Pallavankavithai-03

PKpic-5728ad55

Pallavankavithai-03

பல்லவன் கவிதை 03

அந்தப்புர மாளிகையின் உப்பரிகையில் இருந்தபடி விஜயமகா தேவியும் அமரா தேவியும் பேசிக்கொண்டிருந்தார்கள். எதிரே மகேந்திர பல்லவன் அமைதியாக அமர்ந்திருந்தான். அன்னையும் மகளும் அளவளாவி கொண்டிருக்க மகேந்திரனின் சிந்தனை நந்தவன மாளிகையை வட்டமிட்டு கொண்டிருந்தது.

“இன்றைக்குப் பயிற்சி எப்படி இருந்தது அமரா?”

“அதை நானே உங்களிடம் சொல்லவேண்டும் என்று இருந்தேன் அம்மா. அந்த வில்லாளிகளின் திறமைகளை நீங்கள் நேரில் பார்க்கவேண்டுமே! அபாரம்! அபாரம்!”

“அப்படியா என்ன?”

“ஆமாம் அம்மா.‌ எங்கே இலங்கை மன்னர் இதற்கு சம்மதிக்க மாட்டாரோ என்று நான் மிகவும் கவலைப்பட்டேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.”

“உன் அப்பா கேட்டு இலங்கை மன்னர் எதையும் மறுக்க மாட்டார் அமரா.”

“அப்படித்தான் அப்பாவும் சொன்னார். ஒரே நேரத்தில் மூன்று வாளிகளை வில்லில் வைத்து தொடுப்பதில் அவர்கள் விவேகமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.”

“நல்லது. நீ எல்லா வித்தைகளையும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறாய் அல்லவா?”

“ஆம் அம்மா. அண்ணாவும்…” எதையோ சொல்ல வாயெடுத்த அமரா தேவி அன்னையிடம் மகேந்திரனைக் கண் ஜாடையால் சுட்டிக்காட்டினாள். 

“நான் சொல்லவில்லை. இரண்டு நாட்களாக அண்ணா இப்படித்தான் இருக்கிறான்.” மகளின் பேச்சைத் தொடர்ந்து விஜயமகா தேவி மகனைத் திரும்பி பார்த்தார். எதையோ சிந்தித்த வண்ணம் கற்பனை உலகில் மிதந்து கொண்டிருந்தான் பல்லவ இளவல்.

“மகேந்திரா!” அன்னை அழைத்த போதும் மகேந்திரனது சிந்தனை அறுபடவில்லை. அப்படியே அமர்ந்திருந்தான். 

“மகேந்திரா!” சற்று குரலை உயர்த்தி அன்னை அழைத்த பின்பே மகேந்திரன் திரும்பி பார்த்தான்.

“அழைத்தீர்களா அம்மா?” 

“ஆமாம் மகேந்திரா. நேற்று நானும் உன் தந்தையும் உன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம்.”

“என்னைப் பற்றியா? என்னைப்பற்றி பேச என்ன இருக்கிறது அம்மா?”

“உன் விவாகத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.”

“என்ன?!” அண்ணன், தங்கை இருவருமே ஏக காலத்தில் கூவினார்கள்.

“ஏன் இத்தனை அதிர்ச்சி உங்களிருவருக்கும்? மகேந்திரனுக்கு இருபத்து மூன்று வயதாகிவிட்டது. இப்போது திருமணம் செய்யாமல் வேறு எப்போது செய்வது?” அன்னையின் கூற்றில் அமரா சமாதானம் அடைந்துவிட்டாள். ஆனால் மகேந்திரன் விழித்துக்கொண்டான்.

“திடீரென்று ஏனம்மா இந்த பேச்சு இப்போது?”

“பேச்சிற்கு இப்போது அவசியமிருப்பதாகத்தான் எனக்கும் தெரிகிறது மகேந்திரா.” அன்னையின் முகத்தில் இப்போது குறும்பு கூத்தாடியது. அமராவும் வாய்பொத்தி களுக்கென்று சிரித்தாள். 

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை அம்மா.”

“இல்லையென்று உன் வாய்தான் சொல்கிறது. நான்தான் இப்போது பார்த்தேனே. சொல் மகேந்திரா? யாரந்த இளவரசி? இலங்கை மன்னனுக்கு ஒரு தங்கை இருக்கிறாளாமே, அவளா?” அன்னையின் வார்த்தைகளில் மகன் ஆடிப்போனான்.

“ஐயையோ! அப்படி ஏதுமில்லை அம்மா.” என்றான் அவசரமாக.

“மகேந்திரா, உன் மனதில் இருப்பதை மறைக்காமல் சொல்.‌ அவள் எந்த நாட்டு இளவரசியாக இருந்தாலும் தூதனுப்பலாம். இரண்டொரு மாதங்களுக்கு முன்பாக கடாரம் போய் வந்தாயே. அங்கே யாராவது?”

“இல்லை அம்மா.” மகன் இரண்டே வார்த்தைகளில் அனைத்தையும் மறுத்தான்.

