Rose – 11

0aa1073cac403335aa0f2c48d21af09e-0c1bc122

Rose – 11

அத்தியாயம் – 11

தன்னுடைய மகளின் ஸ்கூல் முன்பு வண்டியை நிறுத்தி இறங்கினார் ரவீந்தர். தன் தந்தையைக் கண்டவுடன் ஓடிவந்த மகளை வாரியணைத்து முத்தமிட்டு, “என் செல்லம் இன்னைக்கு ஸ்கூலில் என்ன சொல்லிக் கொடுத்தாங்க” அவர் ஆர்வமாக கேட்க, அவளும் வகுப்பில் நடந்ததை தனக்கு தெரிந்த இங்கிலீஸில் சொல்ல தொடங்கினாள்.

அவளை அழைத்துக்கொண்டு நேராக ஹோட்டலுக்குச் சென்று, “பாப்பா இங்கேயே உட்கார்ந்து ஹோம் வொர்க் முடிங்க. அதுக்குள் அப்பா வேலை முடிச்சிட்டு வர்றேன்” என்று சொல்ல, அவளும் புன்னகையுடன் சரியென்று தலையாட்டினாள்.

தன் மகளை ஓய்வறையில் அமரவைத்துவிட்டு கிச்சனுக்கு வந்தவர், அங்கிருந்த வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கினர். மதுராவின் பிறந்த அன்றே மனைவிப் பறிகொடுத்துவிட்டு, இப்போது மகளுக்காகவே வாழ்கிறார் ரவீந்தர்.

ஆரம்பத்தில் ஒரு பெரிய ஹோட்டலில் செஃப்பாக இருந்தார் ரவீந்தர். அங்கே வேலை செய்துக்கொண்டே தன் மேல்படிப்பையும் தொடர்ந்தார். அவருக்கு பக்கபலமாக இருந்தது என்னவோ அகல்யாதான்.

ஒவ்வொரு முறையும் ரவீந்தர் துவண்டுபோகும் போதும், “உங்களால் முடிங்க” நம்பிக்கை கொடுத்தாள்.

அவர்களின் வாழ்க்கைப்படகு சந்தோசம் என்னும் அலையில் சீராக நகர்ந்தது. அகல்யா கர்பமாக இருக்கும் விஷயம் தெரிந்த நாளில் இருந்து, ரவீந்தரின் அந்த சந்தோசத்தை இரட்டிப்பாக மாற்றியது.

தன் படிப்பிற்கு ஏற்ற சம்பளம், அன்பான துணைவி. அவர்களின் அன்பைப் பறைசாற்ற குழந்தையென வாழ்க்கை நிறைவாகச் சென்றது. தாய் இல்லாத பெண் வெளிநாடு வந்து தவிக்கக்கூடாது என்பதால், அகல்யாவின் விருப்பத்தைக் கேளாமல் நிறைவேற்றினார் ரவீந்தர்.

விடுமுறை நாட்களில் மனைவியை வெளியே அழைத்துச் செல்ல, “இங்கே இந்தியா உணவுகள் அதிகம் கிடைப்பதில்லை. நம்ம ஒரு ரெஸ்டாரண்ட் திறந்தால் என்ன?” கண்ணில் கனவுகள் மின்ன கேட்டாள் அகல்யா.

அதுவரை இதுபற்றி சிந்தித்திராத ரவீந்தர், ‘இது நல்ல யோசனையாக இருக்கே!’ அதை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அவரின் நல்ல நேரமோ என்னவோ ஒரு ரெஸ்டாரண்ட் ஒன்று விலைக்கு வந்தது.

தன்வசம் வைத்திருந்த பணத்தைப் போட்டு விலைக்கு வாங்கிய ரவீந்தர், அதை திறம்பட நடத்த முடியும் என்று உளமார நம்பினார். அந்த ரெஸ்டாரன்ட் திறக்கும் வேலைகளை கனகட்சிதமாக முடித்துவிட்டு, தன் மனையாளிடம் இந்த விஷயத்தைப் பகிர்ந்தார்.

