roja05

roja cp-f1b5ff5c

roja05

  • Azhagi
  • August 16, 2022
  • 0 comments

ரோஜா 5

“லேகா!” அந்த ஒற்றை வார்த்தையில் சித்ரலேகா லேசாகத் தடுமாறினார்.‌ அவர் கை பக்கத்தில் இருந்த நாற்காலியை இறுகப் பற்றித் தன்னை நிதானிக்க வைத்தது.

“பிரகாஷ்!” சத்தம் வராவிட்டாலும் உரிமையாக வந்த அந்த மெல்லிய அழைப்பை அனுபவித்தார் ஞானபிரகாஷ்.

“எப்படி இருக்கே லேகா?”

“நல்லா… நல்லா இருக்கேன்.‌ நீங்க எப்படி இருக்கீங்க?” தன் எதிரில் நிற்கும் பெண் தான் கல்லூரிக் காலத்தில் பார்த்த பெண்ணல்ல. நிறையவே முதிர்ச்சியடைந்து விட்டாள் என்று அவருக்குப் புரிந்தது. இப்படித் திடீரென்று நான் இந்தப் பெண்ணைச் சந்திக்க நேர்ந்திருந்தால் இவ்வளவு சீக்கிரத்தில் நிதானத்திற்கு வந்திருக்க மாட்டோம் என்பது அவருக்குத் தெளிவு. இத்தனை வருட தொழில் அனுபவத்தில் மற்றவர்களைப் படிக்கக் கற்றுக் கொண்டிருந்தார் மனிதர். 

“நான் இருக்கிறது இருக்கட்டும் லேகா, இது என்ன கோலம்?” அந்தக் கேள்வியில் இருந்த வலி சித்ரலேகாவையும் அசைத்துப் பார்த்திருக்க வேண்டும். கண்கள் லேசாகத் திரையிட செயற்கையாகப் புன்னகைத்தார். 

“ஏன் பிரகாஷ்? நான் நல்லாத்தானே இருக்கேன்.”

“இதுக்குத் தான் நான் உன்னை அன்னைக்கு அப்படியே அள்ளித் தாரை வார்த்துக் குடுத்தேனா? இந்தக் கோலத்துல உன்னைப் பார்க்கத்தான் அத்தனையையும் விட்டுக் குடுத்துட்டு கையைக் கட்டிக்கிட்டு நின்னேனா?” ஞானபிரகாஷின் குரல் இப்போது தழுதழுத்தது. அவசர அவசரமாகச் சுற்றும்முற்றும் பார்த்த சித்ரலேகா அவரை அடக்கினார்.

“ஷ்… பிரகாஷ்! என்னப் பேச்சு இது?”

“இன்னமும் பேசக்கூடாதுன்னா எப்படி லேகா?”

“பேசக் கூடாதுதான். நீங்க எப்படி இங்க? சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணமா? ஃபாமிலியோட வந்திருக்கீங்களா? உங்க வைஃப் பசங்க எல்லாரும் எங்க? எனக்குக் காட்டுங்க பிரகாஷ்.” பரபரத்தார் சித்ரலேகா.

“எங்க வீட்டுக் கல்யாணம்தான் லேகா.”

“ஓ… உங்கப் பொண்ணா?” அவர் குரலில் அத்தனை ஆர்வம்.

“இல்லை… அக்கா பொண்ணு.”

“ஓ… அதான் வத்சலா தெரிஞ்ச முகம் மாதிரி இருந்திருக்கு. அப்போ வத்சலா உங்க தங்கை இல்லை?”

“ம்… ஆமா.” தன் உறவுகளைப் பார்த்ததிற்கே சந்தோஷிக்கும் அந்தப் பேதையைப் பார்த்த போது ஞானபிரகாஷிற்கு நெஞ்சு துடித்தது. கல்லூரியின் பேரழகி இந்த சித்ரலேகா. அவள் தனது காதலி என்பதிலேயே அந்நாட்களில் ஞானபிரகாஷ் அவ்வளவு புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். அதே சித்ரலேகா இன்று…

“பிரகாஷ்… உங்க பசங்க எங்க? எனக்குப் பார்க்கணுமே. காட்டுங்களேன்.” பரபரத்த பெண்ணை ஒரு கையாலாகாத தனத்தோடு பார்த்திருந்தார் ஞானபிரகாஷ்.