“ஏதோவொரு நாட்டின் இளவரசிக்கு மட்டுந்தான் உங்கள் மருமகளாக வரும் பாக்கியம் இருக்கிறதா அம்மா?” மகேந்திரனின் கேள்வியில் பெண்கள் இருவரும் யோசனையில் ஆழ்ந்தார்கள்.

‘அண்ணா என்ன பேசுகிறான்?!’ என்று அமரா ஆச்சரியப்பட, விஜயமகா தேவியின் சிந்தனை வேறு மார்க்கத்தில் சஞ்சரித்தது. 

இரவு கணவர் எவ்வளவோ சொல்லியும் மகேந்திரனைப் பற்றிய அந்த குற்றச்சாட்டை ஒரு அன்னையாக அவர் மனம் ஏற்க மறுத்திருந்தது. ஆனால் இப்போது மகன் கேட்கும் கேள்வியைப் பார்க்கும் போது கணவர் சொல்லிய விஷயங்கள் உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்குமோ?!

“மகேந்திரா, நீ என்ன சொல்கிறாய்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே? இந்த பல்லவ சாம்ராஜ்யத்தின் இளவரசனான உனக்கு ஒரு இளவரசிதானே மனைவியாக வர வேண்டும்? மூவேந்தர்கள் மட்டுமன்றி கடல் கடந்தும் உனக்குப் பெண் கொடுக்க பல ராஜ்ஜியங்கள் காத்துக்கிடக்க இதென்ன நீ இப்படி பேசுகிறாய்?” 

விஜயமகா தேவியின் குரலிலும் முகத்திலும் கோபம் மண்டிக்கிடந்தது. அமராதேவி கூட அண்ணன் மேல் பட்டமகிஷி இத்தனைக் கோபம் கொண்டு இன்றுதான் பார்க்கிறாள். ஆனால் மகேந்திரன் எதையும் பொருட்படுத்தவில்லை.

“மன்னியுங்கள் அம்மா.” என்றவன் விடுவிடுவென்று உப்பரிகையை விட்டு அகன்றதுமல்லாமல் மாளிகையை விட்டே வெளியேறிவிட்டான்.

“பார்த்தாயா அமரா உன் அண்ணனின் செய்கையை?”

“எனக்கு ஒன்றும் புரியவில்லையே அம்மா! நீங்கள் ஏதேதோ சொல்கிறீர்கள்… அண்ணன் வேறு கோபித்துக்கொண்டு போகிறான்.”

“உன் அண்ணனுக்குப் பித்து பிடித்திருக்கிறது.”

“பித்தா?”

“ஆமாம். இளவயதில் எல்லோருக்கும் வருமே ஒரு பித்து, காதல் பித்து. அது பிடித்திருக்கிறது.”

“என்ன?! என்ன சொல்கிறீர்கள் அம்மா?”

“முதன் மந்திரி உன் தந்தையிடம் ஏதேதோ சொல்லி இருக்கிறார். இதுவரை அதையெல்லாம் நான் நம்பவில்லை. ஆனால் உன் அண்ணன் செய்கைகள் அனைத்தும் அதுவெல்லாம் உண்மைதானென்று அடித்து சொல்கின்றன.” மீண்டும் கோபப்பட்ட பல்லவ மகாராணி உட்கார்ந்திருந்த மஞ்சத்தை விட்டு எழுந்து உள்ளே போய்விட்டார். அமராவிற்கு தலையைப் பிய்த்து கொள்ளலாம் போலிருந்தது.

***

நந்தவனத்து செண்பக பூக்களின் மணம் அந்த இடத்தையே மயக்கி கொண்டிருந்தது. கையில் ஒரு செண்பக பூவைப் பிடித்துக்கொண்டு அதில் வாசம் நுகர்ந்து கொண்டிருந்தாள் அமரா தேவி.

இரவின் முதலாம் ஜாமம் அப்போதுதான் ஆரம்பித்திருந்தது. மெல்லிய இருள் நந்தவனத்தில் பரவி இருக்க பட்சிகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பும் சத்தம் கேட்ட வண்ணம் இருந்தது.

தனக்குப் பின்னால் காலடி ஓசைக் கேட்கவும் திரும்பி பார்த்தாள் அமராதேவி. அந்த வாலிபன் அவளை நோக்கித்தான் வந்துகொண்டிருந்தான். நெடு நெடுவென்ற உயரமும் வலிந்த தோள்களும் திண்ணிய மார்புமாக இருந்த அவன் தேகக்கட்டு அவன் போரிட பிறந்தவன் என்று சொல்லாமல் சொல்லியது.

“வாரும் வீரரே! என்னைக் காக்க வைப்பதே உமக்கு வாடிக்கை ஆகிப்போய்விட்டது.”