ஏற்கனவே கேட்ரீங் பணிக்கு படித்திருந்த கணவனை உற்சாகமாக்கிட, “சூப்பர்ங்க! நம்ம பாப்பா பிறப்பதற்குள் நீங்க கட்டாயம் மேலே வந்திடுவீங்க” அவருக்கு தைரியமூட்டினாள். அயல்நாட்டில் இந்திய உணவின் ருசியைத் தேடி அலையும் நபர்களின் மத்தியில் ரெஸ்டாரண்ட் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது.

அவர்களின் அன்பிற்கு அடையாளமாக ஒரு உயிர் கருவறையில் வளர, ரவீந்தரும் தன் தொழிலில் உயர தொடங்கினார். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் அகல்யாவிற்குப் பிரசவலி எடுக்க, மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார் ரவீந்தர்.

கொஞ்ச நேரத்தில் வெள்ளை நிறத்தில் இருந்த பூக்குவியலைக் கொண்டு வந்து அவரின் கையில் கொடுத்தாள் நர்ஸ். தன் சின்னஞ்சிறு கைகளை அசைத்து மழலை அழுகும் சத்தம்கேட்டு, தந்தையின் கண்களில் கண்ணீர் பெருகியது.

“என்னோட மனைவிஎப்படி இருக்காங்க?” என்று அவர் கேட்க,

“சாரி ஸார்! அவங்களை எங்களால் காப்பாற்ற முடியல” டாக்டர் கூற, அவரின் உலகம் அப்படியே ஸ்தம்பித்துப் போனது. இப்படியொரு நாள் வாழ்க்கையில் வருமென்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.

தன் கையிலிருந்த மகளைப் பார்த்து கண்ணீர் விட்ட ரவீந்தர், “ஐயோ அகல்யா! நீ இல்லாமல் இனி எப்படி நான் இருக்க போறேன்” வாய்விட்டே கதறினார். அகல்யாவை அச்சில் வார்த்துபோல பிறந்திருந்த குழந்தையின் முகம் கண்டு, தன் கவலைகளை மறக்கத் தொடங்கினார்.

தன்னுடைய மகளுக்காக வாழவேண்டும் என்று முடிவெடுத்தவர், அகல்யாவின் இறுதி சடங்குகளை முடித்துவிட்டு, “மதுர யாழினி” மகளுக்கு பெயர் சூட்டினர். அன்றிலிருந்து அந்த கூட்டிற்குள், இருவர் மட்டுமே!

சொந்த தொழிலை வளர்ச்சி நிலைக்கு கொண்டு வரவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், தன்னுடைய மகளைக் குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் செல்வார். மாலை வீடு திரும்பும்போது மீண்டும் அழைத்து வந்துவிடுவார். இப்படியே நான்கு ஆண்டுகள் ஓடிப்போனது.

தாயை இழந்து தந்தையின் அரவணைப்பும் இல்லாமல் வளர்ந்தாள் மதுரா. அவளை அங்கிருக்கும் எலிமேண்டரி ஸ்கூல் சேர்த்துவிட்டார். காலையில் கொண்டுபோய் மகளை ஸ்கூலில் விடுவதும், மாலை அவளை அழைத்து வருவதும் அவரின் கடமை. மற்ற நேரங்களில் வேலை மட்டுமே பிரதானமாக இருந்தது.

இரவு அவர் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வரும்போது டிப்பனில் இருந்த உணவை உண்டுவிட்டு, சோபாவில் தூங்கினாள் மதுரா. அவருக்கு நெஞ்சத்தில் பாசம் இருந்தாலும், அதைக் காட்டுவதற்கு நேரமில்லாமல் போனது.

அவளின் உறக்கம் கலையாதவண்ணம், மகளைத் தூக்கி வந்து காரின் பின்பக்கம் படுக்க வைத்துவிட்டு வீடு நோக்கிப்பயணித்தார். இதுவே வாடிக்கையாக மாற, நாட்கள் யாருக்கும் நிற்காமல் ரேக்கைகட்டிப் பறந்தது.

