Pallavan Kavithai-09

PKpic-07e8f833

Pallavan Kavithai-09

ஊரின் ஒதுக்குப்புறமாக காவிரிக்கு அண்மையில் அமைந்திருந்த அந்த வீடுகள் மிக அழகாக இருந்தன. அடர்ந்த காடு போல செழித்திருந்த விருட்சங்களின் கிளைகள் அந்த இடத்திற்கு இன்னும் கூடுதலான அழகைக் கொடுத்தது.

வீடுகள் என்றால் பலதல்ல… இரண்டு வீடுகள்தான். ஆர்ப்பாட்டம் இல்லாமல் தென்னை ஓலைகளால் கூரை வேயப்பட்டிருந்தாலும் நல்ல விசாலமாக இருந்தன. இரண்டு வீடுகளையும் அடுத்தாற்போல ஒரு சிறு கட்டடம் இருந்தது. அதில் ஒரு முதியவர் சிறுவர்களுக்கு ஏதோ பாடம் சொல்லிக்கொண்டிருந்தார். அதற்கடுத்தாற்போல காலியாக இருந்த இடத்தில் இரு வாலிபர்கள் வாட்போரில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள்.

இருவரையும் பார்த்தால் அத்தனை வயதிருக்கும் போல தெரியவில்லை. பதினேழு பதினெட்டு பிராயத்தவர்கள் போல அவர்கள் முகங்களில் செழுமையும் யௌவனமும் பொங்கி வழிந்தன.

அவர்கள் இருவரின் கையிலுமிருந்த வாள் அனாயாசமாக சுழன்று கொண்டிருந்தது. வயதில் சிறியவர்களாக இருந்த போதும் வாள் சுழற்றுவதில் அவர்களுக்கிருந்த திறமை பார்ப்பவர்க்கு வெகு விந்தையாக இருந்தது.

“மைத்ரேயி! போதும் நிறுத்து! அவன் சிறு பிள்ளை.” குரல் வந்த திசையைச் சட்டைச் செய்யாமல் அங்கே போர் மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்தது.
‘இது என்ன விந்தை?! ஆண்பிள்ளைகள் இருவர் சண்டைப் போடுகிறார்கள் என்று பார்த்தால் பெண்பிள்ளையின் பெயரைச் சொல்லி அழைக்கிறார்கள்!’

“முடியாது அம்மா! சிறுபிள்ளைப் போல அமைதியாக இருக்காமல் என்னோடு போருக்கு வந்தானல்லவா? நன்றாக வேண்டி கட்டட்டும்!”

‘ஆஹா! பதில் சொன்னது பெண் குரல்தான்! ஆனால் பாரப்பதற்கு ஆண்போல ஆடை அணிந்திருக்கும் இந்த பெண் யார்?’

“மைத்ரேயி! நீ விட்டு கொடுக்காதே! பயலுக்கு வாய் ரொம்பவே ஜாஸ்தியாகிவிட்டது, அக்கா என்ற மரியாதை கொஞ்சம் கூட இல்லை.”

இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே சிறுவனின் கையிலிருந்த வாள் தூர பறந்தது.

“ஹா… ஹா…” அந்த பெண் வாய்விட்டு சிரிக்க சிறுவனின் முகத்தில் அசடு வழிந்தது.

“என்ன அருள்மொழி… இனிமேலாவது என்னோடு வம்பிற்கு வராமல் ஒதுங்கிவிட வேண்டும், புரிகிறதா?”

“அது முடியாது அக்கா, என்றைக்காவது ஒருநாள் உன்னை நான் ஜெயிப்பேன்!”

“நடக்காது தம்பி, என்னை ஜெயிக்க இனி ஒருவன் பிறந்துதான் வரவேண்டும்!”

“அதையும் பார்க்கலாம் அக்கா!” இருவரும் பேசிய படியே இதுவரைத் தங்கள் சண்டையைப் பார்த்து கொண்டிருந்த அன்னையர் முன்பாக வந்து உட்கார்ந்து கொண்டார்கள்.

“அருள்மொழி, உன்னிடம் எத்தனைத் தரம் மைத்ரேயியிடம் சண்டைக்குப் போகாதே என்று சொல்லி இருக்கிறேன்? கேட்காமல் போய் எதற்கு மீண்டும் மீண்டும் தோற்று போகிறாய்?”