“மாமா…” அழைத்தபடி சத்யன் வர இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். சத்யன் இதுவரை இங்கு நடந்து கொண்டிருந்த நாடகத்தைத்தான் ஒரு ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். மணப்பெண்ணுக்கு அருகில் நின்றிருந்தாலும் வத்சலாவின் கண்களும் இவர்களைத்தான் மொய்த்துக் கொண்டிருந்தது.

“அத்தைக் கூப்பிடுறாங்க மாமா.” இது சத்யா.

“அத்தைன்னா… உங்க வைஃபா பிரகாஷ்?” அந்தக் குரலில் இப்போதும் குறையாத ஆர்வம்.

“இல்லையில்லை… அண்ணி கூப்பிட்டிருப்பாங்க.”

“ஓ… உங்க அப்பா?” சித்ரலேகா இழுக்க, இல்லையென்பது போல தலையாட்டினார் ஞானபிரகாஷ்.

“வா லேகா. சத்யா… அண்ணி எங்க இருக்காங்க?”

“எல்லாரும் கீர்த்தனாவோடதான் இருக்காங்க மாமா. உங்களைக் காணலையேன்னு தேடினாங்க.”

“ஓ… இதோ வந்தர்றேன். வா லேகா, பொண்ணையும் மாப்பிள்ளையையும் பார்க்கலாம். ஆங்… சத்யா. இது சித்ரலேகா. நம்ம மலரோட அம்மா.”

“ஓ… அப்படியா? வணக்கம் ஆன்ட்டி.” 

“வணக்கம் பா. நீங்க வத்சலா பையனா?”

“ஆமா ஆன்ட்டி.”

“ஏன் பிரகாஷ்? அப்போ உங்கப் பசங்க இதை விடப் பெரியவங்களா இருப்பாங்க இல்லை?” அந்தக் கேள்வியில் ஞானபிரகாஷ் மட்டுமல்ல, சத்யனுமே நொறுங்கிப் போனான். சத்யன் என்ன நினைத்தானோ? தன் அம்மானையே பார்த்திருந்தான். அவர் கண்களில் வானளாவிய வலி தெரிந்தது.

“நீ மொதல்ல வா லேகா.”

“இல்லை பிரகாஷ். நீங்க போங்க. நான் அதுமாதிரியான இடங்களுக்குப் போறது அவ்வளவு நல்லதில்லை.” இப்போது ஞானபிரகாஷ் எப்படி உணர்கிறார் என்று சத்யனால் கற்பனைப் பண்ண முடிந்தது. கண்கள் கலங்க அங்கிருந்த நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தார் மனிதர். அதற்கு மேலும் தான் அங்கிருப்பது அநாகரிகம் என்று புரிந்த சத்யன் மெதுவாக நகர்ந்து விட்டான். 

“பிரகாஷ்… என்ன ஆச்சு?”

“இன்னும் என்ன ஆகணும் லேகா? எல்லாத்தையும் நீயும் தொலைச்சு நானும் தொலைச்சு… அப்படி யாருக்கு என்ன பாவம் பண்ணினோம்?” இது நிச்சயமாக அவரின் கண்ணீர்க் குரல்.

“சீச்சீ… என்ன வார்த்தைச் சொல்றீங்க? நீங்க எதுக்குத் தொலைக்கணும்? அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. பேசும் போது பார்த்துப் பேசுங்க பிரகாஷ்.”

“லேகா… மனசு வலிக்குது. எவ்வளவு ஆசைகளோட கனவுகளோட இருந்தோம். எல்லாம் ஒன்னுமில்லைன்னு ஆகிப்போச்சே!”

“ஷ்… மெதுவாப் பேசுங்க பிரகாஷ். உங்க வீட்டுக்காரங்க யாராவது காதுல விழப்போகுது.”

“யார் காதுல விழுந்தா எனக்கென்ன லேகா.”

