Pallavankavithai-11

PKpic-bffeb0c1

Pallavankavithai-11

பல்லவன் கவிதை – 11

மைத்ரேயியிற்கு அன்று தியானம் வசப்படவில்லை. மனதில் ஏதேதோ எண்ணங்கள் சுழன்றடித்து கொண்டிருந்தன. நேற்றைக்கு வீட்டில் நடந்த கூத்து இப்போதும் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

சக்கரவர்த்தியைக் குறைக் கூறிய போது அத்தனைப் பேரும் ஸ்தம்பித்து நின்றதென்னவோ உண்மைதான். ஆனால் அதற்குப் பிறகு தனது தாய்க்கு வந்த கோபத்தை நினைத்த போது பெண்ணுக்கு ஆச்சரியமாக இருந்தது.

பரிவாதனி இத்தனைக் கோபப்பட்டு மைத்ரேயி என்றைக்கும் பார்த்ததில்லை. தன் பரம சாதுவான அம்மாவிற்கு இத்தனைக் கோபம் வருமா?! இந்த பல்லவ சாம்ராஜ்யத்தின் மீதும் சக்கரவர்த்தி மீதும் அத்தனைப் பற்றுள்ளவரா தன் தாய்?!

தியானத்தை முடித்துக்கொண்டு சீக்கிரமே ஆற்றங்கரை ஓரமாக இருந்த அந்த திடலுக்குக் குதிரையைத் தட்டி விட்டாள் மைத்ரேயி. அவள் வருகையை ஆவலோடு எதிர்பார்ப்பவன் போல அவளுக்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தான் அந்த வாலிபன். அவள் குதிரையை விட்டு இறங்கும் முன்பாக அவள் காலைச் சட்டென்று பிடித்தான். பெண்ணின் கண்கள் கனலைக் கக்கின. ஆனாலும் அவன் எதையும் அசட்டைச் செய்யவில்லை.

“கால் காயத்திற்கு மருந்து போட்டாயா?” அவன் கேட்ட பிறகுதான் அப்படியொரு காயம் நேற்று உண்டானதே அவளுக்கு ஞாபகம் வந்தது, அவன் காலைப் பிடித்த நோக்கமும் புரிந்தது.

வாள் கீறிய இடத்தில் லேசாக இரத்தம் கசிந்து உறைந்து போயிருந்தது. அதைப் பார்த்த மாத்திரத்தில் அவனுக்கு கோபம் ஜிவ்வென்று ஏறியது.

“காயத்திற்கு மருந்து போடவில்லையா?”

“இல்லை.”

“போடச்சொன்னதாக எனக்கு ஞாபகம்!”

“எனக்கு ஞாபகம் வரவில்லை, அத்தோடு…”

“அத்தோடு என்ன?” அவன் குரல் பட்டென்று வந்தது.

“இதுதான் பழக்கமும் கூட.” சொன்ன பெண்ணை வியப்பாக பார்த்தான் அந்த வாலிபன்.

“கஷ்டம்தான்.”

“எது கஷ்டம் உபாத்தியாயரே?”

“உன்னைச் சமாளிப்பது.” சொல்லிவிட்டு அவன் சிரிக்க இப்போது புரவியிலிருந்து கீழே குதிக்கப்போனாள் மைதாரேயி.

“சற்று நேரம் அப்படியே உட்கார்.” கட்டளைப் போட்டவன் அவன் குதிரை நின்றிருந்த இடத்திற்குச் சென்று எதையோ எடுத்து வந்தான்.

“என்ன அது?” அவள் கேள்வியை அவன் கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை. அவள் காலை மீண்டும் ஆராய்ந்துவிட்டு களிம்பு போல எதையோ காயத்தில் தடவி விட்டான்.

“இன்றைக்கு முழுவதும் நீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், இதாவது ஞாபகம் இருக்குமா?”

“ம்… இருக்கும் இருக்கும், சின்ன காயம்… இதற்கு எதற்கு இத்தனை உபசாரம் உபாத்தியாயரே!” சொல்லிவிட்டு சட்டென்று குதிரையிலிருந்து பாய்ந்தவள் அவனெதிரே வந்து கையை நீட்டினாள்.