“மன்னிக்க வேண்டும் இளவரசி. திடீரென்று அழைப்பு வந்ததால் வர கொஞ்சம் தாமதமாகிவிட்டது.” அவன் குரலில் பணிவு இருந்தாலும் உடல் மொழியில் எந்த பணிவும் தெரியவில்லை. இடைக்கச்சையில் கட்டியிருந்த பெரு வாளுக்குப் போட்டி போடுவன போல கண்கள் ஜொலிக்க மன்னன் மகளையே பார்த்தபடி நின்றிருந்தான். அவன் பார்வைச் சொன்ன செய்திகளில் அமராவிற்கு லேசாக வெட்கம் வந்தது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டாள்.

“அது சரி உங்கள் ராஜ்ஜியத்தில் ஏதேதோ விசித்திரங்கள் நடக்கின்றதாமே? அதையெல்லாம் என்னிடம் சொல்ல வேண்டும் என்று உமக்குத் தோன்றவில்லையா?”

“புரியவில்லை இளவரசி. அப்படி என்ன விசித்திரம் நடந்துவிட்டது பல்லவ சாம்ராஜ்யத்தில்?”

“ஏன்? முதன் மந்திரி உங்களிடம் ஒன்றும் சொல்லவில்லையா?”

“என் அப்பாவா? இல்லையே அரச குமாரி.”

“நல்ல அப்பா நல்ல மகன்!‌” வாய்க்குள் அமரா முணுமுணுக்க பொதிகை மாறன் முகத்தில் புன்னகை அரும்பியது.

“அரச குமாரி! நீங்கள் அழைத்த காரணத்தைச் சட்டென்று சொன்னீர்கள் என்றால் என் தலைத் தப்பும்.”

“ஏன்? உம் தலைக்கு இப்போது என்ன கேடு வந்துவிட்டது?”

“அந்தப்புர நந்தவனத்தில் நுழையும் ஆண்மகனுக்கு என்ன தண்டனை என்று உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.”

“போதும் வீரரே உம்முடைய நடிப்பு.” அமரா கோபித்துக்கொள்ள சத்தமில்லாமல் சிரித்த பொதிகை மாறன் அவளருகே வந்து பின்னோடு அவளை அணைத்துக்கொண்டான்.

“என்ன குழப்பம் அமரா? ஏனிந்த கோபம் இப்போது என் மீது?”

“என் அண்ணனின் காதலி யார்?” திடீரென்று இளவரசி வீசிய கேள்வியில் பொதிகை மாறன் அதிர்ந்து போனான்.

“என்ன? பல்லவ குமாரன் காதலிக்கிறானா?”

“ஏன்? என் அண்ணன் காதலிக்க கூடாதா?”

“திவ்யமாக காதலிக்கட்டும். ஆமாம், பெண் யாராம்?” அவள் இடை வளைத்த அவன் கை மேலும் சில்மிஷங்களில் இறங்க அதற்கு அணைப்போட்டள்.

“நான் உங்களிடம் கேள்வி கேட்டால் நீங்கள் அதையே மாறி என்னிடம் கேட்பீர்களா?” என்றாள் அமரா இப்போதும் கோபமாக. எப்போதும் அவன் அணைப்பு அவளை நெகிழ வைக்கும். ஆனால் இன்றைக்கு அதற்கும் அந்த சக்தி இல்லாமல் போனது.

“அமரா, இதோ என்னைப்பார்.” சொன்னவன் அவளைத் தன் புறமாக திருப்பி அவள் முகத்தைத் தனக்காக உயர்த்தினான். 

“பல்லவ வட எல்லையில் இருந்த சைனியத்தை இன்னும் கொஞ்சம் விரிவு படுத்த சொல்லி மன்னர் கட்டளை இட்டதால் நான் அங்கு போயிருத்தேன். இரண்டு நாழிகைகளுக்கு முன்பாகத்தான் வீடு திரும்பியிருந்தேன். உன் அழைப்பு வரவும் என் அன்னைப் பரிமாற காத்திருந்த உணவையும் புறக்கணித்து விட்டு உன்னைப் பார்க்க ஓடி வந்திருக்கிறேன். நீயும் என்னிடம் இப்படி நடந்து கொள்ளலாமா சொல்.”

“மன்னியுங்கள் உப சேனாதிபதி அவர்களே.” அப்போதுதான் அவன் முகத்தை உற்று கவனித்த அமரா அதில் விரவிக்கிடந்த சோர்வைக் கண்டாள். அவள் கைகள் இரண்டும் அவன் கன்னத்தைத் தடவிக்கொடுத்தது.

“இது முறையல்ல இளவரசியாரே!”

“எது?”

“ஒரு சாதாரண வீரனின் கன்னத்தை மன்னன் மகள் இத்தனைப் பரிவோடு தடவிக்கொடுப்பது முறையாகாது.”

“அதே வீரன் மன்னன் மகளின் இடை வளைப்பதும் இன்னும் ஏதேதோ சில்மிஷங்கள் செய்ய நினைப்பதும் மட்டும் முறையோ?” இப்போது உப சேனாதிபதி பலமாக சிரித்தான்.

“நன்றாக இருக்கிறது உங்கள் செய்கை. உங்கள் வீரர்கள் கையாலேயே பல்லவ சிறைக்குச் செல்லும் உத்தேசமோ?”