“அப்படியெல்லாம் பேசக்கூடாது. நீங்க உங்க பொண்டாட்டி பிள்ளைங்களோட ரொம்ப காலத்துக்கு நல்லா இருக்கணும். எனக்கென்ன பிரகாஷ்? நான் நல்லா இருக்கேன். மலர் இருக்கா. மலரை நீங்க பார்த்தீங்களா? பேசினீங்களா?”

“ம்… பார்த்தேன். ஆனா ரொம்பப் பேச முடியலை.” இப்போது மட்டும் அந்த பிரகாஷ் முகத்தில் கோடிப் பிரகாசம்.

“அப்படியா? உங்கப் பசங்க எங்க பிரகாஷ்?”

“எனக்கே தெரியலையே லேகா?”

“மண்டபத்துலதான் எங்கேயாவது இருப்பாங்க. எங்கிட்டக் காட்டக் கூடாதா? எத்தனைப் பேரு? பொண்ணா பையனா?” அந்தக் குரலின் கட்டுக்கடங்காத ஆர்வம் ஞானபிரகாஷை என்னவோ பண்ணியது.

“நீ நினைக்கிற மாதிரி யாருமே இல்லை லேகா.”

“என்ன சொல்றீங்க பிரகாஷ்? எனக்குப் புரியலை.” அப்போதும் ஞானபிரகாஷின் தன்னந்தனிமையான வாழ்க்கையை சித்ரலேகா எதிர்பார்க்கவில்லை போலும். ஞானபிரகாஷ் ஒரு சில நொடிகள் கண்களை மூடித் தன்னை நிதானப்படுத்திக் கொண்டார்.

“லேகா…” அவர் அழைத்தபோது அந்தக் குரல் கரகரப்பாக வந்தது.

“எனக்கு எப்பவும் நீதான் லேகா. உன்னைப் பார்த்து காலேஜ் டேய்ஸ்ல நான் பாடினது விளையாட்டுன்னு நீ நினைச்சியா?” இப்போது சித்ரலேகாவின் இதயம் கொஞ்ச நேரம் வேலை நிறுத்தம் பண்ணியது. ஆனால் ஞானபிரகாஷின் வார்த்தைகள் எஃகின் உறுதியோடு வந்தது.

“உன்னை விட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க…” ஒவ்வொரு வார்த்தையாக அவர் பேசுவது போல சொல்ல சித்ரலேகாவின் கண்களில் கோடைக்கால மின்னலொன்று வெட்டியது. பின்னோடே கார்காலம் கண்ணீராய் இறங்கியது. ஞானபிரகாஷ் கசப்பாகப் புன்னகைத்தார்.

“விதிம்மா… வேற என்ன சொல்ல. சேர்ந்தும் வாழ விடாம தனிச்சும் வாழ விடாம…” வேகமாக வந்த கேவல் ஒன்றைத் தன் வாயை இறுக்க மூடி அடக்கிக் கொண்டார் சித்ரலேகா. இது கல்யாண வீடு. இங்கே இப்படி அழுவது நியாயமில்லை.

“பேசலாம், எல்லாத்தையும் அப்புறமாப் பேசலாம். இப்பக் கண்ணைத் தொடைச்சுக்கிட்டு எங்கூட வா. பொண்ணு மாப்பிள்ளையைப் பார்த்துட்டு வரலாம்.”

“இல்லை… இல்லை பிரகாஷ். என்னால…”

“லேகா…” பெண்ணின் கண்ணீர் குரல் மனிதருக்கு இன்னும் கோபத்தை வரவழைத்தது.

“இப்போ நீ எங்கூட வரலைனா நான் உங்கையைப் பிடிச்சுக் கூட்டிட்டுப் போவேன்.”

“பிரகாஷ்… என்னால இந்த மனநிலையில…”

“எதுவும் பேசக் கூடாது. நீ எங்கூட வர்ற.” பிடிவாதமாக நின்றவர் மணமக்களை நோக்கி சித்ரலேகாவை அழைத்துச் சென்றார். மணமக்களின் அருகில் கூடி நின்ற குடும்பத்தார் ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு பாவம். ஆனால் அவை எதையும் ஞானபிரகாஷின் கண்கள் கண்டுகொள்ளவில்லை. அவர் கண்கள் மலர்விழியை மட்டும்தான் அலசி ஆராய்ந்தது. தன் அம்மா இன்னொரு மனிதரோடு வருவதை அந்த முகம் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறது என்பதிலேயே அவர் கவனம் இருந்தது.