மெல்ல தொழில் என்ற சுழல் ரவீந்தரை உள்ளிழுத்துக் கொள்ள, யாழினி தனித்துவிடப்பட்டாள். அமெரிக்காவில் நிறைய இடங்களில், அவரது ஹோட்டலின் கிளைகள் நிறுவப்பட்டது. அதற்கு அவரின் கடின உழைப்பும், யாழினியின் ஒத்துழைப்பும் தான்!

யாழினிக்கு பத்து வயதாகும்போது, அவளுக்குத் தேவையானவற்றை அவளே தனித்து செய்ய தொடங்கினாள். எந்தவொரு காரணத்திற்காகவும் தந்தையைத் தேடவில்லை.

இதை ஒருநாள் உன்னிப்பாக கவனித்த ரவீந்தரின் முகம் பிரகாசமாக, “மதும்மா!” என்றழைக்க, “டாடி” என்றபடி அவரின் அருகே சென்றாள்.

அவளின் தலையைப் பரிவுடன் வருடிவிட்டு, “இனி நீ தனியாக மேனேஜ் செய்துக்குவ இல்ல” அவர் கேட்க, அவளும் குழப்பத்துடன் தலையாட்டி வைத்தாள்.

தன் மகளை நினைத்து மனதிற்குள் பெருமைப்பட்டுக் கொண்டு, “குட்! உனக்கு எப்போ பணம் வேணும்னாலும் போன் பண்ணு, எனக்கு டைம் கிடைக்கும்போது இங்கே வந்துட்டுப் போறேன்” ரவீந்தர் விடைபெற்றுச் செல்ல, யாழினி தனித்துவிடப்பட்டாள்.

பிறந்தபோதே தாயை இழந்தவளுக்கு, தந்தையின் பாசமும் கானல் நீர்போலானது. தந்தை தன்னிடம் கடைசியாக எப்போது பேசினார் என்று கேட்டால், அது அவளுக்கே ஞாபகம் இருக்காது என்று சொல்லலாம். ரவீந்தர் இல்லாத நாட்களில் மெல்ல உணவுகளைச் செல்ல பழகிக் கொண்டாள்.

ஒவ்வொரு நாள் காலையும், மாலையும் போனில் அழைத்துப் பேசும் தந்தையின் குரலில் இருந்த அன்பை உணர்ந்தாள். பதிமூன்று தனித்து நிற்கவும், தன் திறமைகளை வெளிகொண்டு வரவும் உதவியது அந்நாட்டின் கலாச்சாரம்.

தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனைச் சுழலும் பூமிபோல, தனக்கான தேவையைக் கவனித்துகொண்டு, படிப்பையும் தொடந்தாள். ஏனோ தனிமை அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமிக்க, அதிலிருந்து வெளியே வருவதற்கான வழி தெரியாமல் தவித்தாள்.

தினமும் பள்ளிக்கூடம் முடிந்ததும் நேராக சாலையோரம் இருக்கும் இரும்பு பெஞ்சில் சென்று அமர்ந்துவிடுவாள். அமெரிக்கா கலாச்சாரம் சென்று சொல்லப்பட்டும் வாழ்க்கையை அவள் ஊன்றி கவனிக்க தொடங்கினாள்.

சிறுவயதில் இருந்தே பிள்ளைகள் பெற்றோரின் அரவணைப்பு இன்றி வளர்ந்தனர். பெரும்பான்மையான பிள்ளைகளுக்கு பெற்றவர்களின் நிழல் எப்படி இருக்கும் என்றுகூட தெரியவில்லை.

ஏனோ தன்னிலையை நினைக்கும்போது மட்டும், ‘நாம் யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது. அவங்களுக்குப் பிடிக்கவில்லை எனில், அவர்களைவிட்டு விலகிவிட வேண்டும்’ என்ற எண்ணம் பதிமூன்று வயதிலேயே அவளின் ஆழ்மனதில் வேரூன்றியது.