“அதற்கு இனியொருவன் பிறந்துதான் வரவேண்டும்.”

“அத்தனைத் தைரியமா?”

“பல்லவன் மகளே! பல்லவ சாம்ராஜ்யத்தின் உப சேனாதிபதி பொதிகை மாறனிடம் நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது நினைவிருக்கட்டும்.” அவன் கம்பீர குரலில் ஒரு கணம் திடுக்கிட்ட அமரா தேவி சட்டென்று ஒரு அடி பின்னோக்கி நகர்ந்தாள்.

“என்ன நடந்தது தேவி? நீயே என்னிடம் சொல்லக்கூடாதா?”

“உங்கள் தந்தை உங்களிடம் எதுவும் சொல்லவில்லையா?” 

“என் தந்தையைப் பற்றி உனக்குத் தெரியாதா அமரா? அரச விவகாரம் எதைப்பற்றியும் அவர் வீட்டில் பேசுவதே கிடையாதே.”

“இது அரச விவகாரம் அல்லவே?”

“அப்படியானால் மனிதர் பிராணனை விட்டாலும் விடுவாரே தவிர ஒரு வார்த்தையை விட மாட்டார்.”

“அதுவும் சரிதான். முதன் மந்திரியைப் பற்றி தெரிந்து கொண்டே நான் உங்களைக் கோபித்திருக்க கூடாது.”

“விஷயம் என்ன அமரா?”

“அண்ணன் யாரோ ஒரு பெண்ணைக் காதலிக்கின்றானாம்.”

“சரி, அதற்கென்ன இப்போது?”

“பெண் சாதாரண பெண்ணாம்.”

“நிச்சயம் இருக்காது. பல்லவ குமாரனையே மயக்கியவள் சாதாரண பெண்ணாக இருக்க முடியாது.”

“இந்த காஞ்சியில் வசிக்கும் சாதாரண பெண்.”

“ஓ…” இப்போது பொதிகை மாறனிற்கு விஷயம் விளங்கியது.

“அதிலென்ன பழுது இருக்கிறது அமரா?”

“நீங்கள் புரிந்துதான் பேசுகிறீர்களா?”

“…………”

“பல்லவ குமாரனுக்குப் பெண் கொடுக்க நீ, நான் என்று எத்தனைப் பேர் போட்டி போடுகிறார்கள்.”

“ஆனால் அவற்றிலெல்லாம் அவருக்கு ஆர்வம் வரவில்லைப் போல் தெரிகிறதே!”

“அதற்காக? சாதாரண குலத்தில் பிறந்த ஒரு பெண் என் அண்ணனின் மனைவி ஆவதா?” 

“ஏன் அமரா? ஆகக்கூடாதா? எனக்கு அந்த பாக்கியத்தை நீ கொடுக்கவில்லையா?”

“நீங்கள் சாதாரண குலமல்ல. பல்லவ சாம்ராஜ்யத்தின் முதன் மந்திரியின் மகன். பல்லவ சேனாதிபதி கலிப்பகையாரே போற்றும் உப சேனாதிபதி.”

“இந்த தகுதிகள் ஏதும் இல்லாவிட்டால் மன்னன் மகளின் மனதில் நான் இடம்பிடித்திருக்க முடியாதா?” இதை பொதிகை மாறன் சொன்ன போது அமரா தேவியின் முகத்தில் ஒரு சலிப்பு தோன்றியது.

“வீரரே, நான் சொல்வதைக் கொஞ்சம் நீங்கள் சரியாக புரிந்து கொள்ளுங்கள். நான் மன்னன் மகள் என்றாலும் இந்த நாட்டிற்கு ராணியாகும் தகுதி எனக்கில்லை. என் அன்னை பல்லவ சக்கரவர்த்தியின் மனைவிதான். ஆனால் பட்டமகிஷி அல்ல. ஆனால் என் அண்ணனின் நிலை அப்படியல்ல. அவர் நாளை இந்த பல்லவ சாம்ராஜ்யத்தின் முடிக்குரிய இளவரசன். நாளை அவர் பல்லவ தங்க சிம்மாசனத்தில் அமரும்போது அவருக்கே அருகே அமரப்போகிறவள் ஒரு சாதாரண பெண்ணாக இருக்க முடியாது.”

“அந்த சாதாரண பெண்ணை உன் அண்ணனுக்குப் பிடித்திருந்தால்?”

“அரச குலத்திற்கென்று பல சட்டதிட்டங்கள் இருக்கின்றன வீரரே. அதை நான் சொல்லித்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. ஒரு மன்னனின் வாழ்க்கை அவன் சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. தன் மக்களுக்கு எது நன்மையோ அதன்படியே மன்னனின் வாழ்க்கையும் அமைய வேண்டும்.”

“பல்லவ இளவலின் காதலால் மக்களுக்கு இப்போது என்ன குறை வந்து விடப்போகிறது அமரா?”