“அம்மா! நீங்கள் எனக்கு அம்மாவா? இல்லை அக்காவிற்கு அம்மாவா?” பதினைந்து பிராயங்களே நிறைவுற்றிருந்த அந்த சிறுவன் மகிழினியை பார்த்து கோபித்து கொண்டான். அவன் முகத்தில் இப்போது சினம் துளிர்த்திருந்தது.

“ஹா… ஹா… அடேய் சிறு பிள்ளையே! என் சித்தி உன்னைப் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு எப்போதுமே நான்தான் முதன்மை, அதை நீ முதலில் புரிந்து கொள்.”

“பெரியம்மா! அப்படியென்றால் உங்களுக்கு ஆண்பிள்ளை இல்லாத குறையைத் தீர்க்க வந்தவன் நான்தானே? நீங்கள் அப்படித்தானே அடிக்கடி சொல்வீர்கள்? உங்களுக்கு நான்தானே முக்கியம்?”

“ஆமாம் அருள்மொழி! அதிலென்ன சந்தேகம் உனக்கு? உங்கள் தாத்தாவிற்கு அடுத்ததாக நம் குடும்பத்தின் வாரிசு நீதானே? எனக்கு எல்லாமே நீதான்.”

சொன்ன தன் பெரியம்மாவை இறுக கட்டிக்கொண்டான் சிறுவன். மகிழினி தன் தோழியைத் திரும்பி பார்த்தாள். அவள் கண்கள் சட்டென்று கலங்கிவிட்டன.
எவ்வளவு பெரிய வார்த்தையை எத்தனைச் சுலபமாக சொல்லிவிட்டது இந்த பெண்! பெருங்கடலென வியாபித்து நிற்கும் வாதாபி சாம்ராஜ்ஜியத்திற்குச் சொந்தக்காரி! இன்றைய பல்லவ அரியணையில் பட்டமகிஷியாக அமர்ந்திருக்கும் புவனமகா தேவி இருக்க வேண்டிய இடத்திற்குச் சொந்தக்காரி!

சாதாரண தோழியின் மகனான என் மகன் அருள்மொழியை அவள் குடும்ப வாரிசு என்று சொல்கிறாளே! இந்த மனது யாருக்கு வரும்! கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள்தான்!

“மைத்…ரேயி…” தன் அம்மா மகிழினியின் மேல் சாய்ந்து கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து அழகு காட்டினான் அருள்மொழி.

“வேண்டாம் அருள்மொழி… என் பெயரை நாசம் செய்யாதே! அது எனக்கு என் அப்பா ஆசையாக வைத்த பெயராம்!”

“நீ வளர்ந்ததும் இப்படி வாள் சுழற்றி அவரோடு போரிடுவாய் என்று தெரிந்துதான் நீ பிறக்கு முன்பே அவர் போருக்கு போய்விட்டாராம் அக்கா.”

“ஆமாம்… நீ கண்டாய்!” மைத்ரேயி முறுக்கிக்கொண்டாள்.

“நீயே காணவில்லை… பிறகு நான் எங்கே காண்பது? எல்லாம் நம் தாத்தா சொன்னார்.”

“அதுவா… தாத்தாவிற்கு என் மேல் கோபம்.”

“உன் மேல் என்ன கோபம்?”

“நானும் என் அம்மாவைப் போல் அந்த வீணையைக் கட்டிக்கொண்டு அழவில்லையே என்ற கோபம்.” மைத்ரேயி அபிநயத்தோடு சொல்ல இளையவர்கள் இருவரும் சிரித்தபடி நகர்ந்துவிட்டார்கள்.

மகிழினி தன் தோழியைத் திரும்பி பார்த்தாள். வீணை என்ற சொல்லைக் கேட்டதும் அவள் நினைவுகள் எங்கே போயிருக்கும் என்று மகிழினி அறியமாட்டாளா என்ன?!

“பரிவாதனி…” மெதுவாக அழைத்தாள் மகிழினி.

“ம்…” தன் தோழியைத் திரும்பி பார்த்தாள் பரிவாதனி. பதினெட்டு வயது நிரம்பிய ஒரு பெண் குழந்தைக்குத் தாய் என்று அவளை யாராலும் ஊகிக்க முடியாதபடி அந்த வதனத்தில் இன்னும் எழில் ஏறியிருந்தது.