ஆனால் சித்ரலேகாவால் யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அங்கு நின்றிருந்த ஒரு சிலருக்கு அவரை முன்னமே தெரியும். ஏன்? தங்கள் தம்பியின் வாழ்க்கைப் பட்டுப் போகக் காரணமானவளே இவள்தான் என்ற கோபம் கூட இருக்கலாம்.

“மலர்…‌ எங்க சின்ன அண்ணாவும், உங்க அம்மாவும் ஒரே காலேஜ்ல படிச்சவங்களாம். இன்னைக்குத்தான் எனக்கே அது தெரியும்.”

“ஓ… அப்படியா ஆன்ட்டி!” இதுவரைக் குழப்பமாக இருந்த மலரின் முகம் வத்சலாவின் வார்த்தைகளில் தெளிந்தது. 

“ஆமாடா… உங்கம்மாவை மண்டபத்துல பார்த்ததுக்கு அப்புறமாத்தான் அண்ணா சொன்னாங்க.” வத்சலாவின் பார்வை மகளுக்குச் சமாதானம் சொல்லிவிட்டு அம்மாவைத் துளைத்தது. அந்தப் பார்வை…

‘உன்னை நான் என்றோ கண்டு கொண்டேன்.’ என்று குற்றம் சாட்டியது. வத்சலாவின் கணவர் லோகேந்திரன் முகத்தில் ஒரு வரவேற்பான புன்னகை.‌ கண்மணியின் முகத்தில்,

‘இப்படி ஆகிப்போனதே!’ என்ற கண்ணீரோடான கவலை. அவர் கணவர் வரதன் முகத்தில் இது யாருக்கு வந்த விருந்தோ என்ற பாவம். பெரியண்ணன் நெற்றியில் சிந்தனை ரேகைகள். அவர் மனைவி வனஜா முகத்தில்,

‘ஐயோ பாவம் இவர்கள்!’ என்ற பாவம். ஆனால் சத்யன் மட்டும் எல்லாவற்றையும் நிதானமாகக் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் மனம் ஏதேதோ கணக்குகள் போட ஆரம்பித்திருந்தது.

மணமக்களை ஆசீர்வதித்து விட்டு சித்ரலேகா மகளைப் பார்க்க, ஹான்ட்பாக்கில் இருந்த மோதிரத்தை எடுத்து நீட்டினாள். அதை கீர்த்தனாவின் விரலில் போட்டுவிட்ட சித்ரலேகா எல்லோரையும் பார்த்துத் தலையசைத்து விடைபெற்றுக் கொண்டார்.

“மலர், கிளம்பலாமா?”

“சரிம்மா.”

“என்னது? கிளம்புறீங்களா? இன்னும் சாப்பிடவே இல்லை.”

“இல்லை வத்சலா. நாங்க கிளம்புறோம்.” இது சித்ரலேகா.

“அதெப்படி சாப்பிடாமப் போவீங்க? அதெல்லாம் முடியாது. வாங்க வாங்க.‌ மலர் நீயும் வா.” விடாப்பிடியாக இருவரையும் அழைத்துக்கொண்டு வத்சலா போக அவர்களைப் பின் தொடர்ந்தார் ஞானபிரகாஷ்.

“சத்யா…”

“அம்மா.” பந்தி பரிமாறும் இடத்தை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த சத்யன் அம்மாவின் குரலுக்கு ஓடி வந்தான். 

“மலரும் அம்மாவும் கிளம்பணுமாம். அவங்க முதல்ல சாப்பிடணும். நல்ல இடமாப் பார்த்து உட்கார வை.”