“இதை இந்த நாட்டின் உப சேனாதிபதியான நீங்களா கேட்கிறீர்கள்? உங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள் வீரரே. பல்லவ இளவலின் நடவடிக்கைகளில் உங்களுக்கு அதிருப்தி இல்லையா? சர்வசதா காலமும் கலை, கல்வி, சிற்பம், சித்திரம் என்று ஈடுபட்டுக்கொண்டிருந்தால் நாட்டை யார் காப்பது?”

“ஏன்? அதற்கு படைகள் இல்லையா? சேனாதிபதி இல்லையா? முதலமைச்சர் இல்லையா?”

“எல்லாம் இருந்தாலும் மன்னனும் சரியாக இருக்க வேண்டும். இன்னும் எத்தனை நாட்களுக்கு என் தந்தையால் இந்த ராஜ்ஜிய பாரத்தைத் தாங்க முடியும்?” கவலைத் தோய்ந்த முகத்தோடு சொன்ன பெண் விறுவிறுவென்று மாளிகையை நோக்கி நடந்துவிட்டாள். ஆனால் பொதிகை மாறன் அங்கிருந்து சட்டென்று நகர்ந்துவிடவில்லை. அமைதியாக சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

பல்லவ இளவலை அவன் சிறு வயது முதல் நன்கு அறிவான். தன் தந்தை அந்த பல்லவ சாம்ராஜ்யத்தின் முதன் மந்திரியாக நீண்ட காலம் பணியாற்றுவதால் அரச குடும்பத்திற்கும் அவர்கள் குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. 

பல்லவ குமாரனின் மாசு மருவற்ற கலை உள்ளத்தை அவன் நன்கு அறிவான். கருணை ததும்பும் அவன் உள்ளத்தில் தோன்றிய முதல் காதலிற்கு ஆயுள் இத்தனைதானா? இதை அவன் மனது தாங்கிக்கொள்ளுமா? சிந்தனைகள் வேதனையைக் கொடுத்தது அந்த இளவலுக்கு.

***

சித்தரஞ்சனை விட்டிறங்கிய மகேந்திர பல்லவன் நாதக்கூடத்திற்குள் சென்றான். அவன் நடையில் புது துள்ளல் தெரிந்தது. அவன் கண்கள் அந்த கொடி இடையாளுக்காக அங்குமிங்கும் அலைந்தன.

“யார், பல்லவ இளவலா?” அடிகளாரின் குரல் சற்றே சங்கடத்தோடு வந்தது.

“ஆமாம் அடிகளாரே.”

“வா மகேந்திரா, வந்து உட்கார்.” 

“இல்லை அடிகளாரே. நான் நம் கலைவாணியைப் பார்க்க வந்தேன்.” அத்தனைப் பட்டவர்த்தனமாக மகேந்திரன் உண்மையை ஒப்புக்கொள்வான் என்று அடிகள் கிஞ்சித்தும் எதிர்பார்த்திருக்கவில்லை. இருந்தாலும் ஏதும் புரியாதவர் போலவே கேட்டார்.

“கலைவாணியா? யாராது? அப்படி யாரேனும் இங்கு வீணைப் பயில்கின்றார்களா என்ன?”

“இல்லையில்லை… நான் பரிவாதனியைச் சொன்னேன் அடிகளே.”

“ஓ… பரிவாதனியா? அந்த குழந்தை இன்றைக்கு இங்கு வரவில்லை பல்லவ குமாரா.”

“ஏன் அடிகளே?”

“ஏதோ உடல் சௌகர்யம் இல்லைப் போலிருக்கிறது. உபாத்தியாயர் இப்போதுதான் சொன்னார்.”

“ஓஹோ! அப்படியா? பரவாயில்லை. நான் இன்னொரு நாள் பார்த்துக்கொள்கிறேன்.” சொன்னவன் வாயிலை நோக்கி வேகமாக நடந்தான்.

“பல்லவ குமாரா!”

“ஏன் அடிகளே!” மகேந்திரன் திரும்பி பார்த்தான்.

“சில விஷயங்களை விட்டு நாம் தூர நிற்பது நல்லது.” சம்பந்தமே இல்லாமல் பேசினார் அடிகளார். ஆனால் சம்பந்தம் இருப்பதைப் புரிந்து கொண்டான் இளவரசன்.

“அப்படியா? காரணத்தை நான் அறியலாமா?”

“சொல்லக்கூடியதாக இருந்தால் இந்த அடிகள் உன்னிடமிருந்து அதை மறைப்பேனா?”

“ஓ… மறைக்க வேண்டிய அளவு காரணம் பலமானதா?”

“எனக்கு நீ எந்தளவு முக்கியமோ அதேயளவு பரிவாதனியும் முக்கியம். புரிந்துகொள் குமாரா.” அடிகள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. உள்ளே போய்விட்டார். மகேந்திர வர்மன் முகத்தில் ஒரு சிரிப்பு படர்ந்தது. 

இவர்கள் அத்தனைப் பேரும் ஒளித்து ஒளித்து வைப்பதால்தான் அந்த பெண்ணைப் பற்றிய மர்மம் தன்னை இரட்டிப்பாக குடைகிறது என்று இவர்களுக்கு எப்போது புரியப்போகிறது?!