“ஏன்? இன்றைக்கும் வாள் கொண்டுவரவில்லையா?”

“இல்லை… அதுதான் எப்போதும் உங்களிடம் இரண்டு வாட்கள் இருக்கின்றனவே! எனக்கும் சேர்த்து…” சொன்னவள் குறும்பாக சிரிக்க அந்த வாலிபன் இப்போது சங்கடப்பட்டான்.

“பாடத்தை ஆரம்பிக்கலாம் உபாத்தியாயரே.”

“ம்…” உறுமியவன் வாளை அவள் புறமாக தூக்கிப்போட்டான். நேற்றைக்குப் போல இன்னைக்கும் அவள் கை வாளை லாவகரமாக பற்றியது.

எடுத்த எடுப்பிலேயே வாளை ஒரு முறை ஆசையாக தடவி கொடுத்தவள் அடுத்த நொடியே வாளை அவன் புறமாக நீட்டி சுழற்றினாள்.

“நிறுத்து!” வாலிபனின் குரல் பெண்ணைத் தேக்கியது.

“ஏன்?”

“இது என்ன போர்க்களமா?” உஷ்ணமாக வந்தது அவன் கேள்வி.

“இல்லை… ஏன் கேட்கிறீர்கள்?”

“பின் எதற்காக உன் எதிரியை இத்தனை மூர்க்கத்தனமாக தாக்க ஆரம்பிக்கிறாய்?”

“பின் என்ன செய்வது? எதிரியோடு உட்கார்ந்து கதைப் பேச வேண்டுமா?”

“மைத்ரேயி!”

“ஆமாம்… என் பெயரெல்லாம் திவ்யமாக தெரிகிறது, நான் கேட்டால் மட்டும் பதில் சொல்வதில்லை.” முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொண்டு வாய்க்குள் அவள் முணுமுணுக்க இப்போது அவன் முகத்தில் புன்முறுவல் பூத்தது. இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டான்.

“நானாக உன் பெயரைக் கண்டுபிடித்தேன், உனக்கு அந்த சாமர்த்தியம் இல்லையென்று சொல்.”

“சரி சரி, ஒவ்வொன்றாக கற்று கொடுங்கள், முதலில் வாள் சுழற்றும் வித்தை, பிற்பாடு உங்களைப் போல சாமர்த்தியசாலி ஆவது எப்படி என்று.” அவள் பேசி முடிக்க அதற்கு மேல் அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சிரித்தே விட்டான்.

“உன்னை உங்கள் வீட்டில் எப்படி சமாளிக்கிறார்கள் மைத்ரேயி?”

“அதை விடுங்கள், ஏன் எதிராளியைத் தாக்க கூடாது என்று சொன்னீர்கள்?”

“போர் என்று வரும்போது வெறும் பலம் மட்டும் போதாது மைத்ரேயி, தந்திரமும் தெரிந்திருக்க வேண்டும்.”

“தந்திரமா?”

“ஆமாம்… ராஜ தந்திரம், எதிரியின் பலத்தை முதலில் எடைப்போட தெரிய வேண்டும்.”

“ஓஹோ!”

“ஆமாம்… உனக்கு சம்பந்தமே இல்லாத ஒருவன் வலிய வந்து உன்னைப் போரிற்கு அழைக்கிறான் என்றால் அவன் வீரத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” சாதாரணமாக கேட்டான் வாலிபன். மைத்ரேயி சில நொடி சிந்தித்தாள்.

“வீரத்துக்குக் குறைச்சல் இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.”

“அப்படி இருக்கும் போது எடுத்த எடுப்பிலேயே எப்படி அவனை நீ தாக்குவாய்?”

“வேறு என்ன செய்வது குருவே?”

“நான் நேற்று என்ன செய்தேன்?”

“என்னைப் போரிட அனுமதித்துவிட்டு நீங்கள் வெறும் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டீர்கள்.”

“மிகவும் சரி, அடுத்து…”

“என் கை சோர்வுற்ற நேரமாக பார்த்து வாளைத் தட்டி விட்டீர்கள்.”