அந்த கண்களில் மட்டும் அவ்வப்போது சின்னதாக ஒரு சோகம் இழையோடும். அதைவிடுத்து பெண்ணின் அழகு கூடியதே அன்றி சிறிதும் குறைந்திருக்கவில்லை.

தன்னை மறைத்து கொள்வதற்காக சதா வீட்டிலேயே இருந்ததாலோ அல்லது காவிரி அன்னையின் மடியில் தஞ்சம் புகுந்ததாலோ என்னவோ அவள் மஞ்சள் குளித்த மேனி மினுமினுப்போடு இருந்தது.

“மகிழினி… என்னை அழைத்துவிட்டு நீ என்ன யோசனையில் ஆழ்ந்து விட்டாய்? ஆமாம், அண்ணா எங்கே? வெளியே போயிருக்கிறாரா?”

“ஆமாம்… யாரோ இரண்டு குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க அழைத்தார்களாம், அங்கு போயிருக்கிறார்.”

“நல்லது, அண்ணாவின் பொறுமைக்கும் திறமைக்கும் பாடம் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும்!”

“உன் அண்ணாவை நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும்!”

“ஏன்? அவருக்கென்ன குறை? உன் இம்சைகளைப் பொறுத்துக்கொண்டு இத்தனை நாட்கள் குடும்பம் நடத்துகிறாரே… அதிலிருந்தே நீ புரியவில்லையா அவர் பொறுமையையும் திறமையையும்!” பரிவாதனி சொல்லிவிட்டு சிரிக்க மகிழினியின் முகத்தில் லேசான வெட்கச்சாயைப் படர்ந்தது.

அவர்கள் கொற்கைக்கு வந்த சிறிது காலத்திலேயே உபாத்தியாயர் ஒரு நல்ல வரனாக பார்த்து மகிழினிக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்.

கந்தன் மிகவும் நல்ல பையனாக இருந்தான். அந்த ஊரின் சமஸ்கிருத கடிகையிலே உபாத்தியாயராக இருந்த கந்தனை சேந்தனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

தன் குடும்பத்திற்கும் இப்போது ஒரு பொறுப்பான ஆண்பிள்ளை துணையாக வேண்டும் என்பதால் கந்தனை எந்தவித தயக்கமும் இல்லாமல் தெரிவு செய்தார் சேந்தன்.

உபாத்தியாயரின் எண்ணத்தைப் பொய்ப்பிக்காமல் நடந்து கொண்டான் கந்தன். காலப்போக்கில் கந்தனுக்கும் மகிழினிக்கும் அழகானதொரு ஆண்குழந்தைப் பிறந்தது. அருள்மொழி என்று அதற்கு உபாத்தியாயரே நாமகரணம் சூட்டினார்.

“ஏது… என் தோழிக்கு வெட்கம் எல்லாம் வருகிறது!”

“அதை விடு பரிவாதனி…”

“எதை விடச் சொல்கிறாய்? சதா என் அண்ணனின் கண்கள் இந்த பொல்லாத பெண்ணையே வட்டமிடுகின்றதே… அதை விடச்சொல்கிறாயா?”

“ஆமாம் ஆமாம்… உன் அண்ணனுக்கு அந்த பாடப்புத்தகங்களைக் கட்டிக்கொண்டு அழுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது! இதில் அவர் கண்கள் என்னை வட்டமிட்டு விட்டாலும்!”

“அடடா! எனக்கு இது தெரியாமல் போனதே! பொறு பொறு… இன்றைக்கு அண்ணன் வீட்டிற்கு வந்ததும் முதலில் இந்த பஞ்சாயத்துத்தான்.” கலகலவென்று சிரித்த தோழியை ஆசையாக பார்த்தாள் மகிழினி.

“நீ இப்படி சிரித்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன பரிவாதனி!” பரிவாதனியின் முகம் இப்போது சட்டென்று வெறுமையைத் தத்தெடுத்து கொண்டது.

“கடல் போல பரந்து கிடக்கும் இரண்டு ராஜ்ஜியங்களுக்குச் சொந்தக்காரி! இப்படி யாரும் அறியாத அநாதைப் போல அருவிக்கரையோரமாக சிறு குடிசையில் வசிக்கின்றாயே!” தோழியின் கவலையில் புன்னகைத்தாள் பரிவாதனி.

“இதற்கு நான் எத்தனை முறைதான் உனக்குப் பதில் சொல்வது மகிழினி?”