“சரிம்மா, வாங்க ஆன்ட்டி.” சத்யன் அழைத்துச் சென்று அவர்களை வசதியான ஓரிடத்தில் அமைரச் செய்ய,

“அண்ணா! நீங்களும் உக்காருங்க.‌ வேலை வேலைன்னு நீங்க எதுவும் இன்னும் சாப்பிடலை. எங்க… நீங்களா உங்களைக் கவனிச்சாத்தான் உண்டு.” வாய்க்குள் முணுமுணுப்பது போல சத்தமாகவே சொன்னார் வத்சலா. சித்ரலேகாவிற்கு இதயம் விண்டுவிடும் போல் வலித்தது. அண்ணனையும் அந்தப் பெண்ணையும் அருகருகே அமர்த்தி பார்த்துப் பார்த்துப் பரிமாறினார் வத்சலா. ஞானபிரகாஷிற்கு மனமெல்லாம் நிறைந்து போனது. நடக்கும் நாடகம் எதுவும் மலரிற்குப் புரியவில்லை. அவள் தன் பாட்டில் உண்டு கொண்டிருந்தாள். ஆனால், சத்யனின் கண்களுக்கு எதுவும் தவறவில்லை. அவன் மனது ஏதேதோ சிந்தனைகளில் இறங்கி இருந்தது.

“சத்யா… உன்னோட கார் எங்க?” மூவரும் சாப்பிட்டு முடித்திருக்க ஞானபிரகாஷ் மருமகனிடம் கேட்டார்.

“இங்க மண்டபத்துலதான் இருக்கு. ஏன் மாமா?”

“இல்லை… மலரையும் லேகாவையும் ட்ராப் பண்ணணும், அதான்.”

“ஐயையோ! எதுக்கு பிரகாஷ்? நாங்க ஒரு ஆட்டோவுல போய்க்கிறோம்.”

“இல்லையில்லை… அது சரி வராது. என்னால இப்போ ட்ரைவ் பண்ண முடியாது சத்யா. நீ காரை எடு. நாம ரெண்டு பேரும் இவங்களை ட்ராப் பண்ணிட்டு வந்திடலாம்.”

“ஐயோ பிரகாஷ்! சொன்னாக் கேளுங்க. உங்களுக்கு இங்க எவ்வளவு வேலை இருக்கும்? எதுக்கு வீணா சிரமப் படுத்திக்குறீங்க?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை லேகா. நீ சும்மா இரு.” யாரையும் பொருட்படுத்தாமல் ஞானபிரகாஷ் தன்பாட்டில் முடிவுகளை எடுக்க சித்ரலேகா தடுமாறிப் போனார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வத்சலாவும் சிரித்த முகமாகவே இருக்க சித்ரலேகாவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. அமர்த்தலான அவர் புன்னகை அத்தனை நல்லதாகப் படவில்லை இவருக்கு.

ஞானபிரகாஷ் பிடிவாதமாக நின்று பெண்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு அவர்கள் வீடுவரை வந்திருந்தார். அவர்கள் இறங்கும் போது தானும் இறங்கியவர் சித்ரலேகாவிற்கு மட்டும் கேட்கும் குரலில்,

“நிறையப் பேசணும் லேகா. இந்தக் கல்யாணக் கூத்தெல்லாம் முடியட்டும். அப்புறமா வரேன். நீ கூப்பிட மாட்டேன்னு தெரியும். இருந்தாலும்… நான் வருவேன்.” அந்த பிளாக் ஆடி நகர்ந்து விட பிரமித்துப் போய் நின்றிருந்தார் சித்ரலேகா.

***

காலம் தன் கையிருப்பில் இருந்து ஒரு வாரத்தைச் செலவு பண்ணி இருந்தது. மலருக்கு இன்னுமொரு பெரிய கல்யாண ஆர்டர் வந்திருக்கவே அதில் மும்முரமாக இறங்கிவிட்டாள். 

“மலர்!” அதிகாரமாக அந்தக் குரல் கேட்க கை வேலையை நிறுத்திவிட்டு அண்ணார்ந்து பார்த்தாள் மலர். விவேக் நின்று கொண்டிருந்தான்.

“என்ன விவேக்?”

“அதான் கல்யாணம் முடிஞ்சுதில்லை? அப்புறமும் அந்தப்பய எதுக்கு இங்க வர்றான்?”

“யாரு?”