“ஆமாம்… இல்லாவிட்டால் நேற்று ஜெயலக்ஷ்மி உன் வசம் அல்லவா இருந்திருப்பாள்.”

“புரியவில்லை உபாத்தியாயரே.”

“மைத்ரேயி… என் எதிராளியின் பலமும் பலவீனமும் என்னவென்று எனக்குத் தெரியும்.”

“……………”

“வாள் வீசுவதில் உனக்கு அபார தேர்ச்சி உண்டு, அதை நானே என் கண்களால் பார்த்திருக்கிறேன்.”

“ஓ…” பெண்ணின் முகத்தில் இப்போது குழப்பம் நிரம்பி இருந்தது.

“ஆமாம், உன் வீட்டு முற்றத்தில் உன் தம்பியோடு நீ போரிடுவதை நான் பலமுறைப் பார்த்திருக்கிறேன், அதே போல உன் பலவீனமும் எனக்கு நன்கு தெரியும்.”

“அது என்ன?”

“உன் செய்கைகளில் எப்போதும் நிதானம் இருந்ததில்லை, எல்லாவற்றிலும் உனக்கு அவசரம் உண்டு, உன் சத்ரு அதுதான்.” நிதானமாக அவளைப் பற்றி அவன் விளக்க அமைதியாக கேட்டிருந்தாள் மைத்ரேயி.

“எடுத்த எடுப்பிலேயே நானும் போரிட ஆரம்பித்திருந்தால் ஒருவேளை உன்னிடம் நான் தோற்றிருக்க கூடும், அதனால் உன்னைப் போரிட அனுமதித்து நான் வெறும் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டேன்… நாழிகைச் செல்ல செல்ல உன் கைப் பலமிழக்க ஆரம்பித்தது, அந்த நொடியில் நான் என் தாக்குதலை ஆரம்பித்து உன்னை எளிதாக வென்றேன்.”

தன் வயதை ஒத்த அந்த வாலிபன் போரின் ரகசியங்களை விளக்க விளக்க மெய்மறந்து கேட்ட வண்ணம் நின்றிருந்தாள் மைத்ரேயி. அவன் மதிநுட்பத்தில் பெண் அனைத்தையும் மறந்து அவன் சொன்ன விஷயங்களை உள்வாங்கி கொண்டிருந்தாள். அந்த வாலிபனும் அதற்கு மேல் அவளிடம் எதுவும் பேசவில்லை. தான் சொன்னவற்றை அவள் மூளைக் கிரகித்து கொண்டிருக்கிறது என்று புரிந்து கொண்டான்.

அவளைத் தொந்தரவு செய்யாமல் தன் புரவியில் தாவி ஏறியவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தும் விட்டான். மைத்ரேயிக்கும் அவன் போவது புரிந்தது. இருந்தாலும் அமைதியாக நின்றிருந்தாள். போர் கலையில் தான் தெரிந்து கொள்ள வேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன என்று புரிந்தது பெண்ணிற்கு. அபரிமிதமான மரியாதை அந்த இளம் உபாத்தியாயன் மீது தோன்ற தூரத்தில் போகும் அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

***

“பரிவாதனி…” கூவிய படி வீட்டினுள் நுழைந்த தோழியை ஆச்சரியமாக பார்த்தாள் பரிவாதனி.

“என்ன மகிழினி? எதற்காக இப்படி சத்தம் போடுகிறாய்?”

“கேட்டாயா சங்கதியை, கொற்கைக்கு அரச குடும்பத்தினர் யாரோ வந்திருக்கிறார்களாம்! இப்போதுதான் நான் கேள்விப்பட்டேன்!” அந்த வார்த்தைகளில் பரிவாதனி ஒரு கணம் திடுக்கிட்டு நின்றாலும் அடுத்த கணமே தன்னை மீட்டு கொண்டாள்.

“இதில் நாம் ஆச்சரிப்பட என்ன இருக்கிறது மகிழினி? வந்தால் வந்துவிட்டு போகட்டுமே!” வெகு அசிரத்தையாக பதில் சொன்னாள் பரிவாதனி. அவள் பேச்சில் மகிழினிக்கு அப்படியொரு கோபம் வந்தது.