“நீ எத்தனை முறைப் பதில் சொன்னாலும் என் மனது ஆறவில்லையே பெண்ணே! சமயத்தில் நானும் உன் அண்ணனும் கூட இதைப்பற்றி பேசிக்கொள்வோம், அவர் கூட உன் தியாகத்தைப் பார்த்து வியந்து போவார்!”

“போதும் மகிழினி, இந்த பேச்சை விட்டுவிடு.”

“எப்படி விடுவது? என் காலம் உள்ளவரை இந்த கதையை நான் பேசுவேன் பரிவாதனி.” இப்போது பரிவாதனியின் நாசியிலிருந்து ஒரு பெருமூச்சு கிளம்பியது.
“நான் செய்தது தியாகமல்ல மகிழினி, அது என் கடமை! அதைத்தான் நான் செய்தேன்.”

“நாடு நகரமெல்லாம் மக்கள் பேசுவதை நீ அறிவாயா பரிவாதனி?”

“என்னவாம்?”

“அதுசரி… உனக்கெங்கே அதுவெல்லாம் தெரியப்போகிறது? நீதான் இந்த வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லையே!”

“விஷயத்தைச் சொல் மகிழினி.”

“மகேந்திர சக்கரவர்த்தி ஆட்சிக்கு வந்த பிறகு காஞ்சி மாநகர் கலைகளில் சிறந்து விளங்குகின்றதாம்! சைவத்திரு மடங்களும் சமஸ்கிருத கடிகைகளும் பெருகிவிட்டதாம்! சதா உளி கொண்டு பாறைகளைச் செதுக்கும் சிற்பிகள் காஞ்சி மங்கையைச் சிற்பங்களாலேயே அலங்கரிக்கிறார்களாம்!”

“நல்லது!”

“என்ன, இப்படி ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டாய் பரவாதனி? எனக்கு இவற்றையெல்லாம் மக்கள் வாய்மொழியாக கேட்ட போது எத்தனை மகிழ்ச்சியாக இருந்தது தெரியுமா?”

“அவர் ஆட்சியில் இவையெல்லாம் நடைபெறாது போனால்தான் நான் ஆச்சரியப்படுவேன், அவர் இளவரசராக இருக்கும்போதே காஞ்சியைப்பற்றி அத்தனைக் கனவுகள் கண்டார், இப்போதோ நாடாளும் சக்கரவர்த்தி! கனவுகளை நிஜமாக்கி கொள்கிறார்.” சொல்லிவிட்டு அப்பால் நகரப்போன தோழியின் கரம்பற்றி நிறுத்தினாள் மகிழினி.

“பரிவாதனி… உன் மனம் என்ன கல்லா?!” கோபமாக வந்தது தோழியின் குரல்.

“நீ என்ன சொல்கிறாய்?‌ ஏன் இப்படியொரு எண்ணம் உனக்கு வந்தது?”

“என்னால் உன்னைப் புரிந்துகொள்ள முடியவில்லைப் பெண்ணே! நீயாக இளவரசரை விட்டு பிரிந்து வந்தாய், வீரர்கள் உன்னைச் சல்லடைப் போட்டு தேடியபோது ஊரின் ஒதுக்குப்புறமாக வந்து ஒளிந்துகொண்டாய், நீயாக ஒரு வார்த்தை உன் மனதிற்கு இனியவரைப் பற்றி பேசி நான் இதுவரைக் கேட்டதில்லை, நானாக பேசும் தருணங்களில் கூட ஏதோ சம்பந்தமே இல்லாதவள் போல பேசுகிறாயே?”

“என்ன சம்பந்தம் இருக்கிறது மகிழினி?”

“மைத்ரேயி! அவளை என்ன சொல்ல போகிறாய்? அவளுக்கும் சக்கரவர்த்திக்கும் சம்பந்தம் இல்லையென்று சொல்ல போகிறாயா?”

“ஷ்… மெதுவாக பேசு! எதற்கு உனக்கு இத்தனைக் கோபம் வருகிறது?”

“இது இன்றைக்கு நேற்றைக்கு உருவான கோபமல்ல பரிவாதனி… பதினெட்டு ஆண்டுகளாக என் நெஞ்சுக்குள் தகிக்கும் அனல் இது! ஊரையும் உன் பெண்ணையும் நீ ஏமாற்றலாம்! ஆனால் என்னை ஏமாற்ற நினைக்காதே!”