ஆண்களும், பெண்களும் டேட்டிங் செல்வது கண்டு அவளுக்கு வாழ்க்கையே வெறுத்தது. பிறந்த நாடும், பார்க்கும் மனிதர்களும் நடமாடும் இயந்திரங்களைப் போலவே அவளுக்குத் தோன்றியதுதான் வெறுமையின் உச்சகட்டம்.

இதற்குள் வளரும் யாழினியின் நிலை?!

***

சூரியன் சுள்ளென்று அடித்தாலும், ஊட்டியில் பரவியிருந்த குரல் ஊசியாய் உடலைத் துளைத்தது. பனியில் நனைந்த மலர்கள் தென்றலிடம் தலைத்துவட்டிக் கொண்டிருந்த காலை நேரம்!

ஊட்டியின் குளிரைப் பொருட்படுத்தாமல் ஜாக்கிங் சென்ற கோகுல்நாத்திடம், “இப்போவே டென்த் ரிசல்ட் பற்றிய பயத்தைக் கிளப்பறாங்க டாடி!” சமமான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்த யாதவ் வாய்விட்டே புலம்பினான்.

அவன் சொன்னதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தவர், “நீ நல்லாதானே எழுதி இருக்கிற?அப்புறம் எதுக்கு தேவையே இல்லாத விஷயத்தை யோசித்து டென்ஷன் ஆகற கிருஷ்ணா…” என்றார்.

வீடு செல்லும் பாதையில் சீரான வேகத்தில் ஓடியவன், “நானே அதை யோசிக்காமல் இருந்தாலும், ராம் அம்மா பயமுறுத்திட்டே இருக்காங்க…” இடைவெளிவிட்டு மீண்டும் தொடந்தான்.

“டென்த் அவ்வளவு ஈஸி இல்ல. பப்ளிக் எக்ஸாமில் இவ்வளவு மார்க் வாங்கணும், அப்புறம் பிளஸ் டூவில் இவ்வளவு மார்க் வாங்கணும். காலேஜில் கோல்டுமேடல் வாங்கணும்னு அடுக்கும்போது மூச்சுத் திணறிப் போகுது டாடி” என்றான் யாதவ் செமக் கடுப்புடன்.

பள்ளிக்கூடங்களில் அதிக மதிப்பெண் எடுப்பது பற்றிய பேச்சுக்கள் அடிக்கடி வரும். அது பிள்ளைகளின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்வதை உணர்ந்தே இருந்த கோகுல், தன் மகனின் மனநிலையை மாற்ற நினைத்தார்.

ஓரிடத்தில் நின்று மூச்சு வாங்கியபடி மகனின் பக்கம் திரும்பி, “நீ நல்லாவே படிப்பேன்னு எனக்குத் தெரியும். மற்றவர்களிடம் உன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்ல கிருஷ்ணா. உனக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்க மட்டும்தான் இந்த மார்க் எல்லாமே!” தனக்கு புரியும்படி கூறிய தந்தையை வியப்புடன் நோக்கினான் யாதவ்.

அவனது தோளில் கைப்போட்டுக் கொண்டு, “எந்த ஒரு பாடத்தையும் புரிந்து படித்தால் போதும், மார்க் நல்ல வரும் ” அவனுக்கு தைரியம் கொடுப்பதுபோல பேசவே, அவன் மனம் சிந்திக்கத் தொடங்கியது.

சிறிதுநேர சிந்தனைக்குப் பிறகு, “தேங்க்ஸ்ப்பா! என்னையே இந்த வைஜெயந்தி ஆன்ட்டி குழப்பி விட்டுடாங்க. இரண்டு நாளாக மண்டை சூடானது தான் மிச்சம்” பெருமூச்சுவிட்ட மகனை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார்.