“தெரியாத மாதிரி நடிக்காதே.‌ எனக்கு இது சுத்தமாப் பிடிக்கலை நான் சொல்லிட்டேன்.” கத்தி விட்டுப் போகும் அவனை விசித்திரமாகப் பார்த்தாள் மலர்விழி. இவனுக்கு இன்றைக்கு என்ன ஆனது? சிந்தனை செய்தபடி கையிலிருந்த ரிப்பனை அழகாக நீவி விட்டுக்கொண்டு முன்னே வந்தாள். சத்யன் உள்ளே வந்துகொண்டிருந்தான். ஓ… இதுதான் காரணமா?

“வாங்க சத்யா சார். என்ன இந்தப் பக்கம்?” மலர்ந்த முகத்தோடு இயல்பாக வரவேற்றாள் மலர். சத்யனும் புன்னகைத்தபடி தலையசைத்துக் கொண்டான்.

“மலர்… அந்த நெக்ஸ்ட் ஷாப் பயலோட பிரச்சனை என்ன? நான் வர்றப்ப எல்லாம் என்னை முறைச்சுப் பார்த்துக்கிட்டே இருக்கார்?”

“யாரு சார்?”

“அந்த ஸ்டேஷனரி ஷாப்தான்.”

“யாரு விவேக்கா? அது அப்படித்தான். வாழ்க்கைல கஷ்டங்களைப் பார்க்காமலேயே வளர்ந்த பையன். அதால இதுமாதிரி கோமாளித்தனங்கள் ஜாஸ்தி.”

“புரியலை மலர்.”

“அதை விடுங்க சார். நீங்க சொல்லுங்க, என்ன இந்தப் பக்கம்? ஏதாவது பொக்கே வேணுமா?”

“இல்லை மலர், உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.” சத்யனின் முகத்தில் ஏதோவொரு குழப்பம் தெரிந்தது.

“ஓ… என்ன சத்யா சார்? ஏதாவது பிரச்சனையா?”

“இது பிரச்சனையா என்னன்னு எனக்குத் தெரியலை மலர். ஆனா இந்த விஷயத்தை உங்கக்கிட்ட பேசணுங்கிறதுல நான் ரொம்ப உறுதியா இருக்கேன்.”

“சார்… புரியலை.”

“ம்… எனக்கும் ஆரம்பத்துல ஒரு சில விஷயங்கள் புரியலை மலர். தேடிக் கண்டுபிடிச்சேன்.” மலருக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் சத்யனின் முகத்தைப் பார்த்த போது விஷயம் கொஞ்சம் தீவிரமானது என்று மட்டும் புரிந்தது. எதுவாக இருந்தாலும் அவனே பேசட்டும் என்று அமைதியாக இருந்தாள் மலர்விழி.

“மலர்… எங்க சின்ன மாமாவைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” சத்யன் கேட்ட போது மலரின் நெற்றி சுருங்கியது.

“யாரைச் சொல்றீங்க? ஞானபிரகாஷ் சாரையா?”

“ஆமா.”

“இதுல நான் நினைக்க என்ன சார் இருக்கு? நான் அவங்களோட ஒழுங்கா நின்னு பேசினதே இல்லையே.”

“அதுவும் சரிதான். இல்லை… இத்தனை வயசு வரை அவங்க கல்யாணமே பண்ணாம இருக்காங்களே, அதைப்பத்தி நீங்க ஏதாவது நினைச்சிருக்கீங்களா?” மலருக்கு இப்போது லேசாக சத்யனின் மனநிலை பிடிபட்டது. தன் மாமனைப் பற்றிய ஏதோவொரு வருத்தத்தை அவன் தன்னோடு பகிர்ந்து கொள்ள முனைகிறான் என்று புரிந்து கொண்டாள்.

“ம்… முதல்ல அதைக் கேட்டப்போ கொஞ்சம் ஷாக்காத்தான் இருந்துச்சு. ஆனா அது அவங்க இஷ்டம் இல்லையா? அவங்களுக்கு என்னக் கஷ்டமோ அப்படீன்னுதான் நினைக்கத் தோணுச்சு.”

“ம்… கரெக்ட்தான்.”

“ஏதாவது லவ் ஃபெய்லியரா சார்?” அவனே பேச்சை ஆரம்பித்ததால் தைரியமாகக் கேட்டாள்.

“ஆமா… காலேஜ் டேய்ஸ்ல ஒரு பொண்ணை லவ் பண்ணினாங்களாம்.”