“உன்னை எதற்கு நான் ஏமாற்ற வேண்டும் மகிழினி? நடந்தது அத்தனைக்கும் சாட்சியே நீதானே?”

“புரிகிறதல்லவா? பின் ஏன் என்னிடம் கூட நடிக்கின்றாய்?”

“நான் எதற்கு உன்னிடம் நடிக்க வேண்டும் மகிழினி?”

“அதைத்தான் நானும் கேட்கிறேன்? மகேந்திர வர்மரை பற்றி பேசும் போதெல்லாம் ஏதோ முற்றும் துறந்தவளைப் போல ஏன் பேசுகிறாய்? உனக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லாததைப் போல… ஏதோ தெருவில் போகின்ற பெண் போல ஏன் வேஷம் போடுகிறாய்? உன் மனம் என்ன பாறையா?” கோபத்தில் பேசிய மகிழினியின் கண்கள் நெருப்பைக் கக்கியது.

“மகிழினி… வாழ்க்கையில் எல்லோருக்கும் பல மனோரதங்கள் இருக்கின்றன, ஆனால் எல்லோருக்கும் எல்லாமும் கைக்கூடுவதில்லை.”

“ஆமாம் ஆமாம்… சில முட்டாள்கள் கைக்கூட இருப்பதையும் தட்டி கவிழ்ப்பதை நான்தான் பார்த்திருக்கிறேனே!”

“உனக்குப் புரியாது பெண்ணே! என் மனம் என்னவென்று அவருக்குத் தெரியும், புரியும்! எனக்கு அது போதும்.” நிதானமாக சொன்னாள் பரிவாதனி.

“கல்யாணம், பெண்ஜாதி, பிள்ளை, குட்டி என்று அவர் ஷேமமாகத்தான் இருக்கிறார்!” வெறுப்புடன் சொன்னாள் மகிழினி.
“என் பிரார்த்தனையும் அதுதான்! அவர் எல்லாவற்றையும் மறந்துவிட்டு பல்லவ சாம்ராஜ்யத்தின் நலனில் மட்டும் அக்கறைச் செலுத்த வேண்டும்.”
“உன்னால் எதையும் மறக்க முடியாத போது அவரால் மட்டும் அது முடியுமா?”

“முடிய வேண்டும்! தினமும் அந்த ஆண்டவனை நான் வேண்டுவதும் அதுதான், மனதின் சஞ்சலங்களை மறந்து அவருக்கு ராஜ்ஜிய பாரத்தைச் சுமக்கும் சக்தியை அந்த ஆண்டவன் நிரம்பவே வழங்க வேண்டும்.” தோழியின் பேச்சில் சினமுற்ற மகிழினி வெடுக்கென்று எழுந்து போய்விட்டாள்.
பரிவாதனியின் முகத்தில் புன்னகை அரும்பியது. இது அவ்வப்போது நடைபெறுவதுதான்.

சிம்ம விஷ்ணு மகாராஜாவின் மரணத்திற்குப் பின் என்றைக்கு மகேந்திர வர்மர் அரியணைக்கு வந்தாரோ அன்றுமுதல் தந்தைக்கு மிஞ்சிய தனையனாய் காஞ்சியின் புகழை மேலோங்க செய்திருந்தார் சக்கரவர்த்தி!

பாரதமெங்கும் காஞ்சி மாநகரின் பெருமை கொடிகட்டி பறந்தது! காஞ்சி சுந்தரியைக் கவிஞர்கள் தங்கள் காதலியை வர்ணிப்பது போல வர்ணித்தார்கள்! அன்றைய காலகட்டத்தில் கல்வியில் சிறந்தது காஞ்சியே எனும் அழியா புகழை எட்டி இருந்தது அந்நகரம்!

இந்த சேதிகளெல்லாம் காற்றில் கலந்து வாயு வேகம் மனோ வேகமாக காவிரி வரை வரும்போது அங்கிருக்கும் மூன்று ஜீவன்கள் பெருமையில் திளைக்கும்.
மகிழினி அதைப் பகிரங்கமாக வெளிக்காட்டுவாள், ஆனால் பரிவாதனியும் உபாத்தியாயரும் அமைதியாக அதைக் கடந்து விடுவார்கள்!
***

கொலு மண்டபம் முக்கியஸ்தர்களால் நிரம்பி இருந்தது. முதலமைச்சர், அமைச்சர்கள், உப அமைச்சர்கள், சேனாதிபதி, உப சேனாதிபதி, படைத்தலைவர்கள், ஊர் தலைவர்கள் என அனைவரும் ஒன்று கூடி இருந்தார்கள்.