“ஜடமா பெண்ணே நீ! உனக்கென்று ஆசாபாசங்கள் ஏதுமில்லையா? அரச குடும்பத்தினர் என்றால் ஒருவேளை சக்கரவர்த்தி கூட வந்திருக்கலாம் இல்லையா?”

‘சக்கரவர்த்தி’ என்ற அந்த ஒரு வார்த்தையில் பரிவாதனி லேசாக தடுமாறினாள். கண்கள் அங்குமிங்கும் லேசாக சில நொடிகள் அலைப்புற்றன.

“என்னைக் கொல்லாதே மகிழினி!” வேதனை நிரம்பிய முகத்தை வேறு புறமாக திருப்பிக்கொண்டு நகரப்போன தோழியின் கரத்தைப் பற்றி நிறுத்தினாள் மகிழினி.

“உனக்கு விதித்ததெல்லாம் ஒரு நாள் வாழ்க்கைத்தானா பரிவாதனி?” விம்மி வெடித்த கேவலுடன் மகிழினி கேட்ட போது பரிவாதனியின் முகத்தில் ஒரு விரக்தி புன்னகைத் தோன்றியது. அது கனவோ என்று எண்ணும் வண்ணம் அடுத்த நொடி அவள் முகத்தில் பெருமிதம் மிதந்தது.

“அந்த ஒரு நாளே போதுமென்று இயற்கையும் சொல்லிவிட்டதே! அந்த ஒரே ஒரு நாளில்… அவர் முதல் வாரிசு எனக்குச் சொந்தமானதே! அது போதாதா மகிழினி?”

“பரிவாதனி நீ என்ன…” மகிழினி பேச ஆரம்பிக்கும் போதே மைத்ரேயி வீட்டினுள் நுழைந்ததால் இரு பெண்களும் பேச்சை நிறுத்திக்கொண்டார்கள்.

“அம்மா!”

“என்ன மைத்ரேயி?”

“ராஜ தந்திரம் என்றால் என்ன?” வாலிபனின் போதனையில் திளைத்திருந்த மைத்ரேயி அன்னையை நோக்கி கேள்விக்கணைத் தொடுத்தாள்.

“ராஜ தந்திரமா? இது என்ன விசித்திரமான கேள்வி கேட்கிறாய் மைத்ரேயி?”

“பதில் சொல்லுங்கள் அம்மா.” பெண் பிடிவாதமாக நின்றது.

“பதில்தானே… நான் சொல்கிறேனடியம்மா.” மகிழினி வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு சொல்ல மைத்ரேயி மகிழினியை ஆர்வமாக பார்த்தாள்.

“ஓ… சித்தி, உங்களுக்குத் தெரியுமா?!”

“ஏன் தெரியாது? நன்றாக தெரியுமே.”

“அப்படியானால் சொல்லுங்களேன்.” மைத்ரேயி ஆவலோடு பதிலுக்காக காத்திருக்க பரிவாதனி தோழியின் கரத்தைப் பிடித்து அவளை எச்சரித்தாள். மகிழினி ஏதோ வில்லங்கமாகவே பதில் சொல்ல போகிறாள் என்று தோன்றியது பரிவாதனிக்கு.

ஆனால் அதை மகிழினி கண்டுகொள்ளவே இல்லை. பரிவாதனியின் கையை உதறிவிட்டு இளையவளுக்குப் பதில் சொன்னாள்.

“ராஜ தந்திரம் என்றால்… இந்த ராஜ குடும்பத்தில் இருக்கிறார்களே… மகாராஜா, சக்கரவர்த்தி, இளவரசன்… இது போல.”

“ஆமாம்… இருக்கிறார்கள்.”

“ஆ… அவர்கள், தங்களை நம்பி இருக்கும் அப்பாவி ஆத்மாக்களை தந்திரமாக ஏமாற்றுவதற்குப் பெயர்தான் ராஜ தந்திரம்… புரிகிறதா உனக்கு?” மகிழினி சொல்லி முடிக்க மைத்ரேயி திருதிருவென முழித்தாள்.