“ஓ… வன் சைட் லவ்வா?”

“இல்லையில்லை… அந்தப் பொண்ணும்தான் லவ் பண்ணியிருக்கு.”

“ஐயையோ! அப்புறம் ஏன் சார் இப்படி?”

“எல்லாம் எங்கத் தாத்தா பண்ணின வேலை. பொண்ணு வீட்டுல போய் சத்தம் போட்டிருக்காரு. அவங்க பயந்து போய் அவங்கப் பொண்ணுக்குச் சட்டுப் புட்டுன்னு கல்யாணத்தைப் பண்ணி வெச்சுட்டாங்க.”

“அட ஆண்டவா! இது என்ன சார் கொடுமையா இருக்கு? அப்போ உங்க மாமா எதுவுமே பண்ணலையா?”

“என்னப் பண்ண முடியும் மலர்? அதுக்குக் கால அவகாசமே இல்லாமக் காரியங்களை முடிச்சுட்டாங்க.”

“ஓ… பாவந்தான்.”

“அப்படியே அவகாசம் கிடைச்சிருத்தாலும் மாமாவால ஒன்னும் பண்ணி இருக்க முடியாது மலர்.”

“ஏன் சார்?”

“வீட்டுல வயசுக்கு வந்த தங்கைக் கல்யாணத்துக்கு நிக்கும் போது அவரால என்னப் பண்ண முடியும்?”

“அது காதலிக்கும் போது புரியலையாமா சார்?” அந்தக் கேள்வியில் சத்யன் திகைத்துப் போனான்.

“மலர்!”

“நான் தப்பா எதுவும் சொல்லிட்டேனா சார்?”

“இல்லை மலர்.‌ ஏன்னு தெரியலை, இந்த விஷயத்தை உங்கக்கிட்ட பேசணும்னு தோணுச்சு.‌ அதால உங்கக் கருத்தை நீங்கத் தாராளமாச் சொல்லலாம்.”

“தான்க் யூ சார். எனக்கென்னமோ தப்பு உங்க மாமா மேலன்னுதான் தோணுது.”

“ஓ… ஏனப்படிச் சொல்றீங்க?”

“ஒன்னு காதலிச்சிருக்கக் கூடாது. அப்படியே காதலிச்சா எந்த நிலைமையிலும் அந்தப் பொண்ணைக் கைவிட்டிருக்கக் கூடாது. உங்க மாமா சேஃபாக் கல்யாணம் பண்ணாமத் தப்பிச்சுட்டாரு. ஆனா அந்தப் பொண்ணோட நிலைமையை யோசிச்சுப் பாருங்க. குடும்பம் அவசர அவசரமா ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சிடுச்சு. நேத்து வரைக்கும் ஒரு மனுஷன்தான் தன்னோட வாழ்க்கைன்னு இருந்துட்டு இன்னைக்குத் திடீர்னு இன்னொரு மனுஷன்னா… எப்படி சார்? யோசிச்சுப் பாருங்க.”

சத்யன் ஆடிப்போய் விட்டான்.‌ இப்படியொரு கோணத்தை அவன் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. இன்று வரைத் தன் மாமனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவன் சித்ரலேகாவைப் பற்றிச் சிந்தித்திருக்கவில்லை. முதன் முறையாக மலரின் பார்வை அவனைச் சிந்திக்கச் செய்தது.

“சத்யா சார்! என்னாச்சு? சைலண்ட் ஆகிட்டீங்க?”

“மலர்… இதுவரைக்கும் மாமா பாவம்னுதான் எம்மனசுல சிந்தனை ஓடிச்சு.‌ ஆனா நீங்க சொல்றதைப் பார்க்கும் போது அந்த லேடி…”

“ரொம்பப் பாவம் சார் அவங்க. ஆரம்பத்துல புதுசா அமைஞ்ச வாழ்க்கையை ஏத்துக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க?”

“ஆமால்ல?”

“ம்… என்னைக் கேட்டா உங்க மாமா அவங்களை எப்படியாவது கல்யாணம் பண்ணி இருந்திருக்கணும் சார். விட்டிருக்கக் கூடாது.”