பள்ளி செல்ல தொடங்கிய யாதவிற்கு, அனைத்தையும் கற்றுத்தரும் ஆர்வம் கோகுலிடம் இருந்தது. பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு நண்பர்களாக இருப்பது பாதகம் என்று ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டிருக்க, அதைக் காதிலேயே வாங்காமல் தன் மகனுடன் நட்பு பாராட்டினார்.

பெண்களுக்கு தான் தந்தை ஹீரோ என்ற கருத்தை உடைக்கும் விதமாக, தனக்கு ஹீரோ தன்னுடைய அப்பா என்று ஊரே சொல்லும் அளவிற்கு வளர்ந்தான் யாதவ். அதில் மீனாவிற்கு தனி பெருமை!

கோகுல் – யாதவ் இருவரும் ஜாக்கிங் முடித்துவிட்டு வீட்டினுள் நுழையவும், அவர்களின் வீட்டின் முன்பு கால்டாக்ஸி வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அந்த சத்தம்கேட்டு மீனாவும் வாசலுக்கு செல்ல, காரின் கதவைத் திறந்து இறங்கினார் சிவசந்திரன்.

தன் நண்பனைப் பார்த்த சந்தோசத்தில் முகம் மலர, “டேய் சிவா! எப்போடா அமெரிக்காவில் இருந்து வந்தே?!” என்ற கேள்வியிலேயே உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

“நான் இங்கே வந்து ரெண்டு நாளாச்சுடா! நீ எப்படி இருக்கிற?” நண்பனை நலம் விசாரிக்க, அவரின் பின்னோடு வைஜெயந்தி, ராம்குமார் – கீர்த்தனாவும் இறங்கினர்.

அவர்களைக் கண்டவுடன், “என்னங்க வந்தவங்களை வாசலில் நிற்க வைத்து பேசறீங்க. அவங்களை உள்ளே கூட்டிட்டு வாங்க” மீனா கூற, அவர்களை முந்திக்கொண்டு யாதவ் தன் நண்பனையும், கீர்த்தனாவையும் வீட்டினுள் அழைத்துச் சென்றான்.

சிறியவர்களின் செயலைக் கண்டு சிரித்த பெரியவர்கள் வீட்டினுள் செல்ல, “ஈஸ்வரி எல்லோருக்கும் டீ எடுத்துட்டு வா” என்ற மீனலோட்சனி, தன் கணவனின் அருகே நின்று கொண்டாள்.

ராம்குமார் – யாதவ் கிருஷ்ணா மற்றும் கீர்த்தனா மூவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, “சிவா அமெரிக்கா எப்படி இருக்கு? அங்கிருக்கும் கலாச்சாரம் எல்லாம் ஓகேதானே?!” என்று ஆர்வமாகக் கேட்டான் கோகுல்.

இந்த தகவலை யாதவ் உன்னிப்பாக கவனிப்பது அறியாமல், “விவாகரத்து அதிகம் வாங்கினாலும், பிடித்தவர்களை மணந்து சந்தோசமாக இருக்காங்க. பிடிக்கும்வரை சேர்ந்து வாழ்வது, பிடிக்கல என்றால் பிரிந்து போவது லிவ்விங் டூ கேதர் வாழ்க்கை முறையை என்னால் ஏத்துக்க முடியல” என்றார் சிவசந்திரன்.

“குடும்பம் என்ற கட்டமைப்பு இருக்கும் வரைதான், சமுதாயம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும்டா. இப்படிப்பட்ட கொள்கைகள் இளையவர்களின் மனதில் விதையாக விழுந்தால், காலம் முழுக்க வாழும் வாழ்க்கை நரகம்தான்!” என்றார் கோகுல் பெருமூச்சுடன்.

எந்தவொரு செய்தியையும் அலாசி ஆராய்ந்து அதில் இருக்கும் நன்மை மற்றும் தீமைகளை அறிந்துக்கொண்டு, அதை எப்படி மகனுக்கு பக்குவமாக சொல்லி புரிய வைப்பது என்று சிந்திப்பதில் வல்லவர் கோகுல்நாத்.