“போடி அறிவு கெட்டவளே…” அதற்கு மேலும் தான் அங்கு தாமதித்தால் தன் திருவாய் சும்மா இருக்காது என்று புரிந்த மகிழினி தட் தட் என்று காலால் ஒலி எழுப்பிய வண்ணம் வெளிநடப்பு செய்துவிட்டாள். அவள் நடையிலேயே அவள் கோபம் தெரிந்தது.

“சித்திக்கு என்ன ஆகிவிட்டது அம்மா? ஏன் விசித்திரமாக பேசுகிறார்கள்?” மகளின் கேள்விக்கு துரித கதியில் ஒரு பதிலைச் சொன்னாள் பரிவாதனி.

“அது ஒன்றுமில்லை மைத்ரேயி… காலையிலேயே சித்தப்பாவோடு ஏதோ வாக்குவாதமாம், அந்த கோபத்தை எல்லாம் நம்மீது காட்டுகிறாள் உன் சித்தி.”

“ஓஹோ! அதுதான் காரணமா!” வாய்விட்டு சிரித்த இளையவளும் வெளியே போய்விட தனது அறைக்குள் சென்று அங்கிருந்த மஞ்சத்தில் அமர்ந்து கொண்டாள் பரிவாதனி. மனம் அவளிடம் அனுமதி கேளாமலேயே அவள் அன்பரிடம் போயிருந்தது.

‘நலமாக இருக்கிறீர்களா?’ அவள் மனம் உள்ளுக்குள் ஊமையாக அழுதது.

‘பதினெட்டு நெடிய ஆண்டுகள் அன்பரே! இந்த கால இடைவெளியில் உங்கள் உருவம் மாறியிருக்கலாம், உள்ளம் மாறி இருக்குமா? அதில் முழுதாய் அமர்ந்திருந்த நான் இப்போது ஒரு மூலையிலாவது இருக்கின்றேனா?’ இதை  நினைக்கும் போது பெண்ணின் கண்கள் கலங்கிப்போயின.

‘உங்களுக்கென்று ஒரு மனைவி, மகன் என எல்லோரும் இருக்கிறார்கள்…‌ ஆனால், ஓர் நாள் உறவில் உதித்த உங்கள் மகள் ஒருத்தி இங்கே இருப்பதை நீங்கள் அறிவீர்களா? என்றைக்காவது ஒரு நாள் உங்களை நான் பார்த்து உங்கள் மகளை, உங்களுக்கு அறிமுகப்படுத்தும் காலம் வருமா அன்பரே!’

பரிவாதனி இப்படி இங்கே எண்ணிக்கொண்டிருக்க… அங்கே காஞ்சி மாநகரில் தனது அரண்மனை மாளிகையில் காலைப் போஜனத்தை அருந்திக்கொண்டிருந்த மகேந்திர சக்கரவர்த்திக்குப் புரை ஏறியது.

“நரசிம்மா, நானும் நீயும் இங்கே இருக்கும் போது அப்படி யார் உன் தந்தையை நினைப்பது?” கேலியாக வந்தது புவனமகா தேவியின் குரல். நரசிம்ம பல்லவனும் தன் தந்தையைப் பார்த்து சிரித்தான்.

“வேறு யார் நினைப்பார்கள் தேவி? எல்லாம் என் பகைவர்களாகத்தான் இருக்கும்!”

“என்ன?! என்ன சொன்னீர்கள்?! பல்லவ காஞ்சிக்கு எதிரிகளா? இது என்ன புதுக்கதையாக இருக்கிறது?!”

“ஏன் தேவி? இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?”

“பல்லவ எல்லைக்குள் பகைவர்கள் ஊடுருவியதாக இதுவரைச் சரித்திரமே இல்லையே!”

“இப்போது சரித்திரம் மாறுகிறது, வாதாபி மன்னன் பெரும்படைத் திரட்டி காஞ்சி மீது போர் தொடுக்க போவதாக ஒற்றர்கள் சேதி கொண்டு வந்திருக்கிறார்கள்.” நிதானமாக சொன்னார் சக்கரவர்த்தி.

“இது உண்மையா அப்பா?”