குதிரையை நேராக பரிவாதனியின் மாளிகைக்குச் செலுத்திய மகேந்திரன் எது வந்தாலும் இன்று எதிர்க்க நான் தயார் என்று மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டான். வாசலில் அவன் குதிரையை நிறுத்தியதுதான் தாமதம் மகிழினி சட்டென்று வாசலுக்கு வந்தாள். 

இளவரசனைப் பார்த்த மாத்திரத்தில் அவள் தலைப் பல்லவ குமாரனை நோக்கி தாழ்ந்தது. சட்டென்று மகேந்திரன் முகத்தில் ஒரு குறும்பு புன்னகைத் தோன்ற உள்ளே நோக்கி தன் விழிகளைத் திருப்பினான். இப்போது மகிழினியின் முகத்திலும் ஒரு இளநகைத் தோன்றியது. எதுவும் பேசாமல் நந்தவனத்தை நோக்கி நடந்துவிட்டாள்.

மகேந்திரன் முகத்தில் சந்தோஷம் கொப்பளித்தது. சித்தரஞ்சனின் கழுத்தை இறுக ஒரு முறை அணைத்தவன் மாளிகைக்கு உள்ளே போனான். 

மாளிகையின் முதலாம் கட்டில் யாரும் இருப்பது போல மகேந்திரனுக்குத் தோன்றவில்லை. 

‘உபாத்தியாயர் வீட்டில் இல்லையோ?’ என்று எண்ணமிட்டபடியே இரண்டாம் கட்டை நோக்கி நடந்தான் இளவரசன். வீட்டில் தந்தை இல்லாத போது மகளைப் பார்க்க வருவது முறையல்ல என்று புரிந்த போதும் ஆசைத் தூண்ட உள்ளே நடந்தான்.

“மகிழினி, குதிரைக் காலடி சத்தம் கேட்டதே. வந்தது யார்?” கேட்டபடி கையில் பூக்கூடையோடு நடந்து வந்தாள் பரிவாதனி. கையிலிருந்த பூக்கூடையில் பல நிறங்களில் மலர்கள் இருந்ததால் அதைப் பிரித்து வைத்துக்கொண்டே நடந்து வந்தவள் எதிரிலிருப்பவர் யாரென்று தெரியாமலேயே நடந்து வந்து கொண்டிருந்தாள். மகேந்திரனும் வாயைத் திறக்காமல் மௌனமாகவே நின்றிருந்தான்.

“மகிழினி…” வார்த்தை முடியும் போது பல்லவ குமாரனின் வலிய மார்பில் முட்டி நின்றாள் பெண். திடுக்கிட்டவள் கையிலிருந்த பூக்கூடை அவன் காலடியில் சிந்திச்சிதற அவள் தேவனுக்கு பாதபூஜை செய்தாள் பரிவாதனி.

“நலம்தானா பரிவாதனி.” மகேந்திரனின் காந்த குரல் அவள் உயிரைத் தொட்டது. பக்கத்திலிருந்த சுவரோடு ஒட்டிக்கொண்டவள் பயத்தில் என்ன பேசுவதென்று தெரியாமல் திருதிருவென விழித்தாள்.

“எதற்கு இத்தனைப் பயம்? நீ இருக்கும் இடத்தில் உன் தந்தையைத் தவிர வேறு யாருக்கு வர தைரியம் இருக்கிறது?” மிகவும் உல்லாசமாக கேட்டவனை ஓரக்கண்ணால் பார்த்தாள் பெண்.

“அப்பா… அப்பா வீட்டிலில்லை.”

“தெரியும். தெரிந்துதான் வந்தேன்.”

“மகிழினி…”

“என்னைக் கண்டதும் நந்தவனத்திற்குள் போய் விட்டாள்.”

“நான்… நான்…” அவளுக்கு வார்த்தைகள் வசப்படவில்லை. திக்குமுக்காடினாள். அந்த தையலின் திணறலில் மகேந்திரனிற்கு எல்லையில்லாத ஆனந்தம் தோன்றியது. அவளை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தான்.

“இல்லை… வேண்டாம்…”

“எது வேண்டாம்?” முகத்தில் குறும்பு மின்ன அவளைப் பார்த்து கேட்டான் மகேந்திரன். விட்டால் அழுது விடுவாள் போல நின்றிருந்தாள் பரிவாதனி.

“பரிவாதனி, எதற்கு என்னிடம் இத்தனைப் பயம் உனக்கு?”

“இது பயம் அல்ல.”

“வேறு என்ன?”

“எனக்குச் சொல்ல தெரியவில்லை.” இதைப் பெண் சொன்ன போது மகேந்திரன் ஒரு பெருமூச்சு விட்டான்.

“சொல்லுவாய்… அந்த நாளும் வெகு சீக்கிரத்தில் வரும். அது போகட்டும், உன் உடம்பிற்கு என்ன?”

“என் உடம்பிற்கு என்ன? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?”