மண்டபத்தின் உப்பரிகையில் அரச மகளிர் வீற்றிருந்தார்கள். அவர்களில் முதன்மையாக மகேந்திர வர்மரின் பட்டமகிஷி புவன மகாதேவி அமர்ந்திருந்தார். அவருக்கு அருகே அமரா தேவி அமர்ந்திருந்தார். அந்த உப்பரிகையில் வீற்றிருந்த மாதரசிகளின் அழகு வர்ணனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது! அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களின் ஜொலிப்பால் அந்த உப்பரிகையே மின்னிக்கொண்டிருந்தது!

கொலு மண்டபத்தின் நடுநாயகமாக வீற்றிருந்த தங்க சிம்மாசனத்தில் மகேந்திர சக்கரவர்த்தி அமர்ந்திருந்தார்! பண்டைக் காலம் தொட்டு பல்லவ மன்னர்களின் சிரசை அலங்கரித்திருந்த மணிமகுடம் மகேந்திரரின் சிரசையும் அலங்கரித்து தன் பாரம்பரிய அழகிற்குக் கட்டியம் கூறியது!

சக்கரவர்த்திக்கு சற்று அப்பால் இரண்டு சிறிய சிம்மாசனங்கள் போடப்பட்டு அதில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் முகத்திலிருந்தே அவர்களுக்கு அப்போதுதான் பதினாறு அல்லது பதினேழு பிராயங்கள் கடந்திருக்கும் என்று திட்டமாக சொல்ல முடிந்தது.

அவர்கள் வேறு யாருமல்ல… அவனி போற்றும் பல்லவ சக்கரவர்த்தி மகேந்திர வர்மர் புவன மகாதேவியின் குமாரர் நரசிம்ம பல்லவரும், உப சேனாதிபதி பொதிகை மாறன் அமரா தேவியின் குமாரர் நந்தி வர்மனும்தான்!

இளவல்கள் இருவரும் இரட்டையர் போல பார்க்க அத்தனைக் கம்பீரமாக இருந்தார்கள். தன் மகனையும், தங்கை மகனையும் ஒரு முறைப் பெருமிதத்தோடு பார்த்துக்கொண்ட பல்லவ சக்கரவர்த்தி தனது கற்றை மீசையை ஒரு முறை லேசாக தடவிக்கொண்டார். அவர் குரல் கணீரென்று ஒலித்தது!

“சபையோர்களே! இந்த பல்லவ சாம்ராஜ்யத்தின் அரியணையில் நான் ஏறி இன்றோடு பதினைந்து ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன!” சக்கரவர்த்தி இதைச் சொல்லி முடித்த போது சபையில் பெரிய ஆரவாரம் தோன்றியது.

“சக்கரவர்த்தி வாழ்க! மகேந்திர பல்லவர் புகழ் ஓங்குக!” என்று அங்கு கூடியிருந்த அனைவரும் கோஷமிட்டனர். சட்டென்று முதலமைச்சர் எழுந்து நின்றார். தள்ளாத அந்த வயதிலும் அவர் கண்களில் தீட்சண்யம் நிறைந்திருந்தது.

“சக்கரவர்த்தி பெருமானே! உங்கள் தந்தை சிம்ம விஷ்ணு மகாராஜா காலத்திலிருந்து நான் சேவையில் இருக்கிறேன், அவரின் மகோன்னதமான அரசாட்சியைக் கூடவே இருந்து பார்த்தவன் நான்!” சபையை ஒரு தரம் கண்களால் அளவிட்டார் முதலமைச்சர். பொதிகை மாறன் தன் தந்தையைப் பெருமைப் பொங்க பார்த்துக்கொண்டிருந்தான்!

“அப்பனுக்குப் பிள்ளைத் தப்பாமல் பிறந்திருக்கிறான் என்று நம் ஊர்களில் ஒரு முதுமொழி சொல்வார்கள்! அதைப் பொய்யாக்காமல் உங்கள் தந்தைக்கும் ஒரு படி மேலே போய் இந்த காஞ்சி மாநகரின் புகழைக் கடல் கடந்த நாடுகளிலும் பரப்பி உங்கள் முன்னோருக்கு இணையில்லா பெருமையைத் தேடி தந்திருக்கும் நீங்கள் நீடூழி வாழ வேண்டும்!”