“ஆம் நரசிம்மா, ஒற்றர் படைத்தலைவன் விபீஷணனே கொண்டு வந்த சேதி இது?”

“எதற்காக காஞ்சி மீது வாதாபி மன்னர் போர் தொடுக்க போகிறார்? அவருக்கும் நமக்கும் எந்த விரோதமும் இல்லையே அப்பா?”

“இது விரோதமல்ல நரசிம்மா… மண்ணாசை, வாதாபி மன்னர் புலிகேசிக்கு இந்த பாரதத்தை ஒரு குடையின் கீழ் ஆள வேண்டும் என்ற பேரவா உண்டு, வடக்கே ஹர்ஷவர்த்தனரின் பெரும் படையை எதிர்க்க அவரால் முடியவில்லை, அதனால் அவர் பார்வை இப்போது தெற்கு நோக்கி திரும்பி இருக்கிறது.”

“ஓஹோ!”

“அது மட்டுமல்ல நரசிம்மா, பாரவி என்ற கவிஞன் நம் காஞ்சி வஞ்சியின் மீது தீராத காதல் கொண்டு அவளை வர்ணித்து பாக்களாக பாடி வருகிறான், அதில் இன்றைய சக்கரவர்த்திகளுக்கெல்லாம் போதை ஏறி இந்த மங்கையைக் கவர்ந்து கொள்ள நினைக்கிறார்கள்.” சொல்லிவிட்டு இடி இடியென்று நகைத்தார் பல்லவ சக்கரவர்த்தி.

“நல்ல அழகுதான்… காஞ்சியை நீங்கள் சிங்காரித்து அழகு பார்த்தால் அவர்களுக்கு என்ன வந்ததாம்? தேவையென்றால் அவர்களும் அவர்கள் நாட்டில் ஒரு நகரைச் சிங்காரிப்பதுதானே?” புவனமகா தேவியின் கண்களில் இப்போது கோபம் இருந்தது.

“தேவி… எனக்கு பெண் குழந்தைகள் இல்லை அல்லவா? அதனால் காஞ்சியை என் பெண்ணாக நினைத்து சிங்காரித்து அழகு பார்த்தேன்! அப்படியென்றால் நான் காஞ்சிக்கு தகப்பன் அல்லவா? அதுதான் எனக்கொரு மருமகன் வரப்போகிறான் போலிருக்கிறது!” சக்கரவர்த்தியின் பேச்சில் இப்போது அம்மாவும் மகனும் கூட சிரித்தார்கள்.

“அப்பா… வாதாபி படையின் நிலைமை என்ன?”

“வாதாபி மட்டும் நம்மை எதிர்த்து இப்போது போருக்குத் தயாராகவில்லை நரசிம்மா, புலிகேசியின் தம்பி விஷ்ணுவர்த்தனன் கிழக்கே கிருஷ்ணா நதிக்கருகில் பெரும் சைனியம் திரட்டுவதாக தெரிகிறது,”

“யார்? வேங்கி மன்னனா அப்பா?”

“ஆமாம்… இதெல்லாம் போதாதென்று கங்க நாட்டு துர்வீதனனும் படைத் திரட்டுகிறானாம்!”

“வேங்கி மன்னன் விஷ்ணுவர்த்தனன் புலிகேசியின் தம்பி, அவர் அண்ணனுக்காக படைத் திரட்டுவதில் நியாயம் இருக்கிறது… கங்க நாட்டு துர்வீதனன் எதற்காக அப்பா படைத் திரட்டுகிறார்?”

“நரசிம்மா… துர்வீதனன் மகளைத்தான் விஷ்ணுவர்த்தனன் கல்யாணம் செய்திருக்கிறார், அதனால் மருமகனுக்கு உதவ மாமனார் படைத் திரட்டுகிறார்.”

“நரசிம்மனுக்கும் திருமணம் ஆகி இருந்தால் நமக்குப் பெண் கொடுத்த ராஜ்ஜியமும் இப்போது நமக்குத் துணையாக படைத் திரட்டி இருக்கும் இல்லையா?” கண்களில் கனவு மிதக்க மகாராணி கேட்டபோது மகேந்திரர் சிரித்தார்.

“இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை தேவி… பாண்டியன் பெண் கொடுக்க தயாராகத்தான் இருக்கிறான், நாம் ஒரு வார்த்தைச் சொன்னால் போதும்.”

பெற்றவர்கள் இருவரும் பேசிக்கொள்ள நரசிம்மன் முகத்தில் தீவிர சிந்தனைத் தோன்றியது.

“அப்பா! நான் ஒன்று சொன்னால் நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்களே.”

“சொல் நரசிம்மா… ஏன் தயங்குகிறாய், இந்த பல்லவ சாம்ராஜ்யத்தின் இளவரசன் நீ, உனக்கு இல்லாத அக்கறை இந்த காஞ்சியின் மீது வேறு யாருக்கு இருந்துவிட போகிறது?”

“அப்பா! பல்லவ சாம்ராஜ்யத்தின் படைப்பலம் இப்போது எப்படி இருக்கிறது என்று நானறியேன், ஆனால் வரலாறு காணாத பெரும் போரொன்று நம் ராஜ்ஜியத்தின் மீது வருகின்றது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது, பாண்டிய மன்னரின் உதவி நமக்குத் தேவைப்படும் பட்சத்தில் நீங்கள் எதற்கும் தயங்க வேண்டாம், உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதை நீங்கள் தாராளமாக செய்யலாம்.” நரசிம்மன் பேசி முடிக்க மகனை இடது கையால் ஆரத்தழுவி கொண்டார் சக்கரவர்த்தி.

“நரசிம்மா! வீரனுக்குத் தகுந்த வார்த்தைகள் சொன்னாய், தன் சொந்த ஆசாபாசங்களை விட ராஜ்ஜியத்திற்கு எது நல்லது என்று நினைப்பவன்தான் ஆளத்தகுதி பெற்றவன்!”

“அப்பா! இன்னுமொரு கோரிக்கை.”

“சொல் நரசிம்மா!”

“இன்றையிலிருந்து எனக்கு நீங்கள் மந்திராலோசனை சபையில் இடம்பெற அனுமதி கொடுக்க வேண்டும்.”

“ஆகட்டும் நரசிம்மா… உனக்கு மட்டுமல்ல, நந்திவர்மனுக்கும் அந்த அனுமதியை வழங்கலாம் என்று இருக்கின்றேன், அத்தோடு படையை நடத்துவதற்கும் உங்களுக்கு இனிமேல் பயிற்சி வழங்கப்படும்.”

“நல்லது அப்பா.” குதூகலமாக சொல்லிவிட்டு கையை அலம்பிக்கொண்டு போஜன அறையை விட்டு வெளியேறினான் நரசிம்ம பல்லவன். சக்கரவர்த்தி தன் தேவியைப் பார்த்து புன்முறுவல் கோட்டினார்.

“அப்படியென்றால் திருமணத்தை நிச்சயித்து விடலாமா தேவி?”

“அப்படியே செய்யுங்கள், காலம் கனியும் போது திருமணத்தை வைத்துக்கொள்ளலாம்.”

“ம்… நல்லது.”

***

காவிரியின் பிரவாகம் சலசல என்றிருந்தது. அதிகாலையிலேயே கண்விழித்த அமரா தேவி பலகணியின் வழியாக ஓடும் காவிரியைக் கொஞ்ச நேரம் பார்த்தபடி நின்றிருந்தார்.

கொற்கை என்னும் அந்த சிறிய ஊர் மிக அழகாக இருந்தது. பசுமைக்குக் குறை இருக்கவில்லை. மக்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்று அமரா நினைக்கவில்லை.

“அம்மா… ஸ்நானத்திற்கு ஏற்பாடு செய்யட்டுமா?” பணிப்பெண்ணின் குரலில் கவனம் கலைந்த அமரா தேவி திரும்பி பார்த்தார். வயது முப்பத்தி ஏழை நெருங்கி கொண்டிருந்தது. இருந்தாலும் அந்த முகத்தில் ராஜகளை சற்றும் குறைந்திருக்கவில்லை.