“நினைத்தேன். ஆனால் இன்று நான் நாதக்கூடத்திற்குச் சென்ற போது அடிகளார் உனக்கு உடம்பிற்கு முடியவில்லை என்று சொன்னார்.” 

“அப்படியா?”

“ஆமாம். ஆனால் அது பொய்யென்று எனக்குத் தெரியும்.”

“எப்படி தெரியும்?” 

“அதுதான் உன்னையும் என்னையும் பிரிக்க பல சதிகள் நடக்கின்றனவே. அதில் இதுவும் ஒன்று.” சுலபமாக பல்லவ இளவல் சொல்ல பரிவாதனியின் கண்கள் குளமானது.

“பரிவாதனி! என்ன இது? எதற்கு இந்த அழுகை இப்போது?”

“பல்லவ குமாரா, வேண்டாம். உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது. இந்த ஏழையின் மனதில் வீணான ஆசைகளை வளர்க்காதீர்கள். இவற்றையெல்லாம் தாங்கும் சக்தி என்னிடமில்லை.” கண்களில் கங்கைப் பெருக பெண் அரற்றிய போது மகேந்திரன் அவள் கன்னங்களைத் தன் உள்ளங்கைகளில் தாங்கிக்கொண்டான். 

“நீ ஊர்க்குருவியா பரிவாதனி?‌ உன்னை நீ வேண்டுமானால் ஏமாற்றிக்கொள்ளலாம். ஆனால் என்னை ஏமாற்ற நினைக்காதே. உன்மேல் என் பார்வைப் படுகின்றது என்று தெரிந்த போது பல்லவ சக்கரவர்த்தியே ஆடிப்போகிறார் என்றால் நீ சாதாரண பெண்ணல்ல பரிவாதனி.”

“அதற்கு வேறு காரணம் கூட இருக்கலாம் அல்லவா?”

“அது என்ன காரணம்? மகேந்திர பல்லவனிற்கே புரியாத காரணம்?”

“தகுதியில்லாத ஓரிடத்தில் தன் மகனின் பார்வைப் படர்கின்றதே என்று ஒரு தந்தையாக மகாராஜா பதறி இருக்கலாம்.”

“கற்பனைப் பிரமாதம்.”

“இது கற்பனை அல்ல மன்னவா. இதுதான் நிஜம். புரிந்துகொள்ள மறுப்பது நீங்கள்தான்.”

“போதும் நிறுத்து பெண்ணே உன் பிதற்றலை. நீ அறியாத பல விஷயங்களை இந்த மகேந்திரன் அறிவான். அதை நிரூபிக்கும் நாளும் அதிக தொலைவில் இல்லை. அப்போது நீ அனைத்தையும் புரிந்து கொள்வாய். அத்தனைச் சுலபத்தில் இந்த மகேந்திர பல்லவன் உன்னை விட்டுவிட மாட்டான்.” கோபத்தில் கர்ஜித்த பல்லவ இளஞ்சிங்கம் அத்தோடு அந்த மாளிகையை விட்டு வெளியேறி விட்டது. ஆனால் பரிவாதனி துடிதுடித்து போனாள்.

நின்ற இடத்திலேயே சிறிது நேரம் நின்றபடி இருந்த பெண் அதற்கு மேலும் தன் உடலின் பாரத்தைத் தாங்க முடியாமல் நிலத்தில் சரிந்தாள். குலுங்கி குலுங்கி அழுதவளின் முதுகை ஆதரவாக ஒரு கரம் தடவிக்கொடுக்க நிமிர்ந்து பார்த்தாள் பரிவாதனி. அருகே மகிழினி அமர்ந்திருந்தாள். தோழியைப் பார்த்த மாத்திரத்தில் அழுகைப் பீறிட்டுக்கொண்டு வந்தது பெண்ணிற்கு.

“ஏன் இந்த பிடிவாதம் பரிவாதனி? இளவரசர் அத்தனைச் சீக்கிரத்தில் உன்னை விட்டு விலகி விடுவார் என்று நீ நினைக்கிறாயா?”

“இந்த அன்பிற்கு ஆயுள் அதிகமில்லை மகிழினி.”

“அதை உணர வேண்டியவரே உணர மறுக்கும் போது உன்னால் என்ன செய்ய முடியும் பரிவாதனி?” 

“முயன்ற வரை மறுக்க முடியும்.”

“ஏன்? உனக்கு இளவரசரைப் பிடிக்கவில்லையா?” இதைப் பெண் கேட்ட போது பரிவாதனியிடமிருந்து கிளம்பிய கேவல் அவள் நேசத்தின் அளவைச் சொன்னது. மகிழினியின் மனம் தோழிக்காக வேதனைப்பட்டது.

“பரிவாதனி, ஏன் உன்னையும் வருத்தி அவரையும் வருத்துகிறாய்?” இப்போது எழுந்து உட்கார்ந்த பரிவாதனி கண்களைத் துடைத்து கொண்டாள்.