முதலமைச்சர் பேசி முடித்ததும் மீண்டும் சபையில் ஆரவாரம் கூடியது. இப்போது சேனாதிபதி கலிப்பகையார் எழுந்து நின்றார். முதுமை அவர் முகத்திலும் சுடர்விட்டது. இருந்தாலும் இத்தனை வருடங்களும் வாள் பிடித்த அவர் கைகளில் மாத்திரம் உறுதி சிறிதும் குறையவில்லை.

“பல்லவேந்திரா! தங்கள் ஆட்சியில் பல்லவ சாம்ராஜ்யத்தின் புகழ் ஓங்கி இருக்கின்றது! காஞ்சியின் புகழ் அனைத்தையும் விஞ்சி நிற்கின்றது! தமிழ் புலவர்கள் மட்டுமல்லாது பிற மொழி கவிஞர்களும் காஞ்சி சுந்தரியின் இணையில்லா அழகைப் போற்றி கவிகள் பல பாட மன்னர்கள் பலரும் இந்த நகரின் மேல் ஆசைக் கொண்டிருக்கிறார்கள்! அதனால் இந்த மங்கையைக் காக்கும் பொறுப்பு இன்னும் எனக்கு அதிகமாகிறது! அதில் உப சேனாதிபதி அவர்களின் பங்கை நான் பெரிதும் பாராட்டுகிறேன்!” சேனாதிபதி கலிப்பகையார் இப்போது பொதிகை மாறனை திரும்பிப்பார்க்க அந்த வாழ்த்தைத் தலைதாழ்த்தி ஏற்றுக்கொண்டார் உப சேனாதிபதி.

“உப சேனாதிபதி! சேனாதிபதி கலிப்பகையார் சொல்வது எத்தனை உண்மை என்பதை நானறிவேன், உமக்கும் உம் தந்தைக்கும் இந்த பல்லவ சாம்ராஜ்யம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.”

“சக்கரவர்த்தி பெருமானே! அது எங்கள் குலத்திற்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகவே நாங்கள் கருதுகிறோம்!” பொதிகை மாறன் அரியணையை நோக்கி தலைதாழ்த்த இப்போது முதலமைச்சரும் தன் மகனோடு இணைந்து கொண்டார். உப்பரிகையில் அமர்ந்திருந்த அமரா தேவியின் கண்களில் அந்தக்கணம் பெருமிதம் தெரிந்தது!

அதன்பிறகு மந்திரிகள் பிரதானிகள் என பலரும் சக்கரவர்த்தியைப் புகழ்ந்து பேச ஆரம்பித்தார்கள். புலவர்கள் பலர் பாடிய பாடல்களுக்கு சக்கரவர்த்தி பொற்கிழி வழங்கி கௌரவிக்க சபை இனிதே கலைந்தது.

இரண்டாம் ஜாமம் அப்போதுதான் ஆரம்பித்திருந்தது. தன் அந்தரங்க அறையில் உட்கார்ந்து கொண்டு அந்த வீணையின் நாதத்தைச் சரிபார்த்து கொண்டிருந்தார் மகேந்திர பல்லவர்.

“பல்லவேந்திரா! உள்ளே வர இப்போது எனக்கு அனுமதி உண்டா?” அந்த குரல் வந்த திசையில் திரும்பினார் மகேந்திர வர்மர்.

“அடடா! பொதிகை மாறனா…‌ என்ன கேள்வி இது? உள்ளே வா.” சக்கரவர்த்தி அழைக்கவும் அந்த அறையின் உள்ளே நுழைந்து கதவை மூடினார் உப சேனாதிபதி.

நண்பர் என்ற எல்லையைத் தாண்டி இன்று உறவினன் என்று ஆன பிற்பாடும் பொதிகை மாறன் தன் எல்லைத் தெரிந்தே நடந்து கொண்டார். ஆனால் மகேந்திரருக்கு அதுவெல்லாம் கிடையாது.

“மாறா… வீணையின் வேலைகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்று விட்டன.” தான் சுயமாக தயாரிக்கும் அந்த வீணையை ஒரு முறைத் தடவிக்கொடுத்தார் மகாராஜா.

“நல்லது மகாராஜா!”

