்னலை ஒட்டி அமர்ந்து கொண்டவன் அவள் தலைக்கடியில் தனது புல்லோவரை வைக்க முயல அவளோ திரும்பி அவன் மடியிலேயே தலையை வைத்து உறங்க ஆரம்பித்துவிட்டாள்.

 

அவனானால் ‘என்னடா இது? இப்படி தூங்கறா?’ என்று தோன்றினாலும் அவள் அசந்து தூங்குவதைக் கண்டு எழுப்ப மனமின்றி விட்டுவிட்டு இசையும், இருளும் என்று அவன் பயணத்தை ரசிக்கலானான்.

மயிலிறகின் வருடலாய் அவள் அவன் மடியில்!

அப்படித்தான் இருந்தது அவனுக்கு.

 

அவனது கேலிச் சிரிப்பில் அவனை கொலைவெறி பார்வை பார்த்தவள் ரேவதியுடன் மாடியேறினாள்.

 

சத்யா அவளுக்கென்று ஒதுக்கியிருந்த அறைக்கு சென்றவள் அலுப்பு போகக் குளித்துவிட்டு வந்து மெத்தையிலேறி  அமர்ந்து கொண்டாள்.

அவளானால் தன்னையே  திட்டிக் கொண்டிருந்தாள்   

 

‘இப்படியா தூக்கித் தொலைப்ப? பாரு அவன் எப்படி கலாய்க்கறான்!’ என்று தன்னையே திட்டிக் கொண்டிருந்தாள்.

 

அவ்வளவு நேரம் ஒரு சொட்டு தூக்கம் வராமல் கொட்டக் கொட்ட விழித்திருந்தவள்தான். ரேவதி தூங்கிய பின்னும் இருளை வெறித்தவாறு அமர்ந்திருந்தாள். ஏதேட்ச்சையாக பார்த்தவள் அவனும் தன்னைப்போல் விழித்திருப்பதைக் கண்டு அவனுடனாவது பேசிக் கொண்டிருக்கலாம் என்று அங்கு வந்தமர்ந்தாள்.

 

ஆனால் ஏனோ அவ்வளவு நேரம் வராத தூக்கம் அவனுடன் அமர்ந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கண்ணயர்ந்துவிட்டாள். 

காலையில் அவன் எழுப்பவுமே எழுந்தவள் ஒரு அசட்டுச் சிரிப்பைச் சிரித்து வைத்துவிட்டு ரேவதியுடன் போய் அமர்ந்து கொண்டாள் அவனும் அவளை எதுவும் சொல்லவில்லை.  

 

“அய்யோ இந்த நரி வேற இத சொல்லியே கலாய்ப்பானே இனிமே!”  என்று வாய்விட்டே புலம்பியவளுக்குத்தான் புரியவில்லை 

 தான் அவன் அருகில் இருக்கும் பொழுது வரும் பாதுகாப்புணர்வும், அதனால்தான்  அவ்வளவு நேரமும் ‘ஐம் எக்ஸைட்டட்!’ என்று ஒரு வித படபடப்பிலிருந்தவள் அவன் அருகில் வந்தமர்ந்து சில நிமிடங்களிலேயே அந்த படபடப்பு குறைய நிம்மதியான உறக்கம் அவளை தழுவிக் கொண்டது.

 அது ஏன் என்று புரியாமல் அவள் குழம்ப அவனோ எதற்கென்று தெரியாவிட்டாலும் அது ஒரு இனிமையான உணர்வாய், மனதில் மயிலிறகின் வருடலாய் இனிக்க ஆராயாது விட்டு விட்டான்.

 

இரவு எட்டரை மணி.

அந்த ஹை வேயில் சீரான வேகத்தில் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவனின் மனமோ பின்னோக்கிச் சென்றது.

 

வீட்டிலிருந்து கிளம்பும் தருவாயில்,

ஆயிரம்  பத்திரம் சொன்ன பின்னும் தாயின் முகம் தெளியாமல் இருப்பதைக் கண்டவன் அவரிடம் வந்து 

“அம்மா ப்ளீஸ்மா!” என்றான் இறைஞ்சுதலாக

அவர் இன்னும் தன் பார்வையை மாற்றாமல் அவனையே பார்த்து வைக்க அவனே தொடர்ந்தான்.

 

“ப்ளீஸ்மா எப்படியும் இந்த வாரத்துல நீங்க ரெண்டுபேரும் வந்துருவீங்க, நானும் எக்ஸ்ட்ராவா கொஞ்ச நாள் ஊர்ல ஸ்பெண்ட் பண்ணலாம்” என்றான் கெஞ்சலாக 

அவன் கண்களையே உற்று நோக்கியவர் “ம்ம்ம்.. அதெல்லாம் இருக்கட்டும் யாழி யாரு?” என்றார்.