“என்னோடு வா மகிழினி.” தோழியின் கையைப் பிடித்து தனது அறைக்கு அழைத்து சென்றவள் அங்கிருந்த மஞ்சத்தில் அவளை உட்கார வைத்தாள். அதன்பிறகு அறையின் கோடியிலிருந்த ஒரு பெட்டகத்தைத் திறந்தவள் புடவைளுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த அந்த பேழையை வெளியே எடுத்தாள்.

“பரிவாதனி, என்ன இது?” பேழையைப் பார்த்த மாத்திரத்திலேயே மகிழினி எழுந்து நின்று விட்டாள். 

“இதற்கே மலைத்தால் எப்படி பெண்ணே! முதலில் அந்த அறைக் கதவை மூடி தாழ்ப்பாள் போடு.” தோழிக்கு உத்தரவு பறந்தது. கதவை மூடிவிட்டு பேழையின் அருகில் வந்தாள் மகிழினி. பேழையை பரிவாதனி திறக்க அதனுள்ளே இருந்த விலையுயர்ந்த ஆபரணங்கள் கண்களைப் பறித்தன.

“பரிவாதனி! ஏது உனக்கு இத்தனை ஆபரணங்கள்?!”

“என் பிறந்தநாள் பரிசாக என் தந்தை எனக்கு இதைக் கொடுத்தார்.”

“யார்? உபாத்தியாயரா இதை உனக்குக் கொடுத்தார்?”

“ஆம். இது அன்னையின் ஆபரணங்களாம். எனக்குப் பதினெட்டு வயது பூர்த்தியாகும் போது இதை என்னிடம் கொடுக்க சொன்னார்களாம்.”

“இது பெரும் விந்தையாக இருக்கிறதே! இதிலிருக்கும் ஆபரணங்களில் பதித்திருக்கும் வைர வைடூரியங்களையும் விலையுயர்ந்த முத்துக்களையும் வைத்து ஒரு சாம்ராஜ்யத்தையே வாங்கலாம் போல இருக்கிறதே?”

“ஆம் மகிழினி.” பரிவாதனியின் தலை லேசாக ஆடியது.

“இது எப்படி உன் அன்னைக்குக் கிடைத்தது? உபாத்தியாயரின் மனைவி ஏதாவது சாம்ராஜ்ஜிய இளவரசியா?”

“அது எனக்குத் தெரியவில்லை.”

“உன் தந்தையிடம் கேட்பதுதானே?”

“கேட்டேன் பதில் கிடைக்கவில்லை. ஆனால் வேறு ஓரிடத்திலிருந்து பதில் கிடைத்தது.”

“என்ன?! பதில் கிடைத்ததா? யார் சொன்னார்கள்?”

“இளவரசர்.” இந்த பதிலில் மகிழினிக்குத் தலைச் சுற்றியது. 

“என்ன? இளவரசரா?!”

“ஆமாம் மகிழினி. அன்று நந்தவனத்தில் அவர் என்னைப் பார்க்க வந்தது அதைப்பற்றி பேசத்தான்.”

“ஓஹோ! இளவரசர் என்ன சொல்கிறார்?”

“உபாத்தியாயர் என் தந்தையே இல்லை என்கிறார்.” பரிவாதனி சட்டென்று போட்டு உடைக்க பொத்தென்று இப்போது மஞ்சத்தில் அமர்ந்துவிட்டாள் மகிழினி.

“நீ என்ன சொல்கிறாய் பரிவாதனி? அப்படியென்றால் நீ யார்?”

“இதே கேள்வியைத்தான் அவரும் என்னைக் கேட்டார். ஏதேதோ சொன்னார். வாதாபி என்றார் வேங்கி என்றார். எனக்கு ஒரு மண்ணும் புரியவில்லை. அன்றைக்கு எனக்கிருந்த அதிர்ச்சியில் அவர் மீது கோபப்பட்டேன். புண்படும் படி பேசினேன்.”

“பிறகு?”

“நிதானமாக யோசித்த போது அவர் சொல்வதில் இருந்த நியாயம் புரிந்தது. தந்தை வீட்டில் இல்லாத போது அவர் அறையைச் சோதனைப் போட்டேன்.”

“ஏதாவது தெரிந்ததா?”

“தெளிவாக எதுவும் புரியவில்லை. ஆனால் ஏதோ ராஜ முத்திரை பதித்த குறு வாள் இன்னும் இரண்டொரு ஓலைகள் என ஏதேதோ இருந்தன.”

“ஓலையைப் படித்தாயா?”

“இல்லை.”

“ஏன்?”

“ஒருவருக்கு வந்த ஓலையை இன்னொருவர் படிப்பது அநாகரிகம் அல்லவா?”

“நல்ல நேரத்தில் நாகரிகம் பார்த்தாய் நீ. எங்கே அந்த ஓலைகள்? என்னிடம் கொடு. எனக்கு எந்த நாகரிகமும் தெரியாது. நான் படிக்கிறேன்.” மகிழினி சொல்லிக்கொண்டிருக்கும் போதே வெளியே உபாத்தியாயரின் குரல் கேட்டது. இரு பெண்களும் ஆந்தைப் போல விழித்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

 

Leave a Reply

error: Content is protected !!