இருவரும் பேசியதை உன்னிப்பாகக் கவனித்த யாதவ், “அப்பா லிவ்விங் டூ கெதர்ன்னா என்ன?” தந்தையிடம் கேட்க, அங்கிருந்த அனைவரும் திடுக்கிட்டனர்.

பதின்மூன்று தொடங்கி பத்தொன்பது வரையிலான வயது இரண்டும் கெட்டான் வயது என்பார்கள். இந்த வயதில் பிள்ளைகளின் மனதை சரியான பாதியில் திசை திருப்ப வேண்டும். அந்த வயதில் அவர்கள் தடுமாறிப் போனால், வாழ்க்கைப் பாதையே திசைமாறிப் போகும் என்று பெரியவர்கள் அடிக்கடி சொல்வதுண்டு.

“கிருஷ்ணா இந்த விஷயம் பற்றி தெரிந்துகொள்ள வயது போதாதுப்பா. நீ இன்னும் கொஞ்சம் பெரியவனானதும், உனக்கே இது தானாகப் புரியும்” – கோகுல் கூற, அதில் அவன் மனம் சமாதானமடைய மறுத்தது.

அதைக் கவனித்த வைஜெயந்தியோ, “ஒரு ஆணும், பெண்ணும் பிடிக்கும் வரை சேர்ந்து வாழ்ந்துவிட்டு, தங்களுக்கு பிடிக்காதபோது அவரவர் பாதையில் பிரிந்து செல்வதற்கு பெயர்தான் லிவ்விங் டூ கெதர்” என்றாள்.

“தேங்க்ஸ் ஆன்ட்டி” என்ற யாதவிற்கு அப்போது தெரியவில்லை. தன் மனதில் விழுந்த இந்த விதை, ஒருநாள் விருச்சமாக வளர்ந்து நின்று, தன் வாழ்க்கையைத் திசைமா(ற்)றும் என்று தெரியாமல் போனது.

ஈஸ்வரி அங்கிருந்த அனைவருக்கும் டீ கொண்டு வந்து கொடுக்க, “அப்புறம் என்ன விஷயம் திடீர்ன்னு கிளம்பி வந்திருக்கிற?” என்று விசாரித்தார் கோகுல்.

“என் குடும்பத்தை அங்கேயே கூட்டிட்டுப் போகலாம்னு இருக்கேன்டா. ராம்குமார் பத்தாம்வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், பிள்ளைகளின் மேல்படிப்பையும் யோசிக்கணுமே” தன் முடிவைக் கூறினார்.

இத்தனை நாளாக வைஜெயந்தி தன் குழந்தைகளை வைத்துக்கொண்டு தனியாக பரிதவித்தை நேரில் பார்த்ததால், “ரொம்ப சந்தோசம் அண்ணா” என்றாள் மீனா.

இத்தனை நாளாக தனக்கு பக்கபலமாக இருந்த கோகுல்நாத் – மீனாவின் கையைப்பிடித்து அழுத்திய வைஜெயந்தி, “நாங்க போயிட்டு வர்றோம்” என்று கூற, யாதவ் தான் சோகமாக இருந்தான்.

அதைக் கவனித்துவிட்டு வேகமாக அருகே வந்த ராம்குமார், “யாதவ் நாங்க அங்கே போனதும், உனக்கு போன் பண்றோம். நீயும் நல்லபடிடா” என்றான்.

கீர்த்தனாவோ, “அண்ணா நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்” அவளுக்கு புன்னகையை மட்டுமே பதிலாக தந்தான் யாதவ்.

சிவசந்திரன் தன் குடும்பத்துடன் விடைபெற்றுச் செல்ல, யாதவ் சிலையாக வீட்டினுள் அமர்ந்திருக்க, கோகுல்நாத்தும், மீனலோட்சனியும் வாசல்வரை சென்று அவர்களை வழியனுப்பி வைத்தனர்!

Leave a Reply

error: Content is protected !!