உண்மையைச் சொன்னால் நந்திவர்மனைப் போன்ற ஒரு பதினேழு வயது வாலிபனின் தாய்தான் இந்த அமரா தேவி என்று சொல்லவே முடியாது. வயது ஏற ஏற பெண்ணிற்கு அழகும் அபரிமிதமாக ஏறி இருந்தது.

அடிக்கடி வாள் பிடிப்பதாலும் சதா போர் பயிற்சிகளில் ஈடுபடுவதாலும் அந்த மேனி சற்றே கடினப்பட்டது போல காட்சி அளித்தது. இருந்தாலும் அந்த நளினமற்ற அழகு ஏதோ ஒரு வகையில் பார்ப்பவரை ஈர்க்கத்தான் செய்தது. அமரா தேவி ஆமோதிப்பாக தலையை ஆட்டவும் பணிப்பெண் சட்டென்று நகர்ந்துவிட்டாள்.

ஸ்நானத்தை முடித்துக்கொண்டு காலை போஜனத்தையும் அவசரமாக முடித்த அமரா தேவி காவலனை அழைத்து அந்த சிற்றூரை உள்ளடக்கிய படைப் பிரிவின் தலைவனை தான் பார்க்க வேண்டும் என்று அறிவித்தாள்.

“படைத்தலைவர் ஏற்கனவே வந்து உங்களுக்காக காத்து இருக்கிறார் அம்மணி.”

“நல்லது…‌ ஆலோசனை அறையில் அவரை உட்கார சொல், நான் இதோ வருகிறேன்.” சொல்லிவிட்டு காவலனை அனுப்பியவர் இடையில் தன் வாளைக் கட்டிக்கொண்டார்.

இரு மான் தோல் அங்கிகளைத் தன் கால்களில் முழங்கால் வரை புடவையை மறைத்து இறுக கட்டியும் கொண்டார்.

வாசலுக்கு வந்த அமரா தேவியை பார்த்த காவலன் அவர் புரவியில் பயணப்படவே கால்களுக்கு மான்தோல் அங்கி அணிந்திருந்திருக்கிறார் என்று புரிந்து கொண்டு புரவியை ஆயத்தம் செய்ய லாயத்தை நோக்கி ஓடினான்.

அமரா தேவி உள்ளே நுழைந்த போது படைத்தலைவன் எழுந்து மரியாதை செய்தான். பெண் மீண்டும் உட்காரும் படி ஆசனத்தைக் காட்டவும்,

“இருக்கட்டும் தலைவி!” என்றார் மனிதர் படு பவ்வியமாக.

“மன்னரின் ஓலை உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன் படைத்தலைவரே!”

“சேர்ந்தது அம்மணி.”

“நல்லது, இன்று முதல் இந்த ஊரை ஓர் இடுக்கு விடாமல் நான் சல்லடைப் போட வேண்டும், சந்தேகம் உண்டாக்கும் அனைவரையும் சிறையில் தள்ள ஏற்பாடு செய்யுங்கள் தலைவரே.”

“அப்படியே ஆகட்டும் அம்மணி.”

“இப்போது ஒரு பத்து வீரர்களை அழைத்துக்கொண்டு என்னோடு ஊரைச் சுற்றிப்பார்க்க வாருங்கள்.”

“இதோ… சித்தமாக இருக்கிறேன்.” சொன்ன படைத்தலைவர் முன்னே செல்ல அவரைப் பின் தொடர்ந்தார் அமரா தேவி.

பத்து வீரர்கள் தங்களின் பின்னால் புரவியில் தொடர முன்னே அமரா தேவியும் படைத்தலைவரும் தத்தமது புரவிகளில் வீற்றிருந்தார்கள்.

ராஜாங்க காரியமாக அரச உத்தியோகத்தர்கள் வருவதை அறியாமல் அந்த இளங்காலைப் பொழுதில் இளையவர்கள் இருவர் ஆற்றங்கரையோரமாக போர் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். அமரா தேவியின் கண்கள் சற்று கூர்மையுடன் அவர்கள் இருவரையும் நோக்கியது.

 

Leave a Reply

error: Content is protected !!