“ம்… நீங்க சொல்றதும் சரிதான் மலர். மாமா அன்னைக்கு செஞ்ச தப்பைத் திருத்திக்க இப்ப அருமையா ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்கு.”

“சார்! என்ன சொல்றீங்க சார்?”

“அந்த லேடி இப்போ ஒரு விடோ. ஆனா… பசங்க இருக்காங்க.”

“ஓ… இப்போ என்னப் பண்ணப் போறாங்க உங்க மாமா?”

“அது தெரியலை மலர். விஷயம் கேள்விப்பட்டதுல இருந்து எனக்குத் தலை வெடிக்குது. யாருக்கிட்ட இதைப் பகிர்ந்துக்கிறதுன்னும் புரியலை. அதான் நேரா இங்க வந்துட்டேன்.”

“தப்பில்லை சார். நான் யாருக்கிட்டயும் இதை ஷேர் பண்ண மாட்டேன். கவலைப் படாதீங்க.”

“இப்போ என்னப் பண்ணலாம் மலர்?” 

“என்னைக் கேட்டா… பசங்கக் கிட்டக் கலந்து பேசுறதுதான் சரின்னு தோனுது. சின்னப் பசங்களா சார்?”

“இல்லை… பெரிய பசங்க.”

“ஓ… பெரிய பசங்கன்னா ஈசியாப் புரிஞ்சுக்குவாங்க. அதே நேரம் எதிர்க்கவும் வாய்ப்பிருக்கு.”

“ஏன் மலர்? தங்களோட அம்மாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் போது அதை அந்தப் பசங்க ஏத்துக்கிறதுல என்னத் தப்பு இருக்கு மலர்?”

“எந்தத் தப்பும் இல்லை சார். அதை அந்த அம்மா வாழ்ந்த வாழ்க்கைதான் நிர்ணயிக்கணும். ஒருவேளை அந்த அம்மாக்குக் கிடைச்ச புருஷன் நல்லவரா இருந்து அவங்க ஒரு சிறப்பான வாழ்க்கை வாழ்ந்திருந்தாங்கன்னா உங்க மாமா அவங்களை மறந்திட வேண்டியதுதான்.”

“அப்படித் தோணலை மலர். கொஞ்ச நாள்தான் வாழ்ந்திருக்காங்க போல.”

“அப்போ பசங்கக்கிட்டப் பேசிப்பாருங்க சார்.”

“அந்தப் பசங்க நிலைமையில நான் இருந்தா இந்த ஏற்பாட்டுக்கு நிச்சயமா சம்மதிப்பேன். நீங்களா இருந்தா என்னப் பண்ணுவீங்க மலர்?” இப்போது மலர் சிரித்தாள். 

“எங்க ஞானபிரகாஷ் மாமா காதலிச்சப் பொண்ணு உங்கம்மாவா இருந்திருந்தா நீங்க இப்போ என்னப் பண்ணுவீங்க மலர்?” கண்களை நேருக்கு நேராகப் பார்த்து சத்யன் கேட்கவும் மலர் திடுக்கிட்டுப் போனாள்.

“சார்!”

“சின்ன வயசுலேயே உங்கப்பாவைத் தொலைச்சுட்டுத் தனியா நிக்குற அம்மா. தனக்குன்னு ஒரு துணையைத் தேடிக்காம இன்னைக்கு வரைக்கும் ஒத்தையா நிக்குற எங்க மாமா. இவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்து சந்தோஷமா வாழ்ந்தா என்னத் தப்பு மலர்?” மலர் ஆடிப்போய் விட்டாள். காதுக்குள் ஏதோ விதவிதமான ரீங்காரம் கேட்டது. உலகம் கிறுகிறுவென்று சுழன்றது.

“சார்! நீங்க என்ன சொல்றீங்க?”

“எங்க மாமா ஆசைப்பட்ட பொண்ணு உங்கம்மா தான்னு சொல்றேன். இவ்வளவு நேரமும் ஐயோ பாவம்னு நீங்க பரிதாபப்பட்ட அந்தப் பொண்ணு உங்கம்மா தான்னு சொல்றேன் மலர்.” மலருக்கு லேசாகத் தலைச் சுற்றுவது போல் இருந்தது. வெறித்துப் பார்த்தபடி அசையாமல் இருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!