“ஏழு நரம்புகள் கொண்ட இந்த வீணைக்கு நான் விஷேடமாக ஒரு பெயர் சூட்டப்போகிறேன் மாறா.”

“அப்படியா! உங்கள் கலை ஆர்வத்திற்கு நீங்கள் உருவாக்கி இருக்கும் இந்த வீணையே ஒரு சான்று மன்னவா!”

“அது போகட்டும்… வீணையின் பெயரை நீ என்னவென்று கேட்கவில்லையே.”

“சொல்லுங்கள் மன்னவா!”

“பரிவாதனி…” அந்த பெயரை ஒவ்வொரு அட்சரமாக அனுபவித்து சொன்னார் மகேந்திர வர்மர். பொதிகை மாறன் திடுக்கிட்டு போனான்.

“பல்லவேந்திரா!”
“ஏன்? ஏன் இத்தனை அதிர்ச்சி உனக்கு மாறா?”
“மன்னவா! நீங்கள் இன்னும் அதை மறக்கவில்லையா?”

“மறப்பதா? எதை மறக்க சொல்கிறாய் மாறா? காலத்தைக் கடந்து வந்திருக்கிறேன்… மறந்து வரவில்லை!” இதுவரை மகேந்திர வர்மரின் முகத்தில் மின்னிய புன்னகை மறைந்து அங்கே ஒரு கடினத்தன்மை புகுந்து கொண்டது.
“தொலைந்து போயிருந்தால் அவளை இந்நேரம் நான் கண்டு பிடித்திருப்பேன்… அவள் என்னைவிட்டு மறைந்து போக வேண்டும் என்று எண்ணி விட்டாள், அந்த இடத்தில்தான் நான் தோற்றுப்போய்விட்டேன்.” புண்பட்ட சிங்கத்தின் குரல் கர்ஜித்தது!

“அமைதி அடையுங்கள் பல்லவேந்திரா!”
“அமைதியா! எனக்கா மாறா? அந்த வார்த்தைக்கும் எனக்கும் சம்பந்தம் உண்டா மாறா? பதினெட்டு ஆண்டுகளாக தீயை நெஞ்சில் சுமப்பது போல அவள் நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கிறேனே… எனக்கு ஏது அமைதி மாறா?”
“பல்லவேந்திரா… தங்கள் பட்டமகிஷிக்கு இதெல்லாம்…”
“தெரியும்!”

“என்ன?!”

“அவளுக்கு எல்லாமும் தெரியும், தெரிந்த பிற்பாடுதான் எங்கள் விவாகமே நடந்தது மாறா.”

“ஓ…”

“யாரிடம் எதை மறைக்க முடியும் சொல்? என்னையே நம்பி வருபவள் அவள்… அவளுக்குத் தீங்கு நினைக்க என்னால் முடியுமா?”

“உபாத்தியாயர் மகளும் உங்களுக்குத் தீங்கு நினைக்கவில்லையே பெருமானே!”

“தீங்கு நினைக்கவில்லை… ஆனால் அணையாத தீயில் என்னைப் போட்டுவிட்டு போய்விட்டாள், அவளுக்கு நான் செய்த பாவத்தைத் தினமும் நினைத்து நினைத்து என் நெஞ்சு வேகுவதை இந்த ஊரும் உலகமும் அறியாது மாறா.”

“யார் மீதும் தவறில்லை… யாரை வஞ்சிக்கவும் யாரும் நினைக்கவில்லையே மன்னவா?”

“நீ ஆயிரம் சமாதானங்கள் சொன்னாலும் என் மனம் ஆறாது.”

“வீணைக்கு அதுதான் பெயரா மன்னவா?”

“ஹா… ஹா… ஏன் அப்படி கேட்கிறாய் மாறா?” மகேந்திர வர்மர் இப்போது சிரித்தார்.

“இல்லை…”

“என் பட்டத்து ராணிக்கு என் இதயத்தின் ராணி பெயர் தெரியாது, தெரிந்ததெல்லாம் உன் நெஞ்சத்து ராணிக்குத்தான்! தாக்குதல் என்று ஆரம்பித்தால் அது முதலில் உன்னை நோக்கித்தான் ஆரம்பிக்கும், கவனமாக இருந்து கொள்!” சொல்லிவிட்டு சக்கரவர்த்தி இடி இடியென்று நகைக்க பொதிகை மாறனும் அதில் கலந